Tuesday, August 17, 2010

மஜித் மஜிதியும் பீம்சிங்கும்

.. அந்த நடுத்தரவயது மனிதர் பச்சைக்காக சிக்னலில் காத்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் காணக்கூடிய காட்சியைப் போல ஏழைச் சிறுவர்களும் சிறுமிகளும் இயல்பாக தங்கள் மீது உண்டாகும் அனுதாபத்தை காசாக்கிக் கொள்ளும் எளிய வணிக உத்தியோடு சிறு பொருட்களை  வாகனங்களின் ஊடாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். நடுத்தர வயது மனிதரின் முன்னால் சாம்பிராணிப் புகையை தூவிய படி வந்து நின்று மந்தகாசமாக புன்னகைக்கிறாள் ஒரு சிறுமி. அவள் வயதேயுள்ள தன்னுடைய மகளின் நினைவு அவருக்கு வந்திருக்க வேண்டும். தன்னுடைய உழைப்புக் களைப்பையும் மீறி பதிலுக்கு புன்னகைக்கிறார். அந்தச் சிறுமிக்கு ஏதேனும் தர வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. அவசரமாக பையிலிருந்து பணத்தை எடுக்கிறார். கையில் தட்டுப்பட்டது 500 டோமன்கள். அதைக் கூட தந்துவிடலாம்தான். ஏனோ ஒரு தயக்கம். அது அன்றாடங்காய்ச்சியான அவரது குடும்பத்தின் ஒரு நபருக்கான ஒரு வேளைக்கான உணவுப்பணமாக இருக்கக்கூடும். சில்லறை மாற்றித் தர முடிவு செய்து சிக்னலில் காத்துக் கொண்டிருக்கும் சக வாகனயோட்டிகளை அணுகுகிறார். கிடைக்கவில்லை. "யோவ், இதுவே சில்லறைதான்?" என்கிறான் ஒரு தாராளமயவாதி. சிவப்பிற்கான நேரம் முடியப்போகிறது. நடுத்தர வயது மனிதருக்குள் பரபரப்பு கூடுகிறது. கடைசி தருணத்திலும் யாரும் சில்லறை தர முன்வரவில்லை. பச்சை விழுந்து வண்டிகள் நகர ஆரம்பிக்கின்றன. தடுமாற்றத்துடன் நின்றிருக்கும் இவரை ஒலிகளின் மூலம் மிரட்டுகின்றன பின்னால் வரும் வாகனங்கள். எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் தர விரும்பிய, இவர் திடீரென்று தீர்மானித்து பணத்தை சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு அந்தச் சிறுமியை பார்க்க விரும்பாமல் வாகன நெரிசலுக்குள் மறைகிறார். ...

நம் தமிழ் சினிமாக்கள் எத்தனை மொண்ணைத்தனமாகவும் சாதாரண மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளிலிருந்து எத்தனை தூரம் விலகி நிற்கின்றன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாய் The Song of Sparrows-ல் சித்தரிக்கப்படும் மேற்கண்ட காட்சியைச் சொல்லலாம். ('உலகின் சிறந்த படங்களோடு தமிழ் சினிமாவை ஒப்பிட்டுப் புலம்பாமல் உன்னால் எழுதவே முடியாதா?' என்கிற கேள்வியின் பின்னேயுள்ள நியாயத்தை உணர்ந்தேதான் இருக்கிறேன். எந்தச் சமரசத்திற்கும் தம்மை உட்படுத்திக் கொள்ளாமல் நுண்ணுணர்வு மிக்க ஒரு இயக்குநராவது தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் அவரை வைத்துக் கொண்டாவது திருப்தியடைந்து கொள்ளலாம். அப்படியேதும் இல்லாத ஆதங்கமும் எரிச்சலுமே இவ்வாறு எழுதத் தூண்டுகிறது).

மேற்கண்ட காட்சியை தமிழ் சினிமாவின் ஒரு சராசரி இயக்குநர் எப்படி சித்தரித்திருப்பார் என்று யூகித்துப் பார்ப்போம். நடுத்தர வயதைத் தாண்டியும் மிகை ஒப்பனையுடன் உலகத்தை ரட்சிக்க வந்த அவதாரமாக வேண்டுமானாலும் நடிக்க முன்வருவார்களே ஒழிய, தங்களின் இயல்பான வயதிற்கு ஏற்ற பாத்திரத்தை ஏற்க மாட்டார்கள். ஏழை ரிக்ஷாக்காரன் பாத்திரமென்றாலும் ரீபாக் கேன்வாஸ் ஷூவும் லீ ஜீன்சும் அணிந்து உலாவரும் நாயகன் அந்த ஏழைச்சிறுமியின் கண்ணீரைப் பொறுக்க மாட்டாமல் தன் கையிலிருக்கும் அத்தனை பணத்தையும் அவளிடம் திணித்துவிட்டு கூடவே ஏழைகளின் துயர்நீக்க விரும்பும் சோசலிசப் பாவனைப் பாடல்ஒன்றை பாடி தன்னுடைய நாயக பிம்பத்தை ஊதிப்பெருக்கிய திருப்தியும் பார்வையாளர்களின் ஏகோபித்த கரகோஷத்தையும் ஒருங்கே பெற்றுக் கொள்வான்.

மஜித் மஜிதியின் மேற்குறிப்பிட்ட படத்தின் உள்ளடக்கம், ஏறக்குறைய 'பா' வரிசைப் பட புகழ் ஏ. பீம்சிங்கின் வழக்கமான 'அழுகாச்சி' படங்களை ஒத்ததுதான். அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், காலச் சூழ்நிலைகளினால் பிரச்சினைகளின் பால் செலுத்தப்படுவதும் அந்த அவஸ்தைகளின் உச்சியில் மீண்டும் தன் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பி பார்வையாளனை ஆசுவாசப்படுத்துவதும். ஆனால் நுண்ணுணர்வு மிக்க யதார்த்தமான காட்சிகளின் உருவாக்கத்திலிருந்தும் நடிகர்களின் பங்களிப்பிலிருந்தும் எப்படி இரு படங்களும் எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன என்பதை ஒரு சாதாரண பார்வையாளன் கூட உணர முடியும். ஒரு சினிமா இயக்குநர்,  'கலைஞன்' என்கிற உயர்நிலைப் புள்ளிக்கு உருமாறுகிற மாயத்தை அவரேதான் தீர்மானித்துக் கொள்கிறார். அவரால்தான் அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு சினிமாவா? அல்லது காலத்தை கடந்து நிற்கப் போகிறதொரு கலைப்படைப்பா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வாறு உருவாகிற கலைஞர்கள்தான் சர்வதேச அரங்கில் 'திரைப்படைப்பாளிகளாக' அடையாளம் காட்டப்படுகின்றனர். அவர்களின் படைப்புகள் 'உலக சினிமா'வாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.



தீக்கோழி பண்ணையில் பணிபுரியும் கரீம், கோழியொன்று தப்பியோடின தவறின் காரணமாக பணிநீக்கம் செய்யப்படுகிறார். மகளின் காதுகேளா கருவியை பழுதுபார்க்க நகரத்திற்குச் செல்லும் அவரை தற்செயலான பணியை திணிப்பதின் மூலம் நகரம்  தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது. நகரம் அவருக்கு பல அனுபவங்களைத் தருகிறது. சற்று பொருளீட்ட முயன்றாலும் தன்னுடைய ஆன்மா அமைதியின்றி தவிப்பதை  அவ்வப்போது உணர்கிறார் கரீம். மறுபடியும் அவருடைய பழைய பணியை திரும்பப் பெற்றவுடன்தான் இயல்பான நிம்மதியைப் பெறுகிறார். மேலே குறிப்பிட்டபடியான பல நுட்பமான காட்சிகளின் மூலம் இத்திரைப்படம் ஓர் உன்னத அனுபவத்தைத் தருகிறது.

நகரப்பணிக்கு பழகிக் கொண்டிருந்தாலும் தப்பிச் சென்ற தீக்கோழி  அவருடைய அல்லறும் ஆன்மாவை பல்வேறு சமயங்களில் மறைமுகமாக தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. எங்கோ இறக்கி வைக்க வேண்டிய ஒரு குளிர்பதனப் பெட்டிச் சுமையை வழிதவறுதல் காரணமாக வீட்டிற்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. திருடுவது அவரது நோக்கமில்லையென்றாலும் தானாக வந்த அந்த அதிர்ஷ்டத்தை அந்த எளிய கிராம மனம் உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இரவெல்லாம் அதை விக்கித்துப் பார்ததபடி அமர்ந்திருக்கிறார் கரீம். நகரத்தில் எங்காவது அதை விற்றுக் காசாக்கிக் கொள்ளும் முடிவுடன் புறப்படுகிறார். தானாகவே முன்வந்து விசாரிக்கிற காசு தருகிற வியாபாரியை புறக்கணித்து (இப்படித்தானே நம் மனம் இயங்கும்) வேண்டாமென்று துரத்துகிறவனிடம் கெஞ்சுகிறார். இப்படியாக அலைகிற போது வழியில் தென்படுகிற ஒரு காட்சி அவரை திகைத்து நிறுத்துகிறது. அது வண்டியில் ஏற்றப்பட்டிருக்கிற சில தீக்கோழிகள். அவை அவரின் பழைய நிம்மதியான வாழ்க்கையை நினைவுப்படுத்துகின்றன. அடுத்த காட்சியில் குளிர்பதனப் பெட்டியை அதற்குரிய இடத்தில் கரீம் சேர்த்துவிடுகிற காட்சி காட்டப்படுகிறது.

கிராமம் என்றாலே அது வெள்ளந்தியான மனிதர்களின் இடம் போலவும் நகரம் என்றால் அது கொடூரமானது  என்கிற கறுப்பு-வெள்ளைச் சித்திரம்தான் பொதுவாக முன்வைக்கப்படும். பெரும்பாலும் கிராமத்திலிருந்து புலம்பெயர்கிற மனிதர்களுடனும்தான் நகரம் இயங்குகிறது என்கிற உண்மையை கிராமத்திலிருந்து வந்தவர்கள் செளகரியமாக மறந்துவிடுவார்கள். தவறுதலாக அதிக பணத்தை தந்து விட்டு விரைகிற செல்வந்தரை கிராமத்தனான கரீம் திருப்பித் தர துரத்துகிற அதே நகரத்தில்தான், அதிக பணத்தை பாக்கிச் சில்லறையாக தந்து விடும் கரீமிடம் அதை துரத்தி வந்து திரும்பத் தரும் நகரவாசியும் சித்தரிக்கப்படுகிறார்.

திரைமொழியை எத்தனை நுட்பத்துடன் உபயோகிக்க வேண்டும் என்பதை பல காட்சிகளில் சூசகமாக உணர்த்துகிறார் மஜித் மஜிதி. விபத்தொன்றில் சிக்கி நகரப் பணியின் வருவாயையும் இழந்து படுத்துக்கிடக்கும் கரீம், தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனக்குப்பதிலாக பணிபுரிவதை கையாலகாததனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். உடம்பு ஒரளவிற்கு குணமான ஒரு தனிமையில் கீச்கீச்சென்று கத்திக் கொண்டிருக்கிற குருவியின் சப்தம் அவரது கவனத்தை ஈர்க்கிறது. எப்படியோ அறைக்குள் மாட்டிக் கொண்ட அந்தக் குருவி தப்பிக்கும் நோக்கத்துடன் கண்ணாடிச் சன்னலில் முட்டி முட்டி கீழே விழுகிறது. மெல்ல தவழ்ந்து சென்று சன்னலை திறந்து குருவியை விடுவிக்கிறார் கரீம். அதே சமயத்தில் அவரது பழைய பணி திரும்பக் கிடைக்கும் நல்ல செய்தியும் கிடைக்கிறது. குருவியைப் போல தத்தளித்துக் கொண்டிருந்த அவர் அதிலிருந்து விடுவிக்கப்படுகிற சூழலை மிகப் பொருத்தமாக உபயோகித்திருக்கிறார் இயக்குநர்.

காது கேளா மகளுடான தகப்பனின் பரஸ்பர அன்பும், தங்க மீன்கள் வளர்ப்பதன் மூலம் செல்வந்தனாகி விடலாம் என்ற கனவுடன் அலையும் அவரது மகனும், எப்பவும் அவனை கொலைவெறியுடன் துரத்தியடிக்கும் கரீமும், வளர்ந்த பிள்ளைகளிடமிருந்து விலகி மனைவியை நேசத்தை தனிமையில் அடைய விழைகிற கரீமின் குழைவும் அதற்கான மனைவியின் வெட்கமும், சிறுவர்களின் தங்கமீன் கனவு நிராசையில் முடிகிற அநீதியும் அதிலிருந்து துளிர்க்கிற நம்பிக்கையும்  என பல நுட்பமான காட்சிகள் நம்மை நெகிழ்ச்சியடையவும் பரவசமடையவும் செய்கின்றன. சிறுவர்களின் உலகை இயல்பாக காட்சிப்படுத்துகிற விதத்தில் மஜித் மஜிதியின் தனித்துவம் இதிலும் வெற்றி பெறுகிறது.

 

கரீமாக நடித்த Reza Naji-ஐ தோற்றப் பொலிவில்லாததின் காரணமாகவே நம்மூர்களில் துணைநடிகராக கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாடக நடிகரான இவர் 'சில்ரன் ஆ·ப் ஹெவனின்' மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றார். இரானின் நிலப்பரப்பை கூடுதல் அழகியல் கவனத்துடன் படமாக்கும் மஜித் மஜிதி இதிலும் அவ்வாறே இயங்கியுள்ளார். நகரத்தின் காட்சிகளும் அதற்கேயுரிய பரபரப்புடன் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.  என்றாலும்  பெரும்பாலும் மிக யதார்த்தமாக இயங்கும் ஒளிப்பதிவு, பருந்துப் பார்வையுடன் கூடிய இரண்டு ஏரியல் ஷாட் காட்சிகளில் பிரம்மாண்டமாயும் செயற்கையாயும் நம்மை உணரச் செய்து அந்நியமாய் விலகி நிற்பதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 

மற்ற எந்த நாட்டுத் திரைப்படங்களையும் விட இரான் திரைப்படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாய் இருப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன். The Song of Sparrows-ம் அதிலொன்று.

தொடர்புடைய பதிவுகள்:

காட்சிப்பிழை

'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா?..

suresh kannan

14 comments:

Sridhar Narayanan said...

தீக்கோழி திரும்ப கிடைத்த செய்தி அவருக்கு தெரிவிக்கப் படுகிறதே தவிர அவருக்கு வேலை திரும்ப கிடைப்பதாக சொல்லவில்லையே...

சொல்லப் போனால் அவர் நண்பர் வீட்டுக்கு வந்தவுடன் உற்சாகமாக பேசுபவர் தீகோழி திரும்ப கிடைத்துவிட்டது என்றவுடன் கொஞ்சம் சோகமாக ஆகிவிடுகிறார். பிறகு கால் கட்டில் தன் பெண் வரைந்திருக்கும் காட்சியைப் பார்த்து உற்சாகமாக காட்டிற்கு செல்கிறார்.

மஜிதின் படங்களில் யதார்த்தமான காட்ச்களிலும் ஒரு இயல்பான விறுவிறுப்பைக் காண முடிகிறது. அவருடைய Making சற்றே பழமையானது மற்றும் குழப்பமில்லாதது. அவருடைய Baran படத்தையும் பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறேன் :)

ஹுசைனின் மில்லியனர் ஆகும் கனவை மிக அழகாக சொல்லியிருப்பார்.

நாஜி (கதாநாயகர்) மஜீதோடு இணையும் 4வது படமாம்.

//தோற்றப் பொலிவில்லாததின் காரணமாகவே நம்மூர்களில் துணைநடிகராக கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.//

அப்படி ஒரெயடியாக சொல்லிவிட முடியாதே... அக்காலத்து ஃப்ரெண்ட்ஸ் ராமசாமி, பி டி சம்பந்தம், காளி என் ரத்னம் முதல் இந்தகாலத்து காதல் தண்டபாணிவரை எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்களே....

நல்ல பகிர்விற்கு நன்றி!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனக்கு மிகவும் பிடித்தவர் ,
மிகவும் அற்புதாமான கலைஞர் மஜித்.
பகிர்வுக்கு நன்றி .

மதன் said...

Me too like him very much..i saw "children of heaven" and "colour of paradise". I want to watch thus film also. Your way of writing and introducing good films are very nice.

சென்ஷி said...

எனக்கு மிகப் பிடித்த படம். இறுதிக்காட்சியில் அந்த சிறுவர்களின் பதபதைப்பும் மீன்களைக் காப்பாற்ற இயலாத்தன்மையும் காட்சித்தன்மையில் சிறப்பான வெளிப்பாடு..

சென்ஷி said...

குறிப்பாக படத்தில் காட்டப்பட்ட சின்ன சின்ன விசயங்களில் நகரத்திலிருந்து பழைய பொருட்களைக் கொண்டு வந்து வீட்டை நாகரீகப்படுத்தும் இடம்.. குறிப்பாய் ஒரு பழைய டிவி ஆண்டெனாவைக் கொண்டு வந்து வைத்து விட்டு பெருமிதமாய் மற்ற வீட்டுக்கூரைகளை மேலே நின்று பார்க்கும் காட்சியும், தான் வாங்கி வந்த கதவை இனாமாக இன்னொரு வீட்டிற்கு கொடுத்ததினால் கோபப்பட்டு தூக்கிவரும் காட்சியிலும், தன் மகளுக்கு காது கேட்காமல் தன்னிடம் பொய்யாக நடிப்பதை அறிந்து தவிப்பதிலும் நடிகர் பிரமாதப்படுத்தியிருப்பார்.


சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தில் இவர் வீட்டு தோட்ட வேலைக்கு செல்லும் இடத்தில் நாய் சத்தம் கேட்டு மிரண்டு ஓடும் இடம் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.

ராம்ஜி_யாஹூ said...

சலங்கை ஒலியும், கிழக்கு சீமையிலே யும் , வெற்றி கொடி கட்டு ம், மதிலுகளும் எந்த விதத்திலும் உலக திரைப்படங்களுக்கு குறைந்தவை அல்ல

Subbaraman said...

வழக்கம் போல ஒரு அற்புதமான படத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். இந்த படத்தை எதேச்சையாக UTV world movies ல் பார்த்தேன். நகர விட வில்லை. கரீமாக நடித்தவர் Baran-லும் மேஸ்திரியாக நடித்திருப்பார். அதுவும் ஒரு அற்புதமான படம்.

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

ஸ்ரீதர் நாராயணன்: உங்களுக்காக ஒரு நீண்ட பின்னூட்டத்தை எழுதி Publish என்று அழுத்தியதும் பிழைச் செய்தி கிடைத்து தட்டச்சியவை 'பணால்' மறுபடியும் எழுத முயல்கிறேன். :(

sivaaa said...

மீள் பதிவு???

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி சுரேஷ்.

//திரைமொழியை எத்தனை நுட்பத்துடன் உபயோகிக்க வேண்டும் என்பதை பல காட்சிகளில் சூசகமாக உணர்த்துகிறார் மஜித் மஜிதி.//

உண்மை :-)

சமீபத்தில் அகிரா குரோசோவாவின் நேர்காணல் படிக்க கிடைத்தது.அதில் இரானிய திரைப்படங்கள் குறித்தும்,குறிப்பாய் இரானிய இயக்குனர்கள் குழந்தைகளை திரைப்படங்களில் எளிதாய் கையாளும் விதம் குறித்தும் தனது பிரமிப்பை வெளியிட்டு இருந்தார்.சட்டென எனக்கு மஜிதியின் திரைப்படங்களே நினைவிற்கு வந்தது.

பிச்சைப்பாத்திரம் said...

//தீக்கோழி திரும்ப கிடைத்த செய்தி அவருக்கு தெரிவிக்கப் படுகிறதே தவிர அவருக்கு வேலை திரும்ப கிடைப்பதாக சொல்லவில்லையே......தீகோழி திரும்ப கிடைத்துவிட்டது என்றவுடன் கொஞ்சம் சோகமாக ஆகிவிடுகிறார்...//

ஸ்ரீதர் நாராயணன்:

அந்த இறுதிக்காட்சிகளின் கோர்வையை நான் இவ்வாறுதான் புரிந்து கொள்கிறேன்:

தீக்கோழி திரும்ப வந்த செய்தியின் மூலம் அவரின் பழைய பணி திரும்பக் கிடைக்கிறது. இது நேரடியாக சொல்லப்படவில்லையென்றாலும் படத்தின் மிக இறுதிக்காட்சியில் தீக்கோழிகளைப் பார்த்து அவர் புன்னகைப்பதும் ஆசுவாசமான முகபாவத்தை வெளிப்படுத்துவதும் அவர் அந்தப் பணியில் மீண்டும் இணைந்து தாம் இழந்திருந்த நிம்மதியை மீட்டுக் கொள்வதாகத்தான் தெரிகிறது. ஆனந்த நடனமாடும் ஒரு தீக்கோழியின் காட்சியை கரீமின் மகிழ்ச்சியின் குறியீடாக இயக்குநர் உணர்த்த முயல்கிறார்.

சரி. பிறகு ஏன் அவர் தீக்கோழி திரும்பக் கிடைத்த செய்தியைக் கேட்டு முகம் இறுக வேண்டும்?...

நகரத்துப் பணியின் மூலம் அவர் சற்று அதிக பொருளீட்ட முயன்றாலும் எதையொ இழந்ததைப் போன்றே அடிக்கடி உணர்கிறார். தம்முடைய பழைய பணி திரும்பக் கிடைப்பதை உணர முடிந்தாலும் சற்று அதிகமாக சம்பாதித்துக் கொண்டிருப்பதை இழக்க வேண்டியிருக்குமே என்ற உடனடி உணர்வுதான் அந்த முக இறுக்கத்திற்கு காரணம் என்பதாக நான் யூகிக்கிறேன். இது பெரும்பாலனோர்கள் உணர்வதுதான். குறைந்த பொருளைத்தரும் ஆத்மார்த்தமான பணியில் ஈடுபடுவதா? அல்லது அதிகப் பொருளைத்தரும் ஆனால் கூலிக்கு மாரடிக்க வேண்டிய பணியில் ஈடுபடுவதா? நம்மில் பெரும்பாலோனொர் இரண்டாவதைத் தேர்வு செய்வது வெளிப்படை. மாறாக கரீம் இதில் முதலாவதைத் தேர்ந்தெடுப்பது அவரது புத்திசாலித்தனமான முடிவு. கரீமின் குழப்பமான மனநிலையும் முக இறுக்கமும் ஒரு தற்காலிக மனநிலைதான். அதிலிருந்து அவர் விடுபட்டு நிரந்தரமான மகிழ்ச்சிக்கான பணியில் ஈடுபடுவதைத்தான் இறுதிக் காட்சிகள் தெரிவிக்கின்றன். பார்வையாளனையும் தம்முடைய பகடையாட்டத்தில் ஆட வைப்பதுதானே கலைஞனின் வெற்றி?

//ஃப்ரெண்ட்ஸ் ராமசாமி, பி டி சம்பந்தம், காளி என் ரத்னம் முதல் இந்தகாலத்து காதல் தண்டபாணிவரை எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்களே....//

அத்தனை தோற்றப் பொலிவில்லாத முகத்தை உடையவர்களை பிரதான நடிகர்களாக வைத்து முழுத் திரைப்படத்தையும் எடுக்கத் துணிவார்களா என்பதுதான் என் மனதில் இருந்த கேள்வி. தவறாக எழுதப்பட்டுவிட்டது. :) கல்யாண்குமார், கமல்ஹாசன்,சூர்யா போன்றவர்கள் அவலட்சணமான ஒப்பனையுடன் நடித்திருக்கிறார்கள்தான் என்றாலும் அது ஒரு பாவனையே. 'அழகர்சாமியின் குதிரை' யின் திரைப்பட ஸ்டில்கள் சற்று நம்பிக்கையூட்டுகின்றன. பார்க்கலாம்.

chandramohan said...

அருமையான பதிவு சுரேஷ்..
முக்கியமாக நம் இயக்குனர்கள் , உண்மையான வாழ்வை அதன் இயல்போடு சொல்வதை வணிகப்படுத்துதல் என்ற கருவியை பயன்படுத்தி முற்றாய் ஒழித்தே விட்டார்கள் என்பது தான் என் எண்ணம். உங்கள் எழுத்து அதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. நான் எழுதிய களவாணி பற்றிய கட்டுரைக்கு கிடைத்த சில எதிர்வினைகள் நம் மக்கள் தம் ரசனையை மேம்படுத்திக்கொள்ள எப்போதும் முயல்வதில்லை என்றே காட்டுகிறது. உண்மையான வாழ்க்கையை காட்டும் இது போன்ற படங்களை தமிழில் எதிர்பார்ப்பது வீண் என்றே சொல்வேன். ரசனை மேம்படாமல் படைப்பு மெருகடையாது. உங்கள் பதிவு எனக்கு சந்தோசம் தருகிறது. வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

சுரேஷ்,

பார்த்ததை கண்ணில் ஒற்றும்படியான எழுத்து. சரி. நன்றி சொல்லிக் கொள்ளலாம். நன்றி மக்கா!

yedde said...

I simply like this movie.