Thursday, August 22, 2013

சேரனை முன்னிட்டு சில விஷயங்கள்....



இயக்குநர் சேரன் vs மகள் விவகாரத்தை இச்சமூகத்தைச் சார்ந்த ஒரு தனிநபரின் பிரச்சினையாக சமூக நோக்கில் அணுகிப் பார்க்கலாம். ஆனால் சேரன் சமூகத்தில் ஒரு பிரபலமான நபர் என்பதாலேயே இந்த விவகாரத்தின் மீதான கவனம் அதிகமாக குவிகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த விவகாரத்தின் சமீப திருப்பமாக, சேரனின் மகள் தன் குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுவது - ஒரு தற்காலிகமான முடிவாக - சரியானது என்றே எனக்குத்  தோன்றுகிறது. இதை ஒரு சம்பிதாயமான நோக்கில் சொல்லவில்லை. இப்போது அந்தப் பெண்ணுக்குத் தேவை, மனரீதியான எவ்வித நெருக்கடியும் அல்லாமல் சிந்திப்பதற்கான கால அவகாசம். அதை இந்த முடிவு தரும் என நினைக்கிறேன்.

ஏனெனில், தன்னுடைய காதலனுடன் செல்வதாக முன்னர் எடுத்த முடிவும் சரி,  பெற்றோருடன் செல்வதாக எடுத்த இப்போதைய முடிவும் சரி, இரண்டுமே பல நபர்களின் இடையூறுகளினாலும் உளவியல் ரீதியான நெருடிக்கடியினாலும், உணர்ச்சி குவியல்கள் சார்ந்த அழுத்தத்தினாலும் குழப்பத்தினாலும் எடுத்ததாகவே தோன்றுகிறது. இப்போது எல்லாவற்றிலும் இருந்து விலகி நின்று யோசிப்பதற்கான சந்தர்ப்பம் அமைய வேண்டும். சுற்றியுள்ளவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இந்தச் சமயத்தில் இந்தப் பெண்ணை விடவும் அதிகம் கவனிக்கப்பட வேண்டியதும், உளவியல் ஆலோசனை தேவைப்படுவதும் அந்தப் பையனுக்குத்தான் என நினைக்கிறேன். 'தான் ஏமாற்றப்பட்டோம்' என்கிற எண்ணமும் சுயபச்சாதாபமும் அதிகாரத்தின் முன்பு ஒரு சாதாரணன் உணர்கிற உளவியல் தாக்குதலும் அந்த நபரை நிலைகுலைய வைத்து விடலாம். இளவரசன் - திவ்யா விவகாரத்தில், இளவரசனும் இதே போன்றதொரு சூழலில்தான் தற்கொலை முடிவை நோக்கி (அது தற்கொலையாக இருக்கும் பட்சத்தில்) நகர்ந்தார் என யூகம் செய்ய வேண்டியிருக்கிறது.

காதல் திருமணங்கள் பரவலாக பெருகிக் கொண்டிருந்தாலும் இன்னமும் நாம் கட்டுப்பெட்டியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த விவகாரம் நமக்கு உணர்த்துகிறது. ஓர் இயக்குநராக காதல் தொடர்பான திரைப்படங்களை உருவாக்கின, முதிர்ச்சியான மனநிலையைக் கொண்டிருப்பார் என்று நாம் கருதக்கூடிய ஒரு படைப்பாளியே தம்முடைய சுய வாழ்க்கையில் காதலுக்குத் தடையாக நின்றிருக்கக்கூடிய முகாந்திரங்களை இந்த விவகாரம் நமக்கு உணாத்துகிறது. ஒருவேளை அந்தப் பையனின் பின்னணியும் நடவடிக்கைகளும் ஆட்சேபகரமானதாக இருக்கும் பட்சத்தில் அதை தன் மகளிடம் விளக்கிப் புரிய வைக்கலாம். ஆனால் தன்னுடைய செல்வாக்கின் மூலமும் பணபலத்தின் மூலமும் இந்தக் காதலை அவர் தடுக்க முயன்று கொண்டிருந்தால் அது சரியானதாக இருக்காது.

சேரன் பிரபலமான நபர் என்பதாலேயே மீடியாக்களின் வெளிச்சமும் பரபரப்பும் கவனமும் அவர் மீதே பெரும்பாலும் இருந்தது. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஒரு பெண்ணின் தகப்பனாக உருக்கமுடனும் கண்ணீருடன் அவர் நின்ற சித்திரத்தினால் பொதுப்புத்தியின் அனுதாபம் அவர் மீதே குவிந்தது. மாறாக எதிர்தரப்பினருடைய விளக்கம் பரவலாக வெளிப்படாததால், அவர்களின் தரப்பு கவனிக்கப்படாமல் போனது மாத்திரமல்லாமல், இந்த அனுதாபமே வெறுப்பாக அவர்கள் மீது பாய்ந்தது. அந்தப் பையன் மது குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இது போன்ற பையனுக்கு யார் பெண் தருவார்கள் என்ற பத்தாம்பசலித்தனமான கேள்வியை சிலர் கேட்டிருந்தனர். மது குடிப்பதை ஒழுக்கம் சார்ந்தும் அறம் சார்ந்தும் சிந்திப்பதுமான கலாச்சார எண்ணங்களே இது போன்ற முட்டாள்தனங்களுக்கு காரணம். மாறாக மதுவருந்துவதை ஒரு கட்டுப்பாடுடன் கூடிய பழக்கமாக நமக்கு பின்பற்றத் தெரியவில்லை என்பதே உண்மை.

இந்த விவகாரத்தில் சேரனுக்கு மிக பக்கபலமாக நின்ற திரைத்துறையினரின் நட்பும் ஆதரவும் ஒருவகையில் பாராட்டத்தக்கது என்றாலும் தம்முடைய சுயதுறை சார்ந்த 'தலைவா' பட விவகாரத்தில் பெரும்பாலும் அனைவருமே மெளனம் சாதித்தது ஒரு நகைமுரண்.

suresh kannan

7 comments:

ரவி said...

வயதை வைத்து பார்க்கையில் மேஜர். ஆனால் மன ரீதியில் மைனர். ஆகவே நீதிபதிகள் மிக சிறப்பாக இந்த பிரச்சனையை கையாண்டு தீர்வை தந்துள்ளார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை !!!

Anonymous said...

என்ன சொல்ல வருகிறீர்கள்?

சும்மா நாலு நியூஸ் சேனலையும், சில இன்டர்நெட் செய்திகளையும் படித்து விட்டு, பொத்தம் பொதுவாக எழுத கூடாது. திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதுவதும், இதுவும் முற்றிலும் வேறு.

நமக்கு அவர்களுடைய உண்மை கதை என்னவென்றே தெரியாது. எதையும் தெரியாமல் ஜஸ்டிபிகேசன் செய்வது....

Anonymous said...

சரியான ஒர் ஆய்வு.

tamil news said...

பணம் படைத்தவன் காதல் செய்தால் அது புனிதம் .பணம் படைத்தவன் காதலை தடுத்தால் அது நீதி .பணம் படைத்தவன் அழுதால் அது கண்ணீர்...அது இல்லாதவன் காதல் செய்தால் அது நாடகம் .அது இல்லாதவன் அழுதால் ????????....ஒரு பெண்ணுக்கு இரண்டு பெண் என்று காதல்!!!!!!!!! செய்பவர்கள் இங்கு காதல் மன்னன்கள் ,,மன்மதன்கள் பிறகு உலக நாயகன் கூட ஆவர்கள்...பணம் இல்லாதவன் ரெண்டு பெண்களிடம் பேசினா கூட அவன் இங்கு உலகமகாஅய்யோகியன் ..காசு பணம் துட்டு மணி மணி மணி ..மத்தபடி இல்லாதவன் எது சொன்னாலும் இத நீ கேள ..ஐயோ ஐயோ

Katz said...

மீடியா சொல்லும் செய்தியை மட்டும் வைத்து இப்படி எழுதுவது சரியாய் இருக்காது. please do some film review

சிவ.சரவணக்குமார் said...

முதல் கோணல்.......சந்துருவை தாமினி திருமணம் செய்துகொள்ளவில்லை ...அப்படியிருக்க , சந்துருவின் குடும்பத்தினருக்கு ஆட்கொணர்வு மனுப்போட எந்த உரிமையும் இல்லை....

வழக்கம்போல் சட்டத்தை மட்டும் பார்க்காமல்[ பெண் மேஜரா.....அவள் முடிவுதான் சரி.....கேஸ் டிஸ்மிஸ்டு....], நிதானமாக நடந்துகொண்ட நீதித்துறைக்கு பாராட்டுக்கள்... ஆனால் இதே நிதானம் சாமான்யன் விஷயத்திலும் காட்டப்படுமா?

எப்பவுமே செலிபரிட்டிகள் கொடுத்துவைத்தவர்கள்........

Anonymous said...

You are extremely intelligent.Your writeup is 100% true.