Wednesday, May 13, 2015

மறுவாசிப்பில் சுந்தர ராமசாமி - இலக்கிய வீதி


நூல் வெளியீடுகள், எழுத்தாளர்களின் உரைகள் உள்ளிட்ட  பெரும்பாலான இலக்கிய நிகழ்வுகள் பொதுவாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நிகழ்வதை மற்ற நகரங்களில் வசிக்கும் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் ஒரு காலத்தில் பெருமூச்சுடன் கவனிப்பதை உணர்ந்திருக்கிறேன். (இப்போது மற்ற நகரங்களிலும் நிகழ்வதால் பெருமூச்சின் அளவு குறைவு) ஆனால் சென்னையிலேயே வசித்தும் கூட இம்மாதிரியான பல நிகழ்வுகளுக்கு என்னால் செல்ல முடியாத சில நடைமுறைச்சிக்கல்கள் சில.

தொழில் சார்ந்து நான் இயங்கும் பணியானது ஏறக்குறைய வெட்டியானுக்கு இணையானது என்பதால் எந்த நேரம் பிணம் விழுந்து அழைப்பு வருமோ அப்போது உடனே ஓட வேண்டியிருக்கும். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு  செல்ல பெரும்பாலும் ஆசைப்படுவதில்லை. மீறி திட்டமிட்டால்,  இயலாத சமயங்களில் அது ஒரு கழிவிரக்கமான கசப்பாக உள்ளே படிந்து செய்யும் பணி சார்ந்த மனத்தடைகளை உருவாக்கும். இன்னொன்று, எனக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாததால். பொதுப் போக்குவரத்தை நம்பி குறுகிய நேரத்தில் வெவ்வெறு இடங்களின் நிகழ்விற்கு நேரத்திற்குள் செல்ல முடியாது, வீடு திரும்ப தாமதமாகும் என்பது போன்றவை.

நுகத்தடி சுமையல்லாத ஒரே விடுதலை நாளான ஞாயிற்றுக்கிழமையை வெளியே நகராமல் வாசிப்பு, திரைப்படம் என்று கழிப்பதற்கான சுயநல சோம்பேறித்தனம் மற்றும் இன்ன பிற லெளகீகச் சிக்கல்கள்.

இவைகளைத் தாண்டி செல்ல முடியாத குற்றவுணர்வு மட்டுமே மிச்சமிருக்கும்.

இலக்கிய நிகழ்வுகளுக்கு கூட்டம் வருவதில்லை என்கிற அமைப்பாளர்களின் புகாருக்கு என் தனிப்பட்ட அனுபவம் சார்ந்து சில காரணங்களை கண்டுபிடிக்க முயன்றிருக்கிறேன். தவிரவும் சனி,ஞாயிறின் ஒரே மாலையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எங்கே செல்வது என்கிற உப குழப்பம். இவற்றையெல்லாம் மீறி கூட்டங்களில் கலந்து கொண்டு அவற்றை வெற்றி பெறச்செய்யும் நல்லிதயங்களை நிச்சயம் வாழ்த்திப் பாராட்ட வேண்டும். சோர்வடையாமல் தைரியத்துடன் கூட்டங்களை தொடர்ந்து ஏற்பாடு செய்பவர்களுக்கும் பாராட்டு.

ஒரு வாசகனாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் கிடைக்கும் ஆதாயம் என்னவெனில் லெளகீகச் சிக்கல்களில் திசைமாறி அமிழ்ந்து போன வாசக மனம் சற்று தெளிந்து விழித்துக் கொள்ளும் என்பதுதான். இல்லையெனில் விழா முடிந்து வீட்டுக்குப் போய் நள்ளிரவில் நாற்காலி போட்டு மேலே ஏறி 'ஒரு புளிய மரத்தின் கதை' கிடைக்கிறதா, என்று புத்தக குவியலை துழாவிக் கொண்டிருந்தது எந்தக் காரணத்தினால் என்று நினைக்கிறீர்கள்?

வாசிப்பின் இலக்கிய ருசியுள்ளவர்களும் அது மழுங்கிப் போனவர்களும் புதுப்பிக்க விரும்புபவர்களும் அல்லது புதிதாக உருவாக்கி கொள்ள விரும்புபவர்களும் இது போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தன் அந்தரங்க மனதிற்கான தூண்டுதல்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் எழுத்திலே மட்டும் சந்திக்கும் படைப்பாளிகளை பெளதீக ரீதியாக சந்திப்பதும் அவர்களின் உடல்மொழியைக் கவனிப்பதும் ஒருவகை மகிழ்ச்சியே.

()

எனவேதான் இலக்கிய வீதி நடத்தும் நிகழ்விற்கு செல்ல வேண்டும் என்றெழுந்த தூண்டுதலை பத்திரமாக கைப்பற்றிக் கொண்டேன். இனியவன் பல வருடங்களாக தொடர்ந்து நிகழ்த்தும் இலக்கியச் செயற்பாடுகளை அறிந்திருந்தாலும் சென்றது இதுவே முதன்முறை. 'இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்' என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் உரை நடத்தி, எழுத்தாளர்களுக்கு விருதும் தருகிறார்கள். இந்த மாதம் சுந்தரராமசாமி என்பதால் எனக்கு கூடுதல் சுவாரசியம். 

அது என்னமோ இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்கிறவர்கள் சுலபமானது என்பதால் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, அங்கு என்னென்ன பேசப்பட்டது என்பதைப் பற்றி எழுதுவது இப்போதெல்லாம் குறைந்து விட்டது. நிகழ்ச்சி அமைப்பாளர்களாவது, குறைந்த பட்சம் அதன் காணொளிகளை தரமான விதத்தில் பதிவு செய்து இணையத்தில் ஏற்றி வைக்கலாம். உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் பார்க்க ஏதுவாக இருக்கும்.

()


பாரதிய வித்யா பவன். மைலாப்பூர் களையுடனான முதியவர்களும் மாமிகளும் நிறைந்திருந்த கூட்டத்தைப் பார்க்க சற்று ஆச்சரியம். நான் சென்ற போது ஞானக்கூத்தன் தலைமை உரையாற்றிக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் நுழைந்ததால் எதைப் பற்றி என்று தெரியவில்லை. மறுவாசிப்பு பற்றியது என்று அனுமானம். ஆனால் அவர் சித்தரித்த ஒரு சம்பவம் சுவாரசியமாக இருந்தது.

சு.ரா, க.நா.சு, ஞானக்கூத்தன் கோயிலுக்குச் சென்றிருந்தார்களாம். கடவுள் நம்பிக்கையல்லாத சு.ரா. வெளியிலேயே நின்று விட்டார். ஐயரின் தட்டில் ஞானக்கூத்தன் பத்து ரூபாய் போட்டாராம். இருவரும் கோயிலில் இருந்து வெளியே வந்ததும் க.நா.சு.. தன் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து "ஏன் நீங்கள் அவசரப்பட்டு போட்டீர்கள். எனக்கேதும் புண்ணியம் சேராது அல்லவா, எனவே இந்த ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று ஞானக்கூத்தனிடம் அளித்து விட்டாராம். படைப்பாளிக்கும் ஆசாமிக்கும் உள்ள அகரீதியான வித்தியாசங்களை வாசகர்கள் அனுமானிக்காவிட்டால் குழப்பம்தான். 

யுவன்சந்திரசேகருக்கு 'அன்னம் விருது' அளித்தார்கள். தோற்றத்தில் மணிரத்னத்தை நினைவுப் படுத்துவது போலவே இருந்த அவர் பேச்சையும் அவ்வாறே சுருக்கமாக முடித்துக் கொண்டார். "ஏற்புரையெல்லாம் தர மாட்டேன் என்கிற உத்திரவாதத்தின் பேரில்தான் வந்தேன். எனது எழுத்துக்களுக்கு ஆதரவான கருத்துக்கள், எதிர்வினைகளிலிருந்து நான் சொல்ல என்ன இருக்கிறது. ஏதாவது பிடிக்காத விஷயம் இருந்தால் சொல்லுங்கள். அதைப் பற்றி இரண்டுமணி நேரமாவது உரையாடலாம்" என்றார்.

பிறகு காலச்சுவடு கண்ணன். 

'ஓர் எழுத்தாளரும் அவரது  வாசகர்களுக்கும் கூடும் சபையில், அவரது குடும்பத்தாருக்கு ஏதும் வேலை ஏதும் இல்லை என நினைக்கிறேன். அது இடைஞ்சலை ஏற்படுத்தலாம்' என்று தொடர்ந்தவர், சு.ரா வுடனான தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். புதிய இளம் வாசகர் முதற்கொண்டு எந்தவொரு நபரும் சு.ரா.வின் வீட்டில் வருவதற்கு தடையேதும் அல்லாத சூழலை சு.ரா. உருவாக்கி வைத்திருந்தார் என்பது பற்றிய பகுதியில் சலபதி ஒரு முறை கூறியதாக கண்ணன் தெரிவித்தது, சுவாரசியமானதாக இருந்தது. 'சு.ரா. வின் வீட்டில் எழுத்தாளர்களும் வாசகர்களும் தயக்கம் ஏதுமில்லாமல் உள்ளே நுழைவார்கள். ஆனால் உறவினர்கள்தான் தயங்கி தயங்கி வருவார்கள்'. 

அரவிந்தன்:

சு.ராவோடு பழகியவன் என்கிற முறையில் அவரைப் பற்றியும் அவருடைய நூல்களை வாசித்தவன் என்ற முறையில் அவைகளைப் பற்றியும் எளிதாக பேசிவிடலாம் என்கிற அபார நம்பிக்கை முதலில் இருந்தது. ஆனால் அழைப்பிதழ் வந்தவுடன்தான் அதன் தலைப்பில் 'மறுவாசிப்பில் சுந்தரராமசாமி' என்று போட்டிருந்ததைப் பார்த்ததும் சற்று தயக்கமாகி  விட்டது. ஏனெனில் மறுவாசிப்பு என்பது ஒரு படைப்பை மீண்டும் வாசிப்பது அல்ல, வேறு கோணத்தில் ஒரு புதிய திறப்பாக வாசிப்பது. எனவே கடந்த இரண்டு நாட்களில் சுமார் ஆயிரம் பக்கங்களை வாசித்தேன்.......

என்றவர் சு.ராவின் சிறுகதைகள், கட்டுரைகள், (சு.ரா எனக்காக இரங்கல் கட்டுரை எழுதுவார் என்றால் நான் இப்போதே இறக்கத் தயாராக இருக்கிறேன் என்றாராம் ஓர் எழுத்தாளர்)  நாவல்கள் என்று ஒரு பறவைப் பார்வையில் சு.ராவின் படைப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் துவங்கினார், பிறகு மறுவாசிப்பு நோக்கில் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் நாவல்களின் நுட்பங்களைப் பற்றி நீண்ட உரையாற்றினார்.  அவருடைய நேர்மையான, அபாரமான உழைப்பு அவருடைய உரையில் தெரிந்தது.  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் கூறியதைப் போன்று எவ்வித குறிப்பும் அல்லாமல் நினைவிலிருந்து இத்தனை விஷயங்களை மேடையில் உரையாற்ற வேண்டுமெனில் சு.ராவின் படைப்புகளில் அத்தனை ஊறிய வாசகராக இருக்க வேண்டும். சு.ரா.வின் மற்ற இரண்டு நாவல்களைப் போலவே 'ஆண்கள், பெண்கள்,குழந்தைகள்' மிக முக்கியமான படைப்பு. அதைப் பற்றி அதிகமான உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்பது அரவிந்தனின் ஆதங்கம். 

(புளியமரத்தின் கதை வெளியான காலத்திலேயே அது எழுதப்பட்ட பிரதியாக மட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவிற்குப் பிந்தைய தேசத்தின் குறியீட்டு  நோக்கில் அதன் உட்பிரதி உரையாடல்களும் விவாதங்களும் அப்போதே நிகழ்ந்திருக்கின்றன என்றே நினைக்கிறேன். என்றாலும் அறிமுக வாசகர்களுக்கு அரவிந்தனின் உரை புதிய வெளிச்சங்களை அளித்திருக்கலாம்).

()

அவரை புன்னகைக்க வைப்பது ஒரு சவாலான பணியோ என் எண்ண வைக்கும் இயந்திர முகபாவத்துடன் மேடையில் அமர்ந்திருக்கும் அரவிந்தன், உரை நிகழ்த்தும் போது வேறு மனிதராக மாறி நீர்வீழ்ச்சி போல பொங்கி வழிகிறார். நிகழ்வு முடிந்த பிறகு இவரைச் சந்தித்து சில வார்த்தைகள் பேச முடிந்தது. போலவே யுவன் சந்திரசேகரையும். "சார், மே 17 அன்று உங்களுடைய நூல்களைப் பற்றி பேசவிருக்கிறோம். கிருஷ்ணா சொல்லியிருப்பாரே, நீங்கதான் என்னை விஷ் பண்ணணும்" என்றேன். "அட, இது நல்லாயிருக்கே.. வாங்க நல்லா பேசலாம்" என்றார். நிகழ்வில் பேசுவது குறித்து என்னுள் இருந்த தயக்க குமிழ் யுவனின் சகஜபாவத்தால் அந்தக் கணத்தில் உடைந்தது. 

இலக்கிய வீதி நிகழ்த்தும் இந்த தொடர்கூட்டத்தில் அடுத்த நிகழ்வில் ஜெயகாந்தனைப் பற்றி உரையாடப் போகிறார்களாம். வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

suresh kannan

No comments: