தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும் அவாதம் படைப்புகளும் தமிழகத்திலேயே பெரும்பாலும் அறியப்படாத சூழலில் இலங்கை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி இங்குள்ள நிலைமையை சொல்லவே தேவையில்லை. இலக்கிய வாசிப்புள்ள குறுகிய எண்ணிக்கையிலான நபர்கள் உள்ள தமிழக சூழலில் கூட இலங்கை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமோ உரையாடலோ இங்கு அதிகம் நிகழ்வதில்லை. சில திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மட்டுமே தமிழ் சூழலில் இலங்கை எழுத்தாளர்களை துவக்கத்திலிருந்து தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள். வெகுசனப் பரப்பில் சில நல்ல ஈழக் கவிஞர்களை சுஜாதா அறிமுகம் செய்தார். நூல் பரிவர்த்தனைகள் மூலம் இரண்டு உலகங்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்ட பத்மநாப ஐயரின் பங்களிப்பு இதில் குறிப்பிடத்தக்கது. திறனாய்வாளர் கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் காசி ஆனந்தன் போன்று ஒரு சிலரின் பெயர்களும் படைப்புகளும் மட்டுமே இங்கு அறியப்பட்டிருக்கின்றன. போலவே சமகால எழுத்தாளர்களிலும் அ.முத்துலிங்கம் உள்ளிட்ட சில பெயர்கள் மட்டுமே. இதில் பெரும்பாலும் ஈழத்து எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.
இலங்கை எழுத்தாளர்களிடையே ஈழத்து எழுத்தாளர்கள், மலையக எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள், சிங்கள எழுத்தாளர்கள் போன்ற பிரிவுகள் இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் குறித்தான பிரக்ஞை இங்கு இருப்பதாக தெரியவில்லை. தமிழ் படைப்புலகின் இயக்கத்தை இலங்கை எழுத்தாள சமூகம் கூர்ந்து கவனிப்பதைப் போல் இங்கு பெரிதும் நிகழ்வதில்லை என்பது துரதிர்ஷ்டமானது. தமிழில் நூல்களை சிறப்பாக பதிப்பித்த இயக்கங்களுள் முன்னோடியானது 'வாசகர் வட்டம்'. அவற்றின் வெளீடுகள் இங்கு பெருமளவில் வரவேற்கப்படவில்லை என்று கூறும் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, அவற்றுக்கான சில சலுகைத்திட்டங்களை அறிவித்த போது ஈழத்திலுள்ள வாசகர்கள் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள் என்றும் தமிழ் சூழலில் அவை போதிய கவனம் பெறவில்லை என்றும் ஒரு நேர்காணலில் வருந்துகிறார்.
பரவலாக அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர்களின் எண்ணிக்கையே இங்கு சொற்பமாக இருக்க இளம் எழுத்தாளர்களைப் பற்றி ஏதும் இங்கு அறியப்படாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இலங்கைப் பிரச்சினையை வெறும் உணர்வு சார்ந்த அரசியல் கோஷமாக அணுகும் தமிழ் சமூகம் அங்கு நிகழும் கலாசார பரிமாணங்களைப் பற்றிய அறிய ஆர்வம் ஏதும் கொள்வதில்லை. இந்த சூழலில்தான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று எனும் கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து வெளியாகியிருக்கும், ஏஎம்.சாஜித் அஹமட் எழுதிய 'பஞ்சபூதம்' எனும் புதினத்தை வாசிக்க நேர்ந்தது.
***
சில நாட்களுக்கு முன் எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் தங்களின் நூல்களை அனுப்பித்தந்தால் என் வலைப்பதிவில் அதைப் பற்றி எழுதுவேன் என்று அறிவிப்பொன்று தந்திருந்தேன். ஃபேஸ்புக்கின் மூலம் நண்பர் சாஜித் என்னைத் தொடர்பு கொண்டு தான் எழுதிய புதினமொன்றை அனுப்புவதாகவும் அதை வாசித்து எழுதினால் மிகவும் மகிழ்வேன் என்றும் ஒரு தகவல் அனுப்பியிருந்தார். 'அனுப்புங்கள்' என்றேன். சில நாட்களைக் கடந்தும் நூல் வரவில்லை. அவரும் அதை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார். எதிர்பாராத ஒரு நாளில் நூல் வந்து சேர்ந்தது. ஆனால் அது இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து வரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
முன்பே சொல்லியபடி தமிழ் சூழலில் இலங்கை எழுத்தாளர்களைப் பற்றிய கவனமும் அவதானிப்பும் இல்லாத பெரியண்ணன் மனோபாவத்தில் அலட்சியமாக இங்குள்ளவர்கள் இயங்கும் போது அதற்கு மாறாக இலங்கை படைப்பாளிகள் இங்குள்ள சூழலை தொடர்ந்து கவனிக்கின்றனர். அதற்கான உறவுகளை பேண நினைக்கிறார்கள் என்பதற்கு இதை ஒரு சிறிய உதாரணமாக கொள்ளலாம். தமிழ் சூழலில் நான் பரவலாக அறியப்பட்டவனோ, பெரிய எழுத்தாளரோ கூட கிடையாது. ஆனால் இங்குள்ள ஒருவர் தம் நூலை வாசித்து அதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிற சாஜித்தின் எல்லைகளைக் கடந்த ஆர்வம் உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
'பஞ்சபூதம்' - மிகச்சிறிய நூல்தான். சென்னை தாம்பரம் புறநகர் ரயிலில் ஏறினால் கிண்டியைத் தாண்டுவதற்குள் சில நிமிடங்களில் வாசித்து முடிக்கக்கூடிய அளவிலான சிறிய புதினம்தான். ஆனால் இதை செரித்துக் கொள்ள முயல்வதற்குத்தான் அதிக நாட்கள் தேவைப்படும் போலிருக்கிறது. அத்தனை கனமுள்ள எழுத்து.
இதற்கு இடைப்பட்ட நாட்களில் உட்பெட்டியின் வழியாக 'வாசித்தாயிற்றா' என்று நினைவுப்படுத்தும் படியான புன்னகைக்குறிகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார் சாஜித். நானும் பதிலுக்கு சால்ஜாப்பாக பதில் புன்னகைகளை அனுப்பி சமாளித்துக் கொண்டேயிருந்தேனே தவிர உண்மையில் இந்த நூலைப் பற்றி என்ன எழுதுவது என்பது குழப்பமாகவே இருந்தது.
****
'பஞ்சபூதம்' பின்நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட ஒரு சிறிய புதினம். குறியீட்டு மொழியால் இயங்கும் ஒரு கனவுப் பயணம். இதையொரு மெட்டா பிக்ஷன் எனலாம். 'முதல் மூச்சு' 'இரண்டாம் மூச்சு' என்று துவங்கி பத்து மூச்சுகள் பல்வேறு வகையான பத்து அத்தியாயங்களாக விரிகின்றன. வாசித்து முடிப்பதற்குள் நமக்குத்தான் மூச்சு முட்டுகிறது. இலங்கையில் ஒரு 'மினி' கோணங்கி இருக்கிறார் என்பதே நாம் இதிலிருந்து அறிய வேண்டிய செய்தி.
வாசகர்களுக்கு எவ்வித வேலையும் வைக்காமல் 'ஸ்பூன் ஃபீடிங்' பாணியில் எழுதுவது ஒரு வகை. பொதுவாக வெகுசன எழுத்துமுறை இவ்வகையானது. வாசகனின் நுண்ணுணர்வு சார்ந்த தகுதியை மனதில் கொண்டு இடைவெளிகளை அவன் நிரப்பிக் கொள்வான் என்கிற பரஸ்பர மரியாதையில் எழுதப்படுவது ஒரு வகை. பெரும்பாலான நல்ல நவீன இலக்கியங்கள் உருவாவது இந்த முறையில். ஆனால் வாசகனையும் தம்முடைய எழுத்துக்குள் இழுத்துப் போடுவது, அந்தப் பயணத்தில் அவனுடன் உரையாடுவது, எழுத்தின் ஒரு பங்காக, பாத்திரமாக வாசகனையும் இயங்க வைப்பது போன்ற முயற்சிகளை நிகழ்த்துவது நவீன காலக்கட்டத்திற்கு பிந்தைய எழுத்து வடிவம்.
'எனதன்பின் வாசகனனே, இப்பஞ்சபூதப் பிரதியினை வாசிப்பதற்கு முன் நீ இருக்கும் இடத்தினை ஒருகணம் சுற்றிப்பார்.. என்னால் ஏவிவிடப்பட்ட ஆத்மாக்கள் உனது கழுத்திலும், கண்களிலும், உதடுகளிலும் உயிர்ப்பிக்கத் தொடங்குகின்றன..' என்கிற முன்குறிப்புடன் வாசகனை தயார்படுத்தும் நூலாசிரியர், பிரதி இயங்கும் ஒரு கணத்தில் வாசகனையும் அதற்குள் இழுத்துச் செல்கிறார்.
அரசவையில் இசை பாட வந்திருக்கும் ஒரு கலைஞன் தன் இசையால் ஏற்படும் விபரீதங்கள் நிகழாமலிருக்க வேண்டுமானால் இந்த நூலை எழுதும் சாஜித்தை கொல்ல வேண்டும் என்கிற விநோதமான முறையீட்டை முன் வைக்கிறான். அவனைக் கொன்று விட்டால் 'மன்னனாகிய என்னைப் பற்றியும் நிகழவிருக்கிற உன் இசையைப் பற்றியும் யார் எழுதுவார்? என்பதற்கு மன்னர் கேட்க 'அதெல்லாம் வேறு எழுத்தாளர்களை வைத்து எழுதிக் கொள்ளலாம். இவனைக் கொல்ல உடனே வீரர்களை அனுப்பு' என்கிறான். இவை அனைத்தும் நிகழ்வது கடலுக்குள். அதற்கொரு காரணமும் இருக்கிறது.
இந்தப் பிரதியை எழுதிக் கொண்டிருக்கும் சாஜித்தின் காதுகளில் வீரர்களின் துரத்தும் ஓசை விழுகிறது. அங்கிருந்து தப்பித்து மணற்பரப்பிற்கு ஓடுகிறார். இவ்வாறாக சிறார்களின் ஃபேண்டசி பாணியில் எழுதப்பட்டிருந்த புதினமாக மேற்பார்வைக்கு இருந்தாலும் தனது கூர்மையான சொற்களால் இதையொரு அரசியல் விமர்சன பிரதியாகவும் மாற்றியிருக்கிறார் சாஜித்.
சிங்கள பேரினவாதத்தின் கொடுமைகளாால் நசுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்து அதனுடன் போரிட்ட புலிகள், இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் மீது செலுத்திய வன்முறைகளின் மூலம் தாமும் இனவாத பயங்கரத்தில், இனச்சுத்திகரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டது ஒரு வரலாற்று முரண். ஹிட்லரின் வெறுப்பு பிரச்சாரத்தினால் நாஜிகளால் உலகெங்கிலும் துரத்தப்பட்டுபல்வேறு வன்முறைகளை சந்தித்த யூத சமூகம், தனக்கான ஒரு பிரதேசத்தை கட்டமைத்துக் கொண்ட பின் பாலஸ்தீனியர்களின் மீது நிகழ்த்தும் வன்முறையைப் போன்றது இது. சாஜித் உருவாக்கிய இந்த குறியீட்டு புதினத்தில் புலிகள் பற்றிய குறிப்புகளும் மிகப் பூடகமான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஓரு கனவுப்பிரதேசத்திற்குள் பயணித்த ஒரு மாயாஜால உணர்வை இந்தப் புதினம் தருகிறது. தலையை உலுக்கிக் கொண்டே நிமிர்ந்தாலும் இதன் சொற்கள் நம் அகத்திற்குள் சுழன்றடித்துக் கொண்டே இருக்கின்றன.
***
பஞ்சபூதம் (நாவல்) -ஏ.எம்.சாஜித் அஹமட்
பெருவெளி பதிப்பகம்
31C, உபதபாலக வீதி, பதுர்நகர், அக்கரைப்பற்று,
அக்கரைப்பற்று 01, இலங்கை
ஆசிரியர் .பேஸ்புக் பக்கம்: sajeeth amsajeeth

suresh kannan
No comments:
Post a Comment