Wednesday, February 13, 2008

பத்து குறும்படங்கள் இணைக்கப்பட்ட ஒரு திரைப்படம்

தமிழ்த் திரைப்படங்களில் பரிசோதனை முயற்சி என்ற அளவில் உருவாக்கப்பட்ட படைப்புகள் சொற்பமே. அகிரா குரோசாவின் 'ரஷோமான்' பாதிப்பில் வந்த 'அந்த நாள்', (பாடல்களே இல்லாமல் வந்த படம் என்கிற வகையிலும் இதை சேர்க்கலாம்), ஒரு பொம்மையைச் சுற்றி நிகழ்வுகள் பின்னப்பட்ட எஸ்.பாலச்சந்தரின் 'பொம்மை, மருத்துவமனைக் களத்திலேயே முழுத் திரைப்படமும் சுற்றுகிற ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்', பாத்திரங்களின் அகவுணர்ச்சி வலுவாக சித்தரிக்கப்பட்ட ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்', முன்பாதி ஒரு கதையும், பின்பாதி இன்னொரு கதையுமாக பாலசந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்', நடுத்தர வர்க்கம் x அதிகாரம், முதுமை x சமூகம் என்கிற குறியீட்டுத் தன்மைகளோடு அமைந்த பாலுமகேந்திராவின் முறையே வீடு, சந்தியா ராகம், ஒரு நாளின் நிகழ்வுகளை மாத்திரமே பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'கல்யாண காலம் (?), வசனங்களே இல்லாமல் வந்த கமலின் 'பேசும் படம்', Sliding Doors பாதிப்பில் வந்த ஜீவாவின் 12B போன்ற படங்கள் என்னுடைய பார்வையில் பரிசோதனை முயற்சிகளாக சட்டென்று நினைவுக்கு வருபவை. இவைகளை ஏதோ ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்காக மாத்திரமே குறிப்பிடலாமே ஒழிய முழுக்க முழுக்க பரிசோதனை முயற்சி என்று கூற இயலாது.

பொதுவாக அனைத்து தமிழ்த் திரைப்படங்களையும் ஐந்து, ஆறு வகைகளில் அடக்கி விடலாம். 'காதல்' என்ற வகையில் மாத்திரமே எழுபத்தைந்து சதவீத படங்கள் அடங்கிவிடும் என்று தோன்றுகிறது. வெற்றி பெறும் பார்முலாக்களையே விடாப்பிடியாக சுற்றி வருகிறது தமிழ்த்திரையுலகம். சர்வதேச கவனத்தை பெற்ற இந்தியத் திரைப்படங்கள் வங்காளம், கேரளம், கன்னடம் போன்ற நிலப்பிரதேசங்களிலிருந்து மாத்திரமே வெளிவந்தன. " ஆதியில் முதலில் தோன்றிய குரங்கு தமிழக் குரங்காகத்தான் இருக்க முடியும்" என்று தமிழ் ஆய்வாளர்களை பகடி செய்த புதுமைப்பித்தனின் கூற்றுப்படி 'கல் தோன்றி... என்று பீற்றிக் கொள்கிற தமிழினம் பெரும்பாலான துறைகளைப் போலவே திரைப்பட உருவாக்கத்திலும் பின்தங்கி நிற்கிறது என்பதுதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.

()

தமிழ்த்திரையுலகத்தின் முன்னோடியான இந்தி திரையுலகமும் இதே பாணியில்தான் இயங்கிக் கொண்டிருந்தது என்றாலும் சமீப கால விழிப்பில் மாற்று திரைப்படங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ராம்கோபால் வர்மா, மதூர் பண்டார்க்கர், சஞ்சய் லீலா பன்சாலி, அனுராக் காஷயப், ராஜ்குமார் சந்தோஷி, விஷால் பரத்வாஜ் போன்ற திறமையான இயக்குநர்கள் இந்தி சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழிலும் சேரன், பாலா, அமீர், செல்வராகவன், கெளதம் மேனன் போன்ற நவீன அடையாளங்கள் இருந்தாலும் இவர்களால் வணிக சினிமாவிலிருந்து முற்றிலுமாக விலகி தங்களின் படைப்பை தர முயற்சி செய்யவில்லை.

இந்தி மொழியில் (with English sub-titles) நான் சமீபத்தில் பார்த்த படம்.. மன்னிக்கவும் படங்கள் Dus Kahaniyaan. ஆறு இயக்குநர்கள் இயக்கிய பத்து குறும்படங்கள் நறுக்கி அடுக்கி வைக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் போல் ஒன்றன் பின் ஒன்றாய் உள்ளன. 'Paris I Love you' என்கிற 21 படங்களின் தொகுப்பு இதற்கு முன்னுதாரணமாய் இருக்கக்கூடும் என்றாலும் இந்தியத் திரைப்படங்ளைப் பொறுத்தவரை இதுவே முதன்முயற்சி என்று நினைக்கிறேன். (சமீபத்தில் வெளிவந்த அடூர் கோபாலகிருஷ்ணன் என்கிற ஒரே இயக்குநரின் உருவாக்கத்தில் வெளிவந்த 'நாலு பெண்கள்' திரைப்படத்தையும் இதனோடு சம்பந்தப்படுத்தி யோசிக்கலாம்).

dus

Dus Kahaniyaan-வில் ஏழு அல்லது எட்டு படங்கள் சிறப்பாய் உருவாக்கப்பட்டுள்ளன. அதை ஒவ்வொன்றையும் நான் சாவகாசமாக எழுதிக் கொண்டிருந்தால் நீங்கள் விசைப்பலகையின் delete key-ஐ மிகுந்த பிரியத்துடன் தொடக்கூடிய அபாயமிருப்பதால் அவைகளில் சிறந்த இரண்டு படங்களைப் பற்றி மாத்திரம் எழுத விருப்பம்.

()

(1) Zahir - (இயக்குநர் சஞ்சய் குப்தா)

காதலில் ஏற்படுகிற தோல்வியால் விரக்தியடைந்து ஊர்மாறி புதிய இடத்தை அடைகிற ஒருவன் (மனோஜ் பாஜ்பாய்) சக இருப்பிடவாசியான ஒரு பெண்ணிடம் (தியா மிஸ்ரா) இயல்பானதொரு சிநேகத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அவளின் ஆளுமையில் கவரப்படும் அவன் ஒரு தடுமாற்ற தருணத்தில் அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன் காதலை வெளிப்படுத்த அவள் அதை ஏற்க மறுத்து அவனைப் புறக்கணிக்கிறாள். அவமானப்படுத்தப்பட்டதாக உணரும் அவன் மனவேதனையில் குடிப்பழக்கத்தை அதிகரித்து நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஒரு பாருக்கு செல்லும் போது, அங்கே நடனமாடுபவள் (bar dancer) தன்னை புறக்கணித்த பக்கத்துவீட்டுக்காரியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். தன்னுடைய இருப்பிடத்திற்கு சென்று காத்திருந்து அவள் வீடு திரும்பியதும் அவள் மீது பாய்ந்து, அவள் தடுத்து ஏதோ கூற முயல்வதை கவனிக்காமல் வன்புணர்ச்சி கொள்கிறான். வெற்றிகரமான அந்தக் காலையில் அவன் கண்விழிக்கும் போது அவள் விட்டுச் சென்ற குறிப்பொன்று சொல்கிறது, அவள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவள் என்று..........

இந்தப் படத்தின் sub-text எனக்கு உணர்த்துவது.... சக மனுஷியாக அவளின் புறக்கணிப்பை கூட வேதனையுடன் ஏற்றுக் கொள்ளும் அவன், அவள் ஒரு பாலியல் தொழிலாளி என்பதை அறிந்தவுடன் அவளின் சம்மதமில்லாமல் மிருகம் போல் பாய்வதிலிருந்து விளிம்பு நிலை மனிதர்களை மனிதப்பிறவிகளாகக்கூட மதிக்க வேண்டியதில்லை என்பதை இந்தச் சமூகத்தின் பொதுப்புத்தி நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதே.

(2) Rice Plate - (இயக்குநர் ரோஹித் ராய்)

பம்பாயிலிருந்து புனேவிற்கு பயணம் மேற்கொள்ளும் மிகுந்த ஆச்சாரமான மனோபாவத்தை உடைய அந்த இந்துப் பெண்மணி (ஷபனா ஆஸ்மி) இசுலாமியரின் டாக்சியில் பயணம் செய்வதை கூட விரும்பாத அளவிற்கு மதப்பற்று கொண்டவர். அவசர பதட்டத்தில் பணப்பையை வீட்டிலேயே விட்டுவிடும் அவர் இந்து டாக்சி டிரைவருக்காக காத்திருக்கும் பிடிவாதத்தில் தாமதமாகி ரயில் வண்டியை தவறவிடுகிறார். (டாக்சியில் இருந்து இறங்கின பிறகுதான் தெரிகிறது, இந்து மத சாமிப்படங்கள் மாட்டியிருந்தாலும் ஓட்டுநர் ஒரு இசுலாமியர் என்பது). தனக்கு உதவ வரும் ஒரு இசுலாமிய முதியவரையும் (நஸ்ருதீன் ஷா) வெறுப்போடு புறக்கணிக்கிறார்.

அடுத்த வண்டிக்காக இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் சர்க்கரை நோயாளியான அவருக்கு பசியில் உயிர் போகிற வேதனை ஏற்படுகிறது. கையில் இருக்கிற சொற்ப காசில் உணவுத்தட்டை வாங்கி மேஜையில் வைத்து விட்டு கையை கழுவ சென்று திரும்பும் போது தன்னுடைய சாப்பாட்டை அந்த இசுலாமிய முதியவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அதிர்ச்சியோடு பார்க்கிறார். உயிர் போகிற பசியில் தன்னுடைய ஆச்சாரங்களையெல்லாம் மறந்து போகிற அவர், முதியவரிடமிருந்து தட்டைப் பிடுங்கி ஆவேசத்தோடு உண்கிறார். எதிரிலிருக்கும் முதியவர் புன்னகையோடு இதை ஏற்றுக் கொள்கிறார்.

சாப்பிட்டுவிட்டு ரயில் வரும் பிளாட்பாரத்திற்கு திரும்பியவர் தன்னுடைய உடமைகளை உணவகத்திலேயே விட்டுவிட்டு வந்திருப்பதை உணருகிறார். அவசரமாக ஓடிப்போய் மேஜையின் கீழ் பத்திரமாக இருக்கிற பைகளை எடுத்து நிமிர்பவருக்கு தன்னுடைய உணவுத்தட்டு அப்படியே சாப்பிடப்படாமல் இருப்பதை காண முடிகிறது. அவருடைய ஆச்சாரமான மனம் சற்றே நெகிழ்கிற ஒரு குறியீட்டுக் காட்சியுடன் இந்தப் படம் நிறைகிறது.

இந்தப்படம் சற்யே நாடகத் தொனியுடன் அமைந்திருக்கிறது என்றாலும் ஷபனா, நஸ்ருதீன் போன்ற திறகைமிக்க கலைஞர்களின் பிரமிப்பை ஏற்படுத்தும் பங்களிப்பின் மூலம் சிறந்ததொரு கலைப்படைப்பாகிறது. கலையில் வெளிப்படையான பிரச்சாரம் ஏற்புடையதில்லை என்பதில் எனக்கும் உடன்பாடு என்றாலும் சமூக மனங்களில் உறைந்திருக்கும் பல அழுக்குகளை இம்மாதிரியான படங்கள் ஒரு துளியையாவது சுரண்டும் என்றால் அது வரவேற்கத்தகுந்ததே.

()

ஒரு வேளை தமிழ் இயக்குநர்களுக்கும் நல்ல புத்தி வந்து தமிழின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கி தொகுத்து தரும் ஒரு திட்டத்திற்காக (பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' மாதிரி) ஒருவேளை என்னை அணுகி (கற்பனைக்கு எல்லைதான் ஏது) சிறுகதைகளை தேர்வு செய்து தரச் சொன்னால் என்னுடைய தேர்வு பின்னால் வரும் பட்டியலாக இருக்கக்கூடும். இந்தக் கதைகளை காட்சி ஊடகத்திற்கு மிகப் பொருத்தமானதா, அல்லவா என்கிற கோணத்தில் அதிகம் யோசிக்காமல் (ஆனால் அப்படி யோசிக்க வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறை) எனக்குப்பிடித்த, படமாக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிற சட்டென்று நினைவுக்கு வந்த பத்து சிறுகதைகளை தந்துள்ளேன். பிறிதொரு சமயத்தில் இதை நீட்டிக்கவும் விருப்பம்.

ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்
உயரமாக சிவப்பாக மீசை வெச்சுக்காமல் - ஆதவன்
·பிலிமோத்ஸவ் - சுஜாதா
உள்ளும் புறமும் - வண்ண நிலவன்
அந்தரங்கம் புனிதமானது - ஜெயகாந்தன்
கிறுக்கல் - லா.ச.ராமாமிருதம்
புலிக்கலைஞன் - அசோகமித்திரன்
தீட்டு - அழகிய பெரியவன்
ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்

()

காட்சி ஊடகத்திற்கு தோதான, உங்களுக்கு சிறந்ததாக தோன்றும் சிறுகதைகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.

suresh kannan

4 comments:

Anonymous said...

//ராம்கோபால் வர்மா, மதூர் பண்டார்க்கர், சஞ்சய் லீலா பன்சாலி, அனுராக் காஷயப், ராஜ்குமார் சந்தோஷி, விஷால் பரத்வாஜ் //

பன்சாலி? சான்சே இல்லை... வேலைக்காகமாட்டார்..

//உயரமாக சிவப்பாக மீசை வெச்சுக்காமல் - ஆதவன்//

இது ரொம்ப சேலஞ்சிங்... கிட்டதட்ட முடியவே முடியாதுன்னு கூடச் சொல்லலாம். 90 சதவீதக் கதை, அந்தப் பொண்ணோட மனசுக்குள்ளே நடக்குது... அதை வ்சனம் மூலமா சொன்னா படு செயற்கையா இருக்கும். விஷுவலா காட்டறது ரொம்ப கஷ்டம்.. அப்படியே முயற்சி பண்ணாலும் பாக்கிறவனுக்குப் புரியாது... பார்த்தவன் கேக்கிற முதல் கேள்வியே, ' இந்தப் பொண்ணு லூசோ' ன்னுதான் இருக்கும்.

********

என்னோட தேர்வு ( சட்டென்று நினைவுக்கு வருவது )

காற்று - சுஜாதா
ரட்சகன் - இரா.முருகன்
ஆயுதம் - மாலன்
சுடர் - களந்தை பீர்முகம்மது
நாயனம் - ஆ.மாதவன்
கன்னிவாடி - க.சீ.சிவகுமார்
சின்னச் சின்ன வட்டங்கள் - பாலகுமாரன்
சிவசங்கரி - ஸ்டெப்னி
நாயகன் - ம.வே.சிவகுமார்

Santhosh Guru said...

மதுர் பண்ட்டார்க்கரும், ராஜ்குமார் சந்தோஷியும் இந்தி சினிமாவை எந்த தளத்திற்கும் நகர்த்தவில்லை. எல்லாரும் வெவ்வேறு அச்சில் ஒரே முறுக்கை தான் பிழிந்துக் கொண்டிருக்கிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலி பற்றி சொல்லத் தேவையே இல்லை. பாலிவுட்டின் விஜய.டி.ராஜேந்தர்ன்னு சொன்னா, அது ராஜேந்தருக்குத்தான் கேவலம். ஆனால் இவர்களுக்கு பக்க பலமாக தொலைக்காட்சி ஊடகமும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் இருக்கிறது. அதனால் வேறு தளம், பேரலல் சினிமா, ஆல்டர்னேட்டிவ் சினிமா என்று இவர்கள் பெயர் அடிபடுகிறது.

இந்தி சினிமாவுலகில், No Smoking, Bheja Fry(ஃப்ரெஞ்சு படத்தின் காப்பி என்றாலும் கூட), Khosla ka Ghosla, Johnny Gaddar, Manorama 6 Feet Under போன்ற படங்கள் வருகிறது என்றால் தமிழில் பருத்திவீரன், மொழி, கற்றது தமிழ், சென்னை 600028, எவனோ ஒருவன், பொல்லாதவன் போன்ற படங்கள் வரத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தி சினிமாவில் இந்திய கிராமத்தை அல்லது அதில் உள்ள மக்களை மையமாக வைத்து சமீபத்தில் வந்த படங்கள் (ஓம்காரா தவிர) என்ன என்று எண்ணி பார்த்தால் ஏமாற்றமே. இந்திய மக்களின் முக்கியமான பிரச்சனையான காதலும் அதை சார்ந்த கவலையும் தான் தமிழ் சினிமாவை போல் இந்தி சினிமாவுக்கும் தீனி. இந்தி சினிமா முன்னோடி அல்ல. எல்லாம் ஒரே குட்டை தான்.

RVs said...

தஸ் கஹாநியான் படம் நானும் பார்த்தேன். பிரமாதமாக எனக்கு படவில்லை. டைம் பாஸ், அவ்வளவுதான்.

ஆனால் உங்கள் சிறுகதை லிஸ்ட் (10hot தளத்தில் பார்த்தேன்) என்னை மிகவும் கவர்ந்தது. நானும் ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்! http://koottanchoru.wordpress.com/2009/05/29/சினிமாவுக்கு-ஏற்ற-தமிழ்/

உண்மைத்தமிழன் said...

சுரேஷ் ஸார்..

அருமையான அறிமுகம்.

பார்க்கக் காத்திருக்கிறேன்..

பிரபஞ்சனின் 'அப்பாவின் வேஷ்டி' மற்றும் புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்' - இவை இரண்டையும் குறும்பட லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம்..