Tuesday, February 19, 2019

சீனுராமசாமியின் படைப்புலகம் - அறத்தின் ஆதார சுருதி






இயக்குநர் சீனுராமசாமி பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தவர். அவரை தன் ஆசானாக கருதக்கூடியவர்.  இது வரை வெளிவந்திருக்கும் இவருடைய நான்கு திரைப்படங்களின் உருவாக்க பாணியைக் கவனித்த போது பாலுமகேந்திராவின் பெரிதான சாயல் எதையும் அதில் என்னால் காண முடியவில்லை. ஆச்சரியகரமாக  பாரதிராஜாவின் பாதிப்பு இருந்ததை உணர முடிந்தது. ஒருவகையில் இது வரவேற்கத்தக்கது. ஏனெனில் ஒரு காலக்கட்டத்தில் பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாக இருந்து வெளியேறுகிறவர்கள், தம்முடைய குருமார்களின் பாணியின் சாயலை பொதுவாக அப்படியே கடைப்பிடிப்பார்கள். பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களிடம் சீடர்களாக இருந்த இயக்குநர்களின் படங்களைக் கவனித்தால் இதை உணர முடியும். இப்படி சுருக்கமான வாக்கியத்தில் இதை பொதுமைப்படுத்துவது முறையல்லதான் என்றாலும் சீடர்களின் தனித்தன்மைகளையும் மீறி ஆசானின் உருவாக்க முறை அவர்களின் படைப்புகளில் அடிநாதமாக ஓடிக் கொண்ருப்பதை உணர முடியும்.

ஒருவகையில் அது இயல்பானதுதான். குருமார்களின் பாதிப்பும் ஆளுமையும் தன்னிச்சையாக சீடர்களிடம் படிவதை அவர்களால் தவிர்க்க முடியாது. இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. குருவிடமிருந்து தொழில் கற்றுக் கொண்ட காரணத்தினாலேயே அவரின் பாணியை அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லை. அந்தக் கற்றலையும் கருவிகளையும் வைத்துக் கொண்டு தம்முடைய தனித்தன்மையோடு அல்லது ரசனையோடு முற்றிலும்  வேறு உலகத்தை, இன்னொரு  பாணியை உருவாக்கலாம். இந்த முறையிலான பரிணாம  வளர்ச்சிதான் எந்தவொரு கலைக்கும் நல்லது. குறிப்பிட்ட பாணி தேய்வழக்காகி தேங்கிப் போகாமல் பல புதிய திசைகளில் பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

இந்த நோக்கில் பாலுமகேந்திராவிடமிருந்து உருவாகி வந்த பெரும்பாலான சீடர்களிடம் குருவின் பாதிப்பு பெருமளவு இல்லாததை ஆச்சரியத்துடன் கவனிக்கிறேன். இதில் முதன்மையானவராக பாலாவைச் சொல்லலாம். மென்மையின் அழகியலை பாலுமகேந்திராவின் பெரும்பாலான படங்கள்  கொண்டிருந்தது என்றால் அதன் எதிர்முரணாக வன்முறையின் அழகியலை பாலாவின் படங்கள் கொண்டிருக்கின்றன. பாலா என்றல்ல, அமீர் (பருத்தி வீரன்), வெற்றிமாறன் (விசாரணை), ராம் (கற்றது தமிழ்), விக்ரம் சுகுமாரன் (மதயானைக்கூட்டம்) போன்று, பாலுமநே்திராவின் பிள்ளைகளின் திசை  அவரிடமிருந்து விலகி பெரும்பாலும் வேறு திசையில் இருக்கின்றன. இவர்களைப் போல் அல்லாமல்  சீனுராமசாமி தம் திரைப்படங்களை உருவாக்கும் பாணி எனக்கு பாரதிராஜாவை நினைவுப்படுத்துகிறது.

பொதுவாக வணிகநோக்கு தமிழ் சினிமாக்களில் உள்ள ஆபாசங்களும் அசட்டுத்தனங்களும் அல்லாமல் இயல்பான திரைக்கதையோடும் கண்ணியமான போக்கோடும்  தமிழ் சினிமாவில் இயங்கும் அரிதான இயக்குநர்களில் ஒருவரான சீனுராமசாமி இந்த நோக்கில் தன் குருவான பாலுமகேந்திராவிற்கு மரியாதை செலுத்தும் திசையிலான பயணத்தில் செல்கிறார் என்பது பாராட்டுக்குரியது.

***

சீனுராமசாமி இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். கூடல்நகர் (2007), தென்மேற்கு பருவக்காற்று (2010), நீர்ப்பறவை (2012), தர்மதுரை (2016). இடம்பொருள்ஏவல் என்கிற திரைப்படம் வெளிவரத் தாமதமாகி தயாரிப்பில் உள்ளது.

பொதுவாக எந்தவொரு இயக்குநரின்  முதல் திரைப்படமும் எல்லா வகையிலும் சிறப்பானதாகவே அமையும். உதவி இயக்குநராக இருக்கும் காலக்கட்டம் முழுவதும் தன் முதல் திரைப்படத்தைப் பற்றிய கனவுகளிலும் அதை  மெருகேற்றிக் கொண்டேயிருப்பதிலும் ஈடுபடுவார். அவருடைய அத்தனை  திறமையையும் அதில் கொட்ட முயல்வார். தம் கனவுத் திரைப்படத்தை உருவாக்கும் சாத்தியமும் சூழலும் அமையும் அறிமுக இயக்குநர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். சீனுராமசாமியின்  இந்த துவக்க கனவு முழுக்க நடைமுறையில் சாத்தியப்பட்டதா என தெரியவில்லை.

ஏனெனில் அவருடைய முதல் திரைப்படமான ‘கூடல்நகர்’ வழக்கமான வெகுசன திரைப்படங்களின் சாயல்களை அதிகம் கொண்டது. இப்போது இந்தப்படம் சீனுராமசாமியுடையது என்பதே பலருக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை. வணிகரீதியாகவும் தோல்வியடைந்த திரைப்படம் இது.


இரட்டை வேடங்களில் பரத். ஒருவர் லெண்டிங் லைப்ரரியில் பணிபுரிவார். இன்னொருவர் பிணவறைத் தொழிலாளி. தேய்வழக்கான பாத்திர வடிமைப்பு. ஒருவர் அமைதியானவர் என்றால் இன்னொரு ஆர்ப்பாட்டமானவர். இரட்டை வேடத்திற்காக பரத் பெரிதும் மெனக்கெட்டிருக்க மாட்டார். திருத்தமாக தலைவாரி, நல்ல சட்டை போட்டிருந்தால் நூலக பரத். அது அல்லாமல் காக்கி சட்டை போட்டு அலப்பறையாக இருந்தால் இன்னொரு  பரத்.

நூலக பரத் அந்த ஊர் அரசியல் பிரமுகரின் மகளைக் காதலிப்பார். தமிழ் சினிமாக்களில் சாதியின் அடையாளங்களை வெளிப்படையாக சித்தரிப்பதில் ஆபத்து அதிகம். எனவே பரத்தின் சமூகத்தை இயக்குநர் குறிப்பால் உணர்த்திருப்பார். அலப்பறை பரத்தை அழைத்து, இறந்து போன கன்றுக்குட்டியின் பிணத்தை பிரமுகர் அப்புறப்படுத்தச் சொல்வார். இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். வர்க்கத்திலும், சாதியிலும் உயர்படியில் உள்ள பெண்ணை, கீழ்படியில் உள்ளவன் காதலித்தால் நடைமுறையில் என்ன ஆகுமோ, அதுவே இதிலும் நடக்கும்.

அண்ணனின் கொலைக்கு தம்பி பழிவாங்கும் நாடகத்தனத்துடன் படம் முடியும்.  ‘காதல்’ சந்தியாவின் நடிப்பு இதில் சிறப்பானது. இன்னொரு நாயகி 'பாவனா'. சுந்தரராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை'யை வாசிக்குமளவிற்கு முதிர்ச்சி கொண்ட நாயகி, நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகிறார் என்று யோசித்துப் பார்த்தேன். சு.ராவின் புத்தகத்தை ஒரு ஷாட்டில் காட்ட வேண்டும் என்கிற இயக்குநரின் இலக்கிய ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதனை வெறுமனே செட் பிராப்பர்டி மாதிரி மட்டும் காட்டியிருக்கும் விதம்தான் சிறிய நெருடல். ஒரு முதிர்ச்சியுள்ள இலக்கிய வாசகர், பின்விளைவுகளை யோசிக்காமல் நடைமுறைப் பிரச்சினையை இத்தனை மேலோட்டமாகவா அணுகுவார் என தோன்றியது.


***

இரண்டாவது படம் 'தென்மேற்கு பருவக்காற்று'. இதையே சீனுராமசாமியின் முதல் திரைப்படமாக கருதலாம் என்கிற அளவிற்கு அவருடைய முத்திரை அழுத்தமாக விழுந்த படைப்பு. சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதுவரை சிறிய பாத்திரங்களில் நடித்து வந்து விஜய்சேதுபதிக்கு நாயகனாக பதவி உயர்வு கிடைத்த முதல் திரைப்படம். இன்று முன்னணி நாயகனின் இடத்தை அவர் அடைந்திருப்பதற்கான முதல் படிக்கட்டு.


ஆடு மேய்க்கும் கீதாரி கூட்டத்தைச் சேர்ந்தவன், ஆடுகளை திருடிப் பிழைக்கும் கூட்டத்தைச் சார்ந்த பெண்ணின் மீது பிரியப்படுகிறான். இந்தச் சமூக அடையாளங்கள் வெளிப்படையாக சித்தரிக்கப்படாவிட்டாலும்  நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடிகிறது. தாம் பார்த்து வைத்திருக்கும் தம்முடைய சமூகப் பெண்ணைத்தான் மகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறாள் நாயகனின் தாய். எதிர் தரப்பு வன்முறைக் கும்பல் என்பதால் அதன் மூலம் தம் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என நினைக்கிறாள். ஏனெனில் அந்த வகையில்தான் இதற்கு முன்பு தன் கணவனை இழந்திருக்கிறாள்.

இறுதிக்காட்சியில் எதிர் தரப்பு ஆட்களால் கொலை செய்யப்படுகிறாள். மகன் ஆவேசத்துடன் பழிவாங்க கிளம்பும் போது தேவர்மகன் கமல் போல ‘போதும்டா பழிவாங்கினதெல்லாம். நீ உன் வாழ்க்கையை வாழ்ந்து காட்டு. அது போதும்’ என்கிறாள். மன்னிப்பு என்பதையே ஒரு தண்டனையாக பகைவர்களுக்கு தர முடியும் என்கிற செய்தியை இயக்குநர் முன்வைக்க விரும்புகிறார். அதன் மூலம் வன்முறைக்கலாசாரத்தை பெருமிதமாக கருதும் சமூகங்களுக்கான செய்தியும் உள்ளது.

‘ஆனி போய் ஆடி வந்தா டாப்பா வருவான்’ என்கிற அசட்டுத்தனமான தாய் வேடங்களுக்கு  பிற்காலங்களில் பழகுவதற்கு முன் சரண்யா தீவிரமான தொனியில் நடித்த திரைப்படம். புலியை முறத்தால் விரட்டியதாக சொல்லப்படும் சங்க கால தமிழ்பெண் வீரத்தை நினைவுப்படுத்தும். வகையில் அபாரமான பங்களிப்பு இவருடையது.

**

மூன்றாவது திரைப்படம் ‘நீர்ப்பறவை’ சீனுராமசாமியின் கதைகூறல் முறையும் செய்நேர்த்தியும் வளர்ச்சிநிலையில் பயணிப்பதை உறுதிப்படுத்தும் திரைப்படம். ஜெயமோகன் இதில் இயக்குநருடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார்.

இறந்து போன கணவனுக்காக கடற்கரையில் காத்திருக்கிறாள் அவள். ஆனால் அவளுடைய கணவனை அவள் கொலை செய்திருக்கக்கூடும் என்கிற அதிர்ச்சியோடு படம் துவங்குகிறது. பிளாஷ்பேக்கில் சொல்லப்படும் அவளுடைய இளமைக்கால வாழ்க்கை காட்சிகளால் நிரம்பியிருக்கிற திரைப்படம். வயதான வேடத்திலுள்ள நந்திதா தாஸை விட இளமைக்கால சுனைனா அபாரமாக நடித்திருந்தார். துண்டு துண்டாக பல காட்சிகள் நன்றாக அமைந்திருந்தாலும் திரைக்கதை கோளாறினால் ஒட்டுமொத்த பார்வையில் இத்திரைப்படம் அத்தனை வசீகரிக்கவில்லை. 

**

சீனுராமசாமியின் நான்காவது திரைப்படமான ‘தர்மதுரை’ சமீபத்தில் வெளிவந்து வணிகரீதியாகவும் பெரிய வெற்றி பெற்று அவருக்கு மகிழ்ச்சியை அளித்த படம். விஜய்சேதுபதியின் தற்போதைய புகழும் திறமையும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

மருத்துவப் படிப்பு முடித்திருக்கும் இளைஞன் குடிகாரனாக அலைகிறான். அதற்கான காரணங்கள் முன்னும் பின்னுமாக சொல்லப்படுகின்றன. மூன்று பெண்கள் விஜய்சேதுபதியின் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். அதுவரை கவர்ச்சிப்பதுமையாகவே காலந்தள்ளிய தமன்னா, முதல் முறையாக நடிப்பை வெளிப்படுத்துவற்கான சந்தர்ப்பத்தை இயக்குநர் அளித்திருந்தார். ‘கம்மாக்காபட்டி செல்வி’ எனும் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்தப் பிரதேசத்தின் சித்திரமாகவே மாறியிருந்தார்.

நல்லியல்பு கொண்ட பாத்திரங்களும் மெல்லுணர்வை அழுத்தமாக நிலைநாட்டும் சம்பவங்களும் அதிகம் இடம்பெற்றிருந்தன. ஆண் – பெண் நட்பு அதன் கண்ணியத்தோடு இடம்பெற்றிருந்தது சிறப்பு.

**

பொதுவாக தமிழ் சினிமாவில் களப்பின்னணியை துல்லியமாக சித்தரிக்கும் படைப்புகள் குறைவு. அது குறித்தான பிரக்ஞை பல இயக்குநர்களுக்கு இல்லை. ஒவ்வொரு பிரதேசத்தின் மனிதர்களுக்கும் தனித்தன்மையும் குணாதிசயங்களும் இருப்பதைப் போல அந்தந்த பிரதேசங்களுக்கும் தனித்தன்மை உண்டு. அதன் ஆன்மாவைத்தான் அங்கு வாழும் மனிதர்கள் பிரதிபலிக்கிறார்கள். எனவே கதாபாத்திரங்களின் வடிவமைப்பை உருவாக்குவதற்கு மெனக்கெடுவது போலவே கதை நிகழும் பிரதேசத்தின் நிலவெளிக்காட்சிகளை துல்லியமாகவும் அழுத்தமாகவும் சித்தரிப்பது முக்கியமானதாகிறது.

சீனுராமசாமிக்கு இதன் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. அந்தந்த சூழலின் நிலவெளிகளின் அழகியலையும் பின்னணியையும் பார்வையாளர்கள் அழுத்தமாக உணரும் அளவிலான காட்சிக் கோணங்களை உருவாக்குகிறார். தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் தேனி போன்ற தென்மாவட்டங்களின் நிலவெளிக்காட்சிகளும் அந்த மண்ணின் குணத்தை வெளிப்படுத்தும் பாத்திரங்களுமாக நிறைகின்றன. ‘நீர்ப்பறவை’யில் நெய்தல் வகையின் பின்னணி.

**

சீனுராமசாமியின் திரைப்படங்களில் பெண் பாத்திரங்களுக்கு பிரத்யேகமான இடமிருக்கிறது. அவர்களின் சித்திரங்கள் வலிமையாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைக்கப்படுகின்றன. நாயகிகள் வெறுமனே கவர்ச்சி ஊறுகாயாக அல்லாமல் தனித்தன்மையுடன் கூடிய பாத்திரங்களாக இருக்கிறார்கள்.

சீனுராமசாமியின் நான்கு திரைப்படங்களிலும் உள்ள முக்கியமான பொதுத்தன்மை தாய் –மகன் என்கிற உறவு. அவரது திரைப்படங்களில் வரும் மகன்கள் அடிப்படையில் நல்லியல்பு கொண்டவர்களாக இருந்தாலும் பெரும்பாலும் குடிகாரர்களாகவும் பொறுப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள். தாய் மற்றும் துணைவியின் பாத்திரம் அவர்களை பாதுகாப்பதாகவும் நல்வழிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.

மனிதச்சமூகம் நாகரிகத்தின் ருசியை பார்க்கத் துவங்கிய காலக்கட்டத்தில் தாய்வழிச்சமூகமாகவே இருந்தது. பெண்ணே ஒரு குழுவை வழிநடத்தினாள். தலைமைப் பொறுப்பில் இருந்தாள். ஆணாதிக்கம் பல்வேறு தந்திரங்களினாலும் வலிமையினாலும் இந்த அதிகாரத்தை பிறகு கைப்பற்றிக் கொண்டது. ஆண்மைய சிந்தனைகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு தளைகளும் உடல் வலிமையால் உருவான அதிகாரமும் பெண்களை அடிமைப்படுத்தின. அந்த இன்னல்களில் இருந்து பெண் சமூகத்தால் இன்னமும் கூட வெளியேற முடியவில்லை.

சினிமா என்கிற ஊடகமும் சமூகத்தின் இந்த நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது. ஆண் நாயகர்களுகே இங்கு முன்னுரிமை. அவர்களையொட்டி இயங்கும் வணிகச்சந்தை. ஆண்மைய சிந்தனைகளால் நிரம்பிய கதைகள், காட்சிகள், வசனங்கள். இந்த ச் சூழலில் பெண் பாத்திரங்களுக்கு குறிப்பாக தாய்மை எனப்படும் நிலையை அதன் புனிதத்தன்மையுடன் தனது எல்லா திரைப்படங்களிலும் சித்தரிக்கும் சீனுராமசாமி பாராட்டப்பட வேண்டியவராகிறார்.

**

இந்தியாவின் பிரத்யேகமான, அடிப்படையான கட்டுமானமே அதன் பன்முக கலாசாரம்தான். பல்வேறு மதங்களை, சாதிகளை, பிரிவுகளைச் சார்ந்த மக்கள் பெருமளவில் இணக்கமானவும் சகிப்புத்தன்மையுடனும் இயங்குகிறார்கள்.  சீனுராமசாமியின் படைப்புலகில் உள்ள இன்னொரு சிறப்பு இந்த பன்முகத்தன்மையை தொடர்ந்து தம் படங்களில் நல்ல விதமாக சித்தரிப்பது. இஸ்லாமிய சமூக மக்களை தீவிரவாதிகளாகவும் மதஅடிப்படைவாதிகளாகவும் மட்டுமே சித்தரிக்கும் மத அரசியலின் தந்திரத்திற்கு சினிமா ஊடகமும் பலியாகியுள்ள சூழலில் பல்வேறு சமூகங்களைச் சார்ந்த நல்லியல்பு கொண்ட மனிதர்களை சீனுராமசாமி தொடர்ந்து சித்தரிப்பது ஆரோக்கியமான போக்கு.

தம்மை தமிழ் மண்ணோடு நெருக்கமாக உணர்கிற இஸ்லாமியர் தமிழக மீனவர்களின் பிரச்சினையை உணர்ச்சிகரமாக பேசுகிறார் (நீர்ப்பறவை –சமுத்திரக்கனி) மனித நேயத்தோடு உதவுகிறார். துவக்க காட்சியில் நாயகனோடு மோதுபவனாக தீயக்குணங்களுடன் சித்தரிக்கப்படும் இசுலாமிய இளைஞன், இறுதிக்காட்சியில் நாயகனின் உயிரைக் காப்பவனாக மாறுகிறான் (தர்மதுரை).

அவரது அனைத்து திரைப்படங்களிலும் கிறிஸ்துவ மதம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் இடம்பெறுகின்றன. அது சார்ந்த உயர்ந்த குணமுடைய மனிதர்கள் வருகிறார்கள்.


**

இலக்கியத்தின் மிக ஆதாரமான நோக்கமே மனிதனின் அகத்தை நோக்கி தொடர்ந்து உரையாடுவதே. நல்லியல்புகளையும் உயர்ந்த விழுமியங்களையும் அவனுக்குள் உறையச் செய்வதே. அதை தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டிருப்பதே. கீழ்மைகளில் தேங்கிக் கிடக்காமல் அவனை விலக்கி வைப்பதே.

உலகமயமாதல் காலக்கட்டத்திற்குப் பிறகு பொருளாதார அளவுகோலிலேயே மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள். அறமும் மேன்மையும் வீழ்ச்சியடையும் நிலை. முதலாளித்துவத்தின் வெற்றி உயர்ந்து கொண்டே போகும் போது சாமானியனின் அடிப்படையான உரிமைகள் கூட களவாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது போன்றதொரு சூழலில் சினிமா எனும் வலிமையான ஊடகத்தின் மூலம் மனித சமூகம் விடாது பின்பற்ற வேண்டிய அறத்தையும் சகிப்புத்தன்மையையும் நல்லியல்புகளையும் சீனுராமசாமியின் திரைப்படங்கள் தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. வணிக சமரசங்களுக்குள் வீழ்ந்து விடாமல் தன்னுடைய பாதையில் தீர்மானமான பிடிவாதத்துடன் தொடரும் இவரின் பயணம் மென்மேலும் சிறப்பானதாக அமையட்டும்.

(உயிர்மை டிசம்பர் 2016 இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: