Tuesday, October 30, 2012

தாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்...

சமீபத்தில் இயக்குநர் விஜய் இயக்கிய 'தாண்டவம்' பார்த்துத் தொலைத்தேன். ஓசியில்தான். அதற்கே எனக்கு கடுப்பாக இருந்தது. அம்புலிமாமா என்றொரு சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் நீதிக்கதை இதழ் ஒன்று முன்பு வந்து கொண்டிருந்தது. இப்போது வருகிறதா என்று தெரியவில்லை. குழந்தைகளுக்காக எழுதப்படும் அந்தக் கதைகளில் கூட ஒரு தர்க்க ஒழுங்கு இருக்கும். சுவாரசியம் இருக்கும். ஆனால் நம் தமிழ்ப்பட இயக்குநர்கள் தங்களின் பார்வையாளர்களை குழந்தைகளுக்கும் கீழான அறிவுள்ளவர்களாக, விபரமறியாதவர்களாக நடத்தி அவர்களை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை என்று மாறுமோ என்று தெரியவில்லை.

சர்வதே தரத்தையெல்லாம் கூட விட்டுத்தள்ளி விடுவோம். திரைமொழி, கலை, நுட்பம், தர்க்க ஒழுங்கு, கலையமைதி  போன்ற புண்ணாக்குகளெல்லாம் நமக்கு வேண்டாம். தமிழ் சினிமாவை ஒரு வணிகமாகவே அணுகுவோம். ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டை சந்தைப்படுத்தவே எத்தனை முயற்சிகள்? சுவாரசியமான காப்பி ரைட்டிங், கவனத்தை ஈர்க்கும் கேப்ஷன்கள், எளிதில் ஞாபகப்படுத்திக் கொள்ள சுருக்கமான, வாயில் எளிதில் நுழையும் பிராண்ட் பெயர்கள், லேஅவுட்கள்... என்று எத்தனை யத்தனங்கள்.. ஒரு பிராண்ட் நன்றாக இல்லையெனில் அதை தூக்கிப் போட்டு விட்டு இன்னொரு பிராண்டை நோக்கி போகக் கூடிய அளவிற்கான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது நுகர்வுக் கலாச்சாரம்.

ஆனால் கோடிகளைப்  போட்டு இன்னும் பல கோடிகளை வாரிக் குவிக்க நினைக்கும் தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும், இதைச் சார்ந்தவர்களும் கேவலமான குப்பைகளை தயார் செய்து விட்டு எத்தனை அலட்சியமாக இருக்கிறார்கள்? கதை, திரைக்கதை என்கிற பெயரில் அழுகிய குப்பைகளை 'நாயக பிம்பம், தொழில்நுட்பம் போன்ற வண்ணக் காகிதங்களில் சுற்றி தந்து விட்டால் பார்வையாளர்களிடம் சாமர்த்தியாக காசு பிடுங்கி விடலாம் என்கிற தன்னம்பிக்கையை என்னவென்பது? இதில் 'இது ரொம்ப டிஃப்ரண்டான சப்ஜெக்ட்' என்று பிரமோக்களில் திரும்பத் திரும்ப அலட்டிக் கொள்ளும் ஜம்பம் வேறு. எத்தனை நாட்களுக்கு பார்வையாளனை இப்படி தொடர்ந்து ஏமாற்றி விட முடியும்?. (அப்படியும் தமிழ்த் திரையுலகின் பார்வையாளர்களின் பெரும்பான்மையான சதவீதத்தினர் தொடர்ந்து அப்பாவி்த்தனமாகவோ அல்லது சொரணயற்றோ கிடக்கிறார்கள் என்பது வேறு விஷயம்).

ஏற்கெனவே குறிப்பிட்டபடி சர்வேதேச அளவில் அல்லாமல் தமிழ்ச் சினிமா எனும் எல்லைக்குள் வைத்துப் பார்த்தால் ஒரு காலகட்டத்தில், கதை சொல்லும் முறையில், நுட்பத்தில் மணிரத்னம் ஒரு குறிப்பிட்ட அளவு பாதிப்பை ஏற்படுத்தினார். குறிப்பான அடையாளம் 'நாயகன்'. அவ்வகையில் சில வருடங்களுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்பவராக பாலா தோன்றினார். அவரைத் தொடர்ந்து செல்வராகவன், அமீர், சேரன், வெற்றிமாறன், ராம், மிஷ்கின் என்று குறிப்பிட்ட சிலர் தங்களின் மனச்சாட்சியும் பட்ஜெட்டும் அனுமதித்த எல்லைக்குள் சில பல நல்ல முயற்சிகளைத் தந்தார்கள். ஆனால் ஒருவரிடமும் தொடர்ந்து நல்ல படங்களைத் தருவதற்கான consistency இல்லை. இதனாலேயே தங்களின் முதல் படத்தில் திறமையையெல்லாம் கொட்டிவிட்டு பின்வரும் படங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் விருதுப்பட டிவிடிகளையும் நம்பி வருகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

பருத்தி வீரனை பார்த்து பிரமித்துப் போய் அமீரையெல்லாம் நான் ஒரு கட்டத்தில் பாலுமகேந்திரா, மகேந்திரனுக்குப் பிறகு வரக்கூடிய ஒரு நல்ல அடையாளமாக குறித்து வைத்திருந்தேன். ஆனால் அவரோ யோகி எனும் குப்பையில் பங்கேற்கிறார். 'கன்னீத் தீவு பொண்ணா' என்று ஐட்டம் டான்ஸ் ஆடுகிறார். அவரின் அடுத்த படமான 'ஆதி பகவன் படம் குறித்தான முன்னோட்டங்கள் அத்தனை சிலாக்கியமாக இல்லை. 'வெண்ணிலா கபடிக்குழு' என்று குறி்ப்பிடத்தக்க படத்தை உருவாக்கிய சுசீந்தரன் 'அழகர்சாமியின் குதிரையில்' ஒரளவிற்கு தேறினாலும் 'ராஜபாட்டை' எனும் வணிகச் சகதியில் வழுக்கி விழுந்தார். மிஷ்கினின் முகமூடியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. சேரன் இன்று என்னவானார் என்கிற தகவலே இல்லை. வெற்றிமாறன் தன்னுடைய முந்தைய படத்தின் சரக்கையே இன்னொரு வடிவில் ஆடுகளமாக்குகிறார்.

மேற்குறிப்பிட்ட இயக்குநர்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது தம்முடைய உருவாக்கங்களில் இயன்ற அளவிற்கான தரத்தை பேணுகிறார்கள். ஆனால் இயக்குநர் விஜய் எப்போதும் பெரிதும் நம்பிக் கொண்டிருப்பது வெளிநாட்டு டிவிடிக்களை. 'டைட்டானிக்'கை மென்று தின்று துப்பி..'மதராசபட்டினமாக' உருவாக்கினார். 'ஐயம் சாமை' கொத்து பரோட்டா போட்டு தெய்வத் திருமகளாக்கினார். 'தாண்டவம்' எதிலிருந்து உருவப்பட்டது என்று தெரியாவிட்டாலும் (Dare Devil என்று சொல்கிறார்கள்) ஒரு மோசமான திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் லண்டனில் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் டிஸ்கவரி சானலை பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஓர் உணர்வு. டாக்சி டிரைவர் சந்தானம் தமிழ் பேசுகிறார். காவல்துறை அதிகாரி நாசரும் (இலங்கை) தமிழ் பேசுகிறார். போதாக்குறைக்கு நாயகியும் தமிழருக்குப் பிறந்தவர் (தாய் பிரிட்டிஷ்) என்பதால் தமிழ் பேசுகிறார். விக்ரம் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. தூக்கத்தில் நடக்கும் வியாதியுள்ளவர் போல் படம் பூராவும் உலாவுகிறார். கேட்டால் echolocation என்று ஆங்கிலத்தில் மிரட்டுகிறார்கள். கணவர் என்ன பணிபுரிகிறார் என்பது கூட கண் மருத்துவராக உள்ள மனைவிக்கு தெரியவில்லை. தமிழ் சினிமா நாயகிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு லூசுகளாகவே உலவப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கேட்டால் காமெடியாம். நம்பிக்கைக்கு உரியவராக வருகிற நண்பர்தான் வில்லனாம். இதுதான் சஸ்பென்ஸாம். இதை எல்கேஜி படிக்கிற குழந்தை கூட முதலிலேயே சொல்லிவிடும். இப்படியாக புளித்து அழுகிப் போன மாவிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. இவர்கள்தான் உலகின் பல பெயர் தெரியாத நாடுகளில் என்னென்ன விருதோ வாங்கி வந்து மீடியாக்களில் அலட்டுகிறார்கள்.

இந்தப்படத்தின் கதை தொடர்பாக நிகழ்ந்த வழக்குகளும் சர்ச்சைகளும் இன்னொரு காமெடி. இல்லாத ஒரு விஷயத்திற்கு அடித்துக் கொண்டதற்காக நீதிமன்றமே முன்வந்து இவர்கள் மீது வழக்கு தொடரலாம்.

வெளிநாட்டுத் திரைப்படங்களிலிருந்து முழுப்படத்தையோ, அல்லது பல டிவிடிகளிக்களில் இருந்து காட்சிகளை உருவும் பிரச்சினைக்கு வருவோம். ஒருவகையில் இதைக்கூட சகித்துக் கொள்ளலாம். அப்படியாவது தமிழிற்கு சில நல்ல படங்கள் வரட்டுமே என்று. ஆனால் அது உருவப்பட்டதில் இருந்து இன்னும் மேம்பட்டதாக, சிறப்பானதாக, தரத்தின் அடிப்படையில் அசல் படைப்பை தாண்டுவதாக இருக்க வேண்டும். ராஜ்மவுலி இயக்கிய 'நான் ஈ', காக்ரோச் என்கிற குறும்படத்தின் ஐடியா என்று கூறப்படுகிறது. பரவாயில்லை. ராஜ்மவுலி அந்த ஐடியாவை வைத்துக் கொண்டு நுட்ப உதவியோடு பல மடங்கு தாண்டியிருக்கிறார். இரண்டு மணி நேரத்திற்கு ஈயும் பார்வையாளனும் ஒன்றோடு ஒருவராக பின்னிக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு அதை ஒரு சுவாரசியமான அனுபவமாக்கியிருக்கிறார்.

ஆனால் கதை, காட்சிகள் திருடும் பெரும்பாலான இயக்குநர்கள் என்ன செய்கிறார்கள்? அசல் படைப்பிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அடிப்படை விஷயங்களை, காட்சிகளை எடுத்துக் கொள்கிறார்கள். பின்பு காலம் காலமாக தமிழ் சினிமாவிற்கென்று இருக்கும் சில வணிக மசாலாக்களை அதில் சோக்கிறார்கள். இயக்குநருக்கு ஸ்பாட்டில் தோன்றிய ஐடியாக்கள்..தயாரிப்பாளர்களின் மச்சான்கள் சொல்லும் பரிந்துரைகள், ஹீரோயின்களின் ஜலதோஷம் காரணமாக மாற்றப்பட்ட காட்சிகள், ஹீரோக்கள் தங்களின் புஜபலபராக்கிரமத்தை நிருபிப்பதற்காக திணிக்கப்பட்ட ஆக்சன் காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள்.. என்று எல்லாம் சேர்ந்து கொத்து பரோட்டா போட்டு 'தமிழ் மூளைக்கு' இது போதும் அல்லது இதுதான் வேண்டும் என்கிற முன்தீர்மானத்தோடு ஜரிகைப் பேப்பரில் சுற்றி சூடு ஆறுவதற்குள் முதல் நாளிலேயே கூவி கூவி விற்று விடுகிறார்கள்.

இவர்களையே குற்றஞ் சொல்லிக் கொண்டிருப்பதிலும் உபயோகமில்லை. தமிழ் சினிமா பார்வையாளன் எனும் ஆடு மந்தையிலிருந்து விலகும் வரைக்கும் இம்மாதிரியான கசாப்புக் கடைக்காரர்களின் வணிகம் சிறப்புற தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.
suresh kannan

13 comments:

King Viswa said...

அங்கிள்,
அம்புலிமாமா இன்னும் வந்துக்கொண்டு தான் இருக்கு.

Anonymous said...

இந்த லிஸ்ட்ல எப்படி ஆடுகளத்த சேர்க்கலாம் ? நிச்சயம் அது better film from vetrimaaran

பொன் மாலை பொழுது said...

நீண்ட நாட்கள் ஆகிறது உங்களின் பதிவுகளை படித்து. ஒரு வேலை நான் கூட படிக்க தவறி இருக்கலாம்.
அதெல்லாம் சரித்தான். உங்களின் இந்த பட விமர்சனத்தை படித்துவிட்டு சிரிக்கத்தான் முடிந்தது.
என்ன தைரியத்தில் இப்படி புது படம் பார்க்க செல்கின்றீர்கள்? டிக்கெட் இலவசமாக கிடைத்தாலும் ??
இலவசமாக கிடைக்கும்போதே அதன் தரம் பற்றின புரிதல் இல்லையா கண்ணன்?
உங்களுக்கு ஏன் அந்த இலவச டிக்கெட் கிடைத்தது என்பதும் புரிகிறது.

நல்லவேளை , நீங்கள் உண்மையாக இருந்தீர்கள்,அன்றி ஒரு மோசமான திரைப்படத்துக்கு பிரமாதமான பில்டப் கிடைத்திருக்கும்.

இறுதியில் கூறியுள்ள அந்த மூன்று வரிகளே உண்மை.

Ibrahim A said...

அருமை....தமிழ் சினிமா மீதான எனது வயிற்றெரிச்சலை கீழ் கண்ட பதிவுகளில் கொட்டி இருக்கிறேன் ..நேரம் கிடைக்கையில் படியுங்கள்.

http://www.ibbuonline.com/2012/10/i-am-sam2001.html
http://www.ibbuonline.com/2012/10/i-am-sam-2001.html
http://www.ibbuonline.com/2012/10/i-am-sam-2001_11.html

Anonymous said...

Please write about PIZZA. Expecting for long time. Thanks

Ravichandran Somu said...

Well said....

Ashok D said...

Vetrimaaran second film entirely differs from first one... actually he is the only hope in Tamil cinema

Anonymous said...

மொக்கைப் படங்களைப் பற்றி புலம்பி விமரிசனம் எழுதுவதை விட நல்ல படங்களை மட்டும் அறிமுகப்படுத்தினால் உங்களுக்கும் வாசகர்களுக்கும் நேரமாவது மிச்சமாகும்.

Vadakkupatti Raamsami said...

அதான?ஆடுகளம் எத்தகைய ஒலக தரமான படம்?ராக்கெட் விடுவது போல கவுன்ட் டவுன் மற்றும் ஒலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக லுங்கியை தூக்கி கொண்டு நடு ரோட்டில் ஆடும் ஆட்ட்டம் என அனைத்தும் ஒலக தரம்..தவிர தனுசின் ஒவ்வொரு எலும்பும் உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது.
********************************
@சுரேஷ்
ஆமா இந்த பொல்லாதவன் படம் Bicycle thieves என்ற காவியத்தின் மகா மட்டமான பிரதி என்பது கூட உங்களுக்கு தோன்றாதது ஆச்சரியமளிக்கிறது

Sriram said...

//மொக்கைப் படங்களைப் பற்றி புலம்பி விமரிசனம் எழுதுவதை விட நல்ல படங்களை மட்டும் அறிமுகப்படுத்தினால் உங்களுக்கும் வாசகர்களுக்கும் நேரமாவது மிச்சமாகும். //

சமீபத்தில் வந்த பர்பி (ஹிந்தி) படம் பற்றி இன்னும் எழுதவில்லையே?

Anonymous said...

http://tamil.oneindia.in/

இதில் விறுவிறுப்பான கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலை, கலவரம், கடத்தல் ஆகிய தலைப்புகளில் லோக்கல் செய்திகள் வரும். அவ்வப்போது படிப்பேன்.

தற்கொலை பற்றிய செய்திக்கென்றே தனி பக்கம் ஒன்று இந்த சைட்டில் உள்ளது. பொழுது போக்க படிக்கவும்.

http://tamil.oneindia.in/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88

Dino LA said...

அருமை

kankaatchi.blogspot.com said...

நான் திரைப்படம் பார்ப்பதை விட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. அதனால் எனக்கு ஏமாற்றமோ அல்லது வருத்தமோ கிடையாது. உங்கள் விமரிசனத்தை படித்தபின் நான் எடுத்த முடிவு சரியானது என்றுதான் நினைக்கிறன்