ஆனந்த விகடனில் நான் ரசித்த சிறுகதை 'மிஸ்டர் மார்க்'. செழியன் எழுதியது. 'உலக சினிமா'வைப் பற்றின ரசனை, வெகுஜன வாசகர்களை பரவலாக சென்றடையுமாறு எழுதினவர். 'கல்லூரி' 'ரெட்டச்சுழி" (அய்யோ) போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர். அதையெல்லாம் விட இவர் எழுத்தாளர் என்பதுதான் எனக்கு முக்கியமானது. கவிஞர் மீரா நினைவு மலரின் இவரின் அஞ்சலிக் கட்டுரையோடு இவரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. மீராவின் வீட்டைப் பற்றிய செழியனின் அற்புத வர்ணணை நம்மை 'வாசிக்க' விடாமல் 'காண' வைக்கும் மாயத்தைச் செய்தது. (தேடியாவது இந்தக் கட்டுரையை வாசிக்குமாறு பலத்த பரிந்துரை செய்கிறேன்). பிறகு அங்கொன்றுமாக சில சிறுகதைகளும் கட்டுரைகளும்.
சினிமாவில் பணிபுரிந்து கொண்டே அதன் இருண்மையான பகுதிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தி எழுதுபவர்கள் சொற்பமானவர்களே. அதில் செழியனும் ஒருவர். தீபாவளியின் நெருக்கத்தில் தம்முடைய குடும்பத்திற்கு துணி எடுக்க பணமும் நேரமும் இல்லாத ஒர் உதவி இயக்குநர், படப்பிடிப்பு ஒன்றின் கடைசி நேரத் தேவைக்காக நாயகனுக்கு விலையுயர்ந்த சட்டையைத் தேடியலையும் நகைமுரணை ஒரு சிறுகதையில் சொல்லியிருப்பார்.
சொற்ப அளவிலான விதிவிலக்குகள் தவிர, எழுபத்தைந்து ஆண்டு கால தமிழ் சினிமா எவ்வாறு அபத்தங்களால் நிரம்பியிருக்கின்றது என்பதை சூடும் சுவையுமான மொழியில் கூறுகிறது செழியனின் கட்டுரை. (... அப்படிக் காதலையே எழுபத்தைந்து வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நாம் அந்த ஒரு துறையிலாவது பிறர் அணுக முடியாத புலமையைப் பெற்றிருக்கிறோமா? உலகின் மிகச் சிறந்த காதல் படங்களென எத்தனை தமிழப் படங்களைச் சொல்ல முடியும்) என்றாலும் நம்பிக்கைத் தொனியோடு நிறைகிறது.
என்று டைம்ஸ் இலக்கிய மலரில் தமிழ் சினிமா பற்றின கட்டுரை மாதிரி சில.
மேற்குறிப்பிட்ட சிறுகதை தமிழ் சினிமாவின் பாவப்பட்ட ஜீவன்களான உதவி இயக்குநர்கள், ஒரு படத்தோடு கீரிடம் பறிபோன இயக்குநர்கள், அங்கீகாரத்திற்கான அலைச்சலும் பிழைப்பிற்காக சினிமாவின் எந்தவொரு பணியையும் செய்யத் தயாராக இருக்கும் மனிதர்கள் போன்றவர்களின் பிரதிநிதியை ஒரு பாத்திரத்தின் வாயிலாக சித்தரிக்கிறது.
வரவேற்பறையின் தொலைக்காட்சியில் நாம் வெற்றி பெற்ற இயக்குநர்களின் நடிகர்களின் நேர்காணலையே பளபளப்பான வெளிச்சத்தில் காண்கிறோம். ஆனால் இவர்களின் எண்ணிக்கை சிறு சதவீதமே. இந்த நாற்காலியில் அமர ஆசைப்பட்டு பல வருடங்களாகியும் நிறைவேறாத தோற்றுப் போனவர்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தொடலாம். துரதிர்ஷ்டவசமாக அவற்றைப் பற்றின சித்திரம் நமக்குக் கிடைப்பதில்லை. தோல்வியடைந்தவர்களை இச்சமூகம் திரும்பியும் பார்ப்பதில்லை. இந்த கசப்பான உண்மையை இந்தச் சிறுகதை நமக்கு உணர்த்துகிறது.
மிஸ்டர் மார்க் பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்த 'மல்லிகை' திரைப்படத்தின் இயக்குநர். (கானல் வரி என்றுதான் தலைப்பு வைத்தார். தயாரிப்பாளர் கானல்வரியாது, வீட்டுவரியாவது என்று மாற்றி விட்டார்). எல்லாக் குறுக்கீடுகளுக்கும் இசைந்து தாம் நினைத்த படத்தை எடுக்க முடியாமல் எதையோ எடுத்து அது தோல்விப்படமாகி.... பின்னர் நூறு, இருநூறு என்று கண்ணில் படுகிற சினிமா நண்பர்களிடம் காலம் ஓடுகிற நிலைமை. தான் உதவி இயக்குநரால் 'சார்' என்று அழைக்கப்படுவதை வெறுப்புடன் நிராகரிக்கிறவர் அந்த இளைஞன் பின்னாளில் ஒளிப்பதிவாளர் ஆனவுடன் "ஏதாவது வாய்ப்பிருந்தா கொடுங்க சார்" என்கிறார். நடுவில் பிழைப்பிற்காக வேண்டாவெறுப்பாக தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம் எழுதுகிறார். (கண்ணு வழியா ஒண்ணுக்கு போயிருங்க போல).
கதை சொல்லிக்கு மிஸ்டர் மார்க் இறந்து போவதான செய்தி வருவதுடன் கதை முடிவடைகிறது. இது போன்ற ஆயிரம் விட்டில் பூச்சிகள் கோடம்பாக்க ஸடூடியோக்களில் வலம் வருகிறார்கள். அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' புதினம் இவர்களின் உலகிலுள்ள சோகத்தையும் அபத்தத்தையும் வலுவாக சுட்டிக் காட்டுகிறது. சினிமாவிலேயே கூட பாலச்சந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்' படத்தின் இரண்டாவது பகுதி இந்த உலகைப் பற்றிப் பேசுகிறது.
இந்தச் சிறுகதையை வாசித்தவுடன் எனக்கு சட்டென்று நினைவில் வந்தவர் 'தினந்தோறும்' திரைப்பட இயக்குநர் நாகராஜன். சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரசியமான வசனங்களாலும் திரைக்கதையாலும் கவர்ந்த படமது. நன்றாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் பின்பு துணை நடிகராக சில வருடங்களில் காணாமற் போனார். சமீபத்தில் "குடியால அழிஞ்சேன் சார். இனி பாருங்க. ஒரு ரவுண்டு வருவேன்" என்றார் ஒரு நேர்காணலில். என்னவாயிற்று என்று தெரியவில்லை..
இன்று புகழ் பெற்றிருக்கும் பெரிய இயக்குநர்களின் பழைய திரைப்படங்களைக் காண நேரும் போது டைட்டிலில் இடம் பெற்றிருக்கும் உதவி இயக்குநர்களின் வரிசையை கூர்ந்து பார்ப்பேன். அதில் பின்னாளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஒருசிலதே காணக் கிடைக்கும். எனில் மற்றவர்கள் என்ன ஆனார்கள்? யாருக்காவது உதவியாகவே இன்னும் காலம் கழிக்கிறார்களா? வாய்ப்பு கிடைக்காத வெறுப்பில் எங்கிருந்து ஓடி வந்தார்களோ, அந்த ஊருக்கே திரும்பிச் சென்றார்களா, அல்லது அந்த தோல்வியை ஒப்புக் கொள்ள மனமி்ல்லாமல் நகரத்தின் விளிம்பு மனிதர்களில் ஒன்றாக கரைந்து போனார்களா, இந்த சினிமா வியாபாரத்திலேயே உள்ள சந்து பொந்துகளை அறிந்து விநியோகஸ்தராக ஆகி தம்முள் இருந்த கலைஞனை தொலைத்து விட்டார்களா?
நேற்று மாத்திரமல்ல, இன்றும் கூட பல இளைஞர்களின் கனவும் லட்சியமும் சினிமாவில் ஜெயிப்பது என்றாகவே இருக்கிறது. மேற்கண்ட தோல்வியடைந்த மனிதர்களைப் ப்றறி அறிந்திராதிருப்பது ஒரு காரணம் என்றால், அறிந்திருந்தாலும் கூட அதை பொருட்படுத்தாது தமக்கு அவ்வாறு நிகழாது என்கிற பெருநம்பிக்கையோடு வருவது இன்னொரு காரணம். எது இவர்களை இத்தனை துடிப்புடன் செலுத்துகிறது. சினிமாவின் மூலம் கிடைக்கும் உடனடி பணமும், புகழும் மாத்திரம்தானா? அல்லது உண்மையாகவே கலைஞன் என்கிற அங்கீகாரத்திற்காகத்தானா?
தானாக வாய்ப்பு தேடி அல்லது சுற்றத்தால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டு துணை நடிகைகளாக, மூன்றாவது வரிசையில் நான்காவதாக நிற்கும் ஆட்டக்காரியாக, இந்த வாய்ப்பும் கிடைக்காமல் பாலியல் தொழிலாளிகளாக ஆக நேரும் பெண்களின் நிலைமை இன்னும் பரிதாபம். 'ஊருல இருந்து மஞ்சப்பையோட படம் எடுக்க வர்ற தயாரிப்பாளர்கள், படமெடுக்கிறாங்களோ இல்லையோ, ரூம்ல பெரிய கட்டிலா மொதல்ல வாங்கிடறாங்க" என்கிறார் கமல்ஹாசன், ஒரு பழைய நேர்காணலில்.
எத்தனை பேர்களின் கனவுகளையும் உழைப்பையும் கண்ணீரையும் தின்று செரித்துக் கொண்டு அதன் சுவடேயில்லாமல் பளபளப்பாக நிற்கிறது சினிமா என்னும் பிரம்ம ராட்சசம்.
suresh kannan