Sunday, December 09, 2007

எவனோ ஒருவன் - திரைப்பார்வை

'கல்லூரி' திரைப்படத்திற்கு போவதென்று முடிவாயிற்று. வழக்கமாக நான் திரைப்படங்களை வந்த புதிதில் பார்க்க விரும்புவதில்லை. அதன் ஆரவாரங்கள் அடங்கும் வரை காத்திருப்பேன். குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக இது நிகழ்ந்தது. 'அழகிய தமிழ் மகன்'.. போகலாம் என்று தொண தொணத்துக் கொண்டிருந்த மகளை "அந்தப்படம் பார்த்துவிட்டு நூறு பேர் மனநல மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம்" என்று நல்ல பொய் சொல்லி அடக்கியாயிற்று. 'காதல்' திரைப்பட இயக்குநரின் அடுத்த படம் மீது எனக்கும் இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் தேவி திரையரங்கம் எங்களை 'housefull' பலகையுடன் இனிதே வரவேற்றது. சினிமாவுக்கு என்று கிளம்பி வெறுமனே வீடு திரும்புவது நம் கலாச்சாரத்திற்கு ஏற்புடைய விஷயமில்லை அல்லவா? வேறு 'நல்ல' படத்திற்காக தேடியதில் பக்கத்திலிருந்த அரங்கிலிருந்த இந்தப்படம் கண்ணில் பட்டது. அதுவும் நல்லதாய்ப் போயிற்று. இல்லையென்றால் இப்படியொரு சிறந்த படத்தை காண்பது இன்னும் தாமதப்பட்டிருக்கும்.

அப்படி என்ன இந்த படத்தில்..? சொல்கிறேன்.


()

பேருந்தில் ஐம்பது பைசா பாக்கி தராமல் ஏமாற்றுகிற நடத்துநர் மீது ஏற்படுகிற சுயநலக் கோபம் முதல், ஏதோ காசு கொடுத்து கூட்டி வந்த விபச்சாரி மாதிரி ஆட்சிக் கட்டிலை (?) நீ ஆறுமாதம் நான் ஆறுமாதம் என்று பங்கு போட்டுக் கொள்கிற கேடு கெட்ட அரசியல்வாதிகள்... ஒரு படைப்பாளி தன் எண்ணங்களை சுதந்திரமாக சொல்லவிடாமல் மாநிலம் மாநிலமாக துரத்துகிற மதஅடிப்படைவாதிகள் மீது ஏற்படுகிற பொதுநலக் கோபம் வரை.... நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் சில சமூக கோபங்கள் இருக்கும். கீழ்வர்க்கத்தினருக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லாததால் தங்கள் கோபங்களை உடனே வெளிப்படுத்தி விட முடிகிறது. உயர் வர்க்கத்தினர் யார் மூலமாகவாவது தங்கள் கோபங்களை புன்னகை முகத்துடன் தீர்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால்... இந்த கோழைத்தனமான படித்த நடுத்தர வர்க்கம் ... தங்கள் கோபங்களை தங்களுக்குள்ளேயே மென்று முழுங்கிக் கொள்கிறது. ஆதிமனிதன் இன்னும் உள்ளுக்குள் அமர்ந்திருந்தாலும் இந்த 'எழவெடுத்த படிப்பு' என்கிற சமாச்சாரம் 'நாகரிகம்' என்ற பெயரில் நம்முள் புதைத்திருக்கிற அசட்டுத்தனம், விபத்தில் அடிபட்டிருக்கிறவனுக்கு உதவப் போனால் பின்னால் என்ன பிரச்சினையாகுமோ என்கிற சுயநல எண்ணம், 'நாலு பேர்' நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ" என்கிற தேவையற்ற கவலை, 'யாரோ எப்படியோ போகட்டும். நமக்கு எதற்கு வம்பு' என்று ஒதுங்கிச் செல்கிற மனோபாவம்.. போன்றவைகள் நம்மை இறுக்கமாக கட்டிப் போட்டிருக்கின்றன.

"புளிச்சென்று" சாலையில் துப்புகிற முன்னால் சென்று கொண்டிருக்கும் நபரை, சிக்னல் சிவப்பில் நிற்க பொறுமையில்லாமல் சாலையில் கடக்கும் நம்மை மேலே இடிக்கிறாற் போல் விரையும் கார்காரனை, மார்ச்சுவரியில் பிணத்தை காக்க வைத்து பேரம் பேசும் மருத்துவ ஊழியனை... யார் மீதும் நம்மால் நம்முடைய கோபத்தை நேராக வெளிப்படுத்த முடிவதில்லை. மனசுக்குள் சபிப்பதிலும், வெற்று முணுமுணுப்பிலுமேயே அது நமத்துப் போகிறது. அவ்வாறு அடுக்கி வைக்கப்படும் கோபங்கள் அழுத்தம் தாங்காமல்.. ஒரு நாள் பீறிட்டுக் கொண்டு வந்தால் என்ன ஆகும்?... இதுதான் 'எவனோ ஒருவனின்' மையம்.

ஆனால் இப்படிப்பட்ட கோபங்கள் எதுவுமேயில்லாமல் வாழ்க்கையை அதன் யதார்த்தங்களோடு அசிங்கங்களோடு உள்வாங்கிக் கொண்டு மெளனமாக ஆட்டுமந்தை போல் வாழ்கின்ற கூட்டமும் இருக்கிறது. அது வேறு உலகம். ஆனால் கோபங்களை இப்படி வெற்றுத்தனமாக எழுதிக் கொண்டிருக்கிறேனே, என்னைப் போல் எழுதி, உரக்கப்பேசி சுயமைதுனம் போல் வடிகால் தேடிக் கொள்கிறவர்களும் உண்டு.

Photo Sharing and Video Hosting at Photobucket


ஸ்ரீதர் வாசுதேவனின் இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து படம் துவங்குகிறது. சில அடிப்படையான கொள்கைளோடு வாழ நினைக்கிற அவனை சமூகம் "பைத்தியக்காரன்" என்கிறது. "டியுஷன் போனாத்தான் பாஸாக முடியும்னா, அப்ப எதுக்கு ஸ்கூலுக்கு போகணும். நேரா டியூஷனுக்கே போயிடலாமே?" என்று கேட்கிற பைத்தியக்காரன். டொனேஷன் கேட்டதற்காக தன் குழந்தையை மாநகராட்சி பள்ளிலேயே படிக்க வைக்கலாம் என்கிற பைத்தியக்காரன். சாலையோரம் ஓவியம் வரையும் சிறுவனின் இருமலுக்கு மருந்துக்காக பணம் தருகிற பைத்தியக்காரன். தான் பணியாற்றும் வங்கியில் முறைகேடாக கடன் வாங்க முயலும் தொழிலதிபனை தடுத்து நிறுத்தி பகையை சம்பாதித்துக் கொள்கிற பைத்தியக்காரன். இரண்டு ரூபாய் அதிகமாக கொள்ளையடிக்கும் பெட்டிக் கடைக்காரனை நையப்புடைக்கும் .... ஊருக்காக நீச்சல் குளம் கட்டித்தரும் ஆனால் குடிநீர் வழங்க மறைமுகமாக காசு வசூலிக்கும் ஏரியா கவுன்சிலரை கத்தியால் குத்தும் ..... ஏழைகளுக்கு இலவச மருத்துவம் தருவதாக அரசாங்கத்திடம் சலுகை வாங்கி விட்டு அதைப் பின்பற்றாத மருத்துவனின் முன்னால் துப்பாக்கி நீட்டும் .... போதை மருந்து விற்பனை செய்யும் கும்பலின் குடிசைகளை கொளுத்தும்....... இப்படிப் பல பைத்தியக்காரத்தனங்கள் செய்யும் ஒருவனை ஊரில் உலவ விடலாமா?

எந்தச் சமூகத்திற்காக உண்மையாய் பாடுபடுகின்றனரோ, அவர்கள் அந்தச் சமூகத்தினலாயே கொல்லப்படுவது தொடரும் நிகழ்வு. காந்தி முதல் மார்ட்டின் லூதர் கிங் வரை நம் முன்னாலேயே பல வரலாற்று உண்மைகளை காண முடியும். ஸ்ரீதர் வாசுதேவனும் அப்படித்தான் ஆனானா, இல்லை சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டானா என்பதை அறிய இந்தப் படத்தைப் பாருங்கள்.

"தயாரிப்பாளர் நஷ்டமடையக்கூடாது. அதாங்க முக்கியம்" என்கிற மகா தத்துவத்தை உதிர்க்கும் கேடு கெட்ட சூப்பர் ஸ்டார்களும் இளையதளபதிகளும், ஊடகங்களிலேயே மிகச் சக்தி வாய்ந்த திரைப்படம் என்னும் ஊடகத்தில் மார்பகங்களையும் தொப்புள்களையும் மாத்திரமே காட்டி ஒரு பிம்ப்-பை போல பிழைத்துக் கொண்டிருக்கிறோமே என்கிற சொரணையேயில்லாத வணிக இயக்குநர்களும், "இது ஒரு தொழில். இங்கு லாபம்தான் பிரதானம்" என்று பிதற்றும் சமூக பொறுப்பேயில்லாத தயாரிப்பாளர்களும் உலவுகின்ற சினிமா உலகில், வாழ்க்கையை பிரதிபலிக்கும், சமூக பிரச்சினைகளை மையப்படுத்தும், மனித வாழ்க்கையின் அகபுறச் சிக்கல்களை அலசி ஆராயும் சொற்ப அளவு திரைப்படைப்பாளிகளில் ஒருவராக 'மாதவனை' என்னால் பார்க்க முடிகிறது. வணிகப்படங்களிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்துகிறவர், 'அன்பே சிவம்' போன்ற படங்களிலும் 'இமேஜ்' பார்க்காது நடித்து தன்னை நிலை நாட்டிக் கொண்டவர். இந்தப்படத்தை நகரில் அவரே செலவழித்து விநியோகம் செய்திருக்கிறார் என்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

()

ஸ்ரீதர் வாசுதேவனாக நடிகர் மாதவன். தினமும் போகும் ரயிலில் ஜன்னலோர இருக்கை கிடைப்பதே ஒரு luxury-யான விஷயம் என்னும்படியான வாழ்க்கை நடத்துகிற பாத்திரத்தில் இயல்பாய் கரைந்து போயிருக்கிறார். கண் முன்னே நடக்கின்ற தவறுகளை கண்டு மனம் கொதித்துப் போகிறவர். மேலே குறிப்பிட்டிருக்கிற அத்தனை பைத்தியக்காரத்தனங்களையும் செய்ய, அவர் மனைவி அவர் முன் வைக்கும் ஒரு கேள்வியே அடிப்படையாக அமைகிறது. "அய்யோ திருட்டுப் போயிடுச்சேன்னு கத்திக் கதர்றவன விட, திருடன ஓடிப் போய்ப் பிடிக்கிறவன்தான் ஆம்பளை"

கணவன் டொனேஷன் தர மறுத்ததால் தன் மகளுக்கு ஆங்கில பள்ளியில் சீட் கிடைக்காமல் போய்விட்டதே என்கிற ஆதங்கத்தின் உச்சத்தில் அவர் மனைவி வெடிக்கும் போதுதான் அந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை கோபங்களும் பொங்கியெழ, ஸ்ரீதர் வாசுதேவன், தன் கரைகளை உடைத்து சமூகத்தின் தவறுகளைத் திருத்த முயல்வதுதான் அத்தனை பைத்தியக்காரத்தனங்களும்.

"தொணதொணக்கும்" மனைவியை சகித்துக் கொள்வதிலாகட்டும், பெட்டிக்கடைக்காரனை அடித்துத் துவைத்து 'இரண்டு ரூபாயை" கேட்கும் போதும், தவறு செய்கிற மேலாளருக்கு எதிராக வெடிப்பதிலும், ஒரு பின்னிரவு சாலையோரத்தில் ரோட்டோரச் சிறுவனிடம் பேசுவதாக.. வாழ்க்கையைப் பற்றி அழுத்தமாகவும் கோபமாகவும் அங்கலாய்ப்பதாகட்டும்.. உச்சமாக கடவுளுக்கு கடிதம் எழுதுவதாகட்டும்... வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவேன் என்று மனைவிக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவதாகட்டும்... தன் மகளை காண அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் வேண்டுவதாகட்டும்... தன்னுடைய உச்சபட்ச பங்களிப்பை இந்தப் படத்திற்கு அளித்திருக்கிறார் மாதவன். படத்தின் பெரும்பாலான கனமான காட்சிகளை தன்னுடைய தோள்களில் சுமந்திருக்கிறார். இந்தப்படம் அவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதை - clicheவாக இருந்தாலும்- சொல்ல விரும்புகிறேன்.

()

ஸ்ரீதர் வாசுதேவனின் மனைவியாக சங்கீதா. ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தலைவியை மிக இயல்பாக பிரதிபலித்திருக்கிறார். "கிச்சன விட்டா ஹால்... ஹாலை விட்டா பெட்ரூம் இல்ல பாத்ரூம்.. இல்லன்னா ரெண்டு குடம் தண்ணி பிடிக்க தெருவுக்கு வர்றேன்... ரெண்டு பசங்கள கவனிக்கறது. இதை விட்டா நாள் பூராவும் எனக்கு என்னதான் வேலையிருக்கு?" என்று இவர் பொங்கும் போது பரிதாபமாகத்தானிருக்கிறது. "சும்மாத்தானே வீட்ல இருக்கா" என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிற மனைவிமார்களின் உண்மையான மனநிலை நமக்கு சொரேர் என்று உறைக்கிறது.

காவல் துறை அதிகாரியாக சீமான். குற்றவாளிகளை வெறும் கைதிகளாக பார்க்காமல் தர்க்க ரீதியாக சிந்திக்கும், சமூக அக்கறை கொண்ட அதிகாரி. "வொயிட் காலர்-லாம் கோபம் கொள்ள ஆரம்பிச்சிட்டான்னா ஒரு சமூகத்திற்கு அது ரொம்பவும் அபாயமாயிடும்" என்று இவர் சொல்கிற வசனம் (பகுதி வசனமும் இவரே) மிகவும் முக்கியமானது. "நான் நியாயமா சம்பாதிக்கிற காசை மட்டும் வெச்சுக்கிட்டு குடும்பம் நடத்த முடியுமா" என்று மனைவியிடம் குற்றவுணர்வுடன் கேட்கிற இவர், உயரதிகாரிகளின் அழுத்தம் தாங்காமல் ஸ்ரீதர் வாசுதேவன் மீது நடவடிக்கை எடுக்கப் போவது குறித்து கொள்கிற ஆவேசம் இயல்பானது. இவர் subtle ஆக நடிக்க முயன்றிருந்தாலும், ஒரே மாதிரியிருக்கிற முகபாவம் சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.

()

'டோம்பிலி ·பாஸ்ட்' என்கிற வெற்றி பெற்ற மராத்திய திரைப்படத்தின் தமிழ் வடிவமே 'எவனோ ஒருவன்'. இயக்குநர் ரிஷிகாந்த். படத்தின் துவக்கத்திலேயே, ஸ்ரீதர் வாசுதேவனின் இயந்திரத்தனமான வாழ்க்கையை பார்வையாளர்களிடம் establish செய்ய அலாரம், குளியல், ரயில் பயணம், வங்கி, தயிர்சாதம் என்று திறமையான எடிட்டிங் துணையுடன் துரிதமாக காட்சிகளை மாற்றி மாற்றி அமைத்து வைத்திருப்பது சுவாரசியமானதாக இருந்தது. திரைக்கதையை இன்னும் செப்பனிட்டிருந்து, காட்சிகளின் நம்பகத்தன்மையை கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருந்திருக்குமோ என்று தோன்றினாலும், படத்தின் ஆதார மையமான சமூக கோபங்களை பார்வையாளர்களிடம் சிறப்பாக தூண்டியிருப்பதால் இந்தக் குறைகளை பொருட்படுத்த தேவையில்லை என்றே தோன்றுகிறது.

நல்லவேளையாக இந்தப்படத்தில் பாடல்கள் எதுவுமில்லை. அதே போல் அபத்தமான நகைச்சுவைக்காட்சிகளோ, குலுக்கல் பாடல்களோ இல்லை. சஞ்சய் யாதவ்வின் திறமையான ஒளிப்பதிவு அதிகப்பிரசங்கித்தனமாகயில்லாமல் இயக்குநரோடு ஒத்துப் போயிருக்கிறது. சமீரின் பின்னணி இசை பார்வையாளர்களிடம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

'தன் வேலையை மாத்திரமே பார்த்துக் கொண்டு போகிற சமூகத்தில் 'எவனாவது ஒருவன்' தலையை தூக்கி கேள்வி கேட்டால் அவனை மண்ணோடு மண்ணாக இந்தச் சமூகம் அழுத்தி நசுக்கி விடுகிறது. அவ்வாறு போராடுபவனும் நாளடைவில் இந்தச் சமூகத்தால் மறந்து போகப்படுகிறான். சூடு, சொரணையில்லாத, முதுகெலும்பில்லாத இந்தச் சமூகம்... என்கிற சீமானின் சிந்தனை வரிகளோடு படம் நிறைவடைகிறது. நசுங்கிப் போன பெருச்சாளியின் மீது மொய்க்கின்ற ஈக்களோடு படத்தின் நிறைவுக் காட்சி பொருத்தமாக அமைகிறது. தொழில்நுட்பர்களின் பெயர்கள் இறுதியில் விரைகிற போது சமூகத்தின் பல்வேறுவிதமான நபர்களின் முகங்கள் காட்டப்படுவதும் பொருத்தமாகத்தானிருக்கிறது.

நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்தை நேசிக்கிற, எல்லாவற்றிற்கும் சமூகத்தையே குறை கூறிக் கொண்டிருக்காமல் தன்னிடம் உள்ள குறைகளையும் திருத்திக் கொள்கிற, சமூக முரண்கள் மீது கோபம் கொள்கிற, இன்னமும் சூடு, சொரணைகளை பாக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் பார்க்க வேண்டிய படமிது.

()

எனக்குள் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தின இந்தப் படத்தினை, சக பார்வையாளர்கள் அணுகின விதம் எனக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.

ஒரு திரைப்படத்தை எப்படி ரசிப்பது, அணுகுவது, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் நாகரிகமாக இருப்பது என்பதை கல்வித் திட்டத்திலேயே கொண்டு வந்தால் கூட நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. படம் ஆரம்பிக்கும் நேரம் வரை வெளியில் புகைத்துவிட்டு, இருட்டில் அடுத்தவர்களின் கால்களை மிதித்து படத்தின் ஆரம்பக் காட்சிகளை பார்க்க விடாமல் செய்வது, கைபேசியில் பேசி வசனத்தை கேட்க விடாமல் செய்வது, ஏதாவது கமெண்ட்டுகள் சொல்லிக் கொண்டே சிரிப்பது, திரையரங்கிற்குள் அலைமோதிக் கொண்டு நுழைவது, வெளியேறுவது, படத்தின் இறுதிக்காட்சி வரை பொறுமையில்லாமல் எழுந்து அடுத்தவரையும் மறைப்பது, படத்தின் பின்னணியில் பணியாற்றியவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதது என்று எவ்வாறெல்லாம் எரிச்சல்படுத்த முடியுமோ, அத்தனையையும் செய்கின்றனர். இவர்களைக் கூட மன்னிக்கலாம். சினிமா ஆர்வமுள்ளவர்கள் கூடும் சர்வதேச திரையிடல்களின் போது கூட சில "அறிவுஜீவிகளும்" இதே போன்று நடந்து கொள்வதுதான் கேவலம். தான் காணப் போகிற படத்தைப் பற்றின சில அடிப்படைத் தகவல்களை முன்னமே அறிந்து கொண்டு படத்தின் தொனியை தெளிவாக தெரிந்திருக்கிற பார்வையாளன், அரங்கில் ஏன் அப்படி அதிருப்தி குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கிறான் என்பதுதான் எனக்கு புரியவில்லை.

15 comments:

ச.சங்கர் said...

அன்புள்ள சுரேஷ் கண்ணன்
இன்று காலை ரிமோட் வைத்து சானல்களை மேய்ந்து கொண்டிருந்த போது சன் டாப் 10 நிகழ்ச்சியில் இந்தப் படம் கண்ணில் பட்டது..அதில் காட்டப்பட்ட காட்சி ஸ்கூலில் அட்மிஷன் கிடைக்காத கோபத்தில் சங்கீதா , மாதவனை வாங்கு வாங்கு என வாங்கிக் கொண்டிருக்கும் காட்சி..படத்தில் இதுதான் கதைக் கரு அல்லது முக்கியமான காட்சியாக இருக்கும் என நினைத்தேன்..(படத்தை பார்க்க வேண்டும் என்று கூட) அப்படியே வலைப்பக்கம் வந்தால் உங்கள் விமர்சனம் :)

நல்ல ஒரு அலசல் .

Anonymous said...

இயல்பான திறனாய்வு, எழுத்து நடை நன்றாக வந்திருக்கிறது. எனக்கு படம் பார்க்கவேண்டும் எண்ணம் உங்கள் எழுத்தால் ஏற்பட்டிருக்கிறது. கடைசியாக எழுதியிருக்கும் திரையரங்க நிகழ்ச்சிகள் கேவலமானவைதான், என்ன செய்வது?

தருமி said...

//தயாரிப்பாளர் நஷ்டமடையக்கூடாது. அதாங்க முக்கியம்" என்கிற மகா தத்துவத்தை உதிர்க்கும் கேடு கெட்ட சூப்பர் ஸ்டார்களும் இளையதளபதிகளும், //

ஒரு சிறு திருத்தம்: தயாரிப்பாளர் நஷ்டமடையக்கூடாது. அதாங்க முக்கியம்" என்கிற மகா தத்துவத்தை உதிர்க்கும் கேடு கெட்ட நம் பதிவர்கள்...

நல்ல படத்திற்கு நல்ல விமர்சனம். அதனாலேயே அங்கங்கே மட்டும் வாசித்தேன் - முழுக் கதையும் தெரிந்துவிடக் கூடாதென.

பிரகாஷ்ராஜ்-களும், மாதவன்களும் எண்ணிக்கையில் பெருகுவார்கள் என்றே நம்புவோம்.

Ayyanar Viswanath said...

சுரேஷ்

படம் பாத்திட்டு பதிவ முழுசா படிச்சிக்கிறேன்..
உங்க கோபம் மிக நியாயமானது..பேரரசுக்கு சிறந்த கதையாசிரியர் விருது திருப்பதி படத்துக்காக வழங்கப்படும் நம் தமிழ்சூழலில் வேறு மாதிரி படங்கள எப்படி எதிர்பார்க்க?..

சுத்தமா எந்த அபிப்பராயமும் தமிழ் படங்கள பத்தி இல்ல சுரேஷ் ...ஆரம்பத்திலாவது இதுபோல படம் தமிழ்ல வருமா அப்படிங்கிற ஏக்கம் லாம் இருந்தது இப்ப அதும் விட்டு போச்...

ஜெய் said...

//படம் ஆரம்பிக்கும் நேரம் வரை வெளியில் புகைத்துவிட்டு, இருட்டில் அடுத்தவர்களின் கால்களை மிதித்து படத்தின் ஆரம்பக் காட்சிகளை பார்க்க விடாமல் செய்வது, கைபேசியில் பேசி வசனத்தை கேட்க விடாமல் செய்வது, ஏதாவது கமெண்ட்டுகள் சொல்லிக் கொண்டே சிரிப்பது,//

நேற்று அண்ணா தியேட்டரில் ஒரு மணி காட்சி பார்த்தீர்களா????

நானும் உங்கள் அருகில் நண்பர்களுடன் உட்கார்ந்திருந்தேன்.. ஹிஹி..

ஜெய் said...

//படம் ஆரம்பிக்கும் நேரம் வரை வெளியில் புகைத்துவிட்டு, இருட்டில் அடுத்தவர்களின் கால்களை மிதித்து படத்தின் ஆரம்பக் காட்சிகளை பார்க்க விடாமல் செய்வது, கைபேசியில் பேசி வசனத்தை கேட்க விடாமல் செய்வது, ஏதாவது கமெண்ட்டுகள் சொல்லிக் கொண்டே சிரிப்பது,//

நேற்று அண்ணா தியேட்டரில் ஒரு மணி காட்சி பார்த்தீர்களா????

நானும் உங்கள் அருகில் நண்பர்களுடன் உட்கார்ந்திருந்தேன்.. ஹிஹி..

ஹரன்பிரசன்னா said...

நீங்கள் எழுதிய விமர்சனங்களில் இருக்கும் ஒருவித 'ஒரேதன்மை'யிலிருந்து விலகி வந்திருக்கும் ஒரு விமர்சனமாக இதைச் சொல்லலாம். மற்ற விமர்சனங்களிலிக்கும் அதே பார்வை இதிலும் இருக்கிறதென்றாலும், உள்மனதிலிருந்து எழுந்த எழுத்தாகத் தெரிகிறது. நன்றி.

நந்தா said...

சுரேஷ் கண்ணன், படம் எடுத்திருக்கும் விதம் எப்படி???

உதாரணத்திற்கு தம்பி படம் கூட என்னைப் பொறுத்த வரை நல்ல கரு என்றுதான் தோன்றியது. ஆனால் சீமான் ஏதோ சொல்லி வெச்சு எடுத்தது போல,பல காட்சிகளில் நாடகத்தன்மை அப்பட்டமாய் தெரிந்தது.

இதிலயும் அந்த மாதிரி கொஞ்சம் சொதப்பி இருந்தாங்கன்னு கேள்விப் பட்டேன். உண்மையா???

ட்ரெய்லர் எனக்கு ரொம்ப பிடிச்சுசுச்சு, ஆனால், இந்த பயம் என்னை தடுக்கிறது.

http://blog.nandhaonline.com

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

இந்தப் படம் மைக்கேல் டக்ளஸ் நடித்த 'Falling down' என்ற படத்தின் தழுவல் என்றொரு தகவல் நண்பரொருவரிடமிருந்து கிடைத்தது. அவருக்கு நன்றி சொல்லி இங்கே அதை பகிர்ந்து கொள்கிறேன்.

வவ்வால் said...

எவனோ ஒருவன், வழக்கமான மசாலாத்தனம் இல்லாமல் , வணிக ரீதியான குப்பைகள் இல்லாமல் இருப்பது மட்டுமே பாராட்டப்படவேண்டிய ஒன்று(ஆனாலும் ஒரு 6-7 வயசு பையன் கம்பைன் ஸ்டடிக்கு போறேன்னு சொல்வது எல்லாம் டூ மச்)எடுத்திருப்பது மட்டுமே பாராட்டுக்குறியது, உண்மையில் வித்தியாசமான பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக எதாவது செய்து இருப்பது போலக்காட்டி இருந்தால் பரவாயில்லை, ரொம்ப அல்ப சொல்பமான பிரச்சினைக்களுக்காக கொதித்து சண்டைக்கு கிளம்புவது அடச்சே என்று தான் சொல்லவைக்கிறது.

இந்த தண்ணி லாரி, பிரச்சினை, அதிக விலைக்கு விற்பது என்பது போல , ரேஷன் கடையில் பொருள் இல்லை என்பது என்று பல வர்த்தகப்படத்திலும் காட்டி அதன் வீரியத்தையே இல்லாமல் செய்தாகிவிட்டார்கள். என்ன அப்போலாம் மக்கள் உடனே கதாநாயகர்ரை வாழ்த்திப்பாடுவார்கள், போலிஸ் வந்து கைது செய்ய வந்தால் எங்கள் ராஜவை விடுதலை செய்யுனு ரோட்ல மறியல் செய்வாங்க, அடுத்த காட்சிலவே சி.எம் கூட சேலஞ்ச் செய்வார் ஹீரோ! அப்படிலாம் இல்லாம சப்புனு காட்டிட்டார் அந்த காட்சியை :-))

அன்னியன்ல அஞ்சு பைசா திருடினா தப்பா..என்று லாஜிக் பேசினது போல இங்கேவும் அல்பமான காரணங்களுக்காகத்தான் ஆவேசமாவதாக கதை நகர்கிறது, அதுவே பெரிய பலவீனம்.

அதை விட பெரிய பலவீனம் , என்ன தயிர் சாதம் சாப்பிடும் ஆச்சாரமான பிரமணர்களுக்கு தான் சமூக அவலங்களை கண்டால் கோபம் வரும் என்பது போலவே இன்னும் எத்தனைக்காலத்துக்கு தான் பீலா விடுவார்கள்!

சாத்வீகமானவாளுக்கே கோவம் வர அளவுக்கு சமூகம் சீர் கெட்டுப்போச்சுனு காட்ட வருகிறாரா? அப்படினா பெரிய பிரச்சினைகளை எதிர்த்து எதாவது செய்யலாமே!(பள்ளியில் டொனேஷன் கேட்டதுக்கு அங்கே என்ன பண்ணார்) ஏன் மீண்டும் மீண்டும் அல்ப பிரச்சினைகளுக்கே அவாளா வர ஹீரோ கோபப்படுகிறார்!

எல்லா தேசிய மயமான வங்கிகளிலும் துப்பாக்கியுடன் ஒரு பாதுகாவலர் இருப்பார், மாதவன் என்ன தான் பிரச்சினை பண்ணவர் என்றாலும் அவரைப்பார்த்து நடுங்கிக்கொண்டு அவரை அப்படியே சும்மா விடுவது என்ன லாஜிக், அப்போ ஒரு தாதா வந்து கொள்ளை அடிக்கலாமா வங்கியை? இல்லை நங்கநல்லூருக்கு தான் எலெக்ட்ரீக் ட்ரெயின் போகுதா தரமான படம்னு சொல்லிக்கிட்ட உண்மைல தரமான படமா இருக்க வேண்டாமா?

மயிலாடுதுறை சிவா said...

வவ்வால்

"அதை விட பெரிய பலவீனம் , என்ன தயிர் சாதம் சாப்பிடும் ஆச்சாரமான பிரமணர்களுக்கு தான் சமூக அவலங்களை கண்டால் கோபம் வரும் என்பது போலவே இன்னும் எத்தனைக்காலத்துக்கு தான் பீலா விடுவார்கள்!...."

சூப்பர் வரிகள்...நியாமான வரிகள்...

இதே மாதவன் "மாடசாமி" அல்லது "பிச்சாண்டி" என்ற பெயரில் நடித்து இருப்பாரா?

மற்றப்படி சுரேஷ் கண்ணனின் எழுத்துகளோடு முழுக்க எனக்கு உடன்பாடு! படம் பார்க்க ஆவலாக உள்ளேன்...

மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

Mathavan is a good business man and not a good person. He is the producer and in order to maret this film. He conducted mooting (pattimarnam) The title was "EVanio Oruvan oruvan pirachanaiya alla thu samooga pirachaniya". I am not commenting his origin but these people feed on the foolish people especially poor and vulnerable TAMILS. Tamil when is he going to think and stand erect?

RAMG75 said...

It is one of the movie with JUNK screen play. Very artificial and the narration is very bad. Madhavan is NOT a right choice for this character. This is my opinion about this movie.

Badshah said...

Recently i saw a movie called 'Falling down' 1993 movie..Storyline and few scenes are similiar. sure the story of Evano oruvan might have inspired from Falling down.

Please follow the link to find the movie.
http://www.imdb.com/title/tt0106856/

சாமக்கோடங்கி said...

சாமான்ய மனிதன் எதிர்கொள்கிற விஷயம் தான்.. மனது கணக்கும்படி எடுத்து இருந்தார்.. ஆனால் வியாபார உலகத்தில் சுதாரித்துக் கொண்டு முன்னேற முயல்பவன் ஆட்டு மந்தைகளில் ஒருவன் அல்ல.. வாழ்கை ஒரு போராட்டம்... போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.. வெந்து துவழ்வதில் அர்த்தம் இல்லை.

ஆனால் இந்த முயற்சிக்காக இயக்குனரையும், மாதவனையும் பாராட்டுகிறேன்..