Friday, September 08, 2006

வேட்டையாடு விளையாடு - என் பார்வை

இணையமே இந்தப்படத்தை "வேட்டையாடி" முடிந்திருந்த தருணத்தில் நானும் கொஞ்சம் "விளையாடிப்" பார்க்கலாமே என்று தோன்றியதில் இந்தப் பதிவு.

உள்ளடக்கத்திலோ, கதை சொல்லும் உத்திகளிலோ, தொழில்நுட்ப சமாச்சாரங்களிலோ பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டு தமிழச்சினிமா தேக்கமடையாமல் ஒரு அடியேனும் முன்னேற்றி அழைத்துச் செல்லக்கூடிய சொற்ப படைப்பாளிகளில் கமல்ஹாசன் பிரதானமானவர். பொதுவாக ஆங்கிலப்படங்கள் Action, Drama, Romance, Thriller என்று ஏதாவது ஒன்றில் வகைப்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த வகைப் படங்களில் திரைக்கதை அதிகம் அலையாமல் நூல்பிடித்தாற் போல் ஒரே கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும். தமிழ்ப்படங்களை இவ்வாறு வகைப்படுத்துதல் பொதுவாக அரிதான விஷயம். சாதம், சாம்பார், குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசம் என்று குழைத்து அடித்தால்தான் நம்மவர்களுக்கு சாப்பிட்ட திருப்தியே இருக்கும். ஒரு சராசரி தமிழ்த் திரைப்பட பார்வையாளனும் இந்த வகையிலேதான் தனக்கு கேளிக்கையாக அமைகிற திரைப்பட ஊடகத்தின் உள்ளடக்கத்தையும் எதிர்பார்க்கிறான். படத்தின் நடுவே சம்பந்தமில்லாமல் வணிக நோக்கத்திற்காக நுழைக்கப்படுகிற 'ஐட்டம்' பாட்டுக்களின் லாஜிக் பற்றியெல்லாம் அவனுக்கு கவலையில்லை. குதித்தாடும் செழிப்பான மார்பகங்கள் தரும் மனக்கிளர்ச்சியே அவனுக்கு போதுமானதாக இருக்கிறது.

மேற்சொன்ன சம்பிரதாயங்களை பெருமளவிற்கு யோக்கியமாக தவிர்க்க முயன்று எடுக்கப்பட்டிருக்கிற படம் வே.வி. அசட்டுத்தனமான நகைச்சுவைகளோ, காதைக் கிழிக்கும் வசனங்களோ, கேமராவை நோக்கி பேசப்படும் "பஞ்ச்" டயலாக்குகளோ, (எனக்கு இதுதான் நகைச்சுவைக் காட்சிகளாக தோன்றுகிறது) நாயகன் அந்தரத்தில் பறக்கும் நகைச்சுவைகளோ இல்லாமல் குற்றங்களின் புலனாய்வு நோக்கில் திசைமாறாமல் செய்யப்பட்டிருக்கும் திரைக்கதை (சிக்கிமுக்கி நெருப்பே போன்ற அபத்தங்களை தவிர்த்து) 'சபாஷ்' சொல்ல வைக்கிறது.

()

சுஜாதா ஒரு கட்டுரையில் ராணுவ வீரர்கள் களத்தில் போரிடுவதின் அடிப்படையைப் பற்றி எழுதியிருந்தார். நாட்டுப்பற்று, தேசியக்கொடி போன்ற மாய்மாலங்கள் ஒரு புறமிருந்தாலும், தன்னுடன் பழகிய தோழன் எதிரணியினரால் சுடப்பட்டு இறந்ததில் ஏற்படும் கோபமும், ஆவேசமும்தான் அவர்களை போரிட வைப்பதின் ஆதாரமான விஷயமாக விளங்குகிறது என்று. இதிலும் அந்த விஷயம் சுட்டிக் காட்டப்படுகிறது. நண்பர் ஆரோக்கியராஜின் மகள் கற்பழித்து கொலை செய்யப்படும் சோகம் ஆறுவதற்குள் நண்பரும் அவர் மனைவியும் கூட கொலை செய்யப்படுவது ராகவனை இந்த வழக்கில் ஒரு காவல்துறையின் அதிகாரியின் வழக்கமான கடமைகளை மீறி ஆவேசமாக செயல்பட வைக்கிறது எனலாம்.

கமல் இந்தப்படத்தில் இயல்பாக நடிக்க முயன்றிருக்கிறார். என்றாலும் சில வணிக கட்டாயங்களுக்காக சண்டைக் காட்சிகளில் வழக்கமான நாயக வேஷத்தையும் கட்ட வேண்டிதாயிருக்கிறது. படத்தின் முதல் பாடல் (கற்க கற்க) சிறப்பாகவும் பாராட்டத்தக்க உத்தியுடனும் எடுக்கப்பட்டிருக்கிறது. கமலின் கடந்தகால வாழ்வு பிளாஷ்பேக்கில் தவணை முறையில் சொல்லப்பட்டிருந்தாலும் பொருத்தமான இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. திரில்லர் பட திரைக்கதையின் ஆதாரமே அடுத்தது என்ன என்று பார்வையாளளை எப்போதும் இருக்கையின் நுனியில் அமரச் செய்வதுதான். புலனாய்வின் இடையே சொல்லப்படும் அந்த மென்மையான காதல் காட்சிகள் நீளம் திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது.

தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பான்மையாகவும் பார்வையாளனின் மூளையை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாத "லாஜிக் மீறல்கள், கிளிஷேக்கள்" இந்தப்படத்திலும் உள்ளது. அமெரிக்க நாய்களின் புலன்களினாலேயே உணரப்படாத பிணங்கள், ராகவன் "உள்ளுணர்வினால்" உணரப்படுவதும், (இறுதிக்காட்சியில் "நீ ஒரு மோப்பம் பிடிக்கிற மோசமான நாய்டா" என்று வில்லன் வேறு இதை உறுதிப்படுத்துகிறான்) வழக்கு விவகாரங்களை பொது தொலைபேசியில் பேசுவதும், காவல்துறை அதிகாரியின் மூக்கருகிலேயே வில்லன் மாறுவேடத்தில் கடந்து செல்வதும் போன்றவையான காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். (வில்லன் என்றாலே தலை நிறைய மயிர் வளர்த்திருக்க வேண்டும் என்கிற கவுதமின் எதிர்பார்ப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்).

()

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் சில சிறப்பாக அமைந்திருந்ததற்கு ஏற்ப, பாடல்களின் காட்சியமைப்பும் சிறப்பாக அமைக்கபட்டிருக்கிறது. பின்னணி இசையில் ஹாரிஸ் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறாரா என்று தோன்றுகிறது. கமல்-ஜோ காதல் காட்சிகளின் பின்னணியில் பழைய இந்திப்படங்களை போல நூறு வயலின்கள் கதறுகிறது. பின்னணி இசை என்றாலே ஏதாவதொரு வாத்தியம் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதில்லை. அவற்றிற்கு ஓய்வு கொடுக்க வேண்டிய தருணங்களும் உண்டு.

குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் எடிட்டர் ஆண்டனியும். இருவரின் கூட்டணியில் பல காட்சிகள் புத்துணர்ச்சியாக இருக்கிறது.

()

முந்தைய படமான 'காக்க காக்க'விலிருந்து முற்றிலும் மாறி எடுக்க தீர்மானித்ததாக இயக்குநர் கவுதம் (மதனுடனான) பேட்டியில் சொல்லியிருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் 'கா.கா' வை நினைவுப்படுத்துவதை தவிர்க்க இயலவில்லை. மேலும் இளமாறன், மாயா என்று முந்தைய படத்தின் பாத்திரங்களையே உபயோகிக்கும் அளவிற்கு என்ன பெயர் பஞ்சம் அல்லது சம்பந்தப்பட்ட பெயர்களின் மேல் இயக்குநருக்கு என்ன பிரேமை என்று புரியவில்லை. மேலும் 'கா.கா'வின் நாயகி ஜோதிகாவையே இதிலும் உபயோகித்ததில் இந்த ஒப்பிடுதல் இன்னும் அதிகமாகிறது. (சம்பந்தப்பட்ட பாத்திரத்திற்கு குறிப்பிட்ட நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் தீர்மானிப்பதில் தவறில்லை. ஆனால் பாத்திர குணாதிசயங்களும், காட்சியமைப்புகளும் ஒத்துப் போவதில்தான் இந்த சிக்கல் ஏற்படுகிறது).

An another episode in police officer's life என்பது இந்தப்படத்தின் tag line. ஆனால் The same episode of "Kakka Kakka" has been remade" என்பதுதான் என் கருத்தாக இருக்கும்.

()

படம் பார்க்கச் சென்ற சூழலை எழுதாவிட்டால் சில பேர் கோபித்துக் கொள்ளவும், இந்தப் பதிவின் தனித்தன்மை பாதிக்கப்படும் என்பதினாலும் இது தவிர்க்க முடியவில்லை. ஆரோக்கியமான தொழில்நுட்ப சமாச்சாரங்கள் அமைந்திருக்கும் அரங்கத்தில்தான் இந்த மாதிரியான படங்களின் காணும் அனுபவம் சிறப்பாக இருக்கும். ஆனால் என் வீட்டருகில் உள்ள ஒரு சுமாரான தியேட்டரில் (பிருந்தா) பார்த்ததில் பெரும்பாலான வசனங்கள் காதில் விழவில்லை. ஓயாமல் அழுது கொண்டிருந்த ஒரு கைக்குழந்தையின் கதறலோடும், அது ஓய்ந்த பிறகு அந்த தம்பதியினரின் சச்சரவு ஒலிகளின் பின்னணியோடும்தான் இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. வெளியே போக முயன்ற குழந்தையின் தாயை தடுத்து "பால்குடு, பால்குடு" என்று குழந்தையை இயல்பில்லாத முறையில் சமாதானமடைய வைக்க முயன்ற அந்த தந்தையையும், முலைக்காம்பை நிராகரித்து தொடர்ந்து கதறிய குழந்தையை சமாளிக்க முடியாமல் தவித்த அந்த தாயையும் கோபிக்க முடியாமலும், ஆனால் எழுகிற எரிச்சலை தவிர்க்க முடியாமலும் இந்தப் படத்தை காணும் அனுபவம் நேர்ந்தது.

பொதுவாகவே பொது இடங்களில் எவ்வாறு புழங்குவது என்கிற அடிப்படை நாகரிகம் அறியாத நம்மவர்களின் மேல் எப்போதும் எனக்கு எரிச்சல் உண்டு. "தமிழர்களின் தொன்மை நாகரிகம்" என்று கட்டுரை எழுதுபவர்களை முகத்திலேயே குத்த வேண்டும் என்கிற ஆசையுமுண்டு. மற்றவர்களின் மேல் எச்சில் படக்கூடும் என்கிற அறிவு இல்லாமல் கண்ட இடங்களில் காறித்துப்புபவர்கள், பொது இடங்களில் உரத்த குரலில் உருப்படியில்லாத உரையாடல்களை நிகழத்துபவர்கள், அணுகுண்டு அழிவிலிருந்து தப்பி ஓடுபவர்கள் போல் பதட்டத்துடன் மோதிக் கொண்டு ஓடி பேருந்து இருக்கையில் இடம் பிடிப்பவர்கள், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறோம் என்கிற பிரக்ஞையே இல்லாதவர்கள்; அப்படி இருந்தும் அதை அலட்சியப்படுத்துபவர்கள்.... இந்த மாதிரி பிரகஸ்பதிகளை யாராவது வேட்டையாடினால் நன்றாக இருக்கும்.

8 comments:

Boston Bala said...

படம் பார்த்த சூழலும் உங்களின் hunting targets-உம் திரைப்பட பார்வையை விட பிரமாதமாக இருந்தது என்றால் விளையாட்டா எடுத்துப்பீங்களா? வினையாக மாறிவிடுமா ;-)

ஜோ / Joe said...

படத்தையும் ,படம் பார்த்த சூழலையும் சுவாரஸ்யமாக விமர்சித்திருக்கிறீர்கள்

வெளிகண்ட நாதர் said...

//தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பான்மையாகவும் பார்வையாளனின் மூளையை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாத "லாஜிக் மீறல்கள், கிளிஷேக்கள்" //இப்படி எத்தனை நாளைக்கு சொல்லிக்கிட்டிருக்க போறோம்னு தெரியல்லை! இந்த மாதிரி சில அஸம்ஷன்ஸ்களோட படம் எடுத்து அப்பறம் எல்லாம் காம்பரமைஸ் ஃபார்முலான்னு சொல்லிக்கிட்டு திரிவோம்! மக்களை முட்டாளா வெறும் அரசியல்வாதிங்க மட்டும் வச்சிருக்க நினைக்கில்லை, மொத்தத்திலே எல்லாருமே தான் இது ஒரு விஸிஷியஸ் சர்கிள்னு சொல்றது சரி தான்!

சுதர்சன் said...

//இந்த மாதிரி பிரகஸ்பதிகளை யாராவது வேட்டையாடினால் நன்றாக இருக்கும்.//

:))

Anonymous said...

தமிழ் பதிவுகள் http://www.tamilblogs.com

கார்த்திக் பிரபு said...

//An another episode in police officer's life என்பது இந்தப்படத்தின் tag line. ஆனால் The same episode of "Kakka Kakka" has been remade" என்பதுதான் என் கருத்தாக இருக்கும்//
சரியாக சொல்லி இருக்கீர்கல்..நல்ல விமர்சனம்..பாபாஜி சொன்ன மாதிரி நீங்களும் இந்த படத்திற்க்கும் சுஜாதாவின்
கதைகளுக்கும் உள்ள தொடர்பை சொல்லி இருக்கீர்கள்..வாழ்த்துக்கள் ..ரொம்ப குறைவா எழுதுறீங்களே ஏன்?

ச.சங்கர் said...

படத்தை பார்த்துட்டு இதைப் பர்றி விமர்சனத்தில் வேட்டையாடி விளையாடி இருக்கும் கமல் ரசிகர்களை திட்டலாம் என வந்தவனுக்கு...ஒரு ஆறுதலான விஷயம்...என்னைப்போல் இந்தக் கொடுமையை நிறைய பேர் அனுபவித்திருக்கிறார்கள் என்பது மட்டுமே :))

sha said...

best keep it up.thanking u.