Saturday, April 19, 2008

பெண் குழந்தை..... இருவர்....... மாம்பழம்....

இன்று காலை செய்தித் தாள்களில் படித்தவொரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இரண்டு பெண்மணிகளுக்கு குறைந்த கால இடைவெளியில் ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக பிறந்தன. குழந்தைகள் அந்தந்த தாயாரிடம் ஒப்படைக்ப்பட்டன. ஆனால் இரவு ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர்கள் குழந்தைகள் மாற்றி ஒப்படைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் பேசி குழந்தைகளை மாற்றி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இரண்டு தரப்பினருமே ஆண் குழந்தைதான் தங்களுடையது என்று வாதிட்டு தகராறு செய்ததில்.. இப்போது மரபணு சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது வரைக்குமான வழக்கமான செய்தியில் விசேஷமாக ஒன்றுமில்லை. அரசாங்க மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சை முடிந்து உயிரோடு வருவதே ஒரு சாதனைதான். அரசு மருத்துவமனைகளின் மீது வழக்கமான கூறப்படும் சம்பிரதாயமான குறையாக இதை கூறவில்லை. சுய அனுபவத்திலிருந்தே கூறுகிறேன். ஏறக்குறைய 1970-களில் சுஜாதா எழுதிய 'நகரம்' சிறுகதையில் சித்தரிக்கப்படும் சம்பவங்களை இன்னும் கூட சீரமைக்காமல் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் அரசு மருத்துவமனைகளின் சாதனை மகத்தானது.

என்னை பாதித்தது, இன்னொரு குழந்தையான 'பெண் குழந்தையை' இரண்டு தரப்பினருமே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டதுதான். எப்படியும் இரண்டு பெண்மணிகளுள் ஏதோ ஒருவரின் குழந்தைதான் அந்த மழலை. ஆனால் அதை உணராமல் ஏதோ லாட்டரிச் சீட்டு பணத்திற்கு சண்டையிடுவதைப் போல ஆண் குழந்தைக்கு போட்டியிடுவது, நம்முடைய சமூகக் கட்டமைப்பில் இன்னும் ஆணுடைய இடம் உயர்ந்த ஆதிக்க நிலையில் பொருத்தப்பட்டுள்ளதையே பிரதிபலிக்கிறது. ஏறக்குறைய பெரும்பாலான துறைகளில் ஆண்களுக்கு நிகராகவும் மேலாகவும் பெண்கள் உயர்ந்து கொண்டு வரும் இன்றைய சூழ்நிலையிலும் இவ்வாறான பிற்போக்கு மனப்பான்மை வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. எங்களின் இரண்டாவது மகள் பிறந்த போது, பெரும்பாலான உறவினர்களும் நண்பர்களும் ஏதோ துக்கம் விசாரிப்பதைப் போல ('ரெண்டுமே பொண்ணாயிடுச்சே') எங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த முயன்றனர். நல்ல வேளையாக அந்த வலைக்குள் நாங்கள் சிக்கிக் கொள்ளவில்லை.

தன்னுடைய ஜாதியையும் மதத்தையும் உயர்த்தி வைத்தும் பெருமை அடித்தும், பிற மதத்தினரை வெறுப்பாகவும், இழிவாகவும் பேசும்/எண்ணும் நபர்களிடம் நான் எப்போதும் கேட்க விரும்புகிற கேள்வி இதுதான்.

யாரை நீங்கள் வெறுப்புடன் நோக்குகிறீர்களோ, அந்த பிரிவில்தான் (மேற்சொன்ன சம்பவம் மாதிரியாக) நீங்கள் பிறந்தீர்கள் என்று பிற்பாடு தெரியவந்தால் எப்படி உணர்வீர்கள்?

Photobucket

நேற்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இருவர்' திரைப்படத்தை சாவகாசமாக பார்க்க நேர்ந்தது.

தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கு முன்பான மணிரத்னத்தின் யோக்கியமான முயற்சிகளில் இதை ஒன்றாக நான் கருதுகிறேன். தமிழ்த் திரைப்படங்களின் கதை சொல்லும் முறையில், திரைக்கதையில் ஒரு பெரும் மாற்றத்தை, பாய்ச்சலை (தமிழ் உரைநடையில் சுஜாதா செய்ததைப் போல) உருவாக்கியவர் மணிரத்னம். சென்ற தலைமுறையினர் தங்களின் சமகால நிகழ்வுகளாகவும் இன்றைய தலைமுறையினர் வெறும் வரலாற்றுச் சம்பவங்களாக மட்டும் அறிந்ததை சுவாரசியமாக காட்சிப்படுத்தியுள்ளார் மணி. இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததின் காரணங்களை எளிதாக யூகிக்க முடியவில்லை. படத்தின் டாக்குமெண்டரித்தனத்தாலா அல்லது தங்களுக்கு நெருக்கமான அறிந்த வரலாற்றை திரையில் வேறு பா¡க்க வேண்டுமா என்கிற அலட்சியமா அல்லது காட்சிப்படுத்துதலுடன் உடன்படாததா என்பது ஆராயப்பட வேண்டியது.

பிரதானமாக எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி என்கிற ஆளுமைகளின் (பிற்பாடு ஜெயலலிதா) கலைப்பயணமும் அரசியல் பயணமும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களுடன் இணைத்து முறையே 'ஆனந்தன்' ஆகவும் 'தமிழ்ச்செல்வம்' ஆகவும் புனைவு ரீதியான பாவனையில் நேர்கோடுகளாக சொல்லப்படுகிறது. நிஜத்தில் மலையாளியான எம்.ஜி.ஆருக்காக மலையாளத்திலிருந்தே மோகன்லாலையும், தமிழரான கருணாநிதி பாத்திரத்திற்கு கர்நாடகத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜூம், ஜெயலலிதாவிற்காக வடக்கிலிருந்து ஐஷ்வர்யா ராவையும் இயக்குநர் பொருத்திப்பார்த்திருப்பது ஒரு சுவாரசியம். (பாரதி திரைப்படத்தில் பாரதியாக நடிப்பதற்கு மஹாராஷ்டிரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஷாயாஜி ஷிண்டேவையும் இங்கே நினைவு கூர வேண்டும்.) நிற்க.... சம்பந்தப்பட்ட ஆளுமைக்கு சம்பந்தப்பட்ட நிலப்பிரதேசத்திலிருந்துதான் நடிகர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற குறுகிய பார்வையில் இதை கூறவில்லை. தமிழ் நடிகர்கள் யாரும் இதற்கு பொருத்தமில்லாமற் போனார்களா என்பதையும் அல்லது நடிக்க மறுத்தார்கள் என்றால் அதன் காரணங்களையும், மாற்றாக எந்த தமிழ் நடிகர்கள் இன்னும் பொருத்தமாக இருந்திருப்பார்கள் என்றும் யோசித்தால் சுவாரசியமான சித்திரம் ஒன்று கிடைக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால் மோகன்லாலும், பிரகாஷ்ராஜூம், ஐஷ்வர்யாவும் தங்களுடைய பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். அதிலும் மோகன்லாலும் பிரகாஷ¥ம் நடிப்பில் ஒருவரோடு ஒருவர் பலத்த போட்டியிடுகிறார்கள். பிரகாஷ¥க்கு அவரின் ஆரம்பத்திலேயே இந்த மாதிரியான ஒரு பாத்திரம் கிடைத்திருப்பது பெரும் அதிர்ஷ்டம்தான். இந்தப்படத்தில் உதவி இயக்குநராக இருந்த பிரியாவை பிரகாஷ் அவ்வப்போது தொடர்பு கொண்டு 'சம்பந்தப்பட்ட பாத்திரத்திற்கு தான் தேர்வாகிவிட்டோமா' என்று பதைபதைப்புடன் கேட்டுக் கொண்டே இருந்தாராம்.

லாலேட்டனின் மலையாளப் படங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இந்தப்படத்தில் அவர் எம்.ஜி.ஆர் பாத்திரத்திற்கு தோற்றத்திலும் உடல் மொழியிலும் மிகவும் நெருக்கமாக பொருந்தியிருக்கிறார். (ஒரு காட்சியில் அரசியல் கூட்டத்திற்கு மேடைக்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறக்குறைய ஓடுகிறார்). கதாநாயகனாக தான் நடித்துக் கொண்டிருந்த படம் நின்று போனதை அறிந்தவுடனும் பிற்பாடு கான்ஸ்டபிள் போன்ற சிறிய வேடங்களில் நடிக்க நேருகின்ற போது அடைகின்ற துயரத்தையும் மிகவும் அற்புதமான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னர் அவர் பெரிய நடிகராக வளர்ந்து அரசியலில் நுழைந்த பின்னால் செல்வத்திற்கும் அவருக்கும் மெள்ள மெள்ள ஏற்படுகிற முரண்களும் உரசல்களுமாக அந்த love & hate உறவு மிகவும் நுண்ணியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆரின் சிறப்பம்சமாக ஒன்று சொல்வார்கள். வீட்டிற்கு வருகிற யாரைப்பார்த்தாலும் அவருடைய முதல் கேள்வி "சாப்பிட்டீர்களா" என்பது. இளமையில் வறுமையை அதிலும் பசியை முழுவதுமாக ருசித்தவர்களுக்குத்தான் இவ்வாறாக யோசிக்கத் தோன்றும். இந்த அம்சத்தை சில காட்சிளில் இயக்குநர் சரியாக பொருத்தியிருக்கிறார். ஒரு காட்சி வருகிறது. தன்னுடைய படம் நின்று போன வேதனையான செய்தியை சொல்ல ஆனந்தன் செல்வத்தை நோக்கி ஓடிவருகிறான். ஆனால் அவனோ அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் புளகாங்கிதத்தில் கேட்கிறான் "உனக்கு அரசியல் முக்கியமா, சினிமா முக்கியமா"?. ஆனந்தன் அடிவயிற்றிலிருந்து கத்துகிறான். "உனக்கென்ன, அப்பாவுக்கு கவர்ண்மெண்ட் உத்தியோகம், மூணு வேள சாப்பாட்டுக்கும் கவலையில்ல. எப்பவாவது நாலு நாளா சாப்பிடாம இருந்திருக்கியா, உங்க அம்மாவ கடன்காரங்க அவமானப்படுத்தினத பாத்து அழுதிருக்கியா?"...

பிரகாஷ்ராஜ் இந்தப்படத்தின் இன்னுமொரு அற்புதம். இந்தமாதிரி திறமையான நடிகர்களை இன்னும் விதவிதமான வில்லன் பாத்திரங்களுக்கு உபயோகித்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று. தமிழர்களே வெட்கப்படும் படியாக மொழியை அவ்வளவு அழகாக உச்சரிக்கிறார். ஆனந்தனை 'நடிகன்தானே' என்று முதலில் அலட்சியாக நினைத்திருப்பதும் கட்சிக்குள் இணைந்தபிறகு அவனின் பிரும்மாண்ட வளர்ச்சியை கண்டு குமைவதும், பின்பு வெளிப்படையாகவே தன்னுடைய வெறுப்பை முன்வைப்பதும், தேர்தலில் தோற்றதை அமைதியான அழுத்தத்துடன் ஏற்றுக் கொள்ளவதும் ஆனந்தன் இறந்தபிறகு அத்தனையும் வடிந்து போய் ஆரம்ப நட்புக்காலத்தை எண்ணி கலங்குவதுமாக.... மனிதர் அசாத்தியமான உயரத்தைத் தொட்டிருக்கிறார். தேர்தலில் தோற்றுப் போன சமயத்தில் ஒரு திருமண மண்டபத்தில் அமர்ந்திருக்கும் போது சம்பிரதாயமான ஆர்ப்பாட்டங்களுடன் முதலைமச்சராக வருகிற ஆனந்தனை அடிபட்ட பார்வையுடன் பார்ப்பதான ஒரு காட்சியே அற்புதமான உதாரணம்.

ஆனந்தன் சினிமாவில் பிரபலமான புதிதில் செல்வம் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறான் மாபெரும் கூட்டம் அவனைக் காண நின்று கொண்டிருக்கிறது. திகைத்து நிற்கும் ஆனந்தனின் கையை உயர்த்திப்பிடிக்கிறான் செல்வம். "பாரு பாரு. எவ்வளவு பெரிய மனித சக்தி. லெனின், ஹிட்லர், ஸ்டாலின் போன்றவங்கள்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த விஷயம். இதை வெச்சு நீ என்ன செய்யப் போற" (ஆனால் காலம்காலமாக, நிஜத்தில் நடிகர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் ஆயுதத்தின் கூர்மையை உணராமல் கட்அவுட்டுகளுக்கு பால் ஊற்ற ஆட்டு மந்தைகள் மாதிரி பயன்படுத்திக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானதொரு விஷயம்.)

ஐஷ்வர்யா ராய் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே இவ்வளவு சிறப்பாக நடித்திருப்பது பெரும் ஆச்சரியம். ஆனந்தனின் முதல் மனைவியாக பாந்தமாக அமைதியாக வரும் புஷ்பாவைவிட அதிரடியான பிடிவாதமாக வரும் நடிகை காஞ்சனாதான் அட்டகாசம். ஆனந்தனின் இறந்து போன மனைவியின் சாயலில் இருப்பதை அவர் வாயிலிருந்தே பிடுங்கி "அப்ப என்னையும் காதலிப்பீங்களோ" என்று அவரை திகைக்க வைப்பதும் அரசியல் கூட்டத்தில் உற்சாகமாக கையசைப்பதும் என அச்சு அசலாக ஜெயேதான்.

கெளதமி, தபு, ரேவதி, நாசர், ராஜேஷ்... போன்றோர் பொருத்தமான பாத்திரங்களில் பொருத்தப்பட்டிருக்கின்றனர்.

பழைய சாதத்தை குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்து சாப்பிட்டது போல் அந்தக்கால மெட்டுக்களில் நவீன இசையை உறுத்தாமல் கலந்து பிரமாதப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான். ஆனந்தன் கூட்டத்தில் கேள்வி எழுப்பும் காட்சி, செல்வத்தின் இரண்டாவது மனைவி அவரின் மனச்சாட்சியை நோக்கி எழுப்பும் காட்சிகள் உட்பட சில சர்ச்சைக்குரிய வசனங்கள் (இயக்குநரின் சொற்படி) ஆர்ப்பாட்டமான பின்னணி இசையின் மூலம் மழுப்பப்பட்டிருக்கிறது. "பூங்கொடியின் புன்னகை" என்கிற சந்தியா பாடின பாடல் என்னுடைய விருப்பத்தேர்வில் நிரந்தர இடம் பெற்றதொன்று. ... நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை'... என்று வைரமுத்து தன் பாடல்களின் மூலம் நுண்மையான உணர்வுகளை உலுக்கியெடுத்தியிருக்கிறார். மனிதரை சுதந்திரமாக விட்டால் போதும்...ஜமாய்த்து விடுகிறார். சிலரை பிரபலங்கள் என்கிற காரணத்தினாலேயே முன்தீர்மான காழ்ப்புணர்ச்சியுடன் அணுகுவது அபத்தமானது. சங்ககால செய்யுள்களின் சாயல் கொண்ட 'நறுமுகையே' அற்புதத்தை, பட்டிமன்றங்களில் வைரமுத்துவை திட்டும் போது வசதியாக மறந்துவிடுகின்றனர்.

()

தொலைக்காட்சி விளம்பரங்கள் சில சமயங்களில் மறைமுகமாகவும் சில சமயங்களில் நேரடியாகவும் சொல்லும் செய்திகள் எரிச்சலையும் கோபத்தை ஏற்படுத்துகிறது. கறுப்பாக இருப்பவர்களின் மனங்களில் தாழ்வுணர்ச்சியை ஊட்டி சிவப்பழகு க்ரீம்களை விற்பது ஒருபுறமும், இயற்கையாக உடலில் ஏற்படுகிற வியர்வையை ஏதோ எயிட்ஸ் நோய் வந்தவனைப் போல் சித்தரிப்பதும் ஒருபுறம் இருக்கட்டும்.

உலகிலேயே எனக்கு பிடித்தமான விஷயங்களுள் பிரதானமானது மாம்பழம். ஆனால் சிறுவயதில் அம்மா அரிந்து கொடுக்கும் போது கொட்டைக்காக சகோதரர்களாகிய நாங்கள் சண்டை போடுவோம், நீண்ட நேரத்திற்கு சுவைக்கலாம் என்கிற அற்ப காரணத்திற்காக. ஒரு முறை பள்ளியிலிருந்து பசியோடு வீடு திரும்பிய போது யாரோ உறவினர் அனுப்பி வைத்திருந்த கூடை மாம்பழத்தில் சுமார் 12 மாம்பழங்களை ஒரே நேரத்தில் உள்ளே தள்ளி பிற்பாடு அடி வாங்கினேன். இப்போதும் கூட துண்டு துண்டாக வெட்டி சாப்பிடுவதெல்லாம் பிடிக்காது. பங்கனபள்ளி என்றால் மாம்பழத்தின் மேற்பகுதியை கடித்து ஒரு துளையிட்டுக் கொள்வது... பின்பு அந்த துளையில் வாயை வழித்து சக்தியை திரட்டி உறிஞ்சுவது... முழங்கையில் வழியும் சாற்றை நாகரிகம் பார்க்காமல் சுவைப்பது...பழத்தைப் பிளந்து பகுதிபகுதியாக தோல் வரைக்கும் பல்லால் சுரண்டுவது... கொட்டைக்கு மாத்திரம் கால் மணி நேரம் செலவழிப்பது.. என்று ஏறக்குறைய கற்கால மனிதன் போல்தான் சாப்பிடுவேன்.

ஆனால் தொலைக்காட்சி விளம்பரங்களில் என்ன செய்கிறார்கள்.. இயற்கையான மாம்பழம் என்கிற சமாச்சாரத்தையே இளைய மனங்களில் இருந்து அழித்து அவர்கள் பாட்டில்களில் செயற்கையாக அடைத்து விற்கும் பழரசங்கள்தான் உண்மையான மாம்பழம் என்கிற மாதிரி பொய்யான தோற்றத்தை நம்பும்படி காட்சிப்படுத்துகின்றனர். இரண்டு வருடத்திற்கு முன்பு வரை 'சிவாஜி' என்றவுடன் தமிழக மனங்களில் ஒரு மாபெரும் ஆளுமையின் உருவம் வருவது தடுக்கப்பட்டு தற்போது அதற்கு மாற்றாக ஒரு பிரம்மாண்ட குப்பைப்படம் ' நினைவுக்கு வருகிற, ஷங்கர் செய்த வரலாற்று மோசடி மாதிரி நிகழ்த்தப்படும் இம்மாதிரியான விஷயங்கள் உடனே தடுக்கப்பட வேண்டும்.

suresh kannan

9 comments:

யாத்ரீகன் said...

>>>>> ஒரு துளையிட்டுக் கொள்வது... பின்பு அந்த துளையில் வாயை வழித்து சக்தியை திரட்டி உறிஞ்சுவது... முழங்கையில் வழியும் சாற்றை நாகரிகம் பார்க்காமல் சுவைப்பது...பழத்தைப் பிளந்து பகுதிபகுதியாக தோல் வரைக்கும் பல்லால் சுரண்டுவது... கொட்டைக்கு மாத்திரம் கால் மணி நேரம் செலவழிப்பது.. என்று ஏறக்குறைய கற்கால மனிதன் போல்தான் சாப்பிடுவேன் <<<<

boss... welcome to the club :-)

கதிர் said...

இரண்டொரு நாள் முன்பு கூட கவனிப்பில்லாமல் தாயும் குழந்தையும் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே இறந்து போனதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன். அரசு மருத்துவமனைகளின் அலட்சியம் சகிக்க முடியாதது.

துளசி கோபால் said...

நானும் உங்க 'மாம்பழக் கிளப் 'மெம்பர்தான்:-)))))


பதிவு அருமையான நீரோட்டமா இருக்குங்க.

rajkumar said...

"லாலேட்டனின் மலையாளப் படங்களை நான் பார்த்ததில்லை" இதற்கான காரணங்களை தெரிவிப்பீர்களா?- லால் வணிக தளத்திலும், கலைத் தளத்திலும் பரிமளித்த சிறந்த நடிகர்.இவர் நடித்த பல படங்களுடன் ஒப்பிடும் போது இருவரில் அதிக சவால்கள் இல்லை.

ஒவ்வொரு கட்டுரையிலும் சிவாஜியை திட்ட வேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறீர்களா? அதற்காகவே ஒரு "context"ஐ கண்டுபிடிக்கிறீர்களோ என தோன்றுகிறது.

இருவரை தியேட்டரில் பார்க்கவில்லையா? இருவரை புதுமை என்று நினைத்து 16 எம் எம் மில் காண்பித்தார்கள். அந்த பார்வை அனுபவம் உவப்பானதாக இல்லை.

படம் பல இடங்களில் வசனம் கட் செய்யப்பட்டு கோர்வையின்றி குதித்தது. ஆனாலும் டிவியில் பார்க்கும் போது சுவாரஸ்யமாக இருந்தது உண்மை.

அன்புடன்

ராஜ்குமார்
9444054897

பிச்சைப்பாத்திரம் said...

ஃஃலாலேட்டனின் மலையாளப் படங்களை நான் பார்த்ததில்லை" இதற்கான காரணங்களை தெரிவிப்பீர்களா?- //

ராஜ்குமார், மொழிப்பிரச்சினைதான். சற்று பொறுமையுடன் உட்கார்ந்தால் மலையாள மொழிப் படங்களை கிரகித்துக் கொள்ள இயலும்தான். ஆனால் ஏனோ என்னால் அது இயலவில்லை.

//ஒவ்வொரு கட்டுரையிலும் சிவாஜியை திட்ட வேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறீர்களா?//

:-)

அப்படியெல்லாம் இல்லை. வணிக நோக்கி்ல் மாத்திரமே எடுக்கப்படும் புதிய முயற்சிகள் எதுவுமே இல்லாமல் அரைத்த மாவை அரைக்கும் படங்கள் எல்லாமே எனக்குப் பிடிக்காதவைதான். ஆனால் சீனியாரிட்டி முறையில் என் பார்வையில் 'சிவாஜி'தானே முன்னால் நிற்கிறார், என்ன செய்வது? :-)

சிங். செயகுமார். said...

excellent post thalaivaaa!

பெத்தராயுடு said...

//"பூங்கொடியின் புன்னகை" என்கிற சந்தியா பாடின பாடல் என்னுடைய விருப்பத்தேர்வில் நிரந்தர இடம் பெற்றதொன்று. ... நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை'... என்று வைரமுத்து தன் பாடல்களின் மூலம் நுண்மையான உணர்வுகளை உலுக்கியெடுத்தியிருக்கிறார். மனிதரை சுதந்திரமாக விட்டால் போதும்...ஜமாய்த்து விடுகிறார்.//


படம்: சங்கமம்
பாடல்:சௌக்கியமா கண்ணே ¦சௌக்கியமா
குரல்:நித்யஸ்ரீ
வரிகள்:வைரமுத்து

..அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்..

எனக்குப் மிகவும் பிடித்த வரிகளில் ஒன்று.
என்ன ஒரு கற்பனை?

KKPSK said...

இருவர் - எனக்கு ரொம்ப பிடிக்கும்..பல காரணங்கள்.பல நீங்க சொன்னவையோடு முழுதுமாக ஒத்துபோகுது.

"பூங்கொடியின் புன்னகை", "நறுமுகையே", "ஆயிரத்தில் நான்" என அருமையான பாடல்கள்.

பாடல் வரிகள்..படைப்பின் உச்சம்.

மிக பொருத்தமான பின்னணி இசை.

நடிகர்களின் நடிப்பு..என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இது முழுமையான படமா..என்றால்.இல்லை.

மணிரத்னம்..சிறந்த படைப்பாளியே.

Kaarthik said...

சுஹாசினியின் வசனத்தைப் பற்றி ஒரு வரி எழுதியிருக்கலாம்.