Friday, February 01, 2019

விற்பனையாளனின் மரணம் (The Salesman - Iranian movie)




நாம் அன்றாடம் காணும் சராசரியான காட்சிகளில் இருந்தும்,  உணரும்  எளிய அனுபவங்களில் இருந்தும் மிகச் சிறந்த சினிமாக்களை உருவாக்கும் வல்லமையையும் நுண்ணுணர்வையும்  கொண்டதாக இரானியச் சினிமா விளங்குகிறது. கடந்த சில வருடங்களாக சர்வதேச விருது விழாக்களில் இரானியச் சினிமாக்கள் பிரத்யேக மதிப்பு கொண்டதாகவும் பார்வையாளர்களிடம் ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்து வருகின்றன. இத்தனைக்கும் கடுமையான கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் கொண்ட தேசத்திலிருந்து எளிய அழகியலின் வாயிலாக சிறந்த படைப்புகள் வெளிவருவது பிரமிக்கத்தக்கது. போர், அடிப்படைவாதம் போன்ற சிக்கலான பின்புலம் உள்ள சூழல்களிலிருந்துதான் சிறந்த கலைப் படைப்புகள் திமிறிக் கொண்டு மேலெழும் என்கிற தர்க்கமும் காரணமாக இருக்கலாம். மேற்பார்வையில் எளிமையாகவும் ஆனால் அடிநாதமாக தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை வலுவாக உரையாடும் தன்மையை பெரும்பாலான இரானியச் சினிமாக்கள் கொண்டிருக்கின்றன.

இரானிய சினிமா இயக்குநர்களின் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்  ' அஸ்கர் ஃபர்ஹாடி'. தொலைக்காட்சிக்கான படங்கள், முழு நீள திரைப்படங்கள் என்று 1998-ம் ஆண்டு முதலே இவர் திரைத்துறையில் இயங்கி வந்தாலும் 2011-ல் வெளிவந்த 'எ செப்பரேஷன் ' என்கிற திரைப்படம் இவருக்கு பரவலான கவனத்தையும் விமர்சகர்களின் அமோகமான பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. இரானிய திரைப்பட வரலாற்றில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றது. 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட' பிரிவில் இந்த விருது கிடைத்தது.


2016-ல் வெளிவந்த 'தி சேல்ஸ்மேன்', அஸ்கர் ஃபர்ஹாடியின் சமீபத்திய திரைப்படம்.  இந்த திரைப்படமும் ஆஸ்கர் விருதை வென்றது. மட்டுமல்லாமல் 'கான்' திரைப்பட விருது விழாவில் 'சிறந்த திரைக்கதை' மற்றும் 'சிறந்த நடிகர்' ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றது. இன்னமும் பல விருதுகளும் பாராட்டுக்களும் இந்த திரைப்படத்திற்கு கிடைத்தன.

***


அஸ்கர் ஃபர்ஹாடி இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் இந்தப் பாணியில்தான் அமைந்திருக்கும். அதாவது, இயல்பாக சென்று கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் நிகழும் ஒரு சிறு அசம்பாவிதம் அல்லது விபத்து அந்தக் குடும்பத்தின் ஒழுங்கையும் அமைதியையும் சீர்குலைத்து விடும். அந்தக் குடும்பத்தில் உள்ள நபர்களின் இடையேயான உறவுச் சிக்கல்கள், அந்தச் சம்பவம் ஏற்படுத்தும்  உளைச்சலின் பின்விளைவுகள், அவற்றிற்கான விசாரணைகள், தடுமாற்றங்கள் என்று இவை சார்ந்த காட்சிகள் பரபரப்பாக நகர்ந்து கொண்டேயிருக்கும். வணிக நோக்கத்துடன் உருவாக்கப்படும் செயற்கையான திரில்லர் படங்களின் மலினத்தன்மைகள் ஏதும் இவைகளில் இருக்காது என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தக் காட்சிகளின் மூலம்  நவீன இரானிய சமூக மனங்கள் இயங்கும் விதம், அங்குள்ள கலாசாரம், அது சார்ந்த கண்காணிப்புகள், ஒடுக்குமுறைகள் என்று பல விஷயங்கள் உள்ளுறையாக இந்தப் பாணி திரைக்கதையில் அடங்கியிருக்கும். 'தி சேல்ஸ்மேன்' திரைப்படமும் இந்தப் பாணியில்தான் இயங்குகிறது.

எமத் மற்றும் ரானா மனமொத்த தம்பதியினர். எமத் ஒரு பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறான். மாணவர்களிடம் இனிமையாகப் பழகி இணக்கமான முறையில் போதிப்பவன். கணவன், மனைவி இருவருமே பகுதி நேரமாக  நாடகத்திலும் நடிப்பவர்கள்.

அவர்கள் வசித்து வரும் வீடு இடிந்து விழும் சூழல் ஏற்படுவதால் வேறு வீடு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நாடகக்குழுவின் தலைவர் உதவ முன்வருகிறார். வாடகைக்கு வீடு பார்த்து தருகிறார். அந்த வீட்டில் முன்பு தங்கியிருந்த பெண்மணி சில நிழலான விஷயங்களில் ஈடுபட்டவள். அவளுடைய சில பொருட்கள் கூட இன்னமும் அங்கிருந்து எடுக்கப்படாமல் இருக்கின்றன.

இந்தப் பின்னணி விவரங்களை அறியாத எமத்-ரானா தம்பதி மகிழ்ச்சியுடன் அந்த வீட்டினுள் குடிபுகுகிறார்கள். எமத் வீட்டில் இல்லாத ஒரு நாளில் ரானா குளியலறைக்குள் இருக்கும் போது மர்ம மனிதன் ஒருவனால் தாக்கப்படுகிறாள். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் ரானாவின் அலறல் கேட்டு அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். எமத் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியும் திகைப்பும் அடைகிறான்.

***


அந்தக் குடும்பத்தின் இனிமையையும் வழக்கமான ஒழுங்கையும் இந்தச் சம்பவம் கலைத்துப் போட்டு விடுகிறது. வீட்டில் தனிமையாக இருக்க ரானா அஞ்சுகிறாள். மட்டுமல்லாமல் காவல் நிலையத்தில் இது பற்றி புகார் செய்ய முனையும் அமத்தையும் அவள் தடுத்துவிடுகிறாள். விசாரணை என்கிற பெயரில்  மறுபடி மறுபடி அந்தச் சம்பவத்தின் துர்கணங்களுக்குள் சென்று விழ அவளுக்கு துணிவும் விருப்பமும் இல்லை. இந்த உளைச்சல் காரணமாக நாடகத்தில் தம்முடைய பங்கை சரியாகச் செய்யவும் அவளால் இயலவில்லை. பார்வையாளர்களின் கூட்டத்தில் இருந்து மர்ம நபர் கண்காணித்துக் கொண்டிருப்பது போல அவளுக்குத் தோன்றுகிறது.

ரானாவின் மனஉளைச்சலை அமத் புரிந்து கொள்ள இயன்றாலும் அவளின் குழப்பமான எதிர்வினைகள் அவனுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே சமயங்களில் ரானா மீது எரிச்சலுறுகிறான். இதற்கு முன் குடியிருந்த நபரைப் பற்றிய விவரங்களை மறைத்தற்காக நாடக குழு தலைவர் மீதும் கோபமுறுகிறான். தன்னுடைய வழக்கத்திற்கு மாறாக மாணவர்கள் மீதும் எரிச்சலை வெளிப்படுத்துகிறான்.

தன் மனைவியைத் தாக்கிச் சென்ற நபரைக் கண்டுபிடிப்பது அவனுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அந்தக் கண்டுபிடிப்புதான் இப்போதைய உளைச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வாக இருக்கும் என கருதுகிறான். மெல்ல மெல்ல தன் விசாரணையைத் துவங்குகிறான்.

ரானாவைத் தாக்கிய மர்ம நபர் யார், எதற்காக அவர் அதைச் செய்தார், எமத் எப்படி அந்த நபரைக் கண்டுபிடித்தான், அதற்குப் பிறகு என்ன நிகழ்கிறது என்பதையெல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக இதன் உச்சக்காட்சியில் இருக்கை நுனியில்தான்  அமர வேண்டியிருக்கிறது.  மறுபடியும் இதை நினைவுப்படுத்துகிறேன். ஒரு திரில்லருக்கான பரபரப்பைக் கொண்டிருந்தாலும் அதைச் சார்ந்த மலினமான உத்திகள் எதையும் இந்த திரைப்படம் கடைப்பிடிக்கவில்லை என்பதே அஸ்கர் ஃபர்ஹாடியின் அபாரமான இயக்கத்திற்கும் கலையுணர்விற்கும் சான்று.


***


இந்த திரைப்படத்திற்காக அஸ்கர் ஃபர்ஹாடி உருவாக்கியிருக்கும் திரைக்கதை உத்தியும் அதன் சிக்கலான லாவகமும் என்னை வியக்க வைக்கிறது. தற்செயலாக நிகழும் ஒரு சிறிய அசம்பாவிதத்தைக் கொண்டு சாகச காட்சிகள் ஏதும் அல்லாமல், அதில் செயற்கையான பரபரப்புகள் ஏதும் கலக்காமல், அதே சமயத்தில் பார்வையாளனின் ஆர்வத்தையும் தணிய வைக்காமல் கதை சொல்லும் சுவாரஸ்யமான கலவை பாராட்டுக்குரியதாக இருக்கிறது. சிக்கல்கள் விரிவதற்கு மூலக் காரணமாக இருக்கும் அந்தச் சம்பவம் நமக்கு நேரடியாக காட்டப்படுவதில்லை. போலவே அந்த வீட்டில் முன்பு குடியிருந்த பெண்மணியைப் பற்றிய உரையாடல் படம் முழுக்க நிகழ்ந்தாலும் அவர் யாரென்பதும் நமக்கு காட்டப்படுவதில்லை. இப்படியாக பார்வையாளர்களின் மீது நம்பிக்கை கொண்டு இடைவெளி சாத்தியங்களையும் படம் முழுக்க நிரப்பிச்  செல்கிறார் ஃபர்ஹாடி.

மெல்ல மெல்ல விரியும் பூடகமும் மர்மமும் நிறைவு கொள்ளும் உச்சக்காட்சி உருவாக்கப்பட்டிருக்கும் விதமும் அங்கு நிகழும் நாடகங்களும் அபாரமானது. சந்தேகத்திற்கு உரிய நபர் என்று எமத் தீர்மானம் செய்து விரிக்கும் வலையும் அதில் வந்து மாட்டிக் கொள்ளும் வேறொரு மீனும் அங்கு நிகழும்  திருப்பமும் சுவாரஸ்யம். குற்றம் செய்த நபரின் பின்னணியை வைத்து அவரை பாதிக்கப்பட்ட ரானாவே மன்னிக்கத் தயாராக இருக்கும் போது எமத் அதை ஒப்புக் கொள்வதில்லை. குற்றவாளிக்குத் தண்டனை தராமல் அவனது அகங்காரம் திருப்தியடைவதில்லை. எந்தச் சம்பவம் அந்தக் குடும்பத்தின் இனிமையை சீர்குலைத்ததோ, அதற்கான மர்மம் விலகிய போது மகிழ்ச்சி உள்ளே திரும்ப உள்ளே வருவதற்குப் பதிலாக, தம்பதிகளுக்குள் உருவாகும் மனவிலகல் மேலதிகமாக உருவாவது முரண்நகையாக அமைகிறது.


எமத் ஆக நடித்திருக்கும் Shahab Hosseini-ன் அபாரமான நடிப்பு வியக்க வைக்கிறது. சிறந்த நடிகருக்கான 'கான்' விருதை இவர் பெற்றார். தம்முடைய இணக்கமான பிம்பத்தை மாணவர்களிடம் காட்டும் அதே ஆசிரியர், குடும்பச் சிக்கல் சார்ந்த உளைச்சலில் ஆழ்ந்திருக்கும் போது காண்பிக்கும் கடுமையான முகத்தின் வித்தியாசம் பற்றிய உதாரணம் மட்டுமே போதும், இவரது நடிப்புத் திறனிற்குச் சான்றாக சொல்ல. போலவே ரானாவாக நடித்திருக்கும் Taraneh Alidoosti -ன் பங்களிப்பும் சிறப்பு. குறிப்பிட்ட சம்பவம் தமக்குள் ஏற்படுத்தும் பதட்டத்தையும் மனஉளச்சலையும் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். நாடகக்குழு தலைவராக வரும் Babak Karimi-ன் நடிப்பும் சிறப்பு.

என்றாலும் படத்தின் இறுதிக் காட்சிக் கோர்வையில் வரும் Farid Sajadhosseini -ன் நடிப்பை அதி உன்னதம் என்று சொல்வேன். ஒரு சினிமாவில் வரும் காட்சிகளாக அல்லாமல் நாம் நேரடியாக கண்டு கொண்டிருக்கும் பிரமிப்பை இறுதிக் காட்சி தருகிறது என்றால் அதற்கு உறுதுணையாக அமைந்திருப்பது இவருடைய அபாரமான நடிப்பே.


***

ஆர்தர் மில்லரின் புகழ்பெற்ற நாடகமான ' Death of a Salesman', இந்த திரைப்படத்துடன் அபாரமான ஒத்திசைவாக இணைக்கப்பட்டுள்ளது. கணவனும் மனைவியும் இந்த நாடகத்தில் பங்கு கொள்கிற நடிகர்கள். அவர்களின் சொந்த வாழ்வில் நிகழும் சம்பவத்தின் எதிரொலிகள் நாடகத்தில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்கிற இணைப்பை அருமையாகச் சித்தரிக்கிறார்  இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாடி.

புலிட்சர் விருது பெற்ற அந்த நாடகத்தைப் பற்றி அறிந்து கொள்வது இந்த திரைப்படத்தை மேலதிகமாக புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும். ஆர்தர் மில்லரின் இந்த நாடகம் பல்வேறு சமயங்களில் தொலைக்காட்சி நாடகமாகவும் மற்றும் திரைப்பட வடிவங்களிலும் வந்திருக்கிறது. László Benedek  இயக்கத்தில் 1951-ல் வெளிவந்த திரைப்படம் ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளுக்கு தகுதி பெற்றது.

இந்த நாடகத்தின் நாயகனான Willy Loman நடுத்தர வர்க்க சமூகத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி. தன்னுடைய வாழ்க்கை பொருளியல் சார்ந்து வெற்றிகரமாக அமையவில்லை என்கிற தாழ்வுணர்ச்சியையும் அது சார்ந்த தடுமாற்றங்களையும் கொண்டிருப்பவன். கனவிற்கும் யதார்தத்திற்கும் இடையில் தத்தளிப்பவன். தன்னால் எட்ட முடியாத கனவுகளை தன்னுடைய மகன்களின் மூலம் அடைய முடியுமா என்கிற ஆவலையும் அது நிறைவேறாத சமயங்களிலான எரிச்சல்களிலும் அல்லறுபவன். பல்வேறு பாத்திரங்களும் சம்பவங்களும் கால வரிசையில் முன்னும் பின்னுமாகவும் சிக்கலாகவும் இயங்கும் அலைச்சல்கள் நாயகனின் மரணத்தின் வாயிலாக தற்காலிகமாக முடிவிற்கு வருகின்றன என்றாலும் அது அத்தனை எளிதா என்கிற தத்துவார்த்தமான கேள்வியையும் இந்த நாடகம் முன்வைக்கிறது.

'தி சேல்ஸ்மேன்' திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் கணவனும் மனைவியும் மேற்குறிப்பிட்ட நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள். அவர்களுக்கிடையேயான உறவு இணக்கமானதாக தெரிந்தாலும் அது உள்ளபடியே அவ்வாறுதான் இருக்கிறதா என்று நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் அதுவரை வசித்துக் கொண்டிருக்கும் வீடு இடிந்து விழுவதற்கான அடையாளங்களை அடைவது அவர்களுடைய உறவின் விரிசலுக்கான குறியீடாக இருக்கலாம் என்கிற சாத்தியத்தை திரைக்கதை உருவாக்கித் தருகிறது.

எமத் தன் மனைவியின் மீது அன்பு கொண்டிருப்பவன்தான். ஆனால் அந்தச் சம்பவம் அவர்களுக்கு இடையேயான விரிசலை அவர்களுக்கே அடையாளம் காட்டித் தருகிறது. ரானா எதிர்கொள்ளும் உளைச்சலை எமத்தால் புரிந்து கொள்ள முயன்றாலும் அது சார்ந்த எரிச்சலையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. ஒருபுறம் ரானாவின் இது போன்ற எதிர்வினைகளும் அது சார்ந்த குழப்பங்களும், மறுபுறம் தனக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால் தொடர்பான தேடல்கள் என்று இரண்டு போராட்டங்களுக்கும் இடையில் நின்று எமத் தத்தளிக்கிறான்.

குற்றவாளியை மன்னிக்கும் நிலைக்கு ரானா நகரும் போது எமத்தால் அதை ஒப்புக் கொள்ள இயலவில்லை. ஒப்புக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.  மனைவியின் ஆட்சேபத்தையும் மீறி குற்றவாளிக்கு சிறு தண்டனையையாவது தராமல் அவனது அகங்காரம் நிறைவு கொள்வதில்லை. ஆனால் எந்த அன்பு மனைவிக்காக அவன் இத்தனை சாகசங்களையும் செய்தானோ, அந்த அன்பிலிருந்தும் மதிப்பிலிருந்தும் அவன் சரிந்து வீழ்வதும் அந்த உறவில் ஏற்படும் விரிசல் அதிகமாகவதும் ஒருவகையான முரண்நகையே.


***


இந்த திரைப்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெறத் தகுதி பெற்றிருந்த சமயத்திலேயே இந்த விழாவில் தம்மால் பங்கு பெற இயலாது என்கிற தீர்மானத்தை முதலிலேயே தெரிவித்து விட்டார் அஸ்கர் ஃபர்ஹாடி. இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர சமீபத்திய அதிபர் டிரம்ப் ஏற்படுத்தியிருக்கும் தடைகளையும் அதிலுள்ள இனவாத அரசியலையும் கண்டிக்கும் வகையில் இந்தப்  புறக்கணிப்பை ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்ட போது இயக்குநரின் சார்பில் அவரது பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

தாம் உருவாக்கும் திரைப்படங்களில் மட்டுமல்லாது அவற்றைத் தாண்டிய புறவுலகிலும் கலைஞனின் அறமும் தார்மீக உணர்வும் வெளிப்பட வேண்டும் என்கிற அழுத்தமான சமிக்ஞையை அஸ்கர் ஃபர்ஹாடியின் இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.

(அம்ருதா ஏப்ரல் 2017 இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: