எஸ்.ராவின் பதிவில் இந்த திரைப்படத்தைப் பற்றி வாசித்ததிலிருந்தே உள்ளுக்குள் 'குறுகுறு'வென்றிருந்தது. இணையத்தில் தேடி கிடைக்காமல் விட்டுவிட்டேன். நண்பர் பைத்தியக்காரனும் தன்னுடைய மாத திரையிடலுக்காக இதே படத்தை தேர்வு செய்த போது ஆர்வம் மிகுந்து பரபரப்பேற்பட்டது. பழுதான காலை வைத்துக் கொண்டு திரையிடலுக்கு செல்ல முடியாது என்பதால் பெருமுயற்சிக்குப் பிறகு நண்பரொருவர் உதவியுடன் படத்தை தேடிப் பிடித்து இரவில் ஒரே அமர்வில் சுவாரசியத்துடன் பார்த்து விட்டேன். அது இஸ்ரேலியத் திரைப்படமான Lemon Tree (2008). இந்தப் பதிவு அதற்கான டிரையிலர்.
பொதுவாக 'அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என்பதான தொனியில் பலர் உரையாடுவதைக் கவனித்திருக்கிறேன். அவ்வாறில்லை. நம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளின் ஒவ்வொரு பகுதியிலும் கூட அரசியல் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொதிந்துள்ளது. தனிநபரின் படுக்கையறைக்குள்ளும் நுழையும் அளவிற்கு அது காற்றைப் போல 'அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்' வஸ்துவாக மாறி நீண்ட காலமாகிவிட்டது. கேயாஸ் தியரி போல எங்கோ ஒரு அதிகார பிரதிநிதி எடுக்கும் முடிவு வேறெங்கோ இருக்கும் ஒரு தனிமனிதனைப் பாதிக்கிறது. இதைப் பற்றிதான் இந்தப் படம் பிரதானமாக பேசுகிறது.
()
திரையிடலுக்குச் செல்லவிருக்கும் பதிவர்கள் இந்தப் படத்தை காணவிருப்பதால் அவர்களின் சிந்தனைப் பரப்பில் எந்தவொரு அதீத எதிர்பார்ப்பபையோ எதிர்மறையான சலனத்தையோ ஏற்படுத்திவிடக்கூடாத கவனத்துடன் படத்தின் சில குறிப்பிடத்தகுந்த சமாச்சாரங்களை மாத்திரம் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.
* பல்லாண்டுகளாக நீண்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையின் பின்னணியை மேலோட்டாகவாவது அறிந்திருந்தால் இந்தப்படத்தை இன்னும் அழுத்தமாக உணர முடியும். இல்லையென்றாலும் ஒன்றும் குடி முழுகிவிடாது. இந்தப் பிரச்சினையைப் பற்றி இயக்குநர் அழுத்தமாகப் பேசாமல் அதை மறைமுகமாக ஒரு எலுமிச்சைத் தோட்டத்தின் மூலம் நமக்கு உணர்த்த விரும்புகிறார். இங்கு எலுமிச்சைத் தோட்டமும் அது அமைந்திருக்கும் இடமும் ஒரு குறியீடாகவே தோன்றுகிறது.
* படத்தின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் முதல் பாதிக் காட்சிகளின் பெரும்பான்மையிலும் எலுமிச்சையின் அற்புத மணம் நம்மை வருடிக் கொண்டேயிருக்கும் அளவிற்கு அந்த தோட்டமும் எலுமிச்சைகளின் அழகாக வடிவமும் நம்மை உணரவைக்குமளவிற்கு அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் Rainer Klusmann. அரியப்படும் எலுமிச்சை, எரியும் அடுப்பின் நெருப்பு, பலத்த சப்தத்துடன் நிறுவப்படும் கண்காணிப்பு கோபுரம், அதிகாரத்தின் குறியீடாகவே நீண்டிருக்கும் சுற்றுப்புறச் சுவர் போன்றவற்றின் அண்மைக் காட்சிகள் மிகுந்த அர்ததத்துடன் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் படத்தின் எடிட்டிங்கையும் (Tova Asher) குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தெளிவான நீரோடை போல அமைந்துள்ள திரைக்கதைக்கு ஏற்றாற் போல் காட்சிகள் நறுக்குத் தெறித்தாற் போல் அடுத்த நிகழ்வை நோக்கி நகர்கிறது.
* பாலஸ்தீன விதவைப் பெண்மணியாக Hiam Abbass மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நான் முன்னர் எழுதியுள்ள The Vistor திரைப்படத்திலும் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாய் இருந்தது. பாதுகாப்பு அமைச்சரின் மனைவியாக Rona Lipaz-Michael-ம் சிறப்பாக நடித்துள்ளார். ஆண்கள் அமைக்கும் அதிகாரப் பலகையின் கோடுகளில் பெண்கள் எவ்வாறு பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை இந்த இரு பெண் கதாபாத்திரங்களின் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். என்றாலும் பாதுகாப்பு அமைச்சராக நடித்திருக்கும் Doron Tavory-ன் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிகாரம் அளித்திருக்கும் கர்வமும் பெருமிதமும் எப்போதும் முகத்தில் கொப்பளிக்க உலாவரும் இவர், இறுதிக்காட்சியில் பரிதாபமாக நின்றிருக்கும் தோற்றம் மறக்கவியலாதது.
* இயக்குநர் Eran Riklis இந்தத் திரைப்படத்தை மிக மென்மையாகவும் அதே சமயம் மிக அழுத்தமாகவும் உருவாக்கியுள்ளார். தனிநபர் வாழ்க்கையில் நுழையும் அதிகாரத்தின் ஆதிக்கமும் அதை எதிர்கொள்பவரின் இயலாமையையும் சமூகம் இதை அணுகும் விதத்தையும் மிகுந்த நுண்ணுணர்வோடும் கலை மனத்தோடும் சொல்லியிருக்கிறார். எலுமிச்சை தோட்டத்தின் பிரச்சினை கூடவே அந்த விதவைப் பெண்மணியின் தனிமையையும் வழக்கறிஞருக்கும் அவருக்கும் ஏற்படும் நேசத்தையும் அதைக் கண்டிக்கும் கலாச்சார காவலர்களையும் மிகச் சிறப்பாக சித்தரித்திருக்கிறார். படத்தின் இறுதியில் வழக்கறிஞருக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை சொற்பானதொரு நேரக் காட்சியின் மூலம் பார்வையாளருக்கு உணர்த்தியிருப்பது அழகு.
* இயல்பானதொரு முத்தக் காட்சியைத் தவிர படத்தின் வேறு எந்தவொரு 'சங்கடமான' காட்சிகளும் இல்லாதிருப்பதால் அனைவருமே பார்க்கக்கூடிய அளவில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.
()
நான் இந்தப் பதிவை எழுதுவதின் முக்கிய நோக்கமே நண்பர் பைத்தியக்காரனின் திரையிடலுக்கு 'செல்வதா வேண்டாமா' என்கிற மன ஊசலாட்டத்துடன் இருப்பவர்களுக்காகத்தான். கண்டிப்பாகச் செல்லுங்கள். இல்லையெனில் ஒரு சிறந்த திரைப்படத்தின் காண்பனுபவத்தை நீங்கள் இழக்கப் போகிறீர்கள் என்பதை நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்.
திரைப்படத்தின் இறுதியில் திரைப்படம் குறித்த பதிவர்களின் மனவோட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தி அதை நண்பர் பைத்தியக்காரனோ அல்லது வேறு நண்பரோ பதிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.
suresh kannan
Friday, July 31, 2009
Thursday, July 30, 2009
விஜய் டிவியில் இன்றிரவு அருமையான திரைப்படம்
இன்று (30.07.09) இரவு 07.00 மணிக்கு (இந்திய நேரம்) விஜய் தொலைக்காட்சியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா ரெட்டி ஆகியோர்களின் நடிப்பில் நெசவாளர்களைப் பற்றின திரைப்படமான 'காஞ்சிவரம்' ஒளிபரப்பாகிறது. பிரகாஷ்ராஜின் அற்புதமான நடிப்பிற்காகவே இந்தப் படத்தை நிச்சயம் காண வேண்டும். வணிகநோக்குப் படங்களை இதுவரை எடுத்து வந்திருந்த பிரியதர்ஷன் தன்னுடைய மன திருப்திக்காகவே இதை உருவாக்கியிருப்பதாக கூறுகிறார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தத் திரைப்படம் பங்கு பெற்றுள்ளது. எனவே காணத் தவறாதீர்கள்.
இந்தத் திரைப்படத்தைப் பற்றி நான் முன்னர் எழுதியதை இங்கே வாசிக்கலாம்.
Tuesday, July 28, 2009
நாடோடிகள் - சில குறிப்புகள்
* திரைப்படம் துவங்கின பல நிமிடத்திற்கு 'இந்தப்படத்தையா தமிழ் கூறும் நல்லுலகம் இப்படிக் கொண்டாடியது' என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தது. ஒரளவிற்கு சுவாரசியமான திரைக்கதையும் நடிகர்களின் திறமையான யதார்த்த நடிப்பும் இல்லாதிருந்தால் இது ஒரு தோல்விப் படமாய் அமைந்திருக்கும் ஆபத்து இருந்தது. (தோல்வி என்பதை வணிக நோக்கில் சொல்லவில்லை).
* இளம் காதலர்கள் சிலபல தடைகளுக்குப் பிறகு ஓடிப்போய் இணைவதை சில்அவுட்டில் காண்பித்ததோடு முடித்துக் கொண்ட புரட்சி இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு மத்தியில் அப்படி ஓடின பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதான சமாச்சாரத்தை 'காதல்' திரைப்படம் உரையாடியது. அதைப் போலவே நாயகனின் கூடவே 'ஜோக்கடித்து' சுற்றித் திரியும் 'நாலு' நண்பர்கள் அவனை 'காதலியோடு' இணைத்து வைத்த பிறகு அவர்களின் கதி என்னவாகிறது என்பதைப் பற்றி எந்தவொரு திரைப்படமும் பேசாததை 'நாடோடிகள்' பேசுகிறது. ஆனால்...
* பதின்ம வயதுகளுக்கேயுரிய உணர்ச்சிப் பெருக்கிலும் துணிச்சலிலும் 'காதலிக்கிற' நண்பரையும் அவரது இணையையும் அவர்களின் காதலின் பின்புலத்தையும் உண்மையையும் ஆராயாமல் உயிரையும் பணயம் வைத்து இணைத்து வைத்துவிட்டு பின்னர் அவர்கள் கருத்து வேறுபாடினாலோ உடல்கவர்ச்சி தீர்ந்து போன பிறகோ பிரிய நினைக்கும் போது 'தங்களால்தான் அவர்கள் திருமணம் நிகழ்ந்தது' என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் இணைந்துதான் வாழ வேண்டும் என்று நினைப்பது அவர்களின் அந்தரங்கத்திலோ சுதந்திரத்திலோ தலையிடுகிற விஷயமாகிறது என்பதையும் இயக்குநர் யோசித்துப் பார்த்திருக்கலாம். இதற்காக அவர்களை சாகடிப்பதற்காக புறப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.
* 'உன்னுடைய நண்பனின் நண்பன் உனக்கும் நண்பனே' என்பது மேலோட்டமாகப் பார்க்கும் போது சரியென்று தோன்றினாலும் ஆழமாக யோசித்துப் பார்க்கும் போது அபத்தமானது என்பது புரியும். முட்டுச் சந்தில் நின்று பேசித்தீர்ப்பதும் ஒன்றாக தண்ணியடிப்பதும்தான் நட்பு என்கிற புரிதல் இருப்பவர்கள் இதை மறுக்கக்கூடும். ஆனால் 'நட்பு' என்பதின் உண்மையான அர்த்தம் புரிந்தவர்களுக்கு இது நடைமுறையில் ஒவ்வாதது என்பதை உணர முடியும். நண்பனின் அறிமுகத்தினால் நேர்வதினாலேயே அவர் நமக்கும் உடனே நண்பராகி விட முடியாது. சிலபல இனிமையான, கசப்பான அனுபவங்களுக்குப் பிறகும் ஒத்த அலைவரிசை சிந்தனைகளினாலுமே அவர் நமக்கு நண்பராகக்கூடும்.
* இயக்குநர் சசிகுமார் ஏறக்குறைய 'சுப்ரமணியபுரம்' நடிப்பையே இதிலும் தந்திருக்கிறார். இதிலிருந்து அவர் உடனே வெளிவருவது நல்லது. ஆனால் இவரின் நடிப்பு உண்மையாக இருக்கிறது. இதுவே மற்ற அபத்த நடிகர்களிலிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. 'கல்லூரி' பரணியின் நடிப்பு அதீதமாக இருந்தாலும் பல காட்சிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சசியின் மாமன் மகளாக வரும் அநன்யா துள்ளலான நடிப்பின் மூலமும் சட்டென்று மாறும் முகபாவங்களின் மூலமும் பார்வையாளர்களை உடனே கவர்கிறார். காது கேட்காதவராக இருந்தாலும் சிறப்பாக நடித்தார்' என்று சினிமா செய்திகளில் குறிப்பிடப்பட்ட அபிநயாவிற்கு (சசியின் தங்கை) இன்னும் அதிக வாய்ப்பளித்திருக்கலாம்.
* சமுத்திரக்கனி பாலசந்தரின் சீடர் என்பதாலேயோ என்னவோ, சிறிய கதாபாத்திரங்களைக் கூட அவர்களுக்கேயுரிய தனித்தன்மைகளுடன் உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக விஜய்யின் தந்தையாக வருபவரின் பாத்திரம் சிறப்பாக இருக்கிறது. அரசாங்க வேலையை கடவுளுக்கும் மேலாக நினைக்கும் சசியின் மாமா, இரண்டாவது மனைவியை திருப்தி செய்யும் பொருட்டு மகனை திட்டும் வயதான தந்தை, ஒரு வார்த்தை வசனம் கூட பேசாத அவர் மனைவி, "நீங்க சொன்னா சரி மாமா" எனும் அடிமை மருமகன்..போன்றவை காட்சிகளை சுவாரசியப்படுத்துகின்றன.
* எம்.பியின் மகன், தங்களின் காதல் பெண்ணின் அப்பாவால் பிரிக்கப்பட்டது என்பதை ஒரே ஒரு காட்சியின் மூலம் மிக சுருக்கமாக விளக்கியதற்கு இயக்குநரை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் பேரிளம் பெண்ணின் அயிட்டம் நம்பர் பாட்டு, காவல் நிலையத்தில் இருக்கும் சீரியஸான நிலையில் கூட நகைச்சுவையை புகுத்தி அதன் தீவிரத்தை நீர்க்கச் செய்தது, போன்றவைகளை அடுத்த படத்திலாவது தவிர்ப்பது நல்லது.
* நண்பனின் காதலியை கடத்துகிற பரப்பரப்பான காட்சிகளை (ஏன் கடத்த வேண்டும், அவளிடமே சொன்னால் பின்னால் வந்துவிட்டுப் போகிறாள்) இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் கூட்டணி அமைத்து மிரட்டியிருக்கின்றனர்.
* படத்தின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்ற அற்ப கேள்வி எழுந்தாலும் கூட படத்தின் சுவாரசியமான உருவாக்கத்திற்காக பார்க்கலாம்.
* திரையரங்கில் கூட்டம் குறைவாகவே இருந்தாலும் சில சக பார்வையாளர்கள் வழக்கம் போல ஏற்படுத்திய அசெளகரியங்களை குறிப்பிடலாமென்று நினைத்தாலும் அது இணையத்தில் சிலருக்கு ஏற்படுத்தும் அலர்ஜியை கருத்தில் கொண்டு குறிப்பிடாமல் தவிர்க்கிறேன். :-)
suresh kannan
Tuesday, July 21, 2009
கால் கட்டு
ஒருக்கால், எனக்கு ஒரு கால் மாத்திரம் இருந்தால் (தற்காலிகமாகத்தான்) எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பல சுயபச்சாதாபமான சமயங்களில் தோன்றியதுண்டு. தொடர்ச்சியான இயந்திரத்தனமான அலுவலக நாட்களை சலிப்புடன் கடந்துவரும் சூழ்நிலையில் மறுநாளும் அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டுமா? என்கிற கேள்வி பிரம்மாண்ட எரிச்சலாக காலையில் என் முன் நிற்கும் போது, படிக்காத புத்தகங்களும் பார்க்காத திரைப்படக் குறுந்தகடுகளும் அப்போதுதான் ஆசையாய் கண் முன்னால் வசீகரமாக நடனமாடும். அலுவலகத்திற்கு மட்டம் போட வலுவான காரணத்தை தேட வேண்டிய சூழ்நிலையிலும் குற்ற உணர்வோடு அந்த விடுமுறையை கழிக்க விரும்பாத சூழ்நிலையிலும் 'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர் "நீங்கள் கண்டிப்பாய் ஒரு ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்" என்று சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அது எவ்வளவு இனிய அனுபவமாக இருக்கும்' என்று நினைத்துக் கொள்வேன். செயற்கையான புன்னகையும் பலவிதமான தந்திரங்களுடனும் பொய்களுடனும் செய்ய வேண்டிய அலுவலக வேலையை விட ஒரு காலைப் பயன்படுத்தாத முடியாத நிலை அப்படியொன்றும் அசெளகரியமானதாய் இருக்காது என்றும் தோன்றும். இப்படி நான் அவ்வப்போது முனகிக் கொண்டிருந்ததை அப்போது வானத்தில் உலவிக் கொண்டிருந்த ஏதோவொரு தேவதையின் காதில் விழுந்தததோ தெரியவில்லை, 'ததாஸ்து' என்று சொல்லி விட்டுப் போயிருக்க வேண்டும். ஆனால் என்னுடை முனகலைப் போலவே அந்த தேவதையும் வரத்தை (?!) முணுமுணுப்பாகச் சொல்லியிருக்க வேண்டும் போல. எலும்பு முறிவெல்லாம் ஏற்படாமல் 'மயிர்க்கோட்டு விரிசலோடு' (hair line crack-ஐ எப்படிச் சொல்வது) திருப்தியடைய வேண்டியிருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் இல்லாத சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை வேலை வெட்டி எதுவும் இல்லாத அன்பர்கள் மாத்திரம் தொடர்ந்து வாசிக்கவும்.
பொதுவாக வாகனங்களுக்கும் எனக்கும் ஜாதகக் கட்டங்களின் ஏதோவொரு விசித்திர மூலையில் மூர்க்கமான பகைமை இருந்திருக்க வேண்டும். எல்லோரையும் போலவே சிறுவயதுகளில் சைக்கிள் கற்றுக் கொள்ளச் சென்ற போது எசகு பிசகாக விழுந்து நிஜமாகவே முதுகுத் தோல் உரிந்துப் போய் அந்த ஆசை அப்படியே நின்று போனது. பின்பு இரண்டு கழுதைக்கான வயாசான போது பைக் ஓட்டக் கற்றுக் கொள்ள முயன்றதில் ஏதோ நான் புவியீர்ப்பு விசையில்லாத சந்திரனில் ஓட்டுவதைப் போன்ற சாகசங்களையெல்லாம் செய்த போது கற்றுத் தர வந்திருந்த நண்பன் வெறுத்துப் போய் விலகிப் போனான். பின்பு என்னுடைய இட நகர்வுகளுக்காக ரயில், பேருந்து, நண்பர்களின் பைக், அலுவலக கார் போன்றவைகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இதில் ரயில், பேருந்து வகையறாக்களுக்கும் எனக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். காலை வேளைகளில் பரபரப்பும் அவசரமும் படபடப்புமாக நான் நடையை எட்டிப் போட்டு நிலையத்தை அடையும் அந்த தருணத்தில்தான் அவை எனக்கு பழிப்பு காட்டி தன் பின்பக்கத்தை ஆட்டிக் கொண்டே புறப்பட்டுச் சென்று என்னை வெறுப்பேற்றும். சரி என்று நேரத்தை குறித்துக் கொண்டு மெனக்கெட்டு முன்னதாகவே சென்றால் அன்று அவை மிகத் தாமதமாக வந்து என்னைப் பழிவாங்கி தம்முடைய அடங்கா வெறியை தீர்த்துக் கொள்ளும். இவை எப்போதும் எனக்கு மாத்திரம்தான் நிகழ்கிறதா என்கிற பிரமை பல சமயங்களில் ஏற்படுவதுண்டு.
()
அன்றைக்கும் அப்படித்தான். கடற்கரை செல்லும் ரயில் வண்டியை பிடிப்பதற்காக அவசர அவசரமாய் ஓட்டமும் நடையுமாய் பரபரப்பும் பரவசமுமாய் (அடங்குடா!) நான் சென்ற போது மிக அதிசயமாய் நிலையத்தில் அந்த ரயில் சாதுவாய் காத்துக் கொண்டிருந்தது. வெடிகுண்டிற்கு தப்பி ஓடுபவர்கள் போல் அவரசமாய் இறங்கி ஓடுபவர்களுக்கு இணையாக ஏறுபவர்களும் முண்டியடிப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. (இப்படி நாம் ஓசியில் சுண்டல் வாங்குவதற்காக முண்டியடிக்கும் அதே சாகசத்தை ஏன் எல்லா அன்றாட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்பதை யாராவது ஆய்வு செய்தால் தேவலை. மாலை வேளைகளில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று கவனித்தால் நான் சொல்வது புரியும். சென்ட்ரல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து புறநகருக்கான வண்டியைப் பிடிப்பதற்காக முனைபவர்கள் கூட்டமாக ரயிலிலிருந்து இறங்கி ஓடும் காட்சி ஆங்கில போர்ப்படக் காட்சிகளுக்கு நிகரானதாக இருக்கும்). நான் எதிரே இறங்கி ஓடிக் கொண்டிருந்த ஒரு பரபரப்பானவரை நிறுத்தி "பீச் வண்டியா சார்"? என்றதற்கு அவர் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதிக்க இன்னும் பரபரப்பான உற்சாகத்தோடு படிகளை தாண்டி ஓட முயன்ற அந்தக் கணத்தில்தான் மேற்குறிப்பிட்ட தேவதை சோம்பல் முறித்தவாறே என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். திடீரென்று பூமிக்குள்ளிருந்து முழு விசையுடன் யாரோ என் காலை இழுத்ததைப் போல என்னுடைய இடது கால் சர்ரியலிச ஓவியத்தின் ஒரு விநோதமான கோடு போல இசகுபிசகான நிலையில் மடங்கியது. உச்சபட்ச வலி மண்டைக்குள் எகிறி என்னை பிரேக் போட வைத்தது. 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெறியுடன் ஓடிக் கொண்டிருந்தவனை யாரோ ஒருவர் நிறுத்தி 'டைம் என்னா சார்" என்று கேட்டதைப் போல் மிக அபத்தமாக இருந்தது அந்தச் சூழ்நிலை.
ஒருவாறான சமாளித்து ரயிலிற்குள் ஏறிவிட்டேன். படபடப்பிலும் அதிர்ச்சியிலும் வியர்த்துப் போய் தலை கிறுகிறுத்தது. அமர்வதற்கு இருக்கையில்லாத நிலையில் பிரசவ அவஸ்தையுடன் நின்று பயணித்து விந்தி விந்தி அலுவலகத்தை எப்படியோ அடைந்தேன். ஷ¥வை கழற்றிப் பார்த்ததில் வீங்கிப் போயிருந்தது. "எப்படி ஆச்சு?" என்று அலுவலகம் விசாரித்ததில் நடந்ததை சொல்வதில் தயக்கமிருந்தது. துரத்தும் ரவுடியிடமிருந்து ஒரு அபலைப் பெண்ணை காப்பாற்றுவதற்காக பைக்கை சுழற்றிச் சென்ற சாகசத்தில் ஏற்பட்ட விபத்து என்றாலும் ஒரு 'கெத்தாக' இருக்கும். ரயிலைப் பிடிக்க ஓடியதில் கால் பிசகியது என்று சொல்வதில் எனக்கே விருப்பமில்லை என்றாலும் அதையேதான் சொல்ல வேண்டியிருந்தது. 'பாருங்கள். அலுவலகத்திற்கு நேரத்திற்கு வர நான் எப்படியெல்லாம் சிரமப்படுகிறேன்' என்று மறைமுகமாகச் சொல்ல நான் விரும்பியிருக்க வேண்டும்.
'ஒரு வாரமாவது ரெஸ்ட்ல இருக்கணும்' என்கிற அந்த தேவகானம் பொருந்திய வசனத்தை எலும்பு முறிவு மருத்துவர் சொன்ன போது இன்பமாக இருந்தாலும் பக்கத்தில் என்னுடைய மேலதிகாரி நின்றிருந்ததால் 'ஒரு வாரமா?" என்று பாவனையாக அலறினேன். "எக்ஸ்ரேல சரியா தெரியல. தசைநார் ஒருவேளை கிழிந்திருக்கலாம். ஸ்கேன் செஞ்சுப் பாத்ததான் தெரியும். ஆனா அதுக்கு அவசியமில்லன்னு நெனக்கறேன். சின்னதா ஒரு கிராக் ஏற்பட்டிருக்கு. கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தா போதும்" என்றார். கிராக்குக்கே ஒரு கிராக்கா என்று நிச்சயம் யாராவது கிண்டலடிப்பார்கள் என்று தோன்றியது.
()
அலுவலக ஊழியர்களின் உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்த போது என்னுடைய மனைவி பதறியதில் பாவனையோ சம்பிரதாயமோ இருந்ததாகத் தெரியவில்லை. மகள்கள் மாத்திரம் முதலில் மிரட்சியுடன் பார்த்தாலும் பின்னர் நான் பிளாஸ்டிக் நாற்காலி உதவியுடன் தவழ்ந்து நகர்வதை 'சட்டி சுட்டதடா' பின்னணி பாடலுடன் கிண்டலடிக்கத் துவங்கிவிட்டார்கள். பின்னதான ஆதரவான தொலைபேசி விசாரிப்புகள். "இந்த வயசுல ஓடறதெல்லாம் தேவையா?" என்ற சில உபதேசங்களும் கூடவே. 40 வயதில்தான் ஜெமினி கணேசன் கதாநாயகனாக முதல்படத்தில் நடித்தார் என்று இவர்களுக்குச் சொல்ல விரும்பினேன். அமர்ந்திருந்த இடத்திலேயே உணவும் கைகழுவும் வசதியுமான ராஜ உபச்சாரம் மகிழ்வாகவே இருந்தது. நான் நகரும் போது குடும்பமே பதறி விலகுவதைக் காண சற்று குருரமான திருப்தியாகத்தான் இருந்தது. வேளா வேளைக்கு ஞாபகமாக மாத்திரைகளை தந்த மனைவி, குழந்தைகள் மீது நெகிழ்ச்சியும் இன்னும் அதிக கனிவும் ஏற்பட்டது. எல்லோருமே மறந்துப் போன ஒரு சூழ்நிலையில் என் இரண்டரை வயது மகள் மருந்துக் கவரை கொண்டு வந்து நீட்டியதை அனைவருமே மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பாராட்டினோம்.
சற்று குணமான நிலையில் ஒரு காலை நொண்டி நொண்டி நகர வேண்டியிருந்தது. சிறு வயதுகளில் மிக விருப்பமாக விளையாடின ஒரு விளையாட்டை 80 கிலோ எடையை வைத்துக் கொண்டு நிகழ்த்துவதற்கு மிகச் சிரமமாக இருந்தது. கழிவறை சென்று வருவதுதான் மகா அவஸ்தையாய் இருந்தது. சாதாரண சமயங்களில் மிக இயல்பாய் செய்யும் ஒரு விஷயம், இப்போது ஏதோவொரு உலக சாதனையை நிகழ்த்துவதற்குச் சமமான சமாச்சாரமாய் ஆகிப் போனதை நினைத்த போதுதான் நிரந்தரமாகவே உடல் ஊனமுற்றிருப்பவர்களின் வலியையும் வேதனையையும் ஒரளவிற்காவது உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. நீண்ட வருடங்களாக படிக்க நினைத்து தள்ளிப் போன புத்தகங்களையெல்லாம் படுக்கையில் அடுக்கி வைத்து படித்துத் தீர்த்தேன். மார்க்வெஸ்ஸின் 'நூற்றாண்டுத் தனிமை'யின் ஆங்கில வடிவத்தை முக்கி முக்கிப் படித்து பாதியில் நிற்கிறது. இரண்டு மூன்று நல்ல திரைப்படங்களை சாவகாசமாக பார்க்க முடிந்தது. பாராவின் பதிவின் தூண்டுதலில் கள்ளனை தேடிப்பிடித்து பார்த்தேன்.
வலியைப் பொறுத்துக் கொண்ட சில சொற்ப அசெளகரியங்கள் தவிர அலுவலகச் சுமை முதுகில் அழுத்தாத இந்த நான்கைந்து நாட்கள் சுகமாகவே கழிந்ததாகவே தோன்றியது. ஆனால் கூடவே செய்து முடிக்க வேண்டிய அலுவலகப் பணியின் நினைவுகளும் கூடவே ஓடியது. ஒருநிலையில் இந்தச் சுகமும் அலுத்துப் போய் அலுவலக நுகத்தடியை மறுபடியும் மாற்றிக் கொள்ளும் ஆவல் பிறப்பதையும் குறிப்பிட வேண்டும். நாளை முதல் அதுவும் நிறைவேறும். மறுபடியும் அந்த பழைய முனகல் திரும்பவும் நிகழலாம். ஆனால் தேவதை மறுபடியும் வரம் (?!) தருமா எனத் தெரியவில்லை. :-)
suresh kannan
Monday, July 13, 2009
அன்புள்ள ஜ்யோவ்ராம் சுந்தருக்கு.....
அன்புள்ள சுந்தர்,
நண்பர்கள் சிலர் உங்களின் இந்தப் பதிவை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தனர். (இப்படி எழுதினாத்தானே ஒரு 'கெத்து' இருக்கும்.) :-) பின்னூட்டம் மிக நீண்டுவிட்டதால் இதை தனிப் பதிவாக இடுகிறேன்.
பைத்தியக்காரனின் சாரு குறித்த பதிவில் நீங்கள் இட்டிருந்த பின்னூட்டத்தையே உங்களுக்கும் சொல்லலாம் என்று முதலில் தோன்றியது. (இந்தப் பதிவு இப்போது இங்கே தேவையில்லாதது) எனவேதான் நீங்கள் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டிருந்த போதும் பதிலளிக்க ஆர்வம் தோன்றவில்லை. ஆனால் இந்தப் பதிவு அவசியம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கக்கூடிய அவசியத்தையும் மறுக்கவில்லை. மேலும் இம்மாதிரியான சர்ச்சைக்குரிய பதிவுகளிலிருந்து விலகியிருக்கலாம் என்று அலுப்பு பல சமயங்களில் ஏற்படுகிறது. (இதையேதான் பைத்தியக்காரனின் சாரு இடுகைக்கு பதிலாக நீங்கள் எழுதிய பதிவின் பின்னூட்டத்திலும் குறிப்பிட்டேன்). ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருந்த மற்றவர்களில் சிலர் பின்னூட்டமிட்டு விட்ட நிலையில் நான் மாத்திரம் அமைதி காத்தால் அது ஒருவேளை வேறு மாதிரி புரிந்து கொள்ளப்படலாம் என்று தோன்றியதால் இது.
(1) டிவிட்டரில் உரையாடின எல்லாப் பெயரையும் ஜாடியில் போட்டு ஒரே குலுக்காக குலுக்கி இட்டதை விட யார் என்ன உரையாடினார்கள் என்பதையும் உங்கள் பதிவில் அதை வாசிப்பவர்களுக்கு தெளிவாக்கியிருக்கிலாம். (அல்லது அதனுடைய சுட்டியை தந்திருந்தாலும் ஆர்வமுள்ளவர்கள் படித்திருந்திருப்பார்கள். ஆர்வமுள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதுதான் உங்கள் பதிவின் பின்னூட்டங்களை பார்த்தாலே தெரிகிறதே) :-)
(2) டிவிட்டரில் உரையாடினவர்கள் யாராவது பதிவில் இணைப்பு கொடுத்திருந்தால் உங்கள் தரப்பு விஷயங்களைச் சொல்லியிருக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பொதுவாக இணையத்தில் பல்வேறு நபர்களைப் பற்றி அவர்களின் பல்வேறு பதிவுகளைப் பற்றி வேறு வேறு இடங்களில் குழுமங்களில் உரையாடுகிறார்கள்; விமர்சிக்கிறார்கள்; அவதூறு செய்கிறார்கள். யாரும் யாருக்கும் 'உங்களைப் பற்றி இப்படிப் பேசியிருக்கிறேன்' என்று தகவல் தருவதில்லை. சம்பந்தப்பட்டவரே அதை தாமாகவோ அல்லது நண்பர்கள் மூலமோ அறிந்து விருப்பமிருந்தால் அதைப் பற்றி தன்னுடைய தளத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட பதிவிலேயே சென்றோ தங்கள் தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். எனவே இணைப்பு தந்திருக்க வேண்டும் என்கிற உங்களின் எதிர்பார்ப்பு பொதுவாக நடைமுறையில் இல்லாதது என்பதை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். (நீங்களே கூட இந்தப் பதிவில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நானாகத்தான் அதை அறிந்து உங்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி தெரிவித்திருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை).
(3) டிவிட்டரில் உரையாடியவர்கள் 'வெற்றிலை எச்சில்' தெறிக்க விவாதித்துக் கொண்டிருந்ததாக எழுதியிருந்தீர்கள். டிவிட்டரில் உரையாடினால் அது 'எச்சில்' என்றும் அதையே வலைப்பதிவுகளில் செய்தால் அது 'கங்கை நீர்' என்றும் உங்களுக்கு யார் சொன்னது என்று தெரியவில்லை. (அப்படியான நோக்கில் நான் எழுதவில்லை என்று நீங்கள் வாதிடக்கூடும் என்கிற புரிதலுடனேயே இதை எழுதுகிறேன்). வலைப்பதிவுகளில் யோசித்து நிதானமாக எழுதுவது மாதிரி அல்லாமல் டிவிட்டரில் உரையாடுவது என்பது அப்போதைக்கு அப்போது தோன்றுவதை தன்னிச்சையாக எழுதுவது. அவதூறு எங்கும் நிகழ்ந்தாலும் அது 'எச்சில்'தான். டிவிட்டரில் எழுதுவதை பொருட்படுத்தத் தேவையில்லை என்று சிலர் குறிப்பிடுவதாலேயே இதை எழுத வேண்டியிருக்கிறது.
(4) உங்கள் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையில் தொடங்கின 'டிவிட்டர்' விவாதம் ஒரு நிலையில் பொதுவானதொரு திசையை நோக்கிப் பயணித்தது என்றுதான் நான் கருதுகிறேன். இம்மாதிரியான சர்ச்சைக்குரிய வார்த்தைகளை நாம் பேச்சு மொழியில் பயன்படுத்தும் போது யதார்த்த நோக்கில் அதையே எழுத்திலும் குறிப்பிடுவது தவறில்லை என்றுதான் நான் விவாதித்துக் கொண்டிருந்தேன். மேலும் நம்முடைய சங்க இலக்கியங்களிலேயே (நவீன இலக்கியத்திலும் கூட) இந்த வார்த்தை வேறு வேறு பெயர்களில் குறிப்பிடப்படும் போது அவை பெரிதும் சர்ச்சைக்குள்ளாவதில்லை;மாறாக இலக்கிய மதிப்பும் பெற்றுவிடுகிறது என்பதுதான் நான் குறிப்பிட்டது. சில நண்பர்கள் (பிகே சிவகுமார், டைனோபாய் உள்ளிட்டவர்கள்) அது குறித்தான தங்களின் மாற்றுக் கருத்துக்களை வைத்துக் கொண்டிருந்தனர். நடிகையின் பெயருக்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியிருக்கலாமே என்றதற்கும் அங்கேயே பதிலளித்திருக்கிறேன்.
வேறு ஏதாவது ஒரு பதிவைப் பற்றி விவாதித்திருக்கலாம் என்று நீங்களே அங்கலாய்த்திருக்கிறீர்கள். எனில் உங்களுடைய நோக்கில் சம்பந்தப்பட்ட பதிவு உங்களினாலேயே முக்கியமற்றதாய் நினைக்கப்படும் பட்சத்தில் அதை எழுதியதின் காரணம்தான் என்ன? வெறும் பரபரப்பை ஏற்படுத்துவதுதானா?
(5) உங்களுடைய இந்தப்பதிவில் கீழ்குறிப்பிட்டவாறு நான் பின்னூட்டமிட்ட போது மிக ஆபாசமான மொழியடங்கிய பின்னூட்டம் ஒன்று அழுகிப் போன வக்கிர மனம் ஒன்றிடமிருந்து என் பதிவிற்கு வந்தது.
சுந்தர்,
அப்படியே... பத்தாம் வகுப்பு,பன்னிரெண்டாம் வகுப்பு.. என்று ph.d வரைக்கும் போயிருக்கலாம். :-))
பொதுவாக நம்ம ஆட்களின் பாசாங்கை நினைத்தால் சிப்பு சிப்பாக வருகிறது. புண்டை என்ற வார்த்தையை கேட்டதில்லையா அல்லது சொன்னதில்லையா. எழுத்தில் பார்த்தால் ஏன் இப்படி பதறுகிறார்கள் என்று தெரியவில்லை.
நான் அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை ஆதரித்து எழுதியதற்காக அந்த அழுகிய மனம் என்னை கண்டபடி திட்டியிருந்தது. இதிலுள்ள நகைமுரண் என்னவெனில் எந்த ஆபாச (?!) வார்த்தையை நான் ஆதரித்ததற்காக அந்த வசவுகள் எழுதப்பட்டிருந்ததோ, அந்தப் பின்னூட்டத்திலேயே அதைவிட அளவிற்கும் அதிகமான ஆபாசமும் வக்கிரமும் இருந்தது. இவ்வளவு வக்கிரத்தை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் அந்த நபர், எப்படி ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தை பொதுத்தளத்தில் எழுதப்பட்டதற்காக ஆத்திரம் கொள்கிறார் என்கிற உளவியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. (இது பொதுவான தகவலுக்காக).
(இந்தப் பதிவை எந்தக் காரணத்தைக் கொண்டும் நீக்க மாட்டேன் என உறுதி தருகிறேன்) இது குசும்பருக்காக. :-)
என்னுடைய டிவிட்டர் முகவரி்: http://twitter.com/sureshkannan70
suresh kannan
Saturday, July 11, 2009
விருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு
Lok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.
இந்த வரிசையில் இன்று (11.07.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.
PANOI JONGKI
Director : Migang Dilip Doley
2002 / 133 minutes / Mishing / Colour
English subtitles
Cast: Kuladhar Pegu, Tara Doley, Subhas Milli, Dr. Harendra Nathe Doley and others. Special mention, National Film Awards 2002
Uninterrupted Viewing
Film Courtesy NFDC
(Source: இந்து ஆங்கில நாளிதழில் 11.07.09 அன்று வந்திருக்கும் லோக் சபா தொலைக்காட்சி விளம்பரம்)
அவசியம் பாருங்கள்.
(தொலைக்காட்சி நேரத்தை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளவும்)
(பின்குறிப்பு: இந்த தகவல் யாருக்காவது உபயோகமாக இருக்கிறதா என அறிய விரும்புகிறேன்)

Friday, July 10, 2009
ஏ.ஆர்.ரகுமானும் நானும்
Tuesday, July 07, 2009
ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள்
எந்தவொரு 'அரசு இயந்திரங்கள்' இயங்கும் கட்டிடத்திற்குள் நுழைய நேரும் போதெல்லாம் நான் 'எல்லாம் வல்ல இயற்கையை' பலமாக வேண்டிக் கொள்வேன், 'உலகத்தினுள்ள அனைத்து பொறுமையையும் எனக்குக் கொடு' என்று. சித்தர்கள் உபதேசம் செய்தால் கூட கேட்காத நாம் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு கண்களில் பரிதாபத்தை தேக்கிக் கொண்டு நிற்கக்கூடியது எதுவென்றால் அது அரசு அதிகாரிகளின் மேஜைகளின் முன்னால்தான். 'ஒரு கலைஞன் பிறக்கிறானா அல்லது உருவாகிறானா' என்கிற விவாதத்தைப் போல 'அரசு ஊழியர்களையும் அந்த வரிசையில் யாராவது சேர்த்துக் கொண்டால் தேவலை. 'உங்களை ஆளப்பிறந்தவர்கள் நாங்கள்' என்று பிறக்கும் போதே அந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் போல் அவர்கள் அலட்சியமாய் நம்மை அணுகும் போது இதுதான் தோன்றுகிறது. ஒரக்கண்ணால் நம்மைப் பார்த்துவிட்டு பைலில் செயற்கையாக மூழ்கிப் போகும் 'ஆபிசரின்' முன்னால் தவம் செய்யும் ரிஷிகளைப் போல ஆடாமல் அசையாமல் நிற்க நேரும் போது நம்முடைய மனித ஜென்மத்தின் மீதே கோபம் வருகிறது. ஒரு கால்குலேட்டருக்கு இருக்கும் மூளை கூட இல்லாத அந்த ...... களுக்கு நாம் வந்திருக்கும் காரணத்தைச் சொல்லி விளக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுவது ஒருபக்கம் என்றால் நாம் எடுத்துச் சென்றிருக்கும் படிவம் முறையாக நிரப்பப்படாததற்காக அவர்கள் சொல்லும் salt பெறாத காரணங்கள் இன்னும் நம் எரிச்சலை அதிகரிக்கச் செய்கின்றன.
brandband connection ஒன்றிற்காக சலுகை விளம்பரம் ஒன்றை பத்திரிகையில் பார்த்து விண்ணப்பித்ததில் சிலபல வரலாற்று நிகழ்வுகளுக்குப் பிறகு இணைப்பு வந்தது. ஆனால் அதற்கான bill வந்த போது விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த சலுகை கட்டணச்சீட்டில் இல்லாமல் இருந்தது. (அடடா எப்படி ஒரு oxymoron... இல்லாமல் இருந்தது). துரைமார்களுக்கு தொலைபேசி கேட்டதில் நேராக வரவேண்டும் என்று உத்தரவு கொடுத்துவிட்டார்கள். இணையச் சேவை வழங்கும் அவர்கள் இந்த 'துக்கடா சமாச்சாரத்தை" மின்னஞ்சலிலேயே முடித்துவிடலாம். அப்படியெல்லாம் சுலபமாக முடித்துவிட்டால் அவர்களைப் பற்றின பிம்பம் என்னாவது? அரசு ஊழியர்களா, கொக்கா? நேராகப் போய் முரட்டுக் கணவனிடம் புலம்புகிற அப்பாவி மனைவி இறைஞ்சுகிற குரலில் இதைப் பற்றின புகாரைப் பற்றிச் சொன்ன போது அந்த மகானுபாவர் கேட்டது. "அந்த விளம்பரம் எப்ப நாங்க போட்டிருக்கோம். அதோட காப்பி வெச்சிருக்கீங்களா?" அதாவது அவர்கள் வெளியிட்ட விளம்பரத்தை அவர்களுக்கே நாம் நிரூபிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். வேறு வழியேயில்லை. அதைத் தேடிக் கண்டுபிடித்து மறுபடியும் போக வேண்டியதாயிருந்தது.
()
இது பரவாயில்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்ததை உங்களிடம் 'அனத்தினால்'தான் மனசு ஆறும் போலிருக்கிறது. போதிய கல்வியறிவு அல்லாத ஒரு உறவினர் பெண்மணி (கையெழுத்து போடுவதை மாத்திரம் ஓவியம் வரைவதைப் போல கற்றுக் கொண்டிருக்கிறார்) துணைக்காக வங்கிக்கு அழைத்தார். படித்தவர்களுக்கே அதோகதி என்னும் போது அவ்வளவாக படிக்காதவர்களை ஆடுமாடுகளைப் போல விரட்டுவார்கள் என்கிற அவரின் முன்அனுபவம் காரணமாக இருந்திருக்கலாம். Fixed deposit ஒன்றை உடைத்து பணத்தை எடுக்க வேண்டும். அவசரத்தேவை. அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பணம் செலுத்த வேண்டும். அதற்கு என்னையும் ஒரு 'ஆள்' என்று நினைத்து அழைத்திருந்தார்.
சம்பந்தப்பட்ட மேஜையில் இருந்தவர் டெபாசிட் ரசீதை ஓரக்கண்ணால் பார்த்து 'ஆசி' அருளுவதற்கே அரைமணி நேரம் ஆயிற்று. ஆனால் மனிதர் சாவகாசமாக ஜ்வால்யமான புன்னகையுடன் ஜார்ஜ்புஷ் போல அந்த வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். "நீங்க பணத்தை எடுக்க முடியாது. உங்க அக்கவுண்டு inactive-வா இருக்கு".
ஏன் என்று நாங்கள் பவ்யமாக வினவியதற்கு ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வழிகாட்டுதலின் படி KYC (Know Your Customer) என்கிற வழிமுறை நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அதன்படி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் இருப்பை சான்றாதாரங்களுடன் நிருபித்தபின்தான் கணக்கை கையாள முடியும் என்றார். 'அதுசரி அய்யா. தற்போது இவருக்கு மிக அவசரமாக பணம் தேவைப்படுகிறது. இப்படி திடீரென நீங்கள் சொன்னால் எப்படி? ஏறக்குறைய தினமும் வங்கிக்கு வந்து போகிறவர்களுக்கு நீங்கள் சொல்வது ஒருவேளை தெரிந்திருக்கலாம். ஆனால் பிக்சட் டெபாசிட் போடுவதற்காகவே கணக்கு வைத்திருக்கும் இவர்களைப் போன்றவர்கள் எப்படி அறிவார்கள்? நீங்கள் ஒரு கடிதம் அனுப்பித் தெரிவித்திருக்கலாமே? எனில் முறையான ஆதாரங்களோடு நாங்கள் தயாராக வந்திருப்போமே?.. என்று பணம் தேவைப்படும் அவசர சூழ்நிலையையும் விளக்கி நான் கண்ணகி திரைப்படத்தில் வரும் கண்ணாம்பா மாதிரி கேள்வி கேட்டதில் ஆசாமி உயர் அதிகாரி இருந்த பக்கத்து மேஜையை காண்பித்தார். அவர் எடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்பதை விசாரித்து விட்டு 20 ஆயிரத்திற்குள்தான் என்பதால் எடுத்துக் கொள்ளலாம் என்று பச்சைக் கொடி காட்டினார். ஆக.. பணத்தை எடுப்பதற்கு வழியிருந்தும் அவசர சூழ்நிலை தெரிந்திருந்தும் அதை இந்த ஆசாமி வெளிப்படுத்தாமல் நாங்கள் கெஞ்சிக் கூத்தாடிய பின்புதான் தம்முடைய மேலதிகாரியிடம் அனுப்புகிறார்.
சரி இந்த படலம் முடிந்ததே என்று சற்று நம்பிக்கையோடு அமர்ந்திருந்த போது 'ஆசி' தந்த ஆசாமி எங்களை கூப்பிட்டு பிக்சட் டிபாசிட்டை இடையில் எடுப்பதனால் வட்டியிழப்பு போக வரும் தொகையைச் சொல்லி கையெழுத்திடச் சொன்னார். அந்தச் சமயத்தில் பர்சன்டேஜ் கணக்கெல்லாம் பார்க்க விரும்பாமல் (பார்க்கத் தெரியாது என்பது வேறு சமாச்சாரம்) காண்பித்த இடத்தில் கையெழுத்திடச் சொல்லி பலியாடு போல் அமர்ந்திருந்தோம். எங்களின் காகிதங்கள் காசாளரின் வெற்று கேபினுள்ளே நீண்ட நேரமாக இருந்தது. விசாரித்ததில் அவர் சாப்பிடச் சென்றிருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது. (அப்போது மணி மதியம் 12.50). பக்கத்து கேபினுள் இருப்பவரை "நீங்கள் தரலாமே' என்று இறைஞ்சியதில் 'அமெளண்ட் சில்லறையா வருதுங்க. என்கிட்ட சில்லறை கிடையாது. வருவாரு. வெயிட் பண்ணுங்க' என்றார். 'அய்யோ, சார் சில்லறை எவ்வளவுண்ணு சொல்லுங்க. எங்கிட்ட இருந்தா தர்றேன். இல்ல.. வெளிய போய் மாத்திட்டு வர்றேன்' என்று இன்னொரு கூப்பாடு போட்டதில் முனகிக் கொண்டே சீட்டை தூக்கிப் பார்த்துவிட்டு யோசனையுடன் 'நாடி ஜோசியர்' மாதிரி என்¦ன்னவோ கணக்குகள் போட்டுப்பார்த்துவிட்டு இவர் பங்குக்கு இவர் டோனி பிளேர் மாதிரி இன்னொரு குண்டைப் போட்டார். 'இதுல போட்டிருக்கற அமெளண்ட் வர்றாது சார். தப்பா கால்குலேட் பண்ணியிருக்காங்க" என்றார். "அந்த அமெளண்ட்டுக்கு கையெழுத்துப் போட்டிருக்கோமே" என்று கேட்டதற்கு மனிதர் கேபினில் இருந்து விலகி 'அருளாசி' ஆசாமியிடம் கிசுகிசுத்தார். அவர் எங்களை அழைத்து "அவர் சொல்றது சரிதான். இவ்வளவுதான் வரும்.வாங்கிட்டுப் போங்க" என்றார், ஏதோ நாங்கள் கூலி வேலை செய்துவிட்டு 'அய்யா பாத்துக் கொடுப்பார்" என்று நிற்கிறதைப் போல.
இனிமேலும் என்னால் பொறுக்க முடியவில்லை. என்னுள் இருந்த நாகரிகமெல்லாம் தொலைந்து போய் பதின்மத்தில் பேசின பாஷையையெல்லாம் புதுப்பித்ததில் அவர்களும் கோஷ்டி சேர்ந்து எகிற ஆரம்பித்தார்கள். நான் உச்சக்கட்ட கோபத்துடன் கிளை மேலாளரைத் தேடியதில் அவர் 'எங்கோ' போயிருப்பதாக தகவல் கிடைத்தது. "ஏதோ ஒரு அமெளண்ட்டுக்கு கையெழுத்து வாங்கிட்டு, வேற ஏதோ அமெளண்டு தர்றதா சொன்னா என்னங்கய்யா அர்த்தம். வெளையாடறீங்களா, Ombudsman-ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன்'னு சத்தமிட்டு விட்டு ஏற்கெனவே போட்டிருந்த கையெழுத்தை அடித்துவிட்டு புதிதான தொகைக்கு கையெழுத்திடச் சொன்னேன். பாவம் அந்த உறவினர் பெண்மணி. நாங்கள் மாற்றி மாற்றிக் கத்திக் கொண்டிருந்ததில் வெளிறிப் போய் குற்றவுணர்வுடன் அமர்ந்திருந்தார்.
()
'வங்கியில் பணம் போடுகிறவர்களால்தான் தங்களுடைய பிழைப்பு ஓடுகிறது' என்கிற அடிப்படையைக் கூட வசதியாக மறந்து இப்படி வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கவும் அவமதிக்கவும் செய்கிற அரசு வங்கி ஊழியர்களைக் கண்டால் எரிச்சலாக வருகிறது. தனியார் வங்கிகளோடு போட்டி போடுகிற நெருக்கடியான சூழ்நிலை கூட இவர்களின் ஏகாதிபத்திய உணர்வை அடக்கவில்லையே என்றும் ஆச்சரியமாக இருக்கிறது. ஊதிய உயர்வு கேட்டு இவர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போதும் சாலையில் கோஷம் போடும் போதும் பொதுமக்களுக்கு ஏற்படும் வயிற்று எரிச்சல் gelusil mps-ல் கூட அடங்காது. இது ஓர் உதாரணம்தான். இம்மாதிரி பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களின் அலட்சியங்களினால் தினம் தினம் அசெளகரியப்படுகிற அல்லல்படுகிற மனிதர்களின் கதைகளை தொகுத்தால் இணையமே நிரம்பி வழியும்.
அரசுப்பணியில் இணைவதற்கு முன்னால் இவர்களும் இதே மாதிரியான அலைக்கழித்தலை சந்தித்தவர்கள்தானே, அப்புறம் ஏன் டிராகுலா கடித்த மாதிரி இவர்களும் டிராகுலாவாக மாறிப் போகிறார்கள் என்பது மாத்திரம் புரியவில்லை. (மிக அபூர்வமாக மென்மையாக முறையாக தம்மை அணுகும் பொதுமக்களை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்களைப் பற்றியும் இங்கு சொல்லியாக வேண்டும்). ஒருவேளை நானும் அடித்துப்பிடித்து ஒரு அரசு ஊழியனாக ஆகியிருந்தால் இந்த 'ஜோதியில்'தான் கலந்திருப்பேனோ என்று என் மேலேயே சந்தேகம் வருகிறது. இதை வாசிக்க நேரும் அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் உடனே என் மீது பாயாமல் இதற்கான அவர்கள் பார்வையையும் தீர்வையும் பரிந்துரைத்தால் மகிழ்வேன்.
suresh kannan
Saturday, July 04, 2009
'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா?..
முன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி வைக்க முடியாத சுமை. சில நபர்களை நமக்கு பார்த்த கணத்திலேயே பிடிக்காமற் போவதும் சிலரை பார்க்காமலேயே பிடித்துப் போவதும் முன்முடிவுகளின் அடிப்படையில்தான். ரயில் பயணத்தின் போது எதிரே அமரப் போகின்ற பயணி, சிடுமூஞ்சியாகவும் அவருடைய பெட்டிகளை வைத்துக் கொள்ள நம்முடைய இடத்தை ஆக்ரமிக்கப் போகிறவர் என்பதான கற்பனைகளுடனும் அதற்குண்டான ஜாக்கிரதை முன்னேற்பாடுகளுடனும் அமர்ந்திருக்கிறோம். வெளியே வரும் போது ஆட்டோகாரர் நிச்சயம் நம்மை ஏமாற்ற முயல்வார் என்ற முன்முடிவுடன் அவர் கேட்பதிலிருந்து ஐம்பது சதவீதத்தைக் குறைத்து பேரம் பேசுகிறோம். உறவுகளில் முன்முடிவோடு தவறாக பெரிதும் அணுகப்படுவது 'சித்தி' என்கிற உறவுமுறை. சித்தி என்றாலே அவர் தன்னுடைய கணவரின் குழந்தைகளை நிச்சயம் சரியாக வளர்க்காமல் கொடுமைப்படுத்துவார் என்பது பொதுவான எண்ணம்.
என்னுடைய மூத்த சகோதரருக்கு திருமணமாகியிருந்த சமயம். அதுவரை எங்களுக்குள் நாங்கள் அடித்துக் கொண்டும் கூடிக் கொண்டும் விரோதித்துக் கொண்டும் நட்பு பாராட்டிக் கொண்டும் இருந்தோம். அதுவரை இருந்த சூழ்நிலையைக் கலைத்துக் கொண்டு புதிதாக ஒரு அந்நியர் எங்கள் வீட்டில் நுழைகிறார். என்னுடைய பதின்மத்தில் இருந்த அந்த வயதுக்கேயுரிய அறியா வன்மத்தோடு 'அண்ணி' என்கிற அந்த உறவைப் புரிந்து கொள்ள முயலாமலேயே வெறுக்கவும் புறக்கணிக்கவும் செய்தேன். அவர் சாப்பாடு கொண்டு வந்தால் சாப்பிட மாட்டேன்; எதிரில் வந்தால் வெறுப்போடு திரும்பிச் செல்வேன். அவரின் நல்ல குணத்தைப் புரிந்து கொள்ள ஒரு மாதம் பிடித்தது. 'புதிதாக வரப்போகிறவள்' தன் மகனை பிரித்துவிடுவாளோ என்கிற வழக்கமான possessiveness குணத்தை வெளிப்படுத்தும் விதமாக என் அம்மா ஒரு முன்முடிவுடன் அண்ணனின் திருமணத்திற்கு முன்பிருந்தே எங்களிடையே உரையாடிக் கொண்டிருந்தது எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று பிறகு உணர்ந்தேன். உறவுகளை முன்முடிவுடன் அணுகக்கூடாது என்கிற படிப்பினையை இது அளித்தது.
இரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதியின் திரைப்படமான 'PEDAR' (தந்தை என்று பொருள்) இதைத்தான் பிரதானமாக சொல்வதாக எனக்குத் தோன்றுகிறது.
ஒரு விபத்தில் தன்னுடைய தந்தையை இழந்த சிறுவனான Mehrollah பொருளாதாரக் காரணங்களுக்காக கிராமத்திலிருந்து நகரத்திற்கு சம்பாதிக்கச் செல்கிறான். பணியிடத்தில் விடுமுறையைப் பெற்றுக் கொண்டு அம்மாவிற்கு, தங்கைகளுக்கு என்று ஒவ்வொரு பொருளாக தேடி வாங்கி ஊருக்குத் திரும்பும் போது தன்னுடைய பால்ய நண்பனின் மூலம் அந்த அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அவளுடைய அம்மா ஒரு போலீஸ்காரனை திருமணம் செய்து கொண்டு வேறொரு வீட்டில் வசிக்கிறார். "அந்த போலீஸ்காரன் ரொம்ப நல்லவனாம். உங்க அம்மா அதிர்ஷ்டம் செஞ்சவங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்க". கேட்ட மாத்திரத்திலேயே முகந் தெரியாத அந்த போலீஸ்காரனின் மீதும் அதற்குக் காரணமாகியிருக்கிற அம்மாவின் மீதும் ஆத்திரமும் வன்மமும் பெருகுகிறது மெஹ்ருல்லாவிற்கு. தான் வாங்கி வந்த பொருட்களை அவர்கள் வீட்டு வாசலில் எறிந்து விட்டு அம்மாவையும் ஆத்திரப்பார்வையுடன் முறைத்துவிட்டு தன்னுடைய பழைய வீட்டில் தங்குகிறான். எப்படியாவது அந்த போலீஸ்காரனை நிம்மதியிழக்கச் செய்ய வேண்டும் என்பதே அவனுடைய பிரதான நோக்கமாயிருக்கிறது.
நடுஇரவில் அவர்கள் வீட்டின் ஜன்னலை கல்லெறிந்து உடைக்கிறான். தன்னுடைய தங்கைகளை யாருக்கும் தெரியாமல் கூட்டி அழைத்து வந்து அம்மாவை பதைக்கச் செய்கிறான். தன்னுடைய புது தகப்பனை வழியில் முறைத்து 'தாயின் மருத்துச் செலவிற்கான' பணத்தை விட்டெறிகிறான். அவனுடைய அம்மா தன்னுடைய ஆதரவற்ற நிலையை எடுத்துச் சொல்லிக் கதறுவதை ஏற்காமல் புறக்கணிக்கிறான். "குடும்பத்திற்கு வேண்டிய பணத்தைத்தான் நான் சம்பாதிக்கப் போயிருந்தேன். நீ எதுக்காக இந்த ஆள கல்யாணம் செஞ்சிக்கிட்ட" என்று ஆணில்லாமல் ஒரு பெண் எதிர்கொள்ள சங்கடங்களையெல்லாம் அறிந்திருக்க முடியாத பால்யத்த்தின் அறியாமையுடன் எதிர்க்கேள்வி கேட்கிறான்.
ஒரு விபத்தில் சுவற்றின் மேலேயிருந்து கீழே விழுந்து சுவாதீனமின்றி கிடக்கும் மெஹ்ருல்லாவை தங்களுடைய பராமரிப்பில் வைத்து கவனிக்கின்றனர் அவனுடைய அம்மாவும் புதுதகப்பனும். தன்னுடைய இருப்பு அவனுக்கு சங்கடத்தை தரக்கூடாது என்பதற்காகவே பணியிடத்திலேயே தற்காலிமாக தங்கிக் கொள்கிறார் புதுதகப்பன். இவை எதுவும் மெஹ்ருல்லாவின் வன்மத்தை தேயச் செய்யவில்லை. போலீஸ்கார புதுதகப்பனின் துப்பாக்கியை களவாடிக் கொண்டு தன்னுடைய பால்ய நண்பனுடன் நகரத்திற்கு பறக்கிறான். அவனைத் தேடி கோபத்துடன் போலீஸ்காரரும் நகரத்திற்குச் செல்கிறார். நகரத்தில் ஜாலியாக சுற்றித்திரியும் அவர்களை பெருமுயற்சிக்குப் பின் துரத்திப்பிடித்து நண்பனை பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு மெஹ்ருல்லாவை கைவிலங்கிட்டு தன்னுடைய பைக்கிலேயே அழைத்து வருகிறார். வழியெங்கும் பிடிவாதமான மெளனத்துடன் பயணிக்கிறான் மெஹ்ருல்லா. "எத்தன திருட்டுப் பசங்கள பாத்திருப்பேன். எங்கிட்டயே உன் போக்கிரித்தனத்தை காட்டறியா" என்று அவனைத் திட்டிக் கொண்டே வருகிறார் போலீஸ்காரர்.
ஒரு சூழ்நிலையில் அவரிடமிருந்து வண்டியுடன் தப்பித்துவிடுகிறான் மெஹ்ருல்லா. ஆனால் இது போல் பல திருடர்களை பார்த்து அனுபவமுள்ள அந்த போலீஸ்காரர் மலையை சுற்றிவந்து பாதையில் தடையை ஏற்படுத்தி வைக்கிறார். இதை எதிர்பார்க்காத மெஹ்ருல்லா வண்டியுடன் கீழே விழுந்து திரும்பவும் மாட்டிக் கொள்கிறான். திரும்பவும் கைவிலங்கு மாட்டி அழைத்து வருகிறார். இரவு ஒரிடத்தில் தங்குகிறார்கள். அவர் தரும் உணவைப் புறக்கணிக்கிறான் மெஹ்ருல்லா. உறக்கத்தின் இடையில் தப்பிக்க முடியுமா என்று பார்க்கிறான். ஆனால் பயங்கர இருட்டில் ஓநாய்களின் ஊளையோசை அவனைத் தடுக்கிறது. இதை நன்றாக அறியும் போலீஸ்காரர் நிம்மதியாக உறங்குகிறார். திரும்பவுமான பயணத்தில் வண்டி பழுதாகி பாலைவனத்தின் நடுவிலேயே நின்றுவிடுகிறது. பழுதைச்சரிசெய்யும் எந்த முயற்சியும் பலனளிக்க வில்லை. எரிச்சலின் உச்சியில் மெஹ்ருல்லாவை போட்டுச் சாத்தியெடுக்கிறார். பின்பு அவனை கைவிலங்கிட்டு கால்நடையாகவே அந்த பாலைவனத்தை கடக்க முயற்சிக்கிறார். தீடீரென்று ஏற்படும் பாலைவனப் புயல் இருவரையும் அலைக்கழிக்கிறது. தன்னையும் மெஹ்ருல்லாவையும் பாதுகாத்துக் கொள்ள பெருமுயற்சியெடுகிறார். புயல் ஓய்ந்து மறுபடியும் நடக்க ஆரம்பிக்கும் போது வயதான அந்த போலீஸ்காரரால் ஒரு நிலைக்கு மேல் நடக்க முடியவில்லை. அதீதமான தாகமும் களைப்பும் கண்தெரியுமளவிற்கு நீளும் மணற்பரப்பும் உயிர்பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. கண்ணீருடன் தன்னை அங்கேயே விட்டுவிட்டு மெஹ்ருல்லாவை போகச் சொல்கிறார்.
கடுமையானவராக தெரிந்தாலும் அவரிடமிருந்து அவ்வப்போது கசியும் அன்பை ஓரளவிற்கு புரிந்து கொண்டிருக்கும் மெஹ்ருல்லா இந்த உச்சநிலையில் அவரின் அன்பை முழுமையாக தெரிந்து கொள்கிறான். நினைவின்றிக் கிடக்கும் அவரை மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அருகிலிருக்கும் ஒரு எதிர்பாராத ஓடையின் குளிர்ச்சியில் வந்து கிடத்துவதுடன் நிறைகிறது திரைப்படம்.
()
பொதுவாக இரானியத் திரைப்படங்களின் உருவாக்கமும் கதை சொல்லும் விதமும் அதன் நிலப்பரப்பும் என் மனதிற்கு மிக நெருக்கமாக இருப்பதைப் பார்க்கிறேன். இதுவும் அவ்வாறே. மஜித் மஜிதி இந்தத் திரைப்படத்தின் மூலம் எந்தவித கோணங்கித்தனமான உத்திகளுமில்லாமல் நேரடியாக பார்வையாளனிடம் உரையாடுகிறார். இந்தப் படத்தின் இரண்டே இரண்டு பிரதான பாத்திரங்களான போலீஸ்காரர் மற்றும் அந்த பதின்ம வயதுச்சிறுவன் ஆகிய இரண்டு பாத்திரங்களும் மிகத் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளன. போலீஸ்காரர் மெஹ்ருல்லாவை கருணையோடு அணுகினாலும் திரும்பத் திரும்ப அவனின் வன்மமான செயல்கள் வெளிப்படும் போது ஆத்திரமும் கோபமும் அடைந்து அதே வன்மம் அவருக்குள்ளும் பரவுவது இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
நம்முடைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திரங்கள் நீண்ட காலமாகவே கருப்பு-வெள்ளைத்தனத்துடனே உருவாக்கப்படுகின்றன. நாயகன் எலலா விதக் கல்யாண குணங்களுடன அதீத நல்லவனாகவும் சித்தரிக்கப்படும் வேளையில், வில்லன் குடும்பம் குட்டி என்ற எந்தக் கருமாந்திரங்களுமில்லாமல் எப்போதும் மது, மங்கைகளுடன் உல்லாசபுரி நாயகனாகவும் அதீத கொடுமைக்காரனாகவுமே சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். (தங்கத்தையோ, போதைப்பொருளையோ கைமாற்றின 'டீல்' வெற்றிகரமாக முடிந்தவுடன் 'என்ன வெறும் தண்ணிதானா என்பார் விருந்தாளி. வில்லன் புன்னகையுடன் கையைத் தட்டினவுடன் இதற்காகவே காத்திருந்த, எந்தெந்த பாகங்கள் தெரியவேண்டுமோ அதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட விநோதமான உடையுடன் இரட்டை அர்த்தப்பாடலுடன் வருவார் கவர்ச்சி நடிகை). அவ்வாறில்லாமல் பயபக்தியாக சாமி கும்பிடுகிற ஒரு முதியவரை காட்டும் அறிமுகக் காட்சியுடன் இயல்பான வில்லனை காட்டிய படம் மணிரத்னத்தின் 'பகல் நிலவு' என்று நினைக்கிறேன்.
இந்தப் படம் எனக்கு உணர்த்திய இன்னொரு செய்தி, ஒரே சூழ்நிலையில் திரும்பத் திரும்ப வாழ நேரும் மனிதர்களுக்குள் நீடிக்கும் முரண்கள், நீண்ட பயணங்களின் போது அது தரும் இனிய அனுபவங்களால் புகையாய் மறைந்து போவது. 'காப்பி போட்டாச்சா' என்பது போன்றவற்றிற்கு மாத்திரம் வீட்டில் வாயைத் திறக்கும் சிடுமூஞ்சி அப்பா, ரயில் பயணத்தின் போது கொய்யாப் பழம் விற்கும் சிறுமியின் விற்பனை சாதுர்யத்தை நினைத்து வாய்விட்டு சிரிப்பதை பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சமையலறையையும் அம்மாவையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அங்கேயே புழங்கிக் கொண்டிருக்கும் எரிச்சலுடன் பதிலளிக்கும் அந்த ஜீவன் அடக்க மாட்டாத மகிழ்ச்சியுடன் தன் உறவினர் தோழியுடன் திருமண வீட்டில் உரையாடிக் கொண்டிருப்பதைக் காணும் போது இன்னும் ஆச்சரியம் நீளும். பயணங்களை நம்முடைய தொன்மையான சம்பிரதாயங்களுடன் பின்னிப் பிணைக்க வைத்திருப்பதின் காரணம் இதுவாகத்தானிருக்க வேண்டும். அதுவரை தன்னுடைய புதுதகப்பனிடம் முரண் கொண்டிருக்கும் மெஹ்ருல்லா பயணங்களின் இடையில் ஏற்படும் உயிர்போகும் சிக்கலான தருணத்தில் அவரின் அன்பைப் புரிந்து கொள்கிறான்.
போலீஸ்காரராக நடித்திருக்கும் Mohammad Kasebi தொழில்முறை நாடக நடிகர் மாத்திரமல்லாது இயக்குநரும் ஆவார். Hassan Sadeghi மெஹ்ருல்லா என்கிற சிறுவனாக மிகத்திறமையான முகபாவங்களுடன் தன்னுடைய பங்களிப்பை அளித்திருக்கிறான். மெஹ்ருல்லாவின் நண்பனாக வரும் சிறுவனின் துணைப்பாத்திரமும் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் வறுமையில் உழன்று கொண்டிருக்கும் அவனுக்கு 2000 டோமன் (ரியால்) பணத்தை சம்பாதிப்பதே கனவெல்லையாக இருக்கிறது. இதற்காக மெஹ்ருல்லாவை தன்னையும் நகரத்திற்கு அழைத்துப் போகச் சொல்லி நச்சரித்துக் கொண்டேயிருக்கிறான். இதற்காகவே மெஹ்ருல்லாவிற்கு ஒரு விசுவாசமான அடிமை போல இருக்கிறான். நகரத்தின் செளகரியங்களை அனுபவிக்கும் போது அவனுடைய கனவு நிறைவேறி விட்டதாகவே தோன்றுகிறது. ஆனால் போலீஸ்காரரால் பிடிபட்டு திருப்பியனுப்பப்படும் போது ஆற்றாமையால் அழுகிறான். பொருளாதாரக் காரணங்களுக்காக நகரத்திற்கு புலம்பெயரும் கனவுகளுடன் இருக்கும் பல சிறுவர்களை இந்தப் பாத்திரம் நினைவுப்படுத்துகிறது.
இந்தத் திரைப்படம் நிறைவடையும் காட்சி மிக முக்கியமானது. சற்றும் நாடகத்தனமில்லாமல் இயல்பான நிகழ்வுடன் தன்னுடைய புதுதகப்பனின் அன்பை அந்தச் சிறுவன் முழுக்கவும் புரிந்து கொள்வதான காட்சியுடன் படம் நிறைகிறது. நினைவின்றி கிடக்கும் போலீஸ்காரனின் சட்டையிலிருந்து மெஹ்ருல்லாவின் குடும்பம் சந்தோஷமாகச் சிரிக்கும் புகைப்படமொன்று மிதந்து சிறுவனின் கையில் படருவதோடு திரை இருளடைகிறது. மாறாக இருவரும் கட்டிப்பிடித்து கதறியழுதிருந்தால் அது கேவலமானதொரு காட்சியாக அமைந்திருக்கும். இந்தப் புள்ளியில்தான் உலக சினிமாவிற்கும் மற்ற சினிமாவிற்கான வித்தியாசம் பொதிருந்திருக்கிறது எனக் கருதுகிறேன்.

இந்த வரிசையில் இன்று (04.07.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.
BAADHA
Director: Sumitra Bhave & Sunil Sukthankar
2005 / 90 minutes / Marthai / Colour
English Subtitles
Cast: Amruta Subhash, Devika Daftardar, Rajesh More, Renuka Daftardar and others.
Indian Panorama 2006
(Source: இந்து ஆங்கில நாளிதழில் 04.07.09 அன்று வந்திருக்கும் லோக் சபா தொலைக்காட்சி விளம்பரம்)
அவசியம் பாருங்கள்.
(தொலைக்காட்சி நேரத்தை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளவும்)
இந்த வரிசையில் இன்று (04.07.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.
BAADHA
Director: Sumitra Bhave & Sunil Sukthankar
2005 / 90 minutes / Marthai / Colour
English Subtitles
Cast: Amruta Subhash, Devika Daftardar, Rajesh More, Renuka Daftardar and others.
Indian Panorama 2006
(Source: இந்து ஆங்கில நாளிதழில் 04.07.09 அன்று வந்திருக்கும் லோக் சபா தொலைக்காட்சி விளம்பரம்)
அவசியம் பாருங்கள்.
(தொலைக்காட்சி நேரத்தை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளவும்)
Subscribe to:
Posts (Atom)