இணையத்தில் எனது இருப்பை புதுப்பித்துக் கொள்ள, எப்பவோ எழுதின குறிப்புகளை இங்கே பதிவு செய்கிறேன்.
சென்னையில் ஒரு கோடைக்காலம்
சென்னையின் கோடை விடைபெறத் தயங்கிக் கொண்டிருக்கிறது. பேருந்தின் ரயிலின் இரும்புக் கம்பிகள் பயணிகள் தங்களை அணுகவொட்டாதவாறு சூட்டில் தகிக்கின்றன. சிவனின் தலையில் கங்கை குடியிருக்கும் ஐதீகம் உண்மையோ அல்லது பொய்யோ தெரியவில்லை. என்னுடைய தலையில் இந்த மாதிரி தேவதை யாராவது குடிகொண்டு விட்டாளா என்று சந்தேகிக்கும் வகையில் வியர்வைத் தண்ணீர் தலைக்குள்ளிலிருந்து ஊற்று போல் பொங்குகிறது. வீட்டிற்குப் போனவுடன் அலுவலக வேடத்தை களைக்கும் வேளையில் உள்ளாடைகள் பிழியப்பட்ட தேனடையை விநோதமாக நினைவுப்படுத்துகின்றன. உடம்பில் வியர்வை ஊற்றுடன் சிரமப்பட்டு பாலத்தின் மேடேறிக் கொண்டிருக்கும் கைவண்டிக்காரரை எரிச்சலுடன் ஒலியால் திட்டி துரத்துகிறது ஒரு திமிர்பிடித்த வெளிநாட்டு கார்.
எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக வரும் சக மனிதர்களைக் காண எரிச்சலாக இருக்கிறது. உலகத்திலேயே இரண்டாவது நீளமானதாக புகழ்பெற்ற மெரீனாவில் தாராளமாக சுவாசிக்கக் கிடைக்கும் மீன்வறுவல் நாற்றம் குமட்டலை ஏற்படுத்துகிறது.
மிகுந்த சப்தத்துடன் தரையில் மோதி மண் வாசனையை எழுப்பும் மழையை கற்பனையில் கண்டு நனைந்தபடி கடந்து போகின்றன நாட்கள்.
()
பழசாகிப் போன பாக்யராஜ்
மகளின் கோரிக்கைகிணங்க, இம்சை அரசனைக் காண சென்று அரங்கம் நிரம்பிவிட்டதால், "பாரிஜாதம்" என்கிற மகா அபத்தக் களஞ்சியத்தை காண நேரிட்டது. படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே தூங்கத் துவங்கிவிட்ட மகளை பொறாமையுடன் பார்த்த படியும் கொடுத்த காசு வீணாகக்கூடாதே என்கிற நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையில் வெளியே போக முடியாமல் சகித்தபடி கழிந்தது இரண்டரை மணி நேரம். 'இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக்கதை படைப்பாளி' என்று பாக்யராஜைப் பற்றி வெகுஜன பத்திரிகைகள் பல நேரங்களில் சிலாகிப்பதுண்டு. ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பதற்கு இது ஒர் சிறந்த உதாரணம்.
அசட்டுத்தனமான நகைச்சுவையையும் பாலியல் உணர்வுகளையும் ஏதோவொரு நூதனமான சதவிகிதத்தில் கலந்து தருவதே அவரது பாணி. இதைத் தவிர வேறொன்றுமில்லை. அவரின் சிறப்பம்சமான ஒன்றை வேண்டுமானால் குறிப்பிடலாம். பத்து பேரை அடித்துவீழ்த்துகிற, திடகாத்திரமான, வீரதீர பராக்கிரமசாலிகளே பெரும்பான்மையாக கதாநாயர்களாக உலா வந்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு சாமான்யனின் குணாதிசயங்களோடு கதாநாயகனாகி தொடர்ந்து வெற்றி பெற்றவர். (இந்த வரிசையில் இன்னொரு நடிகராக மோகனை குறிப்பிடலாம். இரவல் பேனாவிலிருந்து இங்க் திருடும் கதாநாயகனை (பயணங்கள் முடிவதில்லை) மிகவும் அரிதாகத்தான் காண முடியும்.)
()
இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது. அரண்மனை பாத்திரங்களை கட்டம் கட்டி காட்டி விட்டு பல்லியையும் சுட்டும் அட்டகாசமான ஆரம்ப நகைச்சுவை பல இடங்களில் காணாமற் போயிருப்பதுதான் இந்தப் படத்தின் சோகம். பொருத்தமான கதையை தேர்வு செய்து கொண்டு வடிவேலுவை இன்னும் நன்றாக exploit செய்துகொண்டிருக்கலாம். என்னை இந்தப் படத்தில் மிகவும் கவர்ந்தது, அரண்மனை மற்றும் அந்தப்புரங்களின் அரங்க அமைப்புதான். நகைச்சுவைப் படம்தானே என்று compromise செய்து கொள்ளாமல் தீவிரமான உழைப்புடன் பங்களித்த கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியைத்தான் இந்தப்படத்தின் நிஜ கதாநாயகன் என்பேன்.
இயக்குநர் சிம்புதேவன், நகைச்சுவையைக் கொண்டு சரித்திரப்படத்தில் சமகால பிரச்சினைகளை கட்டமைத்தது புத்திசாலித்தனமான காரியம். வீச்சறுவா நாயகர்களின் ரத்தங்களுக்கு நடுவே ஒரு ஆறுதலான படம்.
()
சமீபத்தில் படித்த சில நூல்களைப் பற்றி சில வரிகள்:
(1) கூடு கலைதல் - பொ.கருணாகரமூர்த்தி
சமகால இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பொ.கருணாகரமூர்த்தி. கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற இவரின் மிக சுவாரசியமான நாவலான "ஒரு அகதி உருவாகும் நேரம்" மூலம்தான் இவரை கண்டு கொண்டேன். பல்வேறு பிரச்சினைகள், சோகங்களுக்கு நடுவில் மெல்லிய இழை போல் ஊடுருவியிருக்கும் நகைச்சுவையே இவரது எழுத்தின் பலமாக நான் காண்கிறேன்.
இவரின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு "கூடுகலைதல்" என்கிற தலைப்பாக வெளிவந்திருக்கிறது. (கனவுப்பட்டறை வெளியீடு)
(2) ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குரூஸ்
மீனவர்கள் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக வைத்து தமிழ் நவீன இலக்கியத்தில் அதிகம் படைக்கப்படவில்லை. வண்ணநிலவனின் "கடற்புரத்தில்" போன்றவைதான் அரிதாக தென்படுகிறது. குரூஸின் இந்த நாவல் மீனவர்களின் (பரதவர்கள்) தமிழக, குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஆமந்துறை என்ற பகுதியினரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக ஆய்வு செய்கிறது.
1933-ல் தொடங்கி 1985-ல் நிறையும் இந்த நாவலின் ஊடாக அவர்களின் புவியியல் பிரச்சினைகள், சமூக மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள், மதமாற்றங்களினால் ஏற்படும் தடுமாற்றங்கள், அன்றாடம் மரணத்தை எதிர்கொண்டு ஜீவிதம் நடத்த வேண்டிய அவலமான வாழ்க்கை ஆகியவை குறித்து ஆராய்கிறது. இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களையும் (சிதம்பரம் பிள்ளையின் கப்பல் கம்பெனி) நாவல் நெடுக காண முடிகிறது.
மிக முக்கியமான நாவல் (தமிழினி பதிப்பகம்)
(3) சில இலக்கிய ஆளுமைகள் - வெங்கட் சாமிநாதன்.
சுருக்கமாக வெ.சா. என அறியப்படும் வெங்கட் சாமிநாதன், பி.ஆர்.ராஜம் அய்யர் தொடங்கி உ.வே.சா., திரு.வி.க., பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், க.நா.சு., பி.எஸ்.ராமையா, மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜா., ந.முத்துசாமி, தஞ்சை பிரகாஷ், சம்பத், கோமல் சுவாமிநாதன், நாஞ்சிநாடன், தயாபவார், எஸ்.பொ., ஆகிய ஆளுமைகளைப் பற்றி பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு இதழ்களில் (பெரும்பாலும் யாத்ரா) எழுதப்பட்ட கட்டுரைகள்.
வெ.சா.விற்கு ஒருவரைப் பிடித்து விட்டால் வானுயரப் புகழ்கிறார். (ந.முத்துசாமி பற்றிய கட்டுரை). மாறாக அமைந்து விட்டால் எதிராளி துவம்சம் செய்யப்படுகிறார். க.நா.சு மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், இருவருக்குமான முரண்கள் பல இடங்களில் வெளிப்படுகிறது. சம்பத் பற்றி எழுதப்பட்டிருந்த எனக்கு பிடித்திருந்தது. (காவ்யா பதிப்பகம்)
8 comments:
நல்லா எழுதியுள்ளீர்கள்.. படிக்க சுவையாக இருக்கிறது.. உங்களுடைய மற்ற பதிவுகளையும் படிக்க தூண்டிவிட்டீர்கள்..
படித்துவிட்டு வருகிறேன்..
மிக்க நன்றி.
//இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது. //
ithil ethO thappu iruppathaakath therikiRathu. aanaal ennannuthaan theriyalai.
ராயரிலும், மரத்தடியிலும் பார்த்திருந்தாலும், உங்கள் பதிவிற்கு வருவது இதுதான் முதல் முறை. சென்னை வெயிலின் அலைச்சல் சோகக்கவிதையாய் மிளிர்கிறது, ஒரு நல்லக்கவிதையாக மாற்றலாமே..
பாக்யராஜ் பற்றிய எனது எண்ணங்களும் உங்களுடன் ஒத்துப் போகின்றன. அதுபோலவே இம்சை அரசன் விமர்சனமும். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றே தோன்றியது.
பல இடங்களில் வறட்சி நன்றாகவே தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
வெ.சா.விற்கு ஒருவரைப் பிடித்து விட்டால் வானுயரப் புகழ்கிறார். (ந.முத்துசாமி பற்றிய கட்டுரை). மாறாக அமைந்து விட்டால் எதிராளி துவம்சம் செய்யப்படுகிறார்.
I don't have tamil typing enabled here... but candid observation. will read in leisure and might comment in length ;-)
"உங்களுடைய மற்ற பதிவுகளையும் படிக்க தூண்டிவிட்டீர்கள்.."
ஆமா விடாதீர்கள். ரொம்ப அடக்கமானவரு ஆனா, இணையத்தில் சுவராசியமா எழுதுற ஆட்கள்ல முதலிடத்தில இவரும் இருக்காரு...ஆனா ஒத்துக்க மாட்டாரு.
"மீன் நாற்றமா? அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்...அடுத்த பிறவியிலாவது மீனை ரசிக்க கத்துக்கிட்டு பிறங்க சுரேஷ்"
சுரேஷ் கண்ணன்,
வாசிக்க சுவாரசியமாக இருந்தது. நன்றி. சில நூல்களை அறிமுகம் செய்ததற்கும் நன்றி.
// மோகன்தாஸ் said...
//இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது. //
ithil ethO thappu iruppathaakath therikiRathu. aanaal ennannuthaan theriyalai.
//
பொதுவாக 'இன்னும்' என்பது நிகழ் / எதிர்காலத்துக்கு பொருந்தும். இங்கே, கடந்த காலத்தை சுட்டுவதால், முரண் போல் தெரிகிறது !!!
'இன்னும் சில நாட்கள் கழிந்த பின் இம்சை அரசனை காண முடிந்தது' என்பது சரியாக இருக்குமோ ????
எ.அ.பாலா
useful & interesting blog.
Write more about the books, you read.
பிச்சை அவர்களே, (கிண்டலுக்கு அல்ல!)
நல்ல பதிவினைத் தந்ததற்கு நன்றி.
//அலுவலக வேடத்தை களைக்கும் வேளையில் உள்ளாடைகள் பிழியப்பட்ட தேனடையை விநோதமாக நினைவுப்படுத்துகின்றன//
இதில் விநோதமே இல்லை. உங்கள் உணர்வு மிகவும் நியாயமானதே. அலுவலகத்தில் உங்கள் இரத்தத்தை உறிஞ்சி விட்டு வீட்டுக்கு அனுப்புகிறார்கள்! (ஆஹா! என்ன ஒரு கம்யூனிச சிந்தனை!)
//இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது.
ithil ethO thappu iruppathaakath therikiRathu. aanaal ennannuthaan theriyalai.//
ஆமாம். அது தவறு தான். அயற்கூற்றில் 'இன்னும்' வரக்கூடாது. 'அதன் பிறகு' என்று மாற்றி வாசித்துப் பாருங்கள். சரியாக இருக்கும்.
Post a Comment