‘ஒண்ணும் மிண்டாதே’ (ஒரு வார்த்தையும் சொல்லாமல்) என்கிற மலையாளப் படம் பார்த்தேன் (2014). மிக எளிமையான திரைக்கதை. கற்பு மீற நினைக்கும் ஒரு நடுத்தர வர்க்க கணவன் கொள்ளும் மனச்சிக்கல்களைக் கொண்ட நுண்ணிய கதைதான்.
கூடி வாழும் விலங்காக திருமணம், குடும்பம் எனும் நிறுவனங்களை அமைத்துக் கொண்ட பின்னரும் கூட ஒவ்வொரு மனிதனும் தனித்தனித் தீவுகள்தான். தங்களின் சுயவிருப்பங்களுக்கு இந்த நிறுவனங்களின் விதிகள் தடையாய் இருப்பதை எண்ணி மருகுகிறார்கள், மீற விழைகிறார்கள், பின்பு அது குறித்த குற்றவுணர்வுடன் கண்ணீர் மல்குகிறார்கள். நீண்ட மரபைக் கொண்ட, உலகளாவிய தன்மையைக் கொண்ட, நிறையப் பேசப்பட்ட கருப்பொருளைக் கொண்டு உருவாகியிருந்தாலும் இதன் எளிமையான உருவாக்கம் காரணமாகவே இத்திரைப்படம் என்னை வசீகரித்தது.
**
ஜெயராம் ஒரு சராசரியான நடுத்தர வர்க்க மனிதன். அதற்குரிய பிரத்யேக குணாதியங்களைக் கொண்டவன். மனைவி, ஒரு மகள் என்கிற பிரியமான, அன்பான வாழ்க்கை. அதைக் கலைப்பது போல் நுழைகிறான் ஒரு பழைய நண்பன். சாத்தானின் நிழல் போல. அவன் ஒரு பெண் பித்தன். பார்க்கும் அழகான பெண்களையெல்லாம் வசீகரமாகப் பேசி தனக்கு இணங்க வைத்து விடும் திறமையுள்ளவன்.
ஜெயராமின் அலுவலகத்தில் பணிபுரியும் திருமணமான பெண் ஒருத்தியை சில நொடிகளுக்குள் அவன் அவ்வாறு கவர வைத்து விடுவது ஜெயராமிற்கு ஒருபக்கம் எரிச்சலாகவே இருக்கிறது. என்றாலும் பால்ய நண்பன் என்பதால் சகித்துக் கொள்கிறான்.
ஆனால் நாட்கள் கடக்க கடக்க நண்பனின் இந்த திறமை மீது அவனுக்கு பொறாமையும் பிரமிப்பும் வருகிறது. அந்த தீமையின் ருசியை நாமும் தீண்டிப் பார்த்தாலென்ன என்கிற ஆசை உண்டாகிறது. சில காரணங்களால் மனைவி இவனை இரவில் அனுமதிக்காமலிருப்பதால் தீயின் வேகம் இன்னும் பரவுகிறது.
இவனுடைய விருப்பத்தை உணர்ந்து கொள்ளும் நண்பன், விலைமகளிர் ஒருத்தியை ஏற்பாடு செய்து தருகிறான். இவனுக்கு ஆசை ஒருபக்கம் இருந்தாலும் அது குறித்தான பயமும் குற்றவுணர்வும் இருக்கிறது. என்றாலும் ஆசை எனும் உணர்வு முந்த, மனைவியிடம் பொய் சொல்லி விட்டு ஹோட்டலுக்குச் செல்கிறான். ஆனால் கடைசி நிமிடத்தில் மனச்சாட்சி உறுத்த எந்த சாகசமும் இல்லாமல் அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறான்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன்தான் அவனுக்கு ஆசுவாசம் ஏற்படுகிறது. ஆனால் அவசரத்தில் கிளம்பி வந்ததால் செய்த தவறின் காரணமாக அவனுடைய குட்டு வெளிப்பட்டு விடுகிறது. கோபம் கொள்ளும் மனைவி அவனிடம் நீண்ட நாட்களாக பேசாமலேயே இருக்கிறாள். (படத்தின் தலைப்பு இதைத்தான் சொல்கிறது). இந்த நிராகரிப்பை அவனால் பொறுத்துக் கொள்ளவே இயலவில்லை. எப்படியாவது தன் நிலையை எடுத்துச் சொல்லலாம் என்றால் மனைவி அதற்கான சந்தர்ப்பமே அளிப்பதில்லை. சில பல நாடகத் தருணங்களுக்குப் பிறகு காட்சிகள் சுபமாய் நிறைகின்றன.
**
ஒரு டெலிடிராமா போல பெரும்பாலும் உட்புறக் காட்சிகளிலேயே நகரும் திரைப்படம்தான். நிதானமாக நகர்ந்தாலும் படம் அதன் சுவாரசியதன்மையை இழக்கவில்லை. ஒரு துளி கதையென்றாலும் சிறப்பான நடிகர்களால் அதை கச்சிதமாக சுமந்து சென்று நல்ல அனுபவமாக்க முடியும் என்பதற்கு இத்திரைப்படம் ஓர் உதாரணம். பொருத்தமான casting இத்திரைப்படத்தின் பலம் எனலாம்.
குறிப்பாக ஜெயராம் இந்தப் பாத்திரத்திற்கு அத்தனை கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இயற்கை விவசாயம் குறித்து இவர் தொலைக்காட்சியில் பேசுவதற்காக தயங்கி தயங்கி தயாராவதும், படப்பிடிப்புக் குழுவில் உள்ள ஒருவன் அனுமதி கேட்காமல் சட்டென்று இவர் சட்டையை தூக்கி மைக்கை செருக முயல, இவர் கூச்சத்துடன் தடுப்பதும் என துவக்க காட்சிகளிலேயே இவரது நடுத்தர வர்க்க குணாதிசயம் சிறப்பாக நிறுவப்பட்டு விடுகிறது.
நண்பனின் சாகசங்களைக் கண்டு தனக்கும் அந்த விருப்பம் மெல்ல மெல்ல எழுவது தொடர்பான தடுமாற்றங்களையும் வழிசல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய குற்றம் மனைவியால் கண்டுபிடிக்கப்பட்டவுடன் குளியலறையில் இருந்து வெளிவராமல் தவிப்பது நல்ல நடிப்பிற்கான சான்று. மனைவியின் நிராகரிப்பை தாங்க முடியாமல் உளைச்சல் அடைவதும் அவள் தற்கொலை செய்து கொள்வாளோ என்ற பதட்டத்துடன் செய்யும் செய்கைகளும் ஜெயராம் எத்தனை சிறந்த, இயல்பான நடிகர் என்பதை நிறுவுகின்றன.
ரன் படத்தில் துள்ளிக் குதித்த துறுதுறு பெண்ணா இவர் என்று ஆச்சரியமூட்டும்படி இருக்கிறார் மீரா ஜாஸ்மின். அளவான, நிறைவான நடிப்பு. தீமையின் ருசியை நண்பனுக்கு அறிமுகப்படுத்த முயலும் மனோஸ் கே ஜெயனின் பெண் விளையாட்டு சாகசங்களும் பின்பு மனைவிக்கு பயந்து நடுங்கும் காட்சிகளும் சுவாரசியமாக உள்ளன.
ஒழுக்க மீறலில் உள்ள ஈர்ப்பு ஒருபுறம் இருந்தாலும் தன்னைப் போலவே மனைவியும் அவ்வாறு யோசித்தால் என்னாகும் என்கிற பதட்டமே பல ஆண்களை கற்பு நிலையில் நிறுத்துகிறதோ என்கிற மறைபொருளையும் இந்தப் படம் உரையாடுவதாக தோன்றுகிறது.
கவர்ச்சி எனும் வணிக அம்சத்தை இதில் திணிப்பதற்கான வாய்ப்பு நிறைய இருந்தாலும் இயக்குநர் அதை செய்வதில்லை. ஏறத்தாழ இதே வகைமையிலான திரைக்கதைதான் பாக்யராஜின் 'சின்ன வீடு'. அதில் எத்தனை கவர்ச்சி செருகப்பட்டிருந்தது என்பதை ஒப்பிட்டால்தான் இது புரியும். நாடகத்தனங்கள் நிறைந்திருந்தாலும் ஒரு நிறைவான அனுபவத்தைத் தந்தது இத்திரைப்படம்.
suresh kannan
No comments:
Post a Comment