Saturday, February 27, 2010

எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு சந்திப்பு

சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர்

சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'.

எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு, அந்தப் படைப்பாளியை சந்தித்து அபத்தமாக உரையாடுவது, ஆட்டோகிராப் வாங்குவது போன்றவை, 'நான் அந்த எழுத்தாளரை சந்தித்தேன்' என்று ஜம்பமடிப்பதற்கு உதவுமே தவிர வேறொன்றிற்குமில்லை. ஆனால் படைப்பாளி எழுதின வட்டத்தையும் தாண்டி சிந்தித்து தனது ஐயங்களை அவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள முயலும் வாசகர்கள் அரிதானவர்கள்; இந்த நிலையிலிருந்து விதிவிலக்கானவர்கள்.

இந்த காரணத்திற்காகவே, நான் பொதுவாக எந்த எழுத்தாளரையும் சந்திக்க முயல்வதில்லை, என் வாசகப் பயணத்தை நல்லதொரு திசையில் மாற்றியமைத்த மற்றும் என் மிகுந்த அபிமானத்திற்குரிய சுஜாதா உட்பட.


 ஆனால் கடந்த வாரத்தில் ஒரு நாள் பிரசன்னா தொலைபேசியில் "நண்பர் தேசிகன் மூலமாக எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்கலாமென்றிருக்கிறோம். நீங்கள் சுஜாதாவின் படைப்புகளில் மிகுந்த பிரேமை கொண்டிருக்கிறவர் என்று நான் அறிவேன். நீங்களும் வருகிறீர்களா?" என்று அழைத்த போது வந்த சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாமே என்று உடனே ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டேன்.

28.05.2005. மாலை ஆறு மணி. உட்லண்ட்ஸ் டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட்.

இதுவரை புகைப்படங்களிலும், நூல் வெளியீட்டு விழாக்களில் தூரமாக நின்று மட்டுமே பார்த்திருந்த சுஜாதா, தனது அசாதாரணமான உயரம் காரணமாக சற்று குறுகினாற் போல் தளர்ச்சியாக நடந்து வர, 'இவரிடம் என்ன கேள்வி கேட்டு, என்னத்த பதில் சொல்லப் போகிறார்' என்று ஆயாசமாக இருந்தது. கற்றுக் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசான்கள் எனில் சுஜாதா எனக்கு முக்கியமானதொரு ஆசான். எழுத்துலகில் துரோணரைப் போல் திகழும் அவரின் பல்லாயிரக்கணக்கான ஏகலைவன்களில் நானுமொருவன். பதிலுக்கு சுஜாதா, நல்ல வேளையாக கட்டை விரலையெல்லாம் கேட்காமல், தன்னுடைய மெத்து மெத்தான ஐந்து விரல்களையும் மென்மையான புன்னகையுடன் என்னிடம் நீட்டினார். "நான் சுரேஷ் கண்ணன்" என்று சந்தோஷத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

உணவகத்தின் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் ஆரம்பித்தது எங்கள் அரட்டைக் கச்சேரி. நாங்கள் ஐந்து பேர். நான், பிரசன்னா, ராஜ்குமார், ரஜினிராம்கி, ராமச்சந்திரன் உஷா. எங்களை உரையாடவிட்டு பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தேசிகன். (இகாரஸ் பிரகாஷ், சுவடுகள் ஷங்கர், ஷங்கர் கிருபா, பிரதீப் போன்றோர் பிற்பாடு வந்து இணைந்து கொண்டனர்)

ஒரு சிறிய ராணுவ பட்டாலியன் போல் சுஜாதாவை நோக்கி கேள்விக் குண்டுகளை சரமாரியாக நாங்கள் எறிய, நிறைய பேசுவாரோ மாட்டாரோ என்கிற என் தவறான அனுமானத்தையெல்லாம் தூள்தூளாக்கும் வகையில் அனுபவம் மிகுந்த ராணுவ தளபதி போல் எங்கள் கேள்விகளை அனாயாசமாகவும், உற்சாகமாகவும் புன்னகையுடனும் எதிர்கொண்டார் சுஜாதா என்கிற அந்த 70 வயது இளைஞர். ஒரு திட்டமிட்ட உரையாடலாக இல்லாமல், நட்புடன் கூடிய கலந்துரையாடலாக இருந்தது அது. எங்களில் பெரும்பாலானோர் அவரை முதன் முறையாகப் பார்ப்பதினால் ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பல கேள்விகளை முன்வைத்தோம். பல்வேறு ரசனை கொண்ட குடும்ப உறுப்பினர்கள், தொலைக்காட்சியில் தங்களுக்குப்பிடித்த சேனல்களை மாற்றி மாற்றி அமைப்பது போல் இருந்தது அது.

இதில் நான் கேட்ட கேள்விகளை மட்டும் தொகுத்தளித்துள்ளேன். சுஜாதா பேச்சு மொழியில் கூறிய பதில்களை நான் உரைநடைத்தமிழில் இடங்களில் மாற்றியமைத்துள்ளேன். இதில் ஏதேனும் கருத்துப் பிழைகளிருந்தால், அது என் தவறாக இருக்கக்கூடும்.

"இந்த போண்டா ரொம்ப புஷ்டியாயிருக்கிறதே" என்கிற சுஜாதா பிராண்ட் நகைச்சுவையுடன் ஆரம்பித்த அந்த உரையாடலில் இருந்து சில முக்கியமான பகுதிகள்.

()

உரையாடல் இயல்பாக இன்றைய கல்வித்துறையின் போக்குகளில் இருந்து ஆரம்பித்ததால், என் முதல் கேள்வி:

சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரேஸ் குதிரைகள் போல் வளர்க்கின்றார்கள். இன்றைய தேதியில் கல்வி என்பது அடித்தட்டு மக்கள் நுழைய முடியாதது போல், வாங்க முடியாத luxury பொருள் போல் ஆகி விட்டதே? இதனால் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பிய படிப்புக்களை படிக்க முடியாமல், ஏதோவொரு கிடைத்த துறைப் படிப்பை படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்களே?"

சுஜாதா: "இடஒதுக்கீட்டின் மூலம் பின்தங்கிய மக்களும் விரும்பிய படிப்பை படிக்கிற வாய்ப்பு இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும், சில மேல்தட்டு மக்கள் முறையற்ற வழிமுறையில் அந்த வாய்ப்பை குறுக்கு வழிகளில் பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்படுகிறது."

சுரேஷ் கண்ணன்: "பாலகுமாரன் தன் முன்கதைச் சுருக்கத்தில் 'சுஜாதா தனக்கு சிறுகதை எழுதுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். எழுதுவதில் ஆர்வமுள்ள நாங்களும் அதே கேள்வியை இப்போது உங்கள் முன்வைத்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். அதேதானா? அல்லது updated-ஆன விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?"

சுஜாதா: "கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து விடுங்கள். இதுதான் நான் அவருக்கு சொன்னது. வேறொன்றுமில்லை"

சுரேஷ் கண்ணன்: "உங்கள் சிறுகதையில் எனக்கு பிடித்தது 'பிலிமோத்ஸவ்' "

சுஜாதா: "அப்படியா?

சுரேஷ் கண்ணன்: நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் பெரும்பான்மையினர் தங்களுக்கு பிடித்ததாக கூறும் சிறுகதை 'நகரம்'. அதை நிதானமாக திட்டமிட்டு எழுதினீர்களா? அல்லது பத்திரிகைகளின் துரத்தல்களுக்கேற்ப அவசரமான மனநிலையில் எழுதினீர்களா?"

சுஜாதா: "மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்த போது, அங்கு பார்க்க நேர்ந்த காட்சிகளின் தாக்கத்தில் உடனடியாக எழுதப்பட்ட கதை அது."

சுரேஷ் கண்ணன்: "இப்போது இணையத்தில் ஏறக்குறைய 500 பேர் வலைப்பதிகிறார்கள். பொதுவாக வலைப்பதிவுகளைப் படிக்கிறீர்களா? வலைப்பதிவுகளின் போக்கு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?"

சுஜாதா: நிறைய வலைப்பதிவுகளப் படிக்கிறேன். சில பேர்களின் வலைப்பதிவை எழுத்துரு பிரச்சினை காரணமாக படிக்க இயலவில்லை. பத்ரி, தேசிகன் போன்றோர்களின் பதிவுகள் படிக்கமுடிகிறது. பொதுவாக வலைப்பதிவுகள் அனுமார் வால் போல் நீண்டு கிடக்கிறது. அரிதாக கிடைக்கிற தகவல்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பதிவாக இருக்க முடியும்.

சுரேஷ் கண்ணன்: "நீங்கள் உங்கள் சிறுவயதில் எழுதிக் கொண்டிருந்த கையெழுத்துப் பத்திரிகைகளின் நவீனவடிவம்தானா இந்த வலைப்பதிவுகள்?"

சுஜாதா: "ஆம். நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களே படம் வரைவோம். இதெல்லாம் எழுதுகிற ஆர்வமிருக்கிறவர்களுக்கு ஒரு outlet மாதிரித்தான்.

சுரேஷ் கண்ணன்: "ஆனால்... இப்போது வலைப்பதிவு எழுதுகிறவர்களில் சிலர், இதை outlet-ஆக பயன்படுத்தாமல் toilet-ஆக பயன்படுத்துவதுதான் பிரச்சினை."

(உரையாடல் இப்போது தமிழர்களின் ஆதார விஷயமாகிய சினிமாவின் பக்கம் திரும்புகிறது)

சுரேஷ் கண்ணன்: "பாய்ஸ் படத்திற்கு ஏன் அவ்வளவு எதிர்ப்பு? ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடத்திய, எதிர்கொண்ட விஷயங்கள்தானே அதில் இருந்தது?"

சுஜாதா: "அவர்கள் அதை திரையில் பார்க்க விரும்பவில்லை"

சுரேஷ் கண்ணன்: "ஒரு படத்தின் வசனங்கள் ஆட்சேபத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில், யாரை நாம் திட்ட வேண்டும்? இயக்குநரையா? வசனகர்த்தாவையா?"

சுஜாதா: "ஒரு இயக்குநர்தான் படத்தின் எல்லாத்துறைகளுக்கும் பொறுப்பு. அவர் தீர்மானித்த பின்தான் அவை காட்சிகளில் இடம் பெறுகின்றன. மேலும் வசனகர்த்தா எழுதிய வசனங்கள் அப்படியே இடம் பெறும் என்கிறது கிடையாது. சம்பந்தப்பட்ட நடிகர்களும் தங்கள் சொந்த வசனங்களை பயன்படுத்துவார்கள். 'பாய்ஸ்' படத்தில் சில காட்சிகளில் விவேக் அதை செய்தார்"

சுரேஷ் கண்ணன்: உங்கள் சிஷ்யர்களில் ஒருவரான, பெங்களூர் இரவிச்சந்திரன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

சுஜாதா: அவர் இறந்து விட்டார். அவருக்கு நேர்ந்த சில அந்தரங்கப் பிரச்சினை காரணமாக தொடர்ந்து மதுவருந்தியதின் காரணமாக இறந்து போனார். நல்ல எழுத்தாளர்.

(நான் இதைக் கேட்டு திகைப்பும், அதிர்ச்சியும் அடைகிறேன். இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படாமல் இணைய நண்பர்கள் மூலம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும், சுஜாதா மூலமாக மிக உறுதியாக இந்தச் செய்தியை கேடக நேரும் போது வருத்தமாகவே இருந்தது. இந்த வருத்தம் சுஜாதா குரலிலும் எதிரொலித்தது)

சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு மரபு தெரியாமலே பலர் கவிதை எழுத வந்து விடுகின்றனர். எனக்கு கவிதை என்கிற வடிவமே தொடர்ந்து பிடிக்காமலே இருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எனது முன்னோர்களின் ஜீன்களில் ஏற்பட்டிருக்கிற ஏதாவது குறைபாடா?" (சிரிப்பு)

சுஜாதா: "You may not come across several good poems" அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.".

சுரேஷ் கண்ணன்: "இவ்வளவு பழைய விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிற நீங்கள் ரம்யா கிருஷ்ணன் பெயரை மறந்து விட்டீர்களே?" (சிரிப்பு)

சுஜாதா: (சிரிப்பு)

சுரேஷ் கண்ணன்: "நீங்கள் ஆனந்த விகடனில் 70 ஆண்டு நிறைவையொட்டி எழுதியிருந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது"

()

நண்பர்களின் பல கேள்விகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பதிலளித்த சுஜாதா 7.30 மணிக்கு தனது உரையாடலை முடித்துக் கொண்டார். மனமில்லாமல் நாங்கள் எழுந்து கொள்கிறோம். 'உங்களை ரொம்பவும் சிரமப்படுத்தி விட்டோமா' என்பதற்கு 'அதெல்லாம் இல்லை' என்கிறார். தேசிகனை அவர் 'என் சிஷ்யன்' என்று குறிப்பிட்ட போது, தேசிகன் மீது சற்று பொறாமையாக இருந்தது. நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், கையெழுத்து வாங்குவதுமாக இருக்கின்றனர். வழக்கம் போல் நான் ஒதுங்கி நிற்கிறேன்.

"இவ்ள நேரம் எங்களுக்கு பத்தலைங்க. என்சைக்ளோபீடியாவ ரெண்டு பக்கம் புரட்டிப் பாத்தா மாதிரிதான் இருக்குது. இன்னும் கூட நெறைய பேச வேண்டியிருக்கு. வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க" என்கிற எங்களுக்கு புன்னகையுடன் கையசைத்து விடைபெற்று காரில் ஏறிக் கொள்கிறார்.

()

இன்னும் சில விமரிசனப்பூர்வமான கேள்விகளை கேட்கலாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த நான், மகிழ்ச்சியும், சிரிப்பும் பொங்கி வழிந்த அந்த உற்சாகமான சூழ்நிலையை கெடுக்க விரும்பாமல் எனக்குள்ளேயே அந்த கேள்விகளை மூழ்கடித்துக் கொண்டேன். இன்னொரு வேளையில் பார்க்கலாம். நாங்கள் தயாரான கேள்விகளோடு மிகவும் முன்னேற்பாடோடு வந்திருந்தால் இந்தக் கலந்துரையாடல் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கலந்துரையாடல் எனக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சுஜாதா என்கிற அந்த பன்முக ஆளுமையிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களை கேட்டிருக்கலாம்.

பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் என்று பல சினிமா ஜாம்பவான்களிடமும், பல துறையிலுமுள்ள அறிஞர்களோடும் புழங்கிய சுஜாதா, அவரோடு ஒப்பு நோக்கும் போது குஞ்சுகுளுவான்களாகிய எங்களோடு சரிக்கு சமமாக பேசுவாரா என்கிற தயக்கத்தையெல்லாம் உடைத்தெறிந்து விட்டார். சுஜாதா என்கிற அந்த எழுத்தாளரிடம்..... எழுத்தாளரை விடுங்கள்.... ரங்கராஜன் என்கிற அந்த எளிய மனிதரிடம் ஒன்றரை மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தது ஒரு நிறைவான அனுபவமாக இருந்தது.

இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய நண்பர் தேசிகனுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். (மனிதருக்கு அபரிதமான நகைச்சுவை உணர்ச்சியிருக்கிறது. நண்பர் ராஜ்குமார், தாம் பெரம்பூர், திரு.வி.க.நகரில் இருந்து வருவதாக கூறியவுடன் இவர் "நான் பெங்களூர்ல இருந்து வர்ற வழில பார்த்த ஊர் மாதிரியிருக்கே" என்று கிண்டலடிக்கிறார்)

இந்த மாதிரியான எழுத்தாளர்களுடன் கூடிய நிறைவான சந்திப்புக்கள் அடிக்கடி நிகழ நான் வணங்கும் இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

(இது ஒரு மீள் பதிவு) image courtesy : Bharat KV's photostream

நன்றி: சுஜாதா தேசிகன்.

மற்ற நண்பர்களின் அனுபவங்களை வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்:


 சுஜாதாவைப் பற்றி ஒரு எளிய வாசகனின் சில குறிப்புகள்

எழுது... எழுது...

 suresh kannan

18 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

பகிர்வுக்கு நன்றி.

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி சுரேஷ்!!

அருமையான பதிவு.

Madhan said...

மீள் பதிவிற்கு நன்றி சுரேஷ் கண்ணன்,
பல வடிவங்களில் தன்னை மெல்ல மெல்ல வெளிக்காட்டிய சுஜாதா நம் காலாத்து நாயகன் தான். ஒரு தலைமுறையையே எழுத்தின் பக்கம் திருப்பி விட்டவர் என்பது சரியனவே படுகிறது. கட்டுரை மற்றும் புனைவுகள் மூலம் அறிந்த சுஜாதா போலவே நேரில் உங்களுடன் உரையாடியவரும் மிக நெருக்கமாகவே தோன்றுகிறார்.

எப்போதும் ஏதேனும் ஒரு வகையில் அவர் எழுத்துகளுடன் உரையாடி கொண்டு இருப்பதானாலோ என்னவோ அவர் இல்லை என்பதை நம்ப மாறுகிறது மனம். இப்போ கூட சென்னை போனா வாத்தியார பார்த்துடலாம் என்றே எண்ணி கொள்கிறேன் சில நேரம்!

ராம்ஜி_யாஹூ said...

Thanks for the post.
He is a great writer. I used to say him, he could have contributed to Tamil, society still more, if he could have resigned his Blore job in his 40s or 50's.

so many people have requested him to resign the job and to come to Chennai. He did not do that.

That way Balakumaran, Barathiraja, singer sreenivas, actor vinu chakravarthy are lucky.

தமிழன் வீதி said...

இன்று சுஜாதாவின் நினைவு நாள். அவரது நினைவுகள் தாங்கி வந்த மீள் பதிவு அருமை.
சமயம் கருதி வந்த பதிவு.
-

வினவு said...

சுரேஷ் கண்ணன்,

சுஜாதவை ஒரு என்சைக்ளோப்பீடியா என்பதின் காரணமாக பிடித்திருக்கிறதா, அதாவது பல்துறை அறிவு மற்றும் எழுத்தின் வித்தை, சாத்தியப்பாடுகள் என்ற அளவிலா? அல்லது விரிந்து செல்லும் வாழ்க்கையின் நுட்பமான செதுக்குதல்களை அவரது எழுத்தில் கண்டு பயணித்திருக்கிறீர்களா? எது பிரதானம் இல்லை இரண்டுமா? ஒரு கேள்விக்கு பதிலிளக்கும்முகமாக இதைப் பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன்.

KarthigaVasudevan said...

சுஜாதா இறந்த அந்த நாளைப் போலவே அவரைப் பற்றி நினைவு கூறப் படும் ஒவ்வொரு முறையும் துக்கம் கொள்ளச் செய்து விடும் அற்புதமான எழுத்தாளர்.அவரது நாவல்களைக் காட்டிலும் சிறுகதைகள் நுட்பமானவை என்று மீள்வாசிக்கும் போதெல்லாம் யோசிக்க வைக்கும் ஆசான் அவர். நிறைவான பகிர்தலுக்கு நன்றி சுரேஷ் கண்ணன்

KKPSK said...

நன்றிகள் பல..

போ. மணிவண்ணன் said...

அழகிய பதிவு

Ashok D said...

அவரோட உரையாடியது போன்றதொரு திருப்தி. Thank u sir!

யவனராணி said...

வாசகர்களின் உள்ளங்களில் ‘சுஜாதா’ எந்த அளவிற்கு வீற்றிருக்கிறார் என்பதற்கு இரண்டு வருடத்திற்கு பிறகும் நினைவு கூறும் வாசகர்களின் அன்பே சாட்சி!

எனக்கு கூட அவரினை நேரில் சந்திக்கும் ஆவல் இருந்தது. திரு.சுபவீ யின் பேட்டி ஒன்றில் அவரின் மகனின் அனுபவத்தினை பற்றி படித்ததில், அவரின் பிம்பம் உடையாதிருக்கும் பொருட்டு முயற்சி செய்யவில்லை.

அது தவறோ என்று உங்களின் பகிர்வுக்கு பின் யோசிக்கிறேன்...

பகிர்வுக்கு நன்றி சுரேஷ் கண்ணண்!

Unknown said...

Pathivu romba nalla iruku suresh. sujatha sir pathi innum niraya ezhuthunga.(b cas neenga ezhuthunathaan interesting.a iruku) sujatha sir enga balu mahenra sir kooda oru padam work pannaliyenu enaku romba varutham. ( iha avare KATRATHUM PETRATHUM.la solli irukaar)
thanks and best of luck.
SARAVANAN,
SINGAPORE.

மயிலாடுதுறை சிவா said...

சுஜாதாவின் நினைவு நாளில் நினைக்க தக்க பதிவு....

மயிலாடுதுறையில் அவரை சந்தித்து அவரிடம் பேசிய பொழுது உங்களுக்கு ஏற்பட்ட பல உணர்வுகள் எனக்கும் ஏற்பட்டது.

அவர் இன்னும் சில உயரங்களை தொட்டு இருக்காலாமோ என்று நினைக்கிறேன்...

நன்றி சுரேஷ் கண்ணன்

மயிலாடுதுறை சிவா...

jeba said...

மிகவும் நல்ல பதிவு...

நன்றி

KARTHIK said...

முதல் நாவல் வாசிக்காஅரம்பித்ததே அவருடையதுதான்.
போனவாரம் திருவரங்கம் கோயிலுக்கு போனப்பக்கூட அவர் நியாபகம் வந்துவந்து போச்சுங்க.
எல்லாத்தரப்பையும் வாசிக்க தூண்டும் எழுத்துங்க அவரோடது.

nellai அண்ணாச்சி said...

thank u suresh

பத்மநாபன் said...

மீள் பதிவாக இருந்தாலும் என்னை போன்ற படிக்க தவறியவர்களுக்கு படிக்க கிடைத்த நல்வாய்ப்பு ... இருமாதம் கழித்தும் சுற்று விட்ட தமிழ்மணத்திற்கு நன்றி ... நமது வாத்தியாரின் உரையாடலில் நேரில் கலந்து கொண்ட நிறைவை ஏற்படுத்தியது உங்கள் பதிவு .. மிக்க நன்றியும் வாழ்த்தும் .

nellai அண்ணாச்சி said...

கொடுத்து வச்ச ஆள் ஸார் நீங்க