Thursday, May 21, 2015

பறவையின் சிறகும் அறத்தின் குரலும்


 
தமிழ் ஸ்டூடியோ ஒழுங்கு செய்திருந்த 'The Invisible Wings' என்கிற ஆவணப்படம் மற்றும் அதைத் தொடர்ந்து  ஜெயகாந்தன் இயக்கிய 'யாருக்காக அழுதான்' படத்தின் திரையிடல் நிகழ்விற்கு சென்றிருந்தேன்.

முதலில் ஆவணப்படம். இதை இயக்கியவர் ஹரி என்கிற கேரள இளைஞர். திரைப்பட இயக்குநராகும் ஆர்வத்தில் கற்று சில இயக்குநர்களிடம் பணிபுரிந்துள்ளார். ஆனால் வெகுசன சினிமாவில் தன்னைத் தொலைத்து விடாமல் தனக்கான பிரத்யேக தேடுதலோடு இயங்குகிறார். எர்ணாகுளத்தில் டீக்கடை நடத்தி விரும் விஜயன் என்பவரைச் சந்திக்கும் போது அவரது வாழ்க்கையைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பற்றியும் பின்னணியைப் பற்றியும் அவர் அறிய நேர்கிறது. உடனே அதைப் பற்றியே ஓர் ஆவணப்படம் எடுக்கலாமே என்று தோன்ற அதற்கான முயற்சியில் இறங்கினார். இதை ஏதோ ஒரு சாதாரண படமாக உருவாக்கி முடித்து விட முடியாது என்கிற உள்ளுணர்வோடு சுமார் 19 லட்சம் செலவழித்து ஒரு தரமான படைப்பை பதிவு செய்திருக்கிறார். இதற்காக நண்பர்களிடம் கடனாக பெற்ற நிதியை திருப்பியளிக்க அவர் செய்வதுதான் இன்னுமொரு சாதனை. தென்னிந்தியா முழுவதும் சைக்கிளிலேயே பயணம் செய்து தனது ஆவணப்படத்தை எல்லோரிடமு்ம் காண்பிக்கிறார். அவர்கள் தரும் தொகையை சேர்த்து தனது கடனை அடைப்பது என்பது ஏற்பாடு. வழியில் தென்படும் ஏதாவது ஒரு நபர் இந்த ஆவணப்படத்தை பார்க்க விரும்பினால் கூட அதற்கான ஏற்பாடுகளோடு (லேப்டாப், ஹெட்போன்) செல்கிறார். இது இயக்குநர் ஹரியின் வாழ்வியல்.

இன்னொரு புறம் ஆவணப்படத்தில் பதிவாகியுள்ள விஜயனின் வாழ்க்கையைப் பார்க்கலாம். முன்பே குறிப்பிட்டபடி எர்ணாகுளத்தில் கத்ரிகடவு எனும் ஊரில் டீக்கடை வைத்திருப்பவர் விஜயன். தனது பிரியமான மனைவி மோகனாவுடன் எளிய வாழ்க்கை. இப்போது அவருக்கு சுமார் 50 வயதிருக்கலாம். அவருக்கு சிறுவயதிலிருந்தே உள்ளுக்குள் தீ மாதிரி பற்றிக் கொண்டேயிருக்கும் ஒரு கனவு. 'தாம் செல்வந்தராக இல்லாமல் போனாலும் என்ன, இந்தப் பரந்த உலகை அதன் ஒவ்வொரு துளி அழகையெல்லாம் பயணம் செய்து தம் வாழ்நாட்களுக்குள் கண்ணால் கண்டு தீர்த்து விட வேண்டும்.  சிறுவயதிலேயே வீட்டில் உள்ள பொருட்களை விற்று சுற்றிப் பார்க்கச் சென்றது ஒரு துவக்கம். இப்போது தமது சிறிய உணவகத்தில் விற்றுக்கிடைக்கும் சொற்ப தொகைகளை சேர்த்து சேர்த்து சில வருடங்களுக்கு ஒருமுறை தனது பிரம்மாண்ட லட்சிய பயணத்தின் ஒவ்வொரு பகுதியாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அவரது பயணத்திற்கும் ஆர்வத்திற்கும் முடிவேயில்லை. 'இந்தப்பணத்தில் நிலம் வீடு வாங்கிப் போடலாமே' என்று சுற்றியுள்ளோர் செய்யும் ஏளனம் எதுவும் அவரது கனவிற்கு தடையாக வர அவர் அனுமதிப்பதில்லை. 'உலகத்தைச் சுற்றும் என் கனவை இன்னமும் ஆர்வத்துடன் தீர்மானமாகத் தொடர்வேன்' என்று உறுதிப்பட அவர் சொல்லும் அழுத்தமான முகபாவத்துடன் ஆவணப்படம் நிறைகிறது.

இன்றைய தேதியில் குறும்படம் எடுப்பதென்பது, சமூக வலைத்தளத்தில் தமக்கும் தோன்றும் ஒரு குறிப்பை ஜாலியாக எழுதிப் போடுவது மாதிரி பெரும்பாலும் மிக மிக அலட்சியமாக நடந்து கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் சில குறும்படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது. அவற்றை உருவாக்குபவர்களிடம் நிறைய ஆர்வமும் கனவும் இருந்தாலும் அதை செயல்படுத்துவதற்கான உழைப்பும் திட்டமிடலும் மெனக்கெடலும் இல்லையோ என்றும் தோன்றுகிறது. ஹரி இயக்கியுள்ள இந்தக் குறும்படம் மிகுந்த தரத்துடனும் அழகியலுடனும் படத்தின் மையத்திற்கு ஏற்ப அர்த்தப்பூர்வமான பின்னணிகளுடனும் உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பத்து நிமிடத்திற்குள் ஓர் எளிய ஆனால் சாதனை மனிதருடைய வாழ்வின் சாரத்தையும் அவரது கனவின் பரிமாணங்களையும் கச்சிதமாக பதிவு செய்வதும் அதை பார்வையாளர்களுக்கு கடத்துவதும் சாதாரணமான விஷயம் அல்ல. 


இயக்குநர் ஹரி இதற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் என்பது அவருடைய உருவாக்கத்தைப் பார்க்கும் போது தெரிகிறது. விஜயனின் டீக்கடையில் உள்ள ஈஃபில் டவரின் மினியேச்சர், படிப்பறை மேஜையின் மீதுள்ள National Geographic இதழ், துவக்கத்தில் காட்டப்படும் ஆங்கில மேற்கோள் மற்றும் பகவத் கீதையின் சில வரிகள், உலக வரைபடம், இயற்கையின் அழகான பின்னணியில் தோன்றும் விஜயனின் சித்திரங்கள், பயணத்தின் துளிக்காட்சிகள், சிகரம் போல ஆவணப்படத்தின் தலைப்பு போன்றவை இந்தக் குறும்படத்தை அழகாக மட்டுமல்லாது பொருள் பொதிந்த சலனக்காட்சியாகவும் நம்முன் நிறுத்துகிறது. இந்த ஆவணப்படத்திற்கு பிறகு திரையிடப்பட்ட 'யாருக்காக அழுதான்' திரைப்படத்தின் துவக்கத்தில் கண்ணதாசனம் எழுதிய பாடல் ஒன்று வருகிறது. அதன் முதல் வரி இப்படியாக அமைந்திருக்கிறது. 'உருவத்திலே இவன் மனிதன், உள்ளத்திலே ஒரு பறவை.' இந்தப் படிமத்தை விஜயனுக்கும் மிகப் பொருத்தமானதாக கருத முடியும்.

விஜயனுடையது பொதுவாக ஐரோப்பிய மனநிலையைச் சார்ந்தது. புதிய புதிய அனுபவங்களுக்கான தொடர்ந்த தேடலும் வருடத்தின் பாதி நாள் உழைப்பும் பாதி நாள் பயணமுமாக அமைந்தது. இந்திய வாழ்வியல் கலாசாரத்தில் இம்மாதிரியான மனநிலை படிவது மிக அபூர்வமானது. தன் எதிர்கால சந்ததிகளுக்காக  உழைத்து உழைத்து பொருளீட்டி பாதுகாத்து அந்திமத்தில் எவ்வித உலக அனுபவங்களும் அன்றி மறைவது. வீட்டிற்கும் அலுவலகத்திற்குமான குறுகிய பாதையைத் தவிர வேறெதையும் காணாமலேயே செத்துப் போகிறவர்களே அதிகம். தான் வாழ்கின்ற இடம் உள்ளிட்டு பிற பிரதேசங்களைப் பற்றி புத்தகங்களின் வாயிலாக அறிய முற்படுகிறவர்கள் கூட சொற்பமே. இதை உத்சேசித்துதான்  மதவுணர்வுகளின் வழியாக ஆன்மிகப் பயணங்கள் முன்னோர்களால் நமக்கு பழக்கப்படுத்தப்பட்டன. பயணங்களின் போது பலவிதமான மனிதர்களையும் சூழல்களையும் அனுபவங்களையும் கடக்கும் போது நம மனம் விசாலமடைகிறது. அதிகம் பயணம் செய்கிறவர்களைக் கவனித்தால் அவர்கள் பெருந்தன்மையுடையவர்களாகவும் மனிதர்களை நம்புகிறவர்களாகவும் அசெளகரியமான இடத்திலும் சூழலிலும் தம்மை எளிதில் பொருத்திக் கொள்ள இயல்கிறவர்களாகவும் காணலாம்.

இந்தக் குறும்படம் முடிந்தவுடன் பார்வையாளர்களிடமிருந்து கேள்விகள் பெறப்பட்டன. ஓர் பிரதியை சரியாக உள்வாங்கிக் கொள்வதிலிருந்தும் நமக்கு அந்நியமான அனுபவத்தை அதற்குள் செல்ல முடியாமல் நம்முடைய குறுகிய கூட்டிலிருந்தே அமர்ந்து சிந்திப்பதின் மூலம் நாம் எத்தனை பின்தங்கியிருக்கிறோம் என்பதையே நான் உட்பட எழுப்பிய அந்த அபத்தமான கேள்விகள் உணர்த்தின. இதற்குப் பதிலாக வெறும் கைத்தட்டுதல்களின் மூலம் நம் பாராட்டை தெரிவிப்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. கூட்டத்தில் நம்முடைய அறிவை வெளிப்படுத்துகிறோம் என்கிற நோக்கத்தில் நம்முடைய அறியாமையையே முன்வைக்கிறோம். பார்வையாளர்களைச் சோர்வடைய வைப்பதற்காக இதை நான் கூறவில்லை. நம்முடைய குரலை நாமே கேட்கும் விருப்பத்தில் ஏதொவொன்றை கேட்பது என்றல்லாமல் பொருள் பொதிந்த கேள்விகளை முன்வைப்பதுதான் தொடர்புள்ள படைப்பாளிகளை மகிழ்ச்சிப்படுத்துவதோடு அவர்களின் அங்கீகரிக்கும் வழியாகவும் அது அமையும்.

பயணம் பற்றி அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரையின் ஒரு பத்தி இவ்வாறு அமைகிறது. ' எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகொண்டது யார் என்று கேட்டால் எந்தப் பள்ளிச் சிறுமியும் உடனே பதில் கூறுவாள். ஆனால் Edmund Hillary மலை ஏறுவதற்கு முன்பே பலர் முயற்சி செய்து அந்த முயற்சியில் இறந்துபோய் இருக்கிறார்கள். George Mallory முதல் தரம் எவரெஸ்ட்டில் ஏறியபோது வெற்றிபெறவில்லை. இரண்டாவது முயற்சியிலும் தோல்வி கண்டார். அப்பொழுது பத்திரிகைக்காரர்கள் அவரிடம் கேட்டார்கள், 'நீங்கள் எதற்காக எவரெஸ்டில் ஏறுகிறீர்கள்?' அப்பொழுது ஜோர்ஜ் தனது உலகப் புகழ்பெற்ற பதிலைக் கூறினார். 'Because it is there.' ஏனென்றால் அது அங்கே இருக்கிறது. அதுதான் காரணம். அதனிலும் பெரிய காரணம் தேவையில்லை. மனித முயற்சிகளுக்கு அது சவாலாக இருக்கிறது, ஆகவே அதைக் கைப்பற்றவேண்டும்.'

ஆம். எந்தவொரு புதிய அனுபவத்தையும் கண்டடைய எந்தவொரு அற்ப காரணத்தையும் நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொள்ளத் தேவையேயில்லை. நாம் அந்த அனுபவத்தை அடைய வேண்டும் என்கிற ஒரு காரணத்தின் மகத்துவமே போதும். ஒருவகையில் ஆவணப்படத்தில் சித்தரிக்கப்படும் விஜயனும் அதை இயக்கிய ஹரியும் ஒரே மாதிரியான மனநிலையில் வார்ப்பில் இருக்கிறார்கள். ஒருவர் தம்முடைய எளிய சேமிப்பின் மூலம் உலக பயணத்தை மேற்கொள்ள தீராத ஆவலுடன் இருக்கிறார் என்றால் அதை இயக்கிய ஹரியும் இந்த ஆவணப்படத் தொகைக்கான கடனை தீர்க்க தொடர்ந்த பயணத்தில் இருக்கிறார். பயணத்தின் மூலம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் இரு நபர்கள் இணைவது ஒரு மகத்தான அனுபவம்தான்.


ஆனந்தவிகடனில் வெளியான குறுநாவல் 'யாருக்காக அழுதான்' . தமிழ் திரையில் இதைப் படமாக்க அப்போது  பலர் அதிகம் விரும்பவும் சிலர் அதை சாத்தியப்படுத்துவதற்காக முன்வந்தும் இருந்திருக்கிறார்கள். ஜெயகாந்தனுடன் நட்பில் இருந்த காலக்கட்டத்தில் சந்திரபாபு, இதை ஜெயகாந்தன் தமக்காகவே எழுதியிருக்கிறார் என்று தீவிரமாக நம்பியிருக்கிறார். அவர் மீதிருந்த அன்பு காரணமாக ஜெயகாந்தனும் இந்த உணர்வை மறுக்கவில்லை. ஆனால் எந்தவொரு கதையிலும் பிரதான நடிகர்கள் தம்மை மிகைப்படுத்தி படைப்பின் மையத்தையும் ஆன்மாவையும் சிதைத்து விடுவார்கள் என்கிற எச்சரிக்கையுணர்வு காரணமாக இந்தக் கதைக்கான உரிமையை ஜெயகாந்தன் சந்திரபாபுவிற்கு அளிக்கவில்லை. இதனால் இவர்களின் நட்பு விலகல் அடைந்தது.

சேவாஸ்டேஜ் நடிகர் ஏ.வீரப்பன் என்பவரின் மீது ஜெயகாந்தனுக்கு நல்ல அபிப்ராயமிருந்தது. (இவர்தான் பிற்காலத்தில் பெரும்பாலான கவுண்டமணி- செந்தில் நகைச்சுவைப் பகுதியை எழுதியவர்) வீரப்பன் ஜெயகாந்தனின் தீவிர வாசகர். அவரது ஒவ்வொரு கதையையும் திரைப்படமாக்க வேண்டும் என்னும் எண்ணமுடையவர். ஆனால் அதற்கான வசதிகள் அற்ற எளியவர். எனவே இவருடைய பரிந்துரையின் படி காங்கிரஸ் தொண்டரான ஜி.என்.வேலுமணி என்கிற தயாரிப்பாளருக்கு 'யாருக்காக அழுதான்' கதையின் உரிமையை அளித்தார் ஜெயகாந்தன். கதையை சிதைக்காதவாறு எளிமையாக உருவாக்குவதும் அதில் பிரதான பாத்திரமான 'சோசப்பு' வேடத்திற்கு வீரப்பன் பொருத்தமாகயிருப்பார் என்பதும் ஜெயகாந்தனின் அனுமானமாக இருந்தது. ஆனால் அதற்கு மாறாக சம்பவங்கள் நடந்தன. இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, ரங்காராவ், பாலையா போன்ற நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். என்றாலும் ஜெயகாந்தன் இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால் இயக்குநர் ஸ்ரீதர் கதாசிரியரிடம் கதையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயகாந்தனுடன் தம்முடைய சேர்க்கைகளுடன் அமைந்த திரைக்கதையை விவரித்திருக்கிறார் "இறுதிக் காட்சியில் ஒரு மரச்சிலுவையின் முன்னர் தொழுது விழுந்து சோசப்பு உயிர் விடுகிறான்' என்பதாக படத்தின் முடிவை அவர் தெரிவித்த போது, ஜெயகாந்தன் தன்னுடைய பிரத்யேக சினத்துடன் சொன்ன பதில். "சரி. எனில் படத்தின் தலைப்பை 'யாருக்காக செத்தான்' என்று மாற்றிக் கொள்ளுங்கள். இப்படியாக அந்தச் சந்திப்பு இனிதே நிறைவுற்றது. என்றாலும் சில பல காரணங்களால் மனவேற்றுமைகளால் படம் நின்று போனது. சோசப்பு பாத்திரத்திற்கு சிவாஜி பொருத்தமாக இருக்க மாட்டார் என்கிற பிற்கால எண்ணமும் தயாரிப்பாளரின் இந்த மனவோட்டத்தை சிவாஜி அறிந்து கொண்டதும் படம் நின்று போனதற்கு காரணங்கள். (பின்னர் 1975-ல் பி.மாதவன் இயக்கத்திலும் வியட்நாம் வீடு சுந்தரம் எழுத்திலும் வெளிவந்த 'ஞானஒளி' இதன் பாதிப்பாக இருக்கலாம் என்பது என் யூகம். மட்டுமல்ல பாலச்சந்தர் அந்தச் சமயத்தில் உருவாக்கிய 'எதிர்நீச்சல்' நாடகத்திற்கும் 'யாருக்காக அழுதான்' கதைக்கும் தொடர்புள்ளதாக ஜெயகாந்தனின் நண்பர்கள் அவரிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் நாடகத்தைப் பார்த்த ஜெயகாந்தன் இதை ஏற்கவில்லை).

பின்னர் 'யாருக்காக அழுதான்' கதையை இயக்கும் வாய்ப்பு ஜெயகாந்தனையே தேடி வருகிறது. 'கருணையினால் அல்ல' என்கிற கதையை திரைப்படமாக்குவதற்காக முயன்று FFC-யிடம் அவர் மல்லாடிக் கொண்டிருந்த நேரம். கடன் பத்திரங்களில் கையெழுத்திட விரும்பாத தீர்மானத்தில் அந்தச் சமயத்தில் வந்த இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார் ஜெயகாந்தன். பிரதான நடிகரான நாகேஷை விட அதிக ஊதியம் தரப்பட வேண்டும் என்பது போன்ற அவரது தோரணைக்கே உரிய நிபந்தனைகள்.

இத்திரைப்படத்தை நான் கண்டு முடித்த பிறகு கதையானது முழுநீளத் திரைப்படத்திற்கானது அல்லவே என்று முதலில் இருந்தே எனக்குள் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகம் உறுதிப்பட்டது. இதை நல்லதொரு குறும்படமாக உருவாக்கியிருக்க முடியும். இந்த பிரக்ஞையானது ஜெயகாந்தனுக்கே இருந்திருக்கிறது. அதிலிருந்த குறைகளும் தன் முரட்டுத்தனமான பிடிவாதத்தினால் செய்த தவறுகளும் அவருக்கே தெரிந்திருக்கின்றன. ஒரு சம்பிரதாய திரைப்படத்தின் நீளத்தின்படி விநியோகஸ்தர்கள் தந்த அழுத்தத்தினால் செய்த சமரசங்கள் பற்றி அவரே வாக்குமூலம் தந்திருக்கிறார். படத்தின் முதலில் வரும் இயக்குநரின் அசரிரீ குரலும் கண்ணதாசனின் பாடலும் தேவையற்றவை என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. என்றாலும் படத்தின் மையமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஆதார நேர்மையையும் முன்வைக்கப்பட்ட அறத்தையும் பற்றி தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால் அது தோற்றுப் போன போது அவர் மனக்கசப்புடன் இவ்வாறு நினைத்துக் கொண்டார். 'இனிமேல் படம் எடுக்கக்கூடாது, இந்தத் துறைக்கும் நமக்கும் லாயக்கில்லை. இவர்கள் கெடுக'.

***

இந்தப் படத்தைப் பாாப்பதற்கு முன் மூன்று விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டேன். ஒன்று நாயக பிம்பங்கள் வழிபட்டுக் கொள்ளப்பட்டிருந்த காலக்கட்டத்தில் ஒர் எதிர் உரையாடலை நிகழ்த்த முயன்ற திரைப்படம், இரண்டு, தமிழ் சினிமாவின் போலித்தனங்களைத் துளைத்துக் கொண்டு ஆரோக்கியமான படைப்பை உருவாக்கி விட வேண்டும் என்கிற போராட்டக்குணமுடைய ஒர் ஆரோக்கியமான ஆனால் காட்சி ஊடகத்தின் சாத்தியங்களை அறியாத நேர்மையாளரிடமிருந்து உருவாக்கப்பட்டது மற்றும் இப்போதைய நுட்ப மேம்பாடுகளுடன் தன்னிச்சையாக கூட ஒப்பிட்டுப் பார்த்து விடக்கூடாது என்கிற தீர்மானமான பிரக்ஞை.

என்றாலும் படம் துவக்க நிலையில் சலிப்பூட்டுவதாகவும் அமெச்சூராகவும் உருவாக்கப்பட்டிருந்ததை உணர முடிந்தது. தேவையற்ற பல ஷாட்கள். ஆனால் அந்த சலிப்பு ஒரு நிலை வரைதான். கதையின் மையத்தை படம் தீண்டியவுடனேயே நுட்பக்குறைகளெல்லாம் பின்தங்கி அது பார்வையாளனை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டது. நாம் பல தீமைகளுக்கும் கீழ்மைகளுக்கும் நடுவே இயங்கிக் கொண்டிருக்கிறோம். அவற்றின் கவர்ச்சியிலிருந்து எவரும் தப்ப முடிவதில்லை. ஆனால் அதற்கு மாறாக ஓர் அறத்தின் குரல், அந்தரங்கமான நேர்மையின் ஒலி நம்மை உள்ளுக்குள் இருந்து சுட்டிக் காட்டி எச்சரித்துக் கொண்டும்  வழிகாட்டிக் கொண்டும் இருக்கிறது. பல சமயங்களில் நம்மை குத்திக் கிழிக்கிறது, குற்றவுணர்வில் தள்ளுவதன் மூலம் நல்வழிப்படுத்த முயல்கிறது.

இந்த குணாதியசத்தின் ஒரு புறவடிவம்தான் சோசப்பு என்கிற மனிதன். ஒரு தூய ஆன்மா. தீது என்பதன் பொருள் அறியாதவன். அவனுடைய களங்கமற்ற உலகில் தீயவைகளே இல்லை. எல்லாவற்றையுமே ஒரு குழந்தைக்கான கருணையுடனும் அன்புடனும்தான் பார்க்கிறான். தங்கும் விடுதி ஒன்றில் பணிபுரியும் அவன் மீது ஒரு திருட்டுப்பழி சுமத்தப்படுகிறது. நையப் புடைக்கப்படுகிறான். நிரந்தரமான புன்னகையுடன் தன் மீதுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறான் சோசப்பு. தண்டனைகளுக்கான மிக எளிய இலக்கு நிரபராதிகள்தானே? எனவே அவனை பெரும்பாலோனோர் நம்புவதில்லை அல்லது நம்ப விரும்பாதது போல் பாவனை செய்கிறார்கள். அவனை நம்புவது ஓர் அபலைப் பெண் மட்டுமே. திருட்டுச் செய்த விடுதியின் உரிமையாளரும் சோசப்பின் மீதான தண்டனை குறித்து உள்ளுக்குள் மறுகுகிறாரே ஒழிய வெளியே தெரிவிப்பதில்லை. ஒருநிலையில் அவன் திருடன் அல்ல என்பது நிரூபணமானவுடன் அதுவரை தன் வாழ்விலேயே வாய் விட்டு அழாத சோசப்பு, மற்றவர்கள் குற்றவுணர்வுடன் சூழ்ந்து நிற்க வாய் விட்டு அழுது தீர்ப்பதுடன் படம் நிறைகிறது. அவன் யாருக்காக அழுதான்? தன் மேல் அநியாயமாக சுமத்தப்பட்ட தண்டனை குறித்தா? இத்தனை பாவிகளின் நடுவே வாழ வேண்டியிருக்கிறதே என்பது குறித்தா? தங்களின் பாவம் குறித்த தன்னுணர்வு அல்லாத மற்றவர்களின் அப்பாவித்தனம் குறித்தா?  பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள் என்று தேவகுமாரன் சிலுவையில் அறையப்பட்ட போது பிரார்த்தனை செய்தாரே, அந்த நிலையில் இருந்தா?

பல காட்சிகளில் இயேசுவின் திருவுருவம் பார்வையாளர்களுக்கு நினைவூப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சோசப்பு அதற்கு இணையானதொரு படிமமாக இருக்கிறான். படத்தில் உறைந்திருக்கும் இயேசுவின் உருவமும் சோசப்பின் நிலையும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக காண்பிக்கப்பட்டு நெகழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சோசப்பிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பார்வையாளர்களும் இணைந்து கண்ணீர் சிந்துவதுதான் இத்திரைப்படத்தின் நீதியாக இருக்க முடியும்.

தமிழ் திரையின் ஒரு மகத்தான கலைஞன் நாகேஷ். இத்திரைப்படத்தின் ஆதாரமான உணர்வை கச்சிதமாக கைப்பற்ற முயன்றிருக்கிறார். மற்ற திரைப்படங்களில் தான் செய்திருந்த கோணங்கித்தனமான உடல்மொழியை கட்டுப்படுத்திக் கொண்டு சோசப்பாக உருமாற முயற்சி செய்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். படம் நெடுக அவரின் உடல்மொழியிலிருந்து அவர் பெரும்பாலும் மீறவில்லை என்பதிலிருந்தே இத்திரைப்படம் தொடர்பான அவருடைய அர்ப்பணிப்பை உணர முடியும். ஆனால் பாலையா அவரையும் தாண்டிச் சென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நொடிந்து கொண்டிருக்கும் ஒரு விடுதியை நடத்த வேண்டியிருக்கும் சலிப்பையும், மாதம் ஒன்றானால் சரியாக சம்பளம் வாங்க வந்து விடும் தொழிலாளிகளின் நிம்மதியான வாழ்க்கையைக் கண்டு பொருமிக் கொண்டேயிருக்கும் முதலாளித்தனத்துக்கேயுரிய எரிச்சலையும் திருடிய பொருளை ஒளித்து வைக்க அவர் படுகிற பாடும், அந்த குற்றவுணர்ச்சி தாங்காது இறைவனிடம் பிரார்த்திக்கும் அழுகையும் என பல்வேறு கலவையான உணர்ச்சிகளில் மிக இயல்பாக புகுந்து பிரமிக்க வைக்கிறார்.

இந்த திருட்டுச் சம்பவத்தை ஒவ்வொருவருமே தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். முதலாளி பணத்தை ஒளித்து வைத்துக் கொள்கிறான். அங்கு தங்கியிருக்கும் ஏமாற்றும் பேர்வழிகள் தங்களின் ஹோதாவை நிரூபித்துக் கொள்ளவும் திருட்டுக் கொடுத்த சேட்டிடமிருந்து பணம் பறிக்கவும் முயல்கிறார்கள். மலையாள ஜோசியன் ஒருவன் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் தொழிலின் மூலம் சம்பாதித்துக் கொள்கிறான். சோசப்பு ஒரு நிரபராதி தெரிந்தும் அவனுடைய சக பணியாளர்களும் அவனைக் கைவிட்டு பயந்து ஒதுங்கி விடுகிறார்கள். ஒரு குற்றத்தை நம் சமூகம் எதிர்கொள்ளும் அதே மனநிலையையே இந்த மனிதர்களும் பிரதிபலிக்கிறார்கள்.

மானுட குலத்திற்கு தொடர்ந்து நினைவூட்டப்படக்கூடிய அறத்தின் குரலை ஜெயகாந்தனின் குறுநாவலும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமும் நிறுவுகிறது. ருஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ்வின் படைப்புகளைப் போல இந்தப் படைப்பின் உலகளாவிய குரலோடு மனிதர்களை நோக்கி உரையாடுகிறது. ஒரு நல்ல ஐரோப்பிய திரைப்படத்தின் சாயலையும் கூட கொண்டிருக்கிறது. இது போன்ற திரைப்படங்கள் வணிகரீதியான வெற்றி பெற்றிருந்தால் ஜெயகாந்தனைப் போன்று மேலதிகமாக நிறைய எழுத்தாள இயக்குநர்கள் தமிழ் சினிமாவிற்குள் வந்திருப்பார்கள். ஆனால் சோசப்பின் அழுகையைப் போன்று இது போன்ற முயற்சிகளும் யாரும் கவனிக்கப்படாமலேயே நிராகரிக்கப்படுவதென்பது நம் சூழலின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

காட்சிப்பிழை, மே 2015 இதழில் பிரசுரமானது - நன்றி காட்சிப்பிழை

suresh kannan

No comments: