உறுபசி (நாவல்) - எஸ்.ராமகிருஷ்ணன்.
உயிர்மை பதிப்பகம். ரூ.75/- பக் 135 மத்திம வயதிலிருக்கும் எந்தவொரு மனிதனும் தான் கடந்து வந்த வாழ்க்கையின் நிறைவான, சுதந்திரமாக வாழ்ந்த கட்டங்களை பின்னோக்குகையில் அது பெரும்பாலும் அவனுடைய கல்லூரிக்காலமாகத்தானிருக்கும். இந்த சமயத்தில் ஏற்படுகிற நட்பு பெரும்பாலும் கல்லூரி வாசலை தாண்டினவுடனே அற்பாயுளில் மடிந்துவிடும் நிலையில், அதற்குப் பிறகும் அந்த நட்பை தொடரும் வகையில் சூழலை ஏற்படுத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள். அலுவலக இயந்திர வாழ்க்கையின் அலுப்பிலிருந்தும் குடும்பச் சிக்கல்களின் சலிப்பிலிருந்தும் விலகி எப்போதாவது கூடி தங்களைது கல்லூரி நினைவுகளை குடியின் துணையுடன் சிரிப்பும் கும்மாளமுமாக மீட்டெடுத்துக் கொள்ளும் அந்த கணங்கள் அற்புதமானவை. விதவிதமான குணச்சித்திரங்கள் நட்பு என்கிற ஒரே புள்ளியில் தங்களின் தற்போதைய அந்தஸ்தை மறந்து ஒரே சபையில் அமர்வது அற்புதமானவை. இந்த நிலையில் சக நண்பனின் மரணம் ஏற்படுத்தும் வலியும் துயரமும் வீர்யமிக்கவை.
'சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் மூவரும் எங்காவது பரிச்சயமே இல்லாத ஒரு இடத்திற்குப் போய்விடலாம் என்று கானல் காட்டின் பெரும்பாதையில் வந்து இறங்கியிருந்தோம் ' என்று ஒரு சிறுகதையின் ஆரம்பத்தைப் போல் திடுக்கென்று சம்பத்தின் மரணத்தைப் பற்றின ஆரம்பத்தோடு தொடங்குகின்ற இந்த நாவல், சம்பத் என்கிற மனிதனின் ஆளுமை மற்றும் அவனுடைய மரணத்தைப் பற்றின வாசனைகளால் நிறைந்திருக்கிறது. அழகர், சம்பத், ராமதுரை, மாரியப்பன் என்கிற நால்வர் தமிழ் இலக்கியம் படிப்பதின் மூலம் நண்பர்களானவர்கள். இவர்களில் சம்பத் என்பவனின் மரணத்தைத் தொடர்ந்து அவனைப் பற்றிய நினைவுகள் அவனுடைய நண்பர்கள், காதலி, மனைவி போன்றவர்களால் இந்த நாவலில் விரிகிறது. சம்பத்தின் மரணத்தைத் தொடர்ந்து நடக்கிற மரண ஏற்பாட்டு நிகழ்வுகளும் இந்த நினைவுகளின் ஊடே சொல்லப்படுகிறது.
சம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாகவும், ஆதார சுருதியாகவும் இருக்கிறான். அவனைப் பற்றின சித்திரம் இயல்பான வண்ணங்களால் திறமையாக தீட்டப்பட்டு இந்த நாவல் முழுவதும் நமக்கு தரிசனம் தருகின்றன. சம்பத்தின் ஆளுமைக்கூறுகள் நாவலில் ஆங்காங்கே சிதறியிருக்கின்றன. அவன் உங்களின் நண்பர்கள் யாராவையாவது உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும் அல்லது நீங்களே சம்பத்தாகக்கூட உணரக்கூடும். தான் நினைத்தை உடனே நிகழ்த்திப் பார்க்க பிரியப்படுபவன்; தன்னிடம் உறைந்திருக்கும் பயத்தை மறைக்க மூர்க்கத்தனமாக நடந்து கொள்பவன்; தமிழிலக்கயம் படிக்கப்போய் நாத்திகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்படுபவன்; வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போல்ட்டு, நட்டு விற்கிறவன்; பீர் குடித்து ஒத்துக் கொள்ளாமல் ஏறக்குறைய சாகப் போய் பிழைக்கிறவன், சில முறையே சந்திக்கிற பெண்ணை தீடாரென தீர்மானித்து ஒரு லாட்ஜ் அறைக்குள் திருமணம் செய்து கொள்கிறவன், அப்பாவை கட்டையால் ரத்தம் வர அடிக்கிறவன், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு மறுநாள் மீன்குழம்பைப் பற்றி பேசுகிறவன் ... என சம்பத்தைப் பற்றின பல நிகழ்ச்சிகளின் மூலம் அவனைப் பற்றி பிரமிப்பாகவும், விநோதமாகவும் நமக்கு தோற்றமளிக்கச் செய்கிறவன். இதனாலேயே அவன் நண்பர்களால் கதாநாயகத்தன்மையுடனும் கூடவே வெறுப்புணர்ச்சியுடனும் பார்க்கப்படுகிறவன்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில உதாரண பகுதிகள் உங்களுக்கு இதை விளக்க வைக்கக்கூடும்.
... என் மனைவி அந்தப் பெண்ணை பார்த்து முகம் சுழிப்பதை கவனித்ததைப் போல, 'இவ ரோட்சைடு பிராத்தல்... ஆனா பிளஸ் டூ படிச்சவ.. என்னையே லவ் பண்றா என்று அவளிடமும் அறிமுகப்படுத்தினான் ....
.... 'பொம்பளைப் பிள்ளைகளை வயசுக்கு வந்ததும் கட்டிக் கொடுத்து விடுவது போல நம்மையும் நடத்தினால் நன்றாகயிருக்குமில்லையா, இப்படி காமம் ஒரு கரையானைப் பேல மெல்ல அரித்துத் தின்பதிலிருந்து தப்பி விடலாமே. ஒரு ஆள் வேலை கிடைத்து சம்பாத்தியம் செய்தால் மட்டுமே ஒரு பெண்ணோடு உறவு கொள்ள முடியும் என்பது மடத்தனமானது என்று சம்பத் புலம்பிக் கொண்டேயிருந்தான். '....
.... மூவரும் கரும்பு ஜீஸ் கடை முன்பாகப் போய் நின்று கொண்டோம். சம்பத் முழு மூடி எலுமிச்சம் பழம் பிழியும் படியாகக் கேட்டுக் கொண்டு விட்டு கீழே விழுந்து கிடந்த கரும்புச் சக்கையைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ யோசனைக்குப் பிறகு கரும்பு ஜீஸ் விற்பவனிடம் இந்த மிஷின் என்ன விலையாகிறது என்று விசாரித்தான். .... 'கரும்பு ஜீஸ் இயந்திரத்தை நாம் வாங்கி நடத்தத் துவங்கினால் ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் கிடைப்பதோடு அடுத்தவர்கள் மேல் உள்ள அத்தனை ஆத்திரத்தையும் கரும்பைச் சக்கையாக பிழியும் போது காட்டினால் மனதும் சாந்தமாகி விடும் இல்லையா ' என்றான். இதற்கு அவன் மனைவி சிரித்தாள்.சம்பத் இவ்வாறு விநோதமாக நடந்து கொள்வதற்கான காரணத்தின் தடயத்தையும் இந்த நாவலில் ஆசிரியர் விட்டுச் சென்றிருக்கிறார். சிறுவயதில் தன் சகோதரியின் மரணத்திற்கு தன்னையறியாமலே அவன் காரணமாக இருந்த குற்றவுணர்வினாலேயே அதை மறைத்துக் கொள்ள தான் மூர்க்கமாக நடப்பதாக தன் நண்பனிடம் பிற்பாடு கூறுகிறான். சம்பத்தின் நடவடிக்கைகள் ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் விநோதமாக தோன்றினாலும், அவனுடைய பார்வையில் தான் நினைப்பதை உடனே நிகழ்த்திக் கொள்ளும் ஒரு குழந்தையின் மனப்பான்மையே தெரிகிறது. குழந்தைகளும் விலங்குகளும் மட்டுமே தான் நினைப்பதை உடனே செயலாக்கிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.
()
புத்தகத்தின் பின்னட்டையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த நாவலை எஸ்.ரா. உலர்ந்த சொற்களால் சொல்லிக் கொண்டு போனாலும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிற (கீழே குறிப்பிடப்பட்டிருக்கிற) கவித்துவமான வர்ணணைகள் இந்த நாவலின் வாசிப்பனுபவத்தை சுவாரசியமானதாக ஆக்குகிறது. சம்பத்தின் மனைவி மீது நண்பர்களில் சிலர் கொள்ளும் காமம் கலந்த உணர்வையும் ஒளிக்காமல் வெளிப்படுத்தும் இந்த நாவல் இந்த மாதிரியான காரணங்களாலேயே இதில் வரும் நபர்களை நமக்கு நெருக்கமாக உணர வைக்கிறது.
....எங்களைச் சுற்றிலும் மலை படர்ந்திருந்தது. பசுமையின் கோப்பைக்குள் விழுந்து கிடப்பதைப் போல் நாங்கள் நின்றிருந்தோம்....
.... நோய்மையின் தாழ்வாரத்திற்குள் நடந்து கொண்டிருந்தோம். மண்டையில் பெரிய கட்டு போட்ட ஒரு நாலு வயதுச் சிறுமி கையில் ஒரு குச்சி மிட்டாயை ஆசையாகச் சுவைத்துக் கொண்டிருந்தாள்.
........சாலையில் வெயில் பாதசாரிகளின் கால்களில் மிதிபட்டுக் கொண்டிருந்தது. .... எறும்புகள் புற்றிலிருந்து வெளியே வருவதைப் போலப் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்கள் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்....காலமும் பரப்பும் குறுகியிருக்கிற காரணத்தினாலேயே இந்தப் படைப்பை நாவல் என்றழைக்க தயக்கமாயிருப்பதால் ஒரு செளகரியத்துக்காக குறுநாவல் என்று வகைப்படுத்தலாம். 'நான் சம்பத்தின் கைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ' (பக்22) போன்ற இலக்கணப் பிழைகள் நாவலின் இடையே நெருடுகின்றன. எல்லா நண்பர்களின் மூலமாகவும் சம்பத்தின் நினைவுகள் விவரிக்கப்பட்டுள்ளதால் எந்த நண்பரின் மூலமாக குறிப்பிட்ட பகுதி பதிவாகிறது என்பதில் சற்றே குழப்பமேற்படுத்தும் வகையில் நாவலின் நடை செல்வதை ஆசிரியர் முயன்றிருந்தால் தவிர்த்திருக்கலாம்.
முழுக்க கற்பனையினாலேயே எழுதப்படும் படைப்பை ஒரிரு பக்கங்கள் தாண்டினவுடனேயே ஒரு கூர்மையான வாசகன் அவதானித்து விட முடியும். மாறாக வாழ்க்கையின் அனுபவத்தின் சாரத்திலிருந்து எழும் நாவல்கள், வாசகனின் மனதில் இனம் புரியான நெருக்கத்தையும் தோழமையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த நாவலெங்கும் யதார்த்தத்தையும், உண்மையின் வாசனையையும் உணர முடிவதால் சமீபத்திய வரவில் குறிப்பிடுத்தகுந்த படைப்பாக இதைக் கொள்ளலாம்.
(குறிப்பு: இது ஒரு மீள்பதிவு - பிப் 2006-ல் எழுதப்பட்டது)
நன்றி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=60602034&edition_id=20060203&format=html
suresh kannan
5 comments:
இந்தப் புத்தகத்தைச் சமீபத்தில் தான் படித்து முடித்தேன், பின் அட்டையில் குறிப்பிட்டிருப்பதை நான் படிக்கவில்லை, படிக்கவும் தோன்றவில்லை. புத்தகத்தை படித்து முடித்தவுடன் மனதில் தோன்றிய இனம்புரியாத உணர்வுதான் காரணம். அதை வருத்தமென்றோ, கோபமென்றோ வகைப்படுத்தவும் முடியவில்லை. 'இந்தப் புத்தகத்தை படித்திருக்கதான் வேண்டுமா' என்றும் ஒரு கணம் தோன்றியது.
நீங்கள் குறிப்பிட்டது போல், சில கவித்துவமான வரிகள் இருந்தபோதும், அவையும் எஸ்ராவின் கட்டுரைகளில் ஏற்கனவே பலமுறை பார்த்துப் பழகிவிட்ட உணர்வைத் (சலிப்பை) தந்தன.
படிக்கும் போது சில இடங்களில் ஜேஜேவின் நினைவு வந்ததையும், ஒப்பிட்டுப் பார்ப்பதையும் தவிர்க்க முடியவில்லை. ஜேஜெவில் நான் பெற்ற, வாசிப்பு இன்பத்தை இந்தப் புத்தகத்தில் நான் அடையவில்லை. மறு வாசிப்பு அவசியம் தானா என்ற கேள்வியை எனக்குள் ஏற்படுத்திய மிகச்சில புத்தகங்களில் இதுவும் ஒன்று
அன்பின் சுரேஷ்,
அவசியமான மீள் பதிவு. மறைந்த சம்பத்தின் 'இடைவெளி' நாவலுடன் 'உறுபசி'யை இணைத்துப் படித்தால் வேறொரு வாசிப்பு கிடைக்கும்.
//'சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் மூவரும் எங்காவது பரிச்சயமே இல்லாத ஒரு இடத்திற்குப் போய்விடலாம் என்று கானல் காட்டின் பெரும்பாதையில் வந்து இறங்கியிருந்தோம் '//
என்ற 'உறுபசி'யின் தொடக்கம், தற்செயலானதல்ல என்பது என் எண்ணம்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
தனிப்பட்ட முறையில் எனக்குத் தேவையான மீள்பதிவு! எஸ்.ராவின் மூன்று நாவல்களை உடுமலையில் ஆர்டர் செய்து விட்டு மேயத்தொடங்கும்போது இப்பதிவு !
சுருக்கென உங்கள் விமர்சனங்கள் snapshot அனுபவத்தைத் தருகின்றன. நன்றி.
உங்கள் விமர்சனத்தைப் படித்த பின் எனக்கென்னவோ ஜெஜெ சில குறிப்புகளைத் தாண்ட முடியுமெனத் தோன்றவில்லை.
பைத்தியக்காரன் - உங்கள் இடுகையின் அர்த்தம் புரியவில்லை. சம்பத் உண்மையான நபரின் கதையா?
நன்றி
ரா.கிரிதரன்
நானும் படித்திருக்கிறேன்.உங்கள் விவரனை நன்றாக இருந்தது சுரேஷ்.
I have not read S. Ramakrishnan's novels and short stories. Your writing is almost asking me to read them. I will give a try. ( I like S. Ramakrishnan,s essays ).
Post a Comment