Tuesday, January 15, 2008

நானும் புத்தகக் கண்காட்சியும் சில எழுத்தாளர்களும்

இரண்டு மூன்று நாட்களாக கை நடுக்கம் கொண்டிருந்தது. போதைப் பொருள் உபயோகிப்பாளன் அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியின் ஆரம்ப நிலை போல் உணர்ந்தேன். இந்த வருடம் புத்தக கண்காட்சிக்கு போகவே கூடாது / எந்தப் புத்தகத்தையும் வாங்கக்கூடாது என்று முடிவு செய்ததிலிருந்து, மறுபுறம் சென்றே ஆக வேண்டும் என்று என் ஆல்டர் ஈகோ எனக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டேயிருந்தது. 'சரி புத்தக வாசனையை மாத்திரம் முகர்ந்துவிட்டு திரும்பி விடலாம்' என்று சமாதானம் செய்து கொண்டு ஒரு வழியாக இன்று கீழ்ப்பாக்கத்திற்கு (!) கிளம்பினேன். என்னை மகிழ்ச்சிப் படுத்தும் வகையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. போன முறை 'காணும் பொங்கலன்று' சென்று விட்டு இலவச தொலைக்காட்சி வாங்க முண்டியடிக்கும் கூட்டத்தில் சிக்கியவன் போல் தவித்துப் போனேன்.

பொதுவாகவே எனக்கு கூட்டம் என்றால் அலர்ஜி. எனக்கு திருமணம் நடந்த நாளன்று கூட பக¦ல்லாம் உறவினர் கூட்டத்தில் சிக்கி அவஸ்தைப்பட்ட அனுபவத்தில், இரவன்று "உள்ள கூட்டமா இருக்காதுல்ல" என்று கேட்டுவிட்டு பிறகை நாக்கை கடித்துக் கொண்டேன்.

()

அரங்கினுள் நுழைவதற்கு முன் வலது, இடது புறங்களில் வரிசையாக வண்ண விளம்பர பலகைகள். நடிகர்களின் பந்தாக்களுக்கு எந்தவித குறைச்சலுமில்லாமல் எழுத்தாளர்களின் கவிஞர்களின் பிரம்மாண்ட புகைப்படங்கள். 'பில்லா' திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் ஒன்று போல் கவிப்பேரரசு வைரமுத்துவும் 'குளிர் கண்ணாடி' அணிந்து கொண்டு விநோதமாக காட்சியளித்தார். பார்வையாளர்கள் உள்ளே நுழைய நிறைய வாசல்களை ஏற்படுத்தி வைத்திருந்ததும், ஒவ்வொரு நுழைவிலும் அந்தப்பகுதியில் அமைந்திருக்கின்ற பதிப்பகங்களின் பட்டியலை வைத்திருந்ததும் வசதியாக இருந்தது. எந்தவொரு வரிசையிலும் மனம்மாறி அடுத்த வரிசையை சென்றடைய இடைவெளிகள் ஏற்படுத்தியிருந்ததும் இன்னொரு வசதியான ஏற்பாடு. வளப்பமான சில பெண்களை அதிகம் நோட்டமிடாமல் 'நாகரிகமானவனைப்' போல் செல்வது சற்றே சிரமமான காரியமாக இருந்தது.

எல்லாக் கடைகளையும் ஒரு 'பறவைப் பார்வையில்' பார்க்கலாம் என முடிவு செய்தேன். மக்கள் எந்தமாதிரியான புத்தகங்களை அதிகம் விரும்பி வாங்குகிறார்கள் என்றொரு 'சர்வே' எடுத்தால் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. 'அன்னம்' பதிப்பகத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் நின்று கொண்டிருந்தார். பொதுவாக சினிமா பிரபலங்களை முறையான அறிமுகம் இல்லாமல் சென்று பேசுவது எனக்கு இயல்பில்லாத ஒன்று. ஆனால் அவரே என்னைப் பார்த்து மந்தகாசமாக புன்னகை செய்ததால், "உங்கள் திரைப்படங்களை தொடர்ந்து கவனிக்கிறேன். ஒரு சிறுவிமர்சனம் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்வீர்களோ" என்றேன். "சொல்லுங்க ஐயா" என்றார் கனிவாக. அந்த தைரியத்தில் "உங்களின் படங்களில் பொதுவாக நிறைய இரைச்சலாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் தேவையேயின்றி உரக்கப் பேசுகிறார்கள் அல்லது கத்துகிறார்கள். இது என்னை அசெளகரியமாக உணரச் செய்கிறது" என்றேன். "உங்களுக்கு எந்த ஊர்" என்றார். "சென்னைதான்"

"என்னுடைய படங்களில் வருகிறவர்களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள். அவர்களின் பேச்சு அப்படித்தான் இருக்கும்" என்றார் சற்றே ஆவேசமாக. "இல்லீங்க. நான் அதச் சொல்லல. அத என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா செயற்கைத்தனமாக கத்தறாங்களே" என்றதற்கு "எங்கே ஒரு உதாரணம் சொல்லுங்க" என்றார். நான் தொலைக்காட்சியில் 'ஒன்பது ரூபாய் நோட்டு" திரைப்படக்காட்சிகளில் பார்த்த அர்ச்சனா நடித்த ஒரு காட்சியை சொன்னேன். "நான் சொன்னதுலயே எல்லாப் பதிலும் இருக்குது. உங்களுக்குப் புரியல. நீங்க இதுவரைக்கும் பார்த்த தமிழ் சினிமாவ வெச்சுக்கிட்டு என் படத்த புரிஞ்சுக்க முடியாது" என்றார். நான் சர்வதேச திரைப்படங்களை பார்ப்பவன் என்பதை அவருக்கு உணர்த்திவிட்டு, என் கேள்வியை சற்றே மாற்றி மீண்டும் கேட்க அவரும் சளைக்காமல் முந்தைய பதிலையே சொன்னார். "இல்லீங்க. நான் டெக்னிக்கலா....." என்றவுடன் குறுக்கிட்டு "சினிமாவில் டெக்னிக்கே கிடையாது" என்றார் அதிரடியாக. எங்கள் இருவருக்குள்ளும் ஏதோ "மொழிப் பிரச்சினை" இருப்பதை உடனடியாக உணர்ந்தவனாக அவரிடமிருந்து புன்னகையுடன் அவசரமாக விடைபெற்றுக் கொண்டேன்.

()

கை நடுக்கம் அதிகமானதால் அதை குறைப்பதற்காக சில சிற்றிதழ்களையும் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். 'எனி இந்தியனில்' ஹரன்பிரசன்னா தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஜெயகாந்தன் புத்தகங்களும் ஆனந்தவிகட பதிப்பக புத்தகங்களும் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதை கவனிக்க முடிந்தது. அவர் ஆசுவாசமடைந்தவுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிரசன்னா சில முக்கியமான எழுத்தாளர்களின் அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். மிக இயல்பாக உரையாடின யுவன் சந்திரசேகரிடம், 'கதைக்குள் கதை' என்று அவர் எழுதுகிற பாணி எனக்கு பிடித்திருப்பதை தெரிவித்தேன்.

மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த இரா.முருகனிடம் செலவழித்த சுமார் 15 நிமிடங்கள் உபயோகமானதாயிருந்தது. .. வலைப்பதிவு உலகம், ராயர் காப்பி கிளப், ஜெயமோகனின் சமீபத்திய கட்டுரைகள், காலத்தைக் கடந்து நிற்கும் சில சிறுகதைகள், அரசூர் வம்சத்தின் மொழிபெயர்ப்பு, தேவதாசிகள்.... என்று ஒரு மினி ரவுண்டு வந்தாகிவிட்டது. அவரிடம் நான் பேசினதின் சுருக்கமான அம்சம் 'We miss you'. இணையத்தில் மீண்டும் தீவிரமாக இயங்கும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறுகதை ஆசிரியர்களில் மிக முக்கியமானவராக அவரைப் பார்க்கிறேன். சுஜாதாவை சற்றே நினைவுப்படுத்தும் ஆனால் வேறு தளத்தில், மொழியில் இயங்கும் அவரின் சிறுகதைகள் -சமீப கால கட்டத்தில் - நிறைய வெளிப்படாதது நமக்கு இழப்பே. "நாவல் என்கிற பெரிய வடிவத்தில் கை வீசி நடந்த பிறகு, சிறுகதை என்கிற குறுகிய வடிவத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது சிரமமாய் இருக்கிறது. பார்க்கலாம்" என்றார்.

()


பிறகு வந்தார்கள் சுரேஷ் கண்ணனும், வ.ஸ்ரீனிவாசனும். இணையக்குழு மூலமாக கிடைத்த சமீப நண்பர்கள். இதில் சுரேஷ் கண்ணன் 'உயிர்மை'யில் இளையராஜா இசை குறித்து எழுதிய கட்டுரை வெளியான போது 'நீங்கள் எழுதியதா' என்று என்னை பலர் விசாரித்தார்கள். பெயர் குழப்பம். 'வேணு வனம்' என்று சமீப காலமாக எழுதிவரும் இவரின் வலைப்பதிவில் பிரத்யேகமான சுவையுடன் கூடிய நகைச்சுவைக் கட்டுரைகளை வாசிக்கலாம். முதல் சந்திப்பிலேயே நீண்ட நாட்கள் பழகினவரைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி விட்டார். வ.ஸ்ரீனிவாசன் 'பிரமிள்' குறித்து எழுதிய கட்டுரை ஒன்று சமீபத்திய 'உயிர் எழுத்து'வில் பிரசுரமாகியிருக்கிறது.

சூத்ரதாரி என்கிற எம்.கோபாலகிருஷ்ணனிடம் சற்று நேரம் பேச முடிந்தது. மிக எளிமையான அவரிடம் போன வருட உயிர்மை விழாவில் சுதேசமித்திரனின் நாவல் குறித்து அவர் ஆற்றின அறிமுக உரை மிகச்சிற்ப்பாக இருந்ததை நினைவுகூர்ந்தேன். அவரின் படைப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும்படியும் இணையத்தில் எழுதும்படியும் பிரசன்னா கேட்டுக் கொண்டதற்கு உடனே ஒப்புக் கொண்டார். சிற்றிதழ்களில் மாத்திரம் அறியப்பட்டிருக்கும் குறுகிய வட்டத்தில் இயங்கும் எழுத்தாளர்களை இணையச் செயல்பாடுகளில் ஈடுபட வைப்பதின் மூலம் வேறு வகை வாசகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற பிரசன்னாவின் திட்டத்தில் எனக்கு உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது.

()

ஜெயமோகனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் சுகா. "ஓ... பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்தானே" என்று அவர் என்னுடைய வலைப்பதிவின் பெயரோடு கூறியது ஆச்சரியமாக இருந்தது. கண்களை focus செய்து கொண்டு என்னை அவர் கூர்ந்து கவனித்த போது, சமீபகாலமாக அவரின் இன்னொரு பக்கமான நகைச்சுவை கூடின எழுத்தை அறிந்து கொள்ள முடிந்த காரணத்தினால் "என்னைப் பற்றி என்ன கிண்டலான வரி இப்போது அவர் மனதில் ஓடுகிறதோ' என்று தேவையில்லாத கலக்கம் ஏற்பட்டது. ஜெயமோகன் என்றாலே மிக கடுமையான மொழியுடன் தீவிர இலக்கியப் பரப்பில் இயங்குபவர் என்று என்னுள் ஏற்பட்டிருந்த பிம்பம், அவருடைய சமீபத்திய கட்டுரைகளினால் சிதைந்து போனது. சற்றே இளைப்பாறிக் கொள்ள இவ்வாறு எழுதுகிறாரோ என்று தெரியவில்லை. என்றாலும் இவ்வாறு தன்னுடைய பிம்பத்தை தானே சிதைத்து அல்லது உருமாற்றிக் கொள்வதென்பது இன்றைய பின்நவீனத்துவ காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனுக்கு மிக தேவையான ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

எஸ்.ராமகிருஷ்ணனிடம் 'தமிழ் வலைப்பதிவாளர்கள்' குறித்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பற்றி கேட்டேன். "சுமார் 15 நிமிடம் பேசினதை எவ்வாறு எடிட் செய்து போட்டார்கள் என்று தெரியவில்லை" என்றார். வலைப்பதிவுலகில் ஏற்கெனவே புழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் புதிதான எந்த தகவலுமில்லை. அறிமுகம் இல்லாதவர்களுக்கு வலைப்பதிவுலகத்தைப் பற்றின எளிமையான, முழுமையான ஒரு அறிமுகத்தை அந்த நிகழ்ச்சி ஏற்படுத்தவில்லை என்கிற என் கருத்தை அவரோடு பகிர்ந்து கொண்டேன். எஸ்.ராவின் சில சிறுகதைகள், புத்தக மதிப்புரைகள், முழுமையான நேர்காணல்கள் கொண்ட இணைத்தளம் விரைவில் வெளியாகவிருக்கும் தகவலை தெரிவித்தார். நாஞ்சில் நாடனை சந்திக்க முடியாமற் போனது ஒரு குறை.

எழுத்தாளர்கள் என்றால் தலைக்கு பின்னால் ஒளிவட்டத்தை சுமந்து கொண்டு பக்தர்களுக்கு அருளும் கடவுள் போன்ற பார்வையுடன் வாசகர்களை அணுகுவார்கள் என்று முந்தைய சில அனுபவங்களினால் எண்ணியிருந்த என்னை மேற்சொன்ன எழுத்தாளர்களுடனான சந்திப்பு முற்றிலுமாக கலைத்துப் போட்டது.

()

ஏறக்குறைய எல்லாக் கடைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள் அல்லது பார்வையிட்டுக் கொண்டிருந்¡ர்கள். சுஜாதா சொன்ன மாதிரி 'என்ன மாதிரியான புத்தகம்' வாங்குகிறார்கள் என்பதைவிட புத்தக வாசிப்பு என்கிற விஷயமே கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இத்தனை புத்தக விரும்பிகளை ஒருசேர பார்ப்பதே நிறைவான விஷயமாக இருந்தது. நிறைய சிறு கடைகளில் ஆனந்தவிகடன், கிழக்கு பதிப்பக புத்தகங்களையே பிரதானமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். குறுகிய காலத்தில் ஏற்பட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக எனக்குத் தோன்றுகிறது. மணிமேகலைப் பிரசுரத்திற்கு போட்டியிடுகிறாற் போன்று ஆழமில்லாமல் இருக்கும் அவர்களின் புத்தகங்களின் உள்ளடக்கம் குறித்து எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும், எளிமையான மொழியோடு, வாங்குகிற ஆர்வத்தை ஏற்படுத்துகிற சிறப்பான வடிவமைப்போடு, ரயில்வே புத்தகக்கடைகளிலும் கிடைக்கக்கூடிய அளவிற்கு சாமானியனை சென்று சேரும் வசதி என்று அவர்களின் மார்க்கெட்டிங் உத்தி வியக்கவே வைக்கிறது. ஆரம்பக்கட்ட அறிமுக புத்தகங்களை படிக்கும் ஒரு வாசகன், மெள்ள ஆழமான வாசிப்பிற்கு உந்தித் தள்ளப்படக்கூடும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகங்கள் ஏற்படுத்துகின்றன.

()

நான் வாங்கிய சில புத்தகங்கள்:

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன் - உயிர்மை
நினைவோடை வரிசை: சுந்தரராமசாமி: - ஜி.நாகராஜன் - காலச்சுவடு
நினைவோடை வரிசை: சுந்தரராமசாமி: - தி.ஜானகிராமன் - காலச்சுவடு
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் - தமிழில்: இரா.முருகவேள் - விடியல்
ரஜினியின் சினிமா, ரஜினியின் அரசியல் - அ.ராமசாமி - பாரதி புத்தகாலயம்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - கந்தர்வன் - பாரதி புத்தகாலயம்
பெண் ஏன் அடிமையானாள் - பெரியார் - பாரதி புத்தகாலயம்
கதை சொல்லும் கலை - ச.முருகபூபதி - பாரதி புத்தகாலயம்
நான் வித்யா - 'லிவிங் ஸ்மைல் வித்யா' - கிழக்கு
வேலைக்காரிகளின் புத்தகம் - ஷோபாசக்தி - கருப்புப் பிரதிகள்

தமிழினி இதழ் -
நிழல் - திரைப்பட இதழ் - பெர்க்மன் சிறப்பிதழ்
நிழல் - திரைப்பட இதழ் - எம்.ஆர்.ராதா சிறப்பிதழ்
புனைகளம் - இதழ் எண்.4

()

வீடு சென்று அடைந்ததும் என்னுடைய ஏழு வயது மகளிடம் நான் வாங்கின புத்தகங்களை காண்பித்தேன். "எனக்கு என்ன புத்தகம் வாங்கி வந்தீங்க?" என்ற அவளின் எதிர்பாராத கேள்வியில் என்னை கேவலமாக உணர்ந்து தலையை குனிந்தேன்.

24 comments:

ரவி said...

i really like this post...!!!

துளசி கோபால் said...

ஆமாங்க. அருமையான பதிவு.

குழந்தை கேட்ட கேள்வி!!!!!

தோணலை பாருங்க(-:

Anonymous said...

கடைசி பத்தி மட்டும் ரொம்ப நல்லா இருந்தது :-)

கதிர் said...

+ + பொண்ணு சரியாதான் கேட்டிருக்கா!

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்ல பதிவு, நான் எங்கள் குடும்பத்துடன் சென்ற போதும், அறிமுகமான நன்பர்கள் உடனிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ரு எண்னியதுண்டு.. இப்படித்தான் இருந்திருக்கும் என்று தோணுகிறது..
வாழ்த்துகள்

Anonymous said...

"வீடு சென்று அடைந்ததும் என்னுடைய ஏழு வயது மகளிடம் நான் வாங்கின புத்தகங்களை காண்பித்தேன். "எனக்கு என்ன புத்தகம் வாங்கி வந்தீங்க?" என்ற அவளின் எதிர்பாராத கேள்வியில் என்னை கேவலமாக உணர்ந்து தலையை குனிந்தேன்"

உங்க்ளுடைய முந்தைய பதிவுகளைப் படித்த பின் இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் !

Anonymous said...

நான் வாங்கிய சில புத்தகங்கள்

!?:)

பிரகாஷ் said...

புத்தகக்கண்காட்சி நடக்கும் தினங்களில்
சென்னைக்கு நான் வரஇயலாத குறையைத் தீர்க்க உங்கள் பதிவு உதவுகிறது.நன்றி.

மு. சுந்தரமூர்த்தி said...

நீங்கள் சந்தித்தவர்களுடன் உங்கள் அணுகுமுறை, உரையாடல்கள், அவற்றை இங்கு எழுதி எழுப்பும் பிம்பங்களின் (அல்லது ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உறுதிசெய்யும் முயற்சிகளின்) வேறுபாடு தங்கர் பச்சான் vs எழுத்தாளர்கள் (யு.ச., ஜெ.மோ., இரா.மு. இத்யாதி) என்று பளிச்சென்று தெரிகிறது. இது தமிழ்ச் சூழலில் நன்கு பழகிவிட்ட அறிவுஜீவி மேட்டிமைக்கு இன்னுமொரு உதாராணம். இருபதாண்டுகளுக்கும் மேலாக இது போன்ற கூத்துக்களை அவதானித்து வருகிறேன். விமர்சனங்கள், விவாதங்கள் என்ற பெயரில் எழுத்தாளர்கள் (மற்றும் இணையத்தின் wannabe எழுத்தாளர்கள்) போடும் எழுத்துக் கூச்சல்களோடு (தற்போதைய உதாரணம் விருதுகளைப் பற்றி ஜெ.மோ.வின் கட்டுரைகள்/கடிதங்கள்) ஒப்பிடுகையில் தங்கர் பச்சானின் திரைப்படக் கதாபாத்திரங்கள் எழுப்பும் சத்தங்கள் சகித்துக்கொள்ளக்கூடியதாகவே உள்ளன.

கொஞ்சம் தரையில் கால்பட நடக்கவும் பழகுங்கள். அறிவு நிரம்பி வழியும் தலைக்கு ஆபத்து எதுவும் வந்து விடாது :-)

வவ்வால் said...

//செந்தழல் ரவி said...

i really like this post...!!!//

//
Blogger மு. சுந்தரமூர்த்தி said...
கொஞ்சம் தரையில் கால்பட நடக்கவும் பழகுங்கள். அறிவு நிரம்பி வழியும் தலைக்கு ஆபத்து எதுவும் வந்து விடாது :-)//

மொத்தத்தில் எனக்கு இப்பதிவு கேணத்தனமாகவேப்பட்டது! இதைத்தான் விரும்புறிங்களா செந்தழல் ரவி! :-))

தங்ஸ் said...

உங்க பொண்ணையும் கூட்டிட்டுப்போயிருக்கணும்:-)

Agathiyan John Benedict said...

மரத்தடியிலேயே இதைப் படித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

ஒரு "நடுத்தர குடுபத்தின்" தலைவனான நீங்கள், வாங்கிய புத்தகத்தை அலமாரியிலேயே வைத்துவிடாமல், முடிந்த விரைவில் படித்து முடித்துவிடுங்கள் -:)

Anonymous said...

குழந்தைகள் படிக்குமாறு, குழந்தைகளைக் குறி வைத்த நூல்கள் கண்காட்சியில் பார்க்கக் கிடைத்தனவா? அவற்றின் தரம் என்ன? பொதுவாக, தமிழ்க் குழந்தைகளுக்கான பதிப்பகச் சூழல் குறித்து அறிய ஆவல்.

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி.

சுந்தரமூர்த்தி:

எந்த விஷயத்தையும் 'ஜாதிய அரசியல்' என்னும் சட்டகத்துக்குள் தனக்கேற்ற வசதியில் பொருத்திப்பார்த்து மகிழும் செயற்பாடுகளை அனைத்துத் துறைகளிலும் - வலைப்பதிவுலகம் - உட்பட நிகழ்வதை பல வருடங்களாக உங்களைப் போலவே நானும் அவதானித்து வருகிறேன். ஒருவேளை தங்கர்பச்சானை 'பெர்கமனுடன்' ஒப்பிட்டும் குறிப்பிடப்பட்ட மற்ற எழுத்தாளர்களை 'ரமணி சந்திரன்' போன்றோர்களுடன் ஒப்பிட்டு நான் எழுதியிருந்தால் ஒருவேளை உங்கள் பின்னூட்டமிட்டமும் வலஇடமாக திசைமாறியிருக்குமோ என்று யூகிக்க சுவாரசியமாயிருக்கிறது. சிகரெட் பாக்கெட்டுகளின் அட்டைகளில் அச்சிடப்பட்டிருப்பவை போல வலைப்பதிவின் 'டெம்ப்ளேட்டிலும்' 'நான் இன்ன ஜாதி/இனம்/பிரிவைச் சேர்ந்தவன் அல்லது சேர்ந்தவனல்ல என்று ஒரு எச்சரிக்கை குறியீட்டை இணைத்துக் கொண்டுதான் பதிவுகளை எழுத வேண்டியிருக்கும் என்ற நிலை நோக்கி நோக்கி வலைப்பதிவுலகம் போய்க் கொண்டிருக்கிறதோ என்று கவலையாயிருக்கிறது.

இங்கே கொஞ்சம் சுயவிளக்கமும் அளிக்க வேண்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் பிறந்த இனம்/ஜாதி/மதம்/தேசம் போன்றவைகளை மனதளவில் - அரசாங்கக் காகிதங்களில் இயலவில்லையெனினும் - கடந்துவந்து விட்டேன் என்பதை - சற்றே நாடகத் தொனியில் இருந்தாலும் - தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இதை என் மனச்சாட்சியின் முன்னே உரக்கவும் தெளிவாகவும் தைரியமாகவும் கூறமுடியும். இதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்பதையும் கூற வேண்டியிருக்கிறது. எந்த ஒரு படைப்பையும் /படைப்பாளியையும் அல்லது எதையும் நான் திறந்த மனதுடன்தான் அணுகுகிறேன். என் முந்தைய பதிவுகளை மேலோட்டமாகவாவது வாசிக்கிறவர்கள் இதை உணர முடியும் என நம்புகிறேன். இதை உங்களுக்கான பதில் என்பதை எனக்கு நானே அளித்துக் கொண்ட பதில் என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

நான் எப்படி நடக்க வேண்டும் என்பதில் எனக்கு அடுத்த முறை குழப்பம் ஏற்பட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியோ/அவசரமென்றால் தொலைபேசியில் அணுகியோ உங்களின் இலவச ஆலோசனையைப் பெற முயல்கிறேன். :-)

வவ்வால்:

நம் இருவரின் சிந்தனையும் ஒரே தளத்தில் இயங்குவது குறித்து அறிய ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

அனானி:

ஆங்கிலத்தோடு ஒப்பிடும் போது தமிழில் குழந்தைகளுக்கான நூற்கள் குறைவு என்பதை வெட்கத்துடன் நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் தேவையின் தீவிரம் குறித்து யோசிப்பதோ அல்லது தூரத்தை கடப்பதற்கான முயற்சியையையோ உடனே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. தீவிர இலக்கியத்தில் இயங்கும் எஸ்.ரா., யூமா வாசுகி போன்றோர் கூட குழந்தை இலக்கியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். (பாரதி புத்தகாலயம் நிறைய குழந்தைகள் நூற்களை வெளியிட்டிருப்பதை வாசித்த நினைவு) கண்காட்சியில் இது சம்பந்தமாக எந்த பதிப்பகக் கடையையும் நான் கவனிக்க முயற்சி செய்யவில்லை. :-(

manjoorraja said...

நல்லதொரு பகிர்வு மற்றும் பதிவு

நன்றி சுரேஸ்.

மற்றப்படி தங்கர் போன்றவர்கள் இன்னும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு வரவில்லையோ என்று ஏற்கனவே படித்த அவரது பேட்டிகள், படங்கள் மூலம் நினைக்க தோன்றுகிறது

வவ்வால் said...

//தீவிர இலக்கியத்தில் இயங்கும் எஸ்.ரா., யூமா வாசுகி போன்றோர் கூட குழந்தை இலக்கியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.//

இப்போது வரும் எல்லாப்பதிப்பங்களும் குழந்தைகள் புத்தகத்தின் மீதும் ஒரு கண் வைத்தே வியாபாரம் செய்கின்றன, கிழக்கு கூட "prodigy" என்ற பெயரில் நிறைய குழந்தைகள் புத்தகத்தை அரங்கேற்றி இருப்பதை அவர்கள் அரங்கில் பார்த்தேன்.

//ஆங்கிலத்தோடு ஒப்பிடும் போது தமிழில் குழந்தைகளுக்கான நூற்கள் குறைவு என்பதை வெட்கத்துடன் நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. //

socio-economic நிலையை வைத்துப்பார்த்தால் புத்தகம் வாங்கும் திறன் இருப்பவர்களின் குழந்தைகள் காண்வென்ட் பள்ளிகளில் படிப்பவர்களாக இருப்பார்கள். குழந்தைக்கு ஆங்கில புலமை பிய்த்துக்கொண்டு வரனும் என்று ஆங்கிலப்பள்ளியில் சேர்த்தவர்கள், ஆங்கிலப்புத்தகம் தானே வாங்கி தருவார்கள்! அதான் வாங்குவோரின் இயல்பறிந்து பலரும் ஆங்கிலத்தில் குழந்தைகள் புத்தகம் போடுகிறார்கள்.

உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் கடை நிலை ஊழியரிடம் புத்தகக்கண்காட்சிக்கு போனீர்களாக எனக்கேட்டுப்பாருங்கள், அனேகமாக அதுலாம் என்னாத்துக்கு சார் தண்டம் என்பார், தீவுத்திடல் பொருட்காட்சிக்கு போகவே முடியலை நீங்க வேற நக்கல் பண்ணிக்கிட்டு என்று சலித்துக்கொள்வார்! :-))

இதில் அவர் மீது தவறில்லை, அவரது பொருளாதாரச்சூழல் தான்!

மு. சுந்தரமூர்த்தி said...

//எந்த விஷயத்தையும் 'ஜாதிய அரசியல்' என்னும் சட்டகத்துக்குள் தனக்கேற்ற வசதியில் பொருத்திப்பார்த்து மகிழும் செயற்பாடுகளை அனைத்துத் துறைகளிலும் - வலைப்பதிவுலகம் - உட்பட நிகழ்வதை பல வருடங்களாக உங்களைப் போலவே நானும் அவதானித்து வருகிறேன்.//

என் பின்னூட்டம் "ஜாதி அரசியல்" என்னும் சட்டகத்துக்குள் எழுதப்பட்டிருக்கிறது என்ற உங்கள் புரிதல் புல்லரிக்கவைக்கிறது (ஒருவேளை பின்னூட்டம் எழுதுபவரும் ஒரு ஜாதி டிஸ்க்ளெய்மருடன் ஆரம்பிக்கவேண்டுமோ?).

நீங்கள் எழுதியவற்றை வைத்து சராசரி சினிமாக்காரர் எதிர் அறிவுஜீவி எழுத்தாளர்கள் என்று நீங்கள் சந்தித்ததவர்களை அணுகியது, உரையாடியது, பிம்ப உருவாக்கம் அவர்களுக்கிடையே உங்கள் இடம் (ஒருவர் நான் கற்றுக்கொடுக்கவேண்டிய அளவுக்கு ஒன்று தெரியாத/சொன்னாலும் புரிந்துமுடியாதவர் எதிர் மற்றவர்கள் எனக்கு கற்றுக்கொடுக்கக் கூடிய அறிவுக்கடல்கள்) போன்றவற்றை விலாவரியாக விளக்க முடியும். இருப்பினும், விவாதத்தில் கைகொள்ளக்கூடிய உத்திகளை உங்கள் எதிர்வினை உணர்த்தியிருப்பதாலும், இப்படி இணைய அறிவுஜீவிகளிடம் ஏற்கனவே அடிபட்டு மீண்டிருப்பதாலும் அத்தகைய ரிஸ்கை இன்னொரு முறை எடுக்கப்போவதில்லை. வாழ்த்துக்கள்.

ஒரு தகவலுக்காக: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர்களில் பாதி பேர்களுடைய ஜாதி எதுவென்றே எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லும்படி கேட்கவும் மாட்டேன். நான் ஜாதி அரசியலை அவதானிப்பவன் என்றாலும் தாமாக அம்மணப்பட்டு நிற்காதவர்களை துகிலுரித்து அம்மணமாக்கும் அளவுக்கு ஆர்வமில்லை.

பிச்சைப்பாத்திரம் said...

சுந்தரமூர்த்தி:

ஏற்கெனவே படித்ததுதான் என்றாலும் 'உருப்படாதது' நாராயணன் பதிவை பார்த்துக் கொண்டிருந்த போது வலைப்பதிவு பெயரின் கீழே எழுதப்பட்டிருந்த tag line கண்ணில் பட்டது.

"எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்!"

இந்தச் சூழலில் எனக்கெனவே சொல்லப்பட்டிருந்த வாக்கியம் போல் உணர்ந்ததால் (தமிழ் சினிமாக்களில் கோயில் மணி அடிப்பது போன்ற cliche காட்சிகள் நினைவுக்கு வருகின்றன) சும்மா இருக்க முடிவு செய்து விட்டேன். இதுவும் சும்மா ஒரு தகவலுக்காக! :-)

பிச்சைப்பாத்திரம் said...

சொல்ல விட்டுப் போனது. மேலே குறிப்பிடப்பட்ட வரிகளுக்குச் சொந்தக்காரர், கவிஞர் ஆத்மாநாம்.

Boston Bala said...

இந்தப் பதிவு எனக்கும் பிடித்திருந்தது. நன்றி.

---திரைப்படக்காட்சிகளில் பார்த்த அர்ச்சனா நடித்த ஒரு காட்சியை சொன்னேன்.---

நீங்க முழுப்படம் பார்த்துட்டீங்களா? முழுப் பார்வை தாங்களேன்.

தொடர்பில்லாத தொக்கு கேள்வி: மிருகம் படம் பார்த்தாச்சா? அதற்கும் விமர்சனம் கிடைக்குமா?

துளசி கோபால் said...

பாபா,

நானும் 'முழு'ப்படமும் பார்த்தேன்.
மனதில் நிற்பது அதில் வரும் பலா மரங்கள்தான்.:-)))))

'முழு'சு 'முழு'சா பெரிய பெரியப் பலாப்பழங்கள்.

சத்தியராஜின் நடிப்பு அருமை.

Anonymous said...

---நீங்க முழுப்படம் பார்த்துட்டீங்களா? முழுப் பார்வை தாங்களேன்.---

என்ன அசட்டுத்தனமான கேள்வி?முழுப்படம் பாத்து விமர்சனம் எழுத அவர் என்ன பெரிய பெர்கமன்னா? அந்த ஆளை விமர்சனம் பண்ண டிவி விளம்பரம் பார்ப்பதே அதிகம்.

Boston Bala said...

துளசி,
நானெல்லாம் 'அழகிய தமிழ்மக'னை ரசிக்கும் கேஸ்... மெதுவாகத்தான் பார்க்கணும்னு சொல்றீங்க போல :)

முன்பெல்லாம் அனைத்து படங்களுக்கும் விமர்சனம் தந்தூன்டு இருந்தீங்களெ... இப்ப ஏனோ நிறுத்திட்டீங்க

தறுதலை said...

ஜெய மோகனின் அலப்பறைகளைவிட அதிகமாக உரக்க பேசி உரக்க நடித்தாக சொல்லப்படும் சிவாஜிகூட கத்த முடியாது.
சேரன் கத்தினாரா? பார்த்திபன் கத்தினாரா? சினேகா கத்தினாரா?

குப்புசாமி கத்தினார். தங்கர் கத்தினார். ஒரு படத்தில் ஒரு சில பாத்திரங்கள் உரத்துப் பேசுவதால் கத்துகிறார்கள் என பொதுவாக்குறீகள் எனத் தோன்றுகிறது. இருப்பினும் அப்படி கத்திப் பேசும் மனிதர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள்.

இருப்பினும் நீஙள் குறிப்பிடும் ஒளிவட்டம் இல்லாத எழுத்தாள்ர்கள் முருகன் உட்பட சத்தமில்லாமல் செய்யும் அயோக்கிய அரசியல் வெளிப்படை.



பொங்கலோ பொங்கல்!
........................
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)