பெருமாள் முருகனின் ஆறாவது புதினம் - ஆளண்டாப் பட்சி. 2012-ல் வெளியானது. தமது புதினங்களின் தலைப்பை திட்டமிட்டு வைக்காமல் புனைவில் வெளிப்படும் ஏதாவது ஒரு வரியையொட்டி அமைப்பதே வழக்கம் என முன்னுரையில் குறிப்பிடும் பெருமாள் முருகன், இந்தப் புதினத்தின் தலைப்பையும் அவ்வாறே சூட்டியுள்ளார். ஆளண்டாப் பட்சி என்பது புராதனக் கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு பறவை. மனிதர்களை தம்மருகே அண்டவிடாது என்றும் தீயவர்களை கொன்று விடும் என்றும் ஆனால் நல்ல மனிதர்களுக்கு உதவி செய்யும் என்கிற விநோதமான மனோபாவமுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் புதினத்தில் வரும் சில நபர்கள் இந்த மனோபாவத்தில் இயங்குவதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இடப்பெயர்வு என்பது மனிதகுலத்தின் தவிர்க்க முடியாத ஆனால் காலங்காலமாய் தொடர்ந்து கொண்டேயிருக்கும் துக்ககரமான விஷயங்களுள் ஒன்று. போர்களாலும் கலவரங்களாலும் வாழ்வாதாரங்களைத் தேடியும் பொருளீட்டுவதற்காகவும் உறவுகளிடையேயான பகைகளிலிருந்து விலகி நிற்கவும் என பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது உயிர் பயத்துடனும் தங்களின் உறவுகளைப் பிரியும் வலியுடனும் தங்களின் உடமைகளை கைவிட்டு மக்கள் இடம்பெயர்ந்ததுதான் உலக வரலாற்றிலேயே நடந்த மிகப் பெரிய இடப்பெயர்வு நிகழ்வாகச் சொல்கிறார்கள். அந்தச் சமயத்தில் சுமார் 15 மில்லியன் நபர்கள் இடம் பெயர்ந்தார்கள். இந்தக் கலவரங்களில் சுமார் 10 லட்சம் நபர்கள் மத வன்முறை காரணமாக கொல்லப்பட்டார்கள். பெருமாள் முருகனின் இந்தப் புதினமும் கூட்டுக்குடும்பத்திலிருந்து பிணக்குகளின் மூலம் எழும் வலியினால் தன்னை துண்டித்துக் கொண்டு செல்லும் ஒரு சிறுகுடும்பத்தின் இடப்பெயர்வை மைக்ரோ தளத்தில் அணுகிச் செல்கிறது.
இந்தப் புதினத்தின் பிரதான பாத்திரமான முத்து, ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன். தனது மூத்த சகோதரர்களின் நிழலில் உலகம் அறியாமல் பத்திரமாக வளர்ந்தவன். ஒரு நிலையில் அந்தக் கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படுகிறது. அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தில் மூத்த சகோதரருக்கு அதிகமான பங்கு ஒதுக்கப்படுகிறது. அந்தக் குடும்பத்திற்கு அவர் அதிக காலம் உழைத்திருப்பதால் தர்க்கரீதியாக அது பொருந்திப் போகிறது. காலங்காலமாக நீடிக்கும் மரபுசார்ந்த சில வழக்கங்களின் செல்வாக்கின் மூலம் தன்னிச்சையாக எடுக்கப்படும் முடிவுகளில் பலவற்றில் சமகாலத்திற்குப் பொருந்தாத கண்மூடித்தனமான மூடத்தனங்கள் இருந்தாலும் சிலவற்றில் பொதிந்துள்ள நுணுக்கமான விஷயங்கள் பிரமிப்பேற்றுகின்றன. அடுத்த சகோதரருக்கு அதை விட குறைவான பங்கு. மிச்சமிருப்பதில் ஒரு ஏக்கர் நிலம் மாத்திரம் முத்துவின் பங்காக வந்து சேருகிறது. அது வரை தன்னுடைய பெற்றோர்களின், சகோதரர்களின் பேச்சை மீறாமல் அவர்களின் அரவணைப்பின் நிழலிலேயே வாழ்ந்து பழகிய முத்துவிற்கு உள்ளூற சில எண்ணங்கள் ஓடினாலும் இது பற்றி எதையும் கேட்கத் தோன்றவில்லை. பேசாமல் தன்னுடைய பங்கை வாங்கிக் கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலம் கடைசியில் இருப்பதால் நீர்வரத்து குறைவாக இருக்கிறது. தாம் ஏமாற்றப்பட்டிருப்பதாக அவனுடைய மனைவி பெருமா தொடர்ந்து புலம்பிக் கொண்டேயிருக்கிறாள். இதன் மூலம் ஏற்படும் சச்சரவுகளினால் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்து மனிதர்களுக்கிடையே ஏற்படும் மாற்றத்தை வேதனையோடு உணர்கிறான் முத்து. அதுவரை தம்மிடம் அன்போடு பழகிய சகோதர உறவுகளிடம் ஏற்பட்டிருக்கும், விலகல் மனப்பான்மையை அவனால் துல்லியமாக உணர முடிகிறது.
உறவுகளினால் ஏற்பட்ட கசப்பை சகித்துக் கொள்ள இயலாமல் தாம் பிறந்த வளர்ந்த ஊரிலிருந்து வேறு எங்காவது போய் விடலாம் என்று முத்து எடுக்கும் முடிவிற்கு காரணமாக அமையும் ஒரு கீழ்மையான சம்பவம் மிக நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. முத்துவின் மூத்த சகோதரர், அவன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவனுடைய மனைவியை மானபங்கப்படுத்தி விடுகிறார். பிரிவினை ஏற்படுவதற்கு முன்புவரை கூட முத்துவிடம் மனைவியிடம் கண்ணியமாகப் பழகியவர் ஏன் இம்மாதிரியான கீழ்மையில் திடீரென்று ஈடுபட வேண்டும்? தம்முடைய நீண்ட நாள் ஏக்கத்தை பிரிவினையின் பின்னால் ஏற்பட்ட விலகலையொட்டி தீர்த்துக் கொண்டாரா என்று மேலோட்டமாக தோன்றினாலும் அதையும் விட நுட்பமான காரணம் ஒன்றிருப்பதாக தோன்றுகிறது. அது முத்துவின் நிலத்தையும் தனதுரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தின் ஒரு பகுதியா என்பதுதான் அது. நிலவுடமை மனோபாவம் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தின் ஒரு கண்ணியாகத்தான் இந்த கீழ்மைச் செயலை புரிந்து கொள்ள முடியும். இந்த அபாண்டமான செயலை முத்துவின் தாயாரும் சாதாரணமாக கடந்து போவது அவனுக்கு ஆச்சரியத்தையும் சினத்தையும் உண்டாக்குகிறது. மருமகளின் மீதான கோபத்தையும் வன்மத்தையும் அவள் இப்படி தீர்த்துக் கொள்கிறாளா? ஆனால் தனது பங்கு நிலத்தை விற்று விட்டு உறவுகள் அல்லாத வேறு இடத்தில் புதிய நிலம் வாங்குவதற்காக முத்து முயலும் போது கணிசமான தொகையைத் தந்து உதவுபவளும் அவனது தாயாரே. ஆளண்டாப் பட்சியின் இன்னொரு முகம் அது.
***
புதிய வாழ்விடத்தைத் தேடி திட்டமிடாத பயணத்தின் பகுதியாக கால்போன போக்கிலே விளைநிலத்தை வாங்குவதற்காக தேடிச் செல்லும் முத்துவின் பயணத்தின் புள்ளியில்தான் இந்தப் புதினம் துவங்குகிறது. இந்தப் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் அவனது கடந்த கால அனுபவங்களையும் முன்னும் பின்னுமாக இழுத்துச் சென்றிருப்பதின் வடிவத்தில் அமைந்திருக்கிறது, இந்தப் புதினம். பொதுவாக பெருமாள்முருகன் தனது புதினங்களை கட்டமைக்கும் சுவாரசியத்திற்கு இந்த நூலும் விதிவிலக்கல்ல. நாவல் இயங்கும் காலக்கட்டத்தை பூடகமாகத்தான் புரிந்து கொள்ள முடியும். புதினத்தில் சித்தரிக்கப்படும் நிலவெளி விவரணைகள், மனிதர்கள், சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் குத்துமதிப்பாகத்தான் நாவல் இயங்கும் காலத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக முத்துவின் பயணத்தின் போது கூடவே பயணிக்கும் குப்பண்ணா, பெரியாரின் நாத்திக பிரச்சாரம் தொடர்பான சம்பவத்தை நினைவுகூறும் போது இதன் காலக்கட்டத்தை சற்று நெருங்கி அணுக முடிகிறது.
முத்துவிற்கும் குப்பனிற்குமான உறவு இந்தப் புதினத்தில் மிகச் சிறப்பாகவும் இயல்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முத்து கொங்கு கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவன். அவரை விட வயதில் மூத்தவரான குப்பன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். முத்துவின் மாமனார் வீட்டில் பண்ணையாளாக பல வருடங்கள் பணிபுரிபவர். முத்து தனக்கான விவசாய நிலத்தை வாங்குவதற்கான பயணத்தில் அவனுக்கு துணையாகச் செல்பவர். இந்தப் புதினத்தின் பிரதான பாத்திரமாக இருப்பதற்காக முத்து செயற்கையாக கட்டமைக்கப்பட்ட நாயகத்தன்மையோடு சித்தரிக்கப்படவில்லை. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அதைத் தாண்டிய மனிதநேயத்தோடு அவரை 'குப்பண்ணா' என்று அன்போடு அழைக்கிறான். அதே சமயத்தில் தன்னுடைய சமூக நிலை குறித்த பிரக்ஞை சார்ந்த உயர்வுமனப்பான்மையும் அவனுக்கு இருக்கிறது. இரண்டிற்குமான நிலையில் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கிறான். அதைப் போலவே குப்பனுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கேயுள்ள பழக்கப்பட்ட அடிமை மனோபாவமும் தாழ்வுணர்வும் உள்ளது. உயர்சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் முத்தண்ணா தம்மிடம் சரிசமமாகப் பழகுகிறாரே என்று உள்ளூற பெருமையாக இருக்கிறது. அதற்காக அவர் அதிக உரிமையும் எடுத்துக் கொள்வதில்லை. 'அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்' என்கிற குறளைப் போலவே முத்துவுடன் பழகுகிறார். இருவரும் தனிமையில் இருக்கும் சமயங்களில் உள்ளார்ந்து படிந்து கிடக்கும் சாதியுணர்வைத் தாண்டிய மனிதநேயத்துடனும் பொதுவிடத்தில் தனது கவுண்டர் சமூகத்துப் பெருமையை விட்டுத்தராத நிலையிலும் பழகுகிறான் முத்து. இவர்களது பயணத்தின் போது நிகழும் சம்பவங்கள், இவர்கள் தயாரித்து உண்ணும் உணவு வகைகள் போன்றவை அவற்றின் நுண்மையான தகவல்களோடும் மிக நுட்பமான விவரணைகளுடனும் பதிவாகியிருக்கின்றன.
இந்தப் புதினத்தின் மூலம் கொங்கு மண்ணின் வாசனை, அதன் கலாசாரம், மக்களின் சொலவடைகள், பழக்கங்கள், குணாதிசயங்கள் போன்றவற்றை அறிய முடிகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு உழைப்பின் மீது ருசி என்பது அபாரமானது. அர்ப்பணிப்புடன் பணிபுரியும் நல்ல வேலைக்காரர்களுக்கு வேலை செய்வதென்பது நாக்கில் நீர் ஊற ருசியுள்ள உண்வை சாப்பிடுவதற்கு இணையானது. வாங்கிய காட்டை விளைநிலமாக திருத்தப்பட வேண்டிய பணி என்பது முதலில் முத்துவிற்கு மலைப்பைத் தந்தாலும் அதை பகுதி பகுதியாக செய்து முடிப்பதின் மூலம் இன்னமும் ஆர்வம் ஊற்றெடுக்கிறது. சம்சாரிகளுக்கேயுரிய குணாதிசயம் இது. ஒரு கூட்டுக்குடும்பத்தின் பகுதியாக இருந்தவன், தன்னுடைய பிரத்யேக உழைப்பின் மூலமாக ஒரு விளைநிலத்தையும் வருங்கால சந்தததிகளுக்கான அமைவிடத்தையும் உருவாக்கும் அவனுடைய பெருமிதம், காட்டைச் சொந்தமாக்குவதிலிருந்தே துவங்கி விடுகிறது. காடு வாங்கும் விஷயம் நல்ல படியாக நடந்து முடிய வேண்டுமே என்கிற அவனுடைய வேண்டுதலும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமே என்கிற அவனுடைய பதட்டமும் பிரச்சினை ஏதுமல்லாத நல்ல நிலமாக கிடைக்க வேண்டுமே என்கிற தேடுதலும் கலந்த அவனுடைய உணர்வுகள் புதினம் நெடுகிலும் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன. இது போன்ற கவலைகள் ஏதுமல்லாது உல்லாசமாக கூட வரும் குப்பண்ணாவைப் பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவரை தம்முடைய சகோதரர்களிடன் நிழலிலேயே வளர்ந்தவனாக இருந்தாலும் சுயமான முடிவை நோக்கிப் பயணிக்கையில் இயல்பாக கிளர்ந்தெழும் சாதுர்யம் மிக்கவனாக முத்து உருமாறும் அதிசயமும் நிகழ்கிறது.
முத்து தான் வளர்ந்த குடும்பத்திலிருந்து துண்டித்துக் கொண்டு வேறு இடம் தேடி நகர்வதற்கு அவனுடைய மூத்த சகோதரர் நிகழ்த்தும் அபாண்டமான செயல் ஓர் உச்சமான காரணமாக அமைந்தாலும் அதற்கான மறைமுக உந்து சக்தியாக இருப்பவள் அவனுடைய மனைவி பெருமா தான். இன்றைக்கும் கூட கூட்டுக்குடும்பத்திலிருந்து வெளியேறி தனக்கான நிலத்தையோ, வீட்டையோ தேடிக் கொள்ள பெரும் காரணமாயிருப்பவர்கள் அவர்களின் மனைவிகளாகத்தான் இருப்பார்கள். இது குறித்த தொடர்ந்த தூண்டுதல்களையும் நினைவூட்டல்களையும் மனநெருக்கடிகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருப்பார்கள். இந்தப் புதினத்திலும் முத்துவின் மனைவி பெருமா நேரடியாக பங்குகொள்ளும் பகுதி குறைவாக இருந்தாலும் முத்துவின் பயணத்தை தொடர்ந்து நடத்திச் செல்லும் மறைமுக காரணியாக அவளே இருப்பதை முத்துவின் மனப்பதிவுகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. பெரியாரின் நாத்திக பிரச்சாரம் தந்த உத்வேகத்தில் குடுகுடுப்பைக்காரனை இரவில் பயமுறுத்தி அவனுடைய சாவிற்கு காரணமானதால் எழும் குற்றவுணர்வை காலங்கடந்தும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் குப்பண்ணா நினைவுகூரும் சம்பவம் ஒருவகையான சுவையென்றால் பனையேறும் தொழிலாளர்கள் கேட்கும் அதிக கூலி காரணமாக, தன் மகனின் சாதியையும் அடையாளத்தையும் மறைத்து தாழ்த்தப்பட்ட சிறுவனான அறிமுகத்துடன் அந்தத் தொழிலை கற்றுத்தர அனுப்பும் முத்துவின் தந்தையின் விநோதமான பிடிவாதம் இன்னொரு சுவையான கதையாக இதில் பதிவாகியிருக்கிறது. காட்டைத் திருத்துவதில் பெருமாவின் பாட்டி காண்பிக்கும் ஈடுபாடும் உழைப்பும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
மனிதன் கூடிவாழும் சமூக விலங்குதான் என்றாலும் தன்னளவில் ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவாகத்தான் இருக்கிறான். தன்னுடைய சுய அடையாளத்தை தேடி அடைவதே அவனுக்கு முன் நிகழும் சவாலாக இருக்கிறது. நிலவுடமைச் சமுதாயம் ஏற்பட்டதின் தவிர்க்க முடியாத ஊற்றுக் கண்ணிற்கு பின்னிருக்கும் பிரதானமான உணர்வு இது. பெருங்குடும்பங்கள் மெல்ல மெல்ல சிதறி விலகி உதிரிக் குடும்பங்களாக ஆகிக் கொண்டேயிருப்பது ஒருவகை பரிணாம வளர்ச்சி. காலந்தோறும் இந்தப் பயணம் இடையறாது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். பெருமாள் முருகனின் 'ஆளண்டாப் பட்சி' இந்த ஆதார உண்மையை நுட்பமாகவும் ஒரு சமூகத்தின் பிரத்யேக கலாசாரம் சார்ந்தும் நிறுவுவதில் வெற்றி பெற்றிருக்கிறது எனலாம்.

தமிழ் மின்னிதழில் வெளியானது. (நன்றி: தமிழ் மின்னிதழ்)
suresh kannan
No comments:
Post a Comment