Friday, April 11, 2008

வார்த்தை முதல் இதழ் குறித்து......

எனி இந்தியன் பதிப்பகத்தாரின் புதிய மாத இதழான 'வார்த்தை' குறித்து என்னுடைய வெளிப்படையான சில எண்ணங்களையும் / கருத்துக்களையும் / யோசனைகளையும் எழுத உத்தேசம்.

இலவச பல்பொடி பாக்கெட் வகையறாக்களுடன் வெளியாகும் வணிக இதழ்கள் வாசிப்பு பழக்கமுடைய குறுகிய எண்ணிக்கையைக் கொண்ட வாசகர்களிடையே பெரும்பான்மையாக கோலோச்சிக் கொண்டு, சூழலில் மாசை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அவற்றிற்கு மாற்றாக வெளியாகும் இடைநிலை இதழ்கள், தீவிரமான உள்ளடக்கங்களுடன் வெளியாகும் சிற்றிதழ்கள் போன்றவற்றின் தேவை மிக அவசியமானது. பெரும்பான்மையாக அறியப்பட்டிருக்கும் காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து போன்ற இடைநிலை இதழ்களின் வரிசையில் இன்னொரு புதுமுகமான "வார்த்தை"யை வரவேற்கிறேன்.

()

ஏப்ரல் 1 அன்று வெளியாகியிருந்தாலும் இதழ் நம்மை முட்டாளக்கவில்லை என்றே தோன்றுகிறது. (சந்தா தொகையைக் கூட வாங்கிக் கொள்ளாமல் நம்பி அனுப்பிய பிரசன்னாவிற்கு நன்றி).

இந்த இதழ் குறித்த என்னுடைய பார்வைகளும், பரிந்துரைகளும்:

1) மங்கலகரமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பிலோ என்னமோ, அட்டைப்படம் மஞ்சள் நிறத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. (இனிமேல் அதிகமாக மஞ்சள் நிறத்தை பயன்படுத்த வேண்டாம். கடைக்காரிடம் "அந்த மஞ்ச பத்திரிகையை எடுப்பா" என்று கேட்க சிலருக்கு தயக்கமாக இருக்கக்கூடும்.). பல்வேறு ஆளுமைகளின் புகைப்படங்கள் உள்ளே பிரசுரிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றி visual-ஆக கூறிவிடுகின்றன. ஆனால் இப்படி ஸ்டாம்ப் சைசில் பல புகைப்படங்களை அச்சிடுவதை விட ஒரே ஒரு புகைப்படத்தை மாத்திரம் பெரிதாக அச்சிட்டால் தூரத்திலேயே அடையாளங் கண்டு கொள்ளவும் வித்தியாசம் காணவும் உதவியாய் இருக்கும் என்று தோன்றுகிறது.

2) தனிப்பட்ட முறையில் 'வார்த்தை' என்கிற இதழின் பெயரே எனக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. வேறு நல்ல பெயரை முயற்சித்திருக்கலாம். (இனிமேல் இலக்கியப் பத்திரிகை ஆரம்பிக்கவிருப்போர், நல்ல தலைப்பிற்கு ஐந்து ரூபாய் ஒட்டிய தபால்உறையை எனக்கு அனுப்பவும்) மேலும் புத்தகத்தின் பெயரை தனித்த, பிரத்யேக அடையாளமாக ஒரு logo-வாக உருவாக்கியிருக்கலாம். சாதாரண எழுத்துருவில் இருக்கிறது.

3) இதழின் வடிவமைப்பு வாசிப்பிற்கு இடையூறாக இல்லாமல் இருப்பது பாராட்டுக்குரியதென்றாலும் இன்னும் மேம்படுத்துவதற்கான முயற்சியை செய்யலாம். (பக்கம் 49-ல் தேவையில்லாமல் ஒரு grey patch இருக்கிறது.).

4) செழியனின் கட்டுரை மாத்திரம் பெரிய அளவான எழுத்துக்களுடன் வித்தியாசமாக தெரிவதை தவிர்த்திருக்கலாம். (பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை பிரசுரிப்பதாக இருந்தால் இந்த யோசனையை நிராகரிக்கலாம்).

5) சில ஓவியங்கள் வணிகப்பத்திரிகைகளில் வரையப்படுபவை போன்று மிகச்சாதாரணமாக உள்ளன. இவற்றை இன்னும் மேம்படுத்தலாம்.

6) 3 ரோசஸ் தேயிலை மாதிரி இன்னும் மணம், நிறம் தூக்கலாக இருக்க வேண்டும். தாளின் நிறம் பழுப்பு நிறத்தில் பழைய இதழ் மாதிரி தோற்றத்தை ஏற்படுத்துவது வரும் இதழ்களில் தவிர்க்கப்படுவது நன்று.

உள்ளடக்கம் பற்றி (படித்த வரை):

1) விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த சுஜாதாவின் புனைவுகளின் மீது ஒரு காலத்திற்குப் பிறகு எனக்கு நாட்டம் குறைந்து போனது. சமீபத்தில் 'டைம்ஸ் இன்று' இதழில் வெளியான அவரது சலிப்பை ஏற்படுத்தும் சிறுகதையை குறை கூறி "Mr.சுஜாதா, நீங்கள் ஏன் சிறுகதை எழுதுவதை கொஞ்ச காலத்திற்கு நிறுத்தக் கூடாது?" என்று எழுதியிருந்தேன். (எழுதின கை முகூர்த்தம், மனிதர் போய்ச் சேர்ந்து விட்டார். சங்கடமாக இருக்கிறது.) புகழின் உச்சியிலிருந்த ஜெயகாந்தன் புனைவுகள் எழுதுவதை நிறுத்தினது குறித்த கேள்விக்கு அப்போதுதான் விடை கிடைத்தாற் போலிருக்கிறது. நீர்த்துப் போவதற்கு முன் நிறுத்திவிடுவது நல்லது.

இந்த இதழில் வெளியாகியிருக்கும் ஜெயகாந்தனின் பதில்கள் மிகச்சாதாரணமாய் இருக்கின்றன. வெறும் கவர்ச்சிக்காகத்தான் அவர் பெயர் பயன்படுத்தப்படுகிறது என்றால் ஆட்சேபணையில்லை. ஆனால் உள்ளடக்கம் தரமாய் இருக்க வேண்டும் என்று ஆசிரியர் குழு கருதினால் சிறிது: காலத்திற்குப் பிறகு இதை நிறுத்தி விடுவதே நலமான செயலாய் இருக்கும். (இதனால் ஏதோ நான் ஜெயகாந்தனை தாழ்த்தி மதிப்பிடுவதாய் தவறாய் நினைக்க வேண்டாம். என்றைக்குமே நான் மதிக்கும் படைப்பாளிகளில் அவரும் ஒருவர்).

2) நாஞ்சில் நாடனின் சிறுகதை (ஐயம் இட்டு உண்) அவருக்கான பிரத்யேக மொழியுடன் வழக்கம் போல் சிறப்பாய் இருக்கிறது.

3) ஒளிப்பதிவு உலகின் மொழியில் Close-up எனப்படும் 'அண்மைக்காட்சி' என்கிற கோணத்தின் முக்கியத்துவம் குறித்து செழியன் எழுதியிருக்கும் கட்டுரை மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கோணத்தைப் பற்றி இவர் தொடர் ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும்.

4) இசையில் நனையும் காடு என்கிற சேதுபதி அருணாச்சலத்தின் கட்டுரை கிடார் பிரசன்னாவில் ஆரமபித்து சடாரென்று திசை மாறி பிக்மிக்களின் விசித்திரமான உலகத்தை சுவாரசியமான மொழியில் கூறுகிறது.

5) மலையாள தேசத்தின் வாடையுடன் திண்ணையில் எழுதிக் கொண்டிருந்த 'வாரபலனை' இரா.முருகன் 'வார்த்தைக்கு இடம் மாற்றி விட்டார் போலிருக்கிறது.

6) 'பொருள் பொதிந்த சமரசம்' என்கிற சுஜாதாவைப் பற்றி கோபால் ராஜாராமின் கட்டுரை பெரும்பாலும் ஏற்புடையதாக இருந்தாலும் இன்னும் கூட ஆழமாக எழுதப்பட்டிருக்கலாமோ என்று தோன்ற வைத்தது.

7) இந்த இதழிலேயே என்னை பெரிதும் கவர்ந்தது 'ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்' என்கிற பி.ச.குப்புசாமியின் கட்டுரைதான். எளிமையான மொழியில் சுவாரசியமாக நகர்த்திக் கொண்டு சென்ற இந்த மாதிரி கட்டுரையைப் படித்து நீண்ட காலமாகிறது. தப்பு செய்த மாணவனை காப்பாற்றும் பொருட்டு அவனுக்கு சாதகமாக வாக்கியங்களை மெதுவாகவும் பாதிப்பு ஏற்படுத்துகிற கேள்வியை விரைவாகவும் கேட்பதை ஆசிரியரின் மொழியில் படிக்க சுவையாய் இருந்தது. இவர் எழுதுவது கட்டாயமாக தொடரப்பட வேண்டும். (இவரின் மற்ற படைப்புகள் குறித்து அறிய ஆவலாய் இருக்கிறேன்.)

மற்ற படைப்புகளைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்.

()

இந்த இதழில் பல புதுமுக எழுத்தாளர்களின் பெயரைப் பார்கக சந்தோஷமாய் இருக்கிறது. 'ஸ்டார்' எழுத்தாளர் என்று கருதப்படுகிறவர்களின் பக்கங்களை அளவோடு நிறுத்தி புது படைப்பாளிகளை / மரபை தாண்டி நிற்கிற படைப்புகளை இனங்கண்டு 'வார்த்தை குழு' நிறைய பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.

ஆசிரியர் குழுவில் இருக்கும் சிவகுமார், பிரசன்னா போன்றோருக்கு வலைப்பதிவுகளுடான பரிச்சயம் அதிகம் இருப்பதால் இந்தப் பரிந்துரை.

எந்தவொரு தீவிர எழுத்தாளரின் தரத்திற்கும் சற்றும் குறையாமல் (இணையத்தில் மாத்திரம்) எழுதும் படைப்பாளிகள் உண்டு. அச்சு ஊடக வாசகர்களுக்கும் அவர்களை கொண்டு சேர்க்கும் விதமாக அவர்களையும் இனங்கண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன். (பக்கத்து இலைக்கு பாயசமா? என்று உரத்த சிந்தனை செய்பவர்கள்... 'சிவாஜி' திரைப்படத்தை தொடர்ந்து ஆறு முறை பார்க்கக் கடவது).


suresh kannan

5 comments:

Anonymous said...

நன்றாகக் கூறியிருக்கிறீர்கள்.

வார்த்தை இதழில்...

'சுகா' என்ற புனைபெயரில் ஒரு சிறுகதை வந்திருக்கிறதே! அது நீங்கள்தானே!?

பிச்சைப்பாத்திரம் said...

//'சுகா' என்ற புனைபெயரில் ஒரு சிறுகதை வந்திருக்கிறதே! அது நீங்கள்தானே!?//

இல்லை நண்பரே. அது 'சுரேஷ் கண்ணன்' என்ற பெயரில் எழுதும் இன்னொரு நண்பர். 'நான் அவரில்லை'. :-)

rajkumar said...

நண்பரே,

நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் வார்த்தை வெளியீட்டு விழாவிற்கும், அதனை தொடர்ந்த பச்சைப் பூங்கா விருந்திற்கும் வந்தேன். நீங்கள் வரவில்லை.

எப்படியிருக்கிறீர்கள்? ரஜினியை வம்பிற்கிழுத்து என்னை போன்றோரை டென்சன் செய்வதை விடமாட்டீர்கள் போலிருக்கிறது.

உங்களை விரைவில் சந்திக்க விரும்புகிறேன்.

அன்புடன்

ராஜ்குமார்

பிச்சைப்பாத்திரம் said...

அன்பு ராஜ்குமார்,

ஆம். சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டது. பெளதீக ரீதியாக ஒரு கி.மீட்டருக்கும் குறைந்த தொலைவில் வசிக்கும் நாம், இப்படி இணையம் மூலம் நலம் விசாரித்துக் கொள்வது குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை.

உடல்நலம் ஒத்துழைக்காததால் விழாவிற்கு வரமுடியவில்லை. ரஜினி பற்றி குழுமத்திலேயே உங்களின் பதிலை எதிர்பார்த்திருந்தேன். :-)

உங்கள் கைபேசி எண்ணை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

பெ. சக்திவேல் said...

நகைச்சுவையான தோரணையில் சிரத்தையான விமர்சனமாக இருப்பதோடு வாசிப்பதற்கு சுவாரசியமாகவும் இருக்கிறது.