தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறவர்களை உளவியல் மொழியில் "மஸோக்கிஸ்ட்" என்கிறார்கள். அப்படியொரு அனுபவத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுபவிக்க நேர்ந்தது.
பள்ளி திறப்பதற்கு முன்னால் முடித்துவிட வேண்டிய நிபந்தனையுடன் என்னுடைய மகள் எனக்கு தந்திருந்த ஐந்து அம்சங்களில் திரைப்படத்திற்கு செல்வதும் ஒன்று. பள்ளித்திறப்பு நாளை சிறைத்தண்டனைக் கைதி போல் எதிர்நோக்கியிருந்த அவள், மீதமிருந்த அம்சமான திரைப்படத்தை நினைவுப்படுத்தி தினமும் நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். அலுவலகப்பணி அழுத்தம் காரணம் தினமும் நழுவிப் போய்க் கொண்டிருந்த அது ஒரு சுபதினத்தில் முடிவாயிற்று. விஜய் ரசிகையான அவளின் தேர்வு 'குருவி'யாக இருந்ததில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் துணையாக செல்லும் என்னால் அதை சகித்துக் கொள்ள முடியுமா என்பதுதான் எனக்குள்ள கேள்வியாக இருந்தது. மகளுக்காக அவனவன் என்னென்னமோ தியாகங்கள் செய்கிறான்... இதைக்கூடவா உன்னால் செய்ய முடியாது?... என்று மனச்சாட்சி குரலெழுப்பியதில் கொஞ்சம் சமாதானம் அடைந்தேன்.
வணிக நோக்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படமொன்றை பார்க்கப் போகிறோம் என்கிற முன்தயாரிப்புடன் சென்றிருந்ததால் படத்தைப்பற்றி பெரிதாக எந்த குறையையும் இந்தப் பதிவில் சொல்லப் போவதில்லை. என்றாலும்... தமிழ்த்திரைப்படங்களின் தரத்தை பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கும் இந்த மாதிரிப் படங்கிளின் மேலிருக்கும் எரிச்சலுடனேயே பார்க்க நேர்ந்தது.
இயக்குநர் தரணியின் படங்களில் என்னைக் கவர்ந்தது 'கில்லி'. வணிகப்படம்தானென்றாலும் சுவாரசியமான, வேகமான திரைக்கதைக்காகவும் பிரகாஷ்ராஜூக்காகவும் அந்தப்படம் எனக்கு பிடித்துப் போயிற்று. அதனுடன் ஒப்பிடுகையில் 'குருவி' பெயர்க்காரணமோ என்னமோ தெரியவில்லை, மெதுவாகவே பறந்தது. தரணியின் முந்தைய பட சாயல்களுடன் பல வெற்றிப்படங்களின் (சிவாஜி!) சாயல்களும் இருந்தன. விஜய், ரஜினி படங்களின் பார்முலாவை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது. மற்ற நடிகர்கள் வித்தியாசத்தை வேண்டி மொட்டையடித்துக் கொள்வது, உடம்பை குறைப்பது, ஏற்றுவது, தாடி வளர்ப்பது... என்றெல்லாம் மெனக்கெட்டுக் கொண்டிருக்க இதைப் பற்றி மட்டுமன்றி நடிப்பைப் பற்றியும் எந்தவித கவலையிலுமில்லாமல் எல்லா பிரேம்களிலும் ஒரே மாதிரியாக வருகிறார். இவர் படங்களும் வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
இந்தப்படத்தின் கதை அம்புலிமாமா, பாலமித்ரா காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து இஷ்டத்திற்கு பக்கங்களை கிழித்து தயாரிக்கப்பட்டதைப் போல இருக்கிறது. விஜய், காரின் ஆக்சிலேட்டர் வயரை வாயில் கவ்வியபடி ரேஸில் ஜெயிக்கிறார்..... பட்டாபட்டி அண்டர்வேரில் இருக்கிற மாதிரியான கயிற்றைப்பிடித்துக் கொண்டு பத்தாவது மாடியில் இருந்து த்ரிஷாவை அணைத்த படி குதிக்கிறார்....(இவருக்கென்றே ஒவ்வொரு கட்டிடத்திலும் கயிறு தொங்குகிறது) ஒடும் ரயிலின் மீது குதிக்கிறார்...பறக்கிறார்.... புவிஈர்ப்புவிசை உட்பட அறிவியலின் எந்த விதிகளும் அவரின் சாகசங்களை தடுப்பதில்லை. லாஜிக்கை யோசித்து நமக்குத்தான் மண்டை குழம்புகிறது. திரையரங்கில் பெரும்பாலான மற்ற ரசிகபெருமக்கள் - என் மகள் உட்பட - இதைப் பற்றின எந்தவித கவலையுமின்றி கைத்தட்டி ரசிக்கிறார்கள். பின்னிருக்கையில் ஒரு வாண்டு சிரமப்பட்டு விசிலடிக்க முயற்சிக்கிறது. ஏ.கே 47 துப்பாக்கி முதற்கொண்டு கடப்பா ராஜா வரை யாருமே அவரை சாகடிக்க முடியவில்லை. 'கோச்சா' என்றாலே 'மூச்சா' போகும் மலேசியாவில் அவரிடமிருந்து வைரத்தை கடத்திக் கொண்டு வருகிறார். லிப்ட் அறுந்து நீரில் மூழ்கி எங்கிருந்தோ எழுந்து வருகிறார். துப்பாக்கியால் சுட்டால் கண்ணாடி உடைகிறது. இப்படியாக எப்படியும் சாகடிக்க முடியாத அந்தப் பாத்திரத்தை 'குருவி' என்பதை விட 'கரப்பான் பூச்சி' என்றழைப்பதுதான் பொருத்தாக இருக்கும்.
குழந்தைகளை கடவுளின் அம்சம் என்பது சரிதான் போலிருக்கிறது. ஒன்றரை வயதாகும் என்னுடைய இரண்டாவது மகள், படம் ஆரம்பித்த இரண்டு நிமிஷத்திலேயே தூங்கத் துவங்கி விட்டாள். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவள்.
()
படத்தின் முற்பாதியில் விவேக் இருப்பதால் சற்று சமாளிக்க முடிகிறது. மற்றபடி தெலுங்கில் டப் செய்ய வசதியாக இருக்கவோ, என்னவோ கடப்பா ....கொண்டா ரெட்டி.... என்று ஆந்திர மிளகாயின் வாசனை படம் முழுவதும். பாவம் ஆஷிஷ் வித்யார்த்தி. இன்னும் எத்தனைப் படங்களில் இப்படி வரப்போகிறாரோ தெரியவில்லை. கல்லூரி திரைப்படத்தில் 'கயல்' ஆக வந்து தொணதொணத்த அந்த திறமையான நடிகையை, இதில் தமிழ்த்திரைபடங்களின் பிரத்யேக கிளிஷேவான குருட்டுத் தங்கையாக நடிக்க வைத்து தன்னுடைய பாரம்பரியத்தை நிலைநாட்டிக் கொண்டது தமிழ்ச்சினிமா. 'கொப்பும் குலையுமாக' இருக்கும் நடிகைகளை மாத்திரமே ஏற்றுக் கொள்ளும் தென்னிந்திய ரசிகர்கள் த்ரிஷாவை ஏற்றுக் கொண்டது என்னுடைய நீண்ட கால ஆச்சரியம். ஒரு பாட்டில் அவரைக்காய்க்கு கவர்ச்சி உடை மாட்டினது போலவே இருக்கிறார்.
பாவம் வித்யாசாகர். மற்ற தென்னிந்திய மொழிகளில் உலவிக் கொண்டிருந்தவரை அர்ஜூன் தமிழிற்கு கொண்டு வர 'மலரே மெளனமா'வில் மெல்ல மெல்ல மேலே ஏறினார். 'மொழி' படத்தின் பாடல்கள் என்னுடைய பிரத்யேக பாடல்களின் வரிசைகளில் உள்ளது. ஆனால் தன்னுடைய survival-க்காக அவரும் சாக்கடையில் குதிக்க வேண்டிய கட்டாயம். இந்தப்படத்தில் "டம் டம்" என்று பாட்டு முழுக்க வாத்தியங்களின் இரைச்சல். ஆனால் மறுபடியும் மறுபடியுமான கேட்பனுபவத்தில் பாடல்கள் கொஞ்சம் பிடித்துப் போவது ஆச்சரியம்தான். தேவா வகையறாக்கள் போல் அல்லாது குத்துப் பாட்டுக்களிலும் ஒரு நேர்த்தியான இசைக்குறிப்புகளை வடிவமைத்திருப்பது வித்யாசாகரின் திறமை.
கோபிநாத்தின் காமிரா கல் குவாரியின் பிரம்மாண்டத்தையும் உக்கிரத்தையும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது. தரணி தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது என்று தோன்றுகிறது.
()
என்றாலும் இந்தப்படத்திற்கு சென்றதின் பிரதான நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறி விட்டது. என் மகளுக்கு படம் ரொம்பவே பிடித்துப் போயிற்று. இடையில் நெளியாமல், தொந்தரவு தராமல் முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தது 'குருவி'தான். "சூப்பரா இருக்குப்பா படம். விஜய் ரொம்ப ரிஸ்க் எடுத்து (!) நடிச்சிருக்கார்ல" என்றவள், படத்தின் குறுந்தகடு வேண்டி இப்போது நச்சரிக்கிறாள். அவள் முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷத்திற்காக இது போன்ற இன்னும் இரண்டு படங்களைக் கூட சகித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.
suresh kannan
22 comments:
இந்தப் படத்தைப் பார்த்தும் இன்னும் பதிவெல்லாம் போடுகிற அளவிற்கு உங்களால் முடிகிறது என்றால் உண்மையிலே பெரிய ஆச்சரியம்தான் :)
"அவள் முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷத்திற்காக இது போன்ற இன்னும் இரண்டு படங்களைக் கூட சகித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது."
அஞ்சாநெஞ்சன்கிற பேரு ஒங்களுக்குதாண்னே பொருந்தும்.
"இப்படியாக எப்படியும் சாகடிக்க முடியாத அந்தப் பாத்திரத்தை 'குருவி' என்பதை விட 'கரப்பான் பூச்சி' என்றழைப்பதுதான் பொருத்தாக இருக்கும்"
:D :D :D
//ரசித்துப் பார்த்தது 'குருவி'தான். "சூப்பரா இருக்குப்பா படம். விஜய் ரொம்ப ரிஸ்க் எடுத்து (!) நடிச்சிருக்கார்ல" என்றவள், //
இந்த மாதிரி ரசிகர்களை நம்பித்தான் அவிங்கெல்லாம் படம்னு ஏதோ ஒண்ணு எடுக்கறாய்ங்க!!!
//அவள் முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷத்திற்காக இது போன்ற இன்னும் இரண்டு படங்களைக் கூட சகித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. //
மகளுக்காய் இத்தகைய தியாகத்தை செய்த நீங்கள்தான் இந்த வருடத்தின் சிறந்த தந்தை!!!
:)
I really liked your comparison with "Cockroach" :)
But, the cake goes to the last line .."அவள் முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷத்திற்காக இது போன்ற இன்னும் இரண்டு படங்களைக் கூட சகித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது"
I wasted my fathers money Rs.50 for seeing this movieeeeeeeeeeeeeeee
//இப்படியாக எப்படியும் சாகடிக்க முடியாத அந்தப் பாத்திரத்தை 'குருவி' என்பதை விட 'கரப்பான் பூச்சி' என்றழைப்பதுதான் பொருத்தாக இருக்கும்"//
:-))))
//வணிக நோக்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படமொன்றை பார்க்கப் போகிறோம் என்கிற முன்தயாரிப்புடன் சென்றிருந்ததால் படத்தைப்பற்றி பெரிதாக எந்த குறையையும் இந்தப் பதிவில் சொல்லப் போவதில்லை. //
வேற என்னவே சொல்லி இருக்கீரு ?
- தமிழ்ச்செல்வன்.
தாமதமான விமர்சனம் என்றாலும் தரமான (நேர்மையான) விமர்சனத்தை முன்வைத்திருக்கிறீர்கள்.
செம்மட்டியால் அறைவதுபோல் இருந்தது விமர்சனம்,
உறைக்குமா, விழிக்குமா என்பது கேள்வி!
எப்போதும் எதையும் அறிவுஜீவியாக
நினைத்து நோக்குவதுதான் உங்கள் பிரச்சினை. கமர்ஷியல் படங்களை ஜாலியாக ரசிக்கப் பழகுங்கள். ஒரு கட்டத்தில் உங்கள் மகளுக்கே இவை
அலுப்புத் தரலாம். சில எழுத்தாளர்கள்
விடுகிற ஸ்டேன்மெண்ட்கள், சுயமோக
எழுத்துக்களையெல்லாம் பொறுத்துக்
கொண்டு அவர்களை நீங்கள் படிப்பதில்லையா. அவர்கள் எழுதுவதில் லாஜிக் சரியாகவே
இருக்கிறதா. சற்றேனும் தரையில் கால் பதித்து நடக்கவும் :)
வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள்
//ஆக்சிலேட்டர் வயரை வாயில் கவ்வியபடி ரேஸில் ஜெயிக்கிறார்..... பட்டாபட்டி அண்டர்வேரில் இருக்கிற மாதிரியான கயிற்றைப்பிடித்துக் கொண்டு //
:)
Dear Annon,
the problem is not about all comertial movies... Dhil, Dhool , Gilli were also commertial movies but they were watchable.. but recent ones ATM & this Kuruvi are pathetic.... really wondering how many college going youths also are craze about these movies..
என்னமோ போங்க எல்லாரும் விவேக் பரவால்லைனு எழுதறீங்க. எனக்குத்தான் புடிக்கலை போலருக்கு. இரட்டை அர்த்த வசனங்கள் பேசினாலே காமடி எனக் கூறுகிறார்கள், இப்போதெல்லாம். அதில் கொஞ்சம் நகைச்சுவையும் இருக்கணும்னு யாரும் யோசிக்கவே மாட்டேங்கறாங்க.
சுரேஷ் கண்ணன்
இன்னும் கொஞ்சம் நீங்கள் விலாவரியாக, நார் நாராக கிழிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்!
உங்கள் பெண்ணிற்காக நீங்கள் இந்த குப்பையை பார்த்தது பெரிய விசயம்!
மயிலாடுதுறை சிவா...
ithuvarai neengal potta post ellavatrilum athiga commercialaana post ithu thaan endre thondrukirathu. Ungal paasathai mechchukiren.
////சற்றேனும் தரையில் கால் பதித்து நடக்கவும் :)////
சூப்பர் :)
///எப்போதும் எதையும் அறிவுஜீவியாக
நினைத்து நோக்குவதுதான் உங்கள் பிரச்சினை////
Well said.
Please do not expect melody tune while dropping in a toilet with stomach trouble.
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
லாஜிக் எல்லாம் விடுங்கள் சுரேஷ். ஒரு தரக்குறைவான ரசனையை வளர்ப்பதும் தவறான கற்பிதங்களை சமுதாயத்தில் பரப்புவதும்தான் விஜய், எஸ்.ஜே.சூர்யா போன்றோர் மீது ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளன.
ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால், பெண்கள் பின்னல் சுற்றுவதுதான் இளைஞர்களின் தலையாய கடமை, ஆண்மை என்பது போன்ற தோற்றத்தை விஜயின் ஆரம்ப கால படங்கள் முன்வைத்தன.
விஜய் படங்களை ரசிப்பவர்களின் ஆட்டியூட் நன்றாக கவனித்தீர்களானால் தெளிவாக தனித்து புலப்படும்.
குழந்தை பத்திரம் :-)
Post a Comment