Monday, January 18, 2010

பாட்டிமார்களுக்குச் சமர்ப்பணம்

இரண்டே பிரதான பாத்திரங்கள், 10 KB அளவேயுள்ள சொற்ப வசனம், அதிகம் சுவாரசியமூட்டாத லொக்கேஷன் ஆகியவற்றை வைத்துக் கொண்டு உணர்வுப்பூர்வமானதொரு சர்வதேச தரமுள்ள திரைப்படத்தை தந்துவிட முடியுமா?. முடியும் என்று நிருபித்திருக்கிறார் Lee Jeong-hyang. ஆறு வயதுள்ள ஓர் அடாவடிச் சிறுவன், நிபந்தனையில்லா அன்பை கொட்டும் ஓர் ஊமைக் கிழவி ஆகிய இருவரைச் சுற்றியே இயங்குகிறது கொரியத் திரைப்படமான The Way Home.



சிறுவனின் தாய்க்கு பணிச் சூழல் காரணமாக தன் மகனை கிராமத்திலிருக்கும் அவனுடைய பாட்டியின் பாதுகாப்பில் சிறிது காலத்திற்கு விட்டு வைத்திருக்க வேண்டியதொரு சூழ்நிலை. அதுவரை நகரத்தின் நவீன நிழலிலேயே வளர்ந்திருக்கிற சிறுவன் கிராமத்து ஊமைக் கிழவியை உலக அளவிற்கு வெறுக்கிறான். அவளுடைய செருப்புகளை ஒளித்து வைக்கிறான். கொண்டை ஊசியைத் திருடி விளையாட்டுக் கருவி பேட்டரிகளை வாங்க முடியுமா என்று சோதிக்கிறான். வறுத்த கோழி வேண்டுமென்று கிழவியை வறுத்தெடுக்கிறான். பிறகு சிறிது சிறிதாக அவளின் மெளனமான அன்பைப் புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு பிறகான காட்சிகள் பயணிக்கின்றன.

நகர்ப்புற பின்னணியில் வளர்கிற இன்றைய குழந்தைகளின் பிரதிநிதியை அந்தச் சிறுவனின் மூலம் காண முடிகிறது. கூடவே நகரமயமாக்கலின் அபத்தத்தையும். கிழவியிடம் ஒரு வார்த்தை கூடப் பேச விரும்பாமல் தன்னுடைய வீடியோ கேம்முடனே பொழுதைக் கழிக்கிறான்; விளையாட்டுச் சீட்டுகளிடம் உரையாடுகிறான்; பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கிற உணவை மாத்திரமே விரும்புகிறான்.

சிறுவன் கிராமத்து மனிதர்களை வெறுப்பதை படம் ஆரம்பிக்கிற சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களுக்கு இயக்குநர் உணர்த்தி விடுகிறார். கிராமத்து பேருந்தில் பயணிக்கும் அவன், சுற்றி அமர்ந்திருக்கும் மனிதர்களின் உரத்த சிரிப்பையும் தன்னருகே அமர்ந்திருப்பவள் மேலே சாய்ந்து கொண்டே வருவதையும் விரும்புவதில்லை. கிழவியின் எளிமையான வீட்டுச் சூழலையும் அருவெறுப்புடனே பார்க்கிறான்.

கிழவியின் மீது சிறுவனின் அன்பு மெல்ல வெளிப்படும் காட்சி கவிதையான ஒரு தருணத்தில் வெளிப்படுகிறது. கொடியில் காயப் போடப்பட்டிருக்கும் துணிகள் மழையில் நனைய ஆரம்பிக்கும் போது தன்னுடைய உடைகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு திரும்புகிறவன், சற்று யோசித்து பிறகு பாட்டியின் உடைகளையும் எடுத்து வருகிறான்.

பாட்டியின் சைகை மொழி அவனுக்கு முதலில் எரிச்சலை ஏற்படுத்தினாலும் பிறகு இயல்பாக அது அவனுக்குள்ளும் ஒட்டிக் கொள்கிறது. 'மன்னித்துவிடு' என்பதை கையை மார்பின் மீது வட்டமிட்டுக் காட்டுகிறாள் கிழவி. தன்னை விட பெரிய சிறுவன் ஒருவனை விளையாட்டாக கீழே விழ வைத்துவிட்டு பிறகு பயந்து போய் அவனிடம் மார்பின் மீது வட்டமிட்டு காட்டி விட்டு ஓடிவந்து விடுகிறான். படம் நிறைவடையும் காட்சியிலும் தாயுடன் திரும்பிப் போகும் போது அதுவரை தான் செய்த அத்தனை தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்கும் விதமாக அழுகையுடன் அதே சைகையை ஜன்னலின் வழியின் பாட்டிக்குக் காட்டுகிறான்.

()

தாத்தா-பாட்டி-பேரன்-பேத்தி உறவு மிக அலாதியானது. தமக்குப் பிறந்தவர்களைக் காட்டிலும் அவர்களுக்குப் பிறந்தவர்களிடம் அதிக அன்பு செலுத்தும் மனித உறவின் உளவியல் பின்னணி என்னவென்று புரியவில்லை. இயற்கையின் ஆதார சுருதியும் நோக்கமும் உயிர்களின் சுழற்சியே. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாரிசுகளை தம்முடைய நீட்சியின் அடையாளமாகவே கண்டு மகிழ்கிறான். நீட்சியின் தொடர்ச்சி இன்னும் அவனுக்கு அதிக மகிழ்வை ஏற்படுத்துகிறது என்று இதைப் புரிந்துக் கொள்கிறேன்.

சிறுவனின் அத்தனை அழிச்சாட்டியங்களையும் அந்தக் கிழவி தன்னுடைய மெளனமான அன்பால் கடந்து செல்கிறாள். உலகத்தின் அத்தனை சோகங்களையும் தாங்கி நிற்கிற மாதிரியான அவளது முகம் நமக்குள் மிகுந்த நெகிழ்வை ஏற்படுத்துகிறது. இத்தனைக்கும் அவளது முகபாவங்கள் அத்தனை எளிதில் வெளிப்படுவதில்லை. ஜப்பான், சைனா, கொரியா போன்ற நாட்டு மக்களின் முகத்திற்கு பொதுவான அம்சமிது. என்றாலும் உடல் மொழியிலேயே அவளது அத்தனை அன்பும் வெளிப்படுகிறது.

இரண்டு கிழவிகள் உரையாடிக் கொள்ளும் ஒரு காட்சி மிக முக்கியமானது. சொற்ப நேரமே இது நிகழ்ந்தாலும் மரணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிற கசப்பையும் தங்களின் உடல் உபாதைகளின் வேதனையை பரிமாறிக் கொள்வதின் மூலம் அதற்கான ஆசுவாசம் கிடைப்பதையும் இந்தக் காட்சிகள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

சிறுவன் வாங்கி வரச் சொன்ன சாக்லெட்டுக்காக கடைக்கு ஊர்ந்து செல்கிறாள் கிழவி. கடைக்காரி அவளுடைய தோழிதான். இவள் ஊமை என்றாலும் கூட இவளுக்கும் சேர்த்து கடைக்காரியே பேசுகிறாள் ஊமைக்கிழவி தன்னுடைய உடல் மொழியின் மூலமே அவளை ஆமோதிக்கிறாள். சாக்லேட்டுக்கு காசு வாங்கிக் கொள்ள மறுக்கும் கடைக்காரியிடம் அன்பளிப்பாக தன்னுடமிருந்த பூசணிக்காயை வழங்குகிறாள் ஊமைக்கிழவி.

என்னுடைய அனுபவத்திலேயே இதே போன்றதொரு அனுபவத்தை பார்க்க நேர்ந்திருப்பதால் எனக்குள் மிகுந்த நெகிழ்ச்சியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின. கிழவியை பிரிவதற்கு முன்னிரவு அவளுடைய வசதிக்காக இருக்கும் எல்லா ஊசிகளிலும் சிறுவன் நூலைக் கோர்த்து வைக்கும் காட்சியையும் சொல்லாம். இந்தச் செயலை முன்பெல்லாம் எரிச்சலுடனேயே செய்து தருவான் அவன்.





பார்வையாளர்களிடம் சற்று வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு அவனது குறும்பு அமைந்திருந்தாலும், அவனது குழந்தைமை வெளிப்படும் இயல்பான காட்சியையும் இணைத்து இதை சமன் செய்திருக்கிறார் இயக்குநர். தான் மலம் கழிப்பதை கிழவி காண்பதை விரும்பாத சிறுவன், நள்ளிரவில் மலம் கழிக்க நேரும் போது பயத்தில் கிழவியை அருகாமையில் அமரச் சொல்கிறான். அவனுடைய விடலைப் பருவத்தின் தொடக்கத்தை, வீட்டின் அருகே சிறுமி ஒருத்தியின் கவனத்தைக் கவர முயல்வதும், அசிங்கமாக முடிவெட்டிவிடும் பாட்டியைக் கோபித்துக் கொள்வதின் மூலமாக இயக்குநர் அற்புதமாக சித்தரித்திருக்கிறார். 

()

பொதுவாக ஆசியத் திரைப்படங்களைக் காணும் போது அவற்றை மனதிற்கு மிக நெருக்கமானதாக என்னால் உணர முடிகிறது. கொரியக் கிராமத்து கிழவி மற்றும் தமிழகக் கிராமத்து கிழவி ஆகியோர்களின் இடையில் என்னால் அதிக வித்தியாசத்தை காண முடியவில்லை. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் வசனங்களின் துணையின்றியே நகர்கிறது. பின்னணி இசையைச் சற்றுக் கூர்ந்து கவனித்தேன். தேவையான இடங்களில் மாத்திரமே மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பார்வையாளர்களை நெகிழ வைக்கும் நோக்கத்துடன் சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டிருந்த செயற்கைத்தனத்துடன் இருந்தாலும் அவை பார்வையாளனின் முழுமையான அனுபவத்தைத் தடை செய்வதில்லை.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதே இடையிடையே எனக்கு இன்னொரு திரைப்படமும் நினைவில் வந்துக் கொண்டேயிருந்தது. Central Station. அதுவும் இதே போன்றதொரு கிழவி- சிறுவனைப் பற்றின திரைப்படம்தான். ஆனால் அதில் வரும் கிழவி சிறுவனின் குறும்புகளுக்கு எரிச்சலுடன் பதிலடி தந்து கொண்டேயிருப்பாள். பிறகுதான் இருவருக்குமான நேசம் படரும்.

'உலகெங்கிலுமுள்ள பாட்டிகளுக்குச் சமர்ப்பணம்' என்ற குறிப்புடன் நிறைவடையும் இம்மாதிரியான திரைப்படங்களின் தேவை முதியோர் இல்லங்கள் பெருகிக் கொண்டிருக்கும் சமகால சூழ்நிலையில் மிகுந்த அவசியத்தை உணரச் செய்கின்றன.

()

'உரையாடல்' அமைப்பின் சார்பில் சிவராமன் ஏற்பாடு செய்திருந்த திரையிடல் நிகழ்வில் சக இணையப் பதிவர்ளோடு இத் திரைப்படத்தைக் கண்டேன். ஏற்கெனவே பார்த்திருந்த திரைப்படம்தான் என்றாலும் மீண்டும் காண்பதில் எந்தவித சலிப்பும் ஏற்படவில்லை என்பது திரைக்கதையின் பலத்தை சுட்டிக் காட்டுகிறது. திரையிடலுக்குப் பின்னால் ஏற்கெனவே அறிமுகமான பதிவர்களோடு புதிதாக அறிமுகமான தண்டோரா, எவனோ ஒருவன், கேபிள் சங்கர், வெண்பூ, பட்டர்பிளை சூர்யா...  போன்ற பதிவர்களோடு உரையாட முடிந்தது.

ஒவ்வொரு திரையிடலின் இறுதியிலும் பார்வையாளர்களிடையே திரைப்படத்தைப் பற்றின கலந்துரையாடலை கட்டாயமாகவாவது சேர்ப்பது ஒரு பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்துவதோடு ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட படத்தை எவ்விதம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். சிவராமன் இது குறித்து யோசிக்க வேண்டுகிறேன். இந்தத் தொடர்ச்சியான திரையிடலுக்கு உறுதுணையாக இருக்கும் 'கிழக்கு பதிப்பகம்' நன்றியோடு நினைவு கூரப்பட வேண்டியது. 

suresh kannan

7 comments:

Anonymous said...

அருமை.

butterfly Surya said...

அருமையான பகிர்வு.

தங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி.

உங்களுடன் நிறைய பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமின்மையால் முடியவில்லை.

மீண்டும் ச்ந்திப்போம்.

வாழ்த்துகள்.

உண்மையான இஸ்லாமியன் said...

அறிவுஜீவிப் பார்வை இல்லாமல் சாதாரனமாக ஒரு படத்தைப் பார்க்க முடியுமா? குறிப்பாக உலகத் திரைப்படம் எனும் படங்களை?

நான் புரிந்துகொண்டதை உங்களால் புரிந்துகொள்ள இயலாது என்ற மமதை உங்கள் விமர்சனத்தில் தெரிகிறது.

எ.கா.

//ஒவ்வொரு திரையிடலின் இறுதியிலும் பார்வையாளர்களிடையே திரைப்படத்தைப் பற்றின கலந்துரையாடலை கட்டாயமாகவாவது சேர்ப்பது ஒரு பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்துவதோடு ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட படத்தை எவ்விதம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.//

சர்வதேசத் திரைப்படம் என்பது நீங்கள் பார்த்த இந்தியப் படங்கள் அல்லாத திரைப்படங்களா? அல்லது அதற்கு ஏதேனும் ஒரு வரைமுறை இருக்கிறதா?

//இத்தனைக்கும் அவளது முகபாவங்கள் அத்தனை எளிதில் வெளிப்படுவதில்லை. ஜப்பான், சைனா, கொரியா போன்ற நாட்டு மக்களின் முகத்திற்கு பொதுவான அம்சமிது//

பாபெல் என்ற திரைப்படத்தைப் பார்த்தீர்களா? அதில் வரும் ஜப்பானியப் பெண்ணின் உடல் மொழியையும், முகபாவங்களையும் ஒருமுறை பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

இந்தப் படமெல்லாம் நாங்க பாக்குறோம்.. தெரியும்ல என்ற தோரனையில் இருக்கிறது உங்கள் விமர்சனம் என்பது எனது கருத்து.

வடிவேலு பாணியில் சொல்வதென்றால்.. இந்த ஊர்லதான் இதுக்குப் பேரு பஸ்ஸு, துபாயில இதுக்குப் பேரு குப்ப வண்டி..

Unknown said...

விமர்சனம் அருமை. படம் பார்த்த உணா்வை தருகிறது

லேகா said...

பகிர்விற்கு நன்றி சுரேஷ்.

வழக்கம் போல இம்முறையும் உலக பட திரையிடலில் கலந்து கொள்ள முடியவில்லை.

Joe said...

நல்லதொரு விமர்சனம்.
நேரம் கிடைத்தால் பார்க்கிறேன்.

//இத்தனைக்கும் அவளது முகபாவங்கள் அத்தனை எளிதில் வெளிப்படுவதில்லை. ஜப்பான், சைனா, கொரியா போன்ற நாட்டு மக்களின் முகத்திற்கு பொதுவான அம்சமிது//

இயல்பாகவே நம்மவர்களுக்கு மற்ற நாட்டவர்களை விட அழகானவர்கள் என்ற அகங்காரமா, இல்லை கிழக்காசிய தேசத்து மக்கள் மீதான துவேஷமா?

Rafeek said...

4 ஆண்டுகளுக்கும் முன் விகடனில் செழியனின் கட்டுரையை படித்து விட்டு நான் வாங்கிய முதல் உலக திரைப்படம் இது!! மனதுக்கு மிகவும் நெருங்கிய படைப்பு!! உங்கள் விமர்ச்னத்திற்கு பின் மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டியது!!