Sunday, July 03, 2016

முகநூல் குறிப்புகள் - 5

இயக்குநர் முத்தைய்யா எடுத்த சமீபத்திய திரைப்படம் 'மருது' முந்தைய திரைப்படம் குட்டிபுலி.

இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப் பிடிப்பவை. அவற்றை பெருமையாக முன்வைப்பவை. மிகவும் ஆபத்தான போக்கை சமூகத்தில் விதைத்துச் செல்பவை. இவற்றின் சாதிய அடையாளங்கள் அது குறித்த பெருமைகளுடன் இந்தப் படங்களில் துல்லியமாகவே சுட்டிக்காட்டப்படுகின்றன. அது குறித்த கூச்சம் அல்லது சமூக உணர்வு ஏதும் துளி கூட இயக்குநருக்கு இருப்பதாக தெரியவில்லை.

முத்தைய்யா போன்ற இயக்குநர்கள் உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும்.

தேவர்மகன் போன்ற படைப்பின் மையத்தை விளங்கிக் கொள்ளாதவர்கள் அவற்றை கடுமையான எதிர்க்கும் ஒருபகுதியை கூட அதை விட அதிகமான ஆபத்தை உற்பத்தி செய்யும் இம்மாதிரியான பயங்கரவாத படைப்புகளை அதிகம் கண்டுகொள்வதில்லை என்பது சோகம்.

இது போன்ற படைப்புகளை தமிழக மக்கள் ஆதரிக்கவே கூடாது.


***


இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'தரமணி' திரைப்படத்தைப் பற்றி பல சினிமா செய்திகளை வாசித்திருந்தாலும் 'ஐ.டி. இளைஞர்களைப் பற்றிய கதை' என்பதை தவிர எந்தவொரு பிரத்யேக அபிப்ராயமும் இதுவரை என்னுள் உருவாகவில்லை.

ஆனால் இதன் டீஸரை இன்று கவனித்தவுடன் துல்லியமாக ஒரு சித்திரம் உருவாகத் துவங்கியிருக்கிறது. அதுவே இத்திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஆண் -பெண் உறவுச்சிக்கல்கள் எத்தனை காலத்திற்கு பேசினாலும் இன்னமும் தீராதது. ஓர் பெண்ணின் அகத்தை அதன் விசித்திரங்களை, விநோத நியாயங்களை முழுமையாகப் புரிந்து கொண்ட ஆண் இன்னமும் பிறக்கவேயில்லை. பிறக்கவும் முடியாது.

நிலவுடமை சமூக மதிப்பீடுகள் சார்ந்து பெண்ணின் மீது ஆண் உருவாக்கிய கண்காணிப்பும் கலாசாரக் காவலும் இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது. இந்தக் கண்காணிப்பு கலாசாரத்தின் புற அடையாளங்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் அகத்தன்மை அப்படியே உறைந்திருக்கிறது. ஒரு சமகால, நவீன இளைஞனின் மூலம் இந்தப் புதிர்த்தன்மையை உணர்த்துகிறார் இயக்குநர்.

"உனக்கு மட்டும் ஃபேஸ்புக்ல ஏன் அத்தனை பிரெண்ட்ஸ் என்கிற இன்றைய ஜீன்ஸ் இளைஞன் கேள்வியும் தன் மனைவியை வெறிக்க சைட் அடிக்கும் முரட்டு இளைஞனை கண்டிக்கத் துணிவில்லாமல் "ஏண்டி அவன் உன்னையே வெறிக்கிறான்" என்று மனைவியையே கண்டித்து உதைக்கும் முந்தைய தலைமுறை வேட்டி இளைஞனும் மனதளவில் அப்படியேதான் இருக்கிறார்கள்.

தமிழ் நவீன இலக்கியத்தில் ஆண்-பெண் உறவுச்சிக்கல்களின் மீதான நவீன மனம் இயங்கும் முறையை மிக நுட்பமாகவும் ஆழமாகவும் தேர்ந்த மொழியில் எழுதியவர் என்று ஆதவனைச் சொல்லுவேன். அவர் படைப்புலகத்தில் மிக முக்கியமான அம்சம் இது.

போலவே நவீன தமிழ் சினிமாவில் மிகச் சிறப்பாக கையாள்பவர் செல்வராகவன்.

இந்தப் புதிய அடையாளத்திற்குள் ராம் பயணிப்பது உற்சாகத்தை தருகிறது. இயக்குநர் ராமை, மிகையாக பாராட்டுபவர்கள் அல்லது கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் என்று இருதுருவ ரசிக மனோபாவத்தையே காண்கிறேன். இது ஏன் என்பது தெரியவில்லை. அவருடைய தமிழ் தேசிய அடையாளம் ஒரு காரணமாக இருக்கலாமா? அவருடைய 'தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு ஒரு சாராரிடமிருந்து எழுந்த மூர்க்கமான எதிர்ப்பு உண்மையில் என்னை திகைக்க வைத்தது.

அவருடைய திரைப்படங்கள் முன்வைக்கும் கருத்துகள், சமூக மதி்ப்பீடுகள் குறித்து நாம் விவாதிக்கலாம், உரையாடலமே தவிர ராம் நிராகரிக்கக்கூடிய இயக்குநர் அல்ல. திரைமொழியின் இலக்கணமும் நுண்மையும் அறிந்த மிக அரிதான தமிழ் இயக்குநர்களுள் ராம் ஒருவர் என்கிற வகையில் அவருடைய தரமணி திரைப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

பொசசிவ்னஸ் என்பது ஒருவகையில் அன்பை அடித்தளமாகக் கொண்டது என்றாலும் அதுவே மிகையாகப் போகும் போது மனநோயாக மாறி விடுகிறது. நாம் அன்பை செலுத்துபவர்கள் மீது அதற்கு மாறாக வன்மத்தையும் வெறுப்பையும் பகைமையையும் கொள்ளும் எதிர்திசைக்கு இட்டுச் செல்கிறது.

தனிப்பட்ட வகையில் நானும் அந்தக் குறைபாட்டிற்குள் விழுந்தவன் என்கிற வகையில் இந்த டீஸரில் வரும் இளைஞனை நெருக்கமாக உணர்கிறேன். இதன் எதிர்முனையில் இயங்கும் ஆண்ட்ரியா பாத்திரமும் திறமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தன்மதிப்பும், நுண்ணுணர்வும் உள்ள சமகால இளம் பெண் இப்படித்தான் இந்த அவமதிப்பை எதிரொலிப்பாள். இதையும் என் தனிப்பட்ட அனுபவத்திலேயே சொல்கிறேன்.

அந்த வகையில் சமகால நவீன இளைஞர்களின் அகவுலகத்தை அதன் சிக்கல்களை இத்திரைப்படம் மிகச் சிறப்பாக பிரதிபலிக்கும், சித்தரிக்கும் என நம்புகிறேன்.


***


இரா.முருகனின் நூல் வெளியீட்டு விழாவில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். நான் சென்ற போது கிரேசி மோகன் பேசிக் கொண்டிருந்தார். அரங்கெங்கும் சிரிப்பலை. நூல்களின் ஓவியங்களை வரைந்த ஒரு பெண்மணியும் இன்னொருவரும் பேசினார்கள். ஒரே ஊதுபத்தி, விபூதி மணம். சாரு சொன்னது போல் சட்டென்று ஒரு ஆன்மீக மேடை போல தோற்றம். சுடச்சுட வெண் பொங்கல் கூட தருவார்கள் என்று தோன்றியது.

சாரு பேச ஆரம்பித்தவுடன் கூட்டம் சற்று தளர்ந்து சிரிக்கத் துவங்கியது. அவர் என்ன பேசினார் என்று ஆவலடைய வேண்டாம். அவர் கலந்து கொண்ட வேறு எந்த நிகழ்வின் வீடியோவையாவது பார்த்துக் கொள்ளுங்கள். அதேதான். நோபல் பரிசு. ஞான பீட பரிசு. அசோகமித்திரன்.. இங்கு எழுத்தாளர்கள் கவனிக்கப்படுவதில்லை. என்று இவருடையது வேறு வகை காலட்சேபம்.

கிளம்பி வந்து விட்டேன். உரையின் துவக்கத்தில் முருகனின் 'மனை' குறுநாவல் குறித்து ஒரு வரி பேசியது விதிவிலக்கு.

()

இரா.முருகனை ராயர் காப்பி கிளப் மடற்குழும காலத்திலிருந்து பழக்கம். இலக்கியவாதிகளை கிண்டலடித்து நான் போட்ட ஒரு மடலுக்கு சட்டென்று கோபித்துக் கொண்டார். இலக்கியத்தின் பால் உண்மையான அக்கறை கொண்டவரின் கோபம் அது.

அதற்கும் முன்னால் இந்தியா டுடேவில் வெளியான அவருடைய சிறுகதையை வாசித்திருக்கிறேன். அலுவலகத்தின் வரவேற்பறையில் வாடிக்கையாளனின் சிலையை வடிவமைத்திருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். சிலைக்கும் அங்கு உழைப்பவனுக்கும் சட்டென்று வித்தியாசமில்லை என்பது போல் செல்லும் சிறுகதை என ஞாபகம்.

அதற்கும் முன்பாக வாத்யார் சுஜாதா மூலம்தான் முருகனின் பெயரை அறிந்தேன். 'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்' என்கிற அவரின் புகழ்பெற்ற கவிதையை சுஜாதா அடையாளங்காட்டி சிலாகித்தது இன்னமும் நினைவிருக்கிறது.

முருகன் சுஜாதாவின் நீட்சி என்பதில் ஒருபகுதி உண்மையிருக்கிறது. முதலில் கவிதை, சிறுகதை, குறுநாவல், தொடர்கதை, நாவல், சயின்ஸ் பிக்ஷன், கணிப்பொறிவியல் தொடர்பான படிப்பு, அது தொடர்பான சுவாரசியமான நுட்பக் கட்டுரைகள், ஹைக்கூ, சினிமா வசனம், கமல்ஹாசன் என்று இரண்டு பேருக்கும் சில பொதுவான அடையாளங்கள் உள்ளன. ஆனால் இப்படி பொதுப்படையாகவும் முருகனை வகைப்படுத்தி விட முடியாது.

முருகனின் எழுத்து மிகவும் பிரத்யேகமானது. பதினெட்டாம் நூற்றாண்டு மனிதர்களின் புராதன வாசனையில் கூட அவர் உரைநடை கச்சிதமாகப் புகுந்து கொள்ளும். மாய யதார்த்தம் என்கிற இலக்கிய பாணியை தமிழில் நிறைய பயன்படுத்தி எழுதியவர். சுவாரசியம் என்பதற்கு உத்தரவாதம் இருக்கும் அதே சமயத்தில் உள்ளடக்கத்திலும் எவ்வித சமரசமும் இருக்காது. தமிழின் இடைநிலை எழுத்தாளர்களில் இரா.முருகன் மிக முக்கியமானவர். என்னவொன்று குழாயடிச் சண்டைகளில் ஈடுபடும் ஆர்வமும் சாமர்த்தியமும் இல்லாமிருப்பதால் குறிப்பிட்ட வாசக வட்டத்தை தவிர சமகால தலைமுறைக்கு அதிகம் அறியப்படாமலிருக்கிறார்.

இன்று வெளியிடப்பட்ட அவரது அனைத்து நூல்களும் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். ராயர் காப்பி கிளப் கல்லாவில் உட்கார்ந்த அதே காலக்கட்ட தோற்றத்திலேயே எப்படி இன்றும் இருக்கிறார் என்பது இலக்கியத்தை தாண்டிய உப ஆச்சரியம்.


***


ஜெ பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை குறித்து இணைய திமுகவினர், அனுதாபிகள் கண்ணீர் கசிந்த போது சற்று நகைச்சுவையாகவே இருந்தது.

காதுகுத்து விழாவில் பெரியப்பாவை 'வாங்க' என்று கண்டு கொள்ளாததால் அது 'இனி உன் வூட்ல கை நெனப்பனா -னனு என்று தொடங்கி வெட்டுக்குத்து வரை செல்லும் உள்ளூர் நிகழ்வும் அரசாங்கத்தின் தற்செயலான அல்லது உள்நோக்கமுடைய இயந்திர விதிகளின் வழியாக இயங்கும் ப்ரோட்டாகால்களும் ஒன்று என்பது போலவா அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

கா விடும் பள்ளிப்பிள்ளைகளை விட கேவலமான சிறுபிள்ளைத்தனத்துடன் நடந்து கொள்ளும் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி நமக்கு பழகி விட்டது.

பின்னிருக்கையில் அமர்வது அத்தனை அகெளரவமானதா என்ன?

ஒரு சிறிய இலக்கிய நிகழ்வுதான். எடிட்டர் லெனின்தான் தலைமை. ஆனால் அவர் பாட்டிற்கு உள்ளே நுழைந்து ஒரு துணி தோள்பையுடன் கடைசி இருக்கையில் கோயிஞ்சாமி மாதிரி அமர்ந்து கொண்டார். வேர்க்கடலையை ஊதி ஊதி சிவாஜி ஒரு பாட்டில் நடந்து சொல்வாரே, அப்படியொரு ஞானச் சிரிப்பு. அப்புறம் முன்னே அழைத்துக் கொண்டார்கள்.

ஸ்டாலினும் லெனினும் ஒன்றா என்று கேட்காதீர்கள். ரஷ்யாவில் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள்தான். :)

இது ஏதோ இணையத்தில் கண்கலங்கி வீறாப்பு பேசும் விஷயம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது இப்போது ஜெ. அரசு அறிக்கை விடும் போதுதான் இந்த அளவிற்கு பெரிதானது என்று தெரிந்தது.

அம்மா எவரையாவது திரும்பிப் பார்க்க கழுத்தை திருப்புவதையே பெரிய சாதனையாக முன்நிறுத்தும் அதிமுக உபிக்களும் அதற்காக கண்கசியும் தமிழக அப்பாவிகளும் நிறைந்திருக்கும் சூழலில் ஜெ இப்படியொரு நேரடி சமாதான அறிக்கை விட்டிருப்பது நிச்சயம் பெரும் மாற்றம்தான்.

ஆனால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது அவரின் பெருந்தன்மை மட்டுமல்ல. தந்தையால் ஏற்படுத்த முடியாத இந்த மாற்றத்தைக் கூட ஏற்படுத்திய மகனின் இணக்கமான அணுகுமுறைதான்.

நல்ல துவக்கம். இனியாவது முகம் பார்த்து சிரியுங்கள் தமிழக அரசியல்வாதிகளே.


***


ஏனோ மனம் சோர்வாக, படபடப்பாக இருந்தது. இது போன்ற சமயங்களில் இலகுவான எழுத்து, திரைப்படம், நகைச்சுவைக் காட்சி என்று அதைக் கடந்து வர முயல்வேன். பல சமயங்களில் சுஜாதாதான் உதவுவார்.

இப்போது Srimanthudu தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியை (?!) ரசித்துப் பார்த்து சிரித்தேன்.

சமீபமாகவே மகேஷ்பாபுவை அதிகம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. மற்ற தெலுங்கு நடிகர்கள் போல .. ரேய்.. என்று கண்சிவந்து உரத்த குரலில் பஞ்ச் பேசாமல் .. அந்த சொட்டைத் தலையனைப் பாரேன்.. காமெடியா இல்ல.. என்று காதில் ரகசியம் பேசும் விதத்தில் பேசும் அவரது நிதானமும் ஓர் அழகுதான்.

ஒண்டு குடித்தன வாழ்க்கையில் எவர் வீட்டில் டிவி இருக்கிறதோ அங்கு அடித்துப்பிடித்து ஓடி இடம் பிடித்து டைட்டில் காட்சிகள் ஓடும் போதே 'சண்டையமைப்பு' என்கிற வார்த்தை வருகிறதா என்று ஆவலுடன் பார்த்து இருந்தால் 'அப்பாடா' என்று மகிழ்ந்து இல்லையென்றால் இடம் போய் விடுமோ என்கிற பயத்தில் எழுந்து கொள்ளாமல் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மூக்கு விடைத்த வசனங்களை் வெறுப்பாக கேட்டு, இடையில் தூங்கிப் போய்..

சண்டைக்காட்சிகள் என்றால் இளம் வயதில் அத்தனை விருப்பமாய் இருந்தது. ஜெய்சங்கர் போடும் சண்டைகளைக் கூட வியந்த அப்பாவித்தனம் கொண்ட வயது. இப்போதும்தான். ஆனால் அது எந்தவிதத்திலாவது வித்தியாசமாக இருக்க வேண்டும்.

ஆனால் பல சமகால தமிழ் திரைப்படங்களில் அது செத்தவன் கையில் வெத்தலை பாக்கு வைப்பது போல அத்தனை சொரணையற்று 'வைத்துத் தொலைக்க வேண்டுமே' என்கிற சம்பிரதாயத்துடன் இருக்கும்.

சண்டைக்காட்சிகளுக்கு மிக முக்கியமே அதற்கான முன்னோட்டம்தான். நாயகன் அவர்களை அடித்து துவைக்க வேண்டும் எ்னகிற வெறி நமக்கே ஏற வேண்டும். அப்படியில்லையெனில் வீண். அவ்வாறான வெறி எனக்கு வந்தது சில சமயங்களில்தான்.

சுவாரசியமாகவும் வித்தியாசமானதாகவும் சண்டைக்காட்சிகளை அமைப்பது என்பது அந்தந்த மாஸ்டர்களுக்கு நிச்சயம் சவாலான விஷயம்தான். அவர்களும்தான் எத்தனை முறைதான் செட் போட்ட மார்க்கெட்டில் தக்காளிக் கூடைகளை தள்ளி விழுவார்கள்?

இந்தக் காட்சியைப் பாருங்கள்.

அர்னால்ட்.. (அதற்கப்புறம் ஏதோ வருமே) போல அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கஞ்சி போட்ட சட்டை போல விறைப்புடன் ஆனால் ஸ்டைலிஷாக சண்டை போடும் இந்த மகேஷ்பாபுவையும் இதை வடிவமைத்த மாஸ்டரையும்அப்படி பிடித்துப் போய் விட்டது. செயற்கைதான். எம்ஜிஆர் மான்கொம்பு சண்டையெல்லாம் பார்த்து பழகிய கலாசாரம்தானே நமது?

(எம்ஜிஆருக்கு உண்மையாகவே மான்கொம்பு சண்டை தெரியுமாமே? மான்களைத்தான் அவருக்கு நன்றாகத் தெரியும் என்று நினைத்திருந்தேன். அவர் சம்பந்தப்பட்ட பக்திக் கட்டுரைகளில் எப்படியாவது இப்படியொரு உட்டாலக்கடியான புல்லரிக்கும் தகவல்கள் வந்து விழுந்து விடுகின்றன)

உலக சினிமா கட்டுரைகளும் எழுதிக் கொண்டு தெலுங்கு மசாலாக்களையும் எப்படி பார்க்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டு டென்ஷன் செய்யாதீர்கள். எல்லோருக்குமே ஆல்டர் ஈகோ என்கிற இன்னொரு மனமும் ரசனையும் இருக்கிறது. சிலருக்கு நாலைந்து கூட.

நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்வேன். சிலர் மகேஷ்பாபு போலவே விறைப்பாக நடந்து செல்வார்கள். அவ்வளவுதான் விஷயம்.


***

சமீபத்தில் வெளிவந்த நூல் ஒன்றிற்கு 'நந்தனின் பிள்ளைகள்' என்ற தலைப்பு சூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். ஒரு பார்வைக்கு பொருத்தமான, கவர்ச்சிகரமான தலைப்பு போல் தோன்றியது.

ஆனால் அதன் பின்னால் உள்ள சாதிஅரசியலையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. 'பறையர்களின் வரலாறு' என்று பின்னால் வருகிற குறிப்பிற்கு ஓர் அலங்கரிக்கப்பட்ட முன்னொட்டாக இந்த தலைப்பு - நந்தனின் பிள்ளைகள். ஏன் இந்த சுத்திகரிக்கப்பட்ட தலைப்பு?

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அதீதமான சிவ பக்தியினால் இறைவனைக் காண மிகவும் விரும்பி ஆலயத்திற்குச் சென்று உள்ளே புக முடியாமல் மனம் புழுங்க சிவன் தோன்றி செய்த உபதேசத்தின் பெயரில் தீயில் புகுந்து பிராமணரான பின்னர் நாயன்மார்களில் ஒன்றாரானார் என்பது புராண வரலாறு.

எனில் நந்தனின் பிள்ளைகளும் சைவ சமய விசுவாசத்துடன் தீயில் புகுந்து தம்மை சுத்தப்படுத்திக் கொண்டால்தான் நந்தனின் நீட்சிகளாக மாற முடியுமா? இன்றும் கூட சைவ ஆலயங்களில் தலித் சமூகத்தினர் நுழைய முடியாமல் அதற்கு போராட்டம் நடத்தும் சூழல்தானே நீடிக்கிறது?

நூலின் தலைப்பை பூசி மெழுகாமல் 'பறையர்களின் வரலாறு' என்று நேரடியாக வைக்கலாமே?

இது என் சந்தேகம். நண்பர்கள் தெளிவுப்படுத்தலாம்.


***


கே டிவியில் கரு.பழனியப்பன் இயக்கிய 'பார்த்திபன் கனவு' சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன அபாரமான திரைக்கதை. தான் பார்த்து பார்த்து ஆசைப்பட்ட, ஆனால் பேசிப் பழகாத ஒரு பெண், அதிசயமாக பெற்றோரால் நிச்சயிக்கப்படும் போது, அட!பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக இருக்கிறதே என்று மனம் மகிழ்ந்து திருமணம் செய்து கொள்கிறான் அந்த இளைஞன்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் தெரிகிறது, தன் மனைவி தான் காதலித்த பெண்ணின் தோற்ற ஒற்றுமையில் இருப்பவர் என்று, பிறகென்ன, மண வாழ்க்கை இவனுக்கு கசந்து போகிறது. தற்செயலாக இவன் முன்னர் விரும்பிய பெண்ணே, இவன் வாழ்க்கையில் வருகிறாள். அதனால் எழும் சிக்கல்களுக்குள் கதை நகர்கிறது. பிறகு ஒரு நல்ல நிறைவு.

இப்படியொரு நாட் தோன்றியவுடனே ஒரு படைப்பாளிக்கு எப்படியிருக்கும்? உணவு பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை கண்டவுடன் 'இதை உண்ணப் போகிறோம்' என்கிற நிறைவுடனும் மகிழ்ச்சியடனும் அமர்வார்கள் அல்லவா? அவ்வாறே ஒரு படைப்பாளிக்கு ஒரு நல்ல கருப்பொருள் மாட்டினால் மிக சந்தோஷமாக அதை விரிவு படுத்திக் கொண்டேயிருப்பான் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாான்.. சமயங்களில் தூங்கக் கூட முடியாது. உணவு உண்ண முடியாது. அந்தச் சமயத்தில் யாராவது தொந்தரவு செய்தால் பயங்கர கோபம் வரும்.

என் இளம் வயதில் நண்பன் ஒருவன் அவனுடைய கல்லூரிக்காக நாடகம் எழுதச் சொல்லிக் கேட்டான்

(முகநூலில் இருக்கிறான். tag செய்கிறேன். Ravi Chandra Jiddu Jrc ரவி, நினைவிருக்கிறதா? :)

அப்போதைய வயதில் என்ன எழுத வரும்? பார்த்துக் களித்த கிரேசி மோகன், சேகர் வகையறா நகைச்சுவை நாடகங்கள்தான். ஒரு போலி டாக்டரைப் பற்றிய நாடகம். அவனிடம் பேசி விட்டு இரவு வீட்டில் சென்று படுக்கிறேன். மனம் அதைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறது. ஓர் அவுட்லைன் உருவாகியது.. யோசிக்க யோசிக்க நகைச்சுவை துணுக்குகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.என்னால் படுக்கவே முடியவில்லை. உடனே எழுந்து ரஃப் நோட்டை எடுத்து மனம் சென்ற படி அதை எழுதிக் கொண்டேயிருந்தேன்.

எதற்காக இதைச் சொல்ல வருகிறேன் என்றால் புதுமுக இயக்குநர்கள் தங்கள் முதல் படங்களை பல வருடங்களாக அப்படி யோசித்து யோசித்து இழைப்பார்கள். அதன் உண்மையான உழைப்பு ஸ்கிரிப்டில் தெரியும்.

அவர்களைப் பற்றிய எவ்வித அறிமுகமும் இல்லாமல் இம்மாதிரியான இயக்குநர்களின் முதல் படங்களை திரையரங்கில் பார்க்கும் போது மனம் ஆச்சரியத்தில் பொங்கி வழியும். கரு.பழனியப்பனின் இந்த படம், பாார்த்திபனின் புதிய பாதை, சுசி கணேசனின் .ஃபைவ் ஸ்டார், வெற்றிமாறனின் 'பொல்லாதவன்" ' ராஜகுமாரனின் 'நீ வருவாய் என' .. இப்படியொரு பட்டியலைச் சொல்ல முடியும்.

ஆனால் இவர்கள் அடுத்து சில படங்களிலேயே காணாமல் அல்லது நீர்த்துப் போய் விடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் இவர்கள் சொந்தமாகவே யோசிக்க வேண்டும் என்பது கூட இல்லை. நல்ல கதாசிரியர்களை, திரைக்கதையாசிரியர்களை அழைத்துக் கொண்டால் கூட போதும். ஷங்கர் போன்றவர்கள் இந்த விஷயத்தில் கில்லியாக இருக்கிறார்கள்.

பழைய படத்தின் தலைப்பைக் கொண்ட இந்தப் படத்தை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இது இயக்குநரின் சொந்த திரைக்கதையாக இருக்குமா? அல்லது வேறு எந்த படத்திலிருந்தாவது இன்ஸ்பையர் ஆனதா என்று வேறு தோன்றி விட்டது. தமிழ் என்றால் மட்டம் என்கிற தாழ்வுணர்வினால் அல்ல. சிலர் அப்படி கெடுத்து வைத்திருக்கிறார்கள்.


***


இன்று புறநகர் ரயிலில் வந்து கொண்டிருக்கும் போது பிரமிளின் இலக்கியக்கட்டுரைகள் தொகுதி நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். (சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள் புதினத்தை அடித்து துவம்சம் செய்திருக்கிறார் பிரமிள். கட்டுரையின் தலைப்பு: புதிய புட்டியில் பழைய புளுகு).

பின்னாலிலிருந்து எவருடைய மொபைலில் இருந்தோ இளையராஜாவின் சில அற்புதமான 80-களின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

இதை சொல்வதற்காக மன்னிக்கவும் "வேண்டுமென்றே இழுக்கிறான்' என்று ராஜா ரசிகர்கள் கோபிக்க வேண்டாம். இளையராஜாவின் அற்புதமான இசை எனும் போதே அது எண்பதுகளின் இசை என்பதை மனது தன்னிச்சையான பின்னொட்டாக இணைத்துக் கொள்கிறது.

அந்தப் பாடல்களின் வரிசையில் குறிப்பாக 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'யில் 'உச்சி வகுந்தெடுத்து'. அதன் இடையிசையில் ஓர் அற்புதமான தாலாட்டு இசை பெண் குரலில் ஹம்மிங்காக வரும். பாடிப்பார்த்தால் சற்று சிரமமானது. தொடர்ந்து வரும் ஷெனாயின் எளிமையான ஆனால் அபாரமான இசைத்துணுக்கும்.

நான் சிரமப்பட்டு நூலில் கவனம் செலுத்த முயன்றாலும் கவனம் தன்னிச்சையாக இசையின் மீதே சென்றது. பிரமிளின் உரைநடையை வாசிப்பதே ஒரு சவால். சில வாக்கியங்களை இரண்டு மூன்று முறை வாசித்தால் கூட ஜீரணிப்பது கடினம்.

புத்தகத்திற்கும் இசைக்கும் இடையில் தத்தளித்தேன். நல்ல பசியுடன் ஒரு விருந்திற்கு சென்றவன், அங்கு பரிமாறப்பட்டிருக்கும் விதம் விதமான உணவு வகைகளை கண்ணால் பார்த்ததிலேயே மனம் நிறைந்து அதனால் சரியாக உண்ண முடியாமல் ஒரு நிறைவின்மையை அடைவான் அல்லவா, அப்படி ஆகி விட்டது இந்த காலைப் பொழுது.


***


அபிலாஷ் எழுதிய இந்தப் பதிவில் எழுப்பப்பட்ட கேள்வி எனக்கும் கூட தோன்றியிருக்கிறது. எப்படி சில எழுத்தாளர்களால் அவர்கள் எந்தக் காலத்திலோ நுகர்ந்த படைப்புகளைக் கூட எப்படி பசுமையாக நினைவில் வைத்திருக்கிற முடிகிறது? சமீபத்திய பதிவுகளிலும் துல்லியமாக நினைவிற்கு கொண்டு வர முடிகிறது?

அபிலாஷ் விளக்கியதை தவிர்த்து என்னளவில் நானும் சில விஷயங்களை சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சிறிய பாதை, இரண்டு பெரிய பாதை. இரண்டு பாதைகளுக்குமே சற்று முன் தயாரிப்பும் உழைப்பும் வேண்டும். சிறிய பாதைக்கு நிறையவும் பெரிய பாதைக்கு சுமாராகவும். ஏனெனில் அதில் உழைப்பு முன்னமே செலுத்தப்பட்டிருப்பதால்.

முதலில் சிறிய பாதை

பேயோன் எழுதிய பழைய ட்வீட் ஒன்று நினைவிற்கு வருகிறது. (நினைவிலிருந்து)

இலியாசோ பினாகோவின் திரைப்படம் நேற்று பார்த்தேன். யாரு பெத்த பிள்ளையோ. இப்போது1982--லேயே இதைப் பார்த்ததாக கட்டுரை எழுத வேண்டும்'

சிறிய பாதை என்பது இந்தக் கிண்டலில் சொல்லப்படுவதைப் போல பெயர்களை மட்டுமே உதிர்த்துச் செல்வது. அல்லது நாவலின், திரைப்படத்தின் கதைச்சுருக்கத்தை வாசித்து விட்டு அதனை முன்னமே வாசித்து ஆராய்ந்திருப்பதைப் போன்ற உணர்வுடன் ஒரு பாவ்லா.

இலக்கியத்திற்குள் அப்போதுதான் நுழைகிற எளிய வாசகன் நிச்சயம் இந்த ஜோடனையில் மயங்கி விழுவான். ஆனால் சம்பந்தப்பட்ட படைப்பை ஊன்றி படித்திருந்தவர்கள் இந்தப் போலிகளை உடனே அடையாளங் கண்டு கொள்வார்கள்.

இரண்டாவது பெரிய பாதை.

நிச்சயம் இதற்கான நிறைய உழைப்பும் நுண்ணுணர்வும் வேண்டும். உண்மையாகவே அந்தப் படைப்பை நீங்கள் வெவ்வேறு இடைவெளிகளில் ஊன்றி வாசித்திருக்க வேண்டும். அதனுடன் வாழ்ந்திருக்க வேண்டும். என்றாலும் கூட சில வருடங்கள் கழித்து அதை மேற்கோள் காட்ட விரும்பினால் சில விஷயங்கள் மங்கலாகத்தான் தெரியும். மேற்கோள் காட்டுவதற்கு முன்னால் அவசரம் அவசரமாக மீள்வாசிப்பு செய்தாலும் அதன் ஒட்டுமொத்த அனுபவத்தை ஓரளவிற்கு நினைவிற்கு கொண்டு வரலாமே ஒழிய அதன் நுண்தகவல்களை, உணர்வுகளை நினைவிலிருந்து கொண்டு வருவது கடினம்.

இதற்கான ஒரு வழி இருக்கிறது.

அது நீங்கள் எந்தவொரு படைப்பை வாசித்தாலும், திரைப்படத்தைப் பார்த்தாலும் அவற்றை பற்றிய உங்களின் எதிர்வினையை, அனுபவத்தை ஒரு சிறிய குறிப்பாக வரிசைப் படுத்தி எழுதி வைத்து விட வேண்டும். சோம்பேறித்தனமல்லாமல் உடனுக்குடன் செய்தாக வேண்டும். அடுத்தடுத்த வாசிப்புகளில் இதை இன்னமும் மேம்படுத்தி வைத்துக் கொள்ளலாம்..

பிறகு எத்தனை வருடங்கள் கழித்து இந்த படைப்பை மீள்நினைவு செய்ய வேண்டியிருந்தாலும், இந்தக் குறிப்புகளை மட்டும் கூட வாசித்தால் போதும். ஒரு பெரிய நூல் கண்டிலிருந்து ஒரு நுனியை மட்டும் இழுத்தால் அந்த பெரிய நூல் வந்து கொண்டேயிருப்பது போல அந்த படைப்பைப் பற்றிய அனுபவத்தை பசுமையாக ஏறத்தாழ வெளியே கொண்டு வர முடியும்.


***


அரசியலில் இருந்து விலகப் போவதாக தமிழருவி மணியன் தெரிவித்திருந்த கருத்தையொட்டி பல நகைப்புக் குறிகளும் கேலி ஆரவாரங்களும் இணையத்தில் நிறைந்திருப்பதைக் கண்டேன்.

தமிழருவி மணியன் பல்வேறு சமயங்களில் முரண்பட்ட, நடைமுறை அரசியலுக்கு ஒவ்வாத லட்சியவாத கருத்துக்களைக் கூறியிருக்கலாம். அவருடைய நோக்கில் அதற்கான நியாயங்கள் இருக்கலாம். அவருக்கு அரசியல் சாதுர்யங்கள் இல்லாமலிருக்கலாம். ஜனநாயக வெளியில் இதற்கான வெளி அனுமதிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை.

ஆனால் அவர் அடிப்படையில் நேர்மையான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டவர். அதிலும் சமகால அரசியலின் ஊழல்களையும் வெளிப்படையான முறைகேடுகளையும் காணும் போது இவ்வாறான நேர்மைகளின் மதிப்பு அதிகமாக நமக்கு உறைக்கிறது. இவ்வாறான விதிவிலக்குகளின் இருப்பாவது நமக்கு தேவையானதாக இருக்கிறது.

ஆனால் இவ்வாறானவர்கள் அரசியலில் விரக்தியற்று வெறுப்புற்று விலகுவதாக அறிவிப்பதும் அதற்கு பொதுவெளியில் இருந்து மகிழ்ச்சியும் வரவேற்பும் இருப்பதும் ஒருவகையில் ஆபத்தான போக்கு. நேர்மையான தனிநபர்கள் அரசியலில் இயங்க லாயக்கு அற்றவர்கள், நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறவர்கள் என்கிற தொனி வருங்காலத்தில் நேர்மை என்பதே அரசியலில் துளியும் இல்லாத ஒரு நிலைக்கு இட்டுச்செல்லும். இது போன்றவர்களின் தோல்வியும் விரக்தியும் இளைய தலைமுறை நேர்மையாளர்களையும் பாதிக்கும், பின்னடையச் செய்யும்.

அர்விந்த் கெஜ்ரிவால் -ஆம் ஆத்மி போல ஒரு மாற்று அரசியல் இங்கு மலரப்படாமலேயே கூட போய் விடும்.

சூது கவ்வும் திரைப்படத்தில் வரும் ஒரு நேர்மையான அரசியல்வாதியை ஒரு நகைச்சுவையாளராக நாம் பார்க்கும் போக்கு நிஜத்திலும் தொடர்வது சமூகத்திற்கு நல்லதல்ல.


***


ரஹ்மானின் புதுப்பாடலை முதல் இரண்டு முறைகளிலேயே கேட்டு மதிப்பிட முயல்வது அறியாமை. மனைவி கொண்டு வரும் புது ரெசிப்பியை நன்றாக உள்ளது அல்லது இல்லை என்று சொல்ல முடியாத தடுமாற்றம் ஏற்படும். இரண்டிற்குமே கடுமையான பின்விளைவுகள் உண்டு. என்றாலும் சமீபத்திய ராசாளியை பார்க்க முயல்வோம்.

முதலில் ஒன்றை சொல்ல வேண்டும். இது ஒரு அட்டாசமான fusion. செவ்வியல் இசையையும் நவீன இசையையும் ஒலிகளையும் உறுத்தாமல் மிகப் பொருத்தமாக கலந்து அபாரமான இசை விருந்து படைக்கிறார் ரஹ்மான். பல்லவியை முதலில் கேட்ட போது இந்திப் படத்திற்கு முயலப்பட்ட மெட்டோ என்று ஏனோ தோன்றிற்று. போலவே ஆண் குரல் ஹரிசரண் என்று முதலில் நினைத்து ஏமாந்தேன். பிறகுதான் சத்யபிரகாஷ் என்று தெரிந்தது. மனிதர் உயர் ஸ்தாயிகளில் அநாயசமாக உலவும் லாகவம் பிரமிக்க வைக்கிறது. ஷாஷாவின் குரலும் அபாரம்.

ரஹ்மானின் சமீபத்திய பாடல்களை முழுக்க முழுக்க அவர் விருப்பப்படி உருவாக்குகிறார் என யூகிக்கிறேன். அதாவது வணிகரீதியாக வெற்றியடைய வேண்டும் என்கிற கட்டாயத்திற்கோ பதட்டத்திற்கோ உட்படாமல் சுதந்திரமாக விளையாடுகிறார். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பாடலின் இடையிசைகள் இரண்டுமே இசை விமர்சகர்களால் கொண்டாடித் தீர்க்கப்படப் போகின்றன. இந்த நவீன ஒலிகளை கச்சேரிகளில் reproduce செய்ய முடியாமல் இசைக்குழுக்கள் தடுமாறப் போகிறார்கள். முதல் இடையிசையில் சட்டென்று திருவையாறில் நிற்கின்ற பரவச அனுபவம் கிடைக்கிறது. இந்தப் பாடலின் சிறப்பை உணர முக்கியமான அளவுகோல், எங்கே இது செவ்வியலில் இருந்து நவீனத்திற்கு மாறி மாறிச் செல்கிறது என்பதைக் கவனித்தாலே போதும் என்று தோன்றுகிறது.

முதல்பகுதியில் அருணகிரிநாதரின் 'முத்தைத்திரு' பாணி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. வேகமாக நகரும் இந்த சந்தங்கேற்ப பாடல் வரிகள் எழுதுவது மிக கடினம். தாமரை எவ்வித நெருடலும் இல்லாமல் பொருத்தமான சொற்களால் அநாயசமாக இதைக் கடந்து செல்கிறார். யார் சொல்வது அன்பை, யார் எய்வது அம்பை.. போன்ற திரைசாயல்களுடன் கூடிய வரிகளிலும் கவர்கிறார்.

எனக்கு நினைவுள்ளவரை இம்மாதிரியான fusion இசை பாணிப்பாடல் கெளதமின் படங்களில் இதுவரை உபயோகப்படுத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன். இதுவே கதைச்சூழல் குறித்த ஆர்வத்தை ஊட்டுகிறது. நாயகன் மற்றும் நாயகியின் மெல்லிய ஈகோ மோதல் அது சார்ந்த ஊடல் இதன் பின்னணியாக இருக்கலாம்.

'தள்ளிப் போகாதே'விற்கு பிறகு இந்த ராசாளியை விட்டு தள்ளிப் போக முடியாமலிருப்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.


***


தமிழ் சினிமாக்களில் என்றல்ல மையநீரோட்ட இந்தியச் சினிமாக்களில் வசனம் அதிகமாக இருக்கிறது என்பதற்கான ஒரு நடைமுறை உதாரணத்தை நீண்ட காலமாக உணர்கிறேன்.

இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்த சில அயல் சினிமாக்களை சப் -டைட்டில் சரியாக பொருந்துகிறதா என்று தற்காலிகமாக ஓட்டிப் பார்ப்பது வழக்கம். சப்-டைட்டில் சரியாகப் பொருந்தாத படங்களை வைத்துக் கொண்டு சமயங்களில் பைத்தியம் பிடிப்பது போல் அவற்றை சரிசெய்ய முயன்றிருக்கிறேன்; தேடியிருக்கிறேன்.

இவ்வாறாக ஓட்டிப் பார்க்கும் போது காட்சிகளும் பின்னணி இசையும்தான் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்குமே ஒழிய வசனம் பேசும் பகுதி சட்டென்று வராது. அது வந்தால்தானே சப் -டைட்டில் சரியாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்?

ச்சீ. நாய்களா பேசித் தொலைங்க.. என்று சமயங்களில் எரிச்சலே வந்து விடும். முன்னும் பின்னுமாக நகர்த்துவதில் எங்காவது பேசுவார்கள். சப் -டைட்டில் சரியாக பொருந்தியவுடதான் அப்பாடா என்றிருக்கும்.

ஆனால் இந்தியத் திரைப்படங்களில் இவ்வாறில்லை.

சற்று நகர்த்தினாலே போதும், கிராமப்புறங்களில் சொல்லப்படும் பழமொழியைப் போல 'ஓலைப்பாயில் நாய் மோண்ட கதையாக' சளசளவென்று பேசத் துவங்கி விடுவார்கள்.

அந்த மாதிரி பிரச்சினையே கிடையாது.


***



தமிழ் படத்தின் இயக்குநர்கள் தங்கள் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் சபீனா கொண்டு கழுவி பின்பு கொலோன் போட்டு துடைத்தது போல் DI -ல் பளிச்சென்று ஆக்குகிறார்கள். வண்ணங்கள் கண்ணைப் பறிக்கின்றன.

ஆனால் இந்த கதை, திரைக்கதை என்கிற ஆதார வஸ்துவில் மாத்திரம் நூற்றாண்டு தூசி படிந்திருக்கிறது.

இந்த மனைவிமார்கள் அவசர உப்புமாவைக் கிளறி தட்டில் வைத்து கடாசி விட்டு அவசரமாக சென்று சீரியலில் கண்ணைப் பொருத்திக் கொள்வது போல இந்த தமிழ் இயக்குநர்கள் தாங்கள் செய்த உப்புமாவை செய்தவுடன் ஒரு வாய் ருசி கூட பார்க்க மாட்டார்களா?


***

வீட்டில் வாசிக்காமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்து 'நேரமில்லையே'' என்று பெருமூச்சோடு தினமும் கடந்து செல்வது 'வேலைக்கு ஆகாது' என்று கடந்த ஒரு வாரமாக ஒரு புதிய வாசிப்பு முறையை எனக்குள் நானே அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அதன்படி தினமும் ஒரு புத்தகத்தை Random ஆக எடுத்து அதிலிருந்து ஒரு சிறுகதையையோ, கட்டுரையையோ, நாவல் என்றால் ஓர் அத்தியாயத்தையோ என நூலின் பகுதியை வாசித்து விட்டு வைப்பது.

இதை அனுதினமும் கட்டாயமாக பின்பற்றியே ஆவது என்று எனக்குள் டைம்பாம் செட் செய்து கொண்டிருப்பது நல்ல பலனைப் பெற்றுத் தருகிறது.

()

இன்று கிடைத்தது, எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்கிற பழைய சிறுகதைத் தொகுதி. நூலாசிரியரே ஒரு விழாவில் அன்பளிப்பாக தந்தது. கூட ஒரு கவிதைத் தொகுதியும் (கவிதை என்றாலே இலவச இணைப்பு மாதிரி சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளக்கூடாது).

சிறுகதைத் தொகுதியில் இருந்து பைபிளைப் பிரித்து ஒரு வாசகத்தை படிப்பது போல நூலைப் பிரித்து தற்செயலான ஒரு சிறுகதையைப் படித்தேன்.

'எங்கேயோ பார்த்த ஞாபகம்' - இது சிறுகதையின் தலைப்பு.

வெகுசன இதழ்களின் பாணியை நினைவுப்படுத்தும் நடை.. நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் இலக்கியப் பயணம் இதிலிருந்து நகர்ந்து எவ்வளவோ முன்னகர்ந்து விட்டது. எனவே இப்போது அவர் எப்பவோ எழுதிய இந்த நூலின் உரைநடையை நினைவுகூர்வதினால் அவருக்கு ஒருவேளை சங்கடம் நேரலாம். என்றாலும் இது 'மூக்கில் சளி ஒழுகிக் கொண்டிருந்த' அவருடைய மகனின் பழைய புகைப்படம்தானே? பிரியம் இருக்கத்தானே செய்யும்? :)

()

சுவாரசியமான நடை. கதையின் உள்ளடக்கம் இதுதான்.

ஒரு சினிமாவின் படபூஜை. இருபத்தைந்து வருடங்களாக தொடர்ந்து வெற்றியையே காணும் ஒரு சூப்பர் ஸ்டார்தான் அந்தப் படத்தின் நாயகன். எனில் அவனுடைய வயதை உத்சேதமாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தப் படத்திற்கு இரண்டு இளம் நாயகிகள். அதில் ஒரு நாயகியின் வனப்பும் இளமையும் இவனைக் கவர்கிறது. என்றாலும் அவளை எங்கேயோ பார்த்த ஞாபகமும் வருகிறது. நினைவு பிடிபடவில்லை. தன் பி.ஏ. விடம் கண்காட்டி விட்டு நகர்கிறான்.

அது ஒரு உயர் ரக ரிஸார்ட். நடிகன் அங்குதான் வழக்கமாக தனக்குப் பிடித்த பூக்களை முகர்ந்து கசக்குவது வழக்கம். இளம் நடிகைக்காக காத்திருக்கிறான். அவள் வர சற்று தாமதமாகிறது. சற்று எரிச்சலுடன் 'ஏன்?" என கேட்கிறான். நாயகி சற்று மூக்கைச் சிந்திக் கொண்டே "என் அம்மாவிடம் பர்மிஷன் வாங்க தாமதமாகி விட்டது" என்று சொல்லி விட்டு கூடுதலாக ஓர் அதிர்ச்சி தகவலையும் சொல்கிறாள். "நான் உங்களுக்கு மகள் முறை வேண்டும்" .

அவளுடைய தாயின் பெயரைச் சொல்கிறாள். ஃபீல்டில் இருந்து முன்பே ஒதுங்கி விட்ட பழைய நடிகை அவள். நடிகனுடன் பழக்கம் உண்டு.

இளம் நாயகி பின்பு இதையும் சொல்வதுதான் யதார்த்தமான, பரிதாபமான நகைச்சுவை

'இதற்காக என்னை இந்தப் படத்திலிருந்து தூக்கி விடாதீர்கள். இதிலிருந்துதான் என் எதிர்காலமே துவங்க வேண்டும்' என்று சொல்லி கோ'வென்று அழுகிறாள்.

()

மகள் பாத்திரம், பிறகு அதே பெண்ணுடன் நாயகி பாத்திரம், பின்பு நாயகிக்கு வயதானவுடன் அவளுடைய மகளுடன் நாயகி பாத்திரம் என்று இளம் பெண்களுடன் மட்டுமே நடிக்கும் கிழட்டு கதாநாயகர்களை செருப்பால் அடித்த கதை இது.


***


லக்கேஜை தோளுக்கு மேல் சிரமப்பட்டு தூக்கி மேலேயுள்ள லாஃப்டிற்குள் எப்படியாவது அடித்துப் பிடித்து திணித்து பெருமூச்சுடன் இறங்கி வருவதைப் போல இசையமைப்பாளரின் சிக்கலான மெட்டிற்குள் தமிழை மடக்கி ஒடித்து துண்டித்து கொலை செய்து திணிக்கும் 'மீட்டர்' பாடலசிரியர்களின் இடையே அந்த வணிக சிக்கல்களுக்குள்ளும் தங்களால் இயன்றவரைக்குமான கவித்துவத்தையும் கதைச் சூழலுக்கான பொருத்தமான வார்த்தைகளையும் இட்டு மேலதிக அழகு செய்யும் பாடலாசிரியர்களும் இன்னமும்் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பாலாஜி சக்திவேலின் 'காதல்' திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் எனக்கு பிடித்தமானது. கேட்பவர்களின் மனதையும் உயிரையும் கரைக்கும் சோகத்தின் பாவம் இதில் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கும். ஹரிசரண் அற்புதமாக பாடியிருப்பார். இதற்கு அபாரமாக இசையமைத்த ஜோஷ்வா SRIDHAR ஏன் பிறகு காணாமற் போய் விட்டார் என்று தெரியவில்லை..

இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். சமயங்களில் கண்கசியவும். ஆனால் இன்று காலையில் கேட்கும் போது இந்த ஒரு வரியின் பொருத்தமும் அழகும் என்னை பிரமிக்க வைத்தது.

'மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்'

இந்தப் பாடலின் சூழல் நமக்கு தெரியும். ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தியை தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞன் கூட்டிக் கொண்டு ஓடுகிறான். தன்னை நம்பி வந்து விட்ட அவளை ஆறுதல்படுத்தும் நோக்கில் அந்த இளைஞன் பல நம்பிக்கையான வார்த்தைகளை கூறுகிறான்.

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்
தோளிலே நீயுமே சாயும் போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

இது பொதுவாக ஆண் சொல்லும் நம்பிக்கையான உறுதிமொழிகள்தான்.

ஆனால் முன்னர் குறிப்பிட்ட வரியின் பொருள் மிகவும் ஆழமானது. பொருளியல் உலகைக் கூட எப்படியாவது எதிர்கொள்ள முடியும். ஆனால் சாதிமறுப்பு திருமணம் செய்த காரணத்திற்காக, தாம் எதிர்கொள்ளவிருக்கும் சாதி ஆவணக் கொலைகளின் பயங்கரத்தை அந்த இளம் காதலர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

சுற்றிலும் ஆபத்து. எவர் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கலாம், தகவல் சொல்லலலாம். இதற்கிடையில்தான் வாழ்ந்தாக வேண்டும்.

என்றாலும் கூட அந்த நம்பிக்கையை இளைஞன் ஊட்டுகிறான்.

'மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்'

சுற்றிலும் உயர்அழுத்த மின்சாரம் பாயும் கொலைகாரக் கம்பிகள் இருந்தாலும் காகங்களும், மைனாக்களும் அதன் இடையில்தான் ஊடாடுகின்றன, கூடுகட்டுகின்றன, வாழ்கின்றன. அதிர்ஷ்டம் இல்லாத பறவைகள் மின்சாரத்தில் கருகி சாகின்றன. என்றாலும் வாழும் நம்பிக்கையை அவை விடுவதில்லை.

சாதி வெறியர்களின் ஆபத்தை மின்சாரத்திற்கும் அதற்கு இடையில் வாழ வேண்டிய காதலர்களை கூட்டுப்பறவைகளுக்கும் உவமையாக எழுதிய நா.முத்துகுமாரை வியக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=E-cQMjx0HNg


***

'நீ எந்த அரசியல்?' என்கிறார்கள். இடதா வலதா? எல்லா அரசியல்களிலுமே அவரவர்களுக்கான சார்புகளும் சாதகங்களும் நல்லவைகளும் தீயவைகளும் சுதந்திரமும் ஃபாஸிஸமும் உண்டு.

குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் ஒரு குறிப்பிட்ட அரசியலுக்குள் புகுந்து கொண்டு மற்றவற்றை கண்மூடித்தனமாக புறக்கணிக்கும், நிராகரிக்கும், வெறுக்கும் அரசியல் என்னுடையதில்லை.

அன்னப்பறவை போல எல்லாவற்றிலும் உள்ள சாதகங்களை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் இதற்கு என்ன பெயரென்று தெரியவில்லை. குழப்ப அரசியலாக இருக்கலாம்.


suresh kannan

No comments: