Saturday, April 03, 2010

காதல் காமம் துரோகம்

மணிமாறன் கணினியைத் திறந்து மின்னஞ்சலை சோதிக்க முயன்ற போது 'TRUE HOT INDIANS' (EXCLUSIVE) என்கிற குறிப்புடன் ஒரு மின்னஞ்சல் சாகசமாக கண்ணைச் சிமிட்டியது. ஸ்பேம் மெயிலோ என்று அழிக்க முயன்றான். ஆனால் அது ஆஸ்திரேலிய நண்பனிடமிருந்து வந்திருந்தது. Networking Site மூலமாக நண்பனானவன். புகைப்படத்தைக் கூட பரிமாறிக் கொள்ளவில்லையெனினும் ஒத்த அலைவரிசை ரசனையில் ஒரளவிற்கு நெருக்கமான நண்பனாகிப் போனவன். அந்த ரசனை எது என்பதுதான் வில்லங்கமானது. Voyeurism. 

மணிமாறன் விரும்பி பார்க்கும் பாலியல் படங்கள் வழக்கமானவைகள் அல்ல. பிரபல நடிகைகள் உடை மாற்றும் ஒளித்துணுக்குகள், டவல் நழுவ குளியலறைக்குச் செல்லும் அந்நிய குடும்பத்துப் பெண்கள், அவர்கள் அறியாமல் படம் பிடிக்கப்படும் ஆதாம் ஆப்பிள் சமாச்சாரங்கள். 'இந்தா எடுத்துக்கோ' என்னும் அப்பட்டமான வீடியோக்களை விட சாவித்துவாரம் வழியாக குறுகுறுப்புடன் ஒளிந்து பார்க்கும் உணர்வைத் தரும் வீடியோக்கள் மணிமாறனுக்கு அதிக கிளர்ச்சியைத் தந்தது. இதில் வெள்ளைக்காரிகளை விட இந்திய குறிப்பாக தென்னிந்திய பெண்களின் வீடியோக்களே தேடலே அதிகம். தேசப்பற்றெல்லாம் ஒன்றுமில்லை. இதை ரசிப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருவதால் வழக்கமான முறையில் படம்பிடிக்கப்படும் நடிகர்கள் கூட செயற்கையாக இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் அசலானது எது என்பதை கண்டுபிடிப்பது கூட ஒரு சுவாரசியமான விளையாட்டாகி விட்டது.

ஆஸ்திரேலிய நண்பன், கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளும் தளத்திலிருந்த ஒரு லிங்க்கை வழக்கம் போல் மணிமாறனுக்கு அனுப்பியிருந்தான். குறுகுறுப்புடன் அதை தரவிறக்கம் செய்த இவன் அதை ரகசிய போல்டரில் போட்டு வைத்திருந்தான். அன்று முழுவதும் அதைப் பார்க்கப் போகிற தவிப்பு பல தருணங்களில் மூளையில் வியாபித்து வெளிப்பட்டது. அன்றிரவு செயற்கையான தனிமையை ஏற்படுத்திக் கொண்டு வீடியோவை பார்க்க ஆரம்பித்தான். முற்றிலும் அந்நிய சூழ்நிலையில் இருந்த அந்த இருவரும் யாரோ என்று பார்க்க ஆரம்பித்தவனுக்கு சில நொடிகளிலேயே தலையில் இடி இறங்கினாற் போல இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு மணிமாறனுக்கு திருமணமாகி தேனிலவிற்காக பெரும்பாலோர் செல்லும் அந்த மலை வாசஸ் தலத்திற்குச் சென்றிருந்தான். ஓட்டலின் பெயர் கூட மறந்துவிட்டது.

()

மணிமாறனுக்கு நேர்ந்த அந்த விபத்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நாம் இன்று கண்காணிப்பு சமுதாயத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். டிராபிக் சிக்னலில் இருந்து ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், ஹை-டெக் அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள்.. என்று பல இடங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் காமிராக்கள் நம்மை தொடர்ந்து பதிவு செய்து கொண்டேயிருக்கின்றன. இவற்றின் மூலம் ஒருவரின் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை கண்காணித்து அவரைப் பற்றின பல தகவல்களைத் தொகுக்க முடியும்.

குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க இவை செயல்படுவது ஒருபுறமென்றால் ஒருவரை வேவு பார்க்கவும், பாலியல் செய்கைகளை படம்பிடித்து பணம் பறிக்கவோ, பார்த்து ரசித்து மகிழவோ செயல்படுத்தப்படும் பல ரகசிய கேமிராக்கள் ஒரு தனிமனிதனின் அந்தரங்க வெளியை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. நம்முடைய அந்தரங்கம் பாதுகாப்பாக இருக்கும் உணர்வில் நாம் மற்றவர்களின் அந்தரங்களைப் பற்றி அறிந்து கொள்ள மிக ஆவலாகயிருக்கிறோம்.

இதில் அதிகம் அவதிப்படுவது பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள், துணை நடிகைகள். படப்பிடிப்புகளுக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போதும் குளியலறையிலோ, உடைமாற்றும் வசதியில்லாத சூழ்நிலையில் தற்காலிக ஏற்பாடுகளின் போதோ காமிரா ஏதாவது தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறதா. என்கிற பதட்டம் தருகிற மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. 'ஒரு கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது மறைவானதொரு இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றதை மேலிருந்து ஒரு குழுவான நபர்கள் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்ததை எண்ணி பல இரவுகள் அழுதிருக்கிறேன்' என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா.

ஒருவரின் அந்தரங்க வெளிக்குள் நுழையும் உரிமையை 'இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம்' என்கிற போர்வையில் இன்று தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களும் கையில் எடுத்துள்ளன. லஞ்ச ஊழல்களை வெளிப்படுத்தும் ஊடகங்கள் ஒருபுறமிருக்க பாலியல் செய்கைகளை படம்பிடித்து அவற்றை வைத்து பணம் பறிக்கும், பேரம் படியாவிடில் அதை வெளிப்படுத்தி அதன் மூலமும் கூட சம்பாதிக்கத் துணியும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன. கற்பனையாக மேலே குறிப்பிட்ட மணிமாறன்களைப் போல பல தனிநபர்கள் மற்றவர்களின் அந்தரங்களைக் காண எதையும் செலவு செய்ய தயாராக இருப்பதால் இவர்களுக்காக இணையத்தில் பல தளங்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளன.

()

முன்பே குறிப்பிட்டது போல காமிராக்களால் தொடர்ந்து மறைமுகமாக கவனிக்கப்படும் காட்சிகளை வைத்து ஒருவரின் வாழ்க்கை பற்றிய திரைப்படத்தைக் கூட உருவாக்கிவிட முடியும். ஜிம்கேரி நடித்து 1998-ல் வெளிவந்த The Truman show இதையே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. சில பரிசோதனை திரைப்படங்களில் இவ்வாறான வீடியோ பதிவுகளை ஒரு உத்தியாகவே பயன்படுத்துகிறார்கள். Cloverfield (2008) ஒரு அமெச்சூர் வீடியோகிராபர் எடுக்கிற தொடர்ச்சியான குழப்பமான காட்சிகளைக் கொண்டே முழுத்திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது.இதே பரிசோதனை முறையில் ஒர் இந்தித்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. Love, Sex Aur Dhokha (2010). You are being watched என்பது இதன் டேக் லைன். தனது ப்ராக்ஜக்ட்டிற்காக படமெடுக்கும் ஒரு திரைப்படக்கல்லூரி மாணவனின் காதல், சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஒருவன் சக பெண் தொழிலாளியுடன் உறவு கொண்டு அதை வைத்து பணம் சம்பாதிக்க முயலும் காமம், பிரபலங்களின் அந்தரங்கங்களை சூடான வீடியோ செய்திகளாக்கும் ஒரு பத்திரிகையாளனின் துரோகம் ஆகிய மூன்று பகுதிகளாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தனித்தனியான இந்த மூன்று பகுதிகளுக்கும் சுவாரசிய தொடர்பு ஏற்படுத்தும் நுணுக்கத்தில் இயக்குநர் Dibakar Banerjee வெற்றி பெற்றுள்ளார்.

திரைப்படக் கல்லூரி மாணவனின் காம்கார்டரில் பதிவாகும் காட்சிகள், ஷாப்பிங் மாலின் CCTV- காட்சிகள், பத்திரிகையாளனின் ரகசிய காமிரா காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டே முழுத்திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இவ்வகையில் இத்திரைப்படத்தை முதல் நவீன பரிசோதனை சினிமா என்று வகைப்படுத்தலாம்.

பிரச்சினைகள் முடிந்து எல்லோரும் ஒன்றாக இணைந்து சிரிக்கும் காதல்-குடும்ப திரைப்படங்கள், முதல் பகுதியில் மிதமான கிண்டலுக்குள்ளாகின்றன. ஆனால் இதன் முடிவு அப்படியல்லாமல் மிகக் குரூரமாயுள்ளது.

இரண்டாவது பகுதி பொதுவெளியில் நம்மை கண்காணிக்கும் காமிராக்கள் அவற்றின் குறிப்பிட்ட உபயோகத்திற்கு மாறாக பயன்படுத்துப்படுவது குறித்து எச்சரிக்கிறது. அலட்சியமாக, கவர்ச்சியாக உடையணியும் பெண்கள் இவற்றின் பிரதான இலக்கு.

மூன்றாவது பகுதி பிரபலங்கள் ரகசிய காமிராக்களில் சிக்குறுவதையும் அதை வைத்து சம்பாதிக்க முயலும் ஊடகங்களைப் பற்றி பேசுகிறது.

இன்றைய நவீன சமூகத்தில் நிகழும் நவீனக் குற்றங்களை இத்திரைப்படம் சுட்டிக் காட்டினாலும் திரையில் பார்க்கும் போது சிலர் அதிர்ச்சியடையலாம். யாரோ நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற பிரக்ஞையுடன் வாழ்வது மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடியதுதான் என்றாலும் அதுதான் யதார்த்தமான நிஜம்.

 suresh kannan

11 comments:

அதிஷா said...

டிவிடி வந்திருச்சா.. சப்டைட்டில் வருதா?

நல்ல பிரிண்டா?

பார்க்க தூண்டும் விமர்சனம்

Vijayashankar said...

முதலில் வரும்.. வெட்டி போடும் காட்சி... குமட்டிக்கொண்டு வந்தது. எப்படி சென்சார் அனுமதித்தார்கள்? காமடியும் ( இடையில் வரும் ஓவர்ரிட்டன் விடியோ ) அப்புறம், ஆபிஸ் ரகசிய கேமராக்கள் வைத்து மிரட்டப்படும் சீன்ஸ் இன்றும் பி.பி.ஓவில் நடப்பது ( மசாலாக்களை ) வலையேற்றம் செய்யப்படுகிறது.

கேமரா எப்போதும் நகர்கிற மாதிரி கட்டப்படும் உத்தி அருமை. புதுமை. கொஞ்ச நேரத்தில் போர்.

எல்லா அப்பாக்களும் காதலுக்கு எதிரி தான் என்று பின் நவீனத்துவ படங்களிலும் சொல்கிறார்கள்!

ராம்ஜி_யாஹூ said...

நானும் இணையத்தில் இந்த சினிமாவின் விமர்சனம் படித்தேன்.

ஆனால் பதிவர்களின் விமர்சனம் படித்து ஒரு படத்தை நம்ப கூடாது , என்பது நான் சமீபத்தில் படித்த பாடம்.

அங்காடி தெருவை நேற்றுதான் பார்த்தேன், எனக்கு அதில் திருச்செந்தூர் ஒன்றிய தமிழே தெரிய வில்லை, அது அப்படியே நாகர்கோயில் தமிழாக உள்ளது.

ஜீவன்பென்னி said...

moserbaer dvd Vanthachu subtitle udan. Torrent kidaikkudu.

ஜெயக்குமார் said...

நல்ல விமர்சனம். இப்படி இன்னொருத்தன் அந்தரங்கத்துல நுழைஞ்சு படமெடுக்குறதுக்குப் பேருதான் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசமா?

வெளங்கிரும்..

படம் இன்னும் பாக்கலை.. பாத்துருவோம்

ஜெயக்குமார் said...

//நண்பர்களுக்கு, எந்தவொரு பின்னூட்டத்தையும் பிரசுரிப்பதும் மறுப்பதும் என்னுடைய விருப்பமே. அதைக் கருத்தில் கொண்டு பின்னூட்டமிடவும்.
//

எதனால் இந்த அன்பு மிரட்டல்?

பிரசுரிக்க இயலாத, நாகரீகமற்ற பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும் என்பதன் “உங்கள் வார்த்தைகளோ” மேற்கூறியிருக்கும் டிஸ்கி?

ஜெகதீஷ் குமார் said...

பொதுவாக உங்கள் விமர்சனங்கள் விரிவாகவும் நுணுக்கமாகவும் இருக்கும். ஆனால் இது சுருக்கமாக இருப்பினும் நம் தனிமையை உற்றுப்பார்க்கும் ஊடகங்கள் பற்றின அதிர்ச்சிச் செய்தி மனதில் ஆழ்ப்பதியும் வண்ணம் இருந்தது.

இளமுருகன் said...

அப்பட்டமான உண்மை.வெளியில் ஹோட்டலில் தங்கும் போது அதுவும் துணையுடன் தங்கும் போது யாரோ ஒருவர் பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடிவதில்லை இன்றைய காலகட்டத்தில் .

Karthik S said...

Check this out, if you are interested.

http://passionforcinema.com/the-lsd-crew-blog-cuts-and-bruises/

Anonymous said...

நண்பர்களுக்கு, எந்தவொரு பின்னூட்டத்தையும் பிரசுரிப்பதும் மறுப்பதும் என்னுடைய விருப்பமே. அதைக் கருத்தில் கொண்டு பின்னூட்டமிடவும்.

வஜ்ரா said...

கையடக்க வீடியோ காமிராவால் எடுக்கப்பட்ட டாகுமெண்டரி போல் தோன்றும் சினிமாவின் முன்னோடி the blair witch project என்று நினைக்கிறேன். பிறகு [Rec], பின்னர் Cloverfield. சமீபத்தில் இதே போல் வந்து கலக்கிய நார்வே நாட்டுப் படம் The troll hunter.