நானும் எனது புத்தகங்களும்
இணையத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டு பெரும்பாலும் 'என்னென்ன படிக்கிறேன் பார்' என்று ஜம்பமடிப்பதற்குத்தான் உதவும் என்றாலும், வாசகர்களால் பரவலாக படிக்கப்படும் நல்ல புத்தகங்களைப் பற்றின அறிமுகமும், இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் தனி மனித ஆளுமைகளைப் பற்றியும் அறிய உதவும் என்பதால் இந்த தலைப்பினுள் நானும் நுழைகிறேன். பங்குபெற அழைத்த நண்பர்களான கே.வி.ராஜா மற்றும் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு நன்றி.
()
'உன் நண்பர்களைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' என்கிற பழமொழியை மாற்றி 'நீ படிக்கிற புத்தகங்களைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' என்று மாற்றியமைக்க விரும்புகிறேன். புத்தகங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு ஜென்மம் ஜென்மமாக தொடர்வதோ என்று மிகையாக எண்ணத் தோன்றுமளவிற்கு புத்தகங்களின் மீது பிரேமை கொண்டவன் நான். ஒரு நூலகனாகவோ, புத்தக விற்பனையானகவோ இருந்திருந்தால் (இலவசமாக) நிறைய புத்தகங்கள் படிக்கிற சந்தர்ப்பம் கிடைக்குமே என்று முன்பெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக எண்ணுவதுண்டு.
எல்லோரையும் போல சிறுவயதில் அம்புலிமாமா, ராணி காமிக்ஸ் என்றுதான் என் வாசிப்பனுபவம் ஆரம்பித்தது. ஆனால் இது ஆவேசமாக மாற ஆரம்பித்தது, ராஜேஷ்குமாரின் ஒரு கிரைம் நாவலில் இருந்து. பதின்ம வயதில் இது இயல்பாக சரோஜாதேவி புத்தகங்களின் பக்கம் பிற்பாடு திரும்பினாலும், சுஜாதா தனது கட்டுரைகளின் மூலம் நல்ல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வைக்க படகு சரியான திசையை நோக்கித் திரும்பியது.
புத்தகங்களைப் படித்து முடிப்பது மட்டும் முக்கியமல்ல, அவைகளை நாம் சரியாக உள்வாங்கிக் கொள்கிறோமா என்பதும் அந்த உணர்வுகளை நம் சிந்தனையின் மூலம் ஜீரணித்து அதன்படி நடக்க முயல்கிறோமா என்பதும் மிக முக்கியமானது. நீதி என்று பார்த்தால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளிலேயே அத்தனை நீதிகளும் சொல்லப்பட்டு விட்டன. என்றாலும் அவை பல்வேறு விதமாக இலக்கிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும் நமக்கு இன்னும் அலுக்கவில்லை.
என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை:
முன்பொரு காலத்தில் தேடி தேடிச் சேகரித்த பாலகுமாரனின் பாக்கெட் சைஸ் நாவல்களும், கணையாழி, காலச்சுவடு போன்ற பொக்கிஷமாக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிற சிற்றிதழ்களும் புத்தகங்கள் என்ற அளவுகோலில் நிராகரிக்கப்படுமாயின் எண்ணிக்கை 230-250.
சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள்:
சதுரங்கச் சிப்பாய்கள் - முத்துராமன்
கோபுரம் தாங்கி - சுதேச மித்திரன்
காடு - ஜெயமோகன்
ஆனந்தாயி - சிவகாமி
கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா
ரதிப் பெண்கள் திரியும் அங்காடித் தெரு - எழில்வரதன்
தற்போது படித்துக் கொண்டிருக்கிற (நூலக) புத்தகங்கள்:
நாவல் - ஜெயமோகன்
பொட்டல் - எஸ். கணேசராஜ்
·பிடல் காஸ்ட்ரோ - தா.பாண்டியன்
அகிரா குரோசாவா வாழ்க்கை சரிதம் - இளையபாரதி
கடலோர வீடு - பாவண்ணன்
காதுகள் - எஸ்.வெங்கட்ராம்
உடைபடும் மெளனங்கள் - அ.மார்க்ஸ்
சித்தன் போக்கு - பிரபஞ்சனின் சிறந்த சிறுகதைகள் - தொகுப்பு பெருமாள்முருகன்
பெரியாரியல் - மா.நன்னன்
போர் தொடர்கிறது - ஸ்பானிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு
ரொம்ப நாட்களாக படிக்க நினைத்து ஷெல்ப்பில் இளைப்பாறுகிற நூல்கள்:
குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்
ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
ஜீரோ டிகிரி - சாருநிவேதிதா
The God of Small Things - Aruntati Roy
........ இன்னும் பல
எப்போதும் பிடித்தமானமானதாக இருக்கிற நூல்கள்:
சத்திய சோதனை - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
ரத்த உறவு - யூமா வாசுகி
நிலா நிழல் - சுஜாதா
சம்ஸ்காரா- அனந்தமூர்த்தி
The Fountain Head - Any Rand
ஜி.நாகராஜனின் படைப்புகளின் தொகுப்பு
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
The oldman and sea - Ernest Emmingway
பாரதியார் கவிதைகள்
........ இன்னும் பல
வாங்கிப்படிக்க விரும்புகிற நூல்கள்:
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - புஷ்பராஜா
ஆழிசூழ்உலகு - ஜோ.டி.குரூஸ்
பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு
சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்
கலகக்காரர் தோழர் பெரியார் - மு.இராமசுவாமி
நாகம்மாள், அறுவடை - ஆர்.சண்முகசுந்தரம்
ஆட்சித்தமிழ் வரலாற்றுப் பார்வை - சு.வெங்கடேசன்
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
சினிமாவும் நானும் - மகேந்திரன்
உலக சினிமா - எஸ்.ராமகிருஷ்ணன்
One Hundred Years of Solitude - Gabriel Garcia Marquez
........ இன்னும் பல
நான் அழைக்க விரும்பும் நபர்கள்.
சுந்தரராமசுவாமி
சாருநிவேதிதா
குஷ்வந்த் சிங்
கோவை ஞானி
ப.சிதம்பரம்
இது நடைமுறையில் எளிதில் சாத்தியமில்லை என்பதால் இணைய நண்பர்களில்,
இரா.முருகன்
ஹரிகிருஷ்ணன்
அருள்
வெங்கடேஷ்
வே.சபாநாயகம்
...தம்பட்டம் முடிஞ்சாச்சு.
suresh kannan
9 comments:
நன்றி.
கலக்கல். சுயதம்பட்டத்தை தவிர சில புதிய புத்தகங்களை அறிந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகளும் இவ்விளையாட்டில் உள்ளன.
எந்த நூலகத்தில் தங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கின்றன? தெரிவிக்கவும்.
அன்புடன்
ராஜ்குமார்
Dear Rajkumar,
Thanks for your reply. The books are available in Connemara Public Library, Egmore. Devaneya Paavanar PUblic Library (Main) Opp. TVS. Mount Road.
"இணையத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டு பெரும்பாலும் 'என்னென்ன படிக்கிறேன் பார்' என்று ஜம்பமடிப்பதற்குத்தான் உதவும் என்றாலும்" - havent even started reading ur entry, but why such a negative approach?
அன்பு ஷங்கர்,
இது Negative Approach -ஆக உங்களுக்கு தெரிகிறதா? கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் நான் சொன்னதின் பொருள் விளங்கும். என்னை ஒரு சினிக் என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. புத்தகப் பட்டியலை பெருமையாக சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மையான நாம் (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) அதிலுள்ள விஷயங்களை எவ்வளவு தூரம் ஆழமாகப் படித்து உள்வாங்கிக் கொள்கிறோம்? சில பணக்காரர்கள் தடித்தடியான புத்தகங்களை பெயர் தெரிகிறாற் போல் வரவேற்பறையில் அலங்காரமாக அடுக்கி வைத்திருக்கிறார்களே, அதைப் போலத்தான் நாமும் இருக்கிறோம். இல்லையென்றால் பாரதி எழுதின ஒரு பாட்டுக்கே இங்கே புரட்சி வெடித்திருக்க வேண்டுமே? எத்தனை நீதி நூல்கள் இருந்தாலும் பொய்யும், புரட்டும்தானே நம் வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கிறது?
ஷங்கர் மாதிரி ரொம்ப ஆப்டிமிஸ்டிக்காக இருக்கற இளைஞர்களைப் பாத்தா சந்தோஷமா இருக்கு. ச்சே...இதெல்லாம் வரம்டா சாமி.
தமிழ் மணத்தில் வரும் நல்ல பதிவுகளையெல்லாம் படிப்பதற்கும், என்னுடைய அனுபவங்களையும், எண்ணங்களையும் விளக்கமாக வெளிப்படுத்த எனக்கென்று ஒரு பதிவை ஆரம்பிப்பதற்கும் நேரமில்லாததால், கொஞ்ச காலத்துக்கு பின்னூட்டமிட்டு குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அதிலிருந்து விதி விலக்காக உங்களது இந்த வரிகளுக்கு சபாஷ் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.
//புத்தகப் பட்டியலை பெருமையாக சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மையான நாம் (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) அதிலுள்ள விஷயங்களை எவ்வளவு தூரம் ஆழமாகப் படித்து உள்வாங்கிக் கொள்கிறோம்? சில பணக்காரர்கள் தடித்தடியான புத்தகங்களை பெயர் தெரிகிறாற் போல் வரவேற்பறையில் அலங்காரமாக அடுக்கி வைத்திருக்கிறார்களே, அதைப் போலத்தான் நாமும் இருக்கிறோம். இல்லையென்றால் பாரதி எழுதின ஒரு பாட்டுக்கே இங்கே புரட்சி வெடித்திருக்க வேண்டுமே? எத்தனை நீதி நூல்கள் இருந்தாலும் பொய்யும், புரட்டும்தானே நம் வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கிறது? //
அருமையாக அறைந்து சொல்லியிருக்கிறீர்கள்.
இதையெழுதிய உங்கள் மனநிலைதான் எனக்கும். புத்தகங்கள் முகக்கண்ணாடி போன்றவை, அவை நம்மிடம் அடையாளங்காட்டும் அழுக்குகளையெல்லாம் நம்மால் களைய முடியவில்லையே. ஏன் அவற்றையெழுதும் எழுத்தாளர்களே சில நேரங்களில் ஏமாற்றி விடுகிறார்கள். அங்கனம் ஏமாற்றாத பாரதி போன்றவர்களே உண்மையான எழுத்தாளர்கள்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
//சில பணக்காரர்கள் தடித்தடியான புத்தகங்களை பெயர் தெரிகிறாற் போல் வரவேற்பறையில் அலங்காரமாக அடுக்கி வைத்திருக்கிறார்களே, அதைப் போலத்தான் நாமும் இருக்கிறோம். இல்லையென்றால் பாரதி எழுதின ஒரு பாட்டுக்கே இங்கே புரட்சி வெடித்திருக்க வேண்டுமே? எத்தனை நீதி நூல்கள் இருந்தாலும் பொய்யும், புரட்டும்தானே நம் வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கிறது//
நான் இந்த கருத்திலிருந்து சற்று மாறுபடுகின்றேன், நமது மனதில் ஆழ ஊறிய சில எண்ணங்கள் புத்தகங்கள் படிப்பதால் மாற்றமுடியாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் அந்த எண்ணங்கள் சற்று நீர்த்து போக உதவுவது புத்தகங்கள், சொந்த அனுபவத்தில் நான் கண்டது எண்ணுடைய சில கோணங்கள்,பர்வைகள் புத்தகங்கள் படித்ததால் மாறியது என்பது...
பொதுமக்களிடம் புத்தகத்தின் தாக்கம் என்பது திரைப்படங்களின் தாக்கத்தை விட மிக மிக குறைவு, புரட்சியெல்லாம் எதிர்பார்ப்பது எதிர்பார்ப்பவர்களின் தவறுதான் அது, புரட்சி என்பது வாழ்வியலில், அன்றாட வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும் போது மட்டுமே அதுவும் உயிர்பிரச்சினை ஏற்படும் ஏற்படும்போது மட்டுமே ஏற்படும் என்பது உலகறிந்த உண்மை, புத்தகங்களினாலும் எழுத்துக்களினாலும் சமூகத்தில் ஒரு சிலரின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமே தவிர அரசியலோ, பேச்சோ அல்லது திரைப்படங்கள் ஏற்படுத்தும் வெகுசன தாக்கத்தை புத்தகங்களால் ஏற்படுத்த முடியாது என்பது எனது கருத்து
மூக்கன்:
நயனதாராவின் பெரிசான புகைப்படத்தையும் பேட்டியையும் அதிமுக்கியமாக போட்டுவிட்டு கீழே ஒரு வரி கமெண்ட் எழுதுவதும் ஆப்டிமிஸத்தின் ஒரு முக்கிய அறிகுறியா? :-)
சுரேஷ்,
எல்லோருமே ஆய்வுக்கட்டுரைகள் டைப்புல எழுதிக்கிட்டு இருந்தா, இது மாதிரி சரக்கு யார் எழுதறது..??
கூத்துல கோமாளி வேணுமில்ல..? :-)
அது ஆப்டிமிஸமோ இல்லை ஆட்டுக்கால் ரசமோ..நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ரசம் இல்லையா..?? அழகான விஷயத்தைப் பாத்தா, கண்ணை மூடிக்கிட்டு மனசை ஏன் இப்படி இறுக்கிகணும்..??
என்னவோப்பா..நான் சொன்னா அறிவிஜீ...வ்வ்வ்வ்விகளுக்கு புரியவா போவுது..??
Post a Comment