Tuesday, December 25, 2007

ஒரு சைக்கிளும் இரண்டு சிறுவர்களும்

Beijing Bicycle (2001)

சுமார் 12 வயதாக இருந்த போது இரண்டு ரூபாய் ஒன்றை ஒரு அந்நியனிடம் திருட்டு கொடுத்ததை உணர்ந்த தருணத்தில் எனக்கு ஏற்பட்ட பதைபதைப்பும், பயமும், ஏமாற்றப்பட்ட கோபமும், திருடியவனை தப்பிக்கவிட்ட ஏமாற்றமும் ஒன்றுசேர்ந்த கலவையான உணர்ச்சி இன்னமும் என் மூளை நரம்புகளில் பத்திரமாக பொதிந்திருக்கிறது. வெற்றிகரமாக திருடுவதில் உள்ள சந்தோஷத்தை விட திருட்டுக் கொடுக்கும் போது ஏற்படும் துயரத்தின் சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது. அதிக விலை மதிப்பில்லாததாக இருந்தாலும், மிகவும் ஆசையாக, சென்டிமென்ட்டாக பாதுகாக்கிற பொருள் திருட்டுப் போகிற போது ஏற்படுகிற வலியின் துயரம் பிரத்யேகமானது. இத்திரைப்படத்தில், பதினேழு வயதுச் சிறுவன் Guei-யும் தொலைந்து போன தனது பிரியமான சைக்கிளை மீட்க ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக போராடுகிறான்.

Photobucket

கிராமப்புறம் ஒன்றிலிருந்து Beijing நகருக்கு பிழைப்பு தேடி வருகிறான் Guei. பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு நண்பனுடன் தங்குகிறான். கடிதங்களை டெலிவரி செய்யும் கொரியர் கம்பெனி ஒன்றில் அவனுக்கு வேலை கிடைக்கிறது. பணிபுரிவதின் நிமித்தம் ஒரு புத்தம்புதிய சைக்கிள் ஒன்று வழங்கப்படுவதுடன் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அந்தச் சைக்கிள் அவனுக்கே சொந்தமாகும் வாய்ப்பு உள்ளது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. சைக்கிளை சொந்மாக்கிக் கொள்வதற்காக தீவிரமாக உழைக்கிறான் Guei. பரபரப்பான Beijing நகரின் வீதிகளில் சைக்கிளில் வேகமாக பயணிப்பது அவனுக்கு உற்சாகமாகவே இருக்கிறது. சைக்கிள் அவனுக்கு சொந்தமாகப் போகும் நாளன்று அது திருட்டுப் போகிறது. சைக்கிள் இல்லாமல் அவனுக்கு தொடர்ந்து பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்றும் ஒரு வேளை அவன் சைக்கிளை மீட்க நேர்ந்தால் அவனை மறுபடியும் பணி வழங்க தயாராக இருப்பதாக அவனுடைய மேலாளர் தெரிவிக்கிறார். அவ்வளவு பெரிய நகரத்தில் இந்தச் சிறுவனால் எப்படி சைக்கிளை கண்டுபிடிக்க முடியும் என்று அவநம்பிக்கையாக இருக்கிறது அவருக்கு.

Guei சைக்கிளில் கீறல்களின் மூலம் அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பதால், அந்தக் குறியீடு இருக்கிற சைக்கிளை தேடி நகர் முழுவதும் அலைகிறான். ஒரு இரவில் சைக்கிளை திருட வந்ததாக தவறாக குற்றஞ்சாட்டப்பட்டு பிறகு அவனுடைய மேலாளரால் கடுமையான வசவுகளுக்குப் பிறகு காவல் துறையினடமிருந்து மீட்கப்படுகிறான். பள்ளிக்கூட மாணவன் ஒருவன், குறிப்பிட்ட அடையாளமுள்ள அந்த சைக்கிளோடு தம்முடைய பெட்டிக்கடைக்கு வந்ததாக அவனுடைய நண்பர் தெரிவிக்கிறார்.

()

Jian என்கிற பள்ளிக்கூட மாணவன் தம்முடைய புதிதான சைக்கிளுடன் சக மாணவர்களுடன் விளையாடுகிறான். சைக்கிளின் மூலம் தனது காதலியையும் அவனால் கவர முடிகிறது. வீட்டை அடைந்ததும் சைக்கிளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிறான். சைக்கிள் அவனுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. அவன் தன்னுடைய காதலியுடன் தனிமையாக இருக்கும் ஒரு தருணத்தில், அவனைப் பின்தொடரும் Guei தன்னுடைய சைக்கிளை அடையாளம் கண்டுகொண்டு அதை மீட்டெடுத்து ஓடுகிறான். வேகமாக அவனைப் பின்தொடர்ந்து ஒடிவரும் Jian எப்படியோ அவனைப் பிடித்து சைக்கிளை திருப்பி எடுத்துக் கொள்கிறான். சாலையிலிருக்கும் மற்ற இளைஞர்கள் அப்பாவிச் சிறுவன் Guei-ஐ சைக்கிள் திருடன் என்று தீர்மானித்து அடித்து உதைக்கிறார்கள்.

வீட்டிற்குத் திரும்பும் Jian தனது தந்தை காணாமற் போன பணத்தை பரபரப்புடன் தேடிக் கொண்டிருப்பதை பார்க்கிறான். அது அவனுடைய தங்கையின் உயர்படிப்பிற்காக சேமித்து வைக்கப்பட்டது. "பணத்தை எடுத்தாயா" என்று கேட்கும் தந்தையிடம் "இல்லை" என்கிறான் Jian. அவனுக்கு வாங்கித் தருவதாக சொல்லியிருந்த சைக்கிளை அந்த மாதமும் வாங்கித்தர முடியவில்லையென்றும் அடுத்த மாதம் கண்டிப்பாக வாங்கித்தருவதாகவும் கூறும் தந்தையிடம் "எனக்குத் தேவையில்லை" என்று எரிச்சல் அடைகிறான் Jian.

Jian தனது வீட்டில் சைக்கிளை ஒளித்து வைப்பதை, பின்தொடரும் Guei கவனித்து மறுபடியும் எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான். தன்னுடைய பணியையும் மிகுந்த பிடிவாதத்திற்குப் பிறகு மீட்டுக் கொள்கிறான். சைக்கிள் இல்லாத காரணத்தால் தன்னுடைய மகிழ்ச்சியை தொலைத்தாக உணரும் Jian நண்பர்களிடமும் காதலியிடமும் எரிச்சலை காண்பித்து அவர்களைப் புறக்கணிக்கிறான். அந்தச் சிறுவனை கண்டுபிடித்து சைக்கிளை மீட்டு விடலாம் என்று அவனுடைய நண்பர்கள் ஆறுதல் சொல்கிறார்கள். Guei பணிபுரியும் கொரியர் நிறுவனத்தை ஊகித்து, அவனை அடித்து உதைத்து சைக்கிளை தம்முடைய நண்பனிடம் மீட்டுக் கொடுக்கிறார்கள்.

காதலியுடன் சுற்றிவிட்டு சைக்கிளுடன் வீட்டுக்கு திரும்பும் Jian-க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவனுடைய அப்பாவுடன் சைக்கிளின் உரிமையாளனான Guei நிற்கிறான். "சைக்கிள் எப்படி வந்தது" என்று கேட்கும் தந்தையிடம் "நான்தான் பணத்தை திருடி வாங்கினேன். எத்தனை மாதமாக என்னை ஏமாற்றினீர்கள்? தங்கைக்கு மாத்திரம் செலவழிக்க பணம் இருக்கிறதா?" என்று வெடிக்கிறான். அவனை 'பளார்'ரென்று அறையும் அவனுடைய அப்பா, சைக்கிளை அவனிடமிருந்து பிடுங்கி Guei-யிடம் கொடுக்கிறார்.

()

Jian-ன் நண்பர்கள் அவனிடம் "இந்தச் சைக்கிளை திருடினாயா?" என்று கேட்டு கோபப்படுத்துகிறார்கள். அதை தாம் 500 யென்கள் கொடுத்து Second Hand மா¡க்கெட்டில் வாங்கியதாக கூறுகிறான். அத்தோடு இருக்கையை மாற்றியதற்கான ரசீதை காண்பிக்கிறான். "அப்படியென்றால் அந்தப் பையனிடமிருந்து நாம் சைக்கிளை பிடுங்குவதற்காக உரிமை இருக்கிறது. நீ சரியென்றால் செய்யலாம்" என்கின்றனர் நண்பர்கள். அவர்களது ஆலோசனைப் படி Guei-யிடமிருந்து சைக்கிளை பிடுங்க முயற்சிக்கையில் Guei சைக்கிளை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டு இயலாமையின் காரணமாக 'ஓ'வென்று கதறுகிறான். "இந்தச் சைக்கிள் என்னுடையது" என்று கூறும் அவனிடம் "இந்தச் சைக்கிளை எங்கள் நண்பன் காசு கொடுத்து மார்க்கெட்டில் வாங்கியிருக்கிறான். வேண்டுமானால் நீ சைக்கிளை திருடியவனை கண்டுபிடித்து மீட்டுக் கொள். இது எங்கள் நண்பனுக்குத்தான் சொந்தம்" என்று விவாதிக்கிறார்கள். ஆனால் Guei சைக்கிளை இறுகப் பற்றின கைகளை விடுவிக்காமல் மெளனமாக அமர்ந்திருக்கிறான்.

இந்த விவாதம் கிட்டத்தட்ட இரவு வரை நீடிக்கிறது. "வேண்டுமானால் எங்கள் நண்பன் செலவழித்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு நீ சைக்கிளை எடுத்துக் கொண்டு போ” என்கிற மாற்று ஆலோசனை¨யும் ஏற்றுக் கொள்ளாமல் கல்லுளிமங்கன் போல் அமர்ந்திருக்கிறான் Guei. சோர்ந்து போகும் நண்பர்கள் இறுதியாக ஒரு யோசனையை முன்வைக்கிறார்கள். இருவருமே சைக்கிளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற யோசனைதான் அது. இருவருமே அதை ஏற்றுக் கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்றி மாற்றி உபயோகின்றனர். (Children of heaven நினைவுக்கு வருகின்றதா?). சில நாட்கள் இவ்வாறாக கழிகிறது.

()

சைக்கிள் சாகச விளையாட்டில் சிறந்தவனாக இருக்கும் Da Huan என்பவனை எல்லோரும் வியந்து பாராட்டுகின்றனர். Jian காதலியின் பார்வை இவன் மீது விழுகிறது. இதனால் தன்னைத் தொடர்ந்து வரும் Jian-ஐ புறக்கணிக்கிறாள். பின்தொடரும் அவனை Da Huan அவமானப்படுத்தி விட்டுப் போகிறான். எரிச்சலின் உச்சத்தை அடையும் ஒரு கல்லை எடுத்து Da Huan-ன் மண்டையை உடைக்கிறான்.

மறுமுனையில் சைக்கிளுக்காக காத்துக் கொண்டிருக்கும் Guei-யிடம் சைக்கிளை கொடுத்து விட்டு "இனிமேல் தமக்கு சைக்கிள் தேவைப்படாது. நீயே வைத்துக் கொள்" என்று விரக்தியுடன் கூறுகிறான். அடிபட்ட Da Huan பழிவாங்குவதற்காக தம்முடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு வரும் போது இருவரும் தென்படுகிறார்கள். துரத்தும் குழு இரண்டாக பிரிந்து இருவரையும் சிரமத்திற்குப் பிடித்து நையப் புடைக்கிறார்கள். அப்பாவியான Guei-யையும் அடித்துப் போடுகிறார்கள். அவர்கள் விலகும் போது ஒருவன் Guei-ன் சைக்கிளை தூக்கிப் போட்டு உடைக்க முயல்கிறான். "சைக்கிளை ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று கெஞ்சும் அவனின் அழுகைக்குரல் அவன் காதில் விழுவதில்லை. Guei ஒரு கல்லை எடுத்து மண்டையை உடைக்க, அவன் கீழே சாய்கிறான். சேதமடைந்த தன்னுடைய சைக்கிளை தூக்கிக் கொண்டு Beijing நகரின் தெருவில் எல்லோரும் கவனிக்க நடப்பதோடு படம் நிறைகிறது.

()

ஒரு சைக்கிள், இரண்டு சிறுவர்களை வைத்துக் கொண்டு இவ்வளவு சுவாரசியமான திரைக்கதையை அமைக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக சைனா, ஜப்பான்காரர்களில் எனக்கு ஜாக்கிசானைத் தவிர வேறு யாரையும் அடையாளம் தெரியாது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்கள் கிடையாது அவர்களுக்கு. இதில் Guei-யாக நடிக்கும் சிறுவனும் அப்படித்தான். சில காட்சிகளைத் தவிர பல இடங்களில் அவனுடைய முகபாவம் மொண்ணையாகவே இருக்கிறது. என்றாலும் கதையின் சுவாரசியமான போக்கில் இது பொருட்படுத்தத் தேவையில்லாததாக இருக்கிறது. Guei-யின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார சூழ்நிலை காரணமாக கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு நகரும் மக்களின் work performance பொதுவாக சிறப்பாகவே இருக்கும்.

விளம்பர நிறுவனமொன்றில் பணிபுரியும் என்னிடம், எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் அவருடைய நிறுவனத்திற்காக சென்னையில் தேவைப்படும் பணியாளர்களுக்காக சென்னையைத் தவிர, தமிழ்நாட்டின் இதர நகரங்களில் விளம்பரம் செய்வார். "சென்னை இளைஞர்கள் உல்லாசமான வாழ்க்கைக்கு பழகிப் போனவர்கள். எனவே அவர்களால் முனைப்புடன் வேலை செய்ய இயலாது. ஆனால் கிராமத்திலிருந்து வருபவர்களிடம் ஆங்கில மொழியறிவு முன்னே பின்னே இருந்தாலும், நல்ல சம்பளத்தைப் பெறுவது அவர்களின் பிரதான நோக்கமாக இருப்பதால் சிறப்பாக பணிபுரிவார்கள்" என்பது அவரின் அனுபவ ரீதியான கருத்து.
Guei-யும் சைக்கிளை சொந்தமாக்கிக் கொள்ள ஊக்கமுடன் பணியாற்றுவதிலும், கைவிட்டுப்போன வேலையை மீண்டும் பிடிவாதத்துடன் திரும்பப் பெற்று அவனுடைய மேலாளரை வியக்கச் செய்கிறான்.

படத்தின் திரைக்கதையின் மூலம் Jian சைக்கிளை திருடியிருப்பான் என்பது மாதிரி பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுகிறது. மேலும் அவன் வீட்டில் காணாமற் போன பணத்தையும் அவன்தான் எடுத்திருப்பான் என்பதையும் பார்வையாளர்கள் ஊகிப்பதன் காரணமாக அவன் மீது வெறுப்பு படர்கிறது. ஆனால் கதையின் போக்கில் அவன் சைக்கிளை second hand மார்க்கெட்டில் வாங்கியிருப்பது தெரிவதும், காதலியை இழந்து அடிவாங்கி சைக்கிளை திருப்பித்தரும் தருணத்தில் அவன் மீதான கோபம் மறைந்து அனுதாபம் வருகிறது. இரண்டு சிறுவர்களுமே எந்த சினிமா அனுபவமுமில்லாத புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

()

படத்தின் கிளைக்கதையாக, பெட்டிக்கடைக்கார நண்பரும் Guei-யும் அருகிலிருக்கிற பங்களாவில் உள்ள ஒரு பணக்கார பெண்ணின் அழகை ரகசியமாக பார்த்து ரசிக்கின்றனர். அவள் விதவிதமான உடை உடுத்துவதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர். ஆனால் அவள் அந்த வீட்டில் பணிபுரியும் பெண் என்பதும் உரிமையாளர் இல்லாத நேரங்களில் அவர்களுடைய உடைகளை அணிந்து பிடிபட்டு வெளியேற்றப்படுபவள் என்பதும் கதைப் போக்கில் தெரிகிறது.

சைக்களில் வேகமாக வரும் Guei பணக்கார பெண்ணாக கருதப்படும் பெண்ணின் மீது மோதிவிடுகிறான். தனது சைக்கிளை Jian-னிடமிருந்து மீட்டுக் கொள்ளும் பொருட்டு வேகமாக செல்லும் போது இன்னொரு பெரிய வாகனத்தின் மீது மோதி கீழே விழுகிறான். படத்தின் இவ்வாறான மோதல் காட்சிகள் நேரடியாக பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுவதில்லை. மோதலுக்கு முன்னதான காட்சியையும் கீழே அலங்கோலமாக விழுந்து கிடக்கும் காட்சியையும் வைத்து பார்வையாளர்கள் யூகித்துக் கொள்ளும் படியான விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

()

படத்தின் இயக்குநர் Wang Xiaoshuai. இந்தப்படத்திற்கு முன்னதாக இவர் நான்கு படங்களை இயக்கியிருந்தாலும் Beijing Bicycle வெளியான பின்னர்தான் சர்வதேச அரங்கில் இவர் மீதான பார்வை விழுந்தது. இந்தப்படத்தில் சில திருத்தங்களை செய்ய சைனா திரைப்பட நிர்வாகம் இவரைப் பணித்தது. பெர்லின் திரைப்பட விருதுக்கு காலதாமதமாகிவிடும் என்பதால் நிர்வாகத்தின் அனுமதியில்லாமலேயே படத்தை விழாவிற்கு அனுப்பியது இந்தப்படத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. பின்னர் இது விலக்கி கொள்ளப்பட்டது.

கிராமப்புற மக்களின் வறுமையையும் கல்வியறிவு பெற முடியாத அவர்களின் சூழ்நிலையை படம் வெளிப்படுத்துவதாக சித்தரித்திருப்பதால் அரசு தடையை ஏற்படுத்தியிருக்கலாம் என்று யூகிக்கிறேன். பெர்லின் திரைப்பட விருது உட்பட பல விருதுளை இந்தப்படம் பெற்றுள்ளது.

()

பின்குறிப்பு: 'பொல்லாதவன்' திரைப்பட பார்வையை எழுதும் போது, அந்தப்படத்தின் சில காட்சிகள் Beijing Bicycle திரைப்படத்தோடு ஒத்ததாக இருப்பதாக, மதி பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறிப்பே இந்தப் படத்தை பார்க்க என்னைத் தூண்டியது. அவருக்கு நன்றி. வாகனத்தின் மீது நாயகனின் தீவிர ஈர்ப்பும், அதற்காக தந்தையிடம் சண்டையிடுவதும், வாகனத்தின் மூலம் தன்னுடைய காதலைப் பெறுவது, வாகனத்திற்காக ரத்தம் சிந்துவது... என பல காட்சிகள் தமிழ்ப்படத்திலும் புத்திசாலித்தனமாக மறுபதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ் இயக்குநர்கள் இதற்கான credit-களை வெளிப்படையாக டைட்டிலில் குறிப்பிடுவதுதான் யோக்கியமான செயலாக இருக்கும்.

Image Courtesty: wikipedia

10 comments:

Anonymous said...

சிறுவர்கள் என்பதைவிட விடலைகள் என்பதுதான் பொருத்தமாகும். சீனாவின் புறநகர்வாழ்க்கையைச் சொல்லும் படம் என்பதுதான் இப்படத்தின் மையமாகிறது.

/ஆனால் அவள் அந்த வீட்டில் பணிபுரியும் பெண் என்பதும் உரிமையாளர் இல்லாத நேரங்களில் அவர்களுடைய உடைகளை அணிந்து பிடிபட்டு வெளியேற்றப்படுபவள் என்பதும் கதைப் போக்கில் தெரிகிறது. /

லோஸாவின் அண்மையபுதினம் Bad Girl இன் மையக்கதையே இதுதான் :-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

very good writeup suresh. i tried to write something about this movie when i watched it during the summer. but couldn't do justice to the movie. am glad that i left it alone.

learnt about this movie and the director on a book about the chinese alternate movies. am hunting for a few other movies mentioned in the book. will mail you the list and the name of the book (if you want). mail me (mathygrps at gmail dot com)

just finished watching taare zameen par. would appreciate it if you could do a write-up about indian 'children' movies.

appuram.. where did you get this movie? mail pannungalaen.

-Mathy

cheena (சீனா) said...

ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய விமர்சனம் - அல்ல அல்ல - ஆய்வுக் கட்டுரை எழுதுவது என்பது மிகவும் கடினமான செயல். படம் முழுவதையும் பல முறை பார்த்து, உள்வாங்கி, காட்சிக்குக் காட்சி ரசித்து, அதைப் பற்றி விவரித்து, முழுக் கதையையும் அழகாக விமர்சித்திருக்கிறார்.

வாழ்த்துகள்.

ஈழநாதன்(Eelanathan) said...

சுரேஷ் அவ்வப்போதுதான் தலை காட்ட நேரம் கிடைத்தாலும் மறக்காமல் உங்கள் பக்கம் வந்து புதிதாக ஏதும் எழுதியிருக்கிறீர்களா என்று மேய்வது வழக்கம்.சிறந்த படங்கள் உங்கள் சிறப்பான விமரிசனங்களால் பலரையும் சென்றடைவது மகிழ்ச்சியே

சீனப் படங்களில் ஆர்வம் இருக்குமானால் Zhang Yimou இன் படங்களைப் பார்க்கும் படி பரிந்துரைக்கின்றேன் குறிப்பாக அவரின் அரசியல் கலப்பற்ற படங்கள் இரண்டு The road home,Not one less இரண்டுமே சீனாவின் கிராமப்புறங்களின் வாழ்வியலைப் பற்றிப் பேசுபவை.சுரேஷ் அவ்வப்போதுதான் தலை காட்ட நேரம் கிடைத்தாலும் மறக்காமல் உங்கள் பக்கம் வந்து புதிதாக ஏதும் எழுதியிருக்கிறீர்களா என்று மேய்வது வழக்கம்.சிறந்த படங்கள் உங்கள் சிறப்பான விமரிசனங்களால் பலரையும் சென்றடைவது மகிழ்ச்சியே

சீனப் படங்களில் ஆர்வம் இருக்குமானால் இன் படங்களைப் பார்க்கும் படி பரிந்துரைக்கின்றேன் குறிப்பாக அவரின் அரசியல் கலப்பற்ற படங்கள் இரண்டு இரண்டுமே சீனாவின் கிராமப்புறங்களின் வாழ்வியலைப் பற்றிப் பேசுபவை

அவரின் மிக அண்மையான படமான Curse of the Golden Flower ஐ தவிர மற்றைய எல்லாப் படங்களும் எனக்குப் பிடித்திருக்கின்றன

சுரேகா.. said...

கலக்குறீங்க.!

கதையை நீங்கள் வருணிக்கும் விதம் அற்புதமாக உள்ளது.

வாழ்த்துக்கள் !

உங்கள் பதிவுக்கு ஒரு நிரந்தர வாசகன் தயார்..!

ஆமா.. 'பொல்லாதவன்' படம் இதுலேருந்து சுட்டதுதானா.? இருக்கட்டும் இருக்கட்டும்.

பிச்சைப்பாத்திரம் said...

//சிறுவர்கள் என்பதைவிட விடலைகள் என்பதுதான் பொருத்தமாகும். சீனாவின் புறநகர்வாழ்க்கையைச் சொல்லும் படம் என்பதுதான் இப்படத்தின் மையமாகிறது.//
//லோஸாவின் அண்மையபுதினம் Bad Girl இன் மையக்கதையே இதுதான்//

அனானி,

ஆம். விடலைகள் என்பதே பொருத்தமாக இருக்கும். தகவலுக்கும் நன்றி.

பிச்சைப்பாத்திரம் said...

//it if you could do a write-up about indian 'children' movies. //

மதி,

'புதியபார்வை' இதழில் விஸ்வாமித்திரன் என்பவர் 'சிறுவர் சினிமா' என்கிற தலைப்பில் இந்திய/உலகத் திரைப்படங்களை எழுதி வருவதை நீங்கள் அறிவீர்கள்தானே?

//where did you get this movie?//

சென்னை, பர்மா பஜார்

பிச்சைப்பாத்திரம் said...

//சீனப் படங்களில் ஆர்வம் இருக்குமானால் Zhang Yimou இன் படங்களைப் பார்க்கும் படி பரிந்துரைக்கின்றேன் குறிப்பாக அவரின் அரசியல் கலப்பற்ற படங்கள் இரண்டு The road home,Not one less //

ஈழநாதன்,

Not one less திரைப்படத்தை sony max தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது பார்த்திருக்கிறேன். அருமையான படம். அதைப் பற்றியும் இயக்குநரின் மற்ற படங்களைப் பற்றியும் எஸ்.ராமகிருஷ்ணன் குமுதம் தீராநதியில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இயக்குநரின் To Live என்கிற திரைப்படத்தைப் பற்றியும் சிறப்பாக சொல்கிறார்கள். பார்க்க வேண்டும். பரிந்துரைக்கு நன்றி.

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட, பதிவை பார்வையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

Unknown said...

Arumai