Thursday, February 28, 2008

சுஜாதாவைப் பற்றி ஒரு எளிய வாசகனின் சில குறிப்புகள்

இதை கட்டுரை என்று சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ரங்கராஜன் என்கிற எளிய எழுத்தாளரை நான் கடந்து சென்ற தருணங்களைப் பற்றி என்னுடனேயே நான் நிகழ்த்திக் கொண்ட ஒரு அந்தரங்கமான உரையாடலின் பூர்த்தியடையாத பிரதியிது. நிச்சயம் கோர்வையாக இருக்காது. என்றாலும் எந்தவித ஒப்பனையும் பாசாங்குமின்றி பதிய முயன்றிருக்கிறேன். நான் வலைப்பக்கத்தில் எழுதி எனக்கே மறந்து போன சில வரிகளை இணைய நண்பர்கள் ஞாபகப்படுத்தி பேசும் போதெல்லாம் எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்த சுஜாதாவை சில முறை நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதும் அப்படியே.

ரங்கராஜன் என்கிற சுஜாதா 1935-ல் பிறந்தார். என்று அரசின் இயந்திரக்குரலில் அல்லாமல் "மச்சான்.. கேள்விப்பட்டவுடனே மனசே ரொம்ப கஷ்டமாயிடுச்சுடா".. என்கிற இயல்பான மொழியுடன்தான் இதை எழுத விருப்பம். பார்க்கலாம்.

()

'சுஜாதா' என்கிற அந்தப் பெயரை எப்போது முழுப் பிரக்ஞையுடன் தெரிந்து கொண்டேன் என்பதை ஞாபகச் சிடுக்குகளில் தேடினேன். கூலித் தொழிலாளி ஒருவரிடமிருந்து. மத்திய அரசின் நீர்வளத்துறை அலுவலகம் ஒன்றில் 'இடம் பிடித்து விடும்' நோக்கத்தில் நானும் ஒரு கூலியாக தற்காலிகப்பணி புரிந்து கொண்டிருந்தேன். சினிமா, நடிகைகள், பெண்களின் உடல் என்று உணவு இடைவேளைகளில் பேசிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் இடையில் மைக்டைசனின் தோற்றத்தை நினைவுப்படுத்தும் ஒரு இளைஞர்தான் என்னிடம் "சுஜாதா படிச்சிருக்கியா?" என்றார். நான் அப்போது ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் என்று பொழுதுபோக்குப் புத்தகங்களை மாத்திரமே தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன். பெண் எழுத்தாளர்கள் என்றாலே ஒவ்வாமையான ஒரு எண்ணம், அம்பை, சூடாமணி போன்றவர்களைப் படிப்பதற்கு முன்னால் இருந்தது. அதனால் "பொம்பளைங்க எழுதறதுன்னா எனக்கு அலர்ஜி. எப்பவும் மாமியார் கொடுமைகளைப் பத்தி எழுதுவாங்க" என்றேன் தட்டையாக. "இல்ல. இவரு ஆம்பளை. நாளக்கு ஒரு புக்கு தர்றேன். படிச்சுப்பாரு" என்றார்.

இன்றளவும் பேசப்பட்டிருக்கும் 'நகரம்' என்ற அந்த மகத்தான சிறுகதையை படித்தது அந்தத் தொகுதியில்தான். இதுவரை படித்துக் கொண்டிருந்ததெல்லாம் கேலிச் சித்திரங்களாக மாறி விட வாழ்க்கையின் ஆதாரமான ஒரு அனுபவத்தின் சாயலின் துளியை சுவைக்க நேர்ந்தது அந்தத் தருணத்தில்தான். என்னை முதலில் கவர்ந்தது, மொழியை மிக லாவகமாகவும் எளிமையான ஆடம்பரத்துடனும் கையாளும் அவரின் திறமைதான். பத்துவரிகளில் ஒரு தேர்ச்சியில்லாத எழுத்தாளன் விவரிப்பதை, கிட்டத்தட்ட ஒன்றரை வரியில் உள்ளடக்கத்தின் சேதாரமில்லாமல் எழுதுவது. படித்துக் கொண்டிருக்கும் போதே சம்பவங்கள் visual-ஆக நம்முன் விரிவதைக் காணும் பரவசத்தை அடைவது. உரைநடையில் விளக்காமல் உரையாடல்களின் மூலமாகவே கதையையும் காட்சியையும் நகர்த்துவது. கதை மாந்தர்களின் உணர்வுகளை அப்படியே நம் மூளைக்குள் செங்குத்தாக இறக்குவது.

பின்பு அவரின் எழுத்துக்களை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். எத்தனை விதமான எழுத்து. கணையாழியில் எழுதும் போது வேறு விதமாயும் குமுதத்தில் எழுதும் போது இன்னொரு விதமாயும் ராணியில் தொடர்கதை எழுதும் போது down-to-earth ஆகவும், கடினமான விஞ்ஞான சமாச்சாரங்களை எளிமையான மொழியில் விளக்குவது, தமிழில் அதிகம் பேரால் இன்னும் கூட தொடப்படாத விஞ்ஞானக்கதைகளை பல்வேறு சாத்தியங்களில் எழுதிப் பார்த்தது, .. எத்தனை பரிமாணங்கள்.

தனிமை கொண்டு, சில வித்தியாசங்கள், முரண், ரேணுகா, கால்கள், அரிசி, ·பில்மோத்ஸவ்... என்று எத்தனை சிறப்பான சிறுகதைகள்..

பல சிறுகதைகளில் அதன் உச்சத்தைத் தொட்ட சுஜாதாவால் நாவல் என்கிற வடிவத்தில் சாதனை படைக்க இயலவில்லை. சிறுகதைகளைப் போல் அல்லாமல் அவரின் நாவல்கள் படித்து முடித்தவுடனேயே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மூளையிலிருந்து உதிர்ந்து போகிறது. ஏன் அவரால் நாவல் வடிவத்தை சிறப்பாக கையாக முடியவில்லை என்கிற கேள்வி எழுந்தது. சுபமங்களா பேட்டியில் இதைப் பற்றி சுஜாதாவே பேசுகிறார்.

.. முக்கியமான காரணம் தொடர்கதையினுடைய வடிவம். அதனுடைய வடிவத்தில் மாட்டிக்கிட்டா அப்படித்தான் ஆகும். 'புளிய மரத்தின் கதை' போலவோ 'ரப்பர்' போலவோ ஒரு நாவலை மனசுல உருவாக்கி ஒரு இடத்துல போய் ஒரு மாசம் உட்கார்ந்து முழு நாவலையும் எழுதும்படியான சந்தர்ப்பமே எனக்கு வரல்லே. தொடர்கதை என்பது வேறு ஜாதி. அது நாவல் அல்ல. செயற்கையான உச்சக்கட்டங்கள், 'தீபாவளிக்கு ஆரம்பிச்சு பொங்கலுக்கு முடிச்சுடுங்க' என்கிற நிர்ப்பந்தம் - இது மாதிரி இலக்கிய சம்பந்தமில்லாத பல பந்தங்கள் எல்லாம் இருக்குது. அதை எழுதக்கூடாது, இதை எழுதக்கூடாது, இன்னார் படம் போடணும், அதுக்குத் தகுந்த மாதிரி விதிகள்.....

"அப்ப ஏன் தொடர்கதை எழுதுறீங்க?"

"தொடர்கதை எழுதும் போது ஒரு கதையை பல விதமான உரைநடையில் சொல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறதாக நான் நெனக்கிறேன். முழு நாவலாக நான் எழுதினது என்று சொல்லப் போனால் 'குருப்ரசாத்தின் கடைசி நாட்கள்' 'காகிதச் சங்கிலிகள்' இவைகளைச் சொல்லாம்."

" சுஜாதா என்கிற பெயர் காலம் காலமாக நிலைச்சு நிற்கும்படி சமுதாயப் பிரச்சினையை வச்சு ஒரு பிரம்மாண்டமான நாவல் - Magnum Opus எழுதணும்கிற ஆர்வம் உங்களுக்கு இருக்கா...?

"எழுத மாட்டேன். ஏன்னா பிரும்மாண்டமா எழுதறது என்பது முன்னால தீர்மானிக்கப்படறதில்லே. அதோட எனக்கு அந்த மாதிரியான ஒரு நாவலில் வாழந்து பார்த்த அனுபவம் கிடையாது. என் வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியா இருந்திருக்கு. என் வாழ்க்கையில் போராட்டங்களே இல்லே. ஏழ்மையை நான் அதிகம் பார்த்ததில்லே. வேலை தேடி அலைஞ்சதில்லே. மத்தவங்க உணர்ச்சிகளில்தான் நான் வாழ முடியுமே தவிர, அதை ஒட்டித்தான் கதை எழுத முடியுமே தவிர என் அனுபவத்தைப் பிரதிபலிக்க முடிவதில்லை. அதோட நான் ஒரு விஞ்ஞானியாக இருப்பதனால எழுதுவதே முன்ன சொன்னாப்பல எனக்கு க்ரா·ப்ட் ஆகத்தான் படுது.... (சுபமங்களா பேட்டி)

என்றாலும்.... கனவுத் தொழிற்சாலை, நிலா நிழல், எதையும் ஒரு முறை, பதவிக்காக, நில்லுங்கள் ராஜாவே போன்ற நாவல்கள் என் பார்வையில் உன்னதமானவை.

()

ஆரம்ப காலத்தில் (1963) எஸ்.ஆர்.ராஜன், எஸ்.ரங்கராஜன் என்கிற பெயர்களில் எழுதினார். குமுதத்தில் சில சிறுகதைகள் வெளிவந்த போது அப்போது அங்கிருந்த ரா.கி.ரங்கராஜன் என்ற பெயருக்கும் இவர் பெயருக்கும் குழப்பம் நேர்ந்தது. எனவே ஒரு செளகரியத்துக்காக தன் மனைவியின் பெயரான 'சுஜாதா' வில் எழுத ஆரம்பித்து அதுவே நிலைத்துப் போனது. கணையாழியில் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது இன்னொரு பெயரும் உண்டு. இவர்தான் எனக்கு மிகவும் பிடித்தமானவர். இவரின் மூலமாகத்தான் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களை மாத்திரமல்லாமல், மற்ற மாநில, நாட்டு எழுத்தாளர்களின் / பீட்டில்ஸ் போன்ற இசைக்கலைஞர்கள், இதழ்கள் போன்றவைகளின் அறிமுகம் கிடைத்தது.

........ துவக்கத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் நீர்க்குமிழ்கள் என்று (கஸ்தூரி ரங்கன் கொடுத்த) தலைப்பில் இந்தப் பகுதியை எழுத ஆரம்பித்தேன். இடைக்காலத்தில் 'பெட்டி' என்றும், இறுதியில் கடைசிப்பக்கம். முன்னூறு இதழ்களில் சுமார் நூற்றம்பதாவது எழுதியிருப்பேன். 'சுஜாதா' என்கிற popular அடையாளத்திலிருந்து விலகி தன்னிச்சையாக சுதந்திரமாக பலப்பல விஷயங்களைப் பற்றி carbon dating-லிருந்து நம்பிள்ளை வரை என்னால் கஸ்தூரி ரங்கன் தந்த சலுகையால் எழுத முடிந்தது. என் அனுபவத்தின்படி சற்றே நகைச்சுவை கலந்து ஒரு விஷயத்தை சொல்லும் போதெல்லாம் எதிர்ப்புக் கடிதங்கள் வந்தன. 'தாமரை' இதழ், கிறித்துவ இயக்கம், ராயப்பேட்டை பாலு (பாலகுமாரன்) என்று பல பேர் கோபத்துக்கு ஆளானேன். எதிர்பாராத மூலைகளிலிருந்து பாராட்டுக்களும் வந்தன. கணையாழி இரண்டாயிரம் காப்பிதான் விற்றாலும் பல பெரிய மனிதர்கள் படிக்கிறார்கள் என்பது தெரிந்தது. .....

இந்தப் பக்கங்கள் நிறைய எழுத்தாளர்களின் ஆதரவையும், எதிர்ப்பையும், விமர்சனத்தையும் சந்தித்தன. கறாரான விமர்சனங்களை பதிவதை பொதுவாக தவிர்க்கும் சுஜாதா, இந்தப் பக்கங்களில் இயல்பான எழுதின வரிகளுக்காகவும் தீவிர இலக்கிய உலகிலிருந்து நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டார்.

......... சாகித்ய அகாடமி அவார்டு திரு.சு.சமுத்திரத்துக்கு கிடைத்ததில் சந்தோஷம். எழுத்துடன் சம்பந்தப்படாத துணைவேந்தர்களுக்கும், துணி வியாபாரிகளுக்கும் போகாமல் பரிசு ஒரு எழுத்தாளருக்கு கிடைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் இந்தப் பரிசுகள் கிடைத்ததுமே எழுத்தாளர்களுக்கு ஒரு மெஸ்ஸையா பாசாங்கு வந்துவிடுகிறது. அது கருத்தட்டாக்குடி ஜமீன் அறக்கட்டளை பரிசாக இருந்தாலும் சரி, பரிசு பெற்ற உடனே தமிழ் இலக்கியத்தை உஜ்ஜீவிக்கிற வேகம் வந்து கொஞ்சம்போலும் உளற ஆரம்பிக்கிறார்கள். அண்மையில் அகிலன் நினைவு நாவல் பரிசு பெற்ற ஒரு இளம் எழுத்தாளர் ஏற்புரையில், தமிழில் ஒரே ஒரு நாவல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அது 'ஜேஜே சில குறிப்புகள்'. அதற்கு மேல் படிக்க தமிழில் வேறு ஏதும் கிடையாது, மலையாளத்தில்தான் உள்ளது என்றாராம். இந்தமாதிரி ஆசாமிகளையெல்லாம் கூட்டிவந்து டிபன் காபி பரிசு எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சமுத்திரம் கூட பத்திரிகைப் பேட்டியில் கணையாழி போன்ற பத்திரிகைகளில் வருவது இலக்கியமல்ல என்கிற ரீதியில் சொல்லியிருக்கிறார். பரிசு கிடைத்தவுடன் அதிர்ச்சியாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை......

()

"தமிழின் சிறந்த எழுத்தாக இருக்க வேண்டுமென்றால் அது நாகர்கோவிலில் இருந்து வட்டார மொழியில் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும் போலிருக்கிறது' என்று சொல்லப் போய் சர்ச்சையானது. காலச்சுவடு சிறப்பிதழில் (1993) உள்ள கட்டுரை ஒன்றின் கடினத்தன்மையை விமர்சிக்கப் போய் (தன்னிலையை கரைத்தழிப்பதில் முடிவான நிலையைக் கொண்டு வந்தது தெரியா தூய அனுபவக்களம் என்பது உறவுகளின் மெல்லிய ஜவ்வாகி விடுகிறது. - இந்தக் கட்டுரை யாருக்காக) "சுஜாதாவின் நாகரிகக்குடை" (என்று ஞாபகம்) காலச்சுவடில் இருந்து பதிலடி வந்தது.

இலக்கியத்தில் சுஜாதாவின் பெயர் தவிர்க்க முடியாததுதான் என்றாலும் தீவிர இலக்கிய உலகில் தம்மைப் புறக்கணிப்பது குறித்து அவருக்கு வருத்தம் இருந்திருப்பதாகத்தான் படுகிறது. இது பற்றி சுஜாதா சுபமங்களா பேட்டியில் கூறுவது:

....சுஜாதா என்கிற படிமம் நிறுவனத்தின் அம்சமாகி விட்டது. (Sujatha's image has become a form of establishment) சுஜாதாவைக் கண்டு கொள்ளாமல் விடுவது கூட இப்போது விமர்சனத்தில் ஒரு உத்தியாகி விட்டது. தனிமையில் பேசும் போது அந்த விமர்சகர்கள் என் கதையெல்லாம் படிக்கறாங்கன்னு தெரியுது. பல கதைகளை புகழறாங்க. அதை வெளியிடுவதில் அவுங்க தயங்கறாங்க. எது ஜனரஞ்சகமாக இருக்குதோ அது இலக்கியமாக இருக்க முடியாது என்ற அசைக்க முடியாத கோட்பாடு அவுங்க கிட்ட இருக்கு.... (சுபமங்களா பேட்டி).

இதனாலேயே பிற்காலத்தில் அவர் விமர்சனங்களை பெரும்பாலும் குறைத்துக் கொண்டாரோ என்று தோன்றுகிறது. சங்ககால கவிதைகளை ஆங்கிலத்தில் பரவச்செய்த ராமானுஜன் முதற்கொண்டு புறநானூற்றுக்கவிதைகளின் எளிய அனுபவம், திவ்வியப்பிரபந்தம், திரைப்படம், வைணவம், மருத்துவம் என்று அனைத்து சாத்திய தலைப்புகளிலும் எழுதிய அவரைக் கண்டு பிரமிக்கவே தோன்றுகிறது.

()

இடையில் புதிதாக எழுத வருகின்றவர்களின் தயக்கங்களை விலக்கி சில ஆதாரமான வழிமுறைகளைச் சொல்லி உற்சாகப்படுத்துவதிலும் சளைக்காதவர்.


* தினம் பத்து நிமிஷமாவது படியுங்கள். தினம் படிக்க வேண்டியது முக்கியம்
* மனசுக்குள் படியுங்கள்
* ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம்
* எல்லோருடைய முதல் புத்தகங்களை படியுங்கள். இருபது விழுக்காடு ·பிக்ஷன், எண்பது நான்-·பிக்ஷன்
* படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை வைத்திருங்கள்
* வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் க்யூ வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்
* நூலகங்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.

(கணையாழி 1994)

()

அவரைக் கண்டு பிரமிக்கும் அதே வேளையில் சில விமர்சனங்களும் உண்டுதான்.

(1) பொதுவாக பல விஷயங்களில் முற்போக்காக சிந்திக்கும் அவர், ஜாதி விஷயத்தை மாத்திரம் ஏன் கடக்க முடியவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தான் ஒரு வைணவன் என்பதை அடிக்கடி அடிக்கோடிட்டு எழுதும் கட்டுரைகள் எனக்கு எரிச்சலையே ஏற்படுத்தின. ஒருவன் தன் அடையாளங்களைத் துறப்பது சுலபமல்ல என்றாலும், குழுக்கள் என்கிற விஷயத்தை தாண்ட முடியாமல் மனிதக்கூட்டம் ஜீவிக்க இயலாது என்பது சமூகவியல் உண்மை என்றாலும், பல்வேறு உணர்ச்சிகளில் கூடுபாயும் ஒரு எழுத்தாளன், சமூகத்தில் வெறுக்கப்பட்ட ஒரு விஷயத்தை புற்க்கணிக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைவு கூர்வதையும் அதன் மூலம் பெருமை கொள்வதையும் காண ஒவ்வாமையாகவே இருந்தது. (இது தலித் எழுத்தாளர்கள் முதற்கொண்டு எல்லோருக்குமே பொருந்தும்.)

(2) உலக இலக்கியங்களின் பரிச்சயமிருந்தும், எழுதக்கூடிய சாத்தியமும் திறமையும் இருந்தும் ஏன் இந்த மனிதரால் வெகுஜன பத்திரிகைகளிடம் பிரதானமாக தன்னை ஒப்படைத்துக் கொண்டதை தவிர்த்து சிறந்த படைப்புகளைத் தர இயலவில்லை. பொருளாதார நிர்ப்பந்தமா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. பின்பு ஏன்?

(3) நல்ல சினிமாக்களை சிலாகித்தும், மோசமான சினிமாக்களை கோபமாக கிண்டலடித்தும் கட்டுரை எழுதினவர் பிற்பாடு வணிக இயக்குநர்களோடு மாத்திரமே பணிபுரிந்தது ஏன்? மீடியா டீரீம்ஸ் மூலம் பாரதி, குட்டி போன்ற சில முயற்சிகளைத் தவிர நல்ல சினிமாக்களை உருவாக்குவதில் ஏன் தீவிரமாக பங்கு கொள்ளவில்லை.

()

வெகுஜன பத்திரிகைகளுக்கும் சிறுபத்திரிகைகளும் இடையில் ஒரு பாலமாக ஒரே உதாரணமாக இருந்த (அவரின் மொழியில் "இலக்கியக் கடத்தல்") சுஜாதா ஏற்படுத்தின வெற்றிடத்தை இனிமேல்தான் யாராவது நிரப்ப வேண்டும்.

suresh kannan

7 comments:

பிரேம்ஜி said...

அவரது ஆன்மா சாந்தியடைவதாக

Anonymous said...

மிகவும் நேர்மையான மதிப்பீடு. இதற்கு சுஜாதாவும் உங்களுக்கு
உதவியிருக்கிறார்.ஒரு கட்டத்தில்
நீங்கள் அவர் எழுத்துக்களுக்கு அப்பால், அடுத்த நிலை எழுத்துக்களை
தேட வைத்திருப்பது குறித்து அவர்
நிச்சயம் மகிழ்ந்திருப்பார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு சுரேஷ் கண்ணன்,

மரத்தடி மின்னஞ்சலில் படித்துவிட்டேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.
http://jothibharathi.blogspot.com

மயிலாடுதுறை சிவா said...

சுரேஷ்

அவர் மீது வைத்து இருக்கும் விமர்சனங்கள் மிக மிக நியாமானவை...

மயிலாடுதுறை சிவா..

Anonymous said...

suresh-
i suggets you, it is better to do your wife's jacket hook( sorry, the words are not mine but your's) rather than writing film criticism or reading my articles. mind your words friend.i am your fellow writer. give and get respect.
try to write your own views on the films i wrote about. yamuna rajendran

i am posting this as anonymous as because i do not have an id with this site

பிச்சைப்பாத்திரம் said...

அன்பார்ந்த யமுனா ராஜேந்திரன்,

இது நீங்கள் இட்ட பின்னூட்டம்தான் என்று நம்புகிறேன். இல்லையென்றாலும் பரவாயில்லை. நகைச்சுவையாக எழுத வேண்டும் என்கிற ஒற்றைப் பரிமாணத்தில் இந்தப் பதிவில்[http://pitchaipathiram.blogspot.com/2007/08/blog-post_30.html]எழுதப்பட்ட வார்த்தைகள் உங்களை புண்படுத்தியதை அறிய எனக்கும் வருத்தமாய் இருக்கிறது. என்னுடைய பதிவை மீண்டும் இப்போது சாவகாசமாக படித்துப் பார்க்கும் போது அதீதமாய் தெரிகிறது. மன்னிக்கவும்.

Anonymous said...

எனக்கும் சுஜாதாவின் மேல் விமர்சனம் நிறைய உண்டு. ஆனால் அது எப்படி என்றால் சமுத்திரத்தின் முன் நின்று கொண்டு 'சே! இது மட்டும் உப்பாக இல்லாமல் இருந்தால், மக்களுக்கு குடிநீர் பிரச்சினையே இருக்காதே' போன்ற குற்றசாட்டுகள்தான்.

நீங்கள் குறிப்பிடும் சாதீய குற்றசாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. எனக்கு தெரிந்து அவர் எந்த இடத்திலும் தான் இன்ன சாதியை சேர்ந்தவன். அதனால் தான் உயர்ந்தவன் என்ற நிலையை வெளிப்படுத்தியதில்லை.

வைணவம் என்பது சாதி இல்லை. அது ஒரு தத்துவ மரபு. அய்யங்கார், நாயுடு, நாயக்கர், முதலியார், சௌராஷ்டிரர் போன்ற பலரும் வைணவ மரபை போற்றி வளர்த்தவர்கள்தான். இன்றும் வளர்த்து கொண்டிருப்பவர்கள்தான்.

ஒரு கடவுள் மறுப்பாளர் தனது எழுத்துகளில் முன்வைக்கும் சித்தாந்தகளை ஏற்று கொள்ளும் நீங்கள், ஒரு கடவுள் நம்பிக்கையாளரின் எழுத்தை மட்டும் சாதீய வட்டத்தில் குறுக்குவது ஏனோ?