Tuesday, August 13, 2013

மரியான்: மாற்று சினிமாவின் பாவனை



முன்னோட்டக் காட்சிகளைக் (டிரைய்லர்) கண்டு ஒரு திரைப்படத்தைப் பற்றி தீர்மானிக்க கூடாது என்பது பாலபாடமென்றாலும் மரியான் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை (டிரைய்லர்) பார்த்த போது சமீபத்திய தமிழ் திரைப்பட வரவுகளில் இதுவொரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என உள்ளுணர்வு காரணமாக கருதினேன். ஆனால் படம் வெளிவந்து பார்த்து முடித்த பிறகு அந்த டிரைய்லரை தொகுத்த எடிட்டரை நிச்சயம் பாராட்டியேயாக வேண்டும் என்று  தோன்றியது. ஏனெனில் படத்தில் சிறிதளவே இருக்கும்  சிறப்பான காட்சித் துணுக்குகளை தொகுத்து முழுப்படமும் சிறந்தபடம் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு விட்டார்.

சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெரிய பட்ஜெட், வெளிநாட்டுக் காட்சிகளின் மாய்மாலங்கள், இலக்கியவாதிகளின் பங்களிப்புகள், உண்மைச் சம்பவம் அடிப்படையில் உருவான கதை போன்றவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு சிறந்த திரைப்படத்தை தந்து விட முடியாது என்பதற்கான சமீபத்திய உதாரணம் 'மரியான்'.  எவ்வித முன்திட்டங்களுமல்லாமல் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்ற பிறகுதான் 'சீன்' யோசிக்கும் அதிசய இயக்குநர்களுக்கு மத்தியில் bounded script வைத்து கறாராக திட்டமிட்டாலும் இயக்குநர் நினைத்தபடியான இறுதி வடிவம் வருவது என்பது மாத்திரமல்லாமல் அதுவொரு சிறந்த சினிமாவுமாக ஆவதும் கூட ஒரு தற்செயலான விஷயமாக அமைவதில் ஏதோ ஒரு மாயமிருக்கிறது. சினிமா என்பது பல கலைஞர்களின் கூட்டு உழைப்பால் நிகழ்வது என்பதால் இயக்குநரின் முழுக் கட்டுப்பாட்டில் அந்தக் குழுவே ஒத்த அலைவரிசையில் இயங்கினால்தான் ஒரு நல்ல சினிமா உருவாக முடியும்.

மரியானில் துண்டு துண்டாக சில அற்புதமான கணங்கள் உள்ளன. ஆனால் முழுமையான வடிவத்தில், பொருளுக்காக குடும்பத்தை துறந்து புலம் பெயர்ந்துள்ளவர்களின் துயரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறந்த சினிமாவாக மலரும் வாய்ப்பை தவற விட்டு விட்டதில் எல்லாமே வீண். மரியானின் மிகப் பெரிய பலவீனம்  திரைக்கதை. ஒரே நிலையில் தேங்கிக் கொண்டிருந்தால் அது சிறந்த திரைக்கதையல்ல. பல்வேறு கிளையாக பிரிந்து ஒரு மைய இழையை நோக்கி நகர்ந்து கொண்டேயிருப்பதே சுவாரசியமான திரைக்கதையின் அடிப்படையாக இருக்கும். சாவகாசமான டைம்லைனில் எடுக்கப்படுவதுதான் மாற்று சினிமா என்பது ஒரு மாயை. வேகமாக நகரும் திரைக்கதையின் மூலமும் ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கலாம். இரானிய திரைப்படமான A Separation - ஓர் உதாரணம். இன்னொரு பலவீனம் அழுத்தமேயில்லாத பாத்திரங்களின் வடிவமைப்பு. இப்படியாக பலவற்றைச் சொல்லலாம். 


நீரோடி என்கிற கற்பனையான குமரி மாவட்டத்துக் கடற்கரையின் திறமைசாலியான மீனவன் மரியான்.(தனுஷ்).  தன்னை விழுந்து விழுந்து காதலிக்கும் பனிமலரை (பார்வதி) புறக்கணிக்கும் அவன் பின்னர் ஏற்றுக் கொள்ள முடிவு செய்கிறான். பணம் இருந்தால்தான் அவளை திருமணம் செய்ய முடியும் என்கிற சிக்கலான சூழலில் அதற்காக இரண்டு வருட பணி ஒப்பந்தத்தில் சூடான் நாட்டிற்கு  செல்கிறான். பணிக்காலம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அங்குள்ள இளம் தீவிரவாதிகளால் பணத்திற்காக கடத்தப்படுகிறான். மரியான் மீண்டானா, பனிமலருடன் இணைந்தானா என்பது இறுதிப்பகுதி. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காதல்+ தீவிரவாதம் என்பது மணிரத்னம் கண்டுபிடித்த அற்புதமான வணிக ஃபார்முலா. தமிழ் சினிமாவின் தீராத வெற்றிகரமான சலி்த்துப் போன கச்சாப் பொருளாகிய காதலை, மார்பகங்கள் குலுங்கும் காட்சிகளுடன் நைசாக சொல்லி விடலாம். தீவிரவாத எதிர்ப்பு என்பதையும் மிகையுணர்ச்சியுடன்  சொல்லி தேசிய நீரோட்டத்தில் இணைந்து பிரகாசிக்கலாம். மணிரத்னம் 'ரோஜா' விலிருந்து இதை துவங்கியதால், விளம்பரப் பட இயக்குநரான பரத்பாலாவும் இந்த ஃபார்முலாவை பின்பற்றியிருக்கிறார் என்று நம்பத் தோன்றுகிறது. ஆனால் மணிரத்னமிடமுள்ள சுவாரசியமாக கதை சொல்லும் திறன் என்கிற திறன் கூட இவரிடமில்லை. சில நிமிடங்களுக்குள் ஒரு செய்தியை மிக சுவாரசியமாகவும் அழுத்தமாகவும் சொல்ல வேண்டுமென்பது விளம்பரப் படங்களுக்குள்ள நியதி. அந்தப் பின்னணியிலிருந்து திரைப்படம் இயக்க வந்த பரத்பாலா, இத்தனை மேலோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

முதல் பகுதி பெரும்பான்மையும் பனிமலர் தன் காதலை மரியானிடம் தெரிவிக்க விழையும் காட்சிகளில் மிக சாவகாசமாக நகர்கிறது.  ஆனால் இது பலவீனமான திரைக்கதையுடன் எவ்வித நம்பகத்தன்மையும் நுண்ணுணர்வுகளுடனான காட்சிகளுடன் இல்லாமலிருப்பதால் இவற்றுடன் உணர்வுரீதியாக ஒன்ற முடியாமல் விலகியே நிற்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே இரண்டாவது பகுதியில் மரியான் தனிமையில் துன்புறும் போதும் பனிமலர் இவனுக்காக ஏங்கி காத்திருக்கும் போதும் காட்சிகளுக்கு உணர்வு ரீதியாக போதுமான அழுத்தம் கிடைக்கவில்லை. வெறும் பாடலாக  கேட்ட போது அற்புதமான உணர்வுகளைக் கிளறின 'எங்க போன ராசா' கூட காட்சிகளின் பின்னணியில் வெறுமையாக நகர்கிறது.

தனுஷ் - ஆடுகளம் மூலமாக தேசிய விருதின் வெளிச்சம் இவர் மீது விழுந்த பிறகு தேசிய சினிமாவிற்கு நகர்ந்திருப்பது மகிழ்ச்சி. ஆஸ்கர் விருதை நோக்கி சிறந்த நடிகராகவே ஆவது என்கிற வெறித்தனத்துடன் இருக்கிறார் என்பது தெரிகிறது. சில காட்சிகளில் இவரது உடல்மொழியும் வசனமும் அற்புதமாக இருந்தாலும் (ஆரம்பக் காட்சியில் தொலைபேசிக் கட்டணத்தை பார்த்துக் கொண்டே காதல் பொங்க பேசுவது உதாரணம்) பல காட்சிகளில் செயற்கையாகத் தோன்றுவதற்கு திரைக்கதையின் பலவீனமே காரணம். கமல் தேசிய விருது பெற்று சிறந்த நடிகர் என்று நிறுவப்பட்ட பிறகு நாயகனில் அவர் வாந்தியெடுப்பது போல் அழுவதையே ஒரு கிளிஷேவாக தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காட்டி வெறுப்பேற்றுவார்கள். அப்படியே தனுஷூக்குமான காட்சிகளும் இதிலுண்டு.

பார்வதியும் அப்படியே. கலைடாஸ்கோப்பின் வழியாக பார்ப்பது போல் இவர் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் மின்னல் இடைவெளியில் மாறி மாறி  தோற்றமளிக்கின்றன. எனவேதான் ஒளிப்பதிவாளர், மிக தைரியமாக இருவருக்கும் மிக நெருக்கமான அண்மைக் கோண காட்சிகளை பயன்படுத்தியுள்ளார் என்று தோன்றுகிறது. அழுகின்ற காட்சிகளில் எம்.ஜி.ஆர் ஏன் முகத்தை மூடிக் கொள்கிறார் என்று யோசிக்கும் போதுதான் குளோசப் காட்சிகளில் நடிக்கும் சிரமமும் அதன் தகுதியும் தெரியும். பார்வதி தன்னுடைய சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தாலும் இதுவும் வெற்றாய் ஆனதற்கு இயக்குநர்தான் காரணம்.  'பூ' திரைப்படத்தின் மாரிக்கும் 'மரியானின்' பனிமலருக்கும் உள்ள வித்தியாசத்தை உணருவதின் மூலம் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

தேசிய விருது பெற்றிருக்கும் இன்னொரு மலையாள நடிகரான சலிம் குமார், மொழிப் பிரச்சினையினாலோ என்னவோ இத்திரைப்படத்தில் மைதானத்தில் விரட்டப்படும் எலி போலவே தவித்திருக்கிறார். திரைக்கதை மாத்திரமல்ல, எந்தவொரு பாத்திரத்தின் பின்னணியுமே அதனதன் தனித்தன்மையோடு அழுத்தமாகவும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்படாததினாலேயே எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போகிறது. இதனாலேயே பாலைவனத்தில் அலைந்து திரிந்து பித்தநிலைக்கு சென்று சிறுத்தைகளின் பிம்பங்களைக் காணும் மரியானின் உழைப்பும் கடலுக்கும் அவனுக்குள்ள உறவும் எவ்வித அனுதாபத்தையும் உணர்வையும் ஏற்படுத்தவில்லை.

படத்தின் நாயகனை, நாயகி துரத்தி துரத்தி காதலிக்கும் எம்.ஜி.ஆர் காலத்து பாணி இதிலும் தொடர்கிறது. இந்தக் காதல் என்கிற விஷயத்தில் தமிழ்த் திரையின் நாயகர்கள் இருமுனைகளி்ல் இயங்குகிறார்கள்.  ஒன்று, எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமல் மிக ஒழுக்கசீலராக செயல்படுவது. அல்லது பொறுக்கித்தனமாக பின்னாலேயே சுற்றி மிரட்டியாவது அவளிடமிருந்து காதலைப் பிடுங்கியெடுப்பது. மரியான் இதில் முதல் வகையில் செயல்படுகிறார். இவருக்குள்ளும் காதல் இருந்தாலும் வேண்டுமென்றே பனிமலரை வெறுப்பது போல் நடிக்கிறார். (அந்த சர்ச் காட்சி அற்புதம்). நாயகியே மேலே வந்து விழுந்தாலும் 'பிட்டு' படங்களில் வரும் ஆண்மைக்குறைவுள்ள பாத்திரம் போல் தள்ளி விடுகிறார். இப்படி தமிழ் சினிமா நாயகர்கள் யதார்த்தலிருந்து விலகி நின்று தங்களது கற்பைக் காக்கும் மரபை உடைத்த படமாக 'அட்ட கத்தி'யை சொல்லலாம். அதில் ஒரு பெண்ணை நினைத்து உருகும் நாயகன், பேருந்து பயணத்தின் போது தம்மை பாலியல் இச்சையுடன் நெருங்கும் ஒரு முதிர்கன்னியை மெல்லிய குற்றவுணர்வோடு உரசி இன்புறுகிறான். இதில் மரியான் தன்னுடைய காதலை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதற்கு ஒரு சீன் வைத்திருக்கிறாரே, இயக்குநர், அந்தக்  காரணத்தை மாத்திரம் மன்னிக்கவே முடியாது.

'மரியான்' கடற்கரையோர மீனவர்கள் தொடர்பான படமென்கிற பாவனையுடன் படம் இயங்கினாலும் செம்மீன் போல அது எவ்வகை பாதிப்பையும் ஏற்படுத்தாதது, அதிலுள்ள பிளாஸ்டிக்தனம்தான். இந்த லட்சணத்தில் சமூகப் பிரச்சினையை தொட்டுச் செல்லும் ஆசையும் இயக்குநருக்கு வந்து விடுகிறது. மரியானின் நண்பர் ஒருவர் மீன்பிடிக்கச் செல்லும் போது கடலில் சுடப்படுகிறார். 'சுட்டுட்டாங்க.. சுட்டுட்டாங்க" என்று உறவினர்கள் பொதுவாக அலறுவதும் மரியான் மிக உருக்கமாக கண்ணீர் சிந்துவதோடும் இந்தக் காட்சி கடந்து விடுகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும், பல ஆண்டுகளாக தொடரும் இந்தக் கொடுமையை சென்சார் பயத்தினாலோ என்னவோ கள்ள பாவனையுடன் கடப்பதற்குப் பதில் அதை முழுவதுமாகவே தவிர்த்து விடுவதாவது ஒருவகையில் நேர்மையாக இருக்கும். முன்னர் நீர்ப்பறவை' என்கிற திரைப்படத்திலும் இம்மாதிரியான பாவனையே பல்லிளித்தது. இந்த உள்ளூர் அரசியல் மாத்திரமல்ல, வறுமையில் வாடும் ஆப்ரிக்க மக்களின்அரசியலையும் அதன் பின்னணியையும் கூட ஒரு வரியிலேயே கடந்து விடுகிறார் இயக்குநர். அது சரி, இது தமிழ் சினிமாதானே? பனிமலர், மரியானின் உதட்டில் முத்தமிடும் காட்சியில் திரையரங்கில் இதையே பெரிய சாதனையாக நினைத்து ரகசியக் கிளர்ச்சியுட்ன் கூச்சலிடும் தமிழ் சமூகத்திற்கு இந்த தரம் போதும்தான்.

காதல், பிரிவு, உயிர்த்தெழுதல் போன்ற உணர்வுகளைப் பற்றின படம் என்று படத்தின் அறி்விப்புகள் முழங்கினாலும் சில விடுபடல்களைத் தவிர்த்து அதில் எவ்வித அசலான தன்மையையும் காண முடியவில்லை. தமிழ் சினிமாவில் வழக்கமான கழிவுகளைத் தவிர, உருப்படியாக படம் எடுப்பவர்கள் என்று அறியப்படுபவர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றன. துண்டு துண்டாக சில மின்னல் கீற்றுகள் இருந்தாலும் ஒட்டு மொத்த சினிமாவாக பார்க்கும் போது அது தரும் உன்னதத்தை இழந்து விடுகின்றன. இங்குதான் சர்வதேச தரத்திலான படைப்புகளுக்கும் தமிழ் சினிமாவின் தரத்திற்குமான விலகலையும் தூரத்தையும் உணர முடிகிறது. தீவிரவாதிகளால் ஒரு குழியில்  தள்ளப்பட்டு சில நாட்களைக் கடந்து தலை நிறைய முடியுடன் காட்சியளிக்கும் மரியான், அதிலிருந்து தூக்கப்படும் போது வெட்டப்பட்ட குறைந்த முடியுடன் வருகிறான். Continuity -என்றொரு விஷயம் இருக்கிறதா இல்லையா? இப்படி அடிப்படையான விஷயத்தில் கூட அலட்சியத்துடன் இருக்கும் வரை தமிழ் சினிமா, உண்மையான சர்வதேச விருதுகளை நினைத்து கூட பார்க்க முடியாது.

 

பரதவர்களின் வாழ்வியலை 'ஆழி சூழ் உலகு' புதினத்தில் பதிவு செய்த ஜோ.டி. குரூஸ் இதில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். (ஒரு காட்சியில் வந்தும் போகிறார்) கவிஞர் குட்டி ரேவதியும் இணை இயக்குநராக பணியாற்றியதோடு ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இலக்கியத்தில் தொடர்புள்ளவர்கள் இப்படியாக தமிழ் சினிமாக்களில் தொடர்ச்சியாக பணியாற்றுவது சமீப காலத்தில் அதிகரித்துள்ளது மகிழ்சசி என்றாலும் வணிக சினிமா எனும் இயந்திரம், அவர்களின் திறமையை தன் வார்ப்பிற்கேற்றவாறு உபயோகப்படுத்திக் கொண்டு சக்கையாக மென்று துப்புவதுதான் துரதிர்ஷ்டமானது. ரஹ்மான் பாடல்களை சிறப்பாக உருவாக்குவதில் வழக்கம் போல் வெற்றி பெற்றுள்ளார். இவற்றை தனி ஆல்பமாக கேட்கும் வரைதான் சிறப்பு. படத்தோடு பொருத்திப் பார்க்கும் போது நரகம். அதிலும் தாய் மண்ணே.. ஞாபகத்தில் 'நெஞ்சே எழு...' என்று பாடும் போது திரையரங்கில் பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து எழுத் தயாராகின்றனர்.  இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பின்னணி இசையில் மெளனத்திற்கும் பங்குள்ளது என்பதை இன்னமும் புரிந்து கொள்ளவேயில்லை. குமரி கடற்கரை மாவட்டத்தின் குளிர்ச்சியையும்  பாலைவனக் காட்சிகளின் வெம்மையையும் ஒளிப்பதிவாளர் Marc Koninckx சிறப்பாக பதிவு செய்துள்ளார். பெல்ஜிய ஒளிப்பதிவாளரான இவர் பெர்னார்டோ பெட்ரோலூசி உள்ளிட்ட பல சர்வதேச இயக்குநர்களின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பத்திருபது பேர் பின்னணியில் ஆடும் டூயட் காட்சிகளை நிச்சயம் உள்ளூர ஒரு நகைப்புடன் பதிவு செய்திருப்பார் என்று தோன்றுகிறது.

மரியான் என்றால் மரணமில்லாதவன் என பொருள். அப்படியே இதில் மரியான் சாவதில்லை. பார்வையாளர்கள்தான். 


- உயிர்மை - ஆகஸ்ட் 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)   

suresh kannan

1 comment:

Unknown said...

/-- Continuity -என்றொரு விஷயம் இருக்கிறதா இல்லையா? இப்படி அடிப்படையான விஷயத்தில் கூட அலட்சியத்துடன் இருக்கும் வரை தமிழ் சினிமா, உண்மையான சர்வதேச விருதுகளை நினைத்து கூட பார்க்க முடியாது. --/

Continuity பிரச்சனைகள் மரியானில் இருப்பதற்கான முழுப் பொறுப்பை தனுஷ் ஏற்றுக்கொண்டார். ஏனெனில் சைட் பை சைட் ராஞ்சனாவிலும் நடித்ததால் இந்தப் பிரச்னை வந்ததாக தனுஷே தனது நேர்முகத்தில் கூறி இருக்கிறார்.