Monday, September 25, 2006

சில முக்கிய(மற்ற) குறிப்புகள் - பகுதி 2

எம்.ஜி.சுரேஷ் எழுதிய நூலுக்கு "ஏலாதி" விருது

Post-modernism, Magical Realism, Cubism என்று மேற்கிலிருந்து இறக்குமதியான பல இலக்கிய வடிவங்களில் மாதிரிக்கு ஒன்றாக வைத்து புனைவுகள் எழுதியிருப்பவர் எம்.ஜி.சுரேஷ். இவை பரிசோதனை முயற்சிகள் என்ற அளவிலே ஏற்றுக் கொள்ளலாமே ஒழிய இவற்றிற்கான இலக்கிய தகுதிகள் எதுவுமில்லை என்பதுதான் என் அபிப்ராயம். ஆனால் மேற்குறிப்பிட்ட குழப்பமான இலக்கிய வடிவங்களை தமிழ் வாசகர்களுக்கு எளிமையான முறையில் விளக்கி கட்டுரைகள் எழுதியவர். அவர் எழுதிய நூலான "பின்நவீனத்துவம் என்றால் என்ன?" என்கிற முயற்சி எளிமையாகவும் சிறப்பாகவும் அமைந்திருப்பதாக இலக்கிய வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. "பன்முகம்" என்கிற சிற்றிதழையும் இவர் நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தால், மேற்குறிப்பிட்ட நூலுக்கு "ஏலாதி" விருது கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடந்த விழாவொன்றில் வழங்கப்பட்டது. இந்நூலைப் பற்றி சுந்தர ராமாமி சொன்னது. "இந்த நூல் பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்குமேயானால் தமிழ்ச் சிந்தனைச் சூழலே மாறியிருக்கும்." (நன்றி. இனிய உதயம்: செப்06)

இவர் எழுதிய இன்னொரு நூல் "இஸங்கள் ஆயிரம்". (மருதா பதிப்பகம், ரூ.120/-) "இஸங்களைப் பற்றிய போதிய புரிதல் தமிழ்நாட்டில் இல்லை என்பது வருந்தத்தக்கது. அதற்கான போதிய நூல்கள் தமிழில் வெளிவராததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே தமிழ்ச் சூழலில் இஸங்களைப் பற்றிய சரியான புரிதல் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது." என்கிறது பதிப்பகத்தாரின் குறிப்பு.


உயிர்மையின் தலையங்கள் மற்றும் கட்டுரைகள்

மனுஷ்ய புத்திரனின் உரைநடையை கையாள்கிற விதத்தின் மீது என்க்கிருக்கிற பிரமிப்பை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். உயிர்மையில் அவர் எழுதும் தலையங்களைப் படிக்கும் பெரும்பான்மையான சமயங்களில் இது நிரூபணமாகியிருக்கிறது. செப்06 இதழில் இலங்கைப் பிரச்சினை குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சர்ச்சைக்குரிய குளிர்பானங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

.........'ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்ந்தால் இங்கு காஷ்மீர் போன்ற நிலை உருவாகும்' 'நாங்களும் துப்பாக்கி ஏந்திப் போராடுவோம்' என்பது போன்ற வெற்றுச் சவடால்களாலான 'காமெடி டிராக்குகள்' ஈழத் தமிழர்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. எந்த அரசியல் உள்ளீடும் அற்ற இந்தச் சவடால்களை மேடைகளில் முழங்குவதும் உடனே இவர்கள் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் செய்து விட்டார்கள், பிரிவினையை தூண்டுகிறார்கள் என்று சொல்லி கைது செய்யப்படுவதும் ஏதோ திருடன் போலீஸ் விளையாட்டைப் போல் மாறிவிட்டது. ......"

.....ஈழத் தமிழர்களை ஆதரிப்பவர்கள் என்றாலே அது புலிகளை ஆதரிப்பவர்கள் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஈழ மக்களை ஆதரிப்பதும் பிரபாகரனை ஆதரிப்பது இரண்டு வேறுபட்ட பிரச்சினைகள். ஈழத் தமிழர்கள்பால் நம்முன் இருப்பது உணர்வுபூர்வமான கடமைகள், அரசியல் நாடகங்கள் அல்ல. என்று மிக அறிவுப்பூர்வமாக இந்தப் பிரச்சினை குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

உண்மையில் இது குறித்த அக்கறை பெரும்பான்மயான அரசியல்வாதிகளுக்கோ, பொது மக்களுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் மீதான பார்வை தலைகீழாக திரும்பிவிட்டது துரதிர்ஷ்டவசமானது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு வரும் அம்மக்கள், துப்பாக்கியைப் பிடித்து வருகிற சந்தேக பார்வையுடனேயே பார்க்கப்படுகிறார்கள். இது குறித்து உணர்ச்சி பொங்க எழுதும் மக்களில் எத்தனை பேர் அவர்களின் துயர் நீக்க களத்தில் இறங்கி போராடியிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அகதி முகாம்களுக்கு எத்தனை பேர் சென்று பார்த்திருப்பார்கள்? அல்லது ரவிகுமார் போல் ஆக்கப்பூர்வமான அறிக்கை ஒன்றை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பார்கள்?

மேலும் இலங்கைத் தமிழர்களின் மீது அனுதாபம் காட்டுபவன்தான் உண்மையான தமிழன் என்று சில பேர்களால் ஒரு பிம்பம் கட்டப்படுகிறது. மனித நேயத்தின் எல்லையை ஏன் இப்படி எல்லைக் கோடுகளை கொண்டு குறுக்கிக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உலகம் முழுக்கவே போரினாலும் வன்முறைகளினாலும் பல அப்பாவிகளும், பெண்களும், குழந்தைகளும் சாகடிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் இஸ்ரேல்.

.... கோக், பெப்ஸி, போன்ற குளிர்பானங்கள் வெறும் குளிர்பானங்கள் மட்டும் அல்ல. அவை ஒரு மனோபாவத்தின் வெளிப்பாடுகள். இந்த பானங்களை அருந்துகிற ஒருவர் நாகரிக வாழ்வின் பிம்பங்களையும் அதனோடு சேர்ந்து அருந்துகிறார். இந்த பிம்பங்கள் ஊடகங்கள் வழியாகத் தொடர்ந்து பெருக்கப்படுகின்றன. .........

தாராளமயமாக்கலின் மோசமான எதிர்வினை உள்ளூர் தயாரிப்புகள் பன்னாட்டு நிறுவனங்களோடு ராட்சதத்தனங்களோடு மோத முடியாமல் முடங்கியதுதான். கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், நடிகர்களின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை பயன்படுத்திக் கொண்டு ப.நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்கின்றன. இவர்களின் தயாரிப்புகளுக்கு உள்ளூர் வளங்களும் மனிதசக்தியும் சுரண்டப்படுகின்றன. சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்துதல், குடிநீரை சுரண்டுதல், விளம்பரங்கள் மூலம் மக்களை மூளைச் சலவை செய்தல் போன்ற தீவினைகளில் ஈடுபடுகின்றன. மத்திய அரசு இவ்வாறான பன்னாட்டு நிறுவனங்களின் செயல்களை கட்டுப்படுத்துமாறு சட்ட மசோதா கொண்டு வந்தால் நல்லது. ஆனால் எளிய முறையில் விலைபோகும் நம் அரசியல்வாதிகள் அந்த பண முதலைகளின் கையூட்டுதல்களுக்கு மயங்காமல் இவற்றை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்செயலே.

()

எழுத்தாளர் திலகவதியை சிறப்பாசிரியராகக் கொண்டு "அம்ருதா" என்றொரு இடைநிலை இதழ் தொடங்கப்பட்டிருக்கிறது. திலகவதியின் படைப்புகள் குறித்து எனக்கு சிறப்பான அபிப்ராயம் ஏதுமில்லையென்றாலும், இந்தியாவின் மற்ற மாநில எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்து தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதின் மூலம் அவரின் பணி பாராட்டக்கூடியது. இந்த இதழின் செப்06 எனக்கு காணக்கிடைத்தது. பவித்ரா சீனிவாசனின் (இந்தப் பெயரில் வலைப்பதிபவரும் இவரும் ஒன்றுதான் என நம்புகிறேன்) சிறுகதை ஒன்றுடன் தொடங்கும் இவ்விதழில் பல சுவாரசியமான அம்சங்கள் உள்ளன. இன்றைய பெங்களூரை தன்னுடைய பழைய நாட்களோடு ஒப்பிட்டு வாஸந்தி எழுதியிருக்கும் கட்டுரை சுவை. அஸாமிய இலக்கியவாதியான இந்திரா கோஸ்வாமியன் நேர்காணல் சிறப்பாக பதிவாகியிருக்கிறது. மற்றவற்றை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

தொடர்பிற்கு: 5, ஐந்தாம் தெரு, சோமசுந்தரம் அவென்யூ, போரூர், சென்னை-600 116. போன்: 22522277. மின்னஞ்சல்: amruthamagazine@yahoo.com

7 comments:

அருள் குமார் said...

உண்மையில் இந்த தொடர் பயனுள்ளதாய் அமைகிறது சுரேஷ். தொடர்ந்து எழுதுங்கள்.

மயிலாடுதுறை சிவா said...

வழக்கம் போல் நன்றாக இருந்தது சுரேஷ். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி
மயிலாடுதுறை சிவா

கசி said...

நன்றாக இருந்தது. ஏலாதி விருது என்றால் என்ன? கொஞ்சம் விளக்கமாக எழுதவும்.

Anonymous said...

கோக், பெப்ஸி, போன்ற குளிர்பானங்கள் வெறும் குளிர்பானங்கள் மட்டும் அல்ல. அவை ஒரு மனோபாவத்தின் வெளிப்பாடுகள். இந்த பானங்களை அருந்துகிற ஒருவர் நாகரிக வாழ்வின் பிம்பங்களையும் அதனோடு சேர்ந்து அருந்துகிறார். இந்த பிம்பங்கள் ஊடகங்கள் வழியாகத் தொடர்ந்து பெருக்கப்படுகின்றன. .........

Is not the same applicable to
Uyirmai, little magazines etc
in a different sense.Are they
not மனோபாவத்தின் வெளிப்பாடுகள்.
In this world everything can be
reduced to an item of consumption
whether it is beer or music or
poetry. So what is the big deal.

Anonymous said...

"இந்த நூல் பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்குமேயானால் தமிழ்ச் சிந்தனைச் சூழலே மாறியிருக்கும்."

For better or worse :). I would rate it as a very ordinary book.

பிச்சைப்பாத்திரம் said...

//Is not the same applicable to
Uyirmai, little magazines etc//

நண்பரே, நீங்கள் கூறுவது உண்மைதான். சிறுபத்திரிகை படிக்கிற ஒரு சாதாரண வாசகனும் தன்னை ஓர் அறிவுஜீவியாக நினைத்துக் கொள்கிற மனோபாவத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். "நான் குமுதம் மாதிரி குப்பைகளை படிக்கிறதில்லப்பா" என்று போலியாக சலித்துக் கொள்கிற பாவனையை ஏற்படுத்திக் கொள்கிறான்.

ஆனால் குளிர்பான மனோபாவத்தோடு இதை ஒப்பிடுவது சரியானது அல்ல. அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது. ஆனால் நான் குறிப்பிட்டது அப்படி அல்ல. சிறுபத்திரிகை படிக்கிறாற் போல் பாவனை செய்கிறவன் காலப்போக்கில் விஷய கனத்தில் ஆழ்ந்து போய் ஆக்கப்பூர்வமான வாசகானுபவத்தில் பயணிக்கக்கூடும்.

பிச்சைப்பாத்திரம் said...

//ஏலாதி விருது என்றால் என்ன? கொஞ்சம் விளக்கமாக எழுதவும். //


ராதாராகவன்,

பொதுவாக விருதுகள் ஏதாவதொரு அமைப்பின் பெயராலோ அல்லது ஒரு தனிப்பட்ட நபரின் பெயராலோ வழங்கப்படும். ஏலாதி என்றால் என்னவென்று எனக்கும் தெரியவில்லை. நான் படித்ததில் இதைப் பற்றிய விவரங்கள் இல்லை. கிடைத்தால் இங்கு பதிலளிக்கிறேன்.