Tuesday, November 12, 2013

ஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'


உலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ஒரு முறை கூட பெற முடியவில்லை என்பது ஒரு முரண்நகை. ஆஸ்கர் என்பது அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டு அமெரிக்கத் திரைப்படங்களுக்கு தரப்படுவதுதான் என்றாலும் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்கிற பிரிவில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான 'ஈரான்' கூட ஒரு விருதைப் பெற்றிருக்கும் நிலையில் இந்தியாவால் மூன்றே முறைதான் இறுதிப்பட்டியலிலேயே வர முடிந்திருக்கிறது. (மதர் இந்தியா -1957, சலாம் பாம்பே - 1988, லகான் 2001).

கடந்த பல வருடங்களாகவே இந்தியாவின் ஆஸ்கர் கனவு நீடித்துக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது தவறிப் போய் விடும் வருத்தத்தால் 'சீச்சி இந்தப் பழம் புளிக்கும்' என்பதன் மூலம் ஆறுதல் பெற்றுக் கொள்கிறது. ஆஸ்கர் நாயகன் என்ற அடைமொழியில் அழைக்கப்படும் கமல்ஹாசன், இந்த விருதைப் பெற்றுத்தருவார் என்று சில முறை எதிர்பார்க்கப்பட்டு சோர்ந்த நிலையில், ஹாலிவுட் படமொன்றிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்ற போது அந்த இரவல் பெருமையை  கொண்டாடியதின் மூலம் நமக்கு சிறிய ஆறுதல் கிடைத்தது.

இந்த நிலையில் 86வது வருட அகாதமி விருதிற்காக, இந்தியாவின் சார்பில் அனுப்ப தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குஜராத்தி திரைப்படமான 'The Good Road'. கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த தேர்வு குறித்து நிறைய சர்ச்சைகளும் முணுமுணுப்புகளும் இந்த வருடத்தில் எழுந்துள்ளன. The Lunchbox , Bhaag Milkha Bhaag, English Vinglish, Celluloid, Vishwaroopam உள்ளிட்ட இருபது திரைப்படங்கள் தேர்விற்கான பட்டியலின் வரிசையில் இருந்த போது, சுமாரான  படமாக கருதப்படும்  'The Good Road' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது திரை ஆர்வலர்கள், விமா்சகர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்கருக்காக அனுப்பப்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று இவர்களில் பெரும்பான்மையோர் சுட்டிக்காட்டுவது 'The Lunch Box' திரைப்படத்தையே. தேர்வுக்குழுவின் தலைவராக இருக்கும் இயக்குநர் கெளதம் கோஷ், 'தன்னுடைய தனிப்பட்ட விருப்பமும் 'The Lunch Box' தான் என்றாலும் தேர்வுக்குழுவின் பெரும்பான்மையான முடிவின்படிதான் 'The Good Road' தேர்ந்தெடுக்கப்பட்டது' என்கிறார். இத்திரைப்படத்தின் விநியோகஸ்தராக Sony Pictures இருப்பதால் சர்வதேச அரங்கில் இதை முன்வைப்பது எளிதாக இருக்கும் என்கிற நடைமுறை காரணமும் கூறப்படுகிறது. இத்திரைப்படம் Cannes மற்றும் Toronto திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருப்பதும் கூடுதல் தகுதியாக முன்வைக்கப்படுகிறது. Ship of Theseus -ம் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.

விருதுகளில் உள்ள அரசியல்களைத் தாண்டி, அரசியல் அல்லாமல் விருது சர்ச்சைகள் நிறைவுறாதல்லவா? சிறந்த திரைப்படங்களாக கருதப்பட்டவைகளைத் தாண்டி இந்த குஜராத்தி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசியல் காரணங்களால் என கூறப்படுகிறது. குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோதி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் தற்போதைய மத்திய அரசான காங்கிரஸ், பாஜகவிற்கு பொதுத் தேர்தலில்  பின்னடைவை ஏற்படுத்தும் முயற்சிகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. 'பெண் குழந்தைகள்' பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கப்பட்டிருப்பது, குஜராத்தின் வறட்சி தொடர்பான காட்சிகள் 'The Good Road'-ல் இருப்பதே காரணம். இதன் மூலம் குஜராத்தைப் பற்றிய எதிர்மறையான சித்திரத்தை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாக சொல்கிறார்கள்.

ஜீன்ஸ், இந்தியன், குரு போன்ற திரைப்படங்கள் கடந்த வருடங்களில் தேர்வு செய்து அனுப்பப்பட்டதான விபத்துக்கள் நேர்ந்திருக்கும் நிலையில் 'The Good Road' இந்தியாவின் ஆஸ்கர் கனவை பூர்த்தி செய்யுமா?

***

Gyan Correa இயக்கியிருக்கும் முதல் திரைப்படமே ஆஸ்கரின் கதவைத் தட்ட போயிருப்பது, அவருக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். மாநில அளவிலான 2013-ன் தேசிய விருதையும் இது பெற்றிருப்பது கூடுதல் தகுதி. சுமார் 2 கோடி ரூபாயில், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தை NFDC தயாரித்துள்ளது.

இது ஒரு Road Movie.  பப்பு என்கிற லாரி டிரைவர் சட்டவிரோத நிழலான ஒரு பணிக்காக அமர்த்தப்பட்டு தனது உதவியாளருடன் குஜராத்தின் சிறுநகரான கட்ச் எனும் பகுதியின் நெடுஞ்சாலையில் பயணிக்கிறார். ஒரு நடுத்தரவர்க்க தம்பதியினர் தங்களது 7 வயது மகனுடன் விடுமுறைக் கொண்டாட்டத்திற்காக பயணிக்கிறார்கள். பூனம் என்கிற சிறுமி தன்னுடைய பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக மும்பையிலிருந்து தனியாக பயணிக்கிறாள். இந்த மூன்று பயண இழைகளில் நேரும் சம்பவங்களையும் சங்கடங்களையும் ஆபத்துக்களையும் அடுத்தடுத்த காட்சிகளால் நேர்த்தியாக அடுக்கியிருக்கிறார் இயக்குநர்.

நிழலான காரியங்களைச் செய்யும் நபர்களை 'வில்லன்களாக' மட்டுமே சித்தரிக்கும் திரைப்படங்களிடையே அவர்களிடையேயும்  உள்ளுறையாக அன்பும் மனிதநேயமும் உண்டு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக காட்சிகள் நகர்கின்றன. தம்பதியினரிடமிருந்து தொலைந்து போகும் சிறுவனை தன்னுடைய பாதுகாப்பில் கவனமாக அழைத்துச் செல்கிறார், லாரி டிரைவர் பப்பு. சிறுவனைப் பிடிக்காத அவருடைய உதவியாளர் இதை எதிர்த்துக் கொண்டே வந்து இறுதியில் அச்சிறுவனுடன் இணக்கமாகிறார். கணவன்,மனைவி போன்று டிரைவருக்கும் க்ளீனருக்கும் இருக்கும் உறவும் புரிதலும், க்ளீனருக்கு உள்ள குருபக்தியும் இந்தப் பாத்திரங்களிடையே சிறப்பாக வெளிப்படுகிறது.

லாரி டிரைவாக நடித்திருக்கும் ஷாம்ஜி, உண்மையிலேயே ஒரு லாரி டிரைவர். ஏறக்குறைய ஒரே மாதிரியான சிக்கனமான முகபாவங்களை பெரும்பாலான காட்சிகளில் இவர் காட்டியிருந்தாலும்  அது காட்சிகளின் பின்னணிகளுக்கு மிகப் பொருத்தமானதாக இயக்குநரால் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. நவரசங்களையும் ஒரே பிரேமில் காட்டத்துடிக்கும் மிகையான நடிப்புகளுக்கு சவால் விடுவது போலிருக்கிறது இவரின் எளிமையான நடிப்பு. வீட்டைப் பிரிந்து  ஒரே மாதிரியான பணியை வருடம் பூராவும் செய்ய வேண்டியிருக்கும் லாரி டிரைவர்களின் உலகத்தின் சலிப்பான ஒரு சிறுபகுதி இவரின் மூலமாக வெளிப்படுகிறது. தனக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களையும் மீறி சிறுவனை அழைத்துச் செல்வதும் அவனின் மீது அன்பு செலுத்துவதற்குமான காரணங்கள் முதலிலேயே நிறுவப்பட்டு விடுகின்றன.

பாட்டி வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் சிறுமி வழியில் இறக்கி விடப்பட்டு பசியுடன் தற்செயலாக அவள் செல்லுமிடம், சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்யுமிடமாக இருக்கிறது. அதை நடத்துபவர் சிறுமியின் மீது பரிதாபப்பட்டு 'இது விவகாரமான இடம். உடனே நீ வெளியேற வேண்டும்' என்கிறார். அங்குள்ள சிறுமிகளில் ஒருவர், பூனத்திற்கு ஆதரவாக இருக்கிறார். அங்குள்ள சிறுமிகளுக்கு தாங்கள் ஈடுபடுத்தப்படும் தொழில் குறித்த வருத்தம் இல்லாமலிருப்பதிற்கு காரணமாக  அதன் பின்னணியில் உறைந்திருக்கும் வறுமையும் அறியாமையும்  பார்வையாளனைச் சங்கடத்திற்குள்ளாக்கிறது. இந்தச் சிறுமியின் மீது பரிவும் பரிதாபமும் காட்டும் தொழில் நடத்துபவர், அதே பரிவை மற்ற சிறுமிகளிடம் ஏன் காட்டுவதில்லை எ்ன்கிற முரண் எழுகிறது. ஜெயமோகனின் நாவலான 'ஏழாம் உலகத்தில்' உடற்குறையுள்ள மனிதர்களை பிச்சையெடுக்க வைத்து பொருளீட்டும் போத்தி, தன்னுடைய மகள் தொடர்பான துன்பம் நேரும் போது தன்னிச்சையாக 'நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்' என்று புலம்புவது நினைவிற்கு வருகிறது.

தொலைந்து போகும் சிறுவனாக நடித்திருக்கும் கேவல் கட்ரோடியாவின் பங்களிப்பு முக்கியமானது. சிறு அசெளகரியத்தைக் கூட ஏற்றுக்கொள்ளாத சலிப்புடன் நடுத்தர வர்க்க சிறுவர்களின் பிரதிநிதியாக முதலில் காட்டப்படும் சிறுவன், பயணத்தின் அனுபவங்கள் தரும் முதிர்ச்சியிலும் லாரி டிரைவர் தரும் அன்பிலும் சிக்கலானதொரு சமயத்தில் சமயோசிதமாக நடந்து கொள்கிறான். இதன் மூலம் தன்னிடம் வெறுப்பைக் காட்டிக் கொண்டேயிருக்கும் க்ளீனரின் அன்பையும் சம்பாதித்து விடுகிறான். ஒரு விடலைச் சிறுவன், பெரிய மனிதர்களின் உலகில் நுழைவதற்கான மாயம் எந்த நுண்ணிய இடைவெளியில் நிகழ்கிறது என்கிற கேள்வியின் அடிப்படையில் எழுத்தாளர் சுஜாதா, நிலா நிழல் என்கிற புதினத்தை எழுதியிருப்பார். வெளியுலக அனுபவங்களும் பயணங்களும் ஒருவனை எத்தனை முதிர்ச்சியும் பரந்த மனப்பான்மையுள்ளவனாகவும் உருமாற்றுகின்றன என்பதை சிறுவனின் மூலமாக நாமும் உணர முடிகிறது . படத்தின் இறுதியில் சிறுவனை திரும்பப் பெறும் போது அவனின் தந்தையும் 'கவனித்தாயா? நம் மகன் வளர்ந்து விட்டது போல் தோன்றுகிறான்? என்று தன் மனைவியுடன் சொல்கிறார். 'மூன்றாம்பிறை' யின் ...ச்சுப்பிரமணி .. போலவே இதிலும் ஒரு துறுதுறு நாயக்குட்டி அற்புதமாக நடித்திருக்கிறது.

படத்தில் பிரதானமாக கவர்வது அதன் ஒளிப்பதிவு. நிதானமாக நகரும் கச்சிதமான சட்டகங்கள். அந்த சிறுநகரத்தின் நிலப்பிரதேச வெளியை அற்புதமாக உள்வாங்கியிருக்கிறது ஒளிப்பதிவு. ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி இதற்கு ஒலிப்பதிவு செய்திருக்கிறார். மிக மிக அவசியமான இடங்களில் மாத்திரமே பி்ன்னணி இசை ஒலிக்கிறது. (ரஜத் தோலாக்கியா). தமிழ்த் திரைப்படங்களில் இசை வாத்தியங்களை ஓய்வெடுக்க விடாமல் இடையூறு செய்யும் இசைமன்னர்கள் கவனிக்க வேண்டிய சமாச்சாரம் இது.

சத்யஜித்ராயின் 'பதேர் பாஞ்சாலி', மீரா நாயரின் 'சலாம் பாம்பே' போன்ற திரைப்படங்கள் சர்வதேச திரைவிழாக்களில் பரவலான கவனத்தைப் பெற்ற போது, 'அவை இந்தியாவின் வறுமையை கண்காட்சியாக்கி வியாபாரமாக்குவதன் மூலம் இந்தியாவைப் பற்றின மோசமான சித்திரத்தை சர்வதேச நாடுகளின் முன் காட்டுகிறது' என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு சமூகத்தின் பிரச்சினையை மிகை உணர்வின்றி அதனுடைய அசலான நிறத்துடன் காட்டுவதுதான் ஒரு கலைஞனின் கடமை' என்கிற ரீதியில் இந்தக் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்தாலும், 'இந்தியா என்றால் பாம்பாட்டிகளும் பழங்குடிகளும்' என்று இன்னமு்ம கூட மேற்கத்திய உலகில் நிலவும் கற்பனைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. 'The Good Road' -ம் இத்தகைய குற்றச்சாட்டிற்கு உட்படலாம்.

சமூகத்தின் எல்லாவிதமான இருளுக்குள்ளும் அன்பும் மனிதநேயமும் ஒரு தூய வெளிச்சமாக படர்ந்திருக்கிறது என்கிற நம்பிக்கையான செய்தியை முன்வைக்கும் இத்திரைப்படம், 'ஆஸ்கர் விருது' வெல்லும் என்று அதே நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

(காட்சிப் பிழை, நவம்பர் 2013-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)

suresh kannan

No comments: