Sunday, November 17, 2013

ஆறு மெழுகுவர்த்திகள்


இயக்குநர் துரையின் 'ஆறு மெழுகுவர்த்திகள்' பார்த்தேன்.

அவரின் முதல் படமான 'முகவரி' எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. தன்னுடைய கனவுக்குள் லட்சிய வேகத்துடன் நுழைய விழையும் இளைஞன் தன் முன்னால் எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தமான இடையூறுகளைக் கண்டு சோர்ந்து கடைசியில் அதனிடம் சரணடைந்து விடுவதான திரைப்படம். வணிகத் திரைப்படங்களின் சாத்தியத்திற்குள் கதையின் மையம் பெரிதும் சிதைவுறாதவாறு மிக நுட்பமான கலவையில் சிறப்பாகவே உருவாக்கியிருந்தார் துரை. சினிமாத்துறையில் வாய்ப்பு கேட்கச் செல்லுமிடத்தில் உதவி இயக்குநர்கள் சேர்ந்து அஜித்தை மது வாங்கி வரப் பணிக்கும் காட்சி என்னால் மறக்க இயலாதது. சினிமாவில் நுழையத்துடிக்கும் பல இளைஞர்கள், எதிர்கொண்டிருக்கும் அவமானங்களின், சுயமரியாதைக்குச் சவாலாக நிகழும் ஆனால் அதற்கு அடிபணிய வேண்டியிருக்கும் பரிதாபமான கணங்களின் ஒரு துளி அந்தக்காட்சிக் கோர்வை.

ஆனால் அவரின் பிந்தைய படங்கள் எதுவும் அத்தனை சிலாக்கியமாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இல்லை. வேறு வழியில்லை. ஓர் இயக்குநர் நிலைக்கு உயர்ந்த பின் திரும்பி வர முடியாமல் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள போட வேண்டிய பல முகமூடிகள்தான் அவரது பிந்தைய படங்கள் என நினைக்கிறேன். என்றாலும் 'ஆறு' மெழுகுவர்த்திகள் திரைப்படத்தைப் பற்றி ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதின கட்டுரை, படத்தைப் பற்றின ஆவலை மூட்டியது. அதில் இயக்குநரின் மனவோட்டங்களாக விவரிக்கப்பட்டிருந்த வார்த்தைகள், அவரது லட்சியத்திரைப்படத்தை குறைந்த சமரசங்களுடன் உருவாக்கப் போராடுவதாக எழுதப்பட்டிருந்தது படத்தின் மீதான நம்பிக்கையை உயர்த்தியது. வீங்கிய கண்களுடன் கூடிய ஷாமின் புகைப்படமும்.

என்றாலும் படத்தைப் பார்த்து முடித்தவுடன் அத்தனை ஆர்வமும் நம்பிக்கையும் வடிந்து உள்ளுக்குள் ஏமாற்றமும் கசப்பும் மாத்திரமே மிஞ்சியது. இதற்கா இத்தனை தம்பட்டம? இந்தப் படத்தின் மிக முக்கியமான எதிர்மறை அம்சமே இதன் ஹீரோயிசம்தான். நடுத்தரவர்க்க ஆசாமியாக அறிமுகப்படுத்தப்படும் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர், இந்தியாவிலுள்ள மாநிலவாரியான நிழலுலக ஆசாமிகளுடன் மோதும் சண்டைக்காட்சிகள் இதன் தரத்தை அதல பாதாளத்திற்கு தள்ளி விட்டுவிட்டன். மாறாக 'மகாநதியில்' கமல், கொல்கத்தா பாலியல் தொழில் நடைபெறும் பகுதியிலிருந்து தன் மகளை மீட்பதற்காக, ஒரு சாதாரண தந்தையாக நடித்திருக்கும் யதார்த்ததிற்கு நெருக்கமான காட்சிகள், இதனோடு ஒப்பிடும் போது எவ்வளவோ தேவலை.  மற்றபடி குழந்தைகளைக் கடத்தி பிச்சையெடுப்பதற்காகவும் கொத்தடிமைகளாகவும் பாலியல் தொழிலாளிகளாவும் பயன்படுத்தும் மாஃபியா உலகின் கொடூரம், சாத்தியப்பட்ட எல்லைக்குள் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது.



ஜெயமோகன், இதன் இசை வெளியீட்டு விழாவில் கூறிய படி, ஒரு தனிமனிதனின் இயல்பு எந்தக்கணத்திலும் உடைந்து போகக்கூடிய நீர்க்குமிழியின் நிலையற்றத்தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது திரைப்படம். கடவுள் நம்பிக்கை உள்ளவென்றால், இதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டிருந்து சும்மாவா இருப்பார் என்கிற கசப்பான யோசனை எழும். யதார்த்தமான ஆசாமியாக இருந்தால், இத்தனை பெரிய அரசியல் அமைப்பு, அதிகாரிகள், காவல்துறை போன்றவையெல்லாம் இயங்கிக் கொண்டுதானிருக்கிறதா அல்லது இந்த மாஃபியா வலைப்பின்னலின் ஒரு பகுதிதான் அவைகளா என்கிற சந்தேகம் எழும். எல்லா தனிநபர்களுக்குமே அவர்களுக்கான குழந்தைகளும் பாசமும் இருக்கும் போது எப்படி அவர்களால் இந்தக் கொடூர உலகினுள் இயங்க முடிகிறது என்பதற்கான விடையை, இதில் வாகன ஓட்டுநராக வரும் ஒரு பாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.

இத்திரைப்படத்தைக் காண்பதற்கான ஆர்வமூட்டும் அம்சங்களில் ஒன்றாக ஷாமின விநோதமான தோற்றமும் படவெளியீட்டிற்கு முன் பிரதானப்பட்டிருந்தது. ஆனால் இதை படத்தில் இயக்குநரால் - நாடகத்தன்மை கூடியாவது - அழுத்தமாக உணரவைக்க முடியவில்லை. 'சேது' திரைப்படத்தில் ஒட்டி உலாந்த, மொட்டையடிக்கப்பட்டிருக்கும் விக்ரமின் உருவத்தை பார்வையாளனுக்கு திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்படுத்துமளவிற்கான அறிமுகத்தை கச்சிதமாக நிகழ்த்தியிருப்பார் பாலா. அதற்கு முரணாக விக்ரமின் முந்தைய தோற்றமும் பாத்திர வடிவமைப்பும் சரியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் ஷாமின் இந்த அளவிற்கான மெனக்கெடல், இயக்குநரால் சரியாக பயன்படுத்தப்பட முடியாமற் போனது துரதிர்ஷ்டம்.

ஆனால் இத்திரைப்படத்திற்கு ஜெயமோகன் தேவைதானா என்கிற கேள்வி இயல்பாக எனக்குள் எழுந்தது. 'ஏழாம் உலகம்' எழுதின ஒரே காரணத்திற்காவே ஜெயமோகனை இதில் பயன்படுத்திக் கொள்வதற்கான எண்ணம் இயக்குநருக்கு தோன்றியிருக்கலாம். கடத்தல் தொழிலின் ஒரு கண்ணியாக இருக்கும் கால் ஊனமுற்றவர் பேசும் ஒரு வசனத்திலும், பெண்தன்மையுடன் பாவனை செய்யும் ஓர் ஆசாமி பழிவாங்கும் உணர்ச்சியுடன் பேசும் வசனத்திலும் தவிர வேறு எங்கும் ஜெயமோகனைக் காணமுடியவில்லை. மாறாக இயக்குநர் இதை வணிக நோக்குத் திரைப்படங்களுக்குரிய சமரசங்களுடன் உருவாக்குவதிலே அவருடைய நோக்கம் பிரதானமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. அதைக் குறை சொல்ல முயலவில்லையென்றாலும், தனது லட்சியத் திரைப்படமாக இதைக்கருதும் போது சமரசங்களின் அளவைக் குறைத்திருந்தால் தமிழ்த் திரையில் இதுவோர் குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக உருவாக்கியிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. 


suresh kannan

No comments: