Monday, January 18, 2010

சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள்

ரொம்பவும் சுவாரசியமான புத்தகம்.

நாட்டார் வழக்காற்றியலின் (Folklore) முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவரான அ.கா.பெருமாள் கள ஆய்வின் போது தமக்கேற்பட்ட அனுபவங்களை தொகுத்துத் தந்திருக்கும் நூல் - சுண்ணாம்பு கேட்ட இசக்கி. நூலாசிரியர் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள், இடர்ப்பாடுகள், வாய்மொழி கதைகள், சிறுதெய்வங்கள், அவற்றின் பின்னணிகள், வழிபாடுகள்,  நாட்டார் கலைஞர்கள்.. என சுவையான பல தகவல்கள் நூலில் நிறைந்துள்ளன.



உயர் படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்காகவும் அதற்கான ஆதாயங்களைத் தேடியும் பெரும்பாலும் நாற்காலியை விட்டு நகராமல் மற்ற நூல்களைச் சார்ந்து ஆய்வில் ஈடுபடுபவர்கள் ஒருவகை. சுய விருப்பத்தின் காரணமாக அதற்கான உந்துதல்களோடு நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வில் ஈடுபடுபவர்கள் இன்னொருவகை. பெருமாள் இதில் இரண்டாவது வகை என்பதை நூலை வாசிக்கும் போது  உணர முடிகிறது.

அணிந்துரை எழுதியிருக்கும் பேராசிரியர் நா.இராமச்சந்திரன் ஆய்வாளர்களுக்கான சில அடிப்படை யோசனைகளைத் தந்துள்ளார். அவற்றின் ஒரு பகுதி..

.. நாட்டார் வழக்காற்றுத் தகவல்களைச் சேகரிப்பது எளிதானதன்று. நான் சென்றவுடன் தகவலாளிகள் தயாராக வைத்திருக்கும் தரவுகளைக் கை நிறைய அள்ளித் தந்துவிடுவார்கள் என்று கருதி விடக்கூடாது. நாம் ஆய்வு செய்து பலனடைவதற்கு அவர்கள் நமக்குத் தரவுகளைத் தரவேண்டும் என்று எந்த உடன்பாடும் செய்யப்படவில்லை. பல ஆய்வாளர்கள் தகவலாளிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை...

. ஆய்வுக்களம் என்பது பரந்து விரிந்தது. வாய்மொழி வழக்காறுகளும், நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், பொருள்சார் பண்பாடுகளும், நிகழ்த்து கலைகளும், சடங்குகளும், தெய்வங்களும், நிகழ்வுகளும், ஊடாட்டங்களும், விளக்கங்களும் விரவித் தொடர்ந்து வருவது பண்பாட்டின் இயல்பாகும். ஆனால் ஆய்வாளர் ஏதேனும் ஒன்றிரண்டு வாய்மொழி வழக்காறுகளையோ அல்லது ஒருசில மரபுவழிப் பண்பாட்டுப் பொருள் குறித்த செய்திகளையோ தெய்வங்கள் பற்றிய செய்திகளையோ விவசாய முறைகளையோ சாதி குறித்த தகவல்களையோ சேகரிக்கச் செல்வார். தாம் நினைக்கும் வழக்காறு தவிர மேற்குறிப்பிட்ட பிற பண்பாட்டுக் கூறுகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். தாம் சேகரிக்கும் வழக்காறுகளுடன் நேரடித் தொடர்பு கொண்ட பிற வழக்காறுகளைக் கூட அவர் சேகரிக்க மாட்டார். தற்கால ஆய்வாளர்களின் நிலை இதுதான். ஆனால் பண்பாட்டுக் கூறுகள் எல்லாமே ஒன்றையொன்று தொடர்பு கொண்டவை-தனித்தியங்க இயலாதவை என்பதை ஒவ்வொரு ஆய்வாளரும் கவனத்தில் கொள்ள வேண்டும். ...

மாத்திரமல்லாமல் நூலின் முக்கிய சாரத்தை தம்முடைய அணிந்துரையில் சுருக்கமாகப் பட்டியலிட்டுள்ளார் இராமச்சந்திரன்

()

அ.கா.பெருமாளின் நேரடி ஆய்வு அனுபவங்கள் ஆய்வாளர்களுக்கு மாத்திரமல்லாமல் பொதுவான வாசகர்களுக்கும் சுவையாக அமையுமாறு பகிரப்பட்டுள்ளன.

நூலின் தலைப்பு ஆவியைப் பற்றியதொரு நாட்டார் கதையைக் குறிக்கிறது. .. இசக்கி வேப்ப மரத்துக்கு கீழே வடக்கே நின்னுக்கிட்டிருக்கா. சிவப்பு சேல உடுத்திருக்கா. சுண்டெல்லாம் சிவப்பு. தலமுடி ஒருபாகமா நீண்டு கெடக்கு. நாடாரு வண்டில வாராரு. காளமணி ஜல்ஜல்ன்னு கேக்குது. காளக் கண்ணுக்கு அவளத் தெரிஞ்சு போச்சு. கொஞ்சம் கலய ஆரம்பிச்சுச்சு. நாடாரு உடன சுதாரிச்சுட்டாரு. வண்டி அவ பக்கத்துல வந்தததும் தானா நின்னுது. கைய நீட்டி சுண்ணாம்பு இருக்குதான்னு சிரிச்சுக்கிட்டே கேக்குதா...

தகவலாளிகள் பேச்சின் இடையில் தெரிவிக்கும் சம்பவங்களும், பழமொழிகளும் பெரும்பாலும் நாட்டார் கதைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. அந்தக் கதைகளை விவரிக்கச் சொல்லி அதை நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார் பெருமாள்.

இன்னொரு அத்தியாயத்தில் பல்வேறு வடிவங்களில் நிலவிவரும் நீலிக்கதையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. வயிற்றுப் பிள்ளையோடு ஒரு பெண் இறந்தால் வயிற்றை அறுத்து அவளின் குழந்தையை தனியாக எரிக்கும் வழக்கம் சில பிரிவினரிடமும் இருப்பதை அறிய முடிகிறது. வழக்கமாக மற்றவர்கள் காண இயலாத அந்தச் சடங்கை நூலாசிரியர் காணச் சென்ற சம்பவம் திகிலுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

'கடத்தப்பட்ட கணியான்' என்கிற அத்தியாயம் கிராமப் புறங்களில் இன்றும் நிலவி வரும் சாதி ரீதியான தீண்டாமை எனும் விருட்சத்தின் ஒரு கிளையை அறிய உதவுகிறது. விஷயம் இதுதான். தாம் நடத்தும் கோவில் திருவிழாவில் கணியான் ஆட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றனர் தலித் மக்கள். ஆனால் கலைஞர் வருவதாயக் காணோம். விசாரித்த போது பேருந்தில் இருந்து இறங்கின அவரை 'அந்த' சாதிக்காரர்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் தகவல் தெரிகின்றது. தம்முடைய கோயில்களில் கூத்து நடத்தும் அதே கலைஞர் தலித் கோவிலிலும் ஆட்டத்தை நிகழ்த்துவதை பிற சாதிப் பிரிவினர் விரும்பவில்லை. தீட்டு பட்டுவிடும் என நினைக்கின்றனர். பிறகு ஒருவழியாக பேசி அவரை அழைத்து வந்து விடுகின்றனர். நிகழ்ச்சி நடக்கிறது.

இதுமாதிரியான பல அனுபவங்களோடு நாட்டார் கலைஞர்களைப் பற்றின தனிப்பட்ட தகவல்கள், விளிம்பு நிலையில் தவிக்கும் அவர்களின் சமூகம், குடித்தே அழியும் அவர்களின் பரம்பரைச்சுமை, புராதன கலையை தொடர விரும்பாத வாரிசுகள் என பல விஷயங்கள் நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

()

நூலாசிரியரின் அனுபவங்களிலிருந்து ஒரு ஆய்வாளர் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.

  • தாம் ஆய்வு நடத்தச் செல்லும் மக்களின் நம்பிக்கைகளுடன் நாம் முரண்படலாம். அதற்காக அவற்றை விவாதம் செய்யக் கூடாது. அது ஆய்விற்கும் சமயங்களில் ஆய்வாளருக்கும் சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
  • விவரங்களைத் தரச் சொல்லி தகவலாளியைக் கட்டாயப்படுத்தக் கூடாது. முறையான பேட்டிகளை விட இயல்பான உரையாடல்களில் பல சுவையான தகவல்கள் வெளிப்படலாம். கூடவரும் நண்பர்கள் சில வேளைகளில் வந்திருக்கும் நோக்கத்தினை பாழ்படுத்திவிடலாம்.
  • செல்லுமிடங்களில் கூடுமானவரை உள்ளூர் நபர்களின் அறிமுகத்துடன் செல்வது நல்லது. இல்லையெனில் ஊர் மக்களின் சந்தேகத்தில் விழ நேரிடும். பொதுவாக கிராமத்தவர்களின் முதல் கேள்வியே "தம்பி யாரு" என்பதாகத்தான் அமையும். அதில் 'தம்பி என்ன சாதி?" என்கிற கேள்வியும் அடக்கம். அவர்களின் பின்னணியில் இயல்பான அந்தக் கேள்வியை புரிந்து கொண்டு நாம்தான் பதமாக பதிலளிக்க வேண்டும் முற்போக்குத்தனமாக "மனுஷ சாதி" என்றெல்லாம் சினிமா வசனம் பேசினால் அந்த ஊரின் மருத்துவரையும் ஒரு வேளை காண நேரிடும்.
  • ஆய்வாளர் உணர்ச்சிவசப்படாமல் இருத்தல் நல்லது. உள்ளூர் விவகாரங்களில் தலையிடவோ மாட்டிக் கொள்ளவோ கூடாது.
  • ஆய்வாளர்கள் புத்தகங்கள் எழுதி நிறையச் சம்பாதிக்கிறார்கள் என்கிற எண்ணம் தகவலாளியின் அல்லது பொதுவான அபிப்ராயமாக இருக்கிறது. இதை முறையாக கையாள வேண்டும். பெருமாளின் மாணவி ஒருவர் தம்முடைய ஆய்வின் போது தகவலாளிகளுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இனிப்புகள், உடைகள் என்று வாங்கித் தர இதைப் பிடிக்காதவர்கள் 'அவர் கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்திருக்கிறார்" என்று கிளப்பிவிட அவரை வீட்டுச் சிறைப் பிடித்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
  • ஆய்வு முடிவுகளை தொகுத்து தரும் போது சாதி, சமூக வழக்கம் போன்ற சென்சிட்டிவ்வான விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். சுந்தரலிங்கம் என்கிற பெயர் பிற்பாடான கலவரத்திற்கு விதையாக இருந்ததை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அது போல் குறிப்பிட்ட இனத்தினவரின் சமூகப் பழக்கங்களை தவறாக புரிந்து கொண்ட ஒரு ஆய்வாளர் அதை விபச்சாரத்தோடு தொடர்புப்படுத்தி எழுதிவிட அது பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவந்து சம்பந்தப்பட்ட இனத்தினர் காவல்துறையினரின் தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆய்வாளர்களுக்கு உதவக்கூடிய இவ்வாறான பல தகவல்கள் கட்டுரைகளின் ஊடாக நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன.

()

பின்ணிணைப்பாக உள்ள சொல்புதிது பேட்டியில் அ.கா பெருமாள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு விஷயம் என் கவனத்தைக் கவர்ந்தது. 'நாட்டார் வழக்காற்றியலுக்கும் செவ்விலக்கியத்துக்கும் உள்ள உறவு குறித்த நிலை என்ன?' என்பது ஒரு கேள்வி. .. நீலி கதையின் கூறுகள் சம்பந்தர் காலத்திலிருந்து தொடர்ந்து செவ்விலக்கியங்களில் வருவதும் பெரியாழ்வார் தாலாட்டு வடிவத்தைப் பயன்படுத்தியதும் பிற்காலத்தில் இது பிள்ளைத் தமிழ் வகையில் தனிப்பருவமாக வெளிப்பட்டது போன்ற பல தகவல்களை இந்தக் கேள்விக்கான பதிலில் காண முடிகிறது.

ஏற்கெனவே கூறியபடி ஆய்வு மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மாத்திரமல்லாது ஒரு பொதுவான -குறிப்பாக நகர்ப்புற - வாசகனுக்கு உபயோகமுள்ள பல சுவையான தகவல்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.

நூல் விவரம்:

சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள்
யுனைடெட் ரைட்டர்ஸ்
முதல் பதிப்பு: நவ 2006
விலை ரூ.85/-

image courtesy: http://www.udumalai.com/





suresh kannan

11 comments:

குப்பன்.யாஹூ said...

கிர்ந்தமைக்கு நன்றிகள்

பெருமாள், பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியரா அல்லது வேறு நபரா.

பிச்சைப்பாத்திரம் said...

//பெருமாள், பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியரா //

குப்பன்.யாஹூ,

அவரேதான்.

PRABHU RAJADURAI said...

"வயிற்றுப் பிள்ளையோடு ஒரு பெண் இறந்தால் வயிற்றை அறுத்து அவளின் குழந்தையை தனியாக எரிக்கும் வழக்கம் சில பிரிவினரிடமும் இருப்பதை அறிய முடிகிறது"

கோபல்ல கிராமத்தில் இறந்து போகும் பெண்ணும் கர்ப்பிணி என்று நினைக்கிறேன். குழந்தையை வெளியே எடுப்பதை அதில் படித்தேனா இல்லை வேறு எங்கோவா என்று குழப்பமாக இருக்கிறது.

இந்த சுண்ணாம்பு கேட்கும் கதையெல்லாம், சிறு வயதில் அடிக்கடி கேட்டது. இப்பொழுது பிள்ளைகளிடம் பேய் கதை சொன்னால் சிரிக்கிறார்கள்...

தமிழன் வீதி said...

நல்லதொரு அறிமுகம்.

"தம்முடைய கோயில்களில் கூத்து நடத்தும் அதே கலைஞர் தலித் கோவிலிலும் ஆட்டத்தை நிகழ்த்துவதை பிற சாதிப் பிரிவினர் விரும்பவில்லை" என்பது நூற்றுக்கு நூறு உண்மை. சாதியென்னும் கொடிய கரு நாகம் இன்னும் கிராமங்களில் நாக்கை சுழற்றிக் கொண்டுதான் இருக்கிறது.

சா'தீ'யில் வெந்து சாவது தமிழனின் மடமை.
-தோழன் மபா

தாராபுரத்தான் said...

நன்றி.புத்தகத்தை இன்றே வாங்க முயற்சிப்பேன்.

Anonymous said...

நல்லதொரு பகிர்வு. நன்றி நண்பரே. அ.கா.பெருமாளின் மற்ற நூல்களையும் பற்றி எழுதுங்கள்.

லெனின் said...

I think Dr.A.K.Perumal, Aralvaimozhi Arignar Anna Collage Proffessor.

லேகா said...

Suresh,

Thanks for sharing.

பிச்சைப்பாத்திரம் said...

குப்பன்.யாஹூ,

நான் அளித்தது தவறான தகவல். அணிந்துரை எழுதின பேராசிரியர் நா.இராமச்சந்திரன்,பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியைச் சேர்ந்தவர் என நூலில் குறிப்பிட்டிருந்தமையால் பெருமாளும் அங்குதான் பணியாற்றியிருப்பார் என்று நானாக யூகித்து விட்டேன். தவறுதான். இணையத்தில் சற்று தேடியிருக்கலாம். ஆய்வாளர் தொடர்பான விஷயத்தை சற்று ஆய்வு செய்திருக்கலாம்.

நண்பர் லெனின் குறிப்பிட்டது போல் அவர் ஆரல்வாய் மொழி அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். மேலதிக விவரங்களுக்கு ஜெயமோகனின் இந்தப் பதிவை வாசிக்கவும். http://www.jeyamohan.in/?p=887

Anonymous said...

மாற்றுப்பிரதி
இங்கும் பேசலாமே

குப்பன்.யாஹூ said...

oh its ok.

Because in Tamilnadu, Folklore dept has been started 1st in st xavier's college palayamkottai only. I guess Ramanathan and Perumal were worked there together.

Srinivasan (kaanchanai srinivasan, who worked with ameer in paruthiveeran) is his student I guess.