தமிழ்த் திரையில் ஒரு அமிழ்ந்த நட்சத்திரம்
திரையுலகுடன் தொடர்புடைய அடையாளமாக 'ஜெயபாரதி' எனும் பெயர் இன்று தமிழக மனங்களில் எவ்வகையான நினைவுகூரல்களை நிகழ்த்தும் என யூகித்துப் பார்க்கிறேன். நிர்வாண முதுகை A எனும் பெரிய எழுத்து அநீதியாக மறைத்திருக்கும் போஸ்டர்களை எழுபதுகளில் பார்த்திருந்த நினைவு, இன்றைக்கு மூட்டுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் இளைஞர்களுக்கு தோன்றலாம். கலை சார்ந்த படங்களும் அந்தப் போர்வையில் மிதபாலியல் படங்களும் வெள்ளமென கேரளாவைத் தாண்டி தமிழகத்தில் பெருக்கெடுத்து வந்து கொண்டிருந்த போது தமிழகத்தைப் பொறுத்தவரை 'அதுதான் மலையாள சினிமா' என்று பொதுப்புத்தியில் பதிந்து போகுமளவிற்கு அவைகளில் நடித்த ஜெயபாரதி எனும் நடிகையை அவர்கள் சப்புக்கொட்டிய படி நினைவுகூர்வார்கள். இன்னும் சிலர் பெயர்க்குழப்பத்துடன் திருமதி. அமிதாப் பச்சனை தவறாக நினைவுகூரக்கூடும். மொத்தத்தில் அந்தக் காலக்கட்டத்திலும் இப்போதும் சரி, ஜெயபாரதி என்றொரு திரைப்பட இயக்குநர் இருந்தார் என்பதை தமிழகப் பொது மனம் அறிந்திருக்குமா அல்லது இன்னமும் நினைவில் வைத்திருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. கலை சார்ந்த மாற்று சினிமா முயற்சிகளின் தேடலைக் கொண்டிருக்கும் குறுகிய வட்டத்தைச் சார்ந்த பார்வையாளர்களுக்கு வேண்டுமானால் 'குடிசை' 'உச்சி வெயில்' போன்ற திரைப்படங்களின் பெயர்களை உதிர்த்தால் அவர்களுக்கு சட்டென்று நினைவு வரக்கூடும்.
ஆம், ஜெயபாரதி என்றொரு இயக்குநர் தமிழில் இருந்தார், இந்த மொழியில் ஏழு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது தமிழகத் திரை வரலாற்றில் புதைந்து போன ஒரு ரகசியம். வணிக ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களும் அதைச் சார்ந்தவர்களும் மட்டுமே வரலாற்றின் மேற்பரப்பில் பிரகாசமாக பொங்கி நுரைத்துக் கொண்டிருக்கும் போது ஜெயபாரதி போன்ற பல அறியப்படாத ரகசியங்களும் திறமைகளும் தகவல்களும் இதன் அடியே மூழ்கியுள்ளன என்பது ஒரு துரதிர்ஷ்டமான விஷயம்.
***
குடிசை, உச்சி வெயில், நண்பா... நண்பா..., ரெண்டும் ரெண்டும் அஞ்சு, புத்ரன், குருசேஷத்ரம் ஆகிய விருது பெற்ற திரைப்படங்களையும் பல்வேறு துரதிர்ஷ்டமான காரணங்களால் பாதியிலேயே கைவிடப்பட்ட சில முயற்சிகளையும் (இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள், 24C, வேதபுரம் முதல் வீதி, தேநீர்) இயக்கிய ஜெயபாரதி அடிப்படையில் ஓர் எழுத்தாளரும் ஆவார். இவரது பெற்றோரான து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி ஆகிய இருவருமே எழுத்தாளர்களாக இருக்கும் போது ஜெயபாரதியும் எழுத்தாளராக உருவானதில் ஆச்சரியமொன்றுமில்லை. மாலன், பாலகுமாரன் ஆகிய சக எழுத்தாள நண்பர்களின் காலத்தில் கணையாழி மற்றும் தினமணி கதிரில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.
தாம் திரைப்படம் இயக்கிய அனுபவங்களையும் அது சார்ந்து எதிர்கொள்ள நேர்ந்த கசப்புகளையும் இனிப்புகளையும் 'இங்கே எதற்காக' என்ற தலைப்பில் ஜெயபாரதி எழுதிய நூல் சமீபத்தில் வெளியானது. பொதுவாக வணிகப் பத்திரிகைகளால் ஊதிப் பெருக்கப்பட்ட பல அதிநாயக நடிக பிம்பங்கள் இந்த நூலின் மூலம் ஊசி குத்தப்பட்ட பலூனாக நம் முன்னே சுருங்கிச் சரிகின்றன. 'நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை. இது கடவுள் மீது ஆணை' என்கிற disclaimer - உடன் துவங்குகிற நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் திரையுலகு தொடர்பான பல ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் விரிகின்றன.
எப்போதும் போலவே இளைஞர்கள் பலரை தன்னகத்தே இழுக்கும் வசீகரத்தை தமிழ்த்திரை இன்று கொண்டுள்ளது. முன்பெல்லாம் உயர்கல்வி வாய்க்காத, வேறு துறைகளில் வாய்ப்பும் ஆர்வமும் இல்லாத அதிக கலையார்வம் உள்ளவர்களும் நண்பர்களினால் உசுப்பப்பட்டவர்களும்தான் வெளியூர்களிலிருந்து சினிமாவுக்கு வருவார்கள். ஆனால் இன்றோ பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று நல்ல பணிகளுக்கான வாய்ப்பிருப்பவர்கள் கூட அதைத் துறந்து சினிமாவிற்குள் முண்டியத்து நுழைவதற்கான ஆர்வம் பெருகிக் கொண்டேயிருப்பதைக் காண முடிகிறது.. விழா மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் மஞ்சள் வெளிச்சத்தில் நனையும் வெற்றியாளர்கள் மட்டுமே இவர்களின் கண்ணுக்குத் தெரிகிறார்கள். மாறாக அந்த தங்க நாற்காலிக்கான கனவுடன் சென்ற பல ஆயிரக்கணக்கான நபர்கள் இன்னமும் உதவியாளர்களாகவும் உதிரியாளர்களாகவும் அல்லறுவது இவர்களுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் மஞ்சள் வெளிச்சத்தின் மீதான மயக்கம் அவர்களை உணர விடுவதில்லை. தங்களை நாற்காலியில் அமர்பவர்களாகவே கனவு காண்கிறார்கள். வெற்றியாளர்களே பொதுவாக கொண்டாடப்படும் சூழலில் ஜெயபாரதி போன்ற நல்ல சினிமாவிற்கான பயணத்தை நோக்கிய முயற்சிகளை மேற்கொண்டவர்களின் முன்னால் வணிகசக்திகள் உள்ளிட்ட பல்வேறு தடைகள் முன்நிற்கும் யதார்த்தத்தை சினிமாவில் நுழைய விரும்பும் இளைஞர்கள் ஜெயபாரதியின் நூலின் மூலமாக அறிந்து கொள்வது நல்லது.
தமிழில் ஏன் நல்ல சினிமாக்கள் அதிகம் உருவாவதில்லை என்பது அதன் மீது அக்கறையுள்ள பார்வையாளர்களின் கேள்வியாகவும் கனவாகவும் உள்ளது. ஆனால் அந்த சூழலுக்கு அவர்களுமே ஒரு காரணம் என்பது ஒரு முரண்நகை. நல்ல திரைப்படங்கள் வெளிவரும் போது அதை ஆதரிக்கத் தவறுவதும் ஒரு காரணம். இது தொடர்பான அனுபவங்களை ஜெயபாரதி இந்த நூலில் விவரித்துள்ளார். இதையும் மீறி ஒரு நல்ல திரைப்படம் உருவாவதற்கு எத்தனை வகையான தடைக்கற்கள் அமைப்பு ரீதியாகவும் கலைரசனையற்ற ஆனால் செல்வாக்குள்ள தனிநபர்களின் வழியாகவும் முன்நிற்கின்றன என்பதை ஜெயபாரதியின் வழியாக அறியும் போது அலுப்பும் சோர்வுமாக இருக்கிறது. ஒரு நல்ல முயற்சி பார்வையாளனை வந்து அடைவதற்குள் அது எத்தனை சவால்களைத் தாண்டி வரவுள்ளது? ஜெயபாரதியின் முதல் திரைப்பட முயற்சியையே எடுத்துக் கொள்வோம்.
பத்திரிகைகளில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதி ஓர் எழுத்தாளராக அவர் அடையாளம் பெற்ற பிறகு அது தந்த மிதப்பில் தனது சிறுகதையொன்றை (இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்) நண்பர்களின் தூண்டுதல் காரணமாக சினிமாவாக எடுக்க தீர்மானிக்கிறார். இது போன்ற மாற்று முயற்சிகளுக்கெல்லாம் அரசு அமைப்பான FFC (இப்போது NFDC) மட்டுமே நிதியுதவி செய்யும் என்பதால் ஏவிஎம் நிறுவனத்தின் சிபாரிசுக் கடிதத்தோடு FFC நிறுவனத்தின் கமிட்டியில் முக்கிய பொறுப்பில் இருந்த புகழ்பெற்ற இயக்குநரும் படத்தொகுப்பாளருமான ரிஷிகேஷ் முகர்ஜியை சந்திக்க நண்பரொருவருடன் பம்பாய் செல்கிறார். சென்னையிலிருந்து வந்த இந்த இரண்டு நபர்களும் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் ரிஷிகேஷ் முகர்ஜி இவர்களை அன்புடன் வழிநடத்தியதை நெகிழ்வுடன் நினைவுகூரும் ஜெயபாரதி, அவருடைய வழிகாட்டுதலின் பேரில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ராலைச் சந்திக்க அங்கிருந்து டெல்லி போகிறார். அமைச்சரின் உதவியாளர் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவனை கைகாட்ட அங்கிருந்து கேரளாவிற்கு பயணம். இவர்களுடைய திரைக்கதையில் இருக்கும் புதுமையினால் எம்.டி.வி திருப்தி தெரிவிக்க மகிழ்ச்சியுடன் ஊர் திரும்புகிறார் ஜெயபாரதி. ஆனால் -
அதே நேரத்தில் ராஜாஜியின் சிறுகதையான 'திக்கற்ற பார்வதி'யை திரைப்படமாக்க சிங்கீதம் சீனிவாசராவும் நிதியுதவி கோரி விண்ணப்பம் வைத்திருந்த காரணத்தினால் அரசியல் காரணமாக அதற்கே நிதியுதவி கிடைக்கிறது. ஜெயபாரதியின் திரைக்கதையோடு சேர்ந்து நிதியுதவி தரப்படாமல் போகின்ற இன்னொரு திரைக்கதை எவருடையது தெரியுமா? பாரதிராஜாவின் 'மயில்'.
***
இது போன்று பல சுவாரசியமான சம்பவங்கள் நூலெங்கும் பதிவாகியிருக்கின்றன. கதைப்படியான சூழ்நிலைக்கு பொருத்தமாக இருந்தாலும் சில்லறைக் காசுகளோடு நடிக்க மறுத்த சிவாஜி கணேசன், 'இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்' திரைப்படத்தில் நடிக்க முதலில் ஒப்புக் கொண்டு ஒரு நியாயமான காரணத்தினால் பிறகு மறுத்த கமல்ஹாசன், 'தாகம்' படத்தில் சிறப்பாக நடித்த முத்துராமனுக்கு அரசியலை மீறி விருது கிடைக்க காரணமாக இருந்த ஜெயபாரதி, இடதுசாரி தோழர்களின் உழைப்பினால் உருவாகவிருந்த திரைப்படமான 'தேநீர்', அதே அமைப்பைச் சார்ந்த பொறுப்பில்லாத தனிநபர் ஒருவரின் நம்பிக்கைத் துரோகத்தினாலேயே நின்று போன சங்கடம், நின்று போன இந்த திரைப்படத்தின் பெயரை மாற்றி தொடர்பில்லாத காட்சிகளை இணைத்து 'ஊமை ஜனங்களாக' வணிகம் செய்து லாபம் பார்க்க முயன்று தோற்றுப் போன பத்திரிகையாளர் ஷ்யாம், பாலச்சந்தரின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அசந்தர்ப்பங்களினால் சாத்தியமாகாத சம்பவங்கள், கடையில் வாங்கித் தர வேண்டிய பொருள் போல தேசிய விருது வாங்கித் தரச் சொல்லி வேண்டிய வடிவேலு, விவேக், கிராமத்து அத்தியாயம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து பிறகு என்ன காரணத்திலோ (அந்த பிரபல நடிகரின் இடையூறு என்கிறார்கள்) உபயோகிக்காமல் திருப்பியனுப்பிய ருத்ரைய்யா, படப்பிடிப்புத்தளத்தில் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்த தயாரிப்பாளர் தரப்பு ஆள், குடிசை திரைப்படத்திற்காக ரகசியமாக நிதியுதவி அளித்த சிவக்குமார், இத்திரைப்பட முயற்சிக்கு தன் பங்காக தாமாக இசையமைக்க முன்வந்த இளையராஜா என்று பல சுவையான பதிவுகளை ஜெயபாரதி விவரித்துக் கொண்டே போகிறார்.
அதன் சிகரமான சம்பவமாக ஒன்று -
குடிசை திரைப்படம் நிறைவுறுவதற்கு இன்னமும் இருபதாயிரம் ரூபாய் தேவைப்படும் நேரத்தில் சென்னைக்கு வந்திருக்கும் மிருணாள் சென் இதைப் பற்றி அறிகிறார். அதுவரையிலான படத்தைப் பாா்க்கிறார். உண்மையில் அவருடைய திரைப்பட தயாரிப்பு ஒன்றிற்காகத்தான் அவர் சென்னை வந்திருக்கிறார். ஆனால் தன்னுடைய தமிழக தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறார். "என்னுடைய திரைப்படம் தயாரிக்கப்படுவதன் மூலம் இங்கு சினிமா மேன்மையுற வேண்டும் என்கிற உங்கள் நோக்கம் நல்லதுதான். ஆனால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நல்ல திரைப்படம் நிதிக்குறைவினால் நின்று போயிருக்கிறது. முதலில் அதற்கு உதவுங்கள். இதைப் பிறகு பார்க்கலாம்". இம்மாதிரியெல்லாம் - அதுவும் திரையுலகில் - அபூர்வமான ஆட்கள் இருந்திருக்கிறார்களா என்று நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. மேன்மக்கள்.
அடிப்படையில் ஜெயபாரதி ஓர் எழுத்தாளர் என்பதால் தன்னுடைய கசப்பான அனுபவங்களையும் கூட மென்நகைச்சுவையோடு சுவாரசியமாக சொல்லிக் கொண்டு போகிறார். பிரகாசமான, பளபளப்பான தமிழ் சினிமாவின் இன்னொரு பக்கமான குரூர யதார்த்தங்களையும் அறிய விரும்பும் இளம் இயக்குநர்கள், சினிமா ஆர்வலர்கள் என்று அனைவருமே அவசியம் வாசித்துப் பார்க்க வேண்டிய நூல் இது. சில எழுத்துப் பிழைகளை தவிர்த்திருக்கலாம் என்றாலும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த திரைப்படங்கள் தொடர்பாக பிரசுரமாகியிருக்கும் பழைய புகைப்படங்கள், அந்தத் திரைப்படங்களை தேடியேனும் பார்த்துத் தீர வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்துகிறது.
***
இங்கே எதற்காக - இயக்குநர் ஜெயபாரதி
டிஸ்கவரி புக் பேலஸ் பி. லிட்,
பக்கங்கள்: 182 விலை: ரூ.150/-

அம்ருதா - அக்டோபர் 2015-ல் வெளியான கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம். (நன்றி: அம்ருதா)
suresh kannan
No comments:
Post a Comment