Wednesday, October 09, 2013

இந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை

 
 
1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிமாவின் வர்த்தக சபையும்  தமிழக அரசும் இணைந்து ஒரு விழாவைக் கொண்டாடி இருக்கிறது. பணி ஓய்வு பெரும் நபர் ஒருவருக்கு நடத்தப்படும் சடங்கு போல இந்த விழாவும் அதற்கேயுரிய எல்லாவித  வெற்று சம்பிதாயங்களோடு நிறைந்து இருந்தது. ஒரு பெரி்ய விழாவிற்கேயுரிய அரசியல் அலட்டல்களும், சர்ச்சைகளும்,  விமர்சனங்களும், முணுமுணுப்புகளும் இதிலும் இல்லாமலில்லை.

இந்திய சினிமாவின் வயது நூறு என்பது ஒருபுறமிருக்கட்டும். தமிழ் சினி்மாவை மட்டும் வைத்து உரையாடும் போது, அது சுமார் எண்பது ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் அதில் சில அரிதான நல்ல முயற்சிகளைத் தவிர, சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, திரைமொழியின் இலக்கணத்தில் முற்றிலுமாக பொருந்தக்கூடிய, குறைந்தபட்சம் தற்பெருமையாகச் சொல்லக்கூடிய ஒரு தமிழ் சினிமா கூட  இதுவரை உருவாகவில்லை என்கிற எளிய உண்மையில் இருக்கிற அபத்தம், கொண்டாட்ட மனநிலையில் இருக்கிற எவருக்கும் உறைக்கிறாற் போல் தெரியவில்லை. வெறுமனே ஆண்டுகளை மாத்திரம் கடந்திருக்கிற வெற்றுப் பெருமையைக் கொண்டாட இத்தனை பெரிய விழா - அதனுள் பொதிருந்திருக்கும் அரசியல் உட்பட - நிகழ்ந்திருப்பது அவல நகைச்சுவையின் உதாரணம். ஒன்றுமில்லாததற்கு கொண்டாடப்பட்ட இந்த விழாவில் சில நபர்களின் விடுபடல்கள் குறித்த முணுமுணுப்புகளும் அதிலுள்ள அரசியல்களும் இந்த நகைச்சுவையின் அபத்தத்தை இன்னமும் கூட்டுகின்றன.

இந்த விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை திரையரங்குகளில் சில தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தமிழ்த்திரைப்படங்களின் வரிசை, எல்லா நகைச்சுவைப்படங்களையும் தோற்கடிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.  முட்டாளோ என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர், 'நான் ஒரு முட்டாள்' என்று அவரே அதிகாரபூர்வமாக தன் கழுத்தில் ஒரு அறிவிப்பு பலகையை மாட்டி வைத்து அதை நிரூபிக்க போட்டி போட்டால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அந்தத் தேர்வின் வரிசை. அடிமைப்பெண், ரிகஷாக்காரன் போன்ற காவியங்கள், பாசமலர் போன்ற மிகையுணர்வு சித்திரங்கள் போன்றவைகளால் நிரம்பியிருந்தது இந்தத் தேர்வு. பருத்தி வீரன் மாத்திரமே சற்று ஆறுதலான பெருமூச்சு. இந்த தேர்வுகளின் பின்னாலுள்ள அரசியலைப் பற்றி  வெளிப்படையாக உரையாடமலேயே  நம்மால் புரிந்து கொள்ள முடிவது எப்படிப்பட்ட கோமாளித்தனமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

நாடகத்தின் நீட்சியாக இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் திரைமொழியில் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தி அதன் முகத்தை சிறிதாவது நவீனமாக மாற்றியமைத்த இயக்குநர்கள பற்றிய பேச்சே மேற்குறிப்பிட்ட வரிசையில் இல்லை. பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரைய்யா, ஜெயகாந்தன் உள்ளிட்ட பல சிறந்த இயக்குநர்களும் அவர்களது படைப்புகளும் இதில் நினைவு கூரப்படவேயில்லை. ஒரு பிரதேசத்தின் எண்பது ஆண்டுக்காலத்திற்கான சினிமாக்களை நினைவு கூரும் போது,  காலமாற்றத்தினால் இப்போதைக்கு அபத்தமாய்த் தோன்றினாலும் அந்தந்த காலக்கட்டத்தில் சிறப்பானதாக அறியப்பட்ட திரைப்படங்களைத்தான் திரையிட முடியும் என்றாலும் கூட அதிலும் அரசியல் காரணமாக மிக மோசமான தரத்தில் உருவாக்கப்பட்ட வெகுஜனப்படங்களையே பிரதிநிதித்துவப்படுத்தியிருப்பது தமிழ் சினிமாவின் முகத்தை சிறப்பாக காட்ட வேண்டும் என்கிற யத்தனத்தை விட அரசியலே பிரதானம்  என்று செயல்பட்டிருக்கிற கீழ்தரமான சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. எஸ்.பாலசந்தரின் அந்த நாள், பொம்மை, மகேந்திரனின் உதிரிப்பூக்கள், ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான், பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், உள்ளடக்கத்தில் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவின் அதுவரையிலான திரைமொழியை கணிசமான அளவில் பாதித்த மணிரத்னத்தின் நாயகன் போன்றவை சட்டென நினைவுகூரும் போது தோன்றிய விடுபடல்கள்.

தமி்ழ்சினிமாவைப் பற்றிய எவ்வித அறிமுகமில்லாத,  ஓர் அந்நிய திரைப்பட ஆய்வாளர் வந்திருந்து திரையிடப்பட்ட இந்த அபத்தங்களின் வரிசையை பார்க்க நேர்ந்தால், அவரது குறிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை யூகிக்கவே சுவாரசியம் கலந்த திகிலாக இருக்கிறது.

***

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிற வகையில் (காக்கா வந்து சொல்லுச்சா, என்றெல்லாம் கேட்கக்கூடாது) நம்முடைய சினிமாவின் அருமை பெருமைகளை தமிழ்ச் சமூகத்திற்கேயுரிய மிகையுணர்ச்சியோடும் அசட்டுத்தனமான சுயபெருமையோடும் நாம் மாத்திரமே பேசிக் கொண்டிருக்கிறோம். எவ்வித மனச்சாய்வுமற்ற ஒரு திரைப்பட பார்வையாளனுக்கு எந்த சினிமா உன்னதமான அனுபவத்தைத் தருகிறது என்பதை நேர்மையாக பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவா, அல்லது அவன்  டிவிடியில் தேடி தேடிப் பார்க்கும் உலக சினிமாவா?

இங்கு ஒரு உணவுப்பொருளை மிக கவனமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தாலே, சர்வதேச தரக்கட்டுப்பாட்டின் விதிகளை அது நிறைவேற்றவில்லையெனில் நிராகரிக்கப்பட்டு விடுகிறது. அது போல கலைப்படைப்புகள் அவற்றின் பிரதேசங்களைத் தாண்டி உலக அரங்கில் பரவலாக அறியப்படுவது அது பெறும் விருதுகளால். ஒரு கலைப்படைப்பின் தர அடையாளத்தை விருதுகளின் மூலமாகவும் (விருதுகளில் உள்ள அரசியலையும் தாண்டி) அனுமானிக்க முடியும்.

 உலகிலேயே அதிகமாக திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிற நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவிலேயே அதிகமாக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழகம். எண்பது ஆண்டுகளைக் கடந்திருக்கிற தமிழ் சினிமா, இதுவரை எத்தனை முறை 'உண்மையான' சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது அல்லது அங்குள்ள அரங்குகளில்  திரையிடப்படும் தகுதியையாவது குறைந்தபட்சம் கொண்டிருக்கிறதா என்பதை அடிப்படையாக யோசித்துப் பார்த்தாலே நாம் நின்று கொண்டிருக்கிற இடம் நமக்கு எளிதில் புரிந்து விடும். இங்கு கலைமாமணி விருது தரப்படுவது போல மற்றநாடுகளிலும் கிடைக்கும் சில்லறைத்தனமான விருதுகளை இங்கு சேர்க்கக்கூடாது.

திரைப்படத்திற்கென்று வழங்கப்படும் சர்வதேச விருதுகளில் பரவலாக அறியப்படுவதும் உலகம் முழுவதிலும் அதிகம் கவனத்திற்குள்ளாவதும் என்று பார்த்தால் அது 'ஆஸ்கர் விருது. இந்திய சினிமாவிற்கும் குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு நீண்ட நெடிய ஆஸ்கர் கனவு உண்டு. ஆஸ்கர் விருதிற்காக ஒவ்வொரு நாடும் அதன் சார்பில் தேர்ந்தெடுத்து அனுப்பும் சினிமாக்களில் இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படங்களின் தரத்தைக் கண்டு திரைப்பட ஆர்வலர்கள் ஒவ்வொரு வருடமும் கண்ணீர் சிந்துவார்கள். 'சீசீ இந்தப் பழம் புளிக்கும்' என்பது போல் 'ஆஸ்கர் என்பது அமெரிக்கத்தரம்' என்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆறுதல் சொல்லிக் கொள்ளும் நாம், ஏன் அதில் வெளிநாட்டுத்திரைப்படங்களுக்கான  பிரிவின் இறுதிப் பட்டியலில் ஒருமுறை கூட இடம்பிடிக்க முடியவில்லை என்பதை சற்று நிதானமாக யோசிக்க வேண்டும். ஆஸ்கர் குறித்த ஏக்கமும் அதுகுறித்த வெறுப்பும் என இரட்டை மனநிலையில் இயங்கும் இந்திய சமூகம், ஒரு ஹாலிவுட் படத்திற்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற போது எப்படி கொண்டாடித் தீர்த்தது என்பதிலிருந்து அந்த விருதின் மீது நமக்குள்ள பிரேமையைப் புரிந்து கொள்ள முடியும்.  அந்தந்த பிரதேசங்களின் கலாச்சார பின்புலத்தில் சிறந்த திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் போது தமிழ்த்திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் பின்னணி எதுவென்பதையும் யோசிக்கலாம். தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை, கலாச்சாரத்தை திரைப்படங்களின் வழியே அறிந்து கொள்ள விரும்பும் ஓர் மேற்கத்திய ஆய்வாளர், தமி்ழ்த்திரைப்படங்களில் அதனுடைய எவ்வித அடையாளத்தையும் தடயத்தையும் காண முடியாததோடு, அவருடைய நாட்டின் தெருக்களிலேயே தமிழ் கதாபாத்திரங்கள் அபத்தமான டூயட் பாடிக் கொண்டிருப்பதைக் கண்டு நகைக்கவே செய்வார்.

***

இந்த விழாவைக் கொண்ட பத்து கோடி ரூபாயை, தென்னிந்திய சினிமாவின் வர்த்தக சபைக்கு தந்திருக்கிறது தமிழக அரசு. மக்களின் வரிப்பணம் எத்தனையோ விதங்களில் ஊதாரித்தனமாக அழிக்கப்படுவதற்கு இதுவுமோர் பனிமுனை உதாரணம். இந்த விஷயத்திற்காக 'முதல்வருக்கு நன்றி' சொல்லி  விசுவாசத்தை நிரூபிப்பதற்காக தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட விளம்பரங்களின் செலவே பல லட்சங்கள் இருக்கும் போலிருக்கிறது. ஒருபுறம் பத்து கோடியை தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மறுபுறம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஜெயா தொலைக்காட்சிக்கு மாத்திரம் அளித்து மற்ற தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுத்த விநோதத்தை எவ்வாறு புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. திரைப்பட வெளியீட்டின் மீதான தடைகள் தொடர்பாக சமீபத்தில் சர்ச்சைகளில் தமிழக அரசால் மறைமுகமாக பழிவாங்கப்பட்ட நடிகர்கள் கூட இன்முகத்துடன் வந்து இந்த விழாவில் விருதுவாங்கி உரையாடிச் சென்றது, நிழலைவிட நிஜத்தில் உண்மையில் இவர்கள் எத்தனை அற்புதமான நடிகர்கள் என்பதையும் நிழலில் மாத்திரமே இவர்கள் சூப்பர் ஹீரோக்கள் என்கிற செய்தியையும்  நமக்கு தெளிவாகச் சொல்கிறது. அதிகாரத்திற்குப் பணிய மறுத்து மிக உயர்ந்த விருதுகளைக் கூட மறுத்த அசலான படைப்பாளிகளின் கலக அரசியல் நம் நினைவுகளில் நிழலாடுகிறது.

பல கோடி ரூபாய் முதலீட்டில் இன்னுமும் பல கோடிகளை சம்பாதித்து இயங்கும் தமிழ்த்திரையின் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் விழா நடத்தும் செலவு என்பது எளிதில்  எட்டிவிடக்கூடிய தொகையே. எனில் அதற்காக அதிகாரத்தின் முன் கைகட்டி வாய்பொத்தி கிடைத்த தொகையுடன் எதற்காக பெரிய கும்பிடு போட வேண்டும்? பல வணிகக் காரணங்களுக்காக அரசின் தயவையும் கருணைப் பார்வையையும் தொடர்ந்து எதிர்பார்க்கும் அதற்காக எல்லாவித அவமானங்களையும் சகித்துக் கொள்ளும் தமிழ்த்திரையுலகம், குறைந்தபட்சம் நூற்றாண்டு விழாவையாவது சுயமரியாதையுடன் சொந்த செலவில் தகுதியுள்ள படைப்பாளிகளை அங்கீகரித்தும் நல்ல திரைப்படங்களை திரையிட்டும்  கொண்டாடக்கூடாதா?


***

படத்தொகுப்பாளர் லெனின் இந்த விழா ஏற்பாடுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். பல நல்ல திரைப்படங்களை, கலைஞர்களை இந்த விழா கண்டுகொள்ளாதது குறித்து அவரின் அறிக்கை கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்தாலும் எல்லாவற்றையும் மீறி அதில் பிரதானமாக தெரிந்தது 'கருணாநிதி ஏன் இந்த நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டார் என்பது". 'அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு கலைஞன் என்கிற வகையிலாவது கருணாநிதி அவர்கள் இந்த விழாவில் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்பது அவரின் ஆதங்கம்.

காட்சிகள் பிரதானமாய் இயங்க வேண்டிய திரைப்பட ஊடகத்தில் வண்டி வண்டியாய் உரையாடலைக் கொண்டு வந்து நிரப்பினதில் கருணாநிதிக்கும் மிகப் பெரிய பங்குண்டு. மொழியுணர்வு என்கிற ஆயுதத்தின் மூலம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்கிற நோக்கில் பயணித்த திராவிடக் கட்சிகள் அதற்காக திரைப்பட ஊடகத்தையும் பயன்படுத்திக் கொண்டனர். அடுக்கு மொழிகள், எதுகை மோனைகள், வார்த்தை ஜாலங்கள் என்று வசனங்களை எத்தனை செயற்கையானதாக ஆக்க முடியுமோ அத்தனை செயற்கையாய் ஆக்கினதின் விளைவை இன்றும் கூட தமிழ் சினிமா சந்தித்து வருகிறது. 'நடுவர் அவர்களே....' என்று கையை காலை ஆட்டி முஷ்டியை உயர்த்தி தொலைக்காட்சிகளில் வருங்கால பேச்சாளர்கள் ஆடும் கெட்ட ஆட்டம், இதனுடைய நீட்சியே. இந்த வகையில் தமிழ் சினிமாவின் மேன்மைக்கு கருணாநிதி அவர்களின் பங்கு என்ன என்பதை லெனின்தான் சொல்ல வேண்டும். சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கூட தனிநபர் துதி மற்றும் அரசியல் அல்லாது நம்மால் உரையாட, செயல்பட முடியவில்லை என்பது நாகரிக சமூகத்தின் முன் நாம் அடைந்திருக்கும் வீழ்ச்சியையே காட்டுகிறது.

இது போன்ற வெற்றுப் பெருமைகளைக் கொண்டாடுவதற்கு முன் நாம் அடைந்திருக்கும் உயரத்தையும் சாதனையையும் சாவகாசமாக சிந்திப்பதும் அதை அடைவதற்கான  முயற்சிகளையும்தான் நாம் முதலில் செய்ய வேண்டியது. கொண்டாட்டங்களெல்லாம் பிறகுதான். தமிழ் சினிமா தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடப் போகும் வருங்காலத் தருணத்திலாவது நிலைமை சற்றாவது மேம்பட்டிருக்கும் என்கிற நம்பிக்கையோடும் பிரார்த்தனையோடும் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

- உயிர்மை - அக்டோபர் 2013-ல் வெளியான கட்டுரையின் முழுவடிவம். (நன்றி: உயிர்மை)     
 
suresh kannan

6 comments:

சேக்காளி said...

// இந்த தேர்வுகளின் பின்னாலுள்ள அரசியலைப் பற்றி வெளிப்படையாக உரையாடமலேயே நம்மால் புரிந்து கொள்ள முடிவது எப்படிப்பட்ட கோமாளித்தனமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது//
விரிவாய் கூறியுள்ள அத்தனை விசயங்களும் இந்த வாக்கியத்தில் அடங்கி விட்டது.அப்புறம் விருதை குறி வைத்து ஒரு படைப்பை உருவாக்க முடியுமா?.

enRenRum-anbudan.BALA said...

95% யதார்த்தம் கருத்துகளில்! ”கோமாளித்தனமான சமூகம்” என்பது எல்லாவற்றையும் உணர்த்தி விட்டது!

Sriram said...

Suresh Kannan,

Recently your blog has taken a very negative tone. It will be much better if you can review some "above average" type movies made in Tamil, Hindi and other Indian languages. If you compare to the Telugu movies, Tamil movies are far better. (IMHO, Telugu industry remains a big drag on whole southern industry - don't forget they have most money)

விடுதலை கரடி said...

Plz review onayum attukuttiyum .particularly Rajas BGM

Anonymous said...

உயிர்மை கட்டுரை எல்லாம் மனச்சாட்சி இல்லாமல் தான் எழுத வேண்டும் போல் இருக்கு.

நீங்கள் சொல்வது போல் இல்லை, தமிழ் சினிமா சில நல்ல படங்கள், மற்றும் உலக தர நடிகர் உள்ளடக்கியது.

கழுகு பார்வையன்பது உயர்த்தில் பறந்து அவலத்தை மட்டும் காண்பது அல்ல நண்பா.

Balaram Srinivasan said...

காட்சிகள் பிரதானமாய் இயங்க வேண்டிய திரைப்பட ஊடகத்தில் வண்டி வண்டியாய் உரையாடலைக் கொண்டு வந்து நிரப்பினதில் கருணாநிதிக்கும் மிகப் பெரிய பங்குண்டு. மொழியுணர்வு என்கிற ஆயுதத்தின் மூலம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்கிற நோக்கில் பயணித்த திராவிடக் கட்சிகள் அதற்காக திரைப்பட ஊடகத்தையும் பயன்படுத்திக் கொண்டனர். அடுக்கு மொழிகள், எதுகை மோனைகள், வார்த்தை ஜாலங்கள் என்று வசனங்களை எத்தனை செயற்கையானதாக ஆக்க முடியுமோ அத்தனை செயற்கையாய் ஆக்கினதின் விளைவை இன்றும் கூட தமிழ் சினிமா சந்தித்து வருகிறது. 'நடுவர் அவர்களே....' என்று கையை காலை ஆட்டி முஷ்டியை உயர்த்தி தொலைக்காட்சிகளில் வருங்கால பேச்சாளர்கள் ஆடும் கெட்ட ஆட்டம், இதனுடைய நீட்சியே. இந்த வகையில் தமிழ் சினிமாவின் மேன்மைக்கு கருணாநிதி அவர்களின் பங்கு என்ன என்பதை லெனின்தான் சொல்ல வேண்டும். சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கூட தனிநபர் துதி மற்றும் அரசியல் அல்லாது நம்மால் உரையாட, செயல்பட முடியவில்லை என்பது நாகரிக சமூகத்தின் முன் நாம் அடைந்திருக்கும் வீழ்ச்சியையே காட்டுகிறது.