Friday, December 14, 2007

Nayak (1966) - Satyajit Ray

ஒரு நடிகரின் அக, புறச் சிக்கல்களை இவ்வளவு கூர்மையாக, நெருக்கமாக அவதானித்த திரைப்படத்தை இதுவரை நான் கண்டதில்லை. சத்யஜித்ரே என்கிற திரைப்பட மேதையால் இது சாத்தியமாகியிருக்கிறது. திரைப்பட உலகை, அதன் மாந்தர்களை சித்தரித்து தயாரிக்கப்பட்ட படங்கள் வெகு சொற்பமே. தமிழ்த்திரைப்பட உலகில், இவ்வாறு எடுக்கப்படும் படங்கள் 'சென்டிமென்ட்டுக்கு' எதிரானதாகவே கருதப்படுகிறது, அவை பொதுவாக வணிகரீதியாக வெற்றி அடையாததால். நட்சத்திரம், கல்லுக்குள் ஈரம், ஒரு வீடு, இருவாசல், என்று சில படங்கள் நினைவுக்கு வருகின்றன.

பொதுவாகவே நாம் நடிக, நடிகையர்களை அவர்களது செல்வச் செழிப்பு மற்றும் அளவுக்கதிகமான புகழ் காரணமாக வியப்புடனும், பொறாமையுடனும், வெறுப்புடனும்தாம் நோக்குகிறோம். நாணயத்தின் மறுபக்கத்தை பார்த்தால், அவர்களின் பளபளப்பான முகத்தைத் தாண்டி முட்கீரிடத்தை அணிந்து கொண்டு அவதிப்படும் முகமொன்று இருப்பது பெரும்பாலும் நமக்குத் தெரியாமலே போகிறது. தோல்வியின் கருநிழல் தங்கள் மீது பரவி விடவே கூடாது என்கிற திகிலுடனேயே அவர்களின் வாழ்வு கழிகிறது. ஒவ்வொரு படவெளியீடுகளின் போதும் மூலநோய்க்காரனைப் போலவே அவர்கள் அவஸ்தையோடு திரிகிறார்கள். பரமபத விளையாட்டு போல, எவ்வாறு விரைவில் உயரத்தை அடைந்தார்களோ, அதே போல் ஒரு நீளமான பாம்பின் மூலம் எந்நேரமும் அவர்கள் ஆரம்பப் புள்ளியை அடையக்கூடும் என்கிற insecurity feeling அவர்களை குடைந்து கொண்டே இருக்கிறது.

()

புகழின் உச்சியில் இருக்கிற நடிகனொருவன், முதன் முதலாக தோல்வியின் கசப்பை ருசித்து விடுவோமோ என்று மன உளைச்சலுக்கு ஆளாவதும், நனவோடை உத்தியின் மூலம் அவனுடைய வாழ்க்கையின் முக்கியமான திருப்பங்களும் துரோகங்களும் உள்மன சிக்கல்களும் பார்வையாளனுக்கு உணர்த்தப்படுவதுதான் இந்தப் படைப்பின் (Nayak) முக்கிய அம்சம்.அரிந்தம் முகர்ஜி (உத்தம் குமார்) என்கிற புகழ்பெற்ற வங்காள நடிகர் விருதொன்றை பெறுவதற்காக ரயில் மூலம் டில்லிக்குச் செல்கிறார். அங்கே பலவிதமான பயணிகளை அவர் சந்திக்க நேர்கிறது. அவருடைய சமீப்த்திய படம் தோல்வியடைப் போவதாக அவர் உணர்வதும், அவரைப்பற்றிய சர்ச்சையான ஒரு விஷயம் அன்றைய நாளிதழ்களில் பிரசுரமாகியிருப்பதும் அவரை ஒருவிதமான மனநெருக்கடிக்கு ஆளாக்குகிறது.

சிறுபத்திரிகை ஒன்றை நடத்தும் அதிதி சென்குப்தா (ஷர்மிளா தாகூர்) தன் தோழியின் ஆலோசனை காரணமாக நடிகரை சந்தித்து ஒரு நேர்காணலுக்காக அணுகுகிறார். சினிமாவின் மீது அவ்வளவாக ஆர்வமில்லாத அவரின் முயற்சி நடிகரின் அலட்சியம் காரணமாக வெற்றிகரமாக அமைவதில்லை.

பணத்தின் புதைகுழியில் மாட்டிக் கொள்வதாக அன்றிரவு நடிகன் காணும் கனவு அவனை முழுவதுமாக கலைத்துப் போடுகிறது. மிகவும் தனிமையாக உணரும் அவன், தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காக அதிதியை அணுகி தன்னுடைய சினிமா பயணத்தின் முக்கிய நிகழ்வுகளை தன்னிச்சையாக சொல்லத் துவங்குகிறான். அதிதி இதை பதிவு செய்கிறாள்.

(1) நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அரிந்தமுக்கு சினிமா வாய்ப்பொன்று கிடைக்கிறது. அவரின் நாடக குருவான சங்கருக்கு இது பிடிக்கவில்லை. சினிமா உலகின் மாயைகளையும் மாய்மாலங்களையும் எடுத்துரைத்து போக வேண்டாமென எச்சரிக்கிறார். ("சினிமாவில் நீ இயக்குநரின், எடிட்டரின், ஒப்பனையாளனின் கைப்பொம்மையாகத்தான் இருக்க வேண்டும். There is no art in Cinema"). கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கும் அவனுக்கு சங்கரின் தீடீர் மரணம் விடுதலை உணர்வை அளிக்கிறது.

(2) முதல் நாள் படப்பிடிப்பின் போது முகுந்த் லஹரி என்கிற மூத்த நடிகர் அவனுடைய நடிப்பை குறைசொல்லி அவமானப்படுத்துகிறார். அரிந்தம் சற்றே புகழ் பெற்ற நடிகராகிவிட்ட பிறகு, தோல்வியடைந்து நொடித்துப் போய் உதவி கேட்டு வரும் மூத்த நடிகருக்கு உதவி செய்ய மறுத்து பழிவாங்குகிறான்.

(3) அரிந்தம் நாடக நடிகராக இருக்கும் சமயத்திலிருந்தே நண்பராக இருப்பவர் பைரேஷ். தொழிற்சங்க நடவடிக்கைளில் தீவிரமாக ஈடுபடும் நண்பரின் செயல்களில் இருந்து ஒதுங்கியே இருக்கிறான் அரிந்தம். காலம் அவர்களை பிரிக்கிறது. நான்கு வருடங்கள் கழித்து நடிகனாகியிருக்கும் தன் நண்பனை காண வருகிறார் பைரேஷ். 24 நாட்களாக நீண்டுக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சங்க போராட்டத்தில், தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடிகனை வந்து பேசச் சொல்கிறார். அவ்வாறு செய்வது தன் தொழிலை பாதிக்கும் என்கிற அரிந்தம், நண்பனின் கோரிக்கையை தீவிரமாக மறுத்து விடுகிறான்.

(4) சினிமா வாய்ப்பொன்று தேடி வரும் ஒரு பெண்ணை தன்னுடைய உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறான். அவளுடைய கணவனுடன் ஏற்படும் கைகலப்புதான் நாளிதழ்களில் செய்தியாக வந்து நடிகனை பயண நாளன்று தொந்தரவு செய்கிறது.

()

மேற்கண்ட நிகழ்வுகளை கிட்டத்தட்ட ஒரு சுய வாக்குமூலம் போல் அதிதியிடம் சொல்லும் அரிந்தம், இந்த சுயபரிசோதனையால் தீவிர குற்றவுணர்வுக்கு ஆளாகி உச்சக்கட்ட போதையில் தற்கொலையை யோசிக்கிறான். அதிதி அவனை தடுத்து நிறுத்தி, தான் பதிவு செய்ததையெல்லாம் கிழித்துப் போகிறாள். நடிகனின் நிலையை நினைத்து பரிதாபப்படும் அவள், அவனை ஆற்றுப்படுத்தி எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் அளிக்கிறாள். எல்லா குற்றங்களையும் கொட்டிவிட்ட நடிகன் பயண இறுதியில் ஆசுவாசமாக தன்னுடைய "நடிக" முகமூடிக்கு திரும்புவதுடன் படம் நிறைகிறது.

மேற்சொன்ன நிகழ்வுகளில் நான்காவது மட்டும் பார்வையாளர்களுக்கு நேரடியாக சொல்லப்படாமல் உணர்ந்து கொள்ளப்படும் வகையில் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வையும் நேரடியாக ஒப்புக் கொள்வதற்காக அதிதியை நடிகன் அணுகும் போது அவள் அவனை தடுத்து நிறுத்துகிறாள்.

()

சிக்கலான இந்தப் படைப்பிற்கு சத்யஜித்ரே அமைத்திருக்கும் நுட்பமான, திறமையான திரைக்கதை என்னை அயர வைக்கிறது. (Best screenplay and story award 1967). படம் முழுவதும் ரயிலிலியே, இரண்டே நாட்களில் அமைகிறது. நடிகனின் மனநெருக்கடி ஆரம்பமாவதும், பயங்கர கனவுகள் மூலம் அது தீவிரமாவதும் தற்கொலை எண்ணத்தை அடையும் உச்சத்தையும் நடிகனின் கனவுகள் மூலமும், நனவோடை உத்தி மூலம் தன் பழைய சம்பவங்களை நினைவு கூர்வதின் மூலமும் சொல்கிறார்.

படத்தின் உப நிகழ்வுகளாக, ஒரு விளம்பர நிறுவன முதலாளி, தன்னுடைய வியாபார லாபங்களுக்காக, ஒரு முக்கிய client-ஐ கவர்வதற்காக தன்னுடைய மனைவியை உபயோகப்படுத்த முயல்வதும், அவளோ சினிமாவில் நடிக்கும் கனவில் இருப்பதும் சுவாரசியமாக சித்திரக்கப்படுகிறது. யாரை கவர்வதற்காக விளம்பர நிறுவனர் படம் முழுவதும் அலைகிறாரோ அவர் உபயோகப்படாமல் போவதும், எதிர் இருக்கையில் பண்டாரம் போல் அமர்ந்திருக்கும் ஒரு நபர் பட இறுதியில் தானே முன்வந்து தன்னுடைய நிறுவனத்திற்காக விளம்பர ஒப்பந்தம் தர தீர்மானிப்பதும் சுவாரசியமான நீதி.

படத்தின் நிறைய காட்சிகளில் உள்ள sub-textகளை நாம் கூர்மையாக கவனிக்க வில்லையெனில் இழக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. நடிகனின் எதிர் இருக்கையில் இருக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள, ஒரு மாத காலமாக நோய்வாற்றிருக்கும் 16 வயது மகள் நடிகனை காதலுடன் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், அவளுடைய தாயும் நடிகன் கவனிக்காத சமயத்தில் தன்னை கண்ணாடியில் சரிபார்த்துக் கொள்வதில் எந்த அசெளகரியமான செய்தியோ மறைந்திருக்கிறது. "அமெரிக்கப் படங்களின் தரம் இங்கே இல்லை" என்று வெளிநாட்டு புகழ் பாடும் தந்தை, விளம்பர நிறுவனரின் மனைவியிடம் அசட்டுத்தனமாக வழிகிறார்.

படத்தில் வரும் சிறுசிறு கதாபாத்திரங்களும் திறமையாக நடிப்பதை நான் ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். நடிகனின் உதவியாளனிடம் தென்படும் அலட்சியமும், சினிமாவை வெறுத்து கட்டுரை எழுதும் வயதான எழுத்தாளரும், (இவரை நடிகன் அவ்வப்போது சீண்டிக் கொண்டே இருக்கிறான்) அதிதியின் தோழியாக வருபவரும் (நடிகனை பார்த்தவுடன் வெளிப்படையாக உணர்ச்சிவசப்படுவதும் உடனே அதை மறைத்துக் கொள்வதும்) அவரின் கணவரும், ஆரம்பத்தில் மிடுக்காகவும் நொந்து போன சமயத்தில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்கும் மூத்த நடிகரும், தொழிற்சங்க தோழரும், தந்திரமாக இயங்கும் தொழில் சாகசக்காரராக இருக்கும் விளம்பர நிறுவனரும் .............என எல்லோருமே திறமையாக தன் பங்களிப்பை அளித்து இயக்குநரோடு ஒத்துழைத்திருக்கின்றனர்.

()

உத்தம் குமாரின் நடிப்பை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன். இந்தப்படம் தயாரிக்கப்படும் போது அவர் நிஜமாகவே புகழ் பெற்ற நடிகராக இருந்தார் என அறியும் போது அவரது துணிச்சலை நம்மூர் நடிகர்களுடன் ஒப்பிட்டு பாராட்டவே தோன்றுகிறது. ஒரு நடிகனுக்கேயுரிய உடல்மொழியுடன் அவர் படம் பூராவும் வியாபித்துக் கொண்டிருக்கும் போது பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தன்னுடைய முதல் படம் வெளிவரப் போவதற்கு முந்திய நாளில், அவர் பீதியுடனும் அதே சமயத்தில் நம்பிக்கையுடனும் தன்னுடைய நண்படனும் நடத்தும் உரையாடல் ஒரு சிறந்த உதாரணம். ஷர்மிளா தாகூரை முதலில் ஒரு சாதாரண ரசிகையாக நினைத்து ஒதுக்குவதும் பின்னர் அவளுடைய நுட்பமான அறிவுக்கூர்மையை வியந்து தன்னை அவளிடம் ஒப்படைப்பதும் என உத்தம் குமார் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நடிகனின் கனவுக்காட்சிகள் மிகுவும் பொருத்தமான குறியீட்டுத் தன்டையுடனும் திறமையாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. நனவோடை காட்சிகளின் தொடர்ச்சி நிகழ்கால காட்சியுடன் பொருத்தமாக இணைக்கப்படும் உத்தியை கவனித்த போது ரேவின் திறமை குறித்து மிகுந்த நெகிழ்ச்சி ஏற்படுகிறது.

()

இந்தப்படம் அப்படியே யோக்கியமாக தமிழில் தயாரிக்கப்பட்டால், யார் யார் பிரதான பாத்திரங்களில் நடிக்கக்கூடும், அது எப்படியிருக்கும், தமிழ் கூறும் நல்லுலகம் இந்தப்படத்தை எப்படி அணுகும் என்பதை யோசித்துக் கொண்டிருந்தது எனக்கு சுவாரசியமான விஷயமாக இருந்தது.

8 comments:

Raj Chandra said...

I. V. Sasi's "Lekhayude Maranam" discussed about the actress' other side of the life (slightly touching Shobha's life).

>>இந்தப்படம் அப்படியே யோக்கியமாக தமிழில் தயாரிக்கப்பட்டால், யார் யார் பிரதான பாத்திரங்களில் நடிக்கக்கூடும், அது எப்படியிருக்கும், தமிழ் கூறும் நல்லுலகம் இந்தப்படத்தை எப்படி அணுகும் என்பதை யோசித்துக் கொண்டிருந்தது எனக்கு சுவாரசியமான விஷயமாக இருந்தது.

- It is possible to use the main stream actors/actresses if you get a practical director (almost none in Tamil world?!). We tend to exaggerate both the story and the acting so I am not even dreaming of someone is going to take this beautiful story and make a mess.

Anonymous said...

பகிர்தலுக்கு நன்றி சுரேஷ்.
...
/...என்னை அயர வைக்கிறது. (Best screenplay and story award 1967). /
அயரவைக்கிறதா? அல்லது அசர வைக்கிறதா?

எனெனில் அயரவைக்கின்றது என்று கூறும்போது சோம்பல்/சுவாரசியமற்று இருத்தல் என்ற அர்த்தத்தில் அல்லவா வரும்?

பிச்சைப்பாத்திரம் said...

டிசே,

இந்த வார்த்தைப் பிரயோகம் "சுஜாதா" ஏற்படுத்திய பாதிப்பில் உபயோகிப்பது. "அயர்ந்து போனேன்" என்பதின் நேரடி அர்த்தமாக "சோர்ந்து போனேன்" என்கிற மாதிரி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நடைமுறைப் பிரயோகமாக "அயர்ந்து போனேன்" ஆச்சரியத்தில் அப்படியே சரிந்து போனேன் என்கிற மாதிரி அர்த்தம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் தவறாகவும் இருக்கலாம். நான் தமிழில் பாண்டித்தியம் பெற்றவன் அல்ல. :-)

- Suresh Kannan

மயிலாடுதுறை சிவா said...

வழக்கம் போல் நுணுக்கமான விமர்சனத்திற்கு நன்றி!

இந்தப் படம் எங்கு கிடைத்தது?

மயிலாடுதுறை சிவா...

ஈழநாதன்(Eelanathan) said...

சுரேஷ் சத்யஜித் ரேயின் முத்துக்களில் ஒன்று நாயக்.கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு படம் பெலினியின் 8 1/2 நாயக் நாயகனின் வாழ்க்கை என்றால் இது இயக்குனரின் வாழ்க்கை அதில் பெலினி தன் வாழ்க்கையையே படமாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.இயலுமானால் பாருங்கள்

இங்கே சிங்கப்பூரில் இந்தியத் திரைப்படங்கள் கிடைப்பதுதான் பெரும் கஷ்டமாக இருக்கிறது அடூர் கோபாலகிருஷ்ணனின் படங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன் தமிழ்நாட்டில் எங்கே வாங்கலாம் என்று அறியத் தருவீர்களா? eelanathan at gmail.com

பிச்சைப்பாத்திரம் said...

//பெலினியின் 8 1/2 நாயக் நாயகனின்//

Top 100 படங்களை வரிசைப்படுத்தும் போது, இந்தப்படம் தவறாமல் இடம் பிடிப்பதை கவனத்திருக்கிறேன். இதுவரை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பரிந்துரைக்கு நன்றி

//அடூர் கோபாலகிருஷ்ணனின் படங்களை//

ஈழநாதன்,

உலக அளவில் விருது பெற்ற படங்களைக்கூட எளிதாக பெற்றுவிட முடிகிறது. ஆனால் இந்திய இயக்குநர்களின் திரைப்படங்களின் குறுந்தகடுகளை காண்பது அரிதானதாக இருக்கிறது. எனக்கு தகவல் தெரிந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

ஹரன்பிரசன்னா said...

அப்படியே அசந்து தூங்கிட்டோம் என்கிறோம். அசர வைக்கிறது என்றால் நேரடியாக சோர்ந்து என்றல்லவா அர்த்தம் வரும். அப்படியானால் அசந்து, அயர்ந்து இரண்டுமே தப்பா? :)) ஏதோ என்னாலானது.

Madhan said...

நேர்த்தியான விவரிப்புகளோடு அழகாக எழுதி இருகிறீர்கள் சுரேஷ். கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா இந்த படத்தைப் பற்றி குறிப்பிடிருந்தார். அப்போதிலிருந்தே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுத்தியப் படம். காமிரா கோணம், சப டெக்ஸ்ட், திரைகதை எல்லாம் நேர்த்தியாக செய்வது றேவிற்கு பழக்கமாகி விட்டது என எழுதி இருந்தார். பயணத்தில் அம்மாவையும் பெண்ணையும் பற்றிய அந்த மறைபொருள் சற்றே குறைய ஒரு சிறுகதை ...