Monday, August 20, 2012

ஈ - நாயக பிம்பங்களுக்கு விடுக்கப்பட்ட சவால்


ராஜமவுலி இயக்கி வெளிவந்த 'நான் ஈ' திரைப்படம் குறித்த முன்னோட்டங்களும் புகைப்படங்களும் விளம்பரங்களும் துவக்கத்தில் எனக்குள் எவ்வித ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக ஓர் ஒவ்வாமையையே அளித்தது. அவரின் முந்தைய படங்களை பார்த்த அனுபவமின்மை ஒரு காரணமாக இருக்கக்கூடும். படம் வெளிவந்து பெரும்பான்மையினரால் புகழப்பட்ட போதும் சலனமின்றி ஈ போல் ஆடாமல் அசையாமல் அந்த நிலையிலேயே இருந்தேன். ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "ஈடா ஈடா' என்கிற பாடல்தான் சிறு ஆர்வத்தைக் கிளறியது.

CG நுட்பத்தை அது இருக்கிறது என்கிற காரணத்தினாலேயே உபயோகப்படுத்தாமல் தேவையான அளவிலும் பொருத்தமாகவும் குறும்பாகவும்  அந்தப் பாடலில் உபயோகப்பட்டிருக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். நண்பர்களின் பரிந்துரைகளும் பின்னால் வந்து சேர்ந்தன. CG நுட்பத்தை பெரிதும் சார்ந்து இயங்கும் திரைப்படம் என்பதாலும் குழந்தைத் திரைப்படங்களுக்குரிய கூறுகளை கொண்டிருந்ததாலும் இதை திரையரங்களில் குழந்தைகளுடன்தான் காண்பது என முடிவு செய்திருந்தேன். தாமதமாகவாவது அவ்வாறே நேற்று நிகழ்ந்தது.

ராஜமவுலி ஒரு சிறந்த (திரை) கதைசொல்லி என்பதை உணர முடிந்தது. சுமார் இரண்டரை மணி நேரத்தை பெரும்பாலும் எவ்வித விலகலும் இல்லாமல் பார்வையாளனை ஒன்றிப் பார்க்க வைக்கும் திறமையைப் பெற்றிருக்கிறார். காட்சிக் கோர்வைகளில் எவ்வித தர்க்கப்பிழையும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக கறாராக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இந்த ஒழுங்கே சமயங்களில் ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக நாயகன், நாயகியுடன் நடுஇரவுத் தனிமையில் பாடிச் செல்லும் போது  மரங்களிலுள்ள இலைகள் ஆசிர்வசிப்பது போல் அவர்களின் மேலே உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன. இது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம். இலைகள் அவ்வாறு உதிர்வதற்கு முன் நாயகன் மேலே எம்பி மரக்கிளைகளை பிடித்து உலுக்கி விடுகிறான். அதனால்தான் இலைகள் உதிர்கின்றன என்பதால் பார்வையாளன் மனதில் எவ்வித ஐயமும் எழாது. ஆனால் அது இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு மேல் நிகழுமா என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்கக் கூடாது.

அது மாத்திரமல்ல. எப்படி ஈயால் 'I Will Kill you' என்று ஆங்கிலத்திலும் 'நான் ஈயாக மறுபிறவி எடுத்திருக்கிறேன்' என்று தமிழிலும் எழுத முடிகிறது என்றெல்லாம் கேட்கக்கூடாது. அந்த ஈ, பள்ளியில் ஆஆஇஈ படித்த ஈயா? என்று கேட்பதும் அறிவீனமே. இங்குதான் இயக்குநர் புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்திருக்கிறார். ஒரு தகப்பன் தன் குழந்தையை உறங்க வைப்பதற்காக சொல்கிற கதை என்பதை துவக்கத்தில் சொல்லி விடுகிறார். கதை என்றால் அதுவும் குழந்தைகளுக்கான கதை என்றால் அது எப்படியும் இருக்கலாம்தானே? (அந்த அப்பா மற்றும் குழந்தையின் குரல்கள் அத்தனை சிறப்பாக நடித்திருக்கின்றன).

இந்தத் திரைப்படத்தில் எனக்கு மிகப்பிடித்த அம்சமே, ஒரு ஈயை நாயகனாக ஆக்கியதுதான். கேமராவை பார்த்து மெஸெஜூம் பஞ்ச் டயலாக் பேசும், தீயசக்திகளை அழிப்பதற்கென்றெ அவதாரம் எடுத்திருப்பதான பாவனை செய்யும் அசட்டுத்தனமான நாயக பிம்பங்களுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவால் இது. ஒழுங்காக, சுவாரசியமாக கதை சொல்லத் தெரிந்தால் சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை, கணினியால் உருவாக்கப்பட்ட செயற்கை ஈ யே போதும் என்கிற பொட்டில் அடித்த மாதிரியான இந்தச் செய்தியே எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருப்பதும் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

CG நுட்பத்தை உபயோக்குவதில் ஹாலிவுட் இதை விட அதிக அளவு முன்னணியில் இருக்கிறது என்றாலும் நம் பிரதேசத்திலும் இதை உருப்படியாக கையாள ஒரு ஆள் இருக்கிறார் என்பதே கவனத்திற்குரியது. ஷங்கர் திரைப்படங்களைப் போன்று அபத்தமாக அல்லாமல்(குறிப்பாக பாடல் காட்சிகள்) கதையின் போக்குகேற்றவாறு மிகப் பொருத்தமாக சுவாரசியமாக சிந்தித்திருப்பதே பாராட்டத்தக்கதாக இருக்கிறது. ஈக்கும் மனிதனுக்குமான அந்தப் போராட்டத்தை ராஜ்மவுலி இன்னும் கூட சுவாரசியப்படுத்தியிருக்க முடியும் என்றே நான் கருதுகிறேன்.

மேலும் இதை குழந்தைகளுக்கான பிரத்யேகமான திரைப்படமாக ராஜ்மவுலி உருவாக்கியிருக்கலாம். எனில் இத்திரைப்படம் வேறொரு சுவாரசியமான தளத்தில் வந்திருக்கக்கூடும். ஈயின் தொந்தரவு தாங்காமல் வில்லன் அவஸ்தைப்படும் போதெல்லாம் திரையரங்கில் குழந்தைகள் கும்மாளமிட்டு சிரிக்கிறார்கள். ஆனால் இந்த தருணங்கள் மிக சொற்பமானதாக இருக்கின்றன.

இதில் பிரதான பாத்திரத்தில் நடித்த சுதீப்பை பாராட்டியே ஆக வேண்டும். பின்னால் உருவாக்கப்பட போகும் கணினி ஈ தம்மை தெர்ந்தரவு செய்வதை முன்கூட்டியே கற்பனையாக உணர்ந்து அதற்கேற்றவாறு உடல்மொழியை பயன்படுத்துவது என்பது நிச்சயம் கடினமான காரியம். சுதீப் இதை மிக கச்சிதமாக செய்திருக்கிறார். இதற்காக கடுமையாக உழைத்திருக்கும் ஒளிப்பதிவாளரும் விஷூவல் எபெக்டஸ் குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வசனம் கிரேசி மோகன் என்று பார்த்தேன். கடைசிக் காட்சியில் அவர் தோன்றுவதைத் தவிர படத்தில் அவரின் பிரத்யேகமான தடயங்கள் எங்குமே தெரியவில்லை. இந்தக் கதைச் சூழலுக்கு கிரேசியின் நகைச்சுவை பொருத்தமில்லாமல் போகலாம் என்று இயக்குநர் கருதியிருக்கலாம்.

இதன் அடுத்த பாகத்தை இயக்குநர் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவலை அறிய நேர்ந்தது. அதை குழந்தைகளுக்கான பிரத்யேகமானதாக உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்.
suresh kannan

12 comments:

Doha Talkies said...

மிகச்சரியாக சொன்னீங்க.
மிக அருமை.
http://dohatalkies.blogspot.com/2012/08/leon-professional.html

Baby ஆனந்தன் said...

பல நாள் கழித்து ஒரு பதிவு என்றாலும் ஒர் நல்ல படத்தைப் பற்றித் தான் எழுதியிருக்கிறீர்கள்.

S S ராஜமௌலியைப் பற்றியும், அவரது படங்கள், working style பற்றியும் ஒரு தொடராக (5 பாகம்) எனது தளத்தில் எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் வாசித்துப் பார்க்கவும்!

Boston Bala said...

அடிக்கடி எழுதுங்க... இப்பத்தான் இந்தப் படத்தை நானும் பார்த்தேன்.

rajasundararajan said...

அறிவுஜீவிகள் மாதிரி நீங்களும் இப் படத்துக்கு எதிராக எழுதாமல் இருந்தீர்களே, அப்பாடா!

நான் முதல்நாளே பார்த்துவிட்டேன். எங்கள் பாப்பாவுக்குப் பரிந்துரைத்தேன். அவள் தன் அம்மாவோடு மூன்றாவது வாரக் கடைசியில் பார்த்தாள். உற்சாகம் தாளாமல் இடைவேளையில் எனக்கு போன் பண்ணி, "படம் சூப்பரா இருக்கு!" என்றாள். (நாங்கள் இருவரும் பிறகு இரண்டாவது முறையும் பார்த்தோம்).

நல்ல ரசிகனோ குழந்தைகளைப் போலிருக்க வேண்டும். விமர்சகன், ஆனால், முற்றி நெற்றாகிப் போகவும் கூடும்.

Anonymous said...

இந்த சிறிய விமர்சனத்துக்குள் படத்தின் டைட்டிலில் வரும் பின்னணிக் குரல்களையும் பாராட்டி எழுதியதைக் கண்டு வியக்கிறேன். ஒரு பின்னணி தகவல்- உண்மையில் அந்தக் குரல்களை சேர்க்கும் முடிவை இயக்குனர் ரிலீசுக்கு சற்று முன்னர்தான் எடுத்தார். தெலுங்கில் இயக்குனரும் அவர் மனைவியும் சொந்த மகளுமே அந்தக் குரல்களில் நடித்திருக்கிறார்கள். தமிழ் டப்பிங் சென்னையில் ஏற்கனவே முடிந்திருந்ததால் ஹைதராபாத்திலேயே தமிழிலும் அந்தக் குரல்களை பதிவுசெய்ய முடிவுசெய்தார்கள். அந்தப் படத்தின் சவுண்ட் எஞ்ஜினியரும் தமிழனும் என் நண்பனுமான கிருஷ்ணராஜ், தானே பேசி, தன் மனைவியையும் மகளையும் பேசவைத்து அந்தப் பகுதியை முடித்துக்கொடுத்தான். அதனால் அவன் பட ரிலீசுக்கு முன்பே என்னைப் பார்க்கச்சொல்லி வற்புறுத்தி வந்ததால் உடனே பார்த்தேன். நண்பனின் சிறிய மகள் இத்தனை உணர்ந்து எப்படி பேச்சில் பாவனைகளைக் காட்டினால் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. நண்பனிடம் கேட்டபோது அவன் சிம்பிளாக "சின்ன பொண்ணுல்ல நாம சொல்றத கவணிச்சி உடனே அப்டியே திருப்பி சொல்லிட்டா பத்து நிமிஷத்துல வேல முடிஞ்சது, பெரியவங்களுக்கு புரியவைக்கறதுதான் கஷ்டம்" என்றான்

திண்டுக்கல் தனபாலன் said...

தலைப்புக்கேற்ற நல்ல அலசல்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

சிந்திப்பவன் said...

ஒரு சூப்பர் ஹிட தமிழ் படத்திற்கு M S K R ஆகியவர்களில் ஒருவராவது தேவை எனும் தமிழ் திரையின் மூட நம்பிக்கையை முறியடித்த E க்கு ஏன் மனமார்ந்த நன்றி!

ரௌத்ரன் said...

:)

தொடர்ந்து எழுதுங்கள்.

குரங்குபெடல் said...

"ஒரு தகப்பன் தன் குழந்தையை உறங்க வைப்பதற்காக சொல்கிற கதை என்பதை துவக்கத்தில் சொல்லி விடுகிறார். கதை என்றால் அதுவும் குழந்தைகளுக்கான கதை என்றால் அது எப்படியும் இருக்கலாம்தானே? (அந்த அப்பா மற்றும் குழந்தையின் குரல்கள் அத்தனை சிறப்பாக நடித்திருக்கின்றன). "


அதே தொனியில் ஒரு இணைப்பு . . .

http://www.youtube.com/watch?v=mgJM8Lxmm_I&feature=player_embedded



பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

''CG நுட்பத்தை உபயோக்குவதில் ஹாலிவுட் இதை விட அதிக அளவு முன்னணியில் இருக்கிறது என்றாலும் நம் பிரதேசத்திலும் இதை உருப்படியாக கையாள ஒரு ஆள் இருக்கிறார் என்பதே கவனத்திற்குரியது'' மிகச்சரியாக சொன்னீங்க.
Koncham kasda paddu than padikkanum yennaku avallava sariya yellutha varathu..
Nalla padam… Annal tamil cinema kadhalium karpallipaium vedamadagangapolla…
Oru rashigana padam puduchallaum…. Villan oru ponna aadirathukkha (aathum orunalla madum kuda irukkallam ) kolai pannurathu.. hero ponnuga antha ponna love pannurathugha marupravi yadukurathu…. Ithu madum than pidikalla… ivaru kollai pannurathukum avan marupiravai yadukurathkum vera nalla karanam irunthal… intha padam innum serappaga irnthirukum…

Doha Talkies said...

அண்ணா... உங்களோட இந்த பதிவை ஒருவர் காப்பி அடித்து அவரது பதிவு போல போட்டு இருக்கிறார்.
http://tamilfiremoment.blogspot.com/2012/08/blog-post_6081.html

Anonymous said...

நீங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சம்பாதிக்க முடியாத பணத்தை ஹீரோக்கள் பன்ச் டைலாக் பேசியே சம்பாதிக்கின்றார்கள் என்ற வயித்தெரிச்சல்