இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடனான கடைசிக்கட்ட போரில் ஈடுபட்டு பல அப்பாவி பொதுமக்களை அழித்துக் கொண்டிருக்கும் இன்றைய கொந்தளிப்பான சூழ்நிலையில் அதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் வியாபாரம் படு வேகமாக சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது.
பெரும்பான்மையான கட்சிகளின் இப்போதைய விற்பனைப் பொருள் 'ஈழப்பிரச்சினை'. அவரவர் திறமைக்கேற்ப தங்களின் மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் உரக்க கூவிக் கொண்டிருக்கிறார்கள். திமுக இந்த வியாபாரத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அனுபவத்தைப் பெற்றிருந்தாலும் அதனுடைய பாசாங்கும் அரசியல் சுயலாப நோக்கங்களும் பகிரங்கமாக வெளிப்பட்டு விட்ட சூழ்நிலையில் மக்களின் நம்பிக்கையை பெரும்பாலும் இழந்துவிட்டது. திமுக ஏற்கெனவே பெற்ற லாபத்தைக் கண்டு பாமகவும் இந்த வியாபாரத்தை சூழ்நிலைக்கேற்ப நடத்திக் கொண்டு வருகிறது. மதவாதக் கட்சியான பாஜகவும் இந்த தேர்தலில் இதைக் கூவுவதைக் காணும் போது விற்பனைப் பொருளின் வணிக மதிப்பு அதிகமாகிவிட்டதாகவே தோன்றுகிறது. மதிமுக அல்லது வைகோ தொடர்ந்து இந்த பிராண்டை உறுதியாக விற்பனை செய்துக் கொண்டிருந்தாலும் விடுதலைப்புலிகளின் மீதான கண்மூடித்தனமான ஆதரவும் ஜெவுடன் கூட்டணி அமைத்ததும் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைத்து விட்டது.
ஆனால் மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பது என்னவென்றால் இந்த விற்பனைப் பொருளை பல ஆண்டுகளாக புறக்கணித்துக் கொண்டிருந்த அதிமுக நிறுவனம் திடீரென்று பெருவிருப்பத்துடன் இதன் மீது காதல் கொண்டு இதனுடைய ஒட்டுமொத்த டீலர்ஷிப்பை ஏற்றுக் கொண்டதுதான். 'எனது மேனியழகின் ரகசியம்' என்று நடிகை விளம்பரங்களில் அருள்வாக்கு அளித்தவுடன் எப்படி அந்த விற்பனைப் பொருள் 'மளமள'வென காலியாகி லாபத்தை அதனுடைய தயாரிப்பாளருக்கு ஈட்டித்தருகிறதோ, அதே போன்றதொரு பரவசமான விற்பனை இன்று 'ஜெ'க்கு ஆதரவாக இணையத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
()
'நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழத்தை பெற்றுத் தருவேன்' என்று இதுவரை ஈழப்பிரச்சினையில் எதிர்நிலையைக் கொண்டிருந்த திடீர் ஞானோதயம் பெற்ற ஜெ. முழங்கியவுடன் வேறுவழியின்றி கருணாநிதி கூட்டணியே கதி என்று கிடந்தவர்கள் வீறுகொண்டு 'ஜெ'வை நோக்கி பாய்ந்து வர யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் 'ஜெ'வை ஜெயிக்க வைப்பது என்பதை விட திமுக கூட்டணியை தோற்கடிப்பது என்பதுதானாம். நாளைக்கே 'ஜெ' இன்னொரு அந்தர்பல்டி அடித்து 'இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவது தர்மமாகாது' என்று பிரேமானந்தாவிடம் ஞானோதயம் பெற்று அருளாசி கூறினால் உடனே விஜயகாந்த்தையோ கார்த்திக்கையோ நோக்கி ஓடுவார்களாக இருக்கும். இப்படி கேனத்தனமாக சிந்தித்துக் கொண்டிருப்பதனால்தான் 'ஈழப்பிரச்சினை'யை முன்னுறுத்தி தமிழக அரசியல்வாதிகள் நீண்ட காலமாக நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழப்பிரச்சினையில் திடீரென்று இவ்வளவு கரிசனம் காட்டும் இந்த தமிழக அரசியல் கட்சிகள் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக இணைந்து புறக்கணிக்கக்கூடாது?
கேட்பதற்கு நடைமுறைக்கு ஒவ்வாத, ஜனநாயகத்திற்கு எதிரான கருத்தாக தோன்றினாலும் இந்தப் பிரச்சினையை கண்டும் காணாமலும் இருக்கும் மத்திய அரசுக்கு தரும் அதிர்ச்சி வைத்தியமாக தர எல்லா அரசியல் கட்சிகளும் ஏன் முன்வரக்கூடாது? அவ்வாறு மட்டும் நடந்து விட்டால் அது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் புரட்சியாகவே திகழும். ஆனால் பெயரில் மாத்திரம் புரட்சியை வைத்திருக்கும் அரசியல் வியாபாரிகள் இப்படியொரு சாத்தியத்தை பற்றி யோசிக்கக்கூட மாட்டார்கள். அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றத்தர முடியும் என்றொரு விவாதம் எழுமானால் இதுவரை பெற்றிருந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு இவர்கள் கிழித்ததுதான் என்ன? அதிகபட்சம் சபாநாயகரின் இருக்கையின் முன்னால் சற்று கூவியது மாத்திரம்தான்.
ஜெவின் இந்த சவடாலை எதிர்பார்க்காத கருணாநிதி, இதை அதிரடியாக எதிர்கொண்டு தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் யோசனையில் தன்னுடைய வழக்கமான திடீர் உண்ணாவிரத நாடகத்தை நிகழ்த்திவிட்டார். அவருடைய உண்ணாவிரதத்தினால்தான் இலங்கை அரசு போரில் 'கனரக ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது' என்று அதனுடைய இராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருப்பது நிகழ்நதது என்கிற திமுகவினரின் வெற்றி கோஷத்தை [போர் நிறுத்தம் என்று இதை பசப்புகிறார்கள்] ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொள்வோம் என்றாலும் கூட இதை ஏன் அவர் முன்னரே செய்து பலத்த சேதத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாமே? என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
()
ஜெவின் இந்த திடீர் சவடாலில் தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய பிரதான கவலை. 'கருணாநிதியை' எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கிற வெறியில் அவர் அடித்திருக்கும் ஸ்டன்ட் இது. ஜெ எப்படி ஒரு பாசிச மனப்பாங்கு கொண்டவர், சந்தர்ப்பவாத அரசியல் நடத்துபவர் என்பதை பல முறை முன்பே நிருபித்திருக்கிறார். அப்படியொரு ஆளுமையின் உறுதிமொழியை ஒரு பேச்சுக்குக்கூட நம்புவது அபத்தமானது. மேலும் திமுக கூட்டணியின் மீதுள்ள கோபத்தை நிரூபிக்க ஜெ. கூட்டணிக்கு வாக்களிப்பது அதனினும் அபத்தமானது. எலியை ஒழிக்க வீட்டைக் கொளுத்துவதற்கு ஒப்பானது இது.
மேலும் இது ஒரு நாடாளுமன்றத் தேர்தல். இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதுள்ள சூழ்நிலையில் ஈழப்பிரச்சினை ஒரு பிரதானமான அஜெண்டாவாக இருந்தாலும் ஐந்து வருடங்கள் நம்மை ஆட்சி செய்யப் போகிறவர்கள் என்று நாம் நம்புவர்களை தேர்ந்தெடுக்கும் போது தொலைநோக்குப் பார்வையோடு தேசியக் கண்ணோட்டத்தில் உள்நாட்டுப் பிரச்சினைகளையும் அதனுடன் இணைத்துத்தான் இந்த தேர்தலை அணுக வேண்டும்.
இடியாப்ப சிக்கலான கூட்டணியைக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் கட்சிகளால் மிகுந்த குழப்பத்திற்குள்ளாகியிருக்கும் நான் இந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வேன் என்று யோசித்த போது கீழ்கண்ட சாத்தியங்கள் தோன்றின.
1) எந்த அரசியல் கட்சி என்பதை பார்க்காமல் இருப்பதிலேயே தகுதியான வேட்பாளராக பார்த்து வாக்களிப்பது. இதில் நேர்மையான சுயேச்சைகளாக கருதப்படுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது. உதாரணம்: தென்சென்னையில் போட்டியிடும் டிராபிக் ராமசாமி போன்றோர்.
2) யாருமே தகுதியான வேட்பாளர்களாக தோன்றவில்லையெனில் 'யாருக்கும் ஒட்டளிக்க விருப்பமில்லை' என்கிற 49ஓ-வாய்ப்பை தேர்ந்தெடுப்பது. ஆனால் இது நடைமுறையில் அதிகம் சாத்தியமில்லை. ஒரு விண்ணப்ப படிவம் வாங்குவதற்கே பத்து முறை அலைய வைக்கும் அரசு இயந்திரம் நிச்சயம் இதற்கு ஒத்துழைக்காது.
3) எனவே ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லாத கடைசி வரிசையில் இருக்கும் சுயேச்சைக்கு வாக்களித்து தம்முடைய வாக்கு வீணாகக்கூடிய சாத்தியத்தையும் முறைகேடாக பயன்படுத்தக்கூடிய சாத்தியத்தையும் தடுப்பது.
[-எதிர்கருத்தைக் கொண்டிருந்தாலும் சரி- ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்கள் மாத்திரமே பிரசுரிக்கப்படும். எதற்காக இந்த குறிப்பு என்றால் சமீப காலமாக நான் நிறைய அநாயவசியமான பின்னூட்டங்களை நீக்குவதிலேயே நிறைய நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கிறது. திரைப்படம் தொடர்பான எனது பதிவிற்கு இன்னொரு பதிவுடன் சம்பந்தப்படுத்தி நிறைய ஆபாச வார்த்தைகளுடனான பின்னூட்டங்கள் வந்தன. ஒருவர் தன்னுடைய கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழலை இணைய வெளி அமைத்து தராமலிருப்பது குறித்து யோசிக்க ஆயாசமாக இருக்கிறது.]
suresh kannan
17 comments:
தமிழ்நாட்டு அரசியலில் விற்பனைப் பொருளாக இருக்கும் ஈழப்பிரச்சினை பற்றி சிறப்பாக நகைச்சுவையோடு பதிவிட்டுள்ளீர்கள். இலங்கை அரசின் கடைசிக்கட்ட போரில் அப்பாவி பொதுமக்கள் அழிவதற்கு புலிகளுக்கும் பங்குண்டு. இதை பற்றி எதுவிதமான அக்கறை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கோ, தமிழ்மண பதிவர்களுக்கோ கிடையது.
ஜே நினைத்தால் நினைத்ததை முடிப்பா. எனக்கு அவவிடம் பிடிச்சதே அது தான். மற்றதுகளை விடுங்கல். விலாங்கு மீன் இல்லை.
உண்மைதான். தாங்க முடியவில்லை இவர்களது அழிச்சாட்டியங்களும், அரசியல் யுக்திகளும். எல்லா வார்த்தைகளும், ஜாலங்களும் மே 17 நோக்கியே.
தெளிந்த பார்வை கொண்டவர்களைத் தேடிப் பார்க்க வேண்டிய தருணம் இது.
'நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழத்தை பெற்றுத் தருவேன்' என்று இதுவரை ஈழப்பிரச்சினையில் எதிர்நிலையைக் கொண்டிருந்த திடீர் ஞானோதயம் பெற்ற ஜெ. முழங்கியவுடன்
நாளைக்கே 'ஜெ' இன்னொரு அந்தர்பல்டி அடித்து 'இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவது தர்மமாகாது' என்று பிரேமானந்தாவிடம் ஞானோதயம் பெற்று அருளாசி கூறினால்..
I accept your opinion, they all are acting...
I think completely fooling talk Ms Jayalalita,...
//ஐந்து வருடங்கள் நம்மை ஆட்சி செய்யப் போகிறவர்கள் என்று நாம் நம்புவர்களை தேர்ந்தெடுக்கும் போது தொலைநோக்குப் பார்வையோடு தேசியக் கண்ணோட்டத்தில் உள்நாட்டுப் பிரச்சினைகளையும் அதனுடன் இணைத்துத்தான் இந்த தேர்தலை அணுக வேண்டும். //
நன்றி சுரேஷ் கண்ணன், நீங்கள் ஒருவராவது இந்தியாவை பற்றியும் சிந்தித்து வோட்டு போடுங்கள் என்று சொன்னதற்க்காக...
பல நாட்டின் பிரச்சனைகளை முன்வைத்து George Bush க்கு வோட்டு போட்டு இன்று அமெரிக்கர்கள் தாங்களே தங்கள் பொருளாதாரத்தை சேதப்படுத்தி கொண்டார்கள்... இந்தியர்களுக்கும் / தமிழ் நாட்டு மக்களுக்கும் இம்மாதிரி பிரச்சனைகள் வராதிருக்க மிகுந்த கவனத்துடன் தேர்தலை அணுகவேண்டும் என்பது என் எண்ணம்.
//
ஈழப்பிரச்சினையில் திடீரென்று இவ்வளவு கரிசனம் காட்டும் இந்த தமிழக அரசியல் கட்சிகள் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக இணைந்து புறக்கணிக்கக்கூடாது?
//
புறக்கணிச்சிட்டா அப்புறம் மாநில அளவில மட்டும் கொள்ளையடிச்சவங்க நாடளவிலே அவர்களது திறமையை எப்படி நிரூபிக்க முடியும்?
சின்னப் புள்ளைத்தனமா பேசிக்கிட்டு இருக்கீங்களே?
உதவித்தொகை வேண்டாம்... ஈழம் வேண்டாம்.. உயிர் வேண்டும்.
ஆம்..ஈழ தமிழர்க்கு இப்போது ஈழம் வேண்டாம்..உங்களின் (காங்கிரஸ்) பிச்சை காசு வேண்டாம். போரை நிறுத்த சொல்லுங்கட அரசியல் பன்னிகளே..
இருக்கும் மிச்ச மீதி உயிர்களை நாம் மே 13 முன் காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் இத முதுகு எலும்பில்லாத தலைவர்களே மீதி இருக்கும் எல்லா உயிர் களையும் எடுத்து விடுவார்கள்.
முதுகு எலும்பில்லாத முதல்வரின் நாடகம் நல்லா இருந்துச்சு. வடிவேலு காமெடி விட நல்லா காமெடி யா இருந்துச்சு.
//ஈழப்பிரச்சினையில் திடீரென்று இவ்வளவு கரிசனம் காட்டும் இந்த தமிழக அரசியல் கட்சிகள் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக இணைந்து புறக்கணிக்கக்கூடாது? ///
ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் பேராசை. நீங்களே சொன்ன மாதிரி வியாபாரத்தை நிறுத்தி லாபத்தைக் கெடுத்துக் கொள்ள நம் அரசியல்வாதிகள் எல்லாம் கேனையர்களா என்ன?
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து கருணாநிதி கத்தை கட்டியது ஒன்றும் இல்லை. கருணாநிதி யை நம்புவதை விட டி. ராஜேந்தர் , மன்சூர் அலிகான் போன்றவர்களை நம்பலாம். கருணா வெறும் 'நா' .
இப்போதைய சூழலில் அவசியமான பதிவு.
அருமையான இன்றைய சூழலுக்கேற்ற அலசல்
we voters also know this eelam business.
For communists to come out from DMK allaiance there was an issue was requried, so they started eelam issue.
After election we will pass time with issues like cauvery water, hokenakkal, mullai periyaar.
மிக அருமையான பதிவு , நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய காலகட்டம் இதுதான்.
வாழ்த்துக்கள் சுரேஷ்.
ஈழப்பிரச்சினையுடன் இன்றைய உள்நாட்டுப் பிரச்சினைகளையும் சேர்த்தே இத்தேர்தலை அணுகவேண்டும். எல்லாக் கட்சிகளும் ஈழம் பற்றிப் பேசி அடித்துக்கொள்வதால், மற்ற எல்லாப்பிரச்சினைகளும் பின் தள்ளப்பட்டுவிட்டது.
ஜெயலலிதாவை நம்புவதைவிட இன்னொரு முட்டாள்தனமான காரியம் எதுவும் இருக்கமுடியாது. அவர் ஈழம் பற்றியும் போராளிகள் பற்றியும் ஸ்டண்ட் அடிக்கத் தொடங்கியிருப்பது பெரிய காமெடி. இதை மக்கள் ஏற்பார்கள் என நான் நம்பவில்லை. ஆனால், அதிமுக வெற்றி பெறும் சூழ்நிலை நிலவுவதால், தனி ஈழம் பெற்றுத் தருகிறேன் என்று சொன்னதால்தான் ஜெயலலிதா வெற்றி பெற முடிந்தது என்கிற ஒரு முடிவை ஈழ ஆதரவாளர்கள் எடுக்கக்கூடும். ‘ஈழ ஆதரவு பற்றித்தான் பேசினேன், விடுதலைப்புலிகள் போன்ற பயங்கரவாதிகளை நான் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை’ என்று ஜெயலலிதா பேசப்போகும் நாள் தூரத்தில் இல்லை.
பிஜேபி தமிழர்கள் ஹிந்துக்கள் என்று சொல்லி ஊரை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறது. வாஜ்பாய் மதுரையில் அன்றே பேசினார் என்று கழக பாணியில் என்னவோ சொல்லிக்கொண்டு உள்ளது.
அரசியலும் பதவியும் இவர்களை என்னவெல்லாம் செய்யச் சொல்கிறது.
ஏதேனும் ஒரு சுயேச்சைக்கு ஓட்டுப் போடுவது என்பது எந்தப் பலனும் தராது. திமுகவா, அதிமுகவா என்பதை உடைக்கவேண்டுமானால், மூன்றாவதாக ஒரு கட்சியை மேலே கொண்டுவரவேண்டும். நமக்குக் கிடைப்பதெல்லாம் தேமுதிக போல ஒரு லாலிபாப் கட்சிதான். தேசியக் கட்சிகள் எல்லாம் மாநிலக் கட்சிகளின் வால் பிடித்துக்கொண்டிருக்கிறன.
காங்கிரஸ், தேமுதிக இணைந்து ஒரு மூன்றாவது அணியை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும் என யோசிக்கிறேன். இதுவும் அதிமுக அல்லது திமுக வெல்லவே பயன்பட்டிருக்கும் என்றாலும், மூன்றாவதாக ஒரு கட்சி பெறும் வாக்குகள் அந்த இரண்டு முக்கியக் கட்சிகளுக்கு நிச்சயம் ஒரு பயத்தை அளித்திருக்கும்.
//ஹிட்டும், பரபரப்புமே முக்கியம் என
சிலர் நினைப்பது வேதனையே..!
நடு நிலையான பதிவு.
ஜெயலலிதா இராணுவத்தை அனுப்புவேன் என்று சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர். அவர் சென்னை கடற்கரையில் காவேரி பிரச்சினைக்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தத கதைகளெல்லாம் இன்னமும் யாரும் மறக்கவில்லை.
//அவருடைய உண்ணாவிரதத்தினால்தான் இலங்கை அரசு போரில் 'கனரக ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது' என்று அதனுடைய இராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருப்பது நிகழ்நதது //
கனரக வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்பது போரில் நடைபெறும் ஒரு சம்பிரதாய நிகழ்வு. பாதுகாப்பு வளையத்தை தாண்டி உள் நுழையும்போது இம்மாதிரியான முறைகளை பின்பற்றுவது சிறிய நிலப் பரப்பில் இராணுவத்தினர் எளிதாக நகரக் கூடிய வகையில் எடுக்கப்படும் சம்பிரதாய நடவடிக்கைகளே. அதுவும் முன்னரே எடுக்கப்பட்ட முடிவுகள்தான். இம்மாதிரியான 'classfied' செய்திகள் அண்டை நாட்டு உள்துறை அமைச்சகத்துக்கோ, இல்லை ஒரு மாநிலத் தலைவருக்கோ முன்னரே சொல்லப்படுவதுதான் இம்முறை ஒரு புதுமை.
மதியம் பத்திரிகைகளுக்கு இலங்கை அரசாங்கம் அறிக்கை அளிக்கப் போவது தெரிந்தே ‘சாகும்வரை’ உண்ணாவிரதம் இருப்பதும் அதைப் போற்றிப் பாடுவதும்.... ஸ்ஸ்ஸ்ப்ப்பா கண்ணக் கட்டுதுப்பா சாமீ
Post a Comment