Wednesday, January 13, 2010

விண்ணைத் தாண்டி வரும் ரஹ்மானின் இசை



நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த இந்தத்  திரைப்படத்தின் இசைப்பாடல்கள் நேற்று வெளியாகியது. இதுவரை ஹாரிஸ் உடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்த கெளதம் மேனன் முதன் முறையாக ரஹ்மானை அணுகியதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. ஆஸ்கர் வாங்கின கையோடு வெளிவரும் ரஹ்மானின் முதல் தமிழ் சினிமா இசை என்பதும் கூடுதல் காரணம். இதன் இசை வெளியீட்டு விழா லண்டனில் நிகழ்ந்திருந்தாலும் தமிழ்நாட்டில் இப்போது ரீலிஸாகி குறுந்தகட்டிற்கான விற்பனை முன்பதிவே சில ஆயிரங்களைக் கடந்து விட்டது என்று மியூசிக் கம்பெனி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி உண்மையாக இருக்கலாம். கெளதமின் ஆஸ்தான பாடலாசிரியை தாமரையே எல்லாப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் என்பது கேட்பனுபவத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது.
ரஹ்மான் இந்த எதிர்பார்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார் என்றுதான் தோன்றுகிறது. இந்த இசைப்பாடல்களில் ரஹ்மானின் படைப்பு இன்னும் கூடுதல் தரத்துடன் இருப்பதாகத் தோன்றுவது என்னுடைய பிரமையாகவும் இருக்கலாம். ரஹ்மான் இப்போது சர்வதேச இசை சமூகத்துக்கு மிக நெருக்கமானவராகி விட்டதால் தம்முடைய படைப்புகள் எல்லாவிதத்திலும் அந்த தரத்திற்கு ஈடுகொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தன்னுடைய இசைக்கோர்வைப் பணியை இன்னும் மேம்படுத்தி செயல்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறேன்.

இசை குறித்த எந்தவொரு அடிப்படை ஞானமும் இல்லாவிட்டாலும், தமிழ்த் திரைப்பாடல்களை தொடர்ந்து கேட்டு வருபவன் என்கிற முறையில் 'ஒரு பாமரனின்' பார்வையில் இது எழுதப்பட்டது என்பதை மாத்திரம் நினைவில் நிறுத்தவும்.

(1) ஓமணப் பெண்ணே..

அற்புதமான மெலடியிது. 'அழகிய தமிழ் மகன்'-ல் .'நீ மர்லின் மன்றோ' பாடின அதே ஸ்டைலிஷான பாணியில் மிகவும் அனுபவித்துப் பாடியிருக்கிறார் பென்னி தயாள். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பின்னணியில் ஒலிக்கிற அற்புதமான ரிதம். இடையில் கல்யாணி மேனன் பாடின மலையாள வரிகள் வருவதால், நாயகன் நாயகியை மலையாளப் பின்னணியில் ரசித்து பாடுகிற பாடலாக இருக்கலாம். பாடலின் தலைப்பும் அதை உறுதிப்படுத்துகிறது. பாடலின் இறுதிப் பகுதியில் மேற்கத்திய இசைக்கருவிகளோடு தமிழிசையான நாதஸ்வரமும் மிக அற்புதமான கலவையாக இயைந்து ஒலிக்கிறது. தாமரையின் வரிகளில் குறிப்பிடத்தகுந்த எந்த புதுமையில்லை. .. நீ போகும் வழியில் நிழலாவேன்..' என்கிற மாதிரியான வழக்கமான தமிழ்சினிமா வரிகள்தான்.

ரஹ்மான் ரசிகர்களுக்கு மாத்திரமல்லாமல் அனைவருக்கும் பிடிக்குமென்பதால் நிச்சய ஹிட்.

(2) அன்பில் அவன்...

தேவனும் சின்மயியும் பாடியிருக்கிறார்கள். சற்று வேகமான தாளஇசை கொண்ட peppy நம்பர். தேவனுக்கு மேற்கத்திய இசைக் குறித்த ஞானமிருப்பதால் அவரால் இதில் சுலபமாக ஒட்டிக் கொள்ள முடிகிறது. என்னவொன்று அவருடைய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்புதான் சற்று நெருடலாக இருக்கும். சின்மயி தானொரு அற்புதமான பாடகி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து ஒரே மாதிரியாக ஒலிக்கும் ரிதம் தாளம் போட்டு கேட்க வைக்கிறது. ரஹ்மானின் முக்கிய பலம் தாள இசையை மிக அற்புதமான பயன்படுத்துவது. இதில் அது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. இதில் தாமரை தன்னுடைய திறமையை நிரூபிக்க எந்த வாய்ப்புமில்லை என்றுதான் தோன்றுகிறது. நாயகனும் நாயகியும் திருமணத்திற்கான முன்னேற்பாட்டையும் அதற்கான வாழ்த்தையும்தான் கேட்க முடிகிறது. 'நீளும் இரவில் ஒரு பகலும் நீண்ட பகலில் சிறு இரவும் கண்டு கொள்ளும் கலை அறிந்தோம், எங்கு அதைப் பயின்றோம்' என்ற வரிகளை மாத்திரம் ரசிக்க முடிகிறது.

இதுவும் நிச்சயமாக ஹிட்டாகலாம்.

(3) விண்ணைத் தாண்டி வருவாயா..

படத்தின் தலைப்புப் பாடல். சோகப் பாட்டு (pathos) வகை போல் ஒலிக்கிறது. unplugged போல் மிகச் சொற்ப இசைக்கருவிகளே பின்னணியில் ஒலிக்கின்றன. அதில் பிரதானமாக ஒலிக்கும் கிட்டாரின் இசைக்கோர்வை அற்புதம். துள்ளலான பாடல்களில் திறமையாக சோபிக்கும் கார்த்திக் தம்மை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு பாடியிருக்கிறார் என்று யூகிக்கிறேன். என்றாலும் சூழலின் சோகத்தை மிகத் திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். கேட்பனுபவத்திற்கு அந்தளவிற்கு திருப்தியாக இல்லையெனினும் காட்சிகளோடு பார்க்கும் போது சுவையாக இருக்கும் என நினைக்கிறேன்.

சோக மெலடியை விரும்புவர்களுக்கு பிடிக்கலாம்.

(4) ஹொசன்னா...

இந்த ஆல்பத்தின் அற்புதமான இன்னொரு மெலடி. இந்தப் பாடல் இணையத்தில் கசிந்து ஏற்கெனவே ஹிட்டாகி விட்டது. ரஹ்மானின் குரலோ என்கிற மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்பிரகாஷ் அற்புதமாக பாடியிருக்கிறார். சமயங்களில் நெருடலை ஏற்படுத்தும் பிளாசேவின் ராப் இதில் மிகப் பொருத்தமாக இயைந்திருக்கிறது.  ஹொசன்னா.. என்கிற ஒரே வார்த்தையை மாத்திரம் பின்னணியில் விதம் விதமாக பாடும் Suzzane-ன் குரல் தேவதையின் குரல் போலவே ஒலிக்கிறது. பாடலின் அற்புதமான percussion-ம் interlude-களும் மீண்டும் மீண்டும் கேட்கும் விருப்பத்தை ஏற்படுத்துகின்றன. ரஹ்மானின் முத்திரை மிகப் பலமாக விழுந்திருக்கும் பாடல்.

நிச்சய ஹிட்.

(5) கண்ணுக்குள் கண்ணை..

எனக்குப் பிடித்த நரேஷ் ஐயர் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். ஆனால் நரேஷின் மிகப் பெரிய பலம் மெலடி. 'முன் தினம் பார்த்தேனை' இதுவரை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். ஒரே காரணம் நரேஷின் குரல். ஆனால் இதில் வேகமான தாள இசை கொண்ட பாடலை நரேஷிற்கு கொடுத்து ரஹ்மான் ஒரு சிறிய அநியாயம் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. எல்லாவிதமான வகை பாடல்களையும் ஒரு பாடகர் பாடத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றாலும் கூட. ஆனால் இதையும் மீறி நரேஷின் அற்புதமான குரலை ரசிக்க முடிகிறது. குறிப்பாக உச்ச ஸ்தாயியில் நரேஷின் குரல் சஞ்சரிக்கும் போது எந்தவித நெருடலும் இல்லாமல் வந்து இறங்குகிறது.

ஹிட்டாவது சற்று சந்தேகம்தான் என்று நினைக்கிறேன்.

(6) மன்னிப்பாயா...

ஸ்ரேயா கோஷல் எனும் தேவதையும் ரஹ்மானும் பாடியிருக்கிறார்கள். ரஹ்மான் தன்னுடைய பிரத்யேக குரலில் சிறப்பாக பாடியிருந்தாலும் (உருகி.. உருகி..யை கவனியுங்கள்) ஸ்ரேயா மிக எளிதாக இவரை எளிதாக ஓவர்டேக் செய்திருக்கிறார். அற்புதமான மெலடி. ரஹ்மானின் இசைக்கோர்வையின் வசீகரம் மயங்க வைக்கிறது.

'திருக்குறளுக்கு' இசையமைப்பதை தன்னுடைய எதிர்கால திட்டங்களில் ஒன்றாக ரஹ்மான் ஒரு நேர்காணலில் கூறியிருந்த ஞாபகம். அதற்கான முன்னோட்டமாக இந்தப் பாடலில் நான்கு குறட்களை உறுத்தாமல் நுழைத்திருக்கிறார். ..'உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே.. என்ற வரிகளில் மாத்திரம் தாமரை வெளிப்படுகிறார்.

இந்தப் பாடல் காட்சிகளின் பின்னணியில் சிறப்பாக இருக்கும் என யூகிக்கிறேன். கெளதம் மேல் நம்பிக்கையிருக்கிறது. நடுநிசியில் இந்தப் பாடலை கேட்டால் நிச்சயம் கண்ணீர் வரலாம்.

சோக மெலடி ரசிகர்களின் ஜாக்பாட்.

(7) ஆரோமலே....

அபத்தமான தமிழ்சினிமா இசைச் சூழலில் ரஹ்மானால் மாத்திரம்தான் இந்த மாதிரியான பரிசோதனை முயற்சிகளில் துணிச்சலாக  ஈடுபடமுடியும்.

தனக்குப் பிடித்த ஆளுமைகளில் ஒன்றான நுஸ்ரத் பதே அலிகான் பாடும் தன்மையிலிருந்து இந்தப் பாடலை ரஹ்மான் உருவாக்க முனைந்திருக்கலாம் என்று யூகிக்கிறேன். அல்போன்சின் unromantic குரல் உச்ச ஸ்தாயியில் எகிறும் போது சற்று பயமாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. சூ·பி இசையும் தமிழிசையின் ஒப்பாரி வகையும் கலந்ததொரு உணர்வும்  ராக் இசையை கேட்கும் துடிப்பான பரவசமும் இந்தப் பாடலை கேட்கும் போது ஏற்படுகிறது. என்றாலும் தமிழ் சினிமா இசை ரசிகர்கள் இதுவரை சந்தித்திராத ஒரு தளத்தில் இப்பாட்டு இயங்குகிறது என்பதை மாத்திரம் சொல்ல முடியும். 

எழுத்தாளர் கோணங்கி எழுதினதோ என்று சந்தேகப்பட வைக்கும் மலையாள வரிகள் வசீகரத்தை ஏற்படுத்துகின்றன.

துணிச்சலான பரிசோதனை முயற்சி. 




ரஹ்மானின் இந்த இமாலய புகழும் சர்வதேச விருதுகளும் அவரின் கடும் உழைப்பால் கிடைத்தது என்கிற உண்மையை இந்தப் பாடல்கள் உரக்கச் சொல்கின்றன. தமிழ் சினிமாவின் இசை சற்று முதிர்ச்சியான திசையில் நடக்கத் துவங்கியிருக்கின்றது என்பதற்கான அடையாளமாக இந்த ஆல்பத்தைச் சொல்ல முடியும். மொழி அறியாத, சர்வதேச இசையில் கேட்பனுபவம் உள்ள ஒருவரால் கூட இந்த இசையை மிக நெருக்கமாக உணர முடியும்.

முதல் கேட்பில் சற்று தொய்வை ஏற்படுத்துகிற சில பாடல்கள் மாத்திரம் மீண்டும் மீண்டுமான அனுபவத்தில் நிச்சயம் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். ரஹ்மானின் இசையை கேட்டுவரும் முந்தைய அனுபவங்களிலிருந்து இதை எளிதாகச் சொல்ல இயலும்.

இந்த ஆல்பத்தின் மிகப் பெரிய ஏமாற்றம், தாமரை. முந்தைய அனுபவங்களிலிருந்து மிகச் சிறந்த வரிகளை எதிர்பார்த்திருந்த எனக்கு தாமரையும் சொல்லிக் கொள்கிறாற் போல் அல்லாத பங்களிப்பு ஏமாற்றத்தைத் தருகிறது. நிற்க. இதற்காக அவரைக் குறைச் சொல்ல விரும்பவில்லை. இயக்குநரோ, இசையமைப்பாளரோ அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமலிருந்திருக்கலாம் அல்லது குறுகிய வட்டத்திற்குள் இயங்கச் சொல்லி கட்டாயப்படுத்திருக்கலாம்.

ஹாரிஸ்-கெளதம் கூட்டணி உடைந்து போனது சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், ரஹ்மான் தனது மேஜிக்கால் அந்த வருத்தத்தை துடைத்தெறிந்திருக்கிறார். பாடல்களை காட்சிரீதியாக சற்று கற்பனை செய்து பார்க்கும் போது த்ரிஷா கூட பொருந்திப் போவார் என்று தோன்றினாலும் 'டன்டணக்கா' இமேஜை வைத்திருக்கும் சிம்புவை கற்பனை செய்து பார்க்கவே பயமாய் இருக்கிறது. பார்க்கலாம். படத்தின் ஸ்டில்களையும் பாடல்களையும் கேட்ட பிறகு சிம்புவை விட 'உன்னாலே உன்னாலே' வினய், இந்தத் திரைப்படத்திற்கு பொருத்தமாய் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. சிம்புவிற்கு இருக்கிற வணிக மதிப்பு வினய்க்கு இருக்காது என்பதுதான் ஒரே மைனஸ்.

ரஹ்மானின் இந்த ஆல்பம் பண்பலை வானொலிகளின் புண்ணியத்தில் விண்ணைத் தாண்டி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்பது மாத்திரம் நிச்சயம்.

image courtesty: http://chennai365.com/movies/vinnaithandi-varuvaya-audio-launch-stills/


suresh kannan

11 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பதிவு அருமை

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

ISR Selvakumar said...

நல்ல பதிவு!

Mahadev said...

Super sir.. Thanks for the Review..

Athisha said...

எங்கள் சின்ன சிங்கம் நடித்த படத்தில் டண்டனக்கா டன்டணாக்கா னு குத்துகுத்தாம என்ன இது ஒரே அழுவாச்சி பாட்டா இருக்கு! ச்சேய்!

படத்தோட பாட்டுக்காக சிம்புவுக்கு பதிலா வினய்னு சொல்றதுலாம் டூமச்ங்கோ!

CSB said...

i dont think songs are worth listening. with lots of expectation i downloaded yesterday. when i listened, not even a single song impressed me. when i hear the vaaranam aayiram, the very first item itself it made me gaga over the songs. everyone arr was good once upon a time. but not now. please accept this. really songs are bad. Yuvan's Goa also screwed up.

Anonymous said...

கண்ணை கட்டியில் வரும் வயலின் மீண்டும் மீண்டும் அந்த பாடலை கேட்க தூண்டுகிறது. அதுவும் ஹிட் ஆகா வாய்ப்பு இருக்கிறது சுரேஷ்!
நீங்கள் சொன்னது போல் இதில் தாமரையின் மேஜிக்கை காணோம் :( அதாவது எதிர்பார்ப்புக்கு ஏற்ற வரிகள் இல்லை (அங்காங்கே "நீளும் இரவில் ஒரு பகலும்" "காற்றில் அசைகிறது உன் சேலை விடிகிறது என் காலை" என தென்படுகிறது)

@CSB,

I agree with you, but as you know ARR's song are like foreign scotch, will get the efffect very slowly. Also about Goa, I don't think it is worst. Below is the comment I posted in kargi's blog.

//கார்கி,

உங்கள் கருத்தோடு நான் ஒத்து போகிறேன்..போன வருஷம் எப்படா புது பாட்டு வரும்னு...குத்த வெச்சு உக்காந்திருப்பேன். இப்ப நெலமை நேர்மாறு. அட் எ டைம்ல அட்டாக் பண்ண ஆரம்பிச்சுடாங்க.....

நீங்க குறிப்பிட மறந்தது -

கோவாவில்
ஆண்ட்ரியா, அஜீஸ்( சமீபத்திய ஏர்டெல் சூப்பர் சிங்கர்) சேர்ந்து பாடிய "இது வரை" - தாறு மாரா இருக்கு.

இடைவழி ஒரு காதல் செய் - கேட்க கேட்க அந்த டியுன். நல்லா இருக்கு.

"வாலிபா வா வா" - எஸ் பி பி, இளையராஜாவும் ஒரு தோள்மேல கையபோட்டுடு பாடுன மாறி ஜாலியா பாடிட்டு இருக்கும் போது...நம்ப சித்ராக்கா மார்கழி சீசன்ல பாடறா மாதிரி ஒரு என்ட்ரி குடுத்திட்டு அப்புடியே அவங்களும் அந்த டியுன்ல கலந்திருவாங்க... இதுவும் ஒரு நல்ல பாடல்

எழேழு தலைமுறைக்கும் - கண்டிப்பா டைட்டில் சாங்கா இருக்கும் போல :)

தமிழ்படம்:

மசாலா பாட்டுக்கு - குத்து விளக்கு குடும்ப குத்து விளக்கு அப்படின்னு பாட்டு போட்ருக்காங்க...படத்தோட எதிர்பார்ப்ப பாடல்களும் எகுற வெக்குது :)

வி. தா. வா:
முதல் முறை கேட்டப்ப வழக்கம் போல தாமரைய காணவே காணோம். தல போட்டு அமுக்கிடாப்ள. ஆனா சரக்கு சீம சரக்கில்ல மைல்டா ஏறுது.
கேபிள் சொன்னது மாதிரி - "ஓமனப்பெண்ணே" நாதஸ்வரம், அப்புறம் "கண்ணுக்குள் கண்ணை" - வயலின், ஆரோமலே - ஸ்டார்டிங் கிடார் எல்லாம் டாப்பு டக்கர்.

அப்பறம் 3 இடியட்ஸ் கேட்டீங்களா...அதுவும் ஒரு சிறந்த ஆல்பம்.. "ஜானே நஹி" என்னோட சாய்ஸ்.
பி.கு: முஜே இந்தி நஹி மாலும் ஹை :) //

Unknown said...

///பாடலின் இறுதிப் பகுதியில் மேற்கத்திய இசைக்கருவிகளோடு தமிழிசையான நாதஸ்வரமும் மிக அற்புதமான கலவையாக இயைந்து ஒலிக்கிறது///

கொஞ்சம் உற்றுக் கேளுங்கள். பாடலில் அநேக இடங்களில் (இறுதியில் மட்டுமல்ல) அதே நாதஸ்வரம் மிக மெலிதாக ஒலிக்கிறது. ரஹ்மான் ஸ்பெஷல்

KARTHIK said...

// இந்த ஆல்பத்தின் மிகப் பெரிய ஏமாற்றம், தாமரை.//

எனக்கும் தல :-((

ராஜாதி ராஜ் said...

சிறந்த அலசல். பாராட்டுக்கள் சுரேஷ் கண்ணன் :)

"ஒரு பாமரனின்' பார்வையில் ..."... "அற்புதமான percussion-ம் interlude-களும் ?? பொருட்படுத்த தேவை இல்லாத முரண்பாடென்று நினைக்கிறேன்.

எனகென்னமோ சிம்பு நீங்க சொல்ற ''டன்டணக்கா" இமேஜ் விட்டுட்டு ஒரு soft-spoken, decent guy மாதிரி பண்ணிருப்பார்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.

பதிவுக்கு நன்றி.

சாணக்கியன் said...

இப்பாடல்களில் ‘ஒலி’-யில்தான் புதுமை இருக்கிறது. அது சர்வதேச ரசிகர்களும் கேட்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டுள்ளது. மெட்டுக்களில் புதுமை இல்லை!

Unknown said...

*/'டன்டணக்கா' இமேஜை வைத்திருக்கும் சிம்புவை கற்பனை செய்து பார்க்கவே பயமாய் இருக்கிறது. பார்க்கலாம்./*

What do you say now friend? (i.e. after watching the movie, does Simbu is suitable for that character?