Saturday, June 21, 2008

அங்கதம் நுரைக்கும் கதைகள்

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை
(சிறுகதை தொகுப்பு)
- ஆதவன் தீட்சண்யா,
சந்தியா பதிப்பகம், 160 பக்கங்கள், ரூ.75/-

Photobucket


ஆதவன் தீட்சண்யாவை தலித் படைப்பாளி என்ற முறையிலேதான் நான் அறிந்திருந்தேன். அதிகம் கவிதை எழுதுபவர் என்பதாக அறிந்திருந்ததனாலும் உலகிலேயே எனக்குப் பிடிக்காதவைகளின் பட்டியலில் கவிதை என்கிற சமாச்சாரம் பிரதான இடத்தில் இருப்பதாலும் இவர் எழுதியவைகளை நான் அதிகம் படித்திருக்கவில்லை. "எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப்பக்கங்கள்" என்றொரு சிறுகதைத் தொகுதியை படித்தவுடனே என்னுடைய பிடித்தமான எழுத்தாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் ஆதவன். தலித் எழுத்தாளர்களின் பொதுமைக் குரலை வெளிப்படுத்தும் கதைகள் அவை. இந்தத் தொகுப்பையும் அவ்வாறான நினைப்புடனேயே வாசிக்க எடுத்து வந்திருந்தேன். ஆனால் எந்தவொரு கதையையும் புன்னகைக்காமல் வாசிக்க இயலவில்லை. அங்கதம் புதைந்திருக்கும் படைப்புகளின் ஊடாக ஒடுக்கப்பட்டவர்களின் வலி அதனுடைய முனகலின் தடயமே இல்லாமல் வெளிப்பட்டிருப்பதே இத்தொகுப்பின் சிறப்பு எனலாம். ஆதவன் தீட்சண்யாவின் புனைவு மொழி கற்பனைகளைக் கடந்து பின்நவீனத்துவ பாதையில் புழுதி பறக்க பாய்ந்திருக்கிறது.

"ஆறுவதற்குள் காபியைக்குடி" என்றொரு விநோதமான தலைப்புடன் இருக்கும் (அநேகமாக எல்லாத் தலைப்புகளுமே விநோதம்தான்) கதை புதுவீடு கட்டிக்கொண்டு போகிற அதிர்ஷ்டசாலிகளை ஆதங்கத்துடன் நோக்கும் ஒருவனை நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது. கிரகப்பிரவேசங்களின் வீட்டு உரிமையாளர் நடந்து கொள்கிறதைப் பற்றியும் 'இன்னும் ஒரு வீடு கட்டத் துப்பில்லையே என்று மனைவி இடித்துரைப்பதையும் விவரிக்கிறது இக்கதை.

.... நாங்கள் பார்த்த அளவில் தங்கள் வீட்டை சுற்றிக் காட்டும் ஒவ்வொருவரும் டபுள் பெட்ரூம் - பாத்ரூம் அட்டாச்டு என்பதைச் சொல்லும் போது அவர்களின் முகத்தில் முக்தியடைந்த தேஜஸ் வந்துவிடுகிறது. படுக்கையிலிருந்து எழுந்ததும் நேராக குளிக்கப்போவதில்லை யாரும். அப்புறமெதற்கு அட்டாச்டு பாத்ரூம்... ஒன்றுக்கு மேற்பட்ட கக்கூசுகள் தங்கள் வீட்டிலிருப்பதைத்தான் இப்படிச் சொல்லி பெருமையடைகிறார்கள்.....'

காலத்தை தைப்பவனின் கிழிசல்' என்ற சிறுகதை மனோகர் ராவ் என்பவரின் வாழ்க்கை சரிதத்தை எழுத வேண்டியதற்காக முன்தயாரிப்பு குறிப்புகளுடனான பாவனையில் இயங்குகிறது. மனோகர் ராவின் மூதாதையர் முதற்கொண்டு தற்கால வாழ்க்கைவரை தையற்கலைஞராக அவனுடைய வாழ்க்கையைப் பற்றின கட்டுரைத் தொனி.

'மார்க்ஸை மருட்டிய ரயில்'... ரயில் என்கிற விஷயம் கதைசொல்லிக்கு பிடிக்காமல் போகிறதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு .... எவனோ எரித்த இரண்டு பெட்டிகளுக்காக மூவாயிரம் அப்பாவிகளைக் கொன்ற நாடு இது. இனி என்னாலும் எதற்கு சேதாரம்.. என்று நிகழ்கால அரசியலுக்குள் சடாரென பாய்கிறது.

'லிபரல் பாளையத்து கட்டப்பஞ்சாயத்தார்க்கு காவானோபா வழங்கிய தீர்ப்பு' என்கிற இன்னொரு விநோதமான தலைப்பைக் கொண்ட சிறுகதை தொடர்ந்து செல்போன் பேசுவோர்களை பகடிசெய்கிற ஒரு வருங்கால கற்பனையை நிகழ்த்தி, இந்த அதிநவீனத்திலிருந்து விலகி ஓடுகிற ஒருவரை குற்றவாளியாக பார்க்கிற அமைப்பை சுட்டிக் காட்டுகிறது.

.... போன் வைத்திருப்பவர்கள், அதிலேயே எஸ்.டி.டி. வைத்திருப்பவர்கள், அதற்கும் மேல் ஐ.எஸ்.டி.டி. வைத்திருப்பவர்கள் என்று ஏராளமான பிரிவுகளும் படிநிலைகளும் உருவாகி ஒருவர் மேல் ஒருவர் உசத்தியானவர் என்று கருத்து படியத் தொடங்கியது. தம்மை தாழ்ந்தவர்களாக காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் கஞ்சிக்கு சிங்கியடித்தாலும் பரவாயில்லையென்று வீட்டுக்கு ஒரு போன் வாங்கி மேல்நிலையாக்கம் பெறத் துடித்தனர்.....

'கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்' என்ற சிறுகதையை இந்தத் தொகுப்பின் உச்சபட்ச சுவாரசியமான கற்பனை எனலாம். கக்கா நாடு என்றொரு கற்பனை பிரதேசத்தை உருவாக்கி, கிருந்ததியர்கள் என்றொரு கழிவை சுத்தம் செய்பவர்களின் சமூகம் ஜனாபதியை விட அதிகம் சம்பளமும் செல்வாக்கும் பெற்றிருப்பதாகவும், இது கண்டு வயிற்றெரிச்சல் கொள்கிற ஆதிக்கசாதியும் மற்றவரும் பொருளையும் செல்வாக்கையும் பெற வேண்டி தங்களையும் தாழ்த்திக் கொள்ள துணிந்து கழிவை சுத்தம் செய்யும் பணிக்கு போட்டியிடுவதாகவும், மிகப் பகடியான மொழியில் பதிவாகியிருக்கிறது இச்சிறுகதை. இதற்கான ஆதாரங்களை நிறுவும் பொருட்டு பிரசுரமாகியிருக்கும் புகைப்படங்கள் இன்னும் வாசிப்பவனுவத்தை சுவாரசியமாக்குகிறது. இந்தக் கற்பனை நிஜமானால் எப்படியிருக்கும் என்கிற சுவாரசியத்தையும் தருகிறது.

... சாதிவாரியாக ஸ்கேவஞ்சர் பதவி நிரப்பப்படுமானால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று கிருந்ததியர் வாதாடுகின்றனர். எமக்கும் மலத்துக்கும் எந்தத் தொடர்புமேயில்லையா? தினமும் குறைந்தது மூன்று வேளையாவது எங்களைது இடக்கை மலத்தைத் தொடத்தானே செய்கிறது? எங்களுடையது மட்டுமின்றி எமது குழந்தைகள், படுத்தப்படுக்கையாகிவிடும் எம் வீட்டு கிழடுகள் ஆகியோரின் மலஜலத்தையும் சுத்தம் செய்த அனுபவம் எங்களுக்குமிருப்பதை யாராவது மறுக்க முடியுமா, முண்ணியத்தில் ஒருவன் வாயில் திணிக்க நாங்கள் கையால் மலத்தை எடுக்கவில்லையா?.................

புத்தகத்தின் தலைப்பை கொண்ட சிறுகதை பகத்சிங்கின் வாழ்க்கையிலிருந்து வெளிவராத ஒரு நிகழ்வை முன்வைக்கிறது.

()

முன்னரே குறிப்பிட்டது போல் அங்கதமான வெளிப்படுகிற ஆதவனின் எழுத்துக்குள் ஒடுக்கப்பட்டவர்களின் வலியும் புதைந்திருப்பதை உணர முடிகிறது. தலித் எழுத்தாளர்களின் படைப்புகளின் போக்கில் இன்னொரு போக்கை ஒரு பாய்ச்சலுடன் நிகழ்த்தியிருக்கிறது இந்தப் புத்தகம். தீவிர வாசிப்பாளர்களுக்கு இந்தப் புத்தகத்தை கட்டாய பரிந்துரை செய்கிறேன்.


suresh kannan

3 comments:

ers said...

புத்தகத்தை ஒரு வரி விடாமல் படிச்சாச்சு போலிருக்கே...

Ayyanar Viswanath said...

அறிமுகத்திற்கு நன்றி சுரேஷ்..சமீபத்தில் படித்த இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை தலைப்புக் கதை மிகவும் பிடித்தமானதாக இருந்தது
அதைப்பற்றிய என் குறிப்புகள் இங்கே http://ayyanaarv.blogspot.com/2008/06/blog-post_20.html

Anonymous said...

புத்தகத்தை படிக்காமல் விமர்சிப்பது தவறு; எனினும் நீங்கள் மேற்கோள் காட்டிய சிறிய பரப்பில் அங்கதம் என்பதைவிட cynical என்பதாகப் படுகிறது.