Tuesday, December 25, 2012

நடுவுல கொஞ்சம் .....................காணோம்


டிஜிட்டல் புரட்சியால் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்திருக்கும் நல்ல முயற்சி நகொபகா. வழக்கமான சம்பிரதாயங்களைத் தவிர்த்து ஒரே ஒரு லைனை வைத்துக் கொண்டு எங்கும் திசை மாறாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படத்தில் மிக முக்கியமாக நான் கருதுவது, படம் ஒரு சிக்கலான பிரச்சினையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்க பார்வையாளர்களாகிய நாம் சிரித்துக் கொண்டே இருப்பதுதான். இப்படியொரு சீரியஸான காமெடி படம் தமிழில் வந்ததாக எனக்கு 'நினைவில்லை'. ஞாபகக் குறைபாடு என்னும் விஷயத்தை வைத்துக் கொண்டு 'மூன்றாம் பிறை' இயங்கிய மெலோடிராமாவிற்கு எதிர் திசையில் இயங்குகிறது இத்திரைப்படம். 
 
இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான விஷயம் casting. தமிழ்த் திரைக்கு அறிமுகமேயில்லாத நடிகர்கள். ஆனால் அந்தப் பாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியிருக்கிறார்கள். படம் துவங்கின சில நிமிஷங்களிலேயே நமக்கு நெருக்கமான நபர்களாக ஆகி விடுகிறார்கள். ஒவ்வொரு பாத்திரமும் அதன் வார்ப்பில் தனித்தன்மையுடன் இயங்குகிறது. சீரியஸாக பொறுப்போடு ஒருவன், முன்கோபத்துடனும் ஈகோவுடனும் ஒருவன், மனதில் பட்டதை உடனே உளறிக் கொண்டு அசட்டுத்தனமாக விழிக்கும் ஒருவன், மெலிதாக அவர்களுக்குள் இயங்கும் ஈகோ (நீ சொன்னா மாத்திரம் எப்பிடிடா கேட்கறான் - அதற்கு மொக்கையான ஒரு ப்ளாஷ்பேக்)..எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் மருத்துவ விஷயங்களை உதிர்ப்பது...என்று படம் பார்க்கும அனைவருமே தங்களின் நண்பர்கள் குழுவை நினைவுகூர்வார்கள். குறிப்பாக சரஸாக நடித்திருக்கும் விக்னேஷ்வரனின் நடிப்பு அற்புதம். படம் முழுக்க சீரியஸாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. சிறப்பாக செய்திருக்கிறார். ஒரே மாதிரியான வசனத்தை படம் முழுக்க சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் விஜய் சேதுபதிக்கு. வேறு வேறு மாடுலஷன்களில் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்.

முதலில் நமக்குத் தோன்றும் நெருடல் 'இப்படியெல்லாம் நடக்குமா?' என்பது. ஆனால் படத்தின் ஒளிப்பதிவாளரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்தான் இது எனும் போது அதை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. இன்னொன்று பிரதான பாத்திரத்திற்கு ஏற்படும் விபத்தையொட்டி மீண்டும் மீண்டும் வரும் அதே சம்பவங்கள்.. வசனங்கள். ஆனால் இதை சுவாரசியமான கதைச் சொல்லாடலின் மூலம் பெரும்பாலும் வெற்றிகரமாக தாண்டி வந்திருக்கிறார். குறிப்பாக கல்யாண ரிசப்ஷன் காட்சிகளின் நீளம், கிளைமாக்ஸ் போன்றவற்றில் யதார்த்தமில்லையென்று தோன்றினாலும் அதை சுவாரசிய நகைச்சுவையின் மூலம் மறக்கடித்திருக்கிறார். பாடல்களை பெருமளவு தவிர்த்திருப்பது, படத்தின் காட்சிகளை குறைத்திருப்பது போன்றவை புத்திசாலித்தனம்.

தமிழ்த் திரையின் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளுள் முக்கியமானதொன்றாக நகொபகா -வைச் சொல்லலாம். இயக்குநர் பாலாஜி தரணீதரனுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டு.

suresh kannan

3 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

குறைந்தபட்சம் இந்த மாதிரிப் படங்களுக்காவது உடனே விமர்சனம் எழுதவும். படம் - கிட்டத்தட்ட - தியேட்டர்களை விட்டே போய்விட்டது.

Unknown said...

//முதலில் நமக்குத் தோன்றும் நெருடல் 'இப்படியெல்லாம் நடக்குமா?' என்பது.//
எனக்கு இப்படி நடந்து இருக்கிறது. கல்லூரி Hostel day விழாவின் போது கிழே விழுந்து இப்படியாகியது. ஆனால் இரண்டு வருடம் அல்ல. ஒரு முழு நாளில் நடந்தது அனைத்தும் மறந்துவிட்டேன். இப்படம் பார்த்ததும் என் நண்பர் மீண்டும் அந்நிகழ்ச்சியை நினவு கூர்ந்தார்.
த. துரைவேல்

சிவ.சரவணக்குமார் said...

லாஜிக் எனும் [தேவையற்ற] விஷயத்தை மற‌ந்துவிட்டுப்பார்த்தால் , மிக சுவாரஸ்யமான படம்.........