Thursday, October 11, 2012

டைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'



சமீபத்தில் விகடன் குழுமத்திலிருந்து புதிதாய் வெளிவந்திருக்கும் 'டைம்பாஸ்' வார இதழை 'முதல் இதழ்' என்பதால் சோதனை முயற்சிக்காக வாங்கிப் பார்த்தேன். 'அச்சு விபச்சாரம்' என்று பேஸ்புக்கில் பத்திரிகையாளர் ஞாநி குறிப்பிட்டிருப்பதில் மிகையேதும் இல்லையோ என்று தோன்றுகிறது.

தமிழ் வெகுஜன இதழ்களில் விகடனுக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. கேலிச்சித்திர அட்டைகள், மதனின் சிரிப்புத் திருடன் சிங்காரவேலு வகையறா நகைச்சுவை, முத்திரை எழுத்தாளர்களின் சிறுகதைகள் (ஜெயகாந்தன்), மதிப்பெண் சினிமா விமர்சனங்கள், ஆபாசமில்லாத, உறுத்தாத நகைச்சுவைக் கட்டுரைகள்..என்று விகடனுக்கென்று ஒரு நல்ல முகமும் அடையாளமும் இருந்தது. பிரகாஷ்ராஜ், சேரன், வடிவேலு போன்றவர்களின் கட்டுரைத் தொடர்கள் வந்து கொண்டிருந்த சமயத்தில் பல வருடங்களாக விகடனை வாங்கிக் கொண்டிருந்தேன். ஆசிரியர் குழு மாற்றமடைந்து விகடன் அதன் புற வடிவத்தில் மாறி நடிகைகளின் பளபள இடுப்புப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்தவுடன் வாங்குவதை நிறுத்தி விட்டேன். பின்பு சமீபத்தில் இரண்டொரு இதழ்கள் வாங்கி (அசோகமித்திரன் பேட்டி காரணமாக) சரிப்படாமல் விட்டு விட்டேன்.

உலகமயமாக்க காலகட்டத்தில் பெரும்பான்மையாக எல்லாமே வணிக நோக்குச் சிந்தனைகளாகி 'லட்சியவாதம்' என்பதே செல்லாக்காசாகி விட்டதால், கடுமையான சந்தைப் போட்டியை எதிர்கொள்ள விகடன் தொடர்ந்து செய்து வரும் சமரசங்களைக் கூட ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் குழுமத்திலிருந்து வெளிவந்திருக்கும் 'டைம்பாஸ்' முன்வைக்கும் ஆபாசத்தை இதழியலின் மோசமான அடையாளம் எனக் கூறலாம்.

எல்லா புனிதமான பாவனைகளுக்கு மறுபுறம் இன்னொரு மோசமான, குரூரமான, வக்கிரமான முகமிருக்கும். பெரும்பாலும் எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தும். விகடன், எஞ்சியிருக்கும் தன்னுடைய பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய ஆல்டர் ஈகோ'வாக இந்த இதழைத் துவங்கியிருக்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

'மக்களால் அங்கீகரிக்கப்பட்ட xx போர்னோ பத்திரிகை' என்ற அடையாளத்தை பன்னெடுங்காலமாக 'குமுதம்' என்கிற வார இதழ் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. ஆனால் அந்தப் பத்திரிகையே வெட்கப்படுமளவிற்கான ஆபாசமும் வக்கிரமும் 'டைம்பாஸில்' நிறைந்திருக்கிறது. நடிகைகளின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் கிசுகிசுக்கள், வம்புச் செய்திகள், மாடல்களின் முக்கால்நிர்வாண புகைப்படங்கள் என்று பக்கத்திற்கு பக்கம் தனிமனிதனின் வக்கிரங்களுக்கு தீனி போட்டிருக்கும் பணியைச் சிறப்பாக செய்திருக்கிறது டைம்பாஸ். இவைதான் நடுத்தரக் குடும்பங்களின் வரவேற்பறைகளில் கிடக்கப் போகும், பாலியல் பற்றி முறையான அறிமுகமில்லாத இளைய தலைமுறையினர்களின் கண்களில் படப்போகும் பத்திரிகை என்பதால் திகிலாக இருக்கிறது.

இந்தப் புகாரை ஒரு கலாச்சார காவலனாக, ஆபாசப் பத்திரிகைகளை, காணொளிகளை பார்க்காதிருப்பதாக பாவனை செய்யும் பாசாங்குக்காரனாக சொல்லவில்லை. முன்பு மருதம், திரைச்சித்ரா (?1) போன்ற மென்பாலியல் இதழ்கள் செய்து கொண்டிருந்த சேவையை (இப்போது சினிக்கூத்து என்றொன்று இருக்கிறது என்றறிகிறேன்) பாரம்பரியப் பெருமையை இன்னும் வைத்திருக்கும் விகடனும் செய்ய வேண்டுமா என்று அதன் முன்னாள் வாசகனாக எனக்குச் சங்கடமாக இருக்கிறது.

காந்தியை நினைவுப்படுத்தும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் தலையில் கொம்புடனும் இருக்கும் விகடன் தாத்தாவின் உருவத்தை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் கேலிச்சித்திரங்களில் உருவம் சிறிது சிறிதாக மாறி விபரீதமான அர்த்தத்தை தருவதைப் போன்று தாத்தாவின் தலையிருக்கும் கொம்பு நீண்டு 'டைம்பாஸ்' வடிவில் ஒரு சாத்தான் உருவமாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே சீர்கெட்டுப் போயிருக்கும் தமிழ்ச் சூழலின் தரத்தை மாற்றுவதற்காக பாடுபடக்கூட வேண்டாம். அதை இன்னும் கீழிறக்கும் பணியில் ஈடுபடாமலிருந்தாலாவது புண்ணியமாய்ப் போகும். தமிழ் வாசகனுக்கு வேண்டுமானால் டைம் 'பாஸ்' ஆகலாம். ஆனால் வருங்கால தமிழ்ச் சமுதாயம் இன்னமும் மோசமாகி 'ஃபெயிலாகி'ப் போகும்.

suresh kannan

11 comments:

Anonymous said...

இப்பத்திரிகையின் ஆசிரியர் முன்னாள் வலைப்பதிவர் மற்றும் சமூகப்போராளி என்பது இன்னும் அதிக வருத்தத்தை தருகிறது.

மணிஜி said...

//இப்பத்திரிகையின் ஆசிரியர் முன்னாள் வலைப்பதிவர் மற்றும் சமூகப்போராளி என்பது இன்னும் அதிக வருத்தத்தை தருகிறது.//

நாய் வித்த காசு:-)

மணிஜி said...

விகடன் செய்வது பச்சை தேவடியாத்தனம் என்று பிரபல பதிவனான நானும் அடிக்கடி குறிப்பிட்டு கொண்டேயிருக்கிறேன்.. யாருமே கண்டு கொள்வதில்லை:-)

உலக சினிமா ரசிகன் said...

விகடனிலிருந்து வந்திருப்பது டைம் பாஸ் அல்ல...டைம் பாம்.

பாரதி மணி said...

சுரேஷ்: நான் சிறுவயதில் விகடனை முதலில் படித்துவிடவேண்டுமென்று, ரயில்வே ஸ்டேஷன் போய், பார்சல் கட்டவிழ்த்ததுமே, கயிற்றுத்தடங்கள் இல்லாத, நடுவிலிருந்து எடுத்த விகடனை மோர்ந்து பார்த்துக்கொண்டே, பக்கத்திலிருக்கும் பிளாட்பார்ம் பெஞ்சில் அமர்ந்து தில்லானா மோகனாம்பாள் போன்ற தொடர்களை படிக்க ஆரம்பிப்பேன். வீட்டுக்குப்போனால் மூன்று நாட்கள் என் கைக்கே வராது. விகடனோடு வாழ்ந்த ரசிகன். ;இவர்கள் சந்தித்தால்,,,?’ போன்ற கற்பனைவளம் மிக்க எத்தனை எத்தனை தொடர்கள்?

இப்போது விகடனார், டைட் ஜீன்ஸுடன் இளவட்ட சினிமா நடிகைகளோடு நடனம் (?) ஆடும் விளம்பரங்களைப்பார்க்கும்போது, மனது குனிகிறது. இப்போது தில்லியில் இருப்பதால், டைம் பாஸ் பார்க்கும் வேதனை இல்லை. நல்ல வேளை….விகடனார் முத்திரை அதில் இருக்காது என்று அறிவித்திருந்தார்கள்! We can only fret and fume and have our impotent anger! எஸ்.எஸ். வாசன் பேரனுக்கு காசு பார்க்கவேண்டாமா?

silviamary.blogspot.in said...

என்னுடைய 5ரூ.யை மிச்சப் படுத்த உதவியதற்கு நன்றி! இந்த வார விகடனில் தான் டைம்பாஸுக்கான விளம்பரம் பார்த்து 5ரூ. தானே வாங்கிப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை காப்பாற்றி விட்டீர்கள்! மிக்க நன்றி!
சோ.சுப்புராஜ்

Test said...

ஏற்கெனவே ஆனந்த விகடனில் வந்த வெவ்வேறு பகுதிகளை பசுமை விகடன், டாக்டர் விகடன், மோட்டார் விகடன் என் தனித்தனி பத்திரிகைகளாக மாற்றி அதை சினிமா விகடனாக மாற்றிவிட்டார்கள். அதை ஆபாச விகடனாக மாற்றாமல் தனியே அதற்காக புதுப் பத்திரிகை தொடங்கிவிட்டார்கள் போல...

சான்றோன் said...

விகடன் குழுமத்தில் வரும் எல்லா இதழ்களுமே குப்பைதான்..........வணிகம் , வாகனம் , மருத்துவம் ,இந்த வரிசையில் மஞ்சள் பத்திரிக்கைக்கு ஒரு ''டைம் பாஸ்'' அவ்வள‌வுதான்......எல்லா இடத்திலும் நாமே இருக்கவேண்டும் என்ற வியாபார வெறி......மற்றபடி பத்திரிக்கை தர்மமாவது ...வெங்காயமாவது.....

Sriram said...

இன்னும் எத்தனை நாளுக்கு? ஒரு 5 வருடங்களில் இணையம் விகடனையும் குமுதத்தையும் சாப்பிட்டு விடும். ரொம்ப கவலைப்பட தேவை இல்லை.

kashyapan said...

இனையமும் "டைம் பாஸ் " மாதிரி ஆகிவிடும் என்கிறிர்களா!---கஸ்யபன்.

Anonymous said...

நடிப்பு சுதேசிகள் நீங்கள்.....