ஒரு திரைப்படம், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பெரும்பான்மையை பித்துப்பிடிக்க வைத்து மனப்பிறழ்வு மந்தைகளாக ஆக்க முடியும் என்பதைக் காணும் போது அந்த ஊடகத்தின் அசுர பலத்தை மீண்டும் வியப்பதா அல்லது நாம் எவ்வளவு பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பதற்காக வேதனைப்படுவதா என்று தெரியவில்லை. 'எந்திரன்' திரைப்பட வெளியீடு குறித்து அதன் ரசிகர்கள் நடத்தின கோமாளித்தனங்களை தன்னுடைய வணிகத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியத்தோடு (இதுவே எதிர்மறையானதாகவும் மாற வாய்ப்பிருக்கிறது) சன் தொலைக்காட்சி ஒளிபரப்பின காட்சித் தொகுப்பினை நேற்று காணக் கொடுத்த வைத்த பரவசத்தோடு இதை எழுதுகிறேன்.
அலகு குத்தல்கள், பால் குடங்கள், மண்டி போட்டு மலையேறுதல்கள், படப்பெட்டிக்கு பூஜை புனஸ்காரங்கள், கட்அவுட்டிற்கு பாலாபிஷேகங்கள்.. இவ்வளவும் எதற்காக? தன்னுடைய பிரியமான நடிகரின் படம் வெற்றிகரமாக ஓடுவதற்காம். இத்தனையையும் கள்ள மெளனத்தோடு கவனிக்கிற அதன் மூலம் இந்தக் கோணங்கித்தனங்களை மறைமுகமாக ஊக்குவிக்கிற ரஜினியின் இமயமலை சுற்றுலா 'ஆன்மீகம்' எத்தனை போலித்தனமானதோ, அதே அளவிற்கு இந்த நிகழ்வுகளும் அபத்தமானவை. எப்படி இவற்றை செய்வதற்கு அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறதோ, அதே அளவிற்கு இதை ஆட்சேபிக்கிற உரிமை துரதிர்ஷ்டவசமாக அங்கு வாழ்கிறவர்களுக்கும் உண்டு. அதன் விளைவே இந்தப் பதிவு.
எல்லா தனிமனிதர்களுமே தனக்கேயென்று இருக்க விரும்புகிற 'சுயஅடையாளத்தை' தேடி அலைகிறவர்கள்தான். அதை நேர்மையான உழைப்பின் மூலம் பெற இயலாதவர்கள், சமூகத்தால் வெற்றிகரமானவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுவர்களின் அடையாளங்களைச் சார்ந்து நின்று அதன் மூலம் தன்னுடைய அடையாளத்தைப் பெற முயல்வது.சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு குறுக்குவழி. இதன் புறவயமான வடிவங்கள்தான் ரசிகர் மன்றங்கள், அரசியல் பேரவைகள், தொணடர் படைகள், முதலியவை.
'நெரிசலில் சிக்கி அவதிப்படக்கூடாதென்பதற்காக' தன் ரசிகர்களை தன் மகள் திருமணத்திற்கு வரவேண்டாம் என்று கரிசனத்துடன் அறிக்கை கொடுத்த ரஜினி, இப்படி முதல் காட்சிக்காக பெருங்கூட்டத்தில் சிக்கி அவதிப்படும் ரசிகர்களுக்காக
"ஏன் இப்படி அவதிப்படுகிறீர்கள். எப்படியும் ஒருவாரத்தில் இதன் கள்ள குறுந்தகடு வெளிவரப்போகிறது. அதை வாங்கி வீட்டிலேயே செளகரியமாக அமர்ந்து பாருங்கள்" என்று ஏன் அறிக்கை விடவில்லை இவர்களில் யாராவது யோசிப்பார்களா? தாம் ரசிக்கும் நடிகனை அரங்கிலேயே கழற்றி விட்டு வராமல் தம் தோளிலேயே சுமந்து கொண்டு 'வீட்டுத் திருமணத்திற்கு' அழைக்கவில்லையே என்று ரசிகன் வருத்தப்படுகிற கொடுமைகளெல்லாம் தமிழ்நாட்டில்தான் நிகழும்.
இவர்கள் செய்வது மகா அபத்தங்களென்று இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கே தெரியும். 'இரவல் அடையாள'த்தைத் தாண்டி ஏதாவது ஆதாயம் கருதியோ, சம்பந்தப்பட்ட நடிகர்கள் அல்லது படத்தயாரிப்பாளர்களின் 'ஏற்பாடுகள்' மூலமே இவை நிகழ்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இதிலிருந்து விலகக்கூடிய சாமர்த்தியக்காரர்களை விட்டுவிடலாம். ஆனால் தன்னுடைய அன்றாட உழைப்பிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை அறியாமை காரணமாக வீணடிப்பவர்கள் குறி்த்தும் அதிகாரத்திற்கெதிராக திரையில் வீராவேசமாக முழங்கும் தன் தலைவன், யதார்த்த வாழ்க்கையிலும் அதே போல் இருப்பான் என்கிற கனவுடன் அவனை அரியணையில் அமர்த்தத் துடிக்கும் அப்பாவிகளைக் குறித்துத்தான் நம்முடைய கவலை.
இந்த நிகழ்ச்சியை கூடவே பார்த்துக் கொண்டிருந்த நண்பர்,
"பார்த்தீர்களா, உலகமெங்கிலும் எப்படி வரவேற்பு?'' என்றார் நமட்டுச் சிரிப்புடன். அதுசரி.
'இந்தப் பேனா எல்லா உலக மொழிகளிலும் எழுதும்' என்கிற தந்திரமான விளம்பர வாசகங்களின் மூலம் தம் பொருளை விற்கும் வணிகர்களின் சாமர்த்தியத்திற்கு இணையானதுதான் இந்த ஊதிப் பெருக்கல்கள்.
'ஆங்கிலத்தில் பேசினாலே அவன் அறிவாளி' எனக் கருதும் பொதுப்புத்தியுடன் கூடிய முட்டாள்கள் உலகெங்கிலும் பரவியிருப்பது போல், தமிழர்களும் உலகெங்கிலும் பரவியிருப்பதும் அவர்கள் இந்தப்படத்தை ஆரவாரத்துடன் வரவேற்பதிலும் அப்படியில்லாத இடங்களிலும் நான்கைந்து பேரை கேமரா முன் அடைசலாக நிற்க வைத்து அவர்களின் கூக்குரல்களின் மூலம் ஏதோ அந்த நகரமே இந்தப்படத்தைக் காண்பதற்காக காத்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் ஊடகத்தின் போலித்தந்திரங்களைக் கண்டு மந்தைகள் வேண்டுமானாலும் மயங்கலாம். மனச்சாட்சியுள்ளவர்கள் அல்ல.
"உங்களை மாதிரி ஒரு சில பேர்கள் மூலையில் அமர்ந்து திட்டிக் கொண்டிருக்கலாம். படம் எப்படி ஓடுகிறது பார்த்தீர்களா?" என்றார் அதே நண்பர். உண்மைதான். சென்னை நகரின் திரையரங்குகளில் 80 சதவீத அரங்குகளில் இந்தத் திரைப்படம்தான்.
தமக்குள்ள பலத்தின் மூலம் சக போட்டியாளர்களின் காலை உடைத்து அறையில் பூட்டி வைத்து விட்டு தான் மாத்திரமே ஓட்டப் பந்தயத்தில் ஓடி 'வெற்றி வெற்றி' என ஒருவன் முழங்குவானாயின் அவனை இந்த உலகம் 'வீரன்' என மாலையிட்டு கொண்டாடுமா? அல்லது அவனின் அயோக்கியத் தனத்தைக் கண்டு காறித் துப்புமா? சென்னையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலைதான் என அறிகிறேன். இந்த அசுரத்தனமான போட்டியிலிருந்து தாமாக விலகிப் போனவர்கள் சொற்பமிருக்க, அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி விலக்கப்பட்டவர்களும் அடித்து ஒடுக்கப்பட்டவர்களும் எத்தனை பேரோ?
ஓரளவிற்கு மனச்சாட்சியுடன் நியாயமாகப் பேசுபவர்கள் என கருதக்கூடிய பிரகாஷ்ராஜ், சேரன் என்று திரையுலகில் உள்ளவர்களே மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தை விரும்பியோ விரும்பாமலோ கொண்டாடுவதைக் காண சற்று வேதனையாகவே இருக்கிறது. ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய, இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்காக அழைக்கப்பட்ட மாநில முதல்வர் சொல்கிறார்.
"இந்த தயாரிப்பு நிறுவனத்தைப் பாராட்டுவதென்பது என்னையே பாராட்டிக் கொள்வதாகும்". ஆக..இந்த கூட்டுக் களவாணித்தனத்திற்கு தானும் ஓர் உடந்தை என வெளிப்படையாகவே வாக்குமூலம் கொடுத்த அவரின் நேர்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்ப் பெயரில் தலைப்பு வைத்தற்காக இதற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதையும் முதல்வர் தெரிவிக்கிறார். 'திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழ் வளரும்' என்ற அரிய யோசனையை செயல்படுத்தும் முதல்வர், அது தரமான உள்ளடக்கத்துடன், தமிழ் கலாசாரத்தை உள்ளடக்கிய படங்களுக்கு மாத்திரமே' என்பதையும் இணைத்திருந்தால் எத்தனை ஆரோக்கியமானதொன்றாக இருந்திருக்கும்? சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர் பயன்பெற வேண்டிய இந்தச் சலுகையையும் பலநூறு கோடிக் கணக்கில் செலவு செய்யும் தயாரிப்பாளர்களும் உள்ளே புகுந்து பெற்றுக் கொள்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?. அரசியல் காரணங்களுக்காக என்றாலும் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசியை பில்கேட்ஸூம் வரிசையில் நின்று வாங்கினால் 'அவருக்கும் இந்தச் சலுகை உண்டென்றால் அதைப் பெறுவதில் என்ன தவறு' என்போமா? அல்லது தார்மீக ரீதியான உணர்வுடன் இந்தச் சலுகையை அவர் மறுத்தால் அவரைப் பாராட்டாமல் இருப்போமா?
'ஹாலிவுட் தரத்திற்கு நிகரானதாக அதையும் தாண்டி பெரும் பொருட்செலவில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது' என்பது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுத் திரைப்படப் பார்வையாளர்களின் உற்சாக கூக்குரலாகவும் இருக்கிறது.
வெறும் நுட்பம்தான் சினிமாவா? என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கிறேன். வைரம் பதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள பேனாவில் எழுதியதாலேயே ஒரு சிறுகதையோ, புதினமோ பாராட்டப்பட வேண்டுமென்பது எத்தனை பெரிய நகைச்சுவையாக இருக்கும்? பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டு விட்ட ஹாலிவுட் படங்களின் நுட்பங்களை, மக்களைச் சுரண்டி குவிக்கப்பட்ட பணத்தின் மூலம் நாம் சமகாலத்தில் அதே ஹாலிவுட் நுட்பவியலாளர்களைக் கொண்டே ஹாலிவுட்டின் அபத்த நகல்களாக உருவாக்கி விட்டு நாமே அதை சிலாகித்துக் கொண்டால் எப்படி? மேலும் எந்த ஹாலிவுட் படத்தில் பல நூறு கண்ணாடி பாட்டில்களை அடுக்கி விட்டு 'இரண்டு பெருசுகள்' டூயட் பாடும் அபத்தங்களெல்லாம் நடக்கிறது? 'யாரும் இதுவரை படப்பிடிப்பு நடத்தியிராத இடங்களை இதற்காக தேடிச் சென்றார்களாம்'. இதெல்லாம் ஒரு பெருமையா? இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத சேரிகளும் மூத்திரச் சந்துகளும் சென்னையிலேயே நிறைய இருக்கின்றனவே? ஷங்கர் இதை அறிய மாட்டாரா?
'கக்கா' போகக்கூட அதிகாலையில் எழுந்திருக்காதவன், ஒரு திரைப்படத்தைக் காண அரங்கில் அதிகாலை நான்கு மணிக்கே அமர்ந்திருக்கிறான் என்றால் சம்பந்தப்பட்ட ஊடகத்தின் மூளைச்சலவை வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது என்பதுதானே பொருள். இதில் படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஹாரிபாட்டர் நாவலை முதன் முதலாக வாங்க விடியற்காலையிலேயே புத்தகக் கடைகளின் முன்பு நின்ற முன்னோடிகள் உலகமெங்கிலும்தானே இருக்கின்றனர்? மக்களிடம் 'விழிப்புணர்வு' ஏற்படுத்த வேண்டுமென்பதின் பொருள் இப்படி அதிகாலையில் எழுப்பி ஓட வைப்பதுதான் போலிருக்கிறது.
நான் பொழுதுபோக்கு சினிமாவின் எதிரியல்ல. கலையின் அடிப்படையே பொழுதுபோக்குதல்தான். சினிமாவைக் கொண்டு பொழுதைப் போக்குவதல்ல. அரைத்த மாவையே அரைக்காமல், வணிகக் காரணங்களுக்காக நாயக பிம்பங்களையும் வன்முறையையும் ஆபாசங்களையும் ஊதிப் பெருக்காமல் சுயசிந்தனைகளுடன் ஆரோக்கியமான உள்ளடக்கங்களுடன் கூடிய பொழுதுபோக்கு சினிமாக்களை நான் ஆதரிக்கிறேன். சர்வதேச அரங்குகளில் விருதுகளை குவிக்கும் உயர்ந்த தரமுள்ள திரைப்படங்களைக் கூட நான் தமிழில் இப்போது எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாறான திசையில் தமிழ் சினிமா பயணிக்கத் துவங்கும் போது, அந்த நம்பிக்கை துளிர்க்கத்துவங்கும் போது அதில் பின்னடைவை ஏற்படுத்துகிற, கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிற, அலகு குத்திக் கொள்கிற மூடநம்பிக்கைகளுக்கு நம்மைத் தூண்டுகிற, நம்மை அந்த ஆட்டு மந்தை நிலையிலேயே வைத்து அதன் மூலம் நம் பணத்தையும் சிந்தனையும் பிடுங்கிக் கொள்கிற வணிகத்தையே ஒட்டுமொத்த குறிக்கோளாகக் கொண்டிருக்கிற சூழலைத்தான் நான் வெறுக்கிறேன்.
ஹாலிவுட் நுட்பங்களைக் கொண்டு உள்ளூர் அபத்தங்களை நிரப்பி எடுப்பது நல்ல சினிமாவா? அல்லது நமது கலாசாரத்தை, பண்பாட்டை, இலக்கியத்தை, சமூக அவலங்களை, நிகழ்வுகளை, நுண்ணுணர்வுகளை மீட்டெடுக்கக்கூடிய, ஆன்மாவை ஊடுருவிச் செல்லுமாறு எடுப்பது நல்ல சினிமாவா? விவசாயிகளின் பிரச்சினைகளை ஊடகங்களின் நாய்ச்சண்டைகளை பார்வையாளர்களின் முன்வைப்பது நல்ல சினிமாவா? மனித இயந்திரம் உயிருள்ள பெண்ணைக் காதலிப்பதும் அதன் மூலமான நுட்ப பிரம்மாண்டங்களையும் அசட்டு நகைச்சுவைகளையும் கொண்டது நல்ல சினிமாவா? சினிமா ஆர்வலர்களின் முன்பு இதையெல்லாம் ஒரு கேள்வியாக முன்வைக்கிறேன்.
suresh kannan