Thursday, August 15, 2013

நீங்கள்தானே சுரேஷ் கண்ணன்?

நண்பர்களுக்கு,

இப்போதுதான் நண்பர் சுகா எழுதியிருக்கும் இந்தப் பதிவை பார்த்தேன்.

http://venuvanamsuka.blogspot.in/2013/08/blog-post.html

(நானாகத்தான் பார்த்தேன். நண்பர்களோ வாசகர்களோ யாரும கவனத்திற்கு கொண்டு வரவில்லை).

சங்கடமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. அது குறித்து சில விளக்கங்கள். 

சுகா என்ற பெயரில் எழுதும் நண்பர் சுரேஷ், நானறிந்த வரை நண்பர்களின் மூலம்  முதலில் மடற்குழுமம் ஒன்றில் இணையத்திற்குள் எழுத வந்தார். இயல்பான அற்புதமான நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர். திருநெல்வேலி மண் வாசனை கமழ எழுதும் இவர் மூங்கில் முடிச்சு, தாயார் சன்னதி போன்ற நூல்களின் சொந்தக்காரர். எனக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட இயக்குநரான பாலுமகேந்திராவிடம் பல திரைப்படங்களில் பணியாற்றியவர்...

இப்போது பிரச்சினை என்னவெனில் அவருக்கும் எனக்குமுள்ள பெயர்க்குழப்பம்தான். நான் சுமாராக 2002-ம் ஆண்டு முதல் ராயர்காப்பி கிளப், மரத்தடி போன்ற மடற்குழுமங்களிலும் பின்னர் 'பிச்சைப்பாத்திரம்' என்கிற இந்தத் தளத்தின் மூலமும் 'சுரேஷ் கண்ணன்' என்கிற பெயரில் எழுதிக் கொண்டு வருகிறேன். இதன் பின்னர் இணையத்தில் எழுத வந்த நண்பர் சுகாவிற்கும் எனக்கும் ஒரே மாதிரியுள்ள பெயர்க்குழப்பத்தினால் மாற்றி மாற்றி விசாரணைகளும் பின்னூட்டங்களும் வந்தன. நீங்கள்தான் அவரா என்று பலர் என்னிடம் கேட்டனர். அவரிடமும் இது போல் சிலர் கேட்டிருக்கலாம். அந்தத் துன்பத்தை அவர் என்னிடம் அத்தனை பெரிதாக சொன்னதில்லை. என்றாலும் இரண்டொரு சந்தர்ப்பங்களில் இந்தச் சங்கடத்தை வேடிக்கையாக இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். முதலில் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருந்த நான் இந்தக் கறுப்பு நகைச்சுவை தானாக தீரட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

நண்பர் சுகாவும் 'சுரேஷ் கண்ணன்' என்ற பெயரில் முதலில் எழுதி (உயிர்மையின் துவக்கத்தில் இளையராஜா இசை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது) பின்பு இந்தத் தொந்தரவு தாங்காமல் 'சுகா' என்று தன் அடையாளத்தை பெருந்தன்மையாக மாற்றிக் கொண்டார்.  பிறகு அந்தப் பெயரில்தான் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். திரைத்துறையிலும் இயங்கி வருகிறார். (எழுத்தாளர் சுஜாதாவும் இதே போன்றதொரு காரணத்தினால் தன் பெயரை மாற்றிக் கொண்டார் என்பது நினைவுக்கு வருகிறது).

'சுரேஷ் கண்ணன்' என்கிற பெயரில் திரைப்பட விமர்சனங்களை எழுதி வரும் என்னால் நண்பர் சுகாவிற்கு சில சங்கடங்கள் வந்திருக்கலாம் என அவரின் பதிவின் மூலம் யூகிக்கிறேன். சில தருணங்களில் மாத்திரமே பழகியிருந்தாலும் நண்பர் சுகா பழக மிக இனிமையானவராக இருந்தார். மிகுந்த தன்னடக்கத்துடன் இருக்கிறார். திரையிசை பற்றி சொல்வனம் தளத்தில் அவர் எழுதி வரும் கட்டுரைகள் அற்புதமானவை.

பெயர்க்குழப்பம் என்கிற இந்த அபத்தமான காரணத்தினால் அவரின் எழுத்துக்கோ அல்லது அவருக்கோ துளியளவும் சங்கடமோ இன்னபிற தொந்தரவுகளோ வந்துவிடக்கூடாது என்பது என் இமாலய விருப்பம். நானாவது என் கட்டுரைகளில் என் கருத்துக்களை சற்று காரசாரமாக முன்வைப்பேன். ஆனால் அவர் எழுத்தினால் எவருக்கும் இதுவரை துளி கூட சங்கடமோ வருத்தமோ வந்ததில்லை என்று நம்புகிறேன். மேலும் ஆனந்த விகடன் கட்டுரைகளின் மூலம் பலநூறு வாசகர்களைக் கொண்டிருக்கும் அவரையும் என்னையும் குழப்பிக் கொள்வது அநியாயம்.

எனவே இதன் மூலம் இணைய நண்பர்களுக்கும் திரைத்துறையில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ள இன்னபிற நபர்களுக்கும் தெரிவிக்க விரும்புவது என்னவெனில் 'சுரேஷ் கண்ணன்' என்ற பெயரில் இணையத்திலும்  இதழ்களில் திரைவிமர்சனங்கள் எழுதுபவன் நானே. 'சுகா' என்ற பெயரில் எழுதுபவர் அவர்.

தயைகூர்ந்து இனியும் அவரிடம் 'நீங்களா சுரேஷ் கண்ணன்' என்று எவரும் கேட்காதீர்கள். 

நண்பர் சுகா: என்னையும் அறியாமல் உங்களுக்கு ஏதோ சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறேன் என யூகிக்கிறேன். என்னை மன்னியுங்கள் சகா.


suresh kannan

1 comment:

geethappriyan said...

அவரவர் வழியில் சிறப்பாக செயல்படுகையில் மன்னிப்பு எனும் பெரிய வார்த்தை எல்லாம் தேவையற்றது,அவர் ஃபேஸ்புக் கணக்கை திடீரென அழித்துவிட்டதன் காரணம் புரியவில்லை,இசைஆர்வமும்,இசைஞானமும்,சுயஎள்ளலும் ,அழகிய எழுத்துநடையும் கொண்ட அவர் ஏன் சின்ன விஷயத்துக்கு இத்தனை கோபம் கொள்ள வேண்டும் என வியக்கிறேன்.