Monday, August 22, 2011

தெய்வத்திருமகன் எனும் இதிகாசம்



மூலப்படத்தில் காஃபி ஷாப்பில் சர்வராக பணிபுரியும் ஷான் பென், தனது அடுத்த நிலை பதவி உயர்விற்காக (காஃபி தயாரிப்பாளர்) போராடிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அது வெற்றிகரமாக தோற்றுப் போகும். ஏழு வயது உறைந்து போன மனநிலையில் இருந்து சூழ்நிலைகளின் மூலம் கற்றலில் அவர் முன்னேறத் துடிப்பதின் அடையாளமாக அது இருக்கும். ஆனால் தமிழில் அது விக்ரம் சாக்லேட் டப்பாவை  துடைப்பதோடு நின்று விடுகிறது. அது மாத்திரமல்லாமல், ஷான்பென் பாத்திரம் நுண்ணுணர்வு கொண்ட பாத்திரம் என்பது அவர் தனது உணவு வகையை கறாராக தேர்வு செய்வதிலிருந்தும், பீட்டில்ஸ் இசை அறிந்து வைத்திருப்பதிலிருந்தும், தனக்காக வாதாடும் வக்கீலே தன்னை அவமதிப்பதாக உணரும் போது வெடிப்பதிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும். தமிழில் இப்படியாக எதுவுமில்லை. ஒரு பாத்திரத்தை மிக நுட்பமாக பிரத்யேகமாக வடிவமைப்பதற்கும் மொண்ணையாக காட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

ஷான் பென்னின் நண்பர்களாக வரும் மாற்றுத் திறனாளிகள் நால்வருமே பிரத்யேக தனி அடையாளங்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தனது அன்றாட உரையாடலில் உலக சினிமாக் காட்சியை உதாரணம் காட்டிக் கொண்டேயிருப்பார். ஆனால் தமிழில் அந்த நால்வருமே மொண்ணையாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். காலர் பட்டனை இறுக்கக் கட்டிவிட்டு குளறி குளறிப் பேசினால் அவர்கள் மனநலம் குன்றியவர்கள். அவ்வளவுதான். பழைய கால ஜெய்சங்கர் படங்களில் ஹீரோ, முகத்தில் மரு ஒட்டிக் கொண்டு வில்லனின் இடத்திலேயே நடமாடுவான். யாருக்கும் அவனை அடையாளம் தெரியாது. சமகால தமிழ் சினிமாவும் பாத்திர வடிவமைப்பு விஷயத்தில் காலத்தால் உறைந்து போய் அதே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது.

ஆங்கிலப்படத்தில் குழந்தையின் தாய், அது பிறந்தவுடனே தந்தையிடம் கொடுத்து விட்டு போய்க் கொண்டேயிருப்பாள். ஆனால் தமிழில் அவ்வாறு வைத்து விட முடியுமா? தமிழ் இயக்குநர்கள், பண்பாடு, கலாசாரம் குறித்த கவலையுடன் இந்தக் காட்சியை மாற்றி அமைத்ததாக முட்டாள்தனமாக எண்ணிக் கொள்ளக்கூடாது. 'லேடீஸ் ஆடியன்ஸ்'-ன் வருகை பாதிக்கப்படலாம், அவர்கள் சங்கடப்படலாம்; எதிர்ப்பு வரலாம் என்கிற வணிக நோக்கம் சார்ந்த சிந்தனையே அந்தப் பாத்திரத்தை இறந்து போவதாக சித்தரிக்கிறது. அவ்வப் போது போட்டோவை காட்டினால் சென்டிமென்ட்டுக்கும் ஆகுது பாருங்கள்.

படத்தின் மிக முக்கிய அம்சமே, மன வளர்ச்சி குன்றியவனால், அதாவது ஏழு வயதுக்குரிய மனநிலை கொண்டவனால் எப்படி ஆறு வயதைத் தாண்டிக் கொண்டிருக்கும் ஒரு பெண் குழந்தையை பொதுச் சமூகம் எதிர்பார்க்கும் அத்தனை தகுதிகளுடனும் கற்றல்களுடனும் வளர்க்க முடியும் என்று அடிப்படை மனிதஉரிமை சார்ந்து நீதித்துறை தன் பார்வையை முன்வைப்பதுதான். சட்டத்தின் பார்வையில் நோக்கும் போது அது சரியானதொன்றுதான். குழந்தையின் முறையான வளர்ச்சிக்கு அதுதான் நல்லது. தந்தையின் பாசம் குறித்த மிகையுணர்ச்சியுடன் இயங்கினாலும் ஆங்கிலப்படம் இந்தப் புள்ளியையும் அடிநாதமாக கொண்டிருக்கும். ஆனால் தமிழிலோ சட்டத்தை ஏதோ மோசமான வில்லனைப் போல சித்தரித்திருப்பார்கள்.

இப்படியாக, ஹாலிவுட்டிலிருந்து உருவப்பட்ட தெய்வத்திருமகள், தமிழ் சினிமாவின் சம்பிரதாயமான கச்சடாக்களால் பிசையப்பட்டு எத்தனை மோசமானதொரு பண்டமாக கெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கமாகவே நிறுவ முடியும். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி மூலப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு, தெய்வத்திருமகள் ஒரு கொடுமையான அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 


தெய்வத்திருமகளையொட்டி, தமிழ் சினிமா சூழலில் இவ்வாறான முயற்சிகளுக்கு சராசரி பார்வையாளர்களின் பொதுப்பார்வையில் தோன்றும் சில கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்.

1) தமிழ் சினிமாவில் தொடர்ந்து வணிக மசாலாக்களை உள்ளடக்கிய மோசமான திரைப்படங்களே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தெய்வத்திருமகள் போன்று அபூர்வமாக வெளியாகும் நல்ல திரைப்படங்களை உங்கள் மேதமையை காட்டிக் கொள்வதற்காக இப்படி குதறியெடுக்கிறீர்களே, இது நியாயமா?

மீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொண்டிருப்பது இதுதான். குத்துப்பாடல், ஆபாச நகைச்சுவை, பஞ்ச் டயலாக் வெற்று வீராப்புகள் போன்ற வணிகநோக்கு சினிமாக்களின் வடிவமைப்புகளைத் தாண்டி அல்லது அதைத் தவிர்த்து ஒரு சினிமா வந்தாலே அது 'நல்ல சினிமா' என்கிற உணர்வு நமக்குள் தோன்றி விடுகிறது. ஊடகங்களும் சம்பந்தப்பட்ட இயக்குநர்களும் இதை இன்னும் ஊதிப் பெருக்கி 'உலக சினிமா' 'சர்வதேச தரம்' 'ஆங்கிலப்படங்களுக்கு நிகராக' என்றெல்லாம் தம்பட்டமடித்துக் கொள்கிறார்கள். (இவ்வாறான போலித்தனங்கள் அல்லாமல் 'வணிக நோக்கத்திற்காகத்தான் படமெடுக்கிறேன்' என்று வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்ளும் பேரரசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி..போன்றவர்களை அந்த ஒரு காரணத்திற்காகவே பாராட்டித் தொலைக்கலாமோ என்கிற நிலைக்குத் தள்ளி விடுகிறது இவர்களின் போலித் தம்பட்டங்கள்).

சர்வதேச அளவில் வெளியாகும் சிறந்த படைப்பாளிகளை, சினிமாக்களை தொடர்ந்து அவதானிப்பதின் மூலம் 'நலல சினிமா' என அறியப்படும் இவ்வகையான போலிகளை உடனேயே அடையாளம் காண முடியும். போலிகள் என்றால் கூட பரவாயில்லை. மோசமாக நகலெடுக்கப்பட்ட போலி என்பதுதான் கொடுமை. மோனாலிசா படத்தை காப்பியடிக்கிறேன் பேர்வழி என்று  கொல்லங்குடி கருப்பாயியின் படத்தை வரைந்து வைத்தால் எப்படி? (கருப்பாயியின் ரசிகர்கள் உடனே பாய வேண்டாம். ஓர் உதாரணத்திற்காகச் சொன்னது).

தமிழ் சினிமாக்களைப் பற்றி எழுதும் போது சற்று அதீத கோபமும் மேதமைத்தனத்தை பறைசாற்றிக் கொள்வதான பாவனையும் வெளிப்படுவதில் சற்று உண்மையிருக்கலாம். நல்ல கலையை நுகர்பவர்களுக்கு தன்னிச்சையாக வெளிப்படும் உணர்வுதான் அது. குட்டி குட்டி தேசங்களிலிருந்து கூட மகத்தான திரைப்படங்கள் வெளியாகும் போது உலகிலேயே அதிக திரைப்படங்களை உருவாக்கும், பண்பாட்டு பின்புலமுள்ள  தேசத்திலிருந்து பெரும்பாலும் குப்பைகளே வெளியாவது குறித்து ஆதங்கமும் கோபமும் கூட உபகாரணங்கள். அதனால்தான் பாலைவனத்தில் இரண்டு நாட்கள் நா வறண்டு நடந்தவனுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கிடைத்தைப் போன்று 'ஆரண்ய காண்டம்' போல அபூர்வமாக நல்ல முயற்சிகள் வந்து விடும் போது சற்று உயரமாகவே தூக்கிக் கொண்டாடும் உணர்வு தோன்றி விடுகிறது.

2) ஆங்கிலம் தெரியாதவர்களும், உலக சினிமாக்களைப் பார்க்கும் ரசனையும் வாய்ப்பும் இல்லாத தமிழ் சினிமா ரசிகர்களுக்கு - அது திருடப்பட்டால்தான் என்ன - அதைப் போன்ற கதைகளைக் கொண்ட படங்களை தமிழில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறதே? அதில் என்ன உங்களுக்கு பிரச்சினை?

சத்யராஜூம் கவுண்டமணியும் நடித்த நகைச்சுவைக் காட்சியொன்று. இரண்டு பேரையும் லாக்கப்பில் போட்டுவிடுவார்கள். கவுண்டமணி அவமானத்திலும் பயத்திலும் புலம்பிக் கொண்டிருக்க, சத்யராஜ், கொட்டாவியுடன் எழுந்து சொல்வார். 'இந்த லாக்கப்லதான் கொசுத் தொல்லையே கிடையாது'.

ஆக.. தமிழ் சினிமா ரசிகர்களின் நிலைமையும் இப்படித்தான் ஆகி விட்டது. எந்த சூழலுக்கும்  ஊழலுக்கும் பழகி விடும் தன்மையும் எதையும் சகித்துக் கொண்டு வாழும் தன்மையும் சினிமாவிற்கும் பொருந்திப் போய் விட்டது போலும். எனவேதான் அரைவேக்கான படைப்போடு திருப்தியடைந்து விடுகிறான். ஒரு நல்ல எழுத்திலிருந்து, படைப்பிலிருந்து, சினிமாவிலிருந்து பாதிக்கப்பட்டு, உந்துதல் பெற்று இன்னொரு படைப்பை உருவாக்குவதில் தவறொன்றுமில்லை. இன்னொரு பண்பாட்டின், கலாச்சாரத்தின் பாதிப்புகளோடு மரபுத் தொடர்ச்சியுடன் பாதிப்புடன் உருவாவதுதான் (உருவுவது அல்ல) கலையின் வரலாறு.

ஒரு நல்ல படைப்பினால் பாதிப்படைந்து அதற்கு உரிய மரியாதையை அளித்து அதையும் தாண்டி ஒரு படி உயர்ந்து நிற்கிற கலைப்படைப்பாக உருவாக்குபவரை நாம் கலைஞன், படைப்பாளி என்லாம்.

ஆனால் தமிழ் சினிமாவில் பொதுவாக  நிகழ்வது வேறு. எந்தவொரு சர்வதேச சினிமாவையும், சினிமா ஆர்வலர்களையும் தாண்டி மிக ஆவலாக எதிர்பார்ப்பவர்கள் அதன் இயக்குநர்கள்தான் போலிருக்கிறது. தமிழ் சினிமாவின் சராசரி பார்வையாளனின் மனநிலைக்கு எது ஒத்துவருமோ, இதமாக இருக்குமோ அந்தப் படத்தின அவுட்லைனையும் சில காட்சிகளையும் மாத்திரம் சுட்டு அதற்குரிய மரியாதையையும அளிக்காமல் வணிக நோக்கத்திற்காக தமிழ் சினிமாவின் சம்பிதாயமான கச்சாடாக்களை அதில் பிசைந்து தந்து மூலத்தையும் அவமரியாதை செய்து விட்டு அதை 'சுய படைப்பாக' பிரகடனம் செய்வதும் எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.

இதை சம்பந்தப்பட்ட குழு மாத்திரம் செய்யாமல் பெரும்பாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையே இந்த களவாணித்தனத்திற்கு உடன்போகிறது. ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காத மாஃபியாத்தனமான கட்டுப்பாட்டோடு அமைதி காப்பது மட்டுமன்றி, இந்த போலிப் படைப்புகளை வாய்கூசாமல் புகழவும் செய்கின்றனர். தெய்வத்திருமகளின் பத்திரிகை விளம்பரங்களை கவனித்தால் தினந்தோறும் ஒரு இயக்குநர் அதைப் பாராட்டிச் சொன்ன வார்த்தைகளை முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றனர். அந்த வரிசையில் ஓர் இயக்குநர் சொன்னது "இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களின் வரிசையில் தெய்வத்திருமகளை வைக்கலாம்". 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க' என்று ஓவராக கூவும் நகைச்சுவைக்காட்சி நினைவிற்கு வருகிறதா? இதிலுள்ள முரண்நகை என்னவென்றால், இது போன்ற திருட்டுப் படைப்பு இயக்குநர்களும் நடிகர்களும் தொலைக்காட்சிகளில் 'திருட்டு விசிடிகளில் பார்க்காதீர்கள்' என்று வைக்கும் வேண்டுகோள்கள்தான்.

இவ்வாறான திருட்டுக்களை 'தமிழில் பார்க்க இயலும் ஒரேவாய்ப்பிற்காக' நாம் ஆதரிப்பதும் அதற்கு உடன்போவதும் எத்தனை பெரிய தவறு?

இன்னொன்று. உலக சினிமா என்று கருதப்படும் படைப்புகள், ஒரு சராசரி பார்வையாளனுக்கு புரியாது, ரசிக்க முடியாது  என்று உலவும் கருத்துக்கள் எல்லாம் ஒரு மாயை. முயற்சி ஏதும் செய்யப்படாமல் தாழ்வு மனப்பான்மையின் முனையில் நின்று சொல்லப்படுபவை. இன்று உலக சினிமா பார்வையாளர்களாக இருக்கும் பெரும்பான்மையோர் அந்தப் புள்ளியிலிருந்து நகர்ந்து வந்தவர்கள்தான். நம்முடைய ரசனையை நாமே தாழ்த்தி மதிப்பிட்டுக் கொள்வதும் அதையே சொல்லி்த் திரிவதும்  அறியாமையே அன்றி வேறில்லை.

3) ஊர்ல உலகத்துல எவனுமே திருடலையா? என்னமோ நீங்கதான் ரொம்ப யோக்கியம் போல சுவுண்டு வுடறீங்க? ஒலக சினிமா பார்த்துக் கிழிக்கிற நீங்களே நெட்லதானே இருந்துதானே அதையெல்லாம் டவுன்லோட் செய்யறீங்க?

என்னைப் பொறுத்தவரை இப்படியாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து பார்ப்பது நிச்சயம் தவறுதான். அதை நான் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த மாட்டேன். ஒரு படைப்பிற்கு தகுந்த சன்மானம் அளிக்காமல் நுகர முயல்வது நிச்சயம் அயோக்கியத்தனம்தான். (இம்மாதிரியான கட்டணங்களில் அதிகம் கொள்ளையடிப்பது இடைத்தரகர்கள்தான் என்பது வேறு விஷயம்). அதனால் தமிழில் நல்ல சினிமா முயற்சியாக அறியப்படுபவைகளை அரங்கில் சென்று பார்ப்பது என்பதை ஒரு தார்மீக நியாயமாக சுயக்கடடுப்பாடாக வைத்துள்ளேன்.

ஆனால் சினிமா மீது அதீத ஆர்வமுள்ளதைத் தவிர வேறெந்த நோக்கமும் அல்லாத தனிநபர் செய்வதற்கும் அதையே பல கோடிகள் சம்பாதிப்பதற்கான ஒரு சாதனமாக உபயோகித்துக் கொள்ள முயலும் வணிகர்களுக்கும் வித்தியாசமுள்ளதா இல்லையா? அது மாத்திரமல்ல. மூலப்படைப்பை, நாய் கொண்டு போட்ட வஸது போல் வாந்தியெடுத்து வைத்து விட்டு அதை 'தமிழின் உலக சினிமா' என்று பெருமையடித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை சர்வதேச விருதிற்கான போட்டிகளுக்கும் அனுப்பி வைக்க எத்தனை நெஞ்சுறுதி வேண்டும்? இந்த வணிகர்களின் சுயபெருமைத் தேடல்களுக்காக சர்வதே அரங்கில் ஒரு தேசமே அவமானப்பட நேர்வது எத்தனை பெரிய வெட்கமான செயல.

4) மூலப் படைப்பை acknowledge செய்யாதது அத்தனை பெரிய குற்றமா என்ன? சிலாகிக்கப்படும் அந்த மூலப்படைப்பே இன்னொரு பிரதியின் நகலாக இருக்கும் வாய்ப்பிருக்கிறதே? 

இருக்கலாம். ஆனால் அது நிறுவப்படாத வரை நாம் அறிந்திருப்பதுதான் மூலப்படைப்பாக இருக்க முடியும். வெளிநாட்டுத் திரைப்படங்களை நககெலடுப்பது என்பது சமீபத்தில் துவங்கினதொன்றோ அல்லது கமல்ஹாசன்தான் இதை நிறையச் செய்திருக்கிறார் என்பதோதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. சினிமா என்கிற நுட்பம் இங்கு இறக்குமதியானவுடன் கூத்து, நாடக வடிவம்தான் அப்படியே திரைப்படச் சுருளுக்குள் புராணப்படங்களாக சென்றன. அது தீர்ந்தவுடன், மக்களின் மனநிலையும் மாறினவுடன் சமூகப்படங்கள் உருவாகத் துவங்கின. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோர் பிரதான நடிகர்களாக புழங்கின காலகட்டத்திலேயே வெளிநாட்டுத் திரைப்படங்களும் அயல்மாநிலத் திரைப்படங்களும் (வங்காளம்) அனுமதி ஏதும் பெறப்படாமல் தமிழில் அதன் பிரத்யேக மசாலா கலந்து உருமாறத் துவங்கின. திரைத்துறையினர் மாத்திரம் அறிந்திருந்த இந்த ரகசியங்களும் சர்ச்சைகளும் பார்வையாளர்களின் கவனத்திற்கு வராமலே போனதால் பெரிதும் எவ்வித சர்ச்சையும் உருவாகாமல் போனது. தமிழ் சினிமாவின் பிரம்மாக்களின் பெருமையும் அதுநாள் வரை காப்பாற்றப்பட்டு வந்தது. 

ஆனால உலக சினிமா பற்றிய தேடலும் நுட்பம் காரணமாக அதை அடையக்கூடிய வாய்ப்பும் அதிகரித்து விட்ட இன்றைய சூழலில் கூட பிரம்மாக்கள் அதையே தொடர்வது, சமூகத்தை முட்டாள்களின் கூட்டமாக, வணிகர்களின் பார்வையில் தங்கள் பொருட்களின் நுகர்வோர்களாக மாத்திரமே பார்ப்பது கொடுமை. என்றாலும் கெளதம் மேனன், சசி, வெற்றிமாறன் போன்ற ஆறுதலான விதிவிலக்குகள் இருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. புதுமைப்பித்தனின் படைப்பிற்கும் தாம் உருவாக்கிய திரைப்படத்திற்கும் வெளிப்படையான ஒற்றுமை ஏதுமில்லாமலேயே 'அதன் பாதிப்பில்தான் 'உதிரிப்பூக்களை' உருவாக்கியதாக அறிவித்து திரைப்படத்திலும் அத்ற்கான முறையான ஒப்புதலை அளிததார் மகேந்திரன். அதுதான் ஒரு கலைஞனின் அடிப்படை அறமாக, நேர்மையாக இருக்க முடியும். 

suresh kannan

Friday, August 12, 2011

தெய்வத் திரு(ட்டு)மகன்


சரி. முதலில் நல்ல விஷயங்களைப் பேசி விடலாம்.

அதிகார அமைப்புகள் எந்தவொரு சட்ட,திட்டத்தையும் உருவாக்கும் போதும் பெரும்பாலும் அவை சமூகத்தின் மையத்தையே கவனத்தில் கொள்கின்றன. சிறுபான்மை, விளிம்புநிலை போன்ற சமூகங்களை அவை கவனத்தில் கொள்வதில்லை. மனித உரிமை அமைப்புகள், தன்னார்வல அமைப்புகள் போன்றவைதான் இவர்களுக்காக குரல் தரவேண்டியிருப்பது மாத்திரமல்ல, பாதிப்பை அடையும் சமூகமும் தனக்கான உரிமைகளுக்காக தானே போராட வேண்டிய அவலமும் ஏற்படுகிறது. இது இப்படியென்றால் பொதுச் சமூகமும் விளிம்புநிலைச் சமூகத்தை வெற்று அனுதாப பாவனையுடன் உள்ளூற வெறுத்து ஒதுக்குகிறது. எல்லாமே விளம்பரப் படங்களில் வரும் பளபளப்பான விஷயங்கள் போல இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறது. பக்கத்து இருக்கையில் ஒரு திருநங்கை அமர்வதை பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. கட்டணம் செலுத்த தயாராயிருந்தும் கூட திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் பற்றின செய்தியை நாளிதழ்களில் வாசித்திருக்கலாம்.

விளிம்புநிலை மனிதர்களுக்கென்று ஒரு மனமிருக்கும், பிரத்யேகமான உலகிருக்கும், பாசமும் மகிழ்ச்சிகரமான தருணங்கள் அவர்களுக்கும் இருக்கும் என்பதை எவரும் யூகிக்கவோ கவனிக்கவோ விரும்புவதில்லை. அவர்கள் சமூகத்தின் ஓரத்தில் வாழ்ந்து அப்படியே மறைந்து தொலைய வேண்டுமென்றுதான் பொதுச்சமூகம் விரும்புகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை நம் தமி்ழ்சினிமா இதுவரை எப்படி சித்தரித்திருக்கிறது என்று பார்க்கும் போது ஏமாற்றமாகவே இருக்கிறது. மிகையுணர்ச்சியுடன், செயற்ர்கையாக் கட்டமைக்கப்பட்ட பரிதாபத்துடன், பார்வையாளர்களுக்கு அவர்களின் மீது அதீத பரிதாபம் அல்லது பயம் ஏற்படும்படியான அசட்டுத்தனத்துடன் காட்டியிருக்கிறதே ஒழிய, இயல்பாக சித்தரித்ததேயில்லை. சிப்பிக்குள் முத்து, அக்னிசாட்சி, குணா, அஞ்சலி, ஆளவந்தான், குடைக்குள் மழை, பிதாமகன் என்று சட்டென்று நினைவுக்கு வருகிற சில உதாரணங்களைச் சொல்லலாம். இதில் பாலச்சந்தரின் அக்னிசாட்சி மாத்திரம் சற்று சுமாரான முயற்சி. ஆனால் இவைகளை இந்திய இயக்குநர் அபர்ணா சென் இயக்கிய 15 பார்க் அவென்யூ - போன்ற உதாரணத்துடன் ஒப்பி்ட்டால் தமிழ் சினிமா எத்தனை பரிதாபகரமான நிலையில் நிற்கிறது என்பதை உணரலாம். உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்கிற கேள்வியும் இங்கு தோன்றுகிறது.

இயக்குநர் விஜய் இயக்கிய 'தெய்வத் திருமகளும்' இந்த வரிசையில் அச்சு பிறழாமல் இயங்குகிறது. இந்தத் திரைப்படத்தை மூன்று அடுத்தடுத்த நிலைகளில் இருந்து பார்க்கலாம்.

முதல் நிலையில் பார்க்கும் போது, தமிழ் சினிமாவின் வழக்கமான ஆபாசங்களிலிருந்தும் அசட்டுத்தனங்களிலிருந்தும் பெரும்பாலும் விலகி நிற்கிற காரணத்திற்காகவே இந்தத் திரைப்படத்தையும் இயக்குநர் விஜய்யையும் பாராட்டலாம். 'பஞ்ச் டயலாக்' மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இன்னும் ஒருபடி மேலே ஏறுவதற்கான வாய்ப்பிருந்தும் இப்படியொரு மாற்று முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதற்காக விக்ரம் நிச்சயம் பாராட்டுக்குரியவர். அவரிடம் வெளிப்படும் செயற்கையான பாவனைகளைத் தவிர்த்து, படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த்ப் பாத்திரத்திலிருந்து பெரிதும் விலகாமலிருந்தது ஓர் ஆறுதல். நாசர் மற்றும் சிறுமியின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

ஒளிப்பதிவாளர் நீரவ்-ஷாவின் பங்களிப்பு அபாரமானது. ஊட்டியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் இத்திரைப்படத்தை தமிழ்ச்சினிமாவின் ஒரு சராசரி பார்வையாளன் கண்கலங்கி நெகிழ்ந்து விட்டு வெளிவரலாம். அந்த அளவில் கலலா கட்டும் முயற்சியில் படம் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறது.

இரண்டாவது நிலையில் ஒரு படைப்பை அடிப்படை தர்க்க நிலையில் நோக்கும் பார்வையாளனின் நிலையில் பார்க்கும் போது படத்தில் தனித்தன்மையுடன் வலிமையாக உருவாக்கப்பட்ட பாத்திரங்களோ, காட்சிகளில் எந்தவிதமான தர்க்க ஒழுங்கோ என்று எதுவுமில்லை. எல்லாமே மொண்ணைத் தனமான அசட்டுத்தனங்களுடன் இயங்குகிறது.

அமலாபாலின் பாத்திரம் ஒன்று போதும். குழந்தைகளிடம் அத்தனை கருணையுடன் பழகுவதாக அறிமுகப்படுத்தப்படும் இவர், பின்பு ஏன் அத்தனை குரூரமாக குழந்தையை தந்தையிடமிருந்து பிரித்து வைக்க ஒப்புகிறார் என்பது புரியவில்லை. அதே போல் அவரது தந்தையும் சொல்லி வைத்தாற் போல் கிளைமாக்சில் சட்டென்று திருந்தி விடுகிறார். வக்கீல்களை இத்தனை கீழ்த்தரமாக சித்தரித்த படமொன்றும் சமீபத்தில் வந்ததாய் நினைவில்லை. தனியார் பேருந்து நடத்துநர்கள் டிக்கெட்டிற்காக கூவுவது போன்று வக்கீல்கள் கேஸிற்காக அலைகிறார்கள். நாசர் பாத்திரம் பழைய கால நம்பியார் பாத்திரத்திற்கு சற்றும் குறையாத தோரணையிலிருக்கிறது. மனநல வளர்ச்சி குன்றிய கிருஷ்ணாவிற்கும் தனது மனைவிக்கும் முறைகேடான உறவிருக்குமோ என்று சந்தேகப்படுகிறார் கிருஷ்ணாவின் சகதொழிலாளி ஒருவர்.(எம்.எஸ்.பாஸ்கர்). இது தொடர்பான காட்சிகள் கீழ்த்தரமான நகைச்சுவை சிந்தனையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மாறாக அவரின் சந்தேகத்தை, மனஉளைச்சலை subtle ஆக சொல்லியிருந்தால் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கும். பிறகு நீதிமன்றத்தில் கிருஷ்ணாவிற்கு எதிராக சாட்சி சொல்லும் இவர், அடுத்த காட்சியிலேயே கிருஷ்ணாவுடன் கண்ணீர் விட்டு கதறுவது என்ன காட்சித் தொடர்ச்சியோ?

ஒரு காட்சியில் கிருஷ்ணா மேல் தெரியாத்தனமாக மோதி விடுகிறார் பெண் வக்கீலான அனுஷ்கா. "என்னய்யா நீ.. இத்தனை செலவு செஞ்சு அனுஷ்காவைப் போட்டுட்டு கொஞ்சம் கூட கிளுகிளுப்பே இல்லாம" என்று தயாரிப்பாளர் இடையில் திட்டியிருப்பார் போலிருக்கிறது. அந்த இடத்தில் CG மாயமாலங்களோடு இயக்குநர் ஒரு பாட்டு போட்டிருக்கிறார் பாருங்கள். தமிழ்சினிமா திருந்த வாய்ப்பேயில்லை என்று நான் எரிச்சலுடன் மனதிற்குள் முனகிக் கொண்டேன்.

இப்படியாக ஒரு படைப்பில் குறைந்த பட்ச அடிப்படையான தர்க்க ஒழுங்கைஎதிர்பார்ப்பவர்கள இதில் காணப்படும் பல பிழைகளை பெரிய பட்டியலாகவே போட முடியும்.

ஒளிப்பதிவு தமிழ்சினிமாவின் சம்பிரதாயமான தரத்தை தாண்டவில்லையென்றாலும் நான் கவனித்த வரையில் ஒரேயொரு இடத்தில் பாத்திரத்தின் அகவுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தி்ல் ஒளிப்பதிவு அமைந்திருப்பதாக உணர்ந்தேன். அமலாபால் தன் காதலனிடம், "குழந்தையை தக்க வைத்துக் கொள்வதுதான் முக்கியம், திருமணம் கூட அத்தனை முக்கியமில்லை' என்று உரையாடும் காட்சியில் காமிரா அமலா பாலின் முகத்தை ஃபோகஸிலும் காதலனின் முகத்தை அவுட் ஆஃப் போகஸிலும் காட்டுகிறது. பொதுவாக இவ்வாறு காட்டும் போது, ஃபோகஸில் காட்டப்படும் பாத்திரம் பேசி முடித்தவுடன், அவுட் ஆஃப் போகஸ் பாத்திரம் ஃபோகஸிற்கு வரும். ஆனால் இந்தக் காட்சியில் கேமிரா இறுதிவரையில் முதல் நிலையிலேயே நீடிக்கிறது. காதலன் அவளுடைய வாழ்க்கையிலிருந்து மறையக்கூடிய முடிவைக் கூட அவள் எடுக்கத் தயாராயிருக்கிறாள் என்பதை இது சூசகமாக வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்கிறேன்.


மூன்றாம் நிலையில்தான் பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அதாவது I AM SAM என்கிற ஹாலிவுட் படத்தை ஏற்கெனவே பார்த்திருந்தவர்கள், தெரியாமல் இதைப் பார்க்க வந்திருந்தால் தொலைக்காட்சி சீரியல் காண திணிக்கப்பட்டவர்கள் போல் மகா அவஸ்தைக்கு ஆளாகியிருப்பார்கள். ஆம், தெய்வத்திருமகள், குறிப்பிட்ட ஹாலிவுட் படத்திலிருந்து மிக மோசமாக நகலெடுக்கப்பட்ட ஒரு திருட்டுப் பிரதி. கதையின் அவுட்லைன் முதற்கொண்டு பிரதான பாத்திரத்தின் ஹேர்ஸ்டைல், உடை (அங்கே கோட் என்றால் இங்கே ஸ்வெட்டர்), உடல்மொழி, வசனங்கள் போன்றவை மிக அலங்கோலமாக காப்பியடிக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஹாலிவுட் படத்தில் ஷான் பென், சிக்னலைக் கடந்து வரும் போது சிவப்பில் முறையாய் நின்று வருவார். படத்தில் போகிற போக்கில் இந்தக் காட்சி சில விநாடிகள் காட்டப்படும். ஏழு வயதுச் சிறுவனுக்குரிய மனவளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் முறையான குடிமை உணர்வையும் ஒழுங்குணர்வையும் அவன் கொண்டிருக்கிறான் என்பதற்கான அடையாளமது. படத்தின் துவக்கத்திலேயே இது பார்வையாளர்களுக்கு மிக அழுத்தமாய் நிறுவப்பட்டு விடும்.

ஆனால் இதே காட்சி தமிழ்படத்தில் குதறி எடுக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணா மகளைக் காண சில நிமிடங்களே நேரமிருக்கும் போது கூட சிக்னல் சிவப்பில் பரபரப்பான பின்னணி இசையுடன் காத்திருப்பதாக இயக்குநர் இந்தக் காட்சியை 'தமிழ்ப்' படுத்தியிருக்கிறார். போக்குவரத்து விதிகளை ஒழுங்காக மதிப்பதென்பது பொதுவாக மேற்கத்தியர்களுக்கு ரத்தத்தில் ஊறிப்போனதொன்று. அதைக் கொண்டு வந்து இங்கு சென்டிமென்ட்டாக இணைப்பது எத்தனை அபத்தம்?. ஆனால் இதே கிருஷணாதான் நாசரால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது அங்கிருந்து தப்பித்துப் போகிறான். ஏனாம்? நாசரின் மகனின் உயிரைக் காப்பாற்ற. விதிகளை மதிக்கும் ஒழுங்குணர்ச்சி இங்கு மீறப்படுகிறது. மருந்து வாங்கி வந்தவுடன் மீண்டும் வந்து தானே சிறையில் அடைபட்டுக் கொள்கிறான். ஏழு வயதிற்கான மனநிலையில் இயங்குபவனால் எத்தனை சென்டிமென்ட்டாக நடந்து கொள்ள முடிகிறது பாருங்கள்.

(தொடரும்)

Friday, August 05, 2011

அவன் இவன்தான் பாலா




பாலாவின் 'அவன் இவன்' பார்த்தேன். இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னமே இது எனக்கு ஏனோ ஏற்படுத்திய ஒவ்வாமையையும் பாலா தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தேய்வழக்குகளையும் இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அதனாலேயே இதை உடனே பார்க்க எனக்கு எவ்வித சுவாரசியமும் ஏற்படவில்லை.

இத்திரைப்படம் குறித்து பரவலாக உரையாடப்பட்ட குறைகள், அதிருப்திகள், முணுமுணுப்புகள் போன்றவற்றை படத்தைப் பார்த்த பிறகு நானும் உணர்ந்தேன். ஒழுங்குபடுத்தப்பட்ட கதை, திரைக்கதை போன்ற வஸ்துகளைப் பற்றி கவலைப்படாமல் நகைச்சுவை சம்பவங்களின் மூலமே படத்தை நகர்த்தி விட்டு, பிறகு யாரோ தொட்டு உசுப்பினாற் போல் கவலையடைந்து விழித்து 'ஏதோ செய்ய வேண்டும்' என்று ஹைனஸை சாகடித்து கூடவே படத்தையும் சாகடித்து விட்டார்கள்.

பாலா தம்முடைய படங்களில் தொடர்ந்து சில விஷயங்களைப் பயன்படுத்தி வருவதன் மூலம் அதை தன்னுடைய அழுத்தமான அடையாளமாக வெளிப்படுத்துவதற்கு எதிர்மறையாக தன்னுடைய தேய்வழக்கு அடையாளமாக மாற்றி விட்டாரோ என்று தோன்றுகிறது. வழக்கமாக அவரது படங்களில் தோன்றும் பெரும்பாலான பாத்திரங்களும் நிகழ்வுகளும் 'அவன் இவனிலும்' தோன்றுகின்றன.

செம்பட்டைத் தலையுடன், முரட்டுத்தனமாக ,யாருக்காவது விசுவாசமாய் இருந்தே தீரும் விளிம்புநிலை மனிதர்கள், அவர்களால் துரத்தப்பட்டு அடிவாங்கி வெறுத்து பின்பு அவர்களையே காதலிக்கும் அக்ரஹாரத்து, நடுத்தர வர்க்கத்துப் பெண்கள், திரைக்கதைக்குள் செயற்கையாக திணிக்கப்படும் திரையின் நிஜ ஹீரோக்கள், ஹீரோயின்கள், காமெடி நடிகர்களை விடவும் மோசமாய் சித்தரிக்கப்படும் கீழ்நிலை காவல்துறையினர், இன்னொரு புறம் மிக முரட்டுத்தனமாய் சித்தரிக்கப்படும் உயர்நிலை காவல்துறையினர், கோமாளிகளாய் சித்தரிக்கப்படும் மாஜிஸ்ரேட் நீதிபதிகள்... என்று எல்லாம் அவன் இவனிலும் உண்டு. அதிகாரத்தை வைத்திருப்பவர்களின் மீது அடிபணிபவர்களுக்கு பொதுச் சமூகத்திற்கு உள்ளார்ந்த ரகசிய வெறுப்பு உண்டு. இந்த உளவியல் உணர்வைப் பயன்படுத்தி அதற்கான வடிகாலான காட்சிகளை அமைத்து பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெறுவதில் பாலா சமர்த்தராய் இருக்கிறார். எனவேதான் அவரது படங்களில் வரும் காவல்துறையினரும் நீதித்துறையினரும் கோமாளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். பாலா இதை திட்டமிட்டே செய்கிறாரா அல்லது அவரது இளமைக்கால வாழ்வியல் அனுபவங்களையொட்டி தன்னிச்சையாக செய்கிறாரா என்பது ஆய்வுக்குரியது.

ஆனால் இத்தனை தடைகளையும் மீறி எனக்கு ஒரளவிற்கு பிடித்திருந்ததற்கு காரணம் இதிலிருந்த அடித்தட்டு மக்களின் 'பச்சையான' நகைச்சுவைக்காகவும் (இங்கு பச்சை என்பதை RAW என்றும் வாசிக்கலாம்) பாலா தனது பிரத்யேகமான திறமையின் மூலம் பாத்திரங்களை அதனதன் தனித்தன்மையுடன் வலுவாகவும் கச்சிதமாகவும் உருவாக்கியிருந்த காரணத்திற்காகவும்.

இதில் ஏன் விஷாலுக்கு 'ஒன்றரைக்கண்' தோற்றத்தை பாலா வைக்க வேண்டும் என்று யோசித்தேன். அந்தப் பாத்திரத்திற்கு அந்தத் தோற்றத்தை வைத்தேயாக வேண்டும் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை கதை நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாலா தன்னுடைய படங்களில் பிரபல ஹீரோக்களுக்கு ஏற்கெனவே சமூகத்தில் பதிந்துள்ள, பிம்பங்களை அழுத்தமாக சிதைக்க விரும்புகிறார்.அப்போதுதான் பார்வையாளன், அந்த நடிகர்களை பாலாவின் படத்திலுள்ள பாத்திரங்களாக பார்க்கவும் உணரவும் முடியும். ஒவ்வொரு திரைப்பட இயக்குநரும் பின்பற்ற வேண்டிய விஷயமிது. ஆனால் பெரிதும் பரவலாக பாராட்டப்பட்ட விஷாலை விட ஆர்யாவின் இயல்பான நடிப்புதான் எனக்குப் பிடித்திருந்தது. இத்தனைக்கும் பொதுவாக நான் ரசிக்கும் தமிழ் நடிகர்களின் பட்டியலில் ஆர்யா இல்லை. பழைய திரைப்பட இயக்குநர் குமார், ஆர்யா கூடச்சுற்றும் சிறுவன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பு.

இத்திரைப்படத்தில் பிடித்திருந்த இன்னொரு அம்சம், ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த அடித்தட்டு மக்களின் பாசாங்கற்ற நகைச்சுவை. சேரியின் அருகில் வாழ்ந்தவன் என்ற முறையில் இன்னும் கூட இயல்பான ஆபாசமான, பாலியல் சார்ந்த கிண்டல்களும், பொதுவாக பிறப்புறுப்புக்களை உதாரணப்படுத்தி நடைபெறும் உரையாடல்களும் தினமும் கேட்கக் கிடைத்தவை. 'சாமானைப்பிடிச்சு ஒண்ணுக்கு போகத் தெரியாது' என்பதெல்லாம் அங்கே மிகச் சாதாரணமான கிண்டல். நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட நடுத்தர வயதைக் கடந்த பெண்மணியொருவர், சேலையை உயர்த்திக் கொண்டு நின்றபடியே சாக்கடையில் சளசளவென்ற சப்தத்துடன் சிறுநீர் கழிக்கும் கோலமே ஏறக்குறைய நாங்கள் அன்றாடம் காலையில் காணும் காடசி. சுருட்டு பிடித்தபடியே போகிற வருகிற ஆண்,பெண்களை வயது வித்தியாசமில்லாமல் பாலியல் தொடர்பான கிண்டல்களை உதிர்த்தபடியே இருக்கும் அவர் இரவுகளில் சாராயம் குடித்து விட்டு சொரணயில்லாமல் எங்கள் வீட்டுத் திண்ணையில் மல்லாந்திருப்பார். நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்களுக்கு இது அருவருப்பானதாக, ஆபாசமானதாக தோன்றியிருக்கலாம். ஆனால் இதுதான் அங்கு யதார்த்தமான வாழ்வியல் நடைமுறை. இதை பாலா கூடுமான அளவிற்கான நாகரிகத்துடன் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்வேன்.

வலுவான கதைப்பின்னணியும் கச்சிதமாக திட்டமிடப்பட்ட திரைக்கதையும் இல்லாத காரணத்தினால் அனைத்தும் முயற்சிகளுமே வீணாகிவிட்டது. இதற்கு முழுக்க முழுக்க ஒரே காரணம், இயக்குநரான பாலாதான்.

suresh kannan

Wednesday, August 03, 2011

விசித்திர நிறப் பிரச்சினை



புதிதாக வாங்கின டப்பர்வேர் சோற்று மூட்டை டப்பாக்களை கடந்த ஒரு மாதமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். பெரிதும் சிறிதுமாக நான்கு டப்பாக்கள். மஞ்சள் நிறத்தில் இரண்டு. பச்சை நிறத்தில் இரண்டு. அதே நிறத்தில் கச்சிதமான மூடிகள்.

ஏதோ ஒரு கணத்தில்தான் அதை உணர்ந்தேன். எப்போதுமே மஞ்சள் நிற டப்பாவிற்கு மஞ்சள் நிற மூடியையும் பச்சை நிறத்திற்கு அதே நிற மூடியையுமே மிகச் சரியாக பொருத்தி தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் நிறத்தை மாற்றிப் போட ஒரு முறை கூட தோன்றவேயில்லை? அப்படியே மாற்றிப் போட்டாலும் எலலா டப்பாக்களுக்கும் எல்லா மூடிகளும் பொருந்தும் வகையில்தான் இருக்கிறது. இருந்தும் ஏன்? சிறுவயதில் விளையாட்டு போல கல்வி கற்கும் பருவத்தில் நிறங்களைக் கலைத்துப் போட்டு அந்தந்த சரியான நிறத்துடன் பொருத்தும் பயிற்சி பெற்ற அதே குழந்தைப் பருவத்திலேயே இப்பவும் நிற்கிறேனா?. பிஞ்சில் ஆழமாக புதைக்கப்பட்ட இந்த மரபு சார்ந்த ஒழுங்குணர்ச்சியை என்னால் மீறவே முடியாதா? மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஏக்கம்தான் மூடியை மாற்றத் தோணும் புள்ளியை நோக்கி என்னை உந்தித் தள்ளுகிறதா?

குறுகுறுப்பான ஒரு தருணத்தில் வேண்டுமென்றே வேறு வேறு நிற மூடிகளை மாற்றிப் பொருத்தி வைத்தேன். ஏதோ தவறு செய்து விட்டாற் போல் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. அரை மணி நேரத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை. மறுபடியும் சரியான நிற மூடிகளைப் பொருத்தின பிறகுதான் மனது ஆசுவாசமடைந்தது.

இருந்தாலும் ஏன் என்னால் வேறு வேறு நிற மூடிகளைப் பொருத்தி விட்டு அமைதியாக, இயல்பாக இருக்க முடியவில்லை என்பதே எரிச்சலாகவும் குற்றவுணர்வாகவும் இருக்கிறது.

இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீள்வது?

மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ? :)

suresh kannan