'கனா கண்டேன்' இயக்குநர் கே.வி. ஆனந்தை எனக்கு 15 வருடங்களாக தெரியும். ஆனால் அவருக்கு என்னை தெரியுமா என்றால் தெரியாது. என் இலக்கிய வாசிப்பனுபவத்தில் 'வயதுக்கு வருவதற்கு' முன்னால் படித்துக் கொண்டிருந்த சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரின் போன்றவர்களின் கிரைம் மாத நாவல்களின் அட்டைக்கு, நாவலின் சம்பவங்களுக்கேற்ப புகைப்படம் எடுப்பவர் இந்த கே.வி. ஆனந்த். இந்த சின்ன ஏரியாவிலேயே பல வித்தைகளை அப்போதே செய்வார். ஒரு புகைப்படக் கலைஞராகத்தான் தன் வாழ்க்கையை துவங்கியவர். சில பல வருடங்கள் இவரை மறந்து போய் முதல்வன் படத்தில் இவர் ஒளிப்பதிவாளர் என்று கேள்விப்பட்ட போது ஆச்சரியமாக இருந்தது.
பி.சி.ஸ்ரீராம், (மீரா) ராஜீவ் மேனன், (கண்டு கொண்டேன் x 2) ஜீவா (12B) என்று ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார். கே.வி. ஆனந்த். கனா கண்டேன் இவரது இயக்கத்தில் வெளிவந்த சமீபத்திய படம்.
()
ஆனந்த் இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும். சுவாரசியமாக கதை சொல்லும் திறன் இவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. எழுத்தாளர்களை அவ்வளவாக பயன்படுத்திக் கொள்ளவே கொள்ளாத தமிழ் சினிமாவில், இரட்டை எழுத்தாளர்களான சு (ரேஷ்) பா (லகிருஷ்ணன்) ஆகியோரின் கதை-வசனத்தை பயன்படுத்திக் கொண்டு படமாக்கியதை ஒரு நல்ல ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும்.
கதையும் களமும் சற்று வித்தியாசமானது. தண்ணீர் விற்றுப் பிழைக்கும் தாய்க்கு பிறந்த ஒருவன் தன் தாய் படும் கஷ்டத்தை சிறுவயதிலேயே பார்த்ததின் விளைவாக, அறிவியலில் ஆர்வம் கொண்டு தீராத ஆராய்ச்சியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தில் வெற்றி பெறுகிறான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசாங்கம் இதை கண்டு கொள்ளாமல் இருக்க, யதேச்சையாக அறிமுகமாகிற மனைவியின் கல்லூரி நண்பரிடம் கடன் வாங்கி தன் திட்டத்தை துவங்குகிறான். ஆனால் கடன் கொடுக்கிற அந்த நண்பனோ ஒரு மோசமான கந்துவட்டி வசூலிக்கிறவனின் முகத்தை காட்டி இவர்களை மனரீதியாக கொடுமைப்படுத்த அதிலிருந்து நாயகன் புத்திசாலித்தனமாக வெளிவருவதுதான் கதை.
நாயகனாக ஸ்ரீகாந்த்.
வளர்த்தியாகவும் அழகாகவும் இருக்கிற இவர் படம் ஆரம்பித்ததிலிருந்தே பற்ற வைத்தே ராக்கெட் போல் சுறுசுறுப்பாக இயங்குகிறார். பட ஆரம்பமே கோபிகாவின் திருமணத்திற்கு ஸ்ரீகாந்த் செல்வதாக அதிரடியாக ஆரம்பிக்கிறது. கல்யாண சத்திரத்தில் மாப்பிள்ளை ஒரு பெண்பொறுக்கி என்பதை தெரிந்து கொண்ட கோபிகா திருமணத்தை புறக்கணித்து நண்பர் ஸ்ரீகாந்த்துடன் சென்னைக்கு பயணமாகிறார்.
கோபிகாவும் இவரும் காதல் டூயட்களில் பெவிகால் விளம்பரம் போல் ஒட்டிக் கொண்டு மிகவும் அன்னியனாக ... சட்... அன்னியோன்யமாக இருக்கின்றனர். நாயகனின் வழக்கமான நேர்மைப்படி, தன் குடிநீர் திட்டம் அரசாங்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார், தனியாருக்கு விற்பதின் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்குமென்றாலும். கடன் கொடுத்த அந்த ·பிராடு நண்பன் தம்மை ஏமாற்றி மிரட்டுவதன் மூலம் தம் திட்டத்தை அபகரிக்க முயல்கிறான் என்று அறியும் போது அவரிடம் பொங்கும் கோபம் மிக இயல்பாக இருக்கிறது.
நாயகியாக கோபிகா
போட்டோஜெனிக் முகம். நேரில் பார்க்கும் போது அவ்வளவு அழகாக தோன்றாத இந்த மாதிரி முகமுள்ளவர்கள், காமிரா வழியாக பார்க்கும் போது பிரமித்துப் போகும் அளவிற்கு மிகவும் live-ஆக தெரிவார்கள். சரிதா, அர்ச்சனா, ஷோபா என்று இந்தப்பட்டியல் நீளமானது. முன்னரே சொன்ன மாதிரி, காதல் காட்சிகளில் நாம் ஸ்ரீகாந்த் மீது பொறாமைப்படும் அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார். வழக்கமான தமிழ்ப்பட நாயகிகள் மாதிரி தொப்புள் மூலம் நடிக்காமல், சில காட்சிகளில் இவருக்கு உணர்ச்சிகரமாக நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
எதிர்நாயகன் பிருத்விராஜ்
மலையாளத்தில் நாயகனாக சில வெற்றி படங்கள் செய்திருக்கும் இவர், இப்போது தமிழில் நாயகனாக இருப்பவர்களை விடவும் அழகாக இருக்கிறார். ஆனால் வில்லன் பாத்திரத்திற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. very cool minded வில்லன். சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கிற வேலையை நன்றாகவே செய்கிறார். இந்தப்படத்தின் ஹீரோவாக இவரையே சொல்லுமளவிற்கு இவர் கதாபாத்திரம் மிகவும் வலுவாகவும், சுவாரசியமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. கருவுற்றிருந்த கோபிகாவை அபார்ஷன் செய்து கொள்ளுமளவிற்கு மனஅழுத்தம் கொடுத்த இவர், "உங்க ரெண்டு பேருக்கும் ஆரோக்கியமான இளமை இருக்குது. இன்னிக்கு இரவே மனசு வெச்சீங்கன்னா, அடுத்த பத்து மாசத்துல குழந்தை பொறந்துட்டுப் போகுது" என்று அலட்சியமாக சொல்லும் போது நமக்கும் கோபம் வருகிறது.
இசையமைப்பாளர் வித்யாசாகர்
கன்னடத்தில் வெற்றி பெற்றாலும், ரொம்ப வருடங்களாக தமிழ்ச்சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள (மலரே, மெளனமா? ...) முயன்றவருக்கு இப்போது வசந்த காலம். சின்னச் சின்ன சிகரங்கள்... என்ற பாடலும், காலை அரும்பி.. என்ற பாடலும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் இப்போதைக்கு முன்னேறி இருக்கிறது.
பாடலாசிரியர் வைரமுத்து
மனிதருக்கு எப்படி கற்பனை வறண்டு போகாமல், நயாகரா போல் பிரவாகிக்கின்றதோ தெரியவில்லை. இதற்குத்தான் சங்கப் பாடல்களையும், செவ்விலக்கியங்களையும் நிறைய உள்வாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு மினி 'காமத்துப் பாலையே' எழுதியிருக்கிறார்.
'காலை அரும்பி பகலெல்லாம் போதாகி' என்று ஆரம்பிக்கும் பாடலில் காமம் என்கிற நோயின் அடையாளங்களாக ,
'மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம், வலப்பக்கம் இதயம் பெண்டுலமாடும்'
என்கிறவர்
'வாய் மட்டும் பேசாது, உடம்பெல்லாம் பேசும்'
என்று உச்சத்திற்கு போகிறார். மேலும் ஆங்கிலத்திற்கும், தமிழிற்கும் பொதுவாக ஒலிக்கும் வார்த்தையையும் வைத்து விளையாடி இருக்கிறார்.
'இது ஆண் நோயா, பெண் நோயா
காமன் நோய்தானே... 'என்கிற இடத்தை கவனியுங்கள். இதில் காமன் என்பதை மன்மதனை குறிப்பிடுவதாகவும், common என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
'சின்னச் சின்ன சிகரங்கள்' என்கிற பாடலில்
'இளநீர் விளையும் மரம் நான்தானே
இளநீர் பருக மரமே திருடும் பயல் நீதானே'
என்று பெண் பாடும் போது குறும்பும் காமமும் கொப்பளிக்கிறது.
ஒளிப்பதிவாளர் செளந்தரராஜன்
இயக்குநரே ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தாலும் தன்னிடம் உதவியாளராக இருந்தவரை ஒளிப்பதிவு செய்யச் சொன்னது சிறப்பு. ஸ்ரீகாந்த்தும் கோபிகாவும் (திருமணத்திற்கு முன்னால்) முதன் முதலாக சங்கமமாகும் காட்சியை, காற்றடித்து சாமி காலண்டர் திரும்பிக் கொள்வது, எலுமிச்சம் பழத்தை லாரி சக்கரம் சிதறடிப்பது, ஒரு சிறுவன் தண்ணீர் அடங்கிய பிளாஸ்டிக் பையை கடித்து துப்புவது என்று வேறு வேறு சிறு காட்சிகளை இணைத்து 'கொலாஜ்' சித்திர முறையில் மிகவும் அழகுணர்ச்சியோடு சொல்லியிருப்பது சிறப்பு.
()
முன்னரே கூறியது போல் ஆனந்திற்கு சுவாரசியமாக கதை சொல்லும் திறமை இருந்தாலும் 'காட்சிகளின் நம்பகத்தன்மை' என்னும் விஷயத்தில் கோட்டை விடுகிறார்.
(1) சிறுவயது ஸ்ரீகாந்த்திற்கு அம்மாவாக வருபவர் பல படங்களில் நாயகிகளுக்கு தோழியாக வரும் இளவயது துணைநடிகை. அவருக்கு வயதானவராக கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு படுத்தியிருப்பதை விட (ஒரு காட்சியில் தொப்புள் தெரிய சேலை கட்டியிருக்கும் காட்சி தெரிகிறது) வயதான ஒருவரையே அந்தப்பாத்திரத்திற்கு போட்டிருக்கலாம்.
(2) கடல் நீரை குடிநீர் திட்டமாக மாற்றுவதையெல்லாம் நாம் நிறைய தடவை அரசியல் மேடைகளிலும் தேர்தல் வாக்குறுதிகளிலும் கேட்டுவிட்டதால் அதையே நாயகனும் சொல்லும் போது பயமாக இருக்கிறது. மேலும் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த (?!) ராமர் பிள்ளை வேறு நினைவிற்கு வந்து பயமுறுத்துகிறார்.
(3) கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும், கந்துவட்டி வசூலிக்கும் ஒருவன் இப்படியா எந்தப்பாதுகாப்புமில்லாமல், கோயில் திண்ணையில் தூங்குகிற மாதிரி தீவட்டி தடியனை மாத்திரம் வைத்துக் கொண்டு தொழில் செய்வார்?
இந்தக் குறைபாடுகளைத் தவிர, அரசியல்வாதியிடம் குடிநீர் திட்டம் பற்றி கொடுக்கப்படும் பேப்பர்கள் அவர்கள் கொடுத்த சில நிமிடங்களிலேயே வெளியே வந்து டீக்கடையில் சாப்பிடும் மசால்வடைக்கு பேப்பராக இருப்பது, சினிமா தயாரிப்பாளர் வீட்டிற்கு பணம் வசூலிக்க போகும் வில்லனின் உதவியாளன் அவர்கள் வீட்டு வரவேற்பறை பூந்தொட்டியில் சிறுநீர் கழிப்பது, கிளைமேக்ஸ் சண்டையில் நாயகன் கண்டுபிடிக்கும் குடிநீரிலேயே வில்லன் மரணமடைவது போன்ற காட்சிகளில் இயக்குநர் + கதாசிரியரின் புத்திசாலித்தனம் கைகோத்து நிற்கிறது.
சந்திரமுகி, சச்சின் வகையறாக்களோடு ஒப்பிடும் போது இது சிறந்தபடம்தான் என்றாலும், பத்திரிகைகளின் ஆஹா ஓஹோ விமர்சனங்களைப் பார்த்து, இது இன்னும் சிறந்த படமாக இருந்திருக்குமோ என்று....
கனா கண்டேன்.
12 comments:
உங்கள் பகிர்தலுக்கு நன்றி. இணையம், குறுவட்டில் கிடைத்தாலும் - திரையரங்கில்தான் கனா கண்டேன் பார்க்கவேண்டுமென்று பிடிவாதமாக இருந்து இப்போது அந்நியனால் சந்திரமுகியோடு சேர்த்து தூக்கப்பட்டுவிட்டது.
இருந்தாலும் உங்கள் விமர்ச்னம் (உங்களுடைய கனவை வீண்டித்தாலும்) திரையரங்கில் பார்க்கவேண்டும் என்று தோன்றச்செய்கிறது, நன்றி.
//கடல் நீரை குடிநீர் திட்டமாக மாற்றுவதையெல்லாம் நாம் நிறைய தடவை அரசியல் மேடைகளிலும் தேர்தல் வாக்குறுதிகளிலும் கேட்டுவிட்டதால் அதையே நாயகனும் சொல்லும் போது பயமாக இருக்கிறது.//
்பப்பபயப்படாதீர்்பப்பப்பப்பப்பப்பபப பயப்படாதீர், இது reverse osmosis என்னும் செயல்பாட்டைக் கொண்டு மிகவும் சாத்தியமான ஒன்றே. வளைகுடா நாடுகளில் நடைமுறையிலுள்ள ஒன்றே இது. செலவு குறித்து ஐயமிருந்தது, ஆனால் அதிக செலவின்றியே இதனை சாத்தியப் படுத்தலாமென்று நண்பனொருவன் (இணையத்தில் மேய்ந்து் விட்டுக்) கூறினான். ஆர்வமின்மையால் மேற்கொண்டு விசாரிக்கவில்லை.
விமர்சனம் சிறப்பாகத்தானிருக்கிறது. அடுத்த பதிவிலாவது சினிமா வேண்டாமே.
Good Direction by KV.Anand. Villan character done by very well. Good Analysis
(சந்திரமுகி, சச்சின் வகையறாக்களோடு ஒப்பிடும் போது இது சிறந்தபடம்தான் என்றாலும்)
(சந்திரமுகியோடு சேர்த்து தூக்கப்பட்டுவிட்டது)
Jokes of the week
விமர்சனம் பரவாயில்லை.
எனக்கென்னவோ, பாட்டெழுதின வைரமுத்துவுக்கே தோன்றாதவை உங்களுக்குத் தோன்றிருக்கு என்று படுகிறது;-)
-வசந்தன்-
இப்பட்த்திற்கு விமர்சனம் எழுதியதற்கு நன்றி.இன்னும்கொஞ்சம் சுருக்கி எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.
//நாயகன் கண்டுபிடிக்கும் குடிநீரிலேயே வில்லன் மரணமடைவத//ஓரு சின்ன திருத்தம்.. வில்லன் மரணமடைவதில்லை.. கடைசியில சட்டத்தால் தண்டிக்கப்பட்டு, ஒரு மனநோயாளியாக திரிவதாக பார்த்ததா ஞாபகம்.. ?? சரியா??
இதில் காமன் என்பதை மன்மதனை குறிப்பிடுவதாகவும், common என்பதாகவும் பொருள் கொள்ளலாம்-
too old and stale -used by kirupananda warrier and others many time
last comment was mine
//சிறுவயது ஸ்ரீகாந்த்திற்கு அம்மாவாக வருபவர் பல படங்களில் நாயகிகளுக்கு தோழியாக வரும் இளவயது துணைநடிகை. அவருக்கு வயதானவராக கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு படுத்தியிருப்பதை விட (ஒரு காட்சியில் தொப்புள் தெரிய சேலை கட்டியிருக்கும் காட்சி தெரிகிறது) வயதான ஒருவரையே அந்தப்பாத்திரத்திற்கு போட்டிருக்கலாம்//
படம் நேத்துத்தான் பார்த்தேன். அதான் இப்போ எழுதறேன். மேலே சொன்ன வரியில் உங்கள் ஆப்சர்வேஷன் கண்டு மெய்சிலிர்த்தேன். கதாநாயகனின் வயதான கஷ்டப்படும் அம்மா நடிகையின் தொப்புளைக்கூட விட்டுவைக்க முடியாத அதி கூர்மை :-)
எது எப்படியோ சுரேஸ்
வழக்கம் போல் கலக்கலான அருமையான விமர்சனம்.
மூக்கு சுந்தரை நான் வழி மொழிகிறேன். ஆனால் ஓர் சின்ன திருத்தம்,
"கதாநாயகனின் வயதான கஷ்டப்படும் அம்மா நடிகையின் தொப்புளைக்கூட விட்டுவைக்க முடியாத அதி கூர்மை :-)..."
அதில் என்ன தவறு சுந்தர்?
மயிலாடுதுறை சிவா...
எத்தனை யோசித்தாலும் எனக்கு அந்த சீன் நியாபகம் வரலை சிவா. அதுதான் உங்க ரெண்டு பேருடைய (?!!) பார்வைக் கூர்மையையும், ஆப்சர்வேஷனையும் நினைச்சு மெய் சிலிர்த்துப் போனேன்.
இந்த மாதிரி எல்லாம் சினிமா பாத்தா நான் எங்கேயோ போயிருப்பேன் :-)
Post a Comment