Wednesday, September 04, 2013

ஆதலால் கலவி செய்வீர்..



சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார்.  

'ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண் மகனும், தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்பது போன்றது அது.

தமிழகத்தின் கலாச்சார, பண்பாட்டு காவலர்கள் இந்த விபரீதமான கருத்தைக் கேட்டு கொதித்தெழுந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பா.ம.க ஆகிய அரசியல் கட்சிகள் இதை மூர்க்கமான எதிர்த்தன. இதனால் குஷ்பு பல வழக்குகளை சந்தித்து நீதிமன்றம் நீதிமன்றமாக ஓட வேண்டியிருந்தது. கோவில் கட்டி கும்பிட்ட தமிழக மக்களுக்கு தான் அந்நியரல்ல என்று மன்றாட வேண்டியிருந்தது. 'குஷ்பு தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து. இது எவ்வித்தில் சமூகத்தை பாதித்தது. ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் இணைந்து வாழ்வதும் பாலுறவு கொள்வதும் குற்றமல்ல' என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அவர் மீதிருந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்த பிறகுதான் இந்த விவகாரத்திலிருந்து குஷ்புவால் விடுபட முடிந்தது.  

'ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண்டும்' என்று சமீபத்திய வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் குறிப்பிட்ட சதவிகித்தனர், திருமணத்திற்கு முன்பே பாலுறுவு கொண்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்கிறது பாலுறவு தொடர்பான ஓர் ஆய்வு. இதில் நகரங்களில் வாழ்பவர்களும், பாலினப் பிரிவில் ஆண்களும் அதிக சதவிகித்தனர் உள்ளனர்.  

***

Premarital Sex தொடர்பாக குஷ்பு சொன்ன அதே கருத்தை, தன்னுடைய சமீபத்திய திரைப்படமான 'ஆதலால் காதல் செய்வீர்' -ல் இயக்குநர் சுசீந்திரன் உறுதிப்படுத்தியிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 'நிரோத் உபயோகியுங்கள்'ன்னு டிவிலயும் ரேடியோவுலயும் கத்திக்கிட்டே இருக்கானே.. எதுக்கு பலூன் ஊதி பறக்க விடறதுக்கா..." என்றும் இதன் மூலம் அனாதைக் குழந்தைகள் உருவாவதை தவிர்க்க முடியும் என்றும்  'புதிய பார்வை'த் தனமாகவும் இத்திரைப்படம் யோசித்திருக்கிறது. என்றாலும் தன்னைக் கற்பழித்தவனை அல்லது காதலிக்கும் போது உறவு கொண்டவனையே  - அவனைத் திருத்தியாவது - திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ் சினிமா இதுவரை கூறிவந்த மரபை உடைத்திருக்கிறது ஆ.கா.செ. என்கிற வகையில் கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.  

இத்திரைப்படம்  'ஆணுறைக்கான' பிரச்சாரப் படமாக மாறியிருக்கக்கூடிய அபாயத்தை தனது சுவாரசியமான, கச்சிதமான திரைக்கதையால் தவிர்த்திருக்கிறார் இயக்குநர். 'நகைச்சுவை டிரெண்ட்' என்ற பெயரில் சமீபத்தில் புற்றீசல் போல் வெளிவந்த அபத்தமான திரைப்படங்களின் மத்தியில், வணிகநோக்குத் திரைப்படங்களின் வார்ப்பிலிருந்து விலகாவிட்டாலும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவசியமானதொரு கருத்தை கவனப்படுத்தியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். 

கல்லூரியில் படிக்கும் கார்த்திக்கும் ஸ்வேதாவும் சிலபல காட்சிகளுக்குப் பிறகு காதலிக்கத் துவங்குகிறார்கள். திட்டமிட்டே மாமல்லபுரம் செல்கிறார்கள். ஆணுறை வாங்க காசில்லையோ அல்லது முறையாக பயன்படுத்தத் தெரியவில்லையோ என்னவோ, அந்தப் பெண் கர்ப்பமாகிறாள். இரு வீட்டாரின் பெற்றோர்களுக்கும் நிகழும் கசப்பான விவாதங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக திருமண முடிவு நின்று போகிறது. இதனாலேயே பையனும் பெண்ணும் பரஸ்பரம் வெறுத்துக் கொள்கிறார்கள். பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையை அவரது தந்தை அனாதை இல்லத்திற்கு அளித்து விடுகிறார். சுமார் 2 வருடத்திற்கு்ப் பிறகு பெண்ணுக்கு வேறு ஒருவனுடன் திருமணமாகப் போகும் காட்சிகளுடனும் பையன் வேறொரு பெண்ணைக் காதலிக்கும் தொனியில் உரையாடிக் கொண்டிருப்பதான காட்சிகளுமாக விரிந்து, இறுதிக் காட்சியில் அந்தக் குழந்தை அனாதை இல்லக் காட்சிளோடு படம் நிறைகிறது. (வீல் சத்தத்தை தவிர்த்திருக்கலாம்) 

ஸ்வேதாவாக நடித்திருக்கும் மனிஷாவின் முகபாவங்கள் அற்புதமாக படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. வழக்கு எண்.18/9-ல் இவர் சிறப்பாக நடித்திருந்தார். அப்பாவாக ஜெயப்பிரகாஷ், அம்மாவாக துளசி ஆகிய இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினரின் மனவோட்டங்கள், தந்திரங்கள், பொய்கள், போன்றவை சிறப்பாக பதிவாகியிருக்கின்றன. பாடல்கள் வேக்ததடைகளாக இருந்தாலும் படத்தின் 106 நிமிடங்களை திறமையான திரைக்கதையால் சுவாரசியப்படுத்தியிருக்கிறார் சுசீந்திரன். எல்லாமே அவசரமாகவும் வேகமாகவும் நிகழும் இந்தக் காலக் கட்டத்தில் அதற்கேற்ப காதலும் அற்பு ஆயுளிலேயே முடிந்து விடுகிறது என்பதை வசனங்கள் பல இடங்களில் நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.  

ஆணுக்கும் பெண்ணுக்குமான இனக்கவர்ச்சியின் உணர்வுகள் பொதுவாக இருந்தாலும் உடற்கூற்று ரீதியாக பெண்ணே அதிக பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. கர்ப்பப்பை, தாய்மை, பாசம் போன்ற அகவயமான உணர்வுகள் அவளை குடும்பம் என்கிற நிறுவனத்தோடு காலங்காலமாக  இணைத்துப் போடுகிறது. குழந்தையைப் பெற்றுக் கொள்ளவும் அதைப் பார்த்துக் கொள்ளவுமான கடமை ஆணை விட பெண்ணுக்கே அதிகமாக போதிக்கப்பட்டிருக்கிறது. மாறாக ஆணுக்கு இதில் அதிக பொறுப்பில்லை. இதனாலேயே பெண் தன் கர்ப்பப்பை குறித்த பிரக்ஞையையும் பயத்தையும் பொறுப்பையும் தொடர்ந்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நிலவுடைமைச் சமுதாய சிந்தனையைத் தொடர்ந்து தன்னுடைய வாரிசு குறித்த அடையாளத்தை நிச்சயித்துக் கொள்ளவும் சொத்தை பாதுகாத்துக் கொள்ளவும்,  திருமணம், குடும்பம் என்று உருவாக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்க கற்பிதங்களுக்கு பெண் பிணைக்கப்பட்டிருக்கும் சூழல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.  

"உண்மையான பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும். பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடு பெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கிற முடிவு நமக்குக் கல்லுப்போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது" என்கிற பெரியாரின் சிந்தனையையும் இங்கு நினைவு கூரலாம்.

மேலும் பாலுறவு என்பதை பாவமாகவும் அது குறித்த குற்றவுணர்வையும் மதம், கடவுள் போன்ற நிறுவனங்களின் மூலம் ஏற்படுத்தி ஆனால்  உள்ளுக்குள் பாலுறவு குறித்த விழைவுகளை, தேடல்களை ரகசியமாகச் சுமந்து அது தீராததொரு பாலியல் வறட்சி கொண்டதாக நம் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.  

அமெரிக்கத் திரைப்படமான Juno (2007) -ம்  திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தைப் பற்றி உரையாடினாலும் அதன் பிரதான பாத்திரமான ஜுனோவிற்கு தன்னுடைய கர்ப்பம் குறித்தோ குழந்தை குறித்தோ எவ்வித குற்றவுணர்வும் பிரக்ஞையும் முதலில் இருப்பதில்லை. குழந்தையைப் பெற்று அதனை வளர்க்க விரும்பும் தம்பதியினருக்கு கொடுத்து விடுவதுதான் அவளது விளையாட்டான தீர்மானமாக இருக்கிறது.  பிறகு தன்னிச்சையாக அவளுக்குள் கிளைக்கும் உணர்வின் காரணமாகத்தான் குடும்பம் என்கிற அமைப்பை நோக்கி நகர்கிறாள். நம் சமூகத்தில் இது தலைகீழாக நடக்கிறது.இதைப் பற்றியெல்லாம் இந்த தமிழ் சினிமா உரையாடியிருக்கலாம்.  ஆனால் ‘அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.’ என்பது போன்ற ஆணாதிக்க சிந்தனைகள் மலிந்திருக்கும் வரை தமிழ் சினிமா கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


suresh kannan

4 comments:

rajasundararajan said...

//ஆனால் ‘அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.’என்பது போன்ற ஆணாதிக்க சிந்தனைகள் மலிந்திருக்கும் வரை தமிழ் சினிமா கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.//

சரியாகச் சொன்னீர்கள். வாழ்க! வாழ்க!

ரகுராமன் said...

http://bharathiraman.blogspot.in/

nice review.. Suresh keep it up

Deepak said...

இன்று காதல் துரித உணவு போல அத்தனை வேகமாக சேர்ந்து பிரிவதென்பது ஆகி விட்டது :(

gokul said...

ஏற்றுக்கொள்ளத் தக்கவகையில் அருமையான விமர்சனத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.