Thursday, May 14, 2015

யுவன் சந்திரசேகர் படைப்புலகம் - உரையாடல் நிகழ்ச்சி




ஓர் எழுத்தாளரின் அனைத்து அல்லது பெரும்பாலான படைப்புகளை ஒருசேர வாசிப்பதென்பது விநோதகரமான இன்பம். சுவாரசியமான அனுபவமும் கூட. ஒருசில எழுத்தாளர்களை மட்டுமே இப்படி வாசிக்க முடியும். (சில எழுத்தாளர்களை ஒருமுறை வாசிப்பது என்பதே துன்பகரமான அனுபவமாக இருக்கும்). ஒரு நல்ல படைப்பாளியின் பெரும்பாலான நூல்களை வாசிக்கும் போது நீங்களும் அந்த படைப்பாளியின் அந்தரங்க உலகின் ஒரு பகுதியாக மாறி விடுகிறீர்கள். நேரில் சந்திக்காமலேயே உங்களுக்கு நெருக்கமான தோழரின்  சாயலை அந்த எழுத்தாளர் பெற்று விடுகிறார். அந்தரங்க உரையாடலின் வழியாகவே இரு நபர்கள் வந்து ஒரு புள்ளியில் இணையும் அந்த அனுபவம் மகத்தான ஒன்று.

அப்படிப்பட்ட அலுக்காத அனுபவத்தை தரும் எழுத்தாளர்களில் ஒருவர் யுவன்சந்திரசேகர்.

இதுவரை ஆறு புதினங்களும் பல்வேறு சிறுகதைகளும், மொழிபெயர்ப்பு நூல்களும், எம்.யுவன் என்கிற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ள யுவன் தனது ஒவ்வொரு நூலிலும் பல்வேறு சோதனை வடிவங்களை முயன்றுள்ளார். அடிப்படையில் அவர் ஒரு கதை சொல்லி என்பது குறிப்பிடத்தக்கது. கச்சிதமான சொற்களுடன் கூடிய உரைநடை, நுட்பமான ஆனால் அபாரமான நகைச்சுவை, திகட்ட வைக்காத தத்துவ இழைகள் என்கிற விசித்திரமான கலவையில் உருவாகும் யுவனின் எழுத்துக்கள் பரவலாக சென்றடைய வேண்டியவை. அதிகமான கவனப்படுத்தப்பட வேண்டியவை.

இணையத்திலும் சரி, அல்லது பொதுவாகவும் சில குறிப்பிட்ட எழுத்தாளர்களைப் பற்றிய உரையாடலும், அவர்களின் அரசியலும் இலக்கியப்பூசல்களும் மட்டுமே திரும்பத் திரும்ப பேசப்படுகின்றன. மாறாக இளம் வாசகர்கள் தமிழில் அறியப்பட வேண்டிய நல்ல எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் முக்கியமான நவீன படைப்பாளிகளுள் யுவன் சந்திரசேகர் முக்கியமானவர். சர்ச்சைகளின் வழியாகவும் இலக்கியப்பூசல்களின் வழியாகவும் தன் இருப்பையும் பீடத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் ஆபாசமான தந்திரங்கள் என்று ஒரு சிலர் செய்யும் வழிமுறைகளை  அவர் செய்வதில்லை என்கிற தகுதியே அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை உண்டாக்குகிறது.

***

யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் பற்றிய ஓர் உரையாடல் நிகழ்வு நண்பர் கிருஷ்ணபிரபுவின் ஒருங்கிணைப்பில் நிகழவிருக்கிறது. யுவனும் அதில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. யுவன் ஒரு சுவாரசியமான பேச்சாளர் என அறிந்திருக்கிறேன். இந்த நிகழ்வில் அவரும் உரையாடக்கூடும் என நம்புகிறேன்.

இந்த நிகழ்வின் சிறிய பங்களிப்பாக யுவனின் படைப்புகள் பற்றி நானும் பேசவிருக்கிறேன். நாவல்கள் பற்றி என் உரை அமையும் என்று கிருஷ்ணபிரபு அவருடைய அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும் அதையும் தாண்டி யுவனின் எழுத்து முறை, அதிலுள்ள சுவாரசியம் போன்றவை பற்றி என் உரை அமையக்கூடும். மேடையில் பேசிய அனுபவமில்லாதது மெல்லிய பதற்றத்தைத் தந்தாலும் நண்பர்களுடன் உரையாடப் போகும் மகிழ்ச்சியும் யுவன் நூல்களைப் பற்றிய வாசக அனுபவத்தை பகிரப் போகும் ஆர்வமும் அந்த பதற்றத்தை தணியச் செய்கிறது.


யுவனின் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி கவிதா முரளிதரனும், சிறுகதைகள் பற்றி அ.மு.செய்யதுவும் கவிதைகள் பற்றி கங்காதரனும் பேசவிருக்கிறார்கள்.

வரும் ஞாயிறு, மே 17 அன்று  மாலை 04.30 முதல் முதல் சென்னை, கே.கே. நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நிகழும் இந்த உரையாடலுக்கு நண்பர்கள் அனைவரையும் வருக என  அன்புடன் அழைக்கிறேன்.

ஞாயிறு மதியம் என்பது ஒரு சங்கடமான நேரம்தான்.  இருந்தாலும் நான் முந்தையதொரு  பதிவில் குறிப்பிட்டிருந்தவாறு
ஒரு வாசகனாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் கிடைக்கும் ஆதாயம் என்னவெனில் லெளகீகச் சிக்கல்களில் திசைமாறி அமிழ்ந்து போன வாசக மனம் சற்று தெளிந்து விழித்துக் கொள்ளும் என்பதுதான். 

வாசிப்பின் இலக்கிய ருசியுள்ளவர்களும் அது மழுங்கிப் போனவர்களும் புதுப்பிக்க விரும்புபவர்களும் அல்லது புதிதாக உருவாக்கி கொள்ள விரும்புபவர்களும் இது போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தன் அந்தரங்க மனதிற்கான தூண்டுதல்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் எழுத்திலே மட்டும் சந்திக்கும் படைப்பாளிகளை பெளதீகமாக சந்திப்பதும் அவர்களைக் கவனிப்பதும் ஒருவகை மகிழ்ச்சியே.

என்கிற காரணத்தை முன்னிட்டு வாசகர்கள் பெருந்திரளாக இந்நிகழ்விற்கு வர வேண்டுமென்று அழைக்கிறேன். வருக.


தொடர்புள்ள பதிவு: டிஸ்கவரி புக் பேலஸ் – இலக்கிய நிகழ்வுகள்

suresh kannan

No comments: