Wednesday, March 11, 2020

டிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து



‘டிரைவிங் லைசென்ஸ்’ என்ற மலையாளத் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். மிகச் சிறிய கதைக் கருவை வைத்துக் கொண்டு அதை இயல்பான திரைக்கதையால், காட்சிக்கோர்வைகளால் விரித்தெடுக்கும் திரைப்படங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மலையாளத்தில் இது போன்ற திரைப்படங்கள் அதிக அளவில் சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன. அப்படியொரு ஃபீல்குட் திரைப்படம் இது.

பணம், செல்வாக்கு, புகழ் போன்றவற்றில் உச்சத்தில் இருக்கிற ஒரு நடிகருக்கும், சிறிய அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண அரசு ஊழியருக்கும் இடையில் நிகழும் அகங்கார மோதல்தான் இந்தத் திரைப்படத்தின் மையம். இதன் உள்ளிழையாக பல விஷயங்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்கள்.

**

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகன் ஹரீந்திரன். (பிருத்விராஜ்). அவனுக்கு ஒரு சிக்கல். அவனுடைய டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போவதாலும், அது தொடர்பான அரசு ஆவணங்கள் அழிந்து போவதாலும் அவசரமாக ஒரு புது லைசென்ஸ் எடுத்தாக வேண்டும்.

அது இல்லாவிட்டால் படப்பிடிப்பு நின்று பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல். தயாரிப்பாளர் ஏற்கெனவே பட்ஜெட்டை தாண்டிய செலவு காரணமாக குடுமியைப் பிய்த்துக் கொண்டு இவனுக்கு தொடர்ந்து நெருக்கடி தந்து கொண்டிருக்கிறார். நடிகனுடைய மனைவியின் மருத்துவப் பிரச்சினை காரணமாக இவன் அமெரிக்காவிற்கு சென்றாக வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு இடையில் அவன் தத்தளிக்கிறான்.

இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டராக இருப்பவன் குருவில்லா ஜோசப் (சுராஜ் வெஞ்சாரமூடு). நடிகன் ஹரிந்திரனின் தீவிர ரசிகன். ஏன்.. வெறியன் என்று கூட சொல்லலாம். நடிகனின் சாகசக் காட்சிகளைப் பற்றி வீட்டில் சிலாகித்துப் பேசி தன் மகனையும் நடிகனின் ரசிகனாக்கி வைத்திருக்கிறான்.

நடிகனின் லைசென்ஸ் பிரச்சினை இவனிடம் வருகிறது. தன் ஆதர்ச நடிகனின் பிரச்சினையை இவன் ஒரே நொடியில் தீர்த்து விடுவானே.. அப்புறம் என்ன என்று தோன்றலாம். அப்படி நடந்திருந்தால் படம் அங்கேயே முடிந்து போகும். ஆனால் இங்குதான் படமே துவங்குகிறது.

தனக்குப் பிடித்தமான நடிகனை நேரில் சந்திக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடிவு செய்கிறான் ஜோசப். எனவே ஒரு சம்பிரதாயத்திற்கு டிராபிக் அலுவலகத்திற்கு நடிகனை வரச் சொல்லி வேண்டுகோள் விடுக்கிறான். ‘காரியம் ஆக வேண்டுமே’ என்பதால் நடிகனும் வேண்டா வெறுப்பாக இதற்கு சம்மதித்து பரபரப்பு ஏதுமின்றி சத்தமில்லாமல் திரும்பி விடும் திட்டத்துடன் வருகிறான்.

ஆனால் ஊடகங்களுக்கு இந்தச் செய்தி கசிய வைக்கப்படுகிறது. ‘அடப்பாவி.. எனில் லைசென்ஸ் இல்லாமல்தான் இத்தனை நாட்கள் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாயா?” என்று இந்தப் பிரச்சினையை பூதாகரமாக்கி நடிகனை வறுத்தெடுக்கின்றன. அவர்களுக்கும் வியாபாரம் ஆக வேண்டுமே?

இதனால் கடுப்பாகும் நடிகன், ஜோசப்பின் மீது எரிந்து விழுகிறான். ஜோசப்பின் மகன் பிரியத்துடன் தர முனையும் பரிசுப்பொதியை தட்டி விடுகிறான். ஆத்திரத்தில் ஜோசப்பை அவமதிப்பாகவும் பேசி விடுகிறான்.

பெரும் அன்பிற்கும் கடுமையான வெறுப்பிற்கும் இடையில் ஒரு நுண்ணிய இடைவெளிதான் இருக்கிறது என்பார்கள். தனக்குப் பிரியமான நடிகன், தன் மகனின் முன்னால் தன்னை அவமதித்து விட்டானே என்று ஜோசப்பிற்கு தன்மான உணர்ச்சி பொங்குகிறது. தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடிகனுக்கு நெருக்கடி தர முயல்கிறான் ஜோசப்.

‘கேவலம்.. ஒரு மோட்டார் இன்ஸ்பெக்டர்.. தன்னுடைய சிறிய பிரச்சினைக்கு இடையில் நிற்கிறானே.. என்று நடிகனுக்கு அகங்காரம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வண்டி ஓட்டுவதில் பெரும் விருப்பமுள்ள நடிகன், இந்தப் பிரச்சினை வளர்ந்து செல்லும் காரணத்தினால் எரிச்சலுற்று ‘இனி வண்டி ஓட்டுவதில்லை’ என்று முடிவு செய்யும் நிலைக்கு கூட செல்கிறான்.

அவரவர்களின் அகங்காரம் காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்படும் இந்த மோதல் என்னவாகிறது என்பதை மீதமுள்ள பரபரப்பான காட்சிகள் விவரிக்கின்றன.

**

பிருத்விராஜூம் சுராஜூம் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ரசிகர்களின் ஆதரவும் சமூகத்தில் செல்வாக்கும் கொண்டுள்ள ஒரு புகழ் பெற்ற நடிகனின் திமிரை அட்டகாசமாக வெளிப்படுத்தியுள்ளார் பிருத்விராஜ். அதே சமயத்தில் ஒரு தனிப்பட்ட ஆசாமியாக தன் பிரச்சினைகளில் தத்தளிப்பதின் மூலம் நடிகர்களின் இன்னொரு சாதாரண பக்கத்தையும் திறமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தனை வருடங்களாக தான் போற்றிய, தனக்குப் பிரியமான நடிகனே.. தன்னை இப்படி அவமதித்து விட்டானே.. என்று ஆத்திரம் வந்தாலும் நடிகனின் மீதான அன்பை முற்றிலும் இழக்க முடியாமல் தத்தளிக்கும் பாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார் சுராஜ்.  ஊடகங்களின் முன்பாக தன் மனைவியின் மருத்துவப் பிரச்சினையை நடிகன் விவரிக்கும் போது அதைக் கேட்டு ஜோசப் தன்னிச்சையாக கண்கலங்கும் காட்சி அற்புதமானது.

இருவருமே அவரவர்களின் துறையில் அடிப்படை நேர்மையைக் கடைப்பிடிக்கிறவர்களாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர் முதலீடு செய்திருக்கும் மருத்துமனையின் பெயரை இயக்குநர் திரைப்பட வசனத்தில் சாமர்த்தியமாக நுழைக்கும் போது அதைப் பேச மறுத்து விடுகிறான் நடிகன். போலவே மோட்டார் இன்ஸ்பெக்டரான ஜோசப் லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரியாக இருக்கிறான். அடிப்படையில் நல்லியல்பு கொண்டவர்களாக இவர்கள் இருந்தாலும் அகங்காரம் என்னும் விஷயம் இவர்களை மெல்ல மெல்ல கீழ்மைக்குள் தள்ளிச் செல்வது  பல காட்சிகளில் மிக நுட்பமாக சொல்லப்பட்டிருக்கிறது.

தன் மனைவியின் மருத்துவ விஷயத்திற்கு கூடச் சென்று உதவ முடியவில்லையே என்கிற மனஉளைச்சல் நடிகனுக்கு இருக்கிறது. அந்தக் கோபம் எங்கெங்கோ பிரதிபலிக்கிறது.

நடிகனைத் தோற்கடிக்க முடியாமல் போகும் விஷயம் காரணமாக தன் மகன் பள்ளியில் அவமானப்படுவது ஜோசப்பிற்கு பழிவாங்கும் உணர்ச்சியை தீவிரப்படுத்துகிறது. இருவருமே ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் மன்னித்து அரவணைக்கும் மனநிலைக்கு சென்றாலும் சூழல் அவர்களை அவ்வாறு அனுமதிப்பதில்லை. இந்த நோக்கில் திரைக்கதை மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. 




வாகன இன்ஸ்பெக்டருக்கு மனைவியாக நடித்திருக்கும் மியா ஜார்ஜின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. ஒரு சராசரி இல்லத்தரசியின் மனோபாவத்தை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். தன் கணவனுக்கு கிடைத்திருக்கும் திடீர் கவனத்தினால் மகிழ்ச்சியடையும் அவர், நடிகனுக்கு எதிரான விஷயங்களை மிகைப்படுத்தி சொல்லும் காட்சிகள் ரகளையாக இருக்கின்றன.

மியா ஜார்ஜை ஏற்கெனவே சில திரைப்படங்களில் பார்த்திருந்தாலும், இந்தத் திரைப்படத்தில் பேரழகியாக தெரிந்து கொண்டிருந்தார். அவர் வரும் காட்சிகளில் அவரின் அழகை கண்களால் பருகிக் கொண்டேயிருந்தேன். (வாகன இன்ஸ்பெக்டர் மன்னிப்பாராக).

முன்னணி நடிகர்கள் தொழில் போட்டி காரணமாக தன் சக நடிகருக்கு இடையூறு செய்ய எத்தனை அற்பமான, ஆபத்தான காரியங்களில் எல்லாம் இறங்குவார்கள் என்பது ஒரு நடிகரின் பாத்திரத்தின் மூலம் விளக்கப்பட்டிருக்கிறது. பச்சோந்தியாக இருக்கும் அரசியல்வாதியின் பாத்திரத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ளார் சஜ்ஜூ குரூப். ஒரு விசுவாசியான டிரைவரை நேர்த்தியாக பிரதிபலித்துள்ளார் நந்து. நடிகர்களின் ரசிகர்கள் அந்த எல்லையை மீறிச்செல்வதில் உள்ள ஆபத்தும் அபத்தமும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.


நடிகனுடன் இரண்டொரு வார்த்தைகள் பேசி அவனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஜோசப்பின் நெடுங்கால கனவு. ஆனால் அது நிறைவேறும் சூழல் தொடர்பான காட்சி மிக நெகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. பரிசுப் பொதியுனுள் என்ன இருந்தது என்பதை ஜோசப் சொல்லும் காட்சியும் அதற்கு பிருத்விராஜ் இயல்பாக தரும் எதிர்வினையும் அட்டகாசமானது.

லால் ஜூனியர் இந்தத் திரைப்படத்தை (நடிகர் லாலின் மகனாமே?!) சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இயக்கியுள்ளார்.

சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும் அகங்காரம் என்னும் விஷயம் ஒரு மனிதனை எத்தகைய கீழ்மைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் இட்டுச் செல்லும் என்கிற விஷயத்தை இந்தத் திரைப்படம் மிக சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறது.


suresh kannan

No comments: