Wednesday, October 16, 2013

தமிழ் ஸ்டுடியோ - திரையிடல் நிகழ்ச்சி - ஏழை படும் பாடுநண்பர் அருண் (தமிழ் ஸ்டுடியோ), இந்திய சினிமா நூற்றாண்டையொட்டி நிகழ்த்தும் நூறு திரைப்படங்களின் திரையிடல் வரிசை, நிகழ்ச்சிக்கு தினமும் செல்ல வேண்டும் என்று நினைப்பேன். இன்றுதான் வாய்த்தது. இன்று திரையிட்ட படம் 'ஏழை படும் பாடு'. இதைப் பற்றி பின்பு.

திரையிடலுக்கு முன்பாக, இந்தியன் பனோரமா IFFI விழாவில், தேர்வுப் பட்டியலில் 'தங்கமீன்கள்' தமிழ் திரைப்படம் தோந்தெடுக்கப் பட்டிருப்பதை, நடுவர் குழுவின் தலைவராக இருக்கும் லெனின் தெரிவித்தார். மலையாளத்திலிருந்தும் வங்காளத்திலிருந்தும் அதிக படங்கள் தேர்விற்காக அனுப்பப்பட்டிருக்கும் சூழலில் தமிழிலிருந்து வெறுமனே ஆறே திரைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்ததாக  வேதனையுடன் தெரிவித்தார். (அதில் ஒன்று எதிர்நீச்சல் என்ற போது கூட்டம் சிரித்தது.'ஏன் தன்னிச்சையாக சிரிக்கிறீர்கள்? என்று கேட்டு விட்டு லெனினும் சிரித்தார்). மலையாளத்திலிருந்து ஆறு படங்களும் இந்தி மற்றும் வங்காளத்திலிருந்து தலா ஐந்து படங்களும் இறுதிப் பட்டியலில் இருக்கும் போது தமிழிலிருந்து ஒரே ஒரு படம்.

'இந்தியன் பனோரமா' விருது பற்றிய விழிப்புணர்வு இல்லையா? என்று கூட்டத்திலிருந்து கேட்டேன். நான் கேட்க நினைத்தது, 'திரைத்துறையினருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லையா?' என்று. லெனின் அவர்கள் 'பொதுவான விழிப்புணர்வு இல்லையா? என்று புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. '43 வருடங்களாக இந்த விழா நடக்கிறது. சுமார் 33 வருடங்களாக டெல்லி குளிரில் சென்று பார்த்து வருகிறேன். தேடினால் தெரியாதா?' என்பது போல் சொன்னார்.

இது போன்ற விருதுகளுக்கு தமிழ் மொழியின் சார்பில் நாம் குறைந்த படங்கள் அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும், விருது விழாக்களுக்கு அனுப்பப்படுவத்ற்கான தரத்திற்கு எத்தனை படங்கள் தமிழில் உருவாக்கப்படுகின்றன என்பதையும் யோசிக்க வேண்டும். (எதிர் நீச்சல் ... ஹ!).

குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் பிரிவுகளில் கூட நிறைய படங்கள் வருவதில்லையாம். (குறும்பட இயக்குநர்கள் கவனிக்கவும்). 

லெனின் சொன்னதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில் இந்த விழாவில் பங்குபெறவிருக்கின்ற அனைத்து திரைப்படங்களையும் (சுமார் 250) சென்னையில் திரையிட ஏற்பாடு செய்யவிருப்பதாக கூறினார். நிச்சயம் சென்று பார்க்க வேண்டும்.

பிறகு இயக்குநர் ராமிற்கும் லெனினிற்கும், அருண் நினைவுப் பரிசு (புத்தகம்) வழங்கினார். பிறகு திரையிடல் ஆரம்பமானது.

()

'ஏழை படும் பாடு'  - விக்டர் ஹியுகோவின் பிரெஞ்சு நாவலான 'லெஸ் மிஸரபில்ஸ்" -ஐ அடிப்படையாக கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்டது. கருப்பு - வெள்ளைத் திரைப்படங்களுக்கேயுரிய பிரத்யேக அழகுடன் கூடிய பிரேம்கள். (வீட்டில் பிள்ளைகள், தொலைக்காட்சியில் கருப்பு - வெள்ளைத் திரைப்படங்களின் காட்சிகள் வந்தாலே, ரிமோட்டைத் தூக்கி விடுகிறாாகள்). நான் சுமார் ஒரு மணி நேரம்தான் பார்த்தேன். பிறகு கிளம்பி விட்டேன்.

பிரதான பாத்திரமாக வி.நாகையா. திரைப்படங்களில் சபிக்கப்பட்ட பாத்திரங்களுக்கென்றே சிலரை நேர்ந்து விட்டு விடுவார்கள். எப்பவும் முணுமுணுவென அப்பாவித்தனமாக அழுது கொண்டே இருப்பதே இவர்களின் முழு நேர பணி. (பெண்களில் செளகார் ஜானகி). நாகையா அப்படிப்பட்டவர்களில் ஒருவர். தெலுங்கு நடிகரென்றாலும் தமிழை ஏறக்குறைய தெளிவாகவே உச்சரிக்கிறார். ஆனால் இவர் சிரி்த்தால் கூட அழுகிற மாதிரியே இருக்கிறது. முகபாவங்கள் பெரிதும் மாறுவதில்லை. அந்தக் கால (மிர்ச்சி) சிவா போலிருக்கிறது.

கவனித்தவரையில் ஒரு காட்சி சுவாரசியமாக இருந்தது. குடிசை வீடு. வறுமை. பிள்ளைகள் பசியுடன் காத்திருக்கிறார்கள். எங்கும் வேலை கிடைக்காமல் வெறுங்கையுடன் சோகமாக வீடு திரும்புகிறார் நாகையா.. அவரது அக்காள் ஏனென்று விசாரிக்கிறார். நாகையா பதில் சொல்கிறார். பிறகு அக்கா சொல்கிறார். "சரி விடு. மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்தாமயா போயிடுவான்".

அடுத்த காட்சியில் பெரும் சப்தத்துடன் மழை பெய்கிறது. குடிசை வீட்டிற்குள் மழை நீர் பயங்கரமாக ஒழுகுகிறது.

நகைச்சுவைக் காட்சியெல்லாம் இல்லை. சீரியஸாகவே அப்படித்தான் காட்டுகிறார்கள். subtle humour. இயக்குநரோ அல்லது வசனகர்த்தாவோ, கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவராகவோ அல்லது குறும்புக்காரராகவோ இருக்க வேண்டும். அல்லது உள்ளபடியே சீரியஸாகவே அப்படித்தான் யோசித்தார்களா என தெரியாது.

பாலையா, ஒரு நயவஞ்சக கனவான் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.

பார்த்தவரையில் சுவாரசியமாகத்தான் இருந்தது. பிறகு எங்காவது முழுவதையும் பாாக்க வேண்டும்.

()

அருணிற்காகத்தான் இந்த திரையிடலுக்குச் சென்றிருந்தேன். லெனின் சொன்னபடி, திரைத்துறையின் சங்கங்களோ, அரசு அமைப்புகளோ அதற்கான நிதியுதவிகளோடு செய்ய வேண்டியதை தனி ஆளாக அருண் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்தும் பாராட்டும்.

தொடர்புள்ள இணைப்புகள்.

http://www.hindu.com/cp/2007/11/02/stories/2007110250481600.htm

http://newindianexpress.com/states/kerala/Malayalam-films-top-IFFI-Indian-panorama/2013/10/16/article1837928.ece

suresh kannan

1 comment:

வவ்வால் said...

சுரேஷ் கண்ணன்,

//'இந்தியன் பனோரமா' விருது பற்றிய விழிப்புணர்வு இல்லையா? என்று கூட்டத்திலிருந்து கேட்டேன். நான் கேட்க நினைத்தது, 'திரைத்துறையினருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லையா?' என்று. லெனின் அவர்கள் 'பொதுவான விழிப்புணர்வு இல்லையா? என்று புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. '43 வருடங்களாக இந்த விழா நடக்கிறது. சுமார் 33 வருடங்களாக டெல்லி குளிரில் சென்று பார்த்து வருகிறேன். தேடினால் தெரியாதா?' என்பது போல் சொன்னார்.

இது போன்ற விருதுகளுக்கு தமிழ் மொழியின் சார்பில் நாம் குறைந்த படங்கள் அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும், விருது விழாக்களுக்கு அனுப்பப்படுவத்ற்கான தரத்திற்கு எத்தனை படங்கள் தமிழில் உருவாக்கப்படுகின்றன என்பதையும் யோசிக்க வேண்டும். (எதிர் நீச்சல் ... ஹ!).//

தரமான திரைப்படங்களை சினிமா நூற்றாண்டு ஒட்டி திரையிடப்படுவது ,தனிநபர் முயற்சி என்றாலும் ,சிறப்பானதே, தமிழ் ஸ்டுடியோ "அருண்" அவர்களுக்கு பாராட்டுக்கள்.

உங்களுக்கே திரைப்பட விழாக்களுக்கு எப்படி தேர்வாகுதுனு விடயம் இன்னும் புரியலையா?

திரைத்துறையினருக்கு விழிப்புணர்வுலாம் நிறையவே இருக்கு ,பலர் அனுப்பாததற்கு வேறு காரணம் இருக்கு,

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யவேண்டும் எனில் , வழக்கமாக படம் எடுத்தவர்கள் தான் எண்ட்ரி சப்மிட் செய்யனும், அதுக்கு கட்டணம் 5000 ரூ, மேலும் படத்தினை அனுப்ப ஆகும் செலவு தயாரிப்பாளரது, அதோடு திரையிட தேர்வானால் படத்தின் ஒரு காப்பியினை "பிரிண்ட் காஸ்ட்டிற்கு" அவர்களுக்கு விற்றுவிடனும்,அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பின்னர் விழாக்கள், ஃபில்ம் கிளப்புகளில் திரையிட்டுக்கொள்வார்கள், அதுக்கு பணம் எல்லாம் தரமாட்டாங்க.

இது போன்ற காரணங்களால் பொதுவாக பிரபலங்கள் தங்கள் படங்களை அனுப்புவதில்லை, யாருக்கேனும் விருது ஆசையிருந்தால் மட்டும் அனுப்புறாங்க, எனவே ஓடாத படம், சிறு தயாரிப்பாளர்கள் மட்டும் கோவா ஃபில்ம் ஃபெஸ்ட்டிவலுக்கு போனப்படம்னு பெருமையாக சொல்லிக்க அனுப்புகிறார்கள் என நினைக்கிறேன்.

இப்படி எண்ட்ரி அனுப்பி தேர்வு செய்யாமல் ஜூரிகளும் சில படங்களை தேர்வு செய்து சேர்த்துக்கலாம், ஆனால் அப்படி தேர்வு செய்யப்படும் படங்கள் எண்ணிக்கை சரியா தெரியலை(5 என நினைக்கிறேன்)

லெனின் அவர்கள் தான் 'கோவா ஃபில்ம் ஃபெஸ்டிவல்" படத்தேர்வுக்குழு தலைவராக இருபதால் தான் தங்கமீன்கள் தேர்வாச்சுனு சொல்லவில்லை, ஆனால் தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் இருப்பதும் சாதகமான அம்சமாக இருந்திருக்கலாம்.